Home Historical Novel Raja Muthirai Part 2 Ch13 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

Raja Muthirai Part 2 Ch13 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

54
0
Raja Muthirai Part 2 Ch13 Raja Muthirai Part 2 Sandilyan, Raja Muthirai Part 2 Online Free, Raja Muthirai Part 2PDF, Download Raja Muthirai Part 2 novel, Raja Muthirai Part 2 book, Raja Muthirai Part 2free, Raja Muthirai,Raja Muthirai Part 2 Story in tamil,Raja Muthirai Part 2 Story,Raja Muthirai Part 2 novel in tamil,Raja Muthirai Part 2 novel,Raja Muthirai Part 2 book,Raja Muthirai Part 2 book review,ராஜ முத்திரை ,ராஜ முத்திரை கதை,Raja Muthirai Part 2tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2full story,Raja Muthirai Part 2 novel full story,Raja Muthirai Part 2audiobook,Raja Muthirai Part 2audio book,Raja Muthirai Part 2full audiobook,Raja Muthirai Part 2full audio book,

Raja Muthirai Part 2 Ch13 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

ராஜ முத்திரை இரண்டாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 13 மந்திரமும் மனக் கதவும்

Raja Muthirai Part 2 Ch13 | Raja Muthirai | TamilNovel.in

வஞ்சிமாநகர் எது என்பது பற்றிச் சரித்திர ஆசிரியர்களுக்குள்ளே சண்டையுண்டு. புலவர்களிடையேயும் பூசல் உண்டு. வஞ்சி என்பது திருச்சி அருகேயுள்ள கரூரா அல்லது மலையாளத்தின் திருவஞ்சிக்குளமா என்ற கேள்வி இன்னும் தீராத கேள்வியாவும், தீராத சர்ச்சைக்கிடமாக வுமே இருந்து வருகிறது. ஆனால், “அஞ்சியில் ஓதி! அறிக எனப் பெயர்ந்து, முதிரா முலைமுகத்து எழுந்த தீயின், மதுரை மூதூர் மாநகர் சுட்ட வஞ்சியின் நெஞ்சுருக்கும் கதையைப்பற்றி மட்டும் இன்றளவு சர்ச்சையில்லை. சமருமில்லை. தமிழ் மக்களுக்கு இலக்கியச் சுவையூட்டும் செந் தமிழ்ச் சுனையாகவே அது இன்றும் விளங்கி வருகிறதென்றால், சேரரும், சோழரும் பாண்டியரும் வாழ்ந்த அன்று அதன் சிறப்பைப் பற்றிக் கேட்பானேன்? அன்று அது தர்மத்துக்கு எச்சரிக்கையாகவும், கன்னியர் கற்பைக் காக்கும் பெருந்துணையாகவும் விளங்கி வந்தது. மக்கள் பத்தினித் தெய்வத்தை எண்ணி இன்றும் சிறிது அஞ்சுகிறார்களென்றால் அன்று ஆயிரம் மடங்கு அதிகமாக அஞ்சினார்கள். ஆகவே முத்துக்குமரி சிலப்பதிகார வரிகளை உணர்ச்சியுடன் இசைத்து, சேர நாட்டில், மன்னனும் என்னை இஷ்ட விரோதமாகத் தீண்ட முடியாது,” என்று சொல்லியதை உண்மையென்றே இந்திர பானுவும் நம்பினான்..

இருப்பினும், தமிழகத்தில் அதிகப் பழக்கமில்லாத காரணத்தால் ஓரளவு பயத்துடனேயே முத்துக்குமரியின் அறையிலிருந்து வெளியே வந்து மாளிகை வாயிலை நோக்கித் தீவிர சிந்தனையுடன் நடந்தான். மாளிகை வாயிலுக்கு வந்த பின்பு, வீரர்கள் கொணர்ந்து நிறுத்திய புரவிமீது ஆரோகணித்து மதிலைத் தாண்டியபோதும் அதற்கு பிறகு கூட அவன் யோசனையிலேயே ஆழ்ந்திருந்ததால் புரவியை இஷ்டப்படி நடக்கவிட்டான். போகிற திசை தெரியாமல் போயக் கொண்டுமிருந்தான்.

அவன் நினைப்பெல்லாம் முத்துக்குமரி சொல்லிய பல விஷயங்களிலே லயித்திருந்தது. அவள் சொன்னதில் செண்டு வெளி மர்மத்தைத் தவிர வேறெதுவும் அவனுக்குப் புதிதல்ல, காட்டுக் கோட்டைப் பாதையிலிருந்து அவனையும் அவளைச் சிறை செய்த வீரர்களையும் பின் தொடர்ந்த அவன் சேரநாட்டுத் தலைநகர் எல்லைக்குப் பிறகு அவளைத் தொடரமுடியவில்லையாயினும் அவளைப்பற்றி விசாரிக்கத் தவறவில்லை. ஆனால் வீரரவியின் சாமர்த்தியமான ஏற்பாட்டின் விளைவாக முத்துக்குமரி சிறை வைக்கப்பட்ட இடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை யென்றாலும், அதற்கான முயற்சியை மட்டும் அவன் கைவிடவில்லை. அந்த முயற்சியின் போது ஒரு நாள்தான் அவன் பரதபட்டனைச் சந்தித்தான். மலைக் காட்டுக்குள்ளே ஒரு குடிசையில் தன்னந்தனியே வசித்து வந்த பரத பட்டனை முத்துக்குமரியைத் தேடியலைந்து கொண்டிருந்த ஒரு நாளில் அவன் கண்டான். தூரத்திலிருந்து கண்ணுக்குத் தெரிந்த இருபெரும் குதிரைகளைக் கண்டு அவற்றைப் பார்க்கத் தனது புரவியை நடத்திச் சென்ற இந்திரபானு அந்தக் குதிரைகளிரண்டும். மண் குதிரைகளென்பதைக் கண்டு வியப்புற்றான். அங்கு அந்தக் குதிரைகள் மட்டுமின்றி வேறு பலவித பட்சிகளும் மிருகங்களும் மண்ணினால் சமைக்கப்பட்டிருப்பதையும் அவற்றுக்கெல்லாம் வர்ணம் பூசப்பட்டிருந்ததையும் கண்டு வியந்து நின்றுகொண்டிருந்த சமயத்தில் வயோதிகனான பரதபட்டன் வெளியே வந்து, “யாரப்பா நீ?” என்று வினவினான்.

“வெளிநாட்டவன்,” என்று விடை கூறினான் இந்திரபானு.

அந்தப் பதில் பரதபட்டனுக்கு வியப்பையோ வேறு எந்த உணர்ச்சியையோ அளிக்குமென்று இந்திரபானு நினைத்திருந்தால் அவன் ஏமாந்தேபோயிருப்பான். ஆழத்திலிருந்த பரதபட்டன் கண்கள் அவனைக் கண்டுபளிச்சிட்டன ஒரு வினாடி. அடுத்த வினாடி அவன் உதடுகள் விஷமச் சிரிப்பைக் கக்கின. “நல்லது. இங்கு எதற்கு வந்தாய்?” என்று வினவினான் பரதப்பட்டன்.

“காரணம் ஏதுமில்லை ” என்றான் இந்திரபான.

“வழி தவறி வந்தாயா?”

“இல்லை.”

“இந்தக் குதிரைகளைப் பார்த்து வந்தாயா?”

“ஆம்.”

“உள்ளே வா”

பரதபட்டனின் இந்த அழைப்பின் பேரில் புரவியை விட்டிறங்கிப் பரதப்பட்டனுடன் குடிசைக்குள் நுழைந்த இந்திரபானு, அங்கியிருந்த காட்சியைக் கண்டு பிரமித்துப் போனான். குடிசையின் உட்புறம் மிகப் பெரியதாயிருந்தது. எங்கும் பலப்பல புராண உருவங்கள் காட்சியளித்தன. ஒரு புறம் பரசுராமன், இன்னொருபுரம் இரணியன், மற்றொரு புறம் இராமன், இலக்குவன், சீதை, அனுமான் நால்வரும். வரிசையாகக் காட்சியளித்தனர். ஒரு மூலையில் அந்தப் பகல் வேளையிலும் ஒரு பெரும் குத்துவிளக்கு எரிந்து கொண்டிருந்தது. அந்தக் குத்துவிளக்கிலிருந்த வேலைப் பாட்டையும் அதன் தலையில் சிறகு விரிந்து உட்கார்ந்திருந்த கருட சிற்பத்தையும், குத்துவிளக்கின் ஜொலிப்பையும் பார்த்த இந்திரபானு பிரமித்தான் முதலில் மற்ற பிம்பங்களைப் பார்த்தே அதிசயித்து வந்த அவன், அந்தக் குத்துவிளக்கைக் கண்டு எல்லையில்லா வியப்பை அடைந்தான்.

அவன் நினைப்பை முன்கூட்டியே உணர்ந்த பரத பட்டன், “இது பத்தரைமாற்றுத் தங்கம். சந்தேகம் வேண்டாம்” என்று கூறினான். அது மட்டுமல்லாமல் குடிசைக் கூரையிலிருந்து தொங்கிய சில மணிமாலை களையும் சுட்டிக்காட்டி, “இது நவமணிமாலை, இது சுத்த வைரம், இதில் நான்கு கோமேதகம், நான்கு மாணிக்கம்,” என்று அலட்சியமாகச் சுட்டியும் காட்டினான்.

இந்திரபானுவின் நா பேச மறுத்தது. உணர்ச்சிகள் பல வழிகளில் சஞ்சரித்தன. காட்டில் இத் தனிக் குடிசையில் விலை மதிக்க முடியாத சொர்ணத்தையும், வைர, கோமேதக மாணிக்கங்களையும் வைத்துக்கொண்டு எந்தத் துணிவுடன் வசிக்கிறான் இந்த மனிதன்?’ என்று தன்னைக் கேட்டுக் கொள்ளவும் செய்தான். அந்தக் கேள்வி கண்களிலும் தெரிந்திருக்க வேண்டும். ஆகவே பரத பட்டன் அவனை நோக்கிச் சொன்னான், “இந்த மணிகளல்ல, சொர்ணக் குத்துவிளக்கல்ல. இங்குள்ள எதையும் யாரும் தொடமுடியாது” என்று.

“ஏன்?” என்று வினவினான் இந்திரபானு.

“இவற்றுக்குக் காவலிருக்கிறது” என்றான் பரத பட்டன் புன்சிரிப்புடன்.

“என்ன காவல்?” என்று வினவினான் இந்திரபானு அத்தனை வியப்பிலும் சற்று இகழ்ச்சியுடன்.

பரதபட்டன் அதற்கு உடனடியாகப் பதில் சொல்ல வில்லை. மீண்டும் புன்முறுவல் கொண்டான். பிறகு “உண்மை உண்மை,” என்று சொன்னான் வெளிப் படையாக.

“என்ன உண்மை?” இம்முறை சற்றுக் கோபத்துடன் எழுந்தது இந்திரபானுவின் கேள்வி.

“நீ வெளிநாட்டவன் என்பது,” என்றான் பரத பட்டன்.

“அதைத்தான் ஆரம்பத்திலேயே சொன்னேனே?”

“யார் எதைச் சொன்னாலும் நான் உடனடியாக நம்புவதில்லை. நானே முடிவு செய்கிறேன்.”

“இப்பொழுது முடிவு செய்துவிட்டீராக்கும்?”

“ஆம்.”

“எப்படியோ ?”

“இங்குள்ளவற்றுக்குக் காவலில்லை என்று நீங்கள் நினைத்ததிலிருந்து.”

“அப்படியானால் பெரும் காவலிருக்கிறதா?”

“ஆகா.” பரதப்பட்டன் பதில் மிகத் திட்டமாக வெளி வந்தது.

இந்திரபானு குடிசையின் உட்புறத்தை ஊடுருவிப் பார்த்தான். வெளியே சென்று சுற்றும் முற்றும் பார்த்தான். அங்கிருந்த மண்குதிரைகள், சில புற்றுகள், மரங்களிலிருந்து கூவிய கிள்ளைகள், நகர்ந்துகொண்டிருந்த ஓணான்கள், மலைப் பல்லிகள் – இவை தவிர எதையுமே காணோம். ஆகவே மீண்டும் குடிசைக்குள் நுழைந்தான். அவன் வெளிச் சென்றபோது நின்று கொண்டிருந்த பரதபட்டன் அவன் திரும்பியபோது ஒரு புலித்தோலில் உட்கார்ந்து கொண்டிருந்தான்.
இந்திரபானு உள்ளே நுழைந்ததும், “என்ன, ஏதாவது தெரிகிறதா?” என்று வினவினான் பரதப்பட்டன் இந்திர பானுவை நோக்கி நகைத்தவாறு.

“இல்லை ஏதும் தெரியவில்லை,” என்றான் இந்திர பானு அந்த நகைப்பை, ரசிக்காமல்.

“அப்படியானால் நான் அனாதை யாயிருக்கிறேன். அப்படித்தானே உன் எண்ணம்?” என்று வினவினான் பரதபட்டன் தனது ஆழக் கண்களைச் சிமிட்டி.

“ஆம். அப்படித்தான் நினைக்கிறேன்,” என்று உறுதி யுடன் கூறினான் இந்திரபானு.

பரதபட்டன் ஒரு வினாடி சிந்தித்துவிட்டுச் சொன்னான், “சிறிது சோதித்துப் பார்ப்பதுதானே?” என்று.

“எதைச் சோதிப்பது? எப்படிச் சோதிப்பது?” என்று வினவினான் இந்திரபானு.

“தம்பி, நீ வாலிபன். நான் கிழவன். இங்கே ஓர் அரசை விலைக்கு வாங்குவதற்குரிய பொருள்கள் இருக்கின்றன. ஏதாவதொன்றை எடுத்துப் பாரேன்?” என்றான் பரத பட்டன்.

இந்திரபானுவுக்குச் சிரிப்பதா, கோபிப்பதா என்று தெரியவில்லை. ‘காட்டில் தன்னந்தனியே இருக்கும் இந்தக் கிழவன் ஏதோ ஆயிரக்கணக்கான காவலரைவைத்திருக்கும் துணிவுடன் பேசுகிறானே?’ என்று எண்ணினான். எண்ணியதுடன் நிற்காமல் செய்கையிலும் இறங்கினான்.

‘கிழவரே! அதோ, அந்தக் குத்துவிளக்கு விலைமதிப் பற்றது. அது பூர்ண சொர்ணம் மட்டுமல்ல, அதில் விலை மதிக்க முடியாத வைர வைடூரியங்கள் பதிக்கப் பெற்றிருக்கின்றன. அந்தக் கருடன் கண்கள் இரண்டே பெரும் விலை பெறும். ஆகவே அந்தக் குத்துவிளக்கை எடுத்தால் என்ன செய்வீர்?” என்று சீறினான்.

“முயன்று பார் தம்பீ!” வெகு சாவதானமாகவும் இகழ்ச்சியுடனும் வெளிவந்தது பரதபட்டன் பதில்.

இந்திரபானு இரண்டடி நடந்து அந்தக் குத்துவிளக் கின் முகப்பைத் தொட்டான். அடுத்த வினாடி அவன் முற்றும் எதிர்பாராத, வீரனான அவனுக்கும் குலைநடுக்கம் எடுக்கக் கூடிய, விபரீத நிகழ்ச்சியொன்று ஏற்பட்டது. குத்துவிளக்கின் கருட முகப்பில் அவன் கை வைத்தவுடனேயே “உஸ் உஸ்,” என்று பெருமூச்சொன்று குடிசையின் ஒரு மூலையில் கேட்டது. அந்தச் சப்தம் திரும்பத் திரும்ப அறை பூராவும் கேட்கும்படி ஒலிக்கவே அந்தத் திசையை நோக்கிக் கண்களைச் செலுத்தினான் இந்திரபானு. குடிசையின் கோடியிலிருந்து சிறு புற்றிலிருந்து எழுந்து படமெடுத்துச் சீறிய வண்ணம் நின்று கொண்டிருந்தது ஒரு கிருஷ்ண சர்ப்பம். இந்திரபானுவின் கண்கள் அதை அச்சத்துடன் நோக்கினாலும் கைமட்டும் குத்துவிளக்குப் பிடியை விடவில்லை. ஆனால் சற்றுப் படமெடுத்து நின்ற கிருஷ்ண சர்ப்பம், புற்றை விட்டுக் கிளம்பி அவனை நோக்கி வந்தது. இந்திரபானு அடுத்த வினாடி குத்து விளக்கை விட்டான். அவன் கை கச்சையிலிருந்து குறுவாளை நாடியது.

பரதபட்டன் மட்டும், “முட்டாள்! நில்!” என்று அதட்டியிருக்காவிட்டால் அவன் குறுவாளெறிந்து சர்ப்பத்தை அழித்திருப்பான்.

ஆனால் பரதபட்டன் குரல் கடுமையாகவும் திடமாகவும் இருந்தது. “முட்டாள், நில்” என்ற சொற்களை அடுத்து, “குறுவாளிலிருந்து கையை எடு” என்ற சொற்களும் அவன் வாயிலிருந்து உதிர்ந்தன கடுமையுடன்.

“ஏன்?” என்று வினவினான் இந்திரபானு.

“இந்த ஒரு சர்ப்பம் மடிந்தால் நூறு சர்ப்பங்கள் குடிசைக்குள் நுழைந்துவிடும்,” என்று கூறினான் பரத பட்டன்.

பெரும் போர்களைப் பற்றி லட்சியம் செய்யாத இந்திரபானு அந்த சர்ப்ப கோஷ்டியை நினைத்துக் குலை நடுக்கம் கொண்டான். அவன் நெஞ்சு அப்படி நடுங்கிக் கொண்டிருந்ததை பரதப்பட்டனும் கவனித்ததால் கூறினான், “பயப்படாதே! இப்பொழுது சர்ப்பத்தைப் பார்,” என்று.

சர்ப்பத்தைப் பார்த்தான் இந்திரபானு. அது மீண்டும் திரும்பிப் புற்றை நோக்கிச்சென்று கொண்டிருந்தது. அதன் காரணத்தைப் பரதபட்டன் விளக்கினான். “நீ குத்து விளக் கிலிருந்த கையை எடுத்ததும் அது திரும்பிவிட்டது. இங்குள்ள சொத்துக்களுக்கு இந்தச் சர்ப்பமும் இதன் குடும்பமும் பொறுப்பாளிகள். சர்ப்பத்துக்கு ஒரு குணம் உண்டு. தானாக யாரையும் தீண்டாது. ஒன்று நாம் அதைத் தவறி மிதிக்க வேண்டும் அல்லது அதன் வர்க்கத் திலொன்றைக் கொல்ல வேண்டும், வேறு தீய செயல்களைச் செய்ய வேண்டும். இல்லையேல் அது கிட்டே வராது. இங்கு தான் மனிதனுக்கும் அதற்குமுள்ள வித்தியாசம். மனிதன் காரணமில்லாமல் எதையும் யாரையும் கொல்வான். எந்தத் தீவினையும் செய்வான்,” என்ற பரதபட்டன், “அது மட்டு மல்ல….” என்று மற்றொரு சொல்லையும் கூட்டினான்.

“வேறென்ன?”

“சர்ப்பம் சத்தியத்துக்குக் கட்டுப்படும். மனிதன் அதற்குக் கட்டுப்படமாட்டான்,” என்றான் பரதப்பட்டன்.

“ஆம்,” என்று ஒப்புக்கொண்டான் இந்திரபானு.

“சரி, நீயாவது சத்தியத்தைப் பேசு, நீ யார்? எங்கு வந்தாய்?” என்று வினவினான் பரதப்பட்டன்.

பரதபட்டனை ஒருமுறை உற்று நோக்கினான் இந்திரபானு. பட்டன் கண்கள் அவனைப் பெரிதும் கவர்ந்திருக்க வேண்டும். அவற்றின் சக்தி அளவற்றதாயிருந்திருக்க வேண்டும். இந்திரபானு மெல்லமெல்லத் தன்மனக்கதவைத் திறந்து சொற்களைக் கொட்டினான். பட்டனுடைய மந்திரம் திறந்துவிட்ட அந்த மனக்கதவிலிருந்து உண்மையே பெருக்கெடுத்துப் பாய்ந்தது.

கதையை மெள்ள மெள்ள அணுவிடாமல் சொன்னான் இந்திரபானு . அதை நிம்மதியுடன் கேட்ட பரதப்பட்டன் நீண்ட நேரம் சிந்தனையில் ஆழ்ந்தான். பிறகு சொன்னான், “நீ இந்தக் குடிசையில் தங்கி இரண்டுநாள் கழித்துப் போகலாம்,” என்று.

பரதப்பட்டன் தன்னைத் தேக்கி வைத்ததன் காரணம் இந்திரபானுவுக்கு விளங்கவில்லை. அவன் சொன்னதைத் தான் ஏன் கேட்கவேண்டும் என்பதும் விளங்கவில்லை. இருப்பினும் கேட்கவே செய்தான் இந்திரபானு, அங்கு தங்கிய இரண்டு நாட்களில் பரதப்பட்டன் யார் என்ற முழு உண்மையை அறிந்தான். அறிந்ததால் பெரும் பக்தி, அச்சம் இரண்டும் இந்திர பானுவுக்கு பரதப்பட்டனிடம் ஏற்பட்டன. மூன்றவது நாள் மற்றொரு நிகழ்ச்சி ஏற்பட்டது! அந்தக் குடிசையில் மறக்க முடியாத நிகழ்ச்சி அது. இந்திரபானு அடியோடு அதிர்ச்சியடைந்துவிட்ட நிகழ்ச்சி அது.

Previous articleRaja Muthirai Part 2 Ch12 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Muthirai Part 2 Ch14 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here