Home Historical Novel Raja Muthirai Part 1 Ch70 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

Raja Muthirai Part 1 Ch70 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

67
0
Raja Muthirai Part 1 Ch70 Raja Muthirai Part 1 Sandilyan, Raja Muthirai Part 1 Online Free, Raja Muthirai Part 1PDF, Download Raja Muthirai Part 1 novel, Raja Muthirai Part 1 book, Raja Muthirai Part 1free, Raja Muthirai,Raja Muthirai Part 1 Story in tamil,Raja Muthirai Part 1 Story,Raja Muthirai Part 1 novel in tamil,Raja Muthirai Part 1 novel,Raja Muthirai Part 1 book,Raja Muthirai Part 1 book review,ராஜ முத்திரை ,ராஜ முத்திரை கதை,Raja Muthirai Part 1tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1full story,Raja Muthirai Part 1 novel full story,Raja Muthirai Part 1audiobook,Raja Muthirai Part 1audio book,Raja Muthirai Part 1full audiobook,Raja Muthirai Part 1full audio book,
Raja Muthirai Part 1 Ch70 | Raja Muthirai | TamilNovel.in

Raja Muthirai Part 1 Ch70 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

ராஜ முத்திரை முதல் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 70 சாம்ராஜ்யக் கனவு

Raja Muthirai Part 1 Ch70 | Raja Muthirai | TamilNovel.in

பாண்டிய நாட்டு இளவரசனிடமிருந்து மீண்ட பல நாழிகைகளுக்குப் பிறகும் சிங்கணன் வகுத்துள்ள சதித் திட்டத்தைப்பற்றியே நினைத்துக் கொண்டிருந்த ராமவர்மன், உண்மையை வீரபாண்டியனுக்கு உணர்த்தி விட்டாலென்ன என்று எண்ணினான். அப்படி உணர்த்துவது சேர நாட்டுக்கு விரோதமென்றாலும், ராஜத் துரோகத்திலும் சேருமென்றாலும், சிங்கணனின் கொடிய செயலைத் தடை செய்ய அது உதவுமென்றால் அதை ஏன் செய்யக் கூடாது என்றும் தன்னைக் கேட்டுக் கொண்டான். வீரபாண்டியனின் கண்ணியம், வீரம், பெருந்தன்மை, பண்பாடு முதலியவற்றை நேரில் கண்ட பின்பு அவனிடம் பெரும் பக்தி சேரநாட்டு உபதளபதிக்கு ஏற்பட்டு விடவே, அத்தகைய ஒரு மகாவீரனைச் சிங்கணனைப் போன்ற சதி காரனிடம் காவு கொடுப்பது எத்தனை தவறு என்பதையும் யோசித்தான். எதிரி நலனைப்பற்றிக் கவலைப்படுவதும் சேர நாட்டு நலனுக்கு ஊறு விளைவிக்கக் கூடிய காரியங்களில் இறங்க யோசிப்பதும், விபரீதமான எண்ணங்கள் என்பதை ராமவர்மன் உணர்ந்தேயிருந்தா லும், அந்தச் சூழ்நிலையில் அத்தகைய எண்ணங்கள் உருவாவது நீதி உள்ளம் படைத்த யாருக்கும் சகஜம் என்று நினைத்தான். இத்தனை நினைப்பிலிருந்தும் ஏதும் செய்ய வகையற்றுத் திணறினான். தான் கோட்டைக்குள் சென்று வந்தது முதல் சிங்கணனுக்குத் தன்மீது ஒரு கண்ணிருக்கு மென்பதையும் சந்தேகமின்றி அறிந்திருந்த சேரநாட்டுத் தளபதி தனது நிலையைப் பற்றித் தானே பரிதாபப் பட்டான்.

அன்று நடுப்பகல் வந்த சமயத்திலும் அவன் சிந்தனை யிலாழ்ந்து கிடந்தான். சிங்கணன் அனுப்பிய ஓலையின் வாசகத்தை மீண்டும் தனது மனத்திற்குள் திருப்பித் திருப்பிப் படித்துப் பார்த்தான். ஓலையின் வரிகள் அவன் புத்தியில் தொடர்ந்து ஒளி விட்டன. ஓலையின் ஆரம்பத்தில் முதல் தாக்குதலில் தான் தோல்வியடைந்ததை ஒப்புக்கொண்டிருந்த சிங்கணன், இருப்பினும் போரின் முடிவு அதல்லவென்றும், தன்னுடைய படைக்குச் சேதம் சிறிதளவு ஏற்பட்டிருந்தாலும் மீதியுள்ள படைபலமே முற்றுகை நீடிக்கப் போதுமானதென்றும் அடுத்தபடி குறிப்பிட்டிருந்தான். தவிர இன்னும் இரண்டு நாட்களில் கடல் வழிப் படையும் வருமாதலால் கோட்டையைத் தகர்ப்பதும் பரம சுலபமென்பதையும் சுட்டிக் காட்டியிருந்தான். “இந்தக் கோட்டைக்குள் இனியாரும் நுழைய முடியாது. உணவுப் பொருள்கள் இன்றி உமது படையும் நீரும் பட்டினி கிடந்தபின் வேறு வழியின்றிச் சரணடைய நேரும். அல்லது எனது பெரும் படையாலும், கடல்வழிப் படையாலும் தாக்கப்பட்டு, கோட்டை தூள் செய்யப்படும். இருப்பினும் உங்களைப் போன்ற பெரு வீரரை அழிக்க எனக்கு இஷ்டமில்லை. ஆகவே கடைசி முறையாக ஒரு சந்தர்ப்பம் அளிக்கிறேன். நீங்களும் உங்கள் படையும் நிராயுதபாணிகளாக வெளியே வந்தால் உங்கள் நாடு செல்லலாம். படைவீரர் இருவர் இருவராக அணி வகுத்துக் கோட்டையிலிருந்து வெளியேற வேண்டும். நீங்களும் உங்கள் உபதளபதியும் முன்னணியில் வர வேண்டும். யாரும் புரவி மீதோ, வேறு கோட்டை வாகன வண்டிகள் மீதோ வரக்கூடாது. இதற்கு உடன் பட்டால் உங்கள் படையின் நாசத்தை நீங்கள் தவிர்க்கலாம்.” என்று சிங்கணன் கடைசியில் கூறியிருந்தான்.

“மேல் வாரியாகப் பார்த்தால் உள்ள நிலையில் இந்த ஓலை சரியானதுதான். பெரும் படையின் தளபதி அதிக படை பலமில்லாத ஒரு தளபதிக்கு எழுதக் கூடியதுதான். ஆனால் இதில் மறைந்துள்ள மர்மம் எனக்குத் தெரியாதா? பாண்டிய வீரர்களை நிராயுதபாணிகளாகக் கோட்டையிலிருந்து வெளிப்பட்டுச் சிறிது தூரம் வரவிட்டு, பிறகு தனது படைகளைக் கொண்டு சிங்கணன் சூழ்ந்து கொண்டால் சிங்கணனை யார் தடை செய்ய முடியும்?’ என்று தனக்குள் கேட்டுக் கொண்டான் ராமவர்மன். வீரபாண்டியனை ஒருகாலும் பாண்டியநாடு செல்லவிட மாட்டான் சிங்கணன் என்பதும் ராமவர்மனுக்குத் தெரியும். “அந்த வீரபாண்டியனைக் கையையும், காலையும் கட்டி உங்கள் காலடியில் கொண்டுவந்து தள்ளுகிறேன்.” என்று சிங்கணன் சேரமன்னனிடம் சபதம் செய்ததை ராமவர்மன் நேரிடையாகப் பார்த்திருந்ததால், நேராகப் போரிலோ போர்த் தந்திரத்திலோ வெல்ல முடியாத வீரபாண்டியனைச். சதியால் அழித்துவிடப் பார்க்கிறான் போசளன் என்று நிர்ணயித்துக் கொண்டான். ஓலையைப் பார்த்ததும் உண்மையை வீரபாண்டியன் ஊகித்துக் கொள்வான் என்று நினைத்த ராமவர்மனுக்கு திட்டத்துக்கு உடனடியாகப் பாண்டிய இளவரசன் ஒப்புக்கொண்டது அதிர்ச்சியாகவே இருந்தது. அந்த அதிர்ச்சியுடன் சிங்கணனிடம் திரும்பிய ராமவர்மனுக்கு அன்று மாலை அதிக அதிர்ச்சி காத்திருந்தது.

அன்று மாலை கோட்டையிலிருந்து வெளிவந்த வீர பாண்டியனின் தூதன் அன்றிரவே சிங்கணன் திட்டப்படி படைகள் புறப்படுமென்பதை அறிவித்தான். சிங்கணன் கூறியபடி வீரர்கள் இருவர் இருவராக அணிவகுத்து அன்றிரவே வெளிவருவார்களென்றும், சிங்கணன் படையினர் அவர்களைச் சோதனை செய்து வெளிவிடலாமென்றும் தெரிவித்தான். படைத் தலைவர் வெளிவரு முன்பு கோட்டைத் தலைவனான விஜயவர்மனிடம் கோட்டையை ஒப்படைத்து விடுவதாகவும் தூதுவன் கூறினான். தூதுவன் சொன்னதை மௌனமாகவே கேட்ட சிங்கணன் அப்படியே செய்யுமாறு வீரபாண்டியனிடம் சொல்லுமாறு கூறினான். தூதுவன் சென்ற பின்பு பக்கத்தில் இருந்த ராமவர்மனை வெற்றிக்குறி முகத்தில் துலங்க ஏறிட்டு நோக்கினான் போசளத் தண்டநாயகன். ஆனால் ராமவர்மன் முகம் பெரும் சந்தேகத்தைக் காட்டியது. “இதில் ஏதோ மர்மமிருக்கிறது. படைத்தலைவரே” என்றும் கூறினான். சந்தேகம் குரலில் ஒலிக்க.

“மர்மம் என்ன இதில்? ஏற்கெனவே வீரபாண்டியன் படை சிறு படை. அதில் ஐந்நூறு பேர் கோட்டையைப் பிடிப்பதில் போய்விட்டார்கள். நேற்று இரவுப் போரில் என்னதான் தந்திரமாகப் போரிட்டாலும் இருநூறு பேர்களாவது போயிருப்பார்கள். மீதி வீரரையும் தனது உபதளபதியையும் காக்க முயல்வது இயற்கை ராமவர்மரே! ஒன்று புரிந்து கொள்ளும். ஒரு பெண் கூட இருந்து விட்டால், எந்த வீரனுக்கும் பலவீனம் அதிகம்.” என்றான் சிங்கணன்.

ராமவர்மன் அதை நம்பவில்லை. ஆனால் அவனும் நம்பும் படியாகக் காரியம் நடந்தது. தூதுவன் சென்ற அரை ஜாமத்திற்கெல்லாம் சேரர் கோட்டைத் தலைவனான விஜய வர்மன் கோட்டைமீது தோன்றினான். ஏதோ உத்தரவுகளிட்டான். மெல்ல மெல்லக் கோட்டைத் தளத்திலிருந்த விற்பொறிகள் எதிரியை நோக்குவதைவிட்டு அப்புறமாக அகன்று மதிலின் தென்புறக் கோடியில் நகர்ந்தன. கோட்டை மீது ஓரிரு பந்தங்களே இருந்தபோதிலும் அங்கு நடப்பதையெல்லாம் ராமவர்மன் கண்கூடாகப் பார்க்க முடிந்தது. சற்று நேரத்திற்கெல்லாம் கிழக்கு வாசல் கதவுகள் அகலத் திறந்தன. படைகள் வெளியே புறப்பட வேண்டியதற்குச் செய்யப்படும் ஏற்பாடுகளைப் பற்றிய அதிகாரக் கூச்சலும், வண்டிகள் உருளும் ஓசைகளும் கோட்டைக்குள்ளிருந்து கேட்டன. வீரபாண்டியன் சிங்கணன் வார்த்தையை நம்பிவிட்டா னென்பதை இவையனைத்தும் உணர்த்தினாலும், ராமவர்மனுக்கு உள்ளூர சந்தேகம் இருக்கவே சிங்கணனைக் கேட்டான். “எதற்கும் படைகளைச் சித்தமாக நிற்க வைக்க வேண்டுமா?” என்று.

சிங்கணன் அப்பொழுது கோட்டையிலிருந்து சற்று எட்ட நின்றிருந்தான். கோட்டையின் நடவடிக்கைகளைச் கவனித்ததால் உள்ளூர மகிழ்ச்சியுடன் ராமவர்மனை நோக்கித் திரும்பி, “ராமவர்மரே! மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்” என்று கூறியதன்றி வாய்விட்டு நகைக்கவும் செய்தான். அடுத்துத் தனது படைகளை இரண்டு மூன்று பகுதிகளாகப் பிரிந்து, கிழக்கு வாசலுக்கு எதிரிலேயே நிற்கவைத்து எதிரிகள் போக வழியும் விட்டான். எதிரிப் படை பூராவும் வெளிவந்ததும் நாற் புறங்களிலிருந்தும் நெருங்கி அவற்றை அழித்துவிடுமாறும் வீரபாண்டியனையும் இளநங்கையையும் மட்டும் சிறை செய்து தன் பாசறைக்குக் கொண்டு போகும்படியும் உத்தரவிட்டிருந்தான்.

“இதைப் போர்த் தந்திரம் என்று சொல்வதைவிட கோரக் கொலை என்று சொல்லலாம்,” என்றான் ராமவர்மன் சிங்கணனை நோக்கி.

மீண்டும் பழமொழியால் பதில் கூறினான் சிங்கணன் “தன்னைக் கொல்ல வரும் பசுவையும் கொல்லலாம்.”

அடுத்துப் பேச மனமில்லாத ராமவர்மன் வேதனையுடன் நின்றிருந்தான். அவன் எதிர்பார்த்த கோரக் கொலை நடக்கவிருந்த சமயமும் நெருங்கியது. இரண்டாம் ஜாமத் துவக்க மணி கோட்டைக்குள் ஒலித்ததும், திறந்த கிழக்கு வாசல் வழியாக வீரபாண்டியனும் இளநங்கையும் வெளி வந்தார்கள். அதே சமயத்தில் கோட்டைத் தளங்களில் சேர வீரர்கள் தோன்றி வெற்றிக் கோஷம் செய்தார்கள். சேரர் கொடியும் கோட்டைமீது பறந்தது. சிங்கணன் முகத்தில் வெற்றிக்குறி தாண்டவமாடியது.

நடுநிசி மணியடித்து வீரபாண்டியனும் இளநங்கையும் வெளிவந்து கிழக்கு வாசலின் ஒரு புறத்தில் நின்றதும் பாண்டியப் படை வீரர்கள் இருவர் இருவராக வெளி வந்தனர். சிங்கணன் வீரர்கள் அணிவகுத்து நின்று அவர்கள் வெளியே செல்ல வழிவிட்டனர். கோட்டையிலிருந்து வந்த வீரர்கள் மெதுவாக வந்தனர். அவர்களுக்குப் பீதியுமிருந்ததை அவர்கள் முகங்களும் நடையும் சந்தேகமற நிரூபித்தன. கடைசி வீரன் வெளிவந்ததும் சிங்கணன் திடீரென ஒரு பந்தத்தை எடுத்து ஆட்டினான். பல இடங்களில் பிரிந்து நின்ற சேரர் புரவிப் படைகள் தடதடவென்று அந்த நிராயுதபாணிகளை நோக்கி பாய்ந்து வந்தன.

அதே சமயத்தில் மற்றொரு பெரும் விபரீதம் நேரிட்டது. கோட்டை மீது நின்றிருந்த விஜயவர்மன் பெரிதாக அலறினான். கொம்பெடுத்துப் பன்முறை ஊதினான். போரை நிறுத்தும் ஒலி அது. அதைக் கேட்ட சிங்கணன் பிரமித்தான். எதற்காக விஜயவர்மன் அலறுகிறானென்பதை உணர முடியாததால் திணறினான். அதைப்பற்றி அவன் சிந்தித்து முடிப்பதற்கு முன்பு வடக்கு வாசற்புறத்திலிருந்து தடதடவெனச் சுமார் ஆயிரம் புரவி வீரர்கள் சிங்கணன் புரவிப் படையைப் பின்புறம் தாக்கினார்கள், கோட்டை மேலே மீண்டும் விற்பொறிகள் எழுந்து சுழன்றன. எரிவாளிகளும் வேல்களும் மலையெனப் பொழிந்தன சிங்கணன் படை மீது. சிங்கணன் பிரமித்தான். ராமவர்மனுக்கு ஓரளவு விஷயம் புரிந்தது.

முற்றும் எதிர்பாராத விதத்தில் எதிரி தாக்கியதால் படைகளை அணிவகுக்கக்கூட அவகாசமில்லை சிங்கண னுக்கு. ஆகவே கண்டபடி தாறுமாறாகத் தானறிந்த போர் முறைக்கு முற்றும் மாறாக, பயங்கரச் சண்டை நிகழ்ந்து விட்டதை உணர்ந்த சிங்கணன் பிரமித்து நின்று விட்ட தவிர வடபுறத்திலிருந்து வந்த படை, கோட்டையிலிருந்து சேரர் படையாகவுமிருந்ததால், அவர்கள் ஏன் தன் படையைத் தாக்குகிறார்களென்பதும் புரியவில்லை அவனுக்கு. இப்படிப் பலபடி குழம்பி நின்ற சிங்கண வடக்கு வாசல் படையின் ஒரு பகுதி சூழ்ந்து கொ கோட்டையை நோக்கித் தள்ளிக்கொண்டு சென்றது.

இந்த விபரீதப் போர் அரை ஜாமம் கூட நடக்க வில்லை. திடீரெனக் கதவுகள் சாத்தப்பட்டன. ராமவர்மன் அரை ஜாமத்திற்குப் பிறகு எஞ்சிய தனது படையுடன் தனித்து நின்றான். கோட்டையிலிருந்து வெளி வந்த நிராயுதபாணிகள் மலைக்காட்டுக்குள் விட்டதாலும், போரும் திடீரென முடிந்துவிட்டதாலும் எஞ்சிய படைகளைப் பின்வாங்கச் செய்த ராமவர்மன் அன்றைய இரவின் மீதியைக் கோட்டையைப் பார்ப்பதிலேயே கழித்தான். அடுத்த நாள் பொழுது புலர்ந்து ஒரு ஜாமம் கழித்துத்தான் அவனுக்கு உண்மை புரிந்தது. வீரபாண்டியன் ஆணைப்படி கோட்டைக்குள் சென்ற ராமவர்மன் கோட்டையிலிருந்த சேரர்கள் கொலு மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டான், அங்கு வீரபாண்டியன் சிங்காதனத்தில் கொலுவிருந்தான் இளநங்கை பூரண கவசமணிந்து சிங்காதனத்திலிருந்து சற்றுத் தள்ளியிருந்த ஆசனத்தில் அமர்ந்திருந்தாள் பாண்டிய வீரர்கள் கொலுமண்டபமெங்கும் காவல் செய்து கொண்டிருந்தார்கள். அந்தப் பெரும் கொலுவைப் பார்த்துக் கொண்டு உள்ளே நுழைந்த ராமவர்மனை அன்புடன் தலையசைத்து வரவேற்ற வீரபாண்டியன் ஓர் ஆசனத்தைச் சுட்டிக் காட்டி அதில் அமரச் சொன்னான்.

ராமவர்மன் உட்காரவில்லை. சிங்கணன் வீரபாண்டியன் முன்பு நிறுத்தப்பட்டிருப்பதைக் கண்டான் ஆகவே கேட்டான். “தளபதிகள் சிறைப்பட்டாலும் அவர்களைக் குற்றவாளிகளைப் போல் நிறுத்தும் பண்பாடு தான் பாண்டியர் பண்பாடா?” என்று. இந்தக் கேள்வியைச் சிறிதும் அச்சமின்றித் தலை நிமிர்ந்து கேட்டான் ராமவர்மன்.

வீரபாண்டியன் முகத்தில் கடுமையிருந்தது. “இல்லை, அந்தப் பண்பாடு இல்லை,” என்று கூறினான் பதிலுக்கு.

“பிறகு போசளத் தண்டநாயகர் ஏன் நிற்கிறார்?” என்று மீண்டும் வினவினான் ராமவர்மன்.

“சதிக் குற்றத்திற்காக. சதி வேறு. தந்திரம் வேறல்லவா?” என்று வினவினான் வீரபாண்டியன்.

ராமவர்மன் இதற்குப் பதில் சொல்ல முடியாததால் தலை குனிந்தான். அவனைக் கருணையுடன் நோக்கிய வீர பாண்டியன் மெல்ல மெல்ல விஷயத்தைக் கூறத் தலைப் பட்டான். “ராமவர்மரே! சிங்கணன் மகாவீரன். போரில் வல்லவன். அச்சமென்பதை அறியாதவன். அவனிடம் நேர்மையில்லை. அறவழிகளில் நம்பிக்கையில்லை. முந்நாளிரவுப் போர் நியாயமானது. என்னை நம்பாததும் சரி, வடக்கு வாயிலுக்குப் பதில் தெற்கு வாயிலை உடைக்க முயன்றதும் சரி, எதிரியான என் திட்டத்தை அவன் ஒப்புக்கொள்ள அவசியமில்லை. ஆனால் நேற்றிரவு வகுத்த திட்டம் போர்த் திட்டமல்ல; சதித்திட்டம்; எங்களை அழித்துவிடும் பேய்த் திட்டம்; நிராயுதபாணிகளாக என் வீரர்களை வெளியே வரச்சொல்லி அவர்களை அழித்து விடத் திட்டமிட்டது பெரும் குற்றம் ராமவர்மரே, பெரும் குற்றம். இதில் இன்னொரு குற்றமும் இருக்கிறது…” என்ற வீரபாண்டியன் சிங்கணனை உற்று நோக்கினான். அவன் உணர்ச்சிகள் சீறி எழுந்துவிட்டதை அவன் முகத்தில் விரிந்த பயங்கரங்களையும் கண்ணில் துலங்கிய கழுகுப் பார்வையும் நிரூபித்தன. அந்தப் பயங்கரப் பார்வையை முதன் முதலாகக் கண்ட ராமவர்மன்கூட அச்சத்தின் வசப் பட்டான்.

வீரபாண்டியனின் குரல் பயங்கரமாகத் தொடர்ந்து ஒலித்தது. “நிராயுதபாணிகளைக் கொல்ல முயன்றது ஒரு குற்றம். பாண்டிய வீரர்கள் போரில் மடிவார்களேயொழிய ஆயுதத்தைப் பிரிந்து வெளி வரமாட்டார்கள் என்பதை உணராதது இரண்டாவது குற்றம். உயிரை நான் பெரிதாக மதித்து என் வீரர்களைப் பலி கொடுத்துப் பிழைக்க எண்ணுவேனென்று நினைத்தது மிகப் பெரிய மூன்றாவது குற்றம். இவன் கேடு நினைத்தான் ராமவர்மரே! கெடுவான் கேடு நினைப்பான் என்ற தமிழ்ப் பழமொழி இந்தக் கன்னடத்தானுக்குத் தெரியுமோ தெரியாதோ, நீர் எடுத்துச் சொல்லும்” என்ற வீரபாண்டியன் ராமவர்மனை நோக்கித் தன் புருவங்களைக் கேள்வி கேட்கும் பாவனையில் உயர்த்தினான்.
ராமவர்மன் சிங்கணனைப் பரிதாபத்துடன் பார்த்தான், இத்தனை குற்றச்சாட்டுக்கும் சிங்கணன் சிறிதும் மதியாமல் அலட்சியமாக நின்று இருந்தான். அதனால் அவனிடம் சிறிது மதிப்பும் கொண்ட ராமவர்மன், “கோணல் புத்தி மட்டுமில்லாவிட்டால் சிங்கணன் பெரும்படைத் தலைவனாகத் திகழ முடியும்” என்று தனக்குள் சொல்லிக்கொண்டான். பிறகு கேட்டான் வீரபாண்டியனை நோக்கி. “உங்கள் வீரர்கள் ஆயுதங்களைப் பிரியாதவர்களென்று சொல்கிறீர்கள். ஆனால், நிராயுத பாணிகளாக வந்ததை நானே பார்த்தேனே?”

“வந்தவர்கள் பாண்டிய வீரர்களல்ல…” என்று கூறினான் வீரபாண்டியன் உறுதி தொனித்த குரலில்.

“அப்படியானால் அவர்கள்…?” என்று இழுத்தான் ராமவர்மன்.

“கோட்டையை நான் பிடித்தபோது என்னால் சிறைப்படுத்தப்பட்ட கோட்டை வீரர்கள்; சேர நாட்டவர் பாண்டிய வீரர்களின் உடைகளில் வெளிவந்தார்கள். எனது புரவி படைவீரர் சேரர் உடையில் வடக்கு வாசலிலிருந்து வெளிவந்தார்கள். சிறிது உடை மாறாட்டம், கிழக்கு வாசலில் நீங்கள் நிராயுதபாணிகளைச் சோதித்துக் கொண்டிருந்தபோது, வெற்றிமுரசுகளை முழங்கியதால் வடக்கு வாசல் கதவு திறந்ததையோ எனது புரவி வீரர் வெளிப் போந்ததையோ நீங்கள் உணர முடியாத நிலை. இவை காரியத்தைச் சாதித்து விட்டன. வெளிவந்த வீரர்களுக்குச் சேதம் ஏற்படாதிருக்கவே நீங்கள் அவர்கள்மீது விழுந்தவுடன் நான் உங்களைப் புரவிப் படை கொண்டு பின்புறம் தாக்கினேன். அந்தத் தாக்குதல் நிராயுதபாணிகள் கலைந்து ஓடச் சந்தர்ப்பமளித்தது. என் படை சேரர் உடையிலிருந்ததால், அதை நெருங்கு முன்பு அவற்றின் நோக்கம் உங்களுக்குப் புரியவில்லை. தவிர உமது படை நிராயுதபாணிகளை அழிக்கத் திட்டுத் திட்டாகப் பிரிந்து நின்றதால், அவை கூடுவதற்குள் சிங்கணனை வளைத்து உள்ளே கொண்டு வருவதும் சாத்தியமாயிற்று. இப்பொழுது உங்களுக்கு விவரம் புரிகிறதென்று நினைக்கிறேன்,” என்றான் வீரபாண்டியன்.

ராமவர்மனுக்கு விஷயம் மிகத் தெளிவாகப் புரிந்தது வீரபாண்டியன் நுண்ணிய அறிவு. எந்தச் சந்தர்ப்பத்தையும் சமாளிக்கும் திறன் இரண்டையும் நினைத்துப் பிரமித்தான். சிங்கணன் முகத்திலும் பிரமிப்பு தெரிந்தது. அடுத்தபடி “சிங்கணா!” என்று விளித்த வீரபாண்டியன் சொன்னான்; “இத்துடன் கோட்டாற்றுக்கரை யுத்தம் முடிவடைகிறது. கடல்வழிப் படையைஎதிர்பார்க்காதே. நான் சரணடைந்து விட்டதாகச் செய்தி அனுப்பி அவற்றைத் திருப்பிவிட்டேன் உன் படைகளில் நீ பாண்டிய மன்னனைப் பின்புறம் தாக்க தான் அனுப்பியிருப்பதும் எனக்குத் தெரியும். ஆகவே உன் படை பலமும் மிகவும் குறைந்து விட்டது. இனி இந்தக் கோட்டையைக் கைப்பற்ற கனவு காணாதே. சேரனிடம் சென்று சொல், சீக்கிரம் பாண்டிய நாட்டு முத்துக்களைக் கொடுத்துவிடும்படி. இல்லையேல் இன்று கோட்டாற்று கரையில் ஊன்றிய வீரபாண்டியன் கால் அடுத்தபடி சேரர் தலைநகரிலும் ஊன்றும் என்றும் எச்சரிக்கை செய். இனி நீ செல்லலாம்”

இந்த வார்த்தைகளை மிகக் கம்பீரமாக உதிர்த்த வீர பாண்டியன் சிங்கணனை அழைத்துச் செல்லுமாறு வீரர் நிலைகளுக்குச் சைகை காட்டினான். போகுமுன்பு சிங்கணன் ஒரு முறை வீரபாண்டியனை ஏறெடுத்து நோக்கினான். பிறகு மிகுந்த துணிவுடன் “வீரபாண்டியா! இத்துடன் இந்தக் கதை முடியவில்லை. இன்னொரு பகுதி இருக்கிறது என்று கூறினான்.

“அந்த இரண்டாம் பகுதி இனித் துவங்கும். சேரன் படியாவிடில் படிய வைக்கும் பகுதி அது. பாண்டிய சாம்ராஜ்ய அஸ்திவாரக்கல் ஊன்றும் முதல் பகுதி இங்கு இன்று முடிகிறது,” என்று சிங்காதனத்திலிருந்து எழுந்து நின்று கூறினான் வீரபாண்டியன். அதைக் கூறியபோது அவன் குரலில் பெரும் கம்பீரம் இருந்தது. கண்களில் பெரும் சாம்ராஜ்யக் கனவு விரிந்தது. முகமெங்கு சாம்ராஜ்யலட்சுமி தாண்டவமாடினாள். அந்த லட்சுமியை வரவேற்பதுபோல் வெளியே முரசுகளும், கொம்புகளும் ஒலித்தன. வீரபாண்டியன் கனவு நனவாகி விடுவதற்குச் சான்று கூறுவனபோல் சங்கங்களும் பெரிதாகச் சப்தித்தன.

முதல் பாகம் முற்றும்

Previous articleRaja Muthirai Part 1 Ch69 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Muthirai Part 2 Ch1 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here