Home Historical Novel Raja Muthirai Part 2 Ch11 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

Raja Muthirai Part 2 Ch11 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

63
0
Raja Muthirai Part 2 Ch11 Raja Muthirai Part 2 Sandilyan, Raja Muthirai Part 2 Online Free, Raja Muthirai Part 2PDF, Download Raja Muthirai Part 2 novel, Raja Muthirai Part 2 book, Raja Muthirai Part 2free, Raja Muthirai,Raja Muthirai Part 2 Story in tamil,Raja Muthirai Part 2 Story,Raja Muthirai Part 2 novel in tamil,Raja Muthirai Part 2 novel,Raja Muthirai Part 2 book,Raja Muthirai Part 2 book review,ராஜ முத்திரை ,ராஜ முத்திரை கதை,Raja Muthirai Part 2tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2full story,Raja Muthirai Part 2 novel full story,Raja Muthirai Part 2audiobook,Raja Muthirai Part 2audio book,Raja Muthirai Part 2full audiobook,Raja Muthirai Part 2full audio book,
Raja Muthirai Part 2 Ch11 | Raja Muthirai | TamilNovel.in

Raja Muthirai Part 2 Ch11 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

ராஜ முத்திரை இரண்டாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 11 செண்டுவெளி

Raja Muthirai Part 2 Ch11 | Raja Muthirai | TamilNovel.in

”சரியான நிலையில் தவழ்ந்தோடும் சரித்திரம், கவிதையும் தத்துவமும் இணைந்த ஓர் அமுதத் தொடர்பு,” என்று மேதை மெக்காலே சொன்னதன் சிறப்பை, நாட்டு வரலாற்றையும் மனித வளர்ச்சியையும் ஆராய்ந்து பார்ப்பவர்கள் அறிவார்கள். புல்லறிவாளர்கள் புத்திக்குப் பல விஷயங்கள் எட்டாததுபோல இந்த உண்மையும் எட்டு வதில்லை. சரித்திர ஏடுகளில் காணப்படுவது தேதிகளும் போர்களும் முடிசூட்டு விழாக்களும் மட்டுமல்ல. மனித குல மாற்றங்கள், அபிலாஷைகள், குறைபாடுகள், காதல், கனிவு, களியாட்டங்கள், போர் விளையாட்டுகள், பயிற்சி முறைகள், இன்னும் எத்தனை எத்தனையோ நிலவரங்கள் உணர்ச்சிகள், பெரும் சாதனைகள், சோதனைகள், வேதனைகள் – இத்தனையும் காணப்படுகின்றன. இப்படிச் சரித்திரம் மனிதகுலத்தைப் பற்றிய சகலத்தையும் சொல்லுவதால், பழைய எண்ணங்களை மீண்டும் நமது சிந்தனைக்குக் கொண்டு வருவதால் அதில் கவிதையும் இருக்கிறது. அந்தக் கவிதையின் ஒருபகுதியைச் சேரமன்னன் வீரரவி வகுத்த புதுத் திட்டத்தில் தமிழர்கள் பார்க்கலாம். தமிழர் மூலம் வெளி நாட்டவரும் பார்க்கலாம். கிரேக்க நாட்டு நாகரிகத்துக்குச் சற்றும் குறைவில்லாத, ஏன் சற்று அதிகமான, நாகரிகம் பண்டைத் தமிழரிடம் விளங்கி வந்ததற்குச் சென்ற அத்தியாயத்தில் சேர மன்னன் சிந்தையிற்கொண்ட செண்டுவெளிக் களியாட்டம் சிறந்த சான்றுகளில் ஒன்று.
பழந்தமிழ் மக்களின் வீர விளையாட்டுக்களில் செண்டு வெளிக் களியாட்டம் மிகச் சிறந்ததென்பதைக் காப்பியங்கள் எடுத்துக் காட்டுகின்றன. அந்தக் களியாட்டம் வீரனை நிர்ணயித்தது. அக்காலத் தமிழ் மன்னர்களுடைய அரண்மனை ஒவ்வொன்றுக்குள்ளும் செண்டு வெளியென்ற பெரும் பயிற்சி அரங்கமொன்று இருந்து வந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் வட்டமாகச் சுற்றி நின்று வேடிக்கை பார்க்க அந்த வெளியில் வசதியிருந்ததன்றி, மன்னரும் மற்றப் பெருங்குடி மக்களும் அமருவதற்குப் பெரும் மேடைகளும் அமைக்கப்பட்டிருந்தன. செண்டு வெளியில் சமதரை சாதாரண நாட்களில் கூடப் பழுது பார்க்கப்பட்டு வந்ததால், புரவிகள் வெகு வேகமாகச் செல்வதற்கும் அவற்றில் கால்கள் இடறாமலும் வழுக்கா மலும் இருப்பதற்கும், எப்பொழுதும் வெகு சீராக வைக்கப் பட்டிருந்தது. அந்தத் தரையின் அழகை ஒட்டியும், குதிரைகளைப் பழக்குவதற்குக் கூட அது உபயோகப் படுத்தப்பட்ட காரணத்தாலும் அதை வையாளி வீதி யென்றும் மக்கள் அழைத்து வந்தார்கள். அரண்மனையின் அந்தச் சிறப்பு வெளிமுற்றத்தில் சாதாரண நாட்களிலும் வீரர்கள் குதிரையேற்றப் பயிற்சியில் ஈடுபடுவார்கள் செண்டாயுதப் பயிற்சியும் அங்கு தினந்தோறும் நடக்கும். ஆனால் மக்களுக்கு முரசு அறிவித்து நடத்துப்படும் செண்டு வெளிக் களியாட்டம் பெரும் பிரமை அளிக்கவல்லது. கவிஞன் நாவுக்கு வலு அளிப்பது, நாட்டுக்குக் கவிதை அளிப்பது வரலாற்று வித்தாக விளங்கியது.

செண்டு வெளியாட்டம் நடப்பதற்கு மூன்று நாட் களுக்கு முன்பே மன்னர் ஆணையாளர் முரசு மூலம் செண்டு வெளி நடக்கும் தேதியை மக்களுக்கு அறிவிப் பார்கள். மூன்று நாட்களுக்கு முன்பிருந்து மீண்டும் செண்டு வெளித் தரையும், மன்னரும் மற்றோரும் அமரும் உயர் மேடைகளும் மிக மும்முரமாகச் செப்பனிடப்படும் மன்னனை வெளியிலிருந்து காக்க அழகிய பெரும் துணி கொம்புகள் மீது விரிக்கப்படும். உண்மையில் இதுகூட அவசியமில்லை. ஏனென்றால் அந்தக் களியாட்டத்தில் ஏற்படும் வெறி, மாலை, நேர வெய்யிலையோ வெப்பத்தையோ வானப் பொழிவையோகூட அலட்சியம் செய்யும். அன்று மக்களுக்கோ மன்னனுக்கோ அரண்மனைப் பெண்களுக்கோ மது சிறிதும் தேவையில்லை. போதையேற்ற செண்டு வெளி வீர நாடகமே போதும். அந்த வீரவிளையாட்டை “மண்டிலார் குதிரை நாடு வட்டம் போர் கூத்துமாகும். செண்டு செண்டாயுதம் பந்தெறி வீதி,” எனப் பாடி இதைப் போர்க் கூத்து எனச் சிறப்பிப்பாரும் உண்டு.

இந்தப் போர்க் கூத்தில் கையாளப்படும் செண்டு என்ற ஆயுதம் கிட்டத்தட்ட வேல் போன்றது. வேல் போன்ற கூரிய முனையுடன் மட்டுமின்றி அந்த முனைக்குச் சற்றுக் கீழே பிடியைச் சுற்றிச் சின்னஞ்சிறு சூலங்கள் பலவும் வார்ப்படம் செய்யப்பட்டிருந்தபடியால் முனையின் அடிப்பாகம் செண்டு போல் பார்ப்பதற்கு அழகாகவும், வேகமாகப் பாய்ந்தால் சதையைப் பிய்த்துக் கொண்டு ஆழ உள்ளே சென்று தேகத்தில் நிலைத்துப் பறிக்க முடியாத முறையில் உயிரைக் குடித்துவிடும் தன்மை வாய்ந்ததாகவும் இருந்தது. சில சமயங்கள் ஈட்டி முனைக்குக் கீழேயிருந்த சிறு சூலங்களில் சின்னஞ்சிறு துணிகள் சுற்றப்பட்டு எண்ணெயூற்றி நெருப்பும் வைக்கப் படுமாதலால், செண்டால் தாக்கப்படுபவர் தீப்புண் சுட்டு அப்புண்ணுக்குப் பலியாவதும் உண்டு. நீண்ட மரப் பிடியுடன், தலையில் கூரிய இரும்பு வேலும் அதையொட்டி சிறு இரும்புச் சூலங்கள் பலவும் செண்டு போல் வார்க்கப் பட்டிருந்ததால் பார்வைக்கு மிக அழகாக இருந்த செண்டாயுதம் உண்மையில் உயிரை எளிதில் குடிக்கக்கூடிய பயங்கர ஆயுதமாக இருந்தது. இத்தகைய ஆயுதத்துக்குத் தெய்வத்தன்மையும் கற்பிக்கப்பட்டிருந்தது. இதை ஐயனாரின் ஆயுதமாகச் சிறப்பித்து வந்தார்கள் பைந்தமிழர்கள். இதன் காரணமாக ஐயனாருக்கு செண்டாயுதன் என்ற திருநாமமும் வழங்கலாயிற்று.

இப்படித் தெய்வீகமும், வீரமும் கலந்த செண்டு வெளிக் களியாட்டத்தை அடுத்த நான்காவது நாள் சேர மன்னன் கொண்டாட இருக்கிறானென்பதை முரசு மூலம் அறிந்து பரலி மாநகர் மக்களின் குதூகலம் அடக்க முடியாத நிலையை அன்று மாலையே அடைந்து கொண்டிருந்தது. மன்னன் இத்தகைய ஏற்பாட்டைச் செய்கிறான் என்பதை அறியாத காரணத்தால், இரவு சற்று ஏறியதும் மெய்க் காவலர் இல்லத்தைவிட்டுப் புரவி மீது ஏறி வெளியேறிய இந்திரபானு அரண்மனை மதில்களுக்கு முன்பாக டமடமவென்று முரசு முழங்கிக் கொண்டிருந்ததை முதலில் சற்று வியப்புடன் கேட்டான்.
முரசு கொட்டியவன் கொட்டுவதை நிறுத்தி விஷயத்தைப் பெருங்குரலில் அறிவித்த பின்னர் இந்திரபானு தானிருக்கும் இடம், நிலை, சகலத்தையும் மறந்து பேருவகை கொண்டான். செண்டு வெளியை அவன் மதுரை மாநகரில் பார்த்திருக்கிறான். அந்த ஆயுதம் கொண்டு புரவியை வெகு வேகமாக ஏவி நுண்ணிய இலக்குகளை வீரபாண்டியன் துழாவித் தகர்த்தெறிந்த பெரும் வீரச் செயல்களைப் பார்த்திருக்கிறான். வீரபாண்டியனுடைய ஒவ்வொரு வீர விளையாட்டுக்குப் பின்னரும் அரண்மனைப் பாங்கியரும் மற்றச் சாதாரண குடிமாதரும் பூப்பந்துகளை அவன் மீது வீசிய அரிய காட்சிகளெல்லாம் அவன் கண்முன் வந்ததால், அவன் சேர நாட்டை மறந்து மதுரை மாநகர் சென்றான். அங்கிருந்த அரண்மனை செண்டு வெளிக்குச் சென்றான். சூழ்நிலையை அடியோடு மறந்து கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டே புரவியை நடத்திக் கடற்கரை மாளிகையை நோக்கிச் சென்றான். முரசு அளித்த போதையில் முக்கிய பல விஷயங்களை கவனிக்கவும் எண்ணிப் பார்க்கவும் மறந்தான்.

மன்னன் தன்னை மெய்க்காவலனாக்கிய போதிலும், அரண்மனையை அடுத்த பிரதான இல்லங்களிலொன்றில் தன்னைத் தங்கவைத்த போதிலும், உண்மையில் தான் சிறை யிலேயே வைக்கப்பட்டிருந்ததை அன்று பகலில் உணர்ந்திருந்த இந்திரபானு, இரவில் தான் வெளியே போய் வருவதாக விடுதிக் காவலனிடம் அறிவித்தபோது காவலன் நடந்துகொண்ட முறையைப்பற்றி என்னகாரணத்தாலோ எண்ணிப் பார்க்கவில்லை. தன்னுடன் தங்கி மாலை பூராவும் தன்னைப்பற்றி நொந்து பேசிக் கொண்டிருந்த பரதபட்டன் கூடத் தன்னைத் தடை செய்யாத காரணத்தையும் அவன் யோசிக்கவில்லை. சர்வ சாதாரணமாக, சர்வ சுதந்திரமாகத் தான் இரவில் சேரன் தலைநகரில் சுற்றும் நிலை ஏற்பட்டதன் காரணத்தைக்கூட அவன் நினைத்துப் பார்க்கவில்லை. இவையனைத்தையும் மீறிய நினைவுகள், கனவுகள் அவன் சிந்தையை ஆட் கொண்டிருந்தன.

பகல் பூராவும், மாலை நெருங்கி வெகு நேரத்துக்குப் பின்புங்கூட, அவன் முத்துக்குமரியையே நினைத்துக் கொண்டிருந்தான். முதல் நாளிரவு அவள் தன் கையில் சிக்கிக் கிடந்ததைத் திரும்பத் திரும்ப எண்ணிப் பார்த்து, அந்தத் தழுவலளித்த சுகத்தையும், சுகத்தின் பூர்த்தியின்மை அளித்த துன்பத்தையும் நினைத்துப் பெருமூச்செறிந்தான் பலமுறைகள். இருப்பினும் நினைப்பு அளித்த இன்ப நினைவுகளின் காரணமாக இரவு ஏறியதும் உணவைக் கூடக் தொட்டுப் பார்க்காமல் வெளியே கிளம்ப யத்தனித் தான். பரதபட்டனின் பளிச்சிட்ட கண்கள் அவனை நோக்கின. உதடுகள், “எங்கு போகிறாய்?” என்று கேட்டன.

“கடற்கரை மாளிகைக்கு,” என்றான் இந்திரபானு கச்சையில் வாளைக் கட்டிக் கொண்டு.

“எதற்கு?” என்று வினவினான் பரதப்பட்டன்.
“காவல் புரிவதற்கு, காவலை நிறுத்தச் சொல்லி மன்னன் உத்திரவிடவில்லையே?” என்று பதில் சொன்னான் இந்திரபானு.

பரதப்பட்டன் அவனை ஒரு வினாடி உற்று நோக்கி னான். பிறகு சிரித்துவிட்டுத் தனது பஞ்சணையில் நன்றாக மல்லாந்து படுத்துக் கொண்டான். வேறெதுவும் பரதப்பட்டன் சொல்லாததால் மெய்க் காவலர் விடுதியை விட்டு வெளியே வந்த இந்திரபானுவை நோக்கி விடுதிக் காவலன் வணங்கினான்.

நேரங்கடந்த நேரத்தில் இடையில் கச்சையும் வாளும் கட்டி மெய்க் காவலர் விடுதியிலிருந்து வெளியே வந்த போது விடுதிக் காவலன் அவனை எந்த விதத்திலும் தடை செய்யாது மிக அடக்கம் காட்டி நன்றாகத் தலை வணங்கவே செய்தான். இந்திரபானு அவன் நோக்கத்தை அறிய, “நான் வெளியே போகிறேன்,” என்று அறிவித்தான் அதிகாரத்துடன்.

“நல்லது” என்றான் விடுதிக் காவலன்.

“எங்கே போகிறேனென்பதைக் கேட்கவில்லையே நீ?” என்றான்.

“மெய்க்காவலரைத் தடை செய்ய நான் யார்?” காவலன் பதிலில் பணிவு அதிகமாயிருந்தது.

“சரி, புரவியொன்று கொண்டு வா,” என்று உத்தர விட்டான் இந்திரபானு.
விடுதிக் காவலன் பதிலேதும் கூறாமல் கொட்டடிக்குச் சென்று புரவியொன்றைக் கொண்டு வந்தான்.

புரவியிலேறிக் கொண்டு, “நான் மாளிகைக் காவலுக் குப் போய் வருகிறேன்,” என்று அறிவித்தான் இந்திரபானு காவலனிடம்.

விடுதிக் காவலன் அதற்கும் பதில் சொல்லவில்லை. சரியென்பதற்கு அடையாளமாகத் தலையை மட்டும் ஆட்டினான். அங்கிருந்து அரண்மனை மதிலையும் தாண்டி வெளியே வந்த இந்திரபானுவுக்கு முத்துக்குமரி நினைப்புடன், முரசு அறிவித்த செண்டுவெளி நினைப்பும் சேர்ந்து கொள்ளவே அவன் வெகு குதூகலத்துடன் கடற்கரை மாளிகையை நோக்கிப் பெருவேகத்துடன் புரவியைத் தூண்டினான்.

இரவு ஏறியும் சேரன் தலைநகர் அன்று விழித்துக் கிடந்தது. முரசு பல இடங்களில் ஒலித்துவிட்டதன் காரணமாக மக்கள் வீதி மூலைகளிலும் உப்பரிகைகளிலும் நின்று நான்கு நாட்களுக்குப் பிறகு நடைபெறவிருந்த செண்டு வெளிப் பெரு விழாவைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார்கள். எங்கும் நிலவு மங்கலாகப் படர்ந்து கிடந்ததே அந்த நகரத்துக்கு ஓர் அழகைக் கொடுத்ததென்றால், வீதி உப்பரிகையின் மீது காதலருடன் நெருங்கி நின்ற காதலிகள் செண்டு வெளியைப் பற்றிப் பேசிய பேச்சின் உணர்ச்சி வேகமும் இந்திரபானுவின் இதயத்தை ஆழத் தொடவே செய்தது. பாண்டிய நாட்டின் உற்சாகத்தை சேர நாட்டிலும் கண்டான் இந்திரபானு. சந்திரபானுவின் மகனான இந்திரபானு, ‘தமிழ் மக்கள் இத்தனை வீர உணர்ச்சி பெற்றிருக்க, தமிழ் மன்னர்கள் மட்டும் சதா போர் புரிந்து தமிழகத்தில் சேதத்தையும் ஏன் விளைவிக்கிறார்கள்?’ என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டான். தமிழரின் சிறு பொறாமைகள் எப்படி அவர்களின் பெரும் சக்தியைச் சீரழித்து விடுகின்றன என்பதை எண்ணிப் பெருமூச் செறிந்து கொண்டும், செண்டு வெளியை நினைத்துப் பெருமகிழ்வு கொண்டும் கடற்கரை மாளிகையை எய்தினான்.

இரவு பெரிதும் ஏறியிருந்ததாலும் கடற்கரை மாளிகையில் பந்தங்கள் ஜொலித்துக் கொண்டிருந்தன. தனக்கு எப்படியும் மாளிகை வாயிலில் எதிர்ப்பு ஏற்படு மென்பதையும், அப்படி ஏற்பட்டால் மன்னன் தன்னை மெய்க்காவலனாக்கியிருக்கும் காரணத்தைச் சொல்லி உள்ளே புகமுயல வேண்டியிருக்குமென்பதையும் அறிந்தே புரவியில் மாளிகைக்கு முன்னால் வந்து நின்றான் இந்திரபானு. ஆனால் அவனுக்கு எந்தத் தடங்கலும் ஏற்பட வில்லை. வாயிலை அவன் அடைந்ததுமே அங்கிருந்த காவலர் அவனுக்குத் தலை வணங்கி புரவி உள்ளே செல்ல வாயிலை அவசர அவசரமாகத் திறந்துவிட்டனர். அடுத்த வாயிலைத் தாண்டி மாளிகைக்குள் புகுந்த போதும் யாரும் அவனைத் தடை செய்யவில்லை. அவன் காவல் காத்த இடமும் காலியாகவே இருந்தது. அந்த உள்ளறை வாசல்படிக்கு முன்பாகச் சில வினாடிகள் நின்ற இந்திரபானு மெள்ள முந்தியநாள் உட்கார்ந்த படியில் உட்கார்ந்து கொண்டான். நீண்ட நேரம் அப்படியே உட்கார்ந்து கொண்டிருந்த பிறகு அடுத்த கட்டுக் காவலை உற்று நோக்கிவிட்டுச் சமயம் பார்த்து அறைக்குள்ளேயும் நுழைந்தான். அன்றும் முத்துக்குமரி பஞ்சணையில் உட்கார்ந்திருந்தாள். ஆனால் அவள் முகம் முந்தைய நாள் முகமாயில்லை. கிலிபடர்ந்து கிடந்தது முகம் பூராவும். அவனைக் கண்டதும் அவள் உதடுகள் துடித்தன கோபத்தால். “ஏன் இங்கு வந்தீர்கள், யார் வரச் சொன்னது உங்களை?” என்று சீறினாள்.

அவள் மாற்றம் பெரும் மாற்றமாயிருந்தது. அந்தப் பெருமாற்றத்தின் காரணம் அவனுக்கு விளங்கவில்லை. அவளைக் கூர்ந்து நோக்கினான் இந்திரபானு. அவள் அழகிய கண்களில் அவன் எதிர்பார்த்து வந்த காதலில்லை. கனல் இருந்தது. மதிமுகத்தில் கனிவு இல்லை. சினம் தானிருந்தது. குரலில் குழைவு இல்லை கோபம் தானிருந்தது. “இங்கு அரை நிமிஷம் கூட நிற்கவேண்டாம். போய்விடுங்கள்.” என்ற முத்துக்குமரி வாயிற்படியையும் சுட்டிக் காட்டினான்.

இந்திரபானுவுக்குத் தலை சுற்றும் போலிருந்தது. ஏதும் விளங்காமல் பிரமை பிடித்து நின்றான்.

Previous articleRaja Muthirai Part 2 Ch10 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Muthirai Part 2 Ch12 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here