Home Historical Novel Raja Muthirai Part 1 Ch68 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

Raja Muthirai Part 1 Ch68 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

65
0
Raja Muthirai Part 1 Ch68 Raja Muthirai Part 1 Sandilyan, Raja Muthirai Part 1 Online Free, Raja Muthirai Part 1PDF, Download Raja Muthirai Part 1 novel, Raja Muthirai Part 1 book, Raja Muthirai Part 1free, Raja Muthirai,Raja Muthirai Part 1 Story in tamil,Raja Muthirai Part 1 Story,Raja Muthirai Part 1 novel in tamil,Raja Muthirai Part 1 novel,Raja Muthirai Part 1 book,Raja Muthirai Part 1 book review,ராஜ முத்திரை ,ராஜ முத்திரை கதை,Raja Muthirai Part 1tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1full story,Raja Muthirai Part 1 novel full story,Raja Muthirai Part 1audiobook,Raja Muthirai Part 1audio book,Raja Muthirai Part 1full audiobook,Raja Muthirai Part 1full audio book,
Raja Muthirai Part 1 Ch68 | Raja Muthirai | TamilNovel.in

Raja Muthirai Part 1 Ch68 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

ராஜ முத்திரை முதல் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 68 சிங்கணன் விரித்த வலை

Raja Muthirai Part 1 Ch68 | Raja Muthirai | TamilNovel.in

கதிரவன் முளைத்துத் தனது கனகக் கதிர்களை ரண களத்தின் மீது வீசிய போதும், கற்பாறையின் மீதமர்ந்து அக் களத்தின்மீது கண்களை ஓட்டிக்கொண்டிருந்த போசளத் தண்டநாயகனின் புத்தி நீண்ட காலம் குழம்பியே கிடந்தது. கோட்டையின் வடக்கு வாயிலைத் தாக்குவதாக இருந்த ஏற்பாட்டைத் தான் மாற்றியதையும், தெற்குப்புற வாயிலைத் திடீரெனத் தகர்த்துவிடத் திட்டமிட்டதையும் பாண்டிய இளவரசன் எப்படி அறிந்தான் என்ற புதிரை அவிழ்க்க முடியவில்லை போசளத் தண்டநாயகனின் கூரிய அறிவுக்குக் கூட. தெற்கு வாயிலைத் தான் தாக்கப்போவதை அறிந்தது மட்டுமின்றி, தாக்குவதற்கு ஏற்பாடு செய்திருந்த முறை, அந்த முறையைச் செயல்படுத்த அனுப்பவிருந்த படைபலம், அனைத்தையுமே எதிரி எப்படி அறிந்தான் என்பதை உணர முடியவில்லை சிங்கணனுக்கு. தனது ஒவ்வொரு யோசனையையும் பாண்டிய இளவரசன் முன் கூட்டியே அறிந்து விட்டானென்பதும், அதற்கேற்ப அவன் தனது போர் முறையை வகுத்துக்கொண்டு விட்டானென்பதும் அந்தப் போசள வீரனுக்குத் தெரிந்தாலும், படைகளைப் பிரித்து அனுப்பும் ஏற்பாட்டைத் தான் கடைசி வரையில் யாரிடமும் சொல்லாததால், அத்தனை ஏற்பாட்டையும் மிக நுணுக்கமாக எதிரி எப்படி அறிந்தான் என்பதை ஊகித்துப் பார்த்து விளங்காததால் சிங்கணன் வியப்பிலே சிக்கிக் கிடந்தான். ஆகவே நடந்ததெல்லாம் விவரிப்புக்கும் அப்பாற்பட்ட இந்திர ஜாலமாகவே தோன்றியது சிங்கணன் சித்தத்துக்கு.

வீரபாண்டியன் விஷயத்தை எப்படி ஊகித்தியந்தாலும் அவன் தனது பெரும் படைகளை முறியடித்தது பெரும் விந்தையென்பதில் சிறிதும் சந்தேகமில்லை சிங்கணனுக்கு. ‘கடல் புறத்தில் மேற்குக் கோட்டை வாயிலில் இரவுப் போருக்காகவே முன்னதாக ஆற்றுப் படுகையின் மூலம் ரகசியமாக அனுப்பிய ஆயிரம் வீரர்கள், தான் தளம் போட்டுத் தங்கியிருந்த கிழக்கு வாயிற் பகுதியிலிருந்த ஆயிரம் வீரர்கள், தவிர யானைகள் இவற்றின் இணைந்த இருபுறத் தாக்குதலிலிருந்து எப்படித் தெற்குவாயிலை எதிரி பாதுகாக்க முடிந்தது? அதுவும் கோட்டைக் கதவுகள் திறந்த பின் மதிலிலிருந்த சிறு படையைக் கொண்டு எப்படித் தனது பெரும் படையைச் சமாளிக்க முடிந்தது?’ என்று எண்ணி எண்ணி திகைக்கத்தான் சிங்கணனால் முடிந்ததே தவிர வேறு எந்தவித ஊகத்தினாலும் எதிரியின் போர்த் தந்திரத்தை உணரமுடியவில்லை. ஆனால் ஒரு விஷயம் ஊகத்துக்கு இடமில்லாமல் தெளிவாகியிருந்தது. தனது படைகளுக்கு ஏற்பட்ட சேதம் தான் எதிர்பார்த்ததை விடப் பன்மடங்கு அதிகமென்பதைச் சிங்கணன் விழிகள் கண் கூடாகப் பார்த்தன.

களமெங்கணும், மல்லாந்தும், ஒருக்கணித்தும் குப்புறவுமாகப் பலவித கோணங்களில் மாண்டு கிடந்த வீரர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்துக்கு மேற்பட்டது என்பதை நிர்ணயிக்க முடிந்தது. பார்வையினாலேயே போசளத் தண்ட நாயகனுக்கு. எதிரியின் குறைந்த படைக் கலத்தின் காரணமாகவும், திடீர்த் தாக்குதலால் தெற்கு வாயிலில் நுழைந்து விட்டால் அப்படையைக் கூட நிர்முலம் செய்து விடலாம் என்ற எதிர்பார்ப்பிலும், தனது பத்தாயிரம் வீரரில் நாலாயிரம் பேரைப் போருக்கு முந்திய நாளிரவு ரகசியமாகச் சேரநாட்டுக்குச் செல்லத் தான் அனுப்பிவிட்டது எத்தனை முட்டாள்தனம் என்பதை அப்பொழுதுதானறிந்தான் சிங்கணன். போரில் மாண்ட இரண்டாயிரம் வீரர்கள் போகப் பாக்கியுள்ள நாலாயிரம் வீரர்களைக் கொண்டு கோட்டையின் பலத்த சுவர்களாலும், மதிலின் விற்கூடங்களாலும் பாதுகாக்கப் பட்டிருக்கும் பாண்டியர் படைகளை முறியடிப்பது முடியாதென்பதும் திண்ணமாகத் தெரிந்த படியால், என்ன செய்வதென்பதை அறியாமல் பிரமித்து உட்கார்ந்த சிங்கணன் முன் உபதளபதி ராமவர்மன் வந்து, “படைத்தலைவரே!” என்று அழைத்தான்.

கண்கள் களத்தைக் கண்டு கொண்டிருந்தாலும், புத்தி பிரமை பிடித்திருந்தாலும், உபதளபதி வந்ததையும் கவனிக்காத சிங்கணன், ராமவர்மனுக்கு உடனடியாகப் பதில் சொல்லவுமில்லை. தலையை நிமிர்த்தி அவனை நோக்கவுமில்லை. இரண்டாம் முறை ராமவர்மன் குரல் கொடுத்த பின்னரே தலை நிமிர்ந்த சிங்கணன், “என்ன ராமவர்மரே!” என்று வினவினான் வெறுப்பு நிரம்பிய

அதைவிட வெறுப்புடன் ஒலித்தது ராமவர்மன் குரல்: “கடமையைச் செய்ய வந்தேன்” என்று அவன் கூறியபோது.

“என்ன கடமை?” என்று சீறினான் சிங்கணன்.

“ஒவ்வொரு தாக்குதல் முடிந்ததும், சேதத்தைத் தளபதிக்கு அறிவிக்க வேண்டியது உபதளபதியின் கடமை யல்லவா?” என்று வினவினான் ராமவர்மன்.

“சேதத்தை அறிவிக்க வேண்டியதுதான். வேறெதற்கு நீர் இருக்கிறீர்?” என்ற சிங்கணன் குரலில் கோபம் நன்றாக ஒலித்தது.
“போர்த் தந்திரங்களை வகுக்கும் பொறுப்பைச் சேர மன்னர் எனக்கு அளிக்கவில்லை. என்னைவிடச் சிறந்த தளபதிக்கே அளித்திருக்கிறார்.” என்று சுட்டிக்காட்டிய ராமவர்மன், சேரமன்னனைப் பார்த்து நகைக்கிறானா, அல்லது தன்னைப் பார்த்துத்தான் நகைக்கிறானா என்பது புரியவில்லை சிங்கணனுக்கு. ஆகவே மௌனமே சாதித்தான் போசளத் தண்டநாயகன்.

ராமவர்மனே தொடர்ந்தான், “தங்கள் உத்தரவுப்படி ஆயிரம் வீரர்களை அழைத்துச் சென்று யானைகளைக் கொண்டு தெற்கு வாயிலைத் தாக்கினேன். ஆனால் தாங்கள் எதிர்பார்த்தபடி தெற்கு வாயில் திறக்கவில்லை. பின்னாலிருந்து வேல்கள் வந்து யானைமீது பாய்ந்தன. யானைகள் தெற்கு வாயிலைத் தாக்குவதற்குப் பதில் எங்களை எதிர்கொண்டன. அதனால் நமது படையின் ஒரு பகுதி சேதப்பட்டது. பிறகு தெற்கு வாயிலை எதிரிகளே திறந்து விட்டார்கள். உள்ளே நுழைந்தோம்…”

நுழைந்தபின் ஏற்பட்டதை ராமவர்மன் உடனே சொல்லவில்லை. சற்று நிதானிக்கவே செய்தான். “சொல்லும்” என்றான் சிங்கணன் வறண்ட குரலில்.

“அங்கு நடந்தது போர் அல்ல. கொலை நடந்தது. சாதாரணமாகக் கோட்டையின் வெளிப்புறத்தை நோக்கிக் கொண்டிருந்த வேல்கள் உட்புறத்தை நோக்கிக் கொண் டிருந்ததால் எதிரி நமது படைகளைப் பட்சணம் செய்ய முடிந்தது.” என்று குறிப்பிட்டான் ராமவர்மன்.
“நீர் இதை முன்கூட்டியே அறியவில்லையா? கோட்டை விற்கூடங்கள் வேலெறியும் பொறிகள் மீதும் கண் வைக்கச் சொல்லியிருந்தேனே?” என்று வினவினான் சிங்கணன்.

“சொல்லியிருந்தீர்கள். கண்ணையும் வைத்துத்தா னிருந்தேன். ஆனால் எதிரி கண்ணை மறைக்க விளக்குகளையும், பந்தங்களையும் அணைத்திருந்ததை நீங்களே பார்த்திருப்பீர்கள். வேற்பொறிகள் கோட்டைத் தளத்தின் இறக்கமான பகுதியில், அதாவது இரண்டாவது படியில் இருந்தன. இளவரசனுடன் நீங்கள் பேசச் சென்ற போது இதை நீங்கள் கவனித்திருந்தால்கூட வேல்களை நம் கண்ணில் படாமல் எதிரி எந்தப் பக்கமும் இயக்க முடியுமென்பதை உணர்ந்திருக்கலாம். போதாக் குறைக்கு கோட்டைத்தளப் பந்தங்களையும் எதிரி அணைத்து விட்டான். நமது படை வீரர் பூனைகளாயிருந்தாலொழிய இருட்டில் பார்க்கமுடியாதல்லவா?” என்ற ராமவர்மன் குரலில் சற்றுக் கடுப்பைக் காட்டினான்.

“சரி, சரி, மேலே சொல்லும்.” என்றான் சிங்கணன்.

“சொல்வதற்கு அதிகமில்லை. உள்ளே நுழைந்ததும் வேல்கள் பாதிப் பேரை அழித்துவிட்டன. தவிரப் படையின் முழு பலமும் எங்களை எதிர்கொண்டது. நாம் அந்தப் பக்கம் வரப்போவது எதிரிக்குத் தெரிந்திருக்கிறது சில நாழிகைக்குள் எனது வீரரில் பாதிக்கு மேலும், மேல் திசையிலிருந்து வந்தவர்களில் பாதியும் நிர்மூலமாக்கப் பட்டபடியால் பின் வாங்கினேன். பிறகு நடந்தது தங்களுக்கே தெரியும்.” என்றான் ராமவர்மன்.

“ஆம், ஆம், தெரியும்,” துன்பத்துடன் வந்தது சிங்கணன் பதில்.

வெந்த புண்ணில் வேலிடத் தொடங்கிய ராமவர்மன் சொன்னான்; “என்ன வேகத்தில் கிழக்கு வாயிலிலிருந்து எதிரிப்படை வெளிவந்தது! எத்தகைய அணிவகுப்பு! சர்ப்பவியூகத்தைப் பற்றி நானறிவேன் சிங்கணரே! ஆனால் இந்த மாதிரிப் படையொன்று பல இடங்களில் எதிரிப் படைகளைக் கடித்து அழித்துவிடும் விந்தையை நான் இந்தப் போரில்தான் பார்க்கிறேன்.” அத்துடன் பெரும் மூச்சும் விட்ட உபதளபதி, “எதைச் சொல்லி என்ன பயன்? நமது காலாட்களில் ஆயிரம் பேரும், புரவிப் படையில் சுமார் ஆயிரம் பேரும் அழிந்து விட்டார்கள். யானைகள் குதிரைகள் சேதத்துக்கும் குறைவில்லை” என்றால் பெருமூச்சுக்கிடையே.

“எதிர்பாராத சேதம்,” என்று சிங்கணனும் ஆயாசப் பெருமூச்சு விட்டான்.

“அது மாத்திரமா எதிர்பாராதது?” என்ற ராமவர்மனை நோக்கி, சிங்கணன் விழிகள் கேள்வி கேட்கும் பாவனையில் எழுந்தன.

“என் பின்னால் நான் தாக்குதலை எதிர்பார்க்க வில்லை படைத்தலைவரே. எதிர்பாராத வண்ணம் ஆற்றுக்கு அக்கரையிலிருந்து வேல்களும், அம்புகளும் பறந்து வந்தன. அந்தப் படை எப்பொழுது தெற்கு வாயிலை விட்டு வெளிவந்தது. எப்படி வந்தது என்பதும் ஊகிக்க முடியவில்லை, என்னால், அந்தப் படையை நடத்தியவர் யார் தெரியுமா தலைவரே?” என்றான் ராமவர்மன்.

“யார்?”

“பாண்டிய உபதளபதி!”

“யார்?”

“இளநங்கை!”

“அந்தப் பெண்ணா ?”

சிங்கணன் வியப்பு எல்லை கடந்தது. தான் எந்தப் பெண்ணைத் தூக்கிக்கொண்டு சேரநாட்டுக்குச் செல்லக் காட்டுக்கோட்டையில் முயன்றானோ அந்தப் பெண்ணை கொண்டே வீரபாண்டியன் தன்னை நிலைகுலையச் செய்திருப்பதை உணர்ந்த சிங்கணன் சித்தத்தில் வியப்புடன் வேதனையும் கலந்து கொண்டது அதே வேதனை விளைவித்த வெறுப்பை உபதளபதிமீது திருப்பிய சிங்கணன், “ஆண் உபதளபதிக்குப் பெண் உபதளபதியே மேல் போலிருக்கிறதே!” என்று கூறினான்.

ராமவர்மனும் கிடைத்த சந்தர்ப்பத்தைக் கைவிட வில்லை. “தளபதிக்குத் திறமையிருந்தால் பெண் என்ன, துரும்பைக் கூட உபதளபதியாக வைத்துக் கொண்டு படைகளை இயக்கலாம். தவிர…” என்று இழுத்தான்.

“தவிர?” சீற்றத்துடன் எழுந்தது சிங்கணன் கேள்வி.

“அந்தப் பெண் தளபதியாயிருக்கவும் தகுந்தவள்” என்று கூறினான்.

சிங்கணனுக்கு ராமவர்மனைக் கொன்றுவிடலாம் போலிருந்தது. இருப்பினும் அந்தச் சமயத்தில் உபதளபதியின் பகை தனது நிலைமையை அதிகமாக மோசம் செய்து விடுமாதலால் அதிகமாகத் தனது சீற்றத்தைக் காட்டாமல் “ராமவர்மரே! கடந்ததை நினைத்துக் கதறுவதல்ல கர்ம வீரன் காரியம். மேற்கொண்டு செய்யவேண்டியதைக் கவனியும்.” என்றான்.

“கவனித்து விட்டுத்தான் வருகிறேன்.”

“என்ன கவனித்தீர்கள்?”

“பிணங்களை அப்புறப்படுத்தி ஆற்றில் புதைக்கச் சொல்லியிருக்கிறேன். தங்களுடைய தீய்ந்த கூடாரத்துக்குப் பதில் வேறு கூடாரம் அமைக்கச் சொல்லியிருக்கிறேன், என்றான் ராமவர்மன்.

“சரி, சரி, மீதியுள்ள படைகள் முன்போல் பின்வாங்கி முற்றுகை நிலையில் இருக்கட்டும். எந்தப் பகுதியிலிருந்தும் யாரையும் கோட்டைக்குள் அனுமதிக்க வேண்டாம்.’ என்றான் சிங்கணன்.

“யாரையுமா?”

“ஆம்.”

“விதிவிலக்கு?”

“கிடையாது.”

“மருத்துவர், புலவர் இவர்களுக்குக் கூட விலக்கில்லையா?”

“இல்லை. உள்ளே யாரையும் போகவிட வேண்டாம் வெளியில் யார் வந்தாலும் சிறை செய்து என்னிடம் அழைத்து வாருங்கள்” என்று உத்தரவிட்ட சிங்கணன், மீண்டும் ரணகளத்தையும் நோக்கிக் காட்டையையும் நோக்கினான். பிறகு சுற்றுப்புறங்கள் மீது பார்வையை செலுத்தினான். மெல்ல மெல்ல வீரபாண்டியன் தன்னை முறியடிக்க வகுத்த முறை முழுவதையும் உணர்ந்தான். ‘காரிருளில் கதவைத் திறந்து கொண்டு இருநூறு முந்நூறு வீரர்கள் வெளிவந்து ஆற்றைக் கடந்து அப்புறம் போக முடியும். அங்குள்ள காட்டுப் பகுதியில் மறைந்து விட்டால் என் படைகளுக்கு அவர்கள் இருப்பது தெரியாது. இரவோ மையிருட்டு. கோட்டைப் பந்தங்களையோ அணைத்து விட்டான் இளவரசன். ‘நன்று! நன்று! வீரபாண்டிய நன்று!’ என்று எதிரியைப் பாராட்டவும் செய்தான் போசளத் தண்ட நாயகன். பாராட்டியதோடு நிற்கவில்லை சிங்கணன். இத்தகைய எதிரியைத் தந்திரத்தால் தான் ஜெயிக்க வேண்டுமென்ற முடிவுக்குப் வந்தான். ‘காட்டுக் கோட்டையில் என் வேடத்தைக் கலைத்தாய். அது என் முதல் தோல்வி. இரண்டாவது வடக்கு வாயிலை வீட்டுத் தெற்கு வாயிலுக்குத் திரும்பிய என்னை முன்னெச்சரிக்கையால் முறியடித்து விட்டாய். இது இரண்டாம் தோல்வி. மூன்றாவது முறை உன் அறிவு எப்படி இயங்குகிறது பார்ப்போம்.” என்று தனக்குள் சொல்லிக் கொண்ட சிங்கணன், கோட்டைச் சிங்கத்தைத் தன் வழியில் இழுத்துச் சிக்க வைத்து அழித்து விடக்கூடிய புதிய திட்டமொன்றைத் தன் இதயத்துக்குள் உருவாக்கிக் கொண்டான். அந்தத் திட்டம் மட்டும் வெற்றியடைந்தால் வீர பாண்டியன் நிர்மூலமாக்கப்பட்டுவிடுவான் என்ற நிர்ணயம் சிங்கணனுக்கு ஏற்படவே பெரும் மகிழ்ச்சியும் அடைந்தான்.

அந்தத் திட்டத்தை மீண்டும் மீண்டும் மனத்தில் சீர்தூக்கிப் பார்த்து அதில் பலவீனமேதுமில்லை யென்பதை உணர்ந்ததால், சலித்த உள்ளத்தில் சந்துஷ்டிமை ஏற்படுத்திக் கொண்டு காலைக் கடன்களை முடிக்கக் கோட்டையாற்றை நோக்கிச் சென்றான். அதன் ஓரத்தே அரித்து ஓடிய குளிர்ந்த நீரில் மூழ்கிய சிங்கணன் புதிய பாசறைக்குத் திரும்பியபோது, கதிரவன் நன்றாகத் தன் உஷ்ணத்தை ரணகளத்தின் மீது வீசி இரவில் பாய்ந்த குருதியின் சாரத்தைக் குடித்து பூமிதேவியின் மீதிருந்த கறையை நீக்க முயன்று கொண்டிருந்தான். பாசறைக்குத் திரும்பிய சிங்கணனும் தனது கீர்த்திக்குக் கடந்த இரவு ஏற்பட்ட கறையை அழித்துவிடத் தனது திட்டத்தைத் தரையில் கோடுகளாகக் கிழித்துப் பார்த்துத் திருப்தியுடன் தலையசைத்துக் கொண்டான். பிறகு எழுத்தாணி கொண்டு ஓலையொன்றில் மிகுந்த யோசனையுடன் செய்தியொன்றைத் தீட்டினான். பிறகு அதை ஒரு முறைக்கு இரு முறையாகப் படித்த பிறகு ராமவர்மனை வரவழைத்து “ராமவர்மரே! இந்த ஓலையை நீரே எடுத்துக் கொண்டு வீர பாண்டியனிடம் செல்லும்,” என்று அதை நீட்டினான் உபதளபதியிடம்.

உபதளபதி ராமவர்மன் அந்த ஓலையைக் கையில் வாங்கிக் கொண்டு மடியில் செருகிக் கொள்ள முயன்றான். “படித்துவிட்டுச் செருகிக் கொள்ளும்,” என்ற சிங்கணன் உத்தரவின் காரணமாக ஓலையில் கண்ணை ஓட்டிய ராமவர்மன் முகத்தில் பெரும் பீதியும் வெறுப்பும் மண்டியது. ஓலையிலிருந்து சிங்கணனை நோக்கிய ராமவர்மன் கண்களில் கோபமும் இருந்தது.

“இது தர்ம யுத்தமல்ல” என்றான் உபதளபதி சீற்றத்துடன்.

“தர்மமும், அதர்மமும் நோக்கத்தைப் பொறுத்தது,” என்றான் சிங்கணன்.

“என் நோக்கம் தங்கள் நோக்கத்திலிருந்து மாறுபட் டிருக்கிறது,” என்று மீண்டும் உஷ்ணத்துடன் சொன்னான் ராமவர்மன்.

“படைத் தலைவன் சொற்படி கண்ணை மூடிக் கொண்டு நடக்க வேண்டியது உபதளபதியின் கடமை” என்று சுட்டிக்காட்டினான் சிங்கணன்.

“அப்படி நடந்த பலனை நேற்றிரவு கண்டேன்,” என்று சீறிய ராமவர்மன் வேறு பதில் சொல்லாமல், ஓலையுடன் வெளியே வந்தான். சிங்கணனின் ஓலைக் கொட்டகைக்கு வெளியே வந்ததும் அந்த கொட்டகையைத் திரும்பி மிகுந்த வெறுப்புடன் பார்த்தான். “அதர்மத்துக்கும் அக்கிரமத்துக்கும் எல்லை உண்டு சிங்கணா! இதில் வெற்றி பெற்றாலும் உலகம் உன்னைத் தூற்றும். எத்தனை பயங்கர மனிதன் நீ!” என்று உள்ளத்தே கூறிக்கொண்டு ஒரு புரவியைக் கொண்டுவரச் சொல்லி, கோட்டையை நோக்கிச் சென்றான். கோட்டைக்குள் பெரு வியப்பு காத்திருந்தது அவனுக்கு. ராமவர்மனை இளவரசன் தனது மாளிகை முனையிலேயே எதிர் கொண்டான். “கொடுங்கள் ஓலையை,” என்றும் கேட்டான். ராமவர்மன் ஓலையை எடுத்து நீட்டினான். அதைப் படித்த வீரபாண்டியன் முகத்தில் ஒரு விநாடி வியப்பு தெரிந்தது. அடுத்த விநாடி அவன் பேசிய பேச்சிலிருந்து சிங்கணன் விரித்த வலையில் அவன் விழுந்துவிட்டானென்பதை ராமவர்மன் புரிந்து கொண்டான்,

Previous articleRaja Muthirai Part 1 Ch67 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Muthirai Part 1 Ch69 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here