Home Historical Novel Raja Muthirai Part 2 Ch12 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

Raja Muthirai Part 2 Ch12 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

60
0
Raja Muthirai Part 2 Ch12 Raja Muthirai Part 2 Sandilyan, Raja Muthirai Part 2 Online Free, Raja Muthirai Part 2PDF, Download Raja Muthirai Part 2 novel, Raja Muthirai Part 2 book, Raja Muthirai Part 2free, Raja Muthirai,Raja Muthirai Part 2 Story in tamil,Raja Muthirai Part 2 Story,Raja Muthirai Part 2 novel in tamil,Raja Muthirai Part 2 novel,Raja Muthirai Part 2 book,Raja Muthirai Part 2 book review,ராஜ முத்திரை ,ராஜ முத்திரை கதை,Raja Muthirai Part 2tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2full story,Raja Muthirai Part 2 novel full story,Raja Muthirai Part 2audiobook,Raja Muthirai Part 2audio book,Raja Muthirai Part 2full audiobook,Raja Muthirai Part 2full audio book,
Raja Muthirai Part 2 Ch12 | Raja Muthirai | TamilNovel.in

Raja Muthirai Part 2 Ch12 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

ராஜ முத்திரை இரண்டாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 12 வஞ்சிக் காண்டம்

Raja Muthirai Part 2 Ch12 | Raja Muthirai | TamilNovel.in

கடற்கரை மாளிகையின் கடையறைக் கட்டிலின் பஞ்சணையில் உட்கார்ந்திருந்த பாண்டியன் பைங்கிளியின் பதற்றத்தையும், சற்றும் எதிர்பாராத மாற்றத்தையுங் கண்ட இந்திரபானு, இரண்டு மூன்று விநாடிகள் அடியோடு செயலற்றுச் சிலையென நின்றுவிட்டான். முதல் நாளிரவு தன் பிணைப்பில் சொந்தத்துடன் சுழன்ற அந்த அழகுப் பிம்பம் ஒரே நாளையில் அந்தமிழந்து விவரிக்க இயலாத வகையில் விந்தைப் பிம்பமாகிவிட்டதன் காரணத்தை அறியாத அந்த வாலிபன், என்ன செய்வது, எதைக் கேட்பது, என்று தெரியாமல் திணறினான். அப்படித் திணறிய நிலையிலும் அவள் கம்பீரத்தையும், மாற்ற மடைந்த முகத்திலும் விரிந்து கிடந்த புதுவித சோபையையும் கவனித்த இந்திரபானு. பாண்டிய குமரியின் அழகு ஒவ்வோர் உணர்ச்சிப்பெருக்கின்போதும் வெவ்வேறு விதமாக மாறினாலும் அதன் கவர்ச்சியில் மட்டும் மாறுதலில்லை என்பதை உணர்ந்தான். “இங்கு அரை நிமிஷங்கூட நிற்க வேண்டாம். வெளியே போய்விடுங்கள்” என்று சீறி வாயிற்படியை நோக்கிக் கையைக் காட்டிய தோரணையிலும் கம்பீரமும், கவர்ச்சியும் இருந்ததையும், வாயிற் படியைச் சுட்டிக்காட்ட அவள் கையெழுந்த வேகத்தில் திடமான அழகொன்றும் மேல்நோக்கி எழுந்ததையும், உதடுகள் துடித்த வேகத்தில் உடலின் எழில் முகமும் லேசாகத் துடித்ததையும் கண்ட சிங்கள நாட்டு இந்திரபானு, சித்தத்தையெல்லாம் அவளிடம் பறிகொடுத்ததால் பேச நா எழாமலே நின்றான்.
அவன் அப்படி அசையாமல் நின்றது அவள் இதயத்தின் கோபத்தைக் கிளறியதா, பரிதாபத்தைப் பறை சாற்றியதா அல்லது அச்சத்தை அள்ளிக்கொட்டியதா என்று திட்டமாகச் சொல்ல முடியாதபடி மூன்று உணர்ச்சிகளையும் கலந்து அவள் அழகிய முகத்தில் விரவி விட்டதால் அவள் மீண்டும் சொன்னாள் குழம்பிய குரலில், “தயவு செய்து போய்விடுங்கள். இங்கு நிற்காதீர்கள் ” என்று.

அப்படி இரண்டாம் முறையாக அவள் தன்னை வெளியேற வற்புறுத்தியதும், இந்திரபானு செயலற்ற நிலையிலிருந்து சற்று உணர்ச்சி நிலைக்கு வந்து வினவினான். “ஏன் குமரி! என்னைக் கண்டால் உனக்குப் பிடிக்கவில்லையா?”

முத்துக்குமரியின் விழிகள் அவனை நன்றாக ஏறிட்டு நோக்கின. “இத்தனை நாட்களுக்குப் பிறகு அசட்டுக் கேள்வி!” என்று சொற்கள் இகழ்ச்சியுடன் உதிர்ந்தன.

இந்தப் பதில் இந்திரபானுவின் உள்ளத்தில் அமுத மெனப் பாய்ந்தது. ஆகவே அவன் சற்று வேடிக்கையாகவே சொன்னான்; “என் விகார முகம் உன் இதயத்தை மாற்றி விட்டதோ என்று நினைத்தேன்.” என்று.

முத்துக்குமரி பஞ்சணையைவிட்டு இறங்கி இரண்டடிகள் அவனை நோக்கி வந்தாள். “உங்கள் முகம் மாற்றவில்லை என்னை.” என்று சற்று சீற்றத்துடன் கூறினாள்.
“வேறு எது மாற்றிவிட்டது குமரி?” என்று வினவினான் இந்திரபானு குழப்பத்துடன்.

“உங்கள் கழுத்து. உங்கள் மார்பு,” என்று கூறிய முத்துக்குமரியின் முகத்தில் மீண்டும் அச்சம் படர்ந்தது.

இந்திரபானுவுக்கு ஏதும் விளங்கவில்லை , “என் கழுத்தா? மார்பா? அவற்றுக்கென்ன?” என்று வினவினாள் சற்று தடுமாற்றத்துடன்.

“ஆம். அவையிரண்டை நோக்கித்தான் வீரர்கள் வேலெறிவார்கள். அந்த வேல் செண்டாயுதமாயிருந்தால் மரணம் உடனடியாக நிச்சயம்,” என்ற முத்துக்குமரி சோகப் பெருமூச்செறிந்தாள்.

“அதற்கும் எனக்கும் சம்பந்தம்?” என்று வினவினான் இந்திரபானு.

முத்துக்குமரியின் விழிகளில் அச்சம் மறைந்து கோபம் துளிர்த்தது. உண்மையில் “உங்களுக்குப் புரிய வில்லையோ நான் சொல்வது?” என்று வினவினாள் கோபத்துடன்.

“இல்லை, புரியவில்லை,” என்றான் இந்திரபானு.

“நீங்கள் நகரத் தெருக்களின் வழியாகத்தானே வந்தீர்கள்?”

“ஆம்.”
“அங்கு முரசு கொட்டவில்லையா?”

“கொட்டிற்று. இன்றிலிருந்து நான்காம் நாள் செண்டு வெளியென அறிவிக்கப்பட்டது.

“அதிலிருந்து என்ன புரிகிறது?”

“சேர நாட்டில் வீரம் செத்துவிடவில்லையென்பது புரிகிறது.”

முத்துக்குமரி ஒரு விநாடி இருந்த இடத்தில் ஸ்தம்பித்து நின்றாள். பிறகு அவனைக் கூர்ந்து நோக்கினாள். “பாண்டிய நாடும், சேரநாடும் போர்க் கோலம் கொண்டிருப்பது உங்களுக்குத் தெரியுமா தெரியாதா?” என்று மெள்ளக் கேட்கவும் செய்தாள்.

“இதில் ரகசியமென்ன இருக்கிறது? உலகறிந்த விஷய மாயிற்றே?’ பாண்டிய குமாரியைச் சேரன் சிறையெடுத்த பின்பு பாண்டிய மன்னன் கையைக் கட்டிக்கொண்டு காட்டுக் கோட்டையில் உட்கார்ந்திருப்பானா?” என்று வினவினான் இந்திரபானு.

முத்துக்குமரியின் கண்கள் அறை வாயிலுக்கு வெளியே ஒருமுறை பாய்ந்தன. பிறகு மீண்டும் இந்திர பானுவின் மீது நிலைத்தன. பாண்டியர் படை இரு பிரிவாகப் பிரிந்து ஒன்று சேரநாட்டு வடதிசை நோக்கியும், இன்னொன்று தென்திசை நோக்கியும் நகர்ந்துவிட்டது, சில நாட்களுக்கு முன்பு” என்று அவள் கனவில் பேசுவதுபோல் சொற்களை உதிர்த்தாள்.
இம்முறை இந்திரபானுவின் முகத்தில் வியப்பு விரிந்தது. “அப்படியா!” என்ற சொல்லில் அந்த வியப்பு மட்டுமல்ல, அச்சமும் தெரிந்தது.

முத்துக்குமரி கனவில் பேசுவதுபோல் மேலும் சொன்னாள்; “இந்தச் சிறைவாசத்தில் பல விஷயங்களை நான் அறிந்தேன். எனது சிறிய தந்தை வீரபாண்டியர் படைப் பிரிவு ஒன்றுடன் சேரர் வடக்கெல்லைக்குச் சென்றதாகவும், எனது தந்தை சுந்தரப்பாண்டியப் பெருமான் இன்னொரு படைப் பிரிவுடன் இத்தலைநகர் நோக்கி வந்ததாகவும் கேள்விப்பட்டேன். உங்களுக்குப் பதிலாக உபதளபதியாக வீரபாண்டியருடன் கொற்கைக் கோட்டைக் காவலன் மகளான இளநங்கை சென்றிருப்பதாகவும் கேள்விப் பட்டேன். வீரபாண்டியன் கோட்டாற்றுக் கரையை அடைந்துவிட்டதாகக்கூடச் செய்தி கிடைத்தது. இங்கிருந்தும் பெரும்படையொன்று கோட்டாற்றுக் கரை நோக்கிச் சென்றதாகவும் கேள்விப்பட்டேன்.” இந்த இடத்தில் உணர்ச்சிப் பெருக்கின் காரணமாகச் சற்று நிதானித்து, பெருமூச்செறித்தாள் பாண்டியன் மகள்.

இந்திரபானுவின் விகார முகம் மேலும் விகாரமடைந்தது. அந்த விகாரத்தில் அது கெட்டிப்பட்டு கல்லாகிவிட்ட தாகக்கூடத் தெரிந்தது. அவன் குரலும் கருங்கல்லை விடக் கடுமையாக ஒலித்தது. அவன் பெருமூச்சுக்குக் குறுக்கே “வேறென்ன கேள்விப்பட்டாய்?” என்ற சொற்கள் சினத் துடன் உதிர்த்தன அவன் உதடுகளிலிருந்து.
முத்துக்குமரி கனவுலகத்தில் இருந்தாள். அவன் கடுமைக் குரல் அவளைச் சற்றும் பாதிக்கவில்லை . உணர்ச்சிப் பெருக்குடன் மேலே சொன்னாள்; “தரைப் படையைப் போசளத் தண்டநாயகனும் பெருவீரனுமான சிங்கணன் நடத்திச் சென்றதாகவும் கேள்விப்பட்டேன் அதற்கு உதவியாகக் கடற்படை யொன்றும் இயங்கியதாகக் கேள்விப்பட்டேன். இந்த இரு படைகளும் வீரபாண்டியர் படையை அழிப்பது நிச்சயம் என்றும் கேள்விப்பட்டேன். இத்தனைக்கும் என் தந்தை சுந்தரபாண்டியர் ஏதும் செய்ய வில்லையென்றும் அறிந்தேன். எல்லைக் கிராமங்களைக் கொளுத்தினாராம். பயிர்பச்சைகளைக் கொளுத்தினாராம். பெரும் வீரரான அவர் இதைத்தான் செய்தாராம். சேரர் படைகளைக் கண்டபோதெல்லாம் காட்டில் மறைந் தாராம். அவர் படை எங்கு சஞ்சரிக்கிறது. எப்படிச் சஞ்சரிக்கிறது என்று தெரியவில்லையாம். எப்படிச் சஞ்சரித்தாலும், பயிரைக் கொளுத்துவதும் கிராமங்களை அழிப்பதும், வீரர்களுக்கு அழகல்லவென்று மக்கள் பேசிக் கொள்கிறார்களாம்.” இத்துடன் முத்துக்குமரி நிறுத்தினாள். வெறுப்பும் சோகமும் கலந்த பெருமூச்சொன்று அவரிடமிருந்து வெளிவந்தது.

இந்திரபானு ஸ்தம்பித்து நின்றான். அவன் வாயி லிருந்து நீண்டநேரம் சொற்களேதும் வெளிவரவில்லை. “இதையெல்லாம் யார் சொன்னது உனக்கு?” என்று கடைசியாக வினவினான் வறண்ட குரலில்.
முத்துக்குமரியின் பதில் தடங்கலின்றி வெளிவந்தது “கூத்தன்,” என்று பதில் சொன்னாள் முத்துக்குமரி.

“இத்தனையும் கூத்தனா சொன்னான்?” என்ற இந்திர பானுவின் குரலில் சினமிருந்தது.

“ஆம், கூத்தன் மிகவும் நல்லவன். என்னிடம் அவன் காட்டிய பிரியத்தை ஒரு சகோதரன் கூடக் காட்ட மாட்டான். ஒவ்வொரு நாளும் இரவுக் காவலுக்கு அவன் தான் வருவான். இரவு வெகுநேரம் நாங்களிருவரும் பேசிக் கொண்டிருப்போம்” என்றாள் முத்துக்குமரி.

“அப்படியா?”

“ஆம். முதல் நாளிரவும் நீங்கள் வந்ததும் உங்களை நான் அழைக்கவில்லையா ரகசியமாக?”

“ஆம் அழைத்தாய்.”

“ஏன் அழைத்தேன்?”

“சொல்.”

“கூத்தனென்று நினைத்து அழைத்தேன்.”

அது இந்திரபானுவுக்குத் தெரிந்தேயிருந்தபடியால் அவன் அதற்குக் காரணம் கேட்கவில்லை. “இப்போது புரிகிறது, புரிகிறது.” என்றான் இந்திரபானு.
முத்துக்குமரிக்கு ஏதும் புரியாததால் கேட்டாள், “என்ன புரிகிறது?” என்று.

“கூத்தன் வாயினால் கெட்டான் என்பது ” என்று கூறிய இந்திரபானு, “ஒற்றனாயிருப்பவன் அதிகமாகப் பேசக்கூடாது. பேசினதால் தான் அவன் அகப்பட்டுக் கொண்டான். வீரர்கள் துரத்தியும் தெய்வாதீனத்தால் பிழைத்தான்,” என்றும் சொன்னான்.

இந்திரபானு கூத்தனைப்பற்றிக் குறை கூறியது முத்துக்குமரிக்குப் பிடிக்கவில்லை. “ஒற்றர்களின் இலக்கணம் என்ன?” என்று சீற்றத்துடன் கேட்டாள்.

“மாறுவேடத்தில் உலாவுதல், மௌனமாயிருந்தல்,” என்றான் இந்திரபானு.

“நீங்கள் மாறுவேடத்தில் தானிருக்கிறீர்கள். மௌன மாகவும் இருந்திருப்பீர்கள். விளைவு என்ன?” என்று வினவினாள் முத்துக்குமரி.

“இன்னும் சுதந்திரத்துடன் உலவுகிறேன். வீரர்கள் என்னைத் துரத்தவில்லை, என் மீது குறுவாளெறியவு மில்லை” என்றான் இந்திரபானு.

“உங்கள் மீது குறுவாளெறியமாட்டார்கள்,” என்று முத்துக்குமரி கூறி இகழ்ச்சி நகை கோட்டினாள்.

“வேறென்ன எறிவார்கள்?” என்று கேட்டாள் இந்திரபானு.

‘செண்டு எறிவார்கள். வீரரல்லவா நீங்கள்!” என்ற முத்துக்குமரியின் பேச்சில் இகழ்ச்சியிருந்தது.

“எப்படித் தெரியும் உனக்கு?” என்று சீற்றத்துடன் கேட்டான் இந்திரபானு.

“கூத்திடுவோரைக் காக்க மதயானையை நோக்கி வேலெறிபவர் மீது செண்டெறியாமல் வேறெதை எறிவார்கள்?” என்று வினவினாள் முத்துக்குமரி.

மீண்டும் ஸ்தம்பித்து நின்றான் இந்திரபானு. “இதை யும் கூத்தன் சொன்னானா?” என்று வினவினாள் ஒரு விநாடி கழித்து.

அவள் பதில் அவனை மீண்டும் அசரவைத்தது. “இல்லை. சேர மன்னன் சொன்னான்,” என்றாள் முத்துக்குமரி.

“எப்பொழுது சொன்னான்?”

“சற்று முன்பு.”

“எதற்காகச் சொன்னான்?”

“உங்கள் சமர்த்தை நிரூபிப்பதற்காகச் சொன்னான். நீங்கள் யார் என்பது வீரரவிக்கு நன்றாகத் தெரிந்துவிட்டது. நாட்டைப் போர் நெருங்கியுள்ள இந்தச் சமயத்தில் சேர மன்னன் செண்டுவெளியை ஏன் ஏற்பாடு செய்கிறான்? உங்களை அழிப்பதைத் தவிர வேறென்ன நோக்கம் அவனுக்கிருக்க முடியும்?” என்று கேட்டாள் முத்துக்குமரி. அத்துடன் மேலும் சொன்னாள்; “சேரமன்னன் சற்று முன்பு இங்கு வந்து மிகச் சுலபமாகவும் சாமர்த்தியமாகவும் பேச்சின் இடையிடையே புதுக் காவலனைப்பற்றிப் பிரஸ்தாபித்தான். புதுக் காவலன் வேறு நாட்டவன் என்பதை வலியுறுத்தினான்; வீரர்கள் வேலெறிவதைக் கண்டு களிப்பது அரசமகளிர் இயல்பு என்றும் கூறினான். ‘செண்டு வெளியில் நீயே காணப் போகிறாய் அதை’ என்றும் சொன்னான். வேறொன்றும் சொன்னான்…” இந்தச் சமயத்தில் அவள் கண்களில் நீர் தேங்கியது. துக்கமும் கோபமும் தொண்டையை அடைத்துக்கொண்டன.

“வேறென்ன சொன்னான்?” இந்திரபானு கேட்டான் கோபத்துடன்.

“என்னை இந்த நாட்டு ராணியாக்கப் போவதாகவும் கூறினான்,” என்று முத்துக்குமரியின் குரல் தடுமாறித் தடுமாறி ஒலித்தது.

இந்திரபானுவின் முகம் பரம விகாரத்தை அடைந்தது. கண்களில் கொடூரம் மிதமிஞ்சித் தெரிந்தது. “இந்திரபானு இருக்கும் வரையில் அது நடக்காது.”

முத்துக்குமரி கண்களில் எழுந்த நீரை அடக்கிக் கொண்டாள். துளித்த ஓரிரண்டு பொட்டுக்களைத் துடைத்துக் கொண்டு மீண்டும் மன உறுதி படைத்த, கொற்கையில் வேவு பார்க்க வந்த பாண்டியகுமாரியாக மாறினாள். அடுத்து எழுந்த அவள் சொற்களில் சோகமில்லை, துக்கமில்லை, கம்பீரமே இருந்தது. உணர்ச்சிகளைப் பறக்கவிட்டதற்குச் சிறிது வெட்க மடைந்தாள் பாண்டிய மகள். அந்தத் தோரணையில் உறுதியுடன் கூறினாள். “இந்திரபானு இருக்கும் வரையில் நடக்காதென்று தெரியும் சேர மன்னனுக்கு. ஆகவே இந்திர பானுவைச் செண்டு வெளியில் ஒழிக்கப் பார்க்கிறான்.”

“இந்திரபானுவை ஒழிக்கச் செண்டுவெளி எதற்கு? இப்பொழுதே சிறை செய்து வெட்டுப்பாறைக்கு அனுப்பலாமே?” என்று வினவினான் இந்திரபானு.

முத்துக்குமரி அதற்கும் விடை தந்தாள்; “சாதாரண எந்த மன்னனும் நீங்கள் சொல்வதுபோலத்தான் செய்வான். ஆனால் சேரமன்னன் அசாதாரணமான அறிவு படைத்தவன். உங்களை இந்திரபானுவென்று ஒப்புக் கொண்டு சிறை செய்தால் உங்கள் தந்தை சந்திரபானுவின் விரோதம் ஏற்படும். அவர் விரோதமிருந்தால் கடல் வலு பாதிக்கப்படும். பாண்டியர் படையெடுப்பு ஏற்பட்டுள்ள சமயத்தில் உங்கள் தந்தையை விரோதம் செய்துகொள்வது முட்டாள்தனம் என்பதை வீரரவி அறிவான். ஆகவே உங்களை யாரென்று அறிவிக்காமலே அழித்துவிடப் பார்க்கிறான். நீங்கள் செண்டு வெளியில் இறந்தால் அதற்கு மன்னன் பொறுப்பாளியல்ல. அதுவும் யாரோ ஒரு காவலன் எறிந்தானென்றால் யாரும் கேட்கப் போவதில்லை. சேரமன்னன் திட்டம் அவன் மீது எந்தவித அவதூறையும் விளைவிக்காது. இத்தகைய கடும் போர்க் காலத்திலும் செண்டுவெளியை ஏற்பாடு செய்தது பற்றிச் சக மன்னர்கள் அவனைப் போற்றவே செய்வார்கள். இந்தச் செண்டு வெளியால் தனது மதிப்பை உயர்த்திக்கொள்வான் சேர மன்னன். முக்கிய விரோதியான உங்களையும் அழித்து விடுவான். இரண்டு லாபம் அவனுக்கு’ என்றாள் பாண்டியன் மகள்.

முத்துக்குமரியின் விளக்கம் இந்திரபானுவின் கண்களை நன்றாகத் திறந்துவிட்டது. அதன் விளைவை நினைத்து அவன் நடுங்கினான். தன் மரணத்தைப்பற்றியல்ல அவன் அஞ்சியது. செண்டு வெளியில் தன்னை அழிக்க கூடியவன் சேர நாட்டில் இனி பிறந்தால்தானுண்டு என்ற கர்வம் இருந்தது அவனுக்கு, ஆனால் ஒருவேளை இறந்தால் முத்துக்குமரியின் கதி என்ன ஆகும் என்று யோசித்தான் அவன். அதன் விளைவாகக் கூறினான், “லாபம் இரண்டல்ல முத்துக்குமரி, மூன்று,” என்று.

“மூன்றாவது எது?” என்று கேட்டாள் பாண்டியன் குமரி.

“நீ” என்றான் இந்திரபானு.

முத்துக்குமரி பதிலுக்கு நகைத்தாள். “அது நடவாது” என்று திட்டமாகக் கூறினாள்.

“ஏன்? அதற்கு என்ன தடை?” என்று வினவினான் இந்திரபானு.
“இது சேரநாடு,” என்று சுட்டிக் காட்டினாள் முத்துக்குமரி.

“இருந்தாலென்ன?” என்று கேட்டான் இந்திரபானு.

முத்துக்குமரியின் முகத்தில் வீரக்கனல் நிறைந்தது. அந்தச் சிறையிலும் அவள் பாடல் சொன்னாள், வேகத் துடன் சொன்னாள், விளைவைப் பொருட்படுத்தாமல் சொன்னாள்.

”கான வேங்கைக் கீழோர் காரிகை
தான் முலை இழந்து, தனித்துயர் எய்தி,
வானவர் போற்ற, வானகம் பெற்றனள்;
எந்நாட்டாள் கொல்? யார்மகள் கொல்லோ”

முத்துக்குமரியின் மெல்லிய குரலில் இழைத்த அந்த வரிகளில் ஒலித்த உண்மை சிங்கள நாட்டவனான இந்திர பானுவுக்கு விளங்கவில்லை, முத்துக்குமரியே அதை விளக்கினாள். “இந்த வஞ்சி நாட்டிலே வானகம் பெற்றவள் புகாரின் வஞ்சி நான் சொன்னவை சிலப்பதிகார வஞ்சிக் காண்டத்திலே காட்சிக் காதையில் இளங்கோ அடிகள் இதயத்திலிருந்து எழுந்த வரிகள். இதை இங்கு மக்கள் எப்பொழுதும் பாடுகிறார்கள். பத்தினிக்குக் கோயிலமைத்த நாடு இது. இங்கு வேந்தனும் முறைதவறி நடக்க முடியாது. ஆகையால் தான் மன்னன் என்னை இத்தனை நாள் சிறை வைத்திருக்கிறான். உங்களை அழிக்கச் செண்டுவெளி யெனும் சதியையும் ஏற்படுத்துகிறான். சேரன் மிகத் தந்திரமாகவும், மக்கள் ஆட்சேபிக்காத முறையிலும், உங்கள் தந்தை ஏதும் அறியாத வகையிலும் உங்களை அழித்து விட இந்த நாடகம் நடத்துகிறான். ஆகவே சீக்கிரம் இங்கிருந்து சென்றுவிடுங்கள். இந்த நாட்டை விட்டே அகன்று விடுங்கள். என்னைப்பற்றிக் கவலை வேண்டாம். என் தந்தையின் வெற்றிப்படையுடன் நீங்கள் வாருங்கள்,” என்றாள் முத்துக்குமரி வேகத்துடன்.

ஆனால் அந்தச் சொற்களில் ஒலித்த எதிர்பார்ப்பு- பாண்டியனின் வெற்றியைப் பற்றிய எதிர்நோக்கு – அதே சமயத்தில் அடியோடு அர்த்தமற்று அழிந்து கொண்டிருந் ததை அவள் அறியவில்லை. வீரரவி உதயமார்த்தாண்ட வர்மன் அதே சமயத்தில் தனது அறைவிளக்கில் ஓலையொன்றைப் படித்துக்கொண்டிருந்தான். அதைப் படித்ததும் ஏற்பட்ட குதூகலத்தால் வானத்தை நோக்கிக் கண்களை உயர்த்தினான். எந்தப் பத்தினித் தெய்வத்தைப் பற்றி முத்துக்குமரி குறிப்பிட்டுக்கொண்டிருந்தாளோ, அதே பத்தினித் தெய்வத்தைப்பற்றிச் சேரமன்னனும் நினைத்து வணங்கினான். ‘பத்தினித் தெய்வம் எனக்குத்தான் அருள் புரியும். கணவனைக் கொன்ற பாண்டிய நாட்டுக்குக் கண்ணகித் தெய்வம் எப்படி உதவும்? கணவனுடன் சேர்த்துவைத்த வஞ்சி நாட்டுக்குத்தான் அது உதவும், என்று தனக்குத்தானே கூறிக் கொண்டான். மகிழ்ச்சி மிகுதியால் பலமுறை கையிலிருந்த ஓலையைப் படிக்கவும் செய்தான். “இக்கால வஞ்சிக்காண்டம் இது,” எனச் சொல்லிப் பெரும் பூரிப்பும் எய்தினான்.

Previous articleRaja Muthirai Part 2 Ch11 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Muthirai Part 2 Ch13 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here