Home Historical Novel Raja Muthirai Part 2 Ch1 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

Raja Muthirai Part 2 Ch1 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

60
0
Raja Muthirai Part 2 Ch1 Raja Muthirai Part 2 Sandilyan, Raja Muthirai Part 2 Online Free, Raja Muthirai Part 2PDF, Download Raja Muthirai Part 2 novel, Raja Muthirai Part 2 book, Raja Muthirai Part 2free, Raja Muthirai,Raja Muthirai Part 2 Story in tamil,Raja Muthirai Part 2 Story,Raja Muthirai Part 2 novel in tamil,Raja Muthirai Part 2 novel,Raja Muthirai Part 2 book,Raja Muthirai Part 2 book review,ராஜ முத்திரை ,ராஜ முத்திரை கதை,Raja Muthirai Part 2tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2full story,Raja Muthirai Part 2 novel full story,Raja Muthirai Part 2audiobook,Raja Muthirai Part 2audio book,Raja Muthirai Part 2full audiobook,Raja Muthirai Part 2full audio book,
Raja Muthirai Part 2 Ch1 | Raja Muthirai | TamilNovel.in

Raja Muthirai Part 2 Ch1 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

ராஜ முத்திரை இரண்டாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 1 சிறையில் ஒரு சித்தினி

Raja Muthirai Part 2 Ch1 | Raja Muthirai | TamilNovel.in

மலையாழத்திலிருந்த அந்த மாநகரை மலைச் சரிவிலிருந்த காட்டு முகப்பில் புரவிமீதமர்ந்த வண்ணமே கண்ட வாலிபன் முகத்தில் வியப்பும் விசனமும் கலந்தே தாண்டவமாடின. விண்மீன்கள் மட்டுமே ஒளிவிட்ட கிருஷ்ணபக்ஷத்தின் காரிருளில் விளக்குகளாலும் பெரும் பந்தங்களாலும், மண்ணிலும் இன்னொரு. விண் சிருஷ்டிக்கப்பட்டது. போன்ற பிரமையை ஏற்படுத்திய பரலி மாநகரை அலசிவிடுபவன் போல் துருவித் துருவிப் பார்த்த அந்த வாலிபன் இதயத்திலிருந்து இணையற்ற துன்பத்துக்கு அறிகுறியாகப் பெருமூச்சொன்றும் வெளிவந்தது. பராலியா என்று வெளிநாட்டுக் கடல் வணிகராலும், பரலி ஆற்றங்கரையிலிருந்தால் பரலி மாநகரென்றும், செல்வம் கொழித்திருந்ததால் திரு வாழும் கோடு என்றும் பாரதப் பெருமக்களாலும் அழைக்கப் பட்டு உலகப் பிரசித்தி பெற்றிருந்த அந்த மாநகரின் செல்வமும் செழிப்பும் இணையற்றதென்பதை உணர்ந் திருந்த அந்த வாலிபன், அத்தனை செல்வமும் செழிப்பும் பரலீசனான வீரரவி உதய மார்த்தாண்டவர்மனின் அதர்மத்தால் அழிந்துவிடப் போகிறதே என்ற நினைப்பால் பெரும் அனுதாபத்தையும் முகத்தில் படரவிட்டுக் கொண்டான்.

பரலிமா நகரின் நிலப்பரப்பு அதிகமில்லா விட்டாலும் ஒருபுறம் கடலும் ஒருபுறம் மலையும் அரணமைத்திருந்ததாலும் பார்வைக்கு மலையாழத்தின் சின்னஞ்சிறு ஆபரணம் போல் அந்த மாநகர் அழகு மிகுந்ததன்றி இயற்கையின் பாதுகாப்பையும் அதிகமாகப் பெற்றிருந்ததைக் கண்ட அந்த வாலிபன், ‘எந்த அழகுக்கும் இயற்கை ஒருவித அரணை அமைத்துத்தான் தருகிறது. அதை மனிதனுடைய துர்க்குணங்கள் தான் பாழாக அடித்துவிடுகின்றன,’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டான். அந்த இயற்கை அரணுக்குள்ளே மற்றோர் அரணாக அந்த மாநகரின், வெளிக்கோட்டை விளங்கியதையும், அந்தக் கோட்டையின் வாயில்களில் புதைக்கப்பட்டிருந்த பெரும் யானைத் தந்தங்களும் தந்தங்களின் உச்சிகளில் எரிந்த வெண்கலத் தூண்டா விளக்குகளும் அந்த நகரின் புற அழகைப் பன்மடங்கு உயர்த்தியதையும், கோட்டைக்குள்ளிருந்த வீதிகள் பற்பல சதுரங்களாக அமைக்கப்பட்டிருந்தது மலையிலிருந்து பார்ப்போருக்குக் கோயிலின் பிரகாரங்களை நினைவுறுத்தியதையும் கண்ட அந்த வாலிபனின் கண்கள் தூரத்திலிருந்து விவரங்கள் முழுவதையும் பார்க்க முடியவில்லையென்றாலும் பொதுப் பார்வைக்கு திருவின் இருப்பிடமாக விளங்கும் திருவாழுங்கோடு உள்ளேயும் செல்வப் பெருக்குடன் விளங்கியதை அந்த வாலிபன் உணர்ந்தேயிருந்ததால் அவன் கண்களில் விவரிக்க முடியாத கனவொன்று படர்ந்தது. இத்தனை செல்வப் பெருக்கை மிக எச்சரிக்கையுடன் பாதுகாப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகளையும் சேரமன்னன் செய்யத் தவறவில்லை யென்பதை நகரத்துக்கு வெளியேயும் உள்ளேயும் தெரிந்த படைவீடுகள் மட்டுமின்றி அக்கம் பக்கத்தில் தெரிந்த மலையுச்சிகளிலிருந்த பார்வைக் கூடங்களும் நிருபித்ததையும் கண்ட அந்த வாலிபன் முன்னறிவிப்பில்லாமல் ரகசியமாகப் பரலி மாநகரை எந்தப் படையும் நெருங்க முடியாதென்பதைச் சந்தேகமற உணர்ந்து கொண்டான். ஆனால் எந்த ஏற்பாட்டுக்கும், எந்தப் பாதுகாப்புக்கும், எந்த வலிமையுள்ள படைக்கும் ஓர் ஆபத்து உண்டு. அந்த ஆபத்து அதர்மத்திலிருந்து முளைக்கிறது. எத்தனை அழகிலும் அது புரையோடி விடுகிறது’ என்று தனக்குள் சொல்லிக்கொண்ட அந்த வாலிபன் மேலும் அந்த மாநகரை நீண்ட நேரம் உற்று நோக்கினான். இப்படி அவன் நோக்குவது புதிதல்ல. பல நாட்களாகப் பார்த்த அதே பார்வை, அதே எண்ணங்கள் அன்றும் அவனிடமிருந்து எழுந்தன. மேற்கொண்டு கவனிக்கவோ வருந்தவோ இஷ்டமில்லாததாலோ என்னவோ கடைசியாகத் தனது புரவியைப் பாதக் குறடால் லேசாகத் தட்டி மலைச் சரிவில் நடக்க விட்டான். மலைச்சரிவின் பாதை கரடு முரடாயிருந்தாலும் அதில் அனாயாசமாக நடந்து சென்ற அந்தப் புரவியைப் போலவே மிக அனாயாசமாக அந்த வாலிபனும் அதில் அமர்ந்து சென்றான்.

பாதையின் சீர்கேட்டைச் சிறிதும் லட்சியம் செய்யாமல் புரவியை நடத்திச் சென்ற அந்த வாலிபன் சிறிது தூரம் மலைச்சரிவில் இறங்கியதும் கீழே தெரிந்த பரலிமாநகர் ராஜபாட்டையை அணுகாமல் மீண்டும் வேறொருபுறமாகப் புரவியைத் திருப்பி மலைமீது ஏறிவிட்டு, சற்று எட்ட இருந்த குடிசைகளை நாடிச் சென்றான். அக் குடிசைக் கூட்டத்தை அணுகியதும் புரவியிலிருந்து இறங்கிப் புரவிக் கயிறுகளை அதன் முதுகிலெறிந்துவிட்டு எதிரிலிருந்த சின்னஞ்சிறு குடிசையொன்றை நோக்கி மெல்ல நடந்து சென்றான். குடிசையை அடைந்ததும் உடனே உட்புகாமல் தரையைத் ‘தட் தட்’ என்று தட்டினான். இரவு நன்றாக ஏறி விட்டிருந்ததால் அந்தக் குடிசைக் கூட்டப் பகுதியே நிசப்தமாயிருந்தது. இரவில் கனவு கண்டதாலும், பசியாலும் வீரிட்டலறிய இரண்டொரு குழந்தைகளின் ஒலியையும், “உம், ஒன்றுமில்லை தூங்கு,” என்று அதட்டியும் அன்பாகவும் கூறிய இரண்டொரு தாய்மார்களின் இன்ப மொழிகளையும் தவிர வேறு எந்தவித ஒலியும் இல்லாததால் வாலிபன் பாதக்குறட்டின் ஓசை அளவுக்கு மீறி அதிகமாகவே அந்த மலைப்பிரதேசத்தில் எதிரொலித்தது. இருமுறை தட்டிய பின்பு அசைவற்று நின்றுவிட்ட அந்த வாலிபனைத் தானும் பின்பற்ற வேண்டுமென்ற காரணத்தாலோ என்னவோ கடிவாளக் கயிறுகளை முதுகில் தாங்கிய புரவியும் அவன் பின்னால் வந்து நின்று குடிசையை ஏறெடுத்து நோக்கியது. தனது தலைவன் கால் தட்டலுக்குக் குடிசையிலிருந்து பதில் கிடைக்காத காரணத்தால் மெல்ல ஒருமுறை கனைக்கவும் செய்தது.

இந்தக் கனைப்புக்கு முன்னமேயே குடிசைக்குள்ளே ஆளரவம் ஏற்பட்டு விட்டதை உணர்ந்த வாலிபன் பின் புறம் தனது கையை நீட்டிப் புரவியின் முகத்தைத் தடவி, “வருகிறார்கள்? அவசரப்படாதே” என்று கூறினான். அவன் கூறி முடிப்பதற்கும் குடிசையின் கதவு திறந்து கை விளக்கொன்று வெளிப்படுத்துவதற்கும் அவகாசம் சரியாயிருக்கவே, கைவிளக்கை ஏந்தி வந்த பெண்ணை நோக்கி, “பார்த்தாயா அண்ணி! இது வரவர மிகவும் அவசரப்படுகிறது.” என்று கூறிக்கொண்டே அந்த வாலிபன் குடிசைக்குள் நுழைந்தான். விளக்கேந்தி நின்று வழிவிட்டு அவன் பின்னால் நுழைந்த அந்தப் பெண்ணும் குடிசையின் ஒரு மூலையில் விளக்கை வைத்துவிட்டு, “இன்றைக்கு ஏன் தம்பி இத்தனை நேரமாகி விட்டது? அரண்மனையில் நிரம்ப வேலையோ?” என்று வினவினான்.

“ஆம் அண்ணி! என்னை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய காவலன் வரவில்லை. ஏதோ உடல் நலமில்லையென்று சொன்னார்கள். அவன் காவல் முறையையும் சேர்த்து நான் பார்க்க வேண்டியதாயிற்று,” என்ற அந்த வாலிபன், “அண்ணி, அண்ணன் ஏன் இன்னும் வரவில்லை?” என்று வினவினான்.

அந்தப் பெண்ணின் முகத்தில் கவலைக்குறி படர்ந்தது. “தெரியவில்லை தம்பி. அவரும் உன்னுடன் காலையில் சென்றவர்தான். இந்த அரண்மனை வேலை வரவர சள்ளையாகப் போய்விட்டது. இதை விட்டொழித்தாலும் பாதகமில்லை தம்பி,” என்றாள் அந்தப் பெண்.

“அரண்மனை வேலையையா! விட்டொழிப்பதா!” என்று கேட்டான் அந்த வாலிபன் வியப்புடன்.

“என்ன அரண்மனை வேலை வேண்டியிருக்கிறது, தம்பி? காலமில்லை நேரமில்லை, போக வேண்டியிருக்கிறது. திரும்பி வருவதும் அப்படித்தான். தவிர நாங்களென்ன வீரர்கூட்டமா? எங்களுக்கேன் இந்தத் தொல்லை?” என்று அலுத்துக் கொண்டாள் அந்தப் பெண்.

வாலிபன் அவளை உற்று நோக்கினான். அவனைவிட அவள் அப்படியொன்றும் பெரியவளல்ல. சுமார் இருபத்தைந்து வயதுக்கு மேல் மதிப்பிட முடியாத அவள் முகத்தில் நகரவாசிகளின் மினுக்கு அதிகமில்லாவிட்டாலும், காட்டுவாசிகளின் விகார ஆபரணங்கள் அவள் கழுத்திலும் காதுகளிலும் காட்சியளித்தாலும், அவள் முகத்திலும் ஒரு கம்பீரக் கட்டழகு இருக்கத்தான் செய்தது. கழுத்திலிருந்த சங்கு மாலையும், காதிலாடிய பாசிமணியில் கோத்த புலிநகங்களும் சாதாரணமாகக் காணமுடியாத ஒரு புது அழகை அவளுக்கு அளித்திருந்தன. அவனை நோக்கிய அந்தப் பெரிய கண்கள் காட்டு மான்களின் கண்களைப் போல அழகை அள்ளிக் கொட்டின. உடல் வாளிப்பும், கண்களின் பார்வையும் அழகிய வலுவை மட்டுமின்றி அவள் உள்ளத்தின் உறுதியையும் எடுத்துக்காட்டின. இத்தனையையும் ஒரு விநாடியில் பார்த்து முடித்த அந்த வாலிபன், “அண்ணி! அரண்மனையில் வேலை பெற எத்தனை பேர் காத்துக் கொண்டிருக்கிறார்கள் தெரியுமா?” என்று வினவினான்.

‘அவர்களிலொருவனுக்கு உன் அண்ணனின் வேலையை வாங்கிக் கொடுத்துவிடு தம்பி,” என்றாள் அவள்.

“ஏன் அண்ணி! உங்களுக்கு இந்த வேலை பிடிக்க வில்லையா?”

“இல்லை தம்பி, அவரவர் வேலையை அவரவர் செய்வதுதான் நல்லது.”

“அவரவர் வேலையென்பது ஒன்று உண்டா அண்ணி?”

“உண்டு தம்பி. உன் அண்ணனைப் போல் நீ கூத்தாட முடியுமா? அல்லது உன்னைப்போல் அவர் வேலெறிய முடியுமா?”

இதை அந்தப் பெண் கேட்டதும் அதிர்ச்சியடைந்த அந்த வாலிபன், “என்ன சொன்னீர்கள் அண்ணி?’ என்று திடுக்குற்று வினவினான்.

“உன் வேஷம் உன் அண்ணனிடம் பலிக்கும் தம்பி. என்னிடம் பலிக்காது,” என்றாள் அந்தப் பெண் சர்வ சாதாரணமாக.

“என் வேஷமா?” என்றான் மீண்டும் அந்த வாலிபன் அதிர்ச்சியுடன்.

“ஆம் தம்பி! சில தினங்களுக்கு முன்பு நீ காட்டுவாசி என்று சொல்லிக் கொண்டு வந்தாய். ஆனால் காட்டுக்கும் உனக்கும் எந்தச் சம்பந்தமில்லையென்பதை நீ வந்த இரவே உணர்ந்தேன். உன் நடையே உன்னைக் காட்டிக் கொடுத்தது தம்பி. அது மட்டுமல்ல. நீ வந்து நான்கு நாள் கழித்துக் காட்டுக்குள்ளிருந்து ஓடிவந்து விட்ட யானைமீது வேலெறிந்தாயே நினைப்பிருக்கிறதா?” என்ற அப்பெண் சற்று நிதானித்தாள்.

“இருக்கிறது அண்ணி,” என்ற அவன் பதிலில் சலன மிருந்தது.

“அத்தனை குறியுடன் வேலெறியக் கூடியவர் இந்தக் குடிசைக் கூட்டத்தில் ஒருவர்கூட இல்லை தம்பி! நீ வீரன். போர்களைக் கண்டவன். உன் அண்ணன் கூத்தாடி. அவர் கண்டதெல்லாம் கூத்துக்கோட்டம். அவர் அந்த வேலையில் சேர்ந்தது எனக்குப் பிடிக்கவில்லை. கூத்தாடி காத்து நிற்க முடியுமா?, அதுவும் அந்தச் சிறைக் கூடத்தை!” என்று அலுத்துக் கொண்டாள் அந்த மலைப் பெண்.

”சிறைக்கூடமா?” என்று வினவினான் அந்த வாலிபன் வியப்புடன்.

“வேறென்ன தம்பி?” என்று அவளும் வினவினாள் வெறுப்புடன்.

“அண்ணன் அரசரின் கடற்கரை மாளிகையைக் காவல் புரிகிறார்.” என்றான் வாலிபன்.

“அந்த மாளிகையை எத்தனைபேர் காவல் புரிகிறார்கள் தெரியுமா?” என்று வினவினாள் மீண்டும் அப்பெண்.

வாலிபன் முகம் சிரத்தை காட்டியது. “எத்தனை பேர் அண்ணி ?” என்று வினவினான்.

“இரு நூறு வீரர்கள்.”

“இருநூறு வீரர்களா?”

“ஆம்.”

“அது சிறிய – மாளிகைதானே!”

“சிறு மாளிகைதான். ஆனால் பெரும் மர்மமாயிருக்கிறது.”

“மர்மமென்ன இதில்?”

“அதன் காவலரை அரசரே தேர்ந்தெடுத்திருக்கிறார். இல்லாவிட்டால் உன் அண்ணனுக்குத்தான் இந்தக் காவல் வேலை கிடைத்ததிருக்குமா? உன்னைத்தான் உன் அண்ணன் அரண்மனையில் காவல் வேலைக்கு அமர்த்த முடியுமா?” என்று கேட்டாள் அவள்.

அந்த வாலிபன் சிறிது நேரம் மௌனம் சாதித்தான். பிறகு கேட்டான், “அண்ணி! அதெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும்!” என்று.

“அண்ணன்தான் சொன்னார்,” என்றாள் அவள்.

“மாளிகையின் மர்மத்தைப்பற்றி ஏதும் சொல்ல வில்லையா?”

“சொன்னார். என்ன மர்மம் அங்கே? வழக்கமான மர்மம்தான்.”

“வழக்கமான மர்மமா?”

“ஆம் தம்பி! மன்னன் பெண் பித்துப் பிடித்தவன்; வழக்கம் போல் இப்பொழுதும் ஒரு பெண்ணை அங்கு கொண்டு வந்து வைத்திருக்கிறான்.”

வாலிபன் கண்கள் திடீரெனப் பளிச்சிட்டன. “பெண்ணையா சிறை வைத்திருக்கிறான்? அந்தப் பெண் எப்படியிருக்கிறாளாம் அண்ணி?”

மலைப் பெண் அவனைக் கூர்ந்து அனுதாபத்துடன் நோக்கினான். அவன் முகம் மட்டும் விகாரமில்லாவிட்டால் அவன் உடம்பு இருக்கும் வாளிப்புக்கு எத்தனையோ பெண்கள் அவனை மணக்கத் தயாராயிருப்பார்கள் என்பதை நினைத்த அந்த மலைவாசி அனுதாபத்துடன் சொன்னாள், “தம்பி! .அவள் எப்படியிருந்தால் உனக்கென்ன? நீ வா, கஞ்சி ஊற்று கிறேன்,” என்று.

அவள் முகத்தில் விரிந்த அனுதாபத்தைக் கவனித்த அந்த வாலிபன் அதன் காரணத்தை உணர்ந்து கொண்ட தால் வருத்தப் பெருமூச்சு விட்டான். பிறகு முகம் கை கால் கழுவிக் கைநீட்ட, அவள் குடுவையில் கஞ்சி கொண்டு வந்து ஊற்றினாள். ஆனால் கைக்கெட்டியது அவன் வாய்க் கெட்டவில்லை. கஞ்சியை அவன் கையில் வாங்கியதும் வெளியே அவன் புரவி பலமாக அலறியதால் கையிலிருந்த கஞ்சியை உதறிவிட்டு வெளியே ஓடினான் அந்த வாலிபன். அவளும் அவனைத் தொடர்ந்தாள். முற்றும் எதிர்பாராத கோரக்காட்சி அவர்கள் கண்முன்னே விரிந்தது. புரவியினருகில் அவள் கணவன் குப்புற விழுந்து கிடந்தான். அவன் முதுகில் கத்தியொன்று பாய்ந்திருந்தது. கத்தி பாய்ந்த இடத்திலிருந்து குருதி பீறிட்டு வெளியே ஓடிக் கொண்டிருந்தது. நெஞ்சை உலுக்கும் அந்த விபரீதக் காட்சியைக் கண்ட மலைமகள் ஒரு முறை பெரிதாக வீரிட்டாள். பிறகு நினைவிழந்து தரையில் சாய்ந்தாள்.

Previous articleRaja Muthirai Part 1 Ch70 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Muthirai Part 2 Ch2 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here