Home Historical Novel Raja Muthirai Part 2 Ch14 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

Raja Muthirai Part 2 Ch14 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

68
0
Raja Muthirai Part 2 Ch14 Raja Muthirai Part 2 Sandilyan, Raja Muthirai Part 2 Online Free, Raja Muthirai Part 2PDF, Download Raja Muthirai Part 2 novel, Raja Muthirai Part 2 book, Raja Muthirai Part 2free, Raja Muthirai,Raja Muthirai Part 2 Story in tamil,Raja Muthirai Part 2 Story,Raja Muthirai Part 2 novel in tamil,Raja Muthirai Part 2 novel,Raja Muthirai Part 2 book,Raja Muthirai Part 2 book review,ராஜ முத்திரை ,ராஜ முத்திரை கதை,Raja Muthirai Part 2tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2full story,Raja Muthirai Part 2 novel full story,Raja Muthirai Part 2audiobook,Raja Muthirai Part 2audio book,Raja Muthirai Part 2full audiobook,Raja Muthirai Part 2full audio book,
Raja Muthirai Part 2 Ch14 | Raja Muthirai | TamilNovel.in

Raja Muthirai Part 2 Ch14 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

ராஜ முத்திரை இரண்டாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 14 தியாக அக்கினி

Raja Muthirai Part 2 Ch14 | Raja Muthirai | TamilNovel.in

பரதபட்டனுடன் காட்டுக்குடிசையில் மூன்று நாட்கள் தங்கிய இந்திரபானுவுக்கு ஒவ்வொருநாளும் பிரமை, பக்தி, அச்சம் இத்தனையையும் விளைவிக்கும் சம்பவங்கள் ஏற்பட்டு வந்ததால், அவன் நேரம் போவது தெரியாமலும் நாழிகைக்கு நாழிகை பலதரப்பட்ட உணர்ச்சிகளுக்கு இலக்காகியும் காலத்தைக் கழித்தான். குடிசை காட்டிலிருந்தாலும் அடிக்கடி அங்கு வந்து போய்க் கொண்டிருந்த மக்களுக்குக் குறைவேயில்லாதிருந்தது மட்டுமின்றி வந்தவர்கள் அதிக நேரம் தங்கவுமில்லை யென்பதையும் இந்திரபானு அங்கு தங்கிய மூன்று நாட்களில் கவனித்தான். தவிர வந்தவர்களிடம் பரதபட்டன் அதிகம் ஏதும் பேசாததையும் முக்கால் விஷயத்தைக் கண்ணசைவாலும், கை ஜாடையாலுமே உணர்த்தியதையும் கண்டான் இந்திரபானு. உணவுக்கோ வேறு சௌகரியத்துக்கோ பரதப்பட்டன் எங்கும் போகவில்லை. உணவு அவனைத் தேடி வந்து கொண்டிருந்தது. இந்திரபானு கிருஷ்ண சர்ப்பதைக் கண்டு அச்சமுற்ற அந்த மாலையே சற்று எட்ட இருந்த ஒரு கிராமத்திலிருந்து குறப் பெண்கள் இருவர் ஒரு கிண்ணத்தில் சோறு, ஒரு குடுவையில் தயிர், ஒரு குடுவையில் பால், இரண்டொரு கறி வகைகள் இவற்றைக் கொண்டு வந்து குடிசை மூலையில் வைத்துவிட்டுப் போனார்கள். அப்பெண்கள் சென்றதும் பரதபட்டன் பாலை எடுத்துக் குடிசை வெளிப்புறத்திலிருந்த புற்றுகளில் சிறிது ஊற்றினான். பிறகு உள்ளே வந்து அங்கிருந்த கிண்ணத்தில் மீதிப் பாலை ஊற்றினான் மீண்டும் தரையில் உட்கார்ந்து இரைந்து “குஞ்சே, வா!” என்று அழைத்தான். குடிசைக்கோடியிலிருந்த புற்றிலிருந்து அந்தப் பழைய கிருஷ்ணசர்ப்பம் கிளம்பி நேராக வந்து கிண்ணத்திலிருந்த பாலைக் குடித்துவிட்டு மீண்டும் புற்றுக்குச் சென்று மறைந்தது. இத்தனையும் முடிந்ததும் பரதபட்டன் தனக்கும் ஒரு சட்டியில் உணவு எடுத்துக் கொண்டு, இந்திரபானுவுக்கும் ஒரு சட்டியில் உணவு பரி மாறி காப்பிடப் பணித்தான்.

இந்திரபானு பிரமிப்புடன் உண்டான். உண்மையில் உணவு அவனுக்குச் சற்றும், உள்ளே செல்லவில்லை. வேண்டா வெறுப்பாக உணவைக் கடித்துக் கடித்து உண்டான். பரதபட்டன் அவனை ஏறிட்டு, “ஏன்? உணவு பிடிக்கவில்லையா?” என்று வினவினான்.

“இல்லை. பிடிக்கவில்லை,” என்றான் இந்திரபானு.

“உடம்பு சரியில்லையா? சுரமா?” என்று கேட்டான் பரதபட்டன்.

“இல்லை, சுரமில்லை,” என்று பதிலளித்தாள் இந்திரபானு.

“அச்சமும் ஒருவகை சுரந்தான்,” என்று சொல்லி நகைத்த பரதபட்டன், “பயப்படாதே. சாப்பிடு,” என்று ஊக்கினான்.

இருப்பினும் இந்திரபானு சிறிது சிரமத்துடனேயே சாப்பிட்டு முடித்தான். சாப்பாட்டுப் பாத்திரங்களைத் தானே கழுவினான். அதனால் மனம் குளிர்ந்த பரதபட்டன் மீண்டும் அவன் கதையையும், தமிழக மன்னர்களின் பூசல்களைப் பற்றியும் விவரமாக விசாரித்தான். அவன் சிங்களத்தை விட்டுத் தமிழகம் வந்த காரணத்தைப் பற்றியும் கேட்டான். பதில் தயக்கமின்றி வந்தது இந்திரபானுவிடமிருந்து. “பாண்டிய நாட்டு இளவரசர் வீரபாண்டியனைப் பற்றிப் பலகதைகளைக் கேள்விப்பட்டேன். அவர் வேலெறிவதிலும், கத்திச் சமரிலும் குதிரைகளைப் பழக்குவதிலும் இணையற்றவர் என்று கேள்விப்பட்டு அவற்றைக் கற்கப் பாண்டியநாடு வந்தேன். அங்கு…” என்று மேலும் ஏதோ கூற முற்பட்டான்.

இந்திரபானு பதிலை முடிக்கு முன்பு இடைபுகுந்து, “அங்கு வீரபாண்டியன் வீரத்திலும், முத்துக்குமரியின் அழகிலும் சிக்கிக்கொண்டாய்,” என்ற பரதபட்டன், “வீரபாண்டியன் குதிரையைப் பழக்குகிறானா? இது ஒரு விந்தையா? பாம்பைப் பழக்கத் தெரியுமா அவனுக்கு? பட்சிகளைப் பழக்கத் தெரியுமா அவனுக்கு?” என்றும் கேட்டான்.

வீரபாண்டியனின் திறமையைப் பற்றிக் குறை கூறியதை இந்திரபானு ரசிக்கவில்லையென்றாலும் பரத பட்டனிடமிருந்த அச்சத்தாலும் பக்தியாலும் அவன் மறந்து எதுவும் பேசவில்லை. பரதப்பட்டனும் அதற்குமேல் அதைப்பற்றிப் பேசாமல் போசளர் சோழர் பூசல்களைப் பற்றி விசாரித்தான். இந்திரபானுவுக்கு ஆச்சரியம் ஏற்பட்டது. எரிச்சலும் ஏற்பட்டது. ‘அரசியல் விஷயங்களைப்பற்றி இந்தக் காட்டிலிருக்கும் கிழத்துக்கு என்ன அக்கறை? அதுவும் போசளர் சோழர் பூசலைப்பற்றி ஏன் கேட்கிறார்?’ என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்ட இந்திரபானு, “போசளரைப் பற்றி நமக்கென்ன இப்பொழுது? சண்டையே பாண்டியருக்கும், சேரருக்கும் தானே?” என்று வினவினான்.

பரதபட்டன் கண்கள் ஆழத்திலிருந்து பளிச்சிட்டன. “போசளர் ஆதிக்கம் சோழர்மீது ஏற்பட்டதால் சோழநாடு வலு இழந்தது. சோழநாட்டு வலு போய்விட்டதால் அதன் தெற்கெல்லையிலுள்ள பாண்டிய நாடு எச்சரிக்கையடைந்து போசளரிமிருந்து தன்னைக் காத்துக் கொள்ளப்படை திரட்டியது. பாண்டியநாடு படை திரட்டியதும் அதன் மேற்கிலுள்ள சேரநாடு தன்னைக் காத்துக்கொள்ளக் கொற்கையின் முத்துக் குவியல் மீது கண்ணை ஓட்டியது. பரஸ்பர பயம், தற்காப்பு இரண்டுக்கும் பின் விஸ்தரிப்பு ஆசை, இவைதான் அரசுகளிடையே விரோதத்தை ஏற் படுத்துகிறது. போசளர் சோழரை அடிமைப்படுத்தி யிருக்காவிட்டால் பாண்டிய நாடும், சேர நாடும் மோதக் காரணமில்லை,” என்று விளக்கினான் பரதப்பட்டன்.

பரதபட்டன் அரசியல் அறிவு விவரிப்புக்கும் அப்பாற்பட்ட வியப்பை அளித்தது இந்திரபானுவுக்கு. மாலைவரை பரதபட்டன் மந்திர, வலுவையும் இரவில் அவன் அரசியல் அறிவையும் அறிந்த இந்திரபானுவுக்கு மறுநாள் காலை பரதபட்டனின் மற்றொரு திறமை புலனாயிற்று.
மறுநாள் விடியற்காலையில் பரதப்பட்டனால் எழுப்பப் பெற்று, சற்று தூரத்திலிருந்த சுனைக்குச் சென்று நீராடி, சந்தனமணிந்து, பரதப்பட்டன் கொடுத்த வெள்ளை வேட்டி புனைந்து, பட்டன் சீடனைப்போல விளங்கிய இந்திரபானு குடிசைக்குத் திரும்பியதும். அங்கிருந்த சூழ்நிலை அவனை அயர வைத்தது. சுமார் இருபது வாலிபர்களும், பருவப் பெண்களும் வாயிலில் உட்கார்ந்து கொண்டு தகளி பார்த்து முகத்தில் பலவித மைகளைப் பூசிக்கொண்டிருந்தார்கள். அவர்களைப் பார்த்து இந்திரபானு வாயிலிலேயே நின்றாலும், பரதப்பட்டன் அவர்களைப் பாராமலே உள்ளே சென்றான். சற்று நேரத்துக்குள் உள்ளே மணியோசையும் பரதபட்டன் உரக்க மந்திரங்களை ஜெபிப்பதும் கேட்டது. அது முடிந்து தட்டில் கற்பூரத்துடனும் விபூதியுடனும் பரதப்பட்டன் வெளியே வரவே அங்கிருந்த இருபது பேரும் எழுந்து நின்று கற்பூரத்தை கண்ணில் ஒற்றிக்கொண்டு பரதபட்டன் அளித்த விபூதியையும் நெற்றியில் வைத்துக்கொண்டதும், பரதபட்டன் உள்ளே சென்று திரும்பி வந்து அந்த இருபது பேர் அணிந்திருந்த வேஷங்களை ஊன்றிக் கவனித்தான். பிறகு தரையில் உட்கார்ந்துகொண்டு, “உம், ஆகட்டும்,” என்றான். பரதப்பட்டன் மந்திரவாதி, அரசியல்வாதி மட்டு மல்ல, பெரிய கலைஞனும்கூட என்பதை அன்று உணர்ந்தான் இந்திரபானு. வந்திருந்த இளைஞர்கள் இருபது பேரும் வண்ணங்களணிந்ததும் அடியோடு மாறி விட்டதையும், பரதப்பட்டன் ஆணை பிறந்த உடனேயே ஆட ஆரம்பித்து விட்டதையும் கண்ட இந்திரபானு தரையில் உட்கார்ந்தபடி கவனித்தான்.

பரதப்பட்டன் கையசைந்தது, வாயும் அசைந்து இசைத்தது. அந்த இசைக்கும் அவன் சைகைக்கும் தகுந்தபடி ஆடியவர்களின் உடல் அசைந்தது, முகம் அசைந்தது. முகப் புருவம் அசைந்தது, புருவத்தின் மயிர்க்கால்களும் அசைந்ததாகத் தெரிந்தது. பரதப்பட்டன் இசையைத் தொடர்ந்து நவரசங்களை இளைஞர்கள் முகத்தில் காட்டினார்கள். இந்திரபானு அந்தக் காலையில் புது உலகத்திலிருந்தான். காட்டுப் பட்சிகளின் கில கிலா சப்தங்கள், பரதப்பட்டனின் மெல்லிசை, சதங்கையொலி, இத்தனையும் சேர்ந்து அவனை வேறு உலகத்திற்கு அழைத்துச் சென்றன. புராணங்களின் சில இடங்களை மட்டும் அந்த இளைஞர்கள் அன்று ஆடினார்கள். சுமார் கால் ஜாமம் ஆடிய பிறகு பரதப்பட்டன் கால்களைத் தொட்டு ஒற்றிக் கொண்டு வர்ணங்களை அழிந்துவிட்டுச் சென்றனர். அடுத்த கால் ஜாமத்தில் மற்றும் பத்துப் பேர் வந்தார்கள். அவர்களும் முதல் கோஷ்டியைப் போல வேடமணிந்து ஆடினார்கள். அன்று முழுவதும், இடைவேளையில் மீண்டும் பரதபட்டன் பூசைக்கு உட்கார்ந்த நேரம் போக பாக்கி நேரம் பூராவும், இத்தகைய கோஷ்டிகள், பல வர்ணத்தவர், பல தரத்தவர் வந்து பட்டனிடம் பாடம் கேட்டுச் சென்றார்கள். மாலை நெருங்க ஒரு ஜாமம் இருக்கையில், “இத்துடன் பாடம் முடிந்தது,” என்று சொல்லிக்கொண்டு எழுந்திருந்தான் பரதப்பட்டன்.

“ஏன், இதற்குமேல் யாரும் வரமாட்டார்களா!” என்று கேட்டான் இந்திரபானு.

“வரமாட்டார்கள். வந்தாலும் நான் சொல்லிக் கொடுப்பதில்லை.”

“ஏன்?”

“எதற்கும் காலம் உண்டு, நியதியுண்டு.”

“கலைக்குக் காலமில்லையென்று சொல் கிறார்களே?”

“எதற்கும் காலம் உண்டு.”

“ருசு?”

பரதப்பட்டன் இந்தக் கேள்வியைக் கேட்டதும் இந்திர பானுவை நோக்கித் திரும்பினான். “சுற்றிலும் கண்களை ஓட்டு வாலிபனே! இயற்கையைப் பார், ஜீவராசிகளைப் பார். சராசரம் எல்லாவற்றையும் பார். எல்லாவற்றிற்கும் காலம் உண்டு. சூரியன் உதித்தால் உயிர்கள் விழிக்கின்றன. சூரியன் மறைந்தால் உயிர்கள் உறங்குகின்றன. மழைக்குப் பயந்த ஜீவராசிகள் பதுங்குகின்றன. எதற்கும் அஞ்சாத சர்ப்பம் இடியைக் கேட்டு நடுங்குகிறது. இயற்கை பலவிதத் தில் உயிர்களுடன் சம்பந்தப்பட்டிருக்கிறது. காலத்தை நிர்ணயித்திருக்கிறது. ஆகாயத்திலுள்ள அண்டங்களும் கிரகங்களும் இந்தப் பிண்டத்தின் காலாகாலத்தை நிர்ணயிக்கின்றன. இவற்றை சாஸ்திரம் திட்டமாகச் சொல்கிறது. சாஸ்திர நம்பிக்கையில்லாமல் எந்த வேளையிலும் பைத்தியம் பிடிக்கக்கூடிய தன் சிறிய மூளையை நம்பி, தர்க்க பலத்தை நம்பி, அறிவு என்ற பெயரில் மனிதன் ஒருவன்தான் காலா காலமில்லாமல் காரியங்களில் ஈடுபடுகிறான். காலத்தில் சேர்க்கவேண்டிய தேக பலம், புத்தி பலம், இவற்றை இழந்து சீக்கிரம் நசிக்கிறான்,” என்ற பரதப்பட்டன் மேற்கொண்டு ஏதும் பேசாமல் இந்திர பானுவை உணவருந்தச் செய்து படுக்கச் சொல்லி, தான் ஏதும் உணவருந்தாமல் படுத்துக் கொண்டான். இந்திர பானுவுக்கு உறக்கம் பிடிக்கவில்லை. கோடிப் புற்றிலிருந்த பாம்பை எண்ணினான். சுற்றிலும் இருந்த சிலைகளை எண்ணினான். வெளியிலிருந்த மண் குதிரைகளை எண்ணினான். இப்படிப் பலப் பலவாக எண்ணிக் கொண்டு கண்களை மூடிக்கொண்டிருந்தான். இரவு ஏறியதும் அசதி அவனை ஆட்கொண்டது.

மறுநாளும் முதல் நாளைப் போலவே காரியக் கிரமங்கள் நடந்தன. ஆனால் மறுநாள் கலை பயில் வந்தவர் கூட்டம் அதிகமாயிற்று. சில கலைஞர்களுக்குப் பரதபட்டனே வேடமணிவித்தான். அவர்களில் ஒருவனிடம் விசேஷ அக்கறை காட்டினான். மற்றவரெல்லாம் சென்ற பிறகு அந்த ஒருவனை மட்டும் நிறுத்திக் கொண்டான். மாலை வந்தது. அந்த ஒற்றை மனிதனும் தன்னை பட்டன் இருக்கச் சொன்னதைப் பற்றி ஏதும் கேட்கவில்லை. பட்டனும் ஏதும் சொல்லவில்லை. பரதபட்டன் சொன்ன அலுவல்களை மட்டும் நிறைவேற்றிக் கொண்டிருந்தான் அந்த மனிதன். மாலை முற்றி விளக்கு வைத்ததும் பரதபட்டன் அந்த மனிதனையும் இந்திரபானுவையும் அறிமுகப்படுத்தினான். “இந்திரபானு! இவன் உண்மைப் பெயர் சேரநாட்டில் யாருக்கும் தெரியாது. ஆனால் பரதப்பட்டனுடைய பிரதம சீடன் கூத்தன் என்பது மட்டும் எல்லோருக்கும் தெரியும். கலைத் திறமை காரணமாகக் கூத்தன் என்ற பெயர் இவனுக்கு நிலைத்துவிட்டது. ஆகையால் இவனைக் கூத்தன் என்றே அறிந்துகொள். இவன் கூத்திடும் கூட்டத்தைச் சேர்ந்தவன், குரவைக் கூத்தில் இணையற்றவன், கதகளியில் என் ஒருவனை மட்டும் வெற்றி கொள்ளதாவன்,” என்று இந்திரபானுவிடம் கூறிய பரத பட்டன் கூத்தனை நோக்கி, “கூத்தா! இவன் இந்திரபானு, பெருவீரன் என்று முகத்திலிருந்தே தெரிகிறது. பாண்டிய குமாரியைத் தேடி வந்திருக்கிறான். சேரன் அவளைச் சிறை வைத்திருக்கும் இடத்தைக் கண்டுபிடி. இவனுக்குத் தேவையான உதவியைச் செய்,” என்றான்.

கூத்தன் தலைவணங்கினான். மிகுந்த மரியாதை யுடன். “நான் எப்படி இவருக்கு உதவ முடியும்? நான் வெறும் கலைஞன்,” என்றான் கூத்தன்.

“அதனால் பாதகமில்லை. மன்னனிடம் காவலன் வேலைக்கு அமர்ந்துகொள்.”

“நான் வீரனல்லவே?”

“இங்கு தினம் வா. வாட்பயிற்சி சொல்லித் தருகிறேன்”

“சரி, குருநாதரே! மன்னன் இணங்கவேண்டும்.”

“கலைஞருக்கு இணங்காத மன்னன் உலகத்தில் இனிப் பிறக்க வேண்டும் கூத்தா! நீ அரண்மனையிலும் ஆடுகிறாயல்லவா?”
“ஆடுகிறேன்.”

“மன்னனை …”

“நன்றாக அறிவேன்.”

“அப்படியானால் நாளைக்கே வேலையில் அமர்ந்து விடு.”

இதைப் பரதபட்டன் திட்டமாக அறிவித்தான். அதற்குப் பிறகு கூத்தன் பேசவில்லை . பரதபட்டனே பேசினான்! “முத்துக்குமரியிருக்குமிடத்தைக் கண்டு பிடித்துக் காவலுக்குப் போ. இவனையும் மெள்ள அரசனிடம் வேலைக் கமர்ந்து,” என்று கூறினான் பட்டன்.

“இவரையா!” கூத்தன் சொற்களில் வியப்பு இருந்தது.

“ஆம்,” என்றான் பரதபட்டன் சர்வ சாதாரணமாக.

”அது எப்படி முடியும்?” என்று பயத்துடன் வினவினான் கூத்தன்.

“ஏன் முடியாது? அரசன் உன் சொல்லைக் கேட்க மாட்டானா?”

“கேட்பார். ஆனால் இவரைப் பார்த்ததும் வெட்டிப் போட்டால்?” என்று வினவினான் கூத்தன்.

“மன்னன் இவனைப் பார்க்கமாட்டான். வேறொரு வனைப் பார்ப்பான்,” என்றான் பரதப்பட்டன். அப்படிச் சொல்லி விட்டு இந்திரபானுவை நோக்கித் திரும்பி, “இந்திரபானு! நான் அரசியல்வாதியல்ல. எனக்குச் சேரன், சோழன், பாண்டியன் அனைவரும் ஒன்றுதான். ஆனால் அதர்மங்களை நான் வெறுக்கிறேன், பெண்ணைக் களவாடுவதும் அதர்மம். களவாடுபவன் யாராயிருந்தாலும், களவாடப்படும் பெண் எந்த நாட்டவளாயிருந்தாலும், எந்த இனமாயிருந்தாலும் அதர்மம் அதர்மம்தான். ஆகவே முத்துக்குமரியைக் காண உனக்கு வாய்ப்பளிக்கிறேன். ஆனால் நீ தியாகம் செய்யவேண்டும்” என்று கூறினான்.

இந்திரபானு பட்டனை உற்று நோக்கினான். “குரு நாதரே! உயிரை வேண்டுமானாலும் கொடுக்கத் தயாரா யிருக்கிறேன்,” என்று கூறவும் செய்தான்.

“அதனால் எந்தப் பயனும் இல்லை,” என்றான் பரத பட்டன் விஷமச் சிரிப்புடன்.

“வேறு எதைத் தியாகம் செய்ய வேண்டும்?”

“உயிரைவிடப் பெரியதை.”

“மானத்தையா?”

“அல்ல. அதைவிடச் சிறியதை.”

“எதை குருநாதரே?” என்று கேட்டான் இந்திரபானு ஏதும் விளங்காமல்.
பரதப்பட்டன் சொற்கள் திடமாக வெளிவந்தன. “உன் அழகை,” என்று நிதானமாக உச்சரித்தான்.

அதைக் கேட்ட இந்திரபானு மெல்ல நகைத்தான் “இவ்வளவுதானா?” என்று கேட்டான்.

“காரியம் முடிந்த பின் நகைக்கமாட்டாய் நீ.” என்ற பரதபட்டன் குரலில் கடுமையிருந்தது. “இந்திரபானு! உன்னை வேறு மனிதனாக்க முயல்கிறேன். அதில் உன் அழகு அழிந்துவிடும். பிறகு நீ அச்சமின்றிச் சேரநாட்டில் உலாவலாம்,” என்றும் சொன்னான்.

“எதை வேண்டுமானால் செய்யுங்கள் குருநாதரே! என்னை எப்படி வேண்டுமானாலும் மாற்றுங்கள்.”

“உன் அழகை நீ திரும்பப் பெறமுடியாது. அடியோடு போனாலும் போகலாம்,” என்றான் பட்டன்.

“பாதகமில்லை,” இந்திரபானுவின் குரலில் உறுதி இருந்தது.

இதற்குப் பின் கூத்தனை வெளியே செல்லும்படி சைகை செய்தான் பட்டன். வெளியே வந்து நின்ற கூத்தன் பொறுமைகூட அன்று சோதிக்கப்பட்டது. உள்ளே அடிக்கடி, திணறலும் முனகலும் கேட்டன. சில சமயம் நிசப்தமிருந்தது. சில வேளைகளில் தட்டுக்கள் நகர்த்தப்படும் ஒலிகள் பயமூட்டின கூத்தனுக்கு. அவை ஊட்டிய பயம் மிகச் சொற்பமென்பதை வெகு விரைவில் உணர்ந்தான். கால் ஜாமத்திற்குப் பிறகு குடிசைக் கதவு திறக்கப்பட்டு முதலில் பட்டன் வெளியே வந்தான். அவனைத் தொடர்ந்து வந்தான் இந்திரபானு. பட்டன் தன் கையிலிருந்த விளக்கை இந்திரபானுவின் முகத்தில் படும்படி காட்டினான். “கூத்தா, இதோ பார்!” என்று உரத்தும் கூறினான்.

கூத்தன் கண்கள் பயத்தில் பெரிதும் மலர்ந்தன. அவன் உடல் நடுங்கியது. முகம் வியர்த்தன. “குரு நாதரே! குருநாதரே! இதென்ன பயங்கரம்!” என்று அலறினான். இந்திரபானுவின் அடியோடு மாறி விட்ட முகத்தைக் கண்டு அவன் குலை நடுங்கியது. அம் முகத்திலிருந்த தழும்புகள் அதை அடியோடு மாற்றியிருந்தன.

பரதப்பட்டன் முகத்தில் உணர்ச்சி ஏதுமில்லை. “இது பயங்கரமில்லை கூத்தா, தியாகம். முகத்தின் வெளி விகாரத்தைக் கண்டு அஞ்சாதே. தியாகத்தின் உள்ளழகைப் பார். தியாக அக்கினியைக் கவனி. இப்பொழுது அழைத்துச் செல் இவனை. இவன் அலுவல் முடியும்வரை இங்கு இருவரும் வரவேண்டாம்” என்ற பரதபட்டன் மீண்டும் குடிசைக்குள் சென்றான். வெளியில் விடப்பட்ட இந்திர பானுவும் கூத்தனும் ஒருவரையொருவர் பார்த்துப் பிரமித்து நின்று கொண்டிருந்தனர் நீண்ட நேரம்.

Previous articleRaja Muthirai Part 2 Ch13 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Muthirai Part 2 Ch15 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here