Home Historical Novel Raja Muthirai Part 2 Ch15 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

Raja Muthirai Part 2 Ch15 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

56
0
Raja Muthirai Part 2 Ch15 Raja Muthirai Part 2 Sandilyan, Raja Muthirai Part 2 Online Free, Raja Muthirai Part 2PDF, Download Raja Muthirai Part 2 novel, Raja Muthirai Part 2 book, Raja Muthirai Part 2free, Raja Muthirai,Raja Muthirai Part 2 Story in tamil,Raja Muthirai Part 2 Story,Raja Muthirai Part 2 novel in tamil,Raja Muthirai Part 2 novel,Raja Muthirai Part 2 book,Raja Muthirai Part 2 book review,ராஜ முத்திரை ,ராஜ முத்திரை கதை,Raja Muthirai Part 2tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2full story,Raja Muthirai Part 2 novel full story,Raja Muthirai Part 2audiobook,Raja Muthirai Part 2audio book,Raja Muthirai Part 2full audiobook,Raja Muthirai Part 2full audio book,
Raja Muthirai Part 2 Ch15 | Raja Muthirai | TamilNovel.in

Raja Muthirai Part 2 Ch15 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

ராஜ முத்திரை இரண்டாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 15 விசேஷமும் விபரீதமும்

Raja Muthirai Part 2 Ch15 | Raja Muthirai | TamilNovel.in

குடிசைக்கு வெளியே பரதப்பட்டனால் விடப்பட்ட இருவரில் இந்திரபானுவைவிடக் கூத்தனே ‘ விவரிக்க இயலாத உணர்ச்சிகளுக்கும் முக்கியமாக அச்சத்துக்கும் உட்பட்டு இந்திரபானுவின் முகத்தைக் கூர்ந்து நோக்கிய வண்ணம் விநாடிகள் பறப்பது தெரியாமலே நிலைத்து நின்று கொண்டிருந்தான். இரவு இரண்டாம் ஜாமத்தை எட்டிக்கொண்டிருந்த சமயத்தில் அந்தக் காட்டுப்புறமே பயங்கரமாயிருந்ததென்றால் அதைவிடப் பயங்கரத்தை அளித்தது இந்தரபானுவின் முகம். கூத்தனின் இதயத்துக்குக் காட்டின் இருளளித்த அச்சமும், எங்கோ ஓரிரு ஆந்தைகள் அலறிய ஒலியும், எங்கோ ஒரு மரத்தில் மலைப்பாம்பு ஏறிக் கொண்டிருந்ததைக் கண்டு கூண்டிலிருந்த பறவைக் குஞ்சுகள் கிளப்பிய பயம் தரும் மெல்லிய ஒலிகளும், தூரத்தே கிளம்பி மலைப் பாறைகளில் மோதியதால் மன உளைச்சலை அளித்த புலியொன்றின் உறுமலும் சாதாரண மக்களுக்குத் திகிலை ஊட்டுபவையென்றாலும், காட்டிலே பிறந்து காட்டிலே வளர்ந்த கூத்தனுக்குச் சிறிதளவும் அச்சத்தை விளைவிக்கவில்லைதான். எனினும் அந்தச் சூழ் நிலையில் எதிரே நின்ற வாலிபனின் முகம் மட்டும் அவன் குலையை நடுங்கவே வைத்தது. சற்று முன்பு தான் கண்ட அழகிய முகம் அத்தனை விகாரமாக, பயங்கரமாக மாற முடியும் என்பது எந்தக் கற்பனைக்கும் அப்பாற்பட்டதா யிருந்ததால் கூத்தன் வாயடைத்தே நின்றான்.
கூத்தன் மனோநிலை இந்திரபானுவுக்குச் சந்தேகமற விளங்கியதாகையால் அவன் கூத்தனின் சிதறிய எண்ணங்கள் மீண்டும் ஒன்று கூடி நிலைப்பதற்கு அவகாசம் கொடுத்துவிட்டு நீண்ட நேரத்துக்குப் பிறகு சொன்னான்: “இதில் வருந்துவதற்கு ஏதுமில்லை, நான் வரவேற்று ஏற்றுக் கொண்டதுதானே இது?”

கூத்தன் கண்கள் பிரமிப்பைக் கக்கின. இத்தகைய வேதனைக்குப் பிறகு ஒரு மனிதன் புன்முறுவல் கொள்ள முடியும் என்பதே பெரும் விசித்திரமாயிருந்தது அவனுக்கு. “தம்பி… தம்பி…” என்று வியப்பும் அச்சமும் கலந்த குரலில் துவங்கிய கூத்தன் அப்பொழுதும் பேச்சை முடிக்காமல் திணறினான்.

இந்திரபானு அவனை நெருங்கி அவன் தோள் மீது ஒரு கையை வைத்து அன்புடன், “அண்ணா!” என்று அழைத்தான்.

”அண்ணனா!” கூத்தனின் பேச்சில் துக்கமே தொனித்தது.

“ஆம். தாங்கள் என்னைத் தம்பீ என்று அழைக்க வில்லையா?” இந்திரபானுவின் குரலில் அன்பு நிரம்பிக் கிடந்தது.

“ஆமாம். அழைத்தேன். இருப்பினும் நான் உனக்கு அண்ணனல்ல. எந்த அண்ணன் இந்தப் பயங்கரத்துக்குச் சம்மதிப்பான்?” என்ற கூத்தன், “சற்று இரு தம்பி! இதைக் குருநாதரிடம் சொல்லி மாற்றச் சொல்கிறேன்” என்று கூறிக்கொண்டே குடிசைக் கதவை நோக்கி நகர்ந்தான்.

இந்திரபானு அவன் கையைப் பிடித்து நிறுத்தி, “அண்ணா! அவசரப்படாதீர்கள். இதை இப்பொழுது மாற்ற குருநாதரால்கூட முடியாது. அதுமட்டுமல்ல, இதை நான் வரவேற்றுத்தானே ஏற்றுக் கொண்டேன்,” என்று ஆசுவாசப் படுத்தினான்.

கையைப் பிடித்து நிறுத்தப்பட்ட கூத்தன் அவனை வேதனை நிரம்பிய கண்களுடன் பார்த்தான். “தம்பி! உன் வாழ்க்கையையே நீயே பாழாக அடித்துக் கொண்டாய். ஏன் இதற்கு உடன்பட்டாய் தம்பி?” என்று உதடுகள் துடி துடிக்கக் கூறினான்.

“இதை நீங்கள் கேட்க வேண்டுமா அண்ணா?” என்று வினவினான் இந்திரபானு.

“எதை?”

“எதற்காக நான் இந்த விகாரத்துக்கு உட்பட்டே னென்பதை.”

“சொல் தம்பி, எதற்காக இந்தத் தியாகம்?”

“பாண்டிய நாடும், சேர நாடும் போரிடுகிறது. நான் பாண்டியப் படையின் உபதளபதி.”

இதைக் கேட்ட கூத்தன் அத்தனை அச்சத்திலும் லேசாகப் புன்முறுவல் கூட்டினான்.
”அதல்ல தம்பி காரணம். எந்தப் போரை முன்னிட்டும் பகையை முன்னிட்டும் எந்த மனிதனும் இந்த விகாரத்துக்கு உட்படமாட்டான். அந்தப் பெண்… அவள் பெயர்… என்ன சொன்னார் குருநாதர்….ஆம்… முத்துக்குமரி, அவளை முன்னிட்டுத்தான் இந்தத் தியாகம். பெண் குறுக்கிடும் போது உலகத்தில் எந்த மனிதனும் சுயநிலை இழக்கிறான். இந்திரன் கெட்டதும் பெண்ணாலே சந்திரன் கெட்டதும் பெண்ணாலே என்று கூத்தில் நாங்கள் பாடுகிறோம். அது எத்தனை உண்மை ! தம்பி! இந்திரன் உடல் அழுகச் சபித்தான் முனிவன். இருப்பினும் அந்த விகாரம் பிறர் கண்களுக்குத் தெரியாமல் செய்தான். இந்திரன் கலையிழக்கச் சபித்தான் இன்னொரு முனிவன். ஆனால் மீண்டும் கலைகளைப் பெற வழிவகுத்தான். இந்த விகாரம், இந்த விபரீதம், அவர்கள் யாருக்குமே இல்லை ‘தம்பி. உன்னைப் பார்க்கும் மாந்தர் வெறுப்பர். எந்தப் பெண்ணுக்காக முகத்தை இப்படி அடித்துக் கொண்டாயோ அவளும் உன்னை வெறுப்பாள்,” என்று கூத்தன் ஆவேசத்துடன் சொற்களை உதிர்த்தான்.

இந்திரபானு மீண்டும் அவனைச் சமாதானப் படுத்தினான். “அண்ணா! உங்கள் இதயம் பொன் இதயம். அதனால் இந்தத் தியாகத்தை மிகைப்படுத்திக் கூறுகிறீர்கள். தவிர முத்துக்குமரியைக் காப்பது என் தர்மம். சேரன் அவளைத் தூக்கி வந்தது அதர்மமென்று கலைஞரான குருநாதரே நினைக்கிறார். அதற்காகத்தான் மன்னனுக்கு எதிராக நடக்கவும் முற்படுகிறார். அப்படியிருக்க க்ஷத்திரியனான நான் என்ன செய்ய வேண்டுமென்பது உங்களுக்கு விளங்காததில்லை. வாருங்கள் போகலாம்,” என்று அவனை அழைத்தான்.

கூத்தனுக்கு அப்பொழுதும் மனநிம்மதியில்லை. ஏதும் பேசாமலும் வேதனை நிறைந்த உள்ளத்துடனும் இருந்த மரத்தில் கட்டியிருந்த புரவியை அவிழ்த்து அதில் ஏறிக்கொண்டு கூத்தனையும் தன் பின்னால் ஏற்றிக்கொண்டு, “அண்ண நாம் எந்தத் திசையில் போக வேண்டும்?” என்றான்.

“நேராக வடக்கே போ தம்பி! ஐந்து நாழிகைப் பயணம் செய்யவேண்டும். இந்த மலையிலிருந்து இறங்கி அடுத்த மலையில் ஏறினால் காடு சற்று இடைவெளி கொடுக்கும். அங்கு தீபங்கள் தெரியும்,” என்று வழியைச் சுட்டிக் காட்டினான் கூத்தன். கூத்தன் சொற்படி புரவியை நடக்கவிட்ட இந்திரபானுவின் மனத்தில் தன் முக விகாரத்தைப் பற்றிச் சிறிது வருத்தமிருந்த போதிலும் அவன் எண்ணமெல்லாம் முத்துக் குமரியையே வட்டமிட்டுக் கொண்டிருந்தது. இரவும் சுற்றிலுமிருந்த இயற்கையும் அவன் சம்பந்தப்பட்டவரையில் இன்பமாகவே இருந்ததால், அவன் தான் இறங்கிய மலைச் சரிவையும் எதிரே தெரிந்த மலை எழுச்சியையும் திருப்தியுடனேயே பார்த்து, ‘மலைகளின் எழுச்சியும் இடையிடையே உள்ள ஆழமும் சேர்ந்து தான் இதற்கு மலையாளம், என்று பெயர் வந்தது போலும்’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டான். அவன் புரவி சென்று கொண்டிருந்த மலைச் சரிவிலிருந்தே சேரன் தலைநகர் நன்றாக தெரிந்தது. இரவில் பளிச்சிட்ட அதன் விளக்குகளைப் பார்த்த இந்திரபானு சேரன் தலைநகர் தன்னைப் பார்த்துக் கண் சிமிட்டுகிறதென்று நினைத்தான். அந்த விளக்குகளின் மத்தியில் ஏதோ ஓரிடத்தில் முத்துக்குமரி இருக்கிறாள் என்ற நினைப்பு மீண்டும் அவன் உள்ளத்தே எழுந்ததால், அவன் அவளையும் நினைத்து அவளைக் கவர்ந்த வீரரவியையும் நினைத்து, இந்த நகரை நான் சுட்டெரித்து விடுகிறேன்,’ என்று உள்ளுக்குள் கறுவிக் கொண்டான்.

கூத்தன் மனம் வேறு வழிகளில் சஞ்சரித்துக் கொண்டிருந்தது. கூத்திட்டு மன்னனையும் மக்களையும் திருப்தி செய்து கொண்டிருந்த தனக்குத் திடீரென அரசை எதிர்க்கும் அலுவல் வந்ததை எண்ணி, தன் கதி என்னவாகும் என்பதையும் நினைத்து நடுங்கினான் ஒரு விநாடி. திடீரென அரண்மனையில் வேலை கேட்டால், வீரரவி சந்தேகப்பட்டால் என்ன செய்வதென்று சிந்தித்தான் இன்னொரு விநாடி. எப்படியும் வீரரவி உண்மையை ஊகிப்பானென்பதிலோ, ஊகித்துவிட்டால் தன் கதி என்னவாகுமென்பதிலோ அவனுக்குச் சிறிதும் சந்தேகமில்லை. ஆனால் அந்தக் கதியை நினைத்து இந்திரபானுவின் தியாகத்தையும் நினைத்த கூத்தன் தன் உயிர் போனாலும் கூட இந்திரபானுவவின் தியாகத்துக்கு அது ஈடாகாது என்று நினைத்தான். தவிர எக்காரணத்தை முன்னிட்டும் தன் குருநாதருடைய கட்டளையை மீற முடியாதென்பதையும் உணர்ந்திருந்தானாகையால் விதிமீது பழியைப் போட்டுப் பேசாமலே பயணம் செய்தான்.
ஒரு மலை இறங்கி மறு மலை ஏறி, காட்டின் முகப்புக்கு வந்ததும் தூரத்தே தெரிந்த இரண்டொரு பந்தங்களைக் காட்டி, “அதுதான் கூத்தர் குடிசைகள் இருக்குமிடம், அங்கு புரவியை விடு,” என்று கூறினான் கூத்தன். அவன் சொற்படி குதிரையை நடத்தி முன்பிருந்த ஒரு குடிசைக் கருகில் வந்ததும் புரவியை நிறுத்தச் சொல்லிக் கீழே குதித்த கூத்தன் உள்ளேயிருந்த தன் மனைவியை அழைத்து இந்திரபானுவை அவளுக்கு அறிமுகப்படுத்தினான். கூத்தன் மனைவி இந்திரபானுவைக் கண்டதும் ஒரு விநாடி பிரமித்தாள். அவனை அனுப்பியது குருநாதர் என்பதைக் கேட்டதும் வேறு பேச்சின்றி அவனை உள்ளே வரும்படி அழைத்தாள்.

அடுத்த மூன்று நாட்களில் பரதபட்டனுடைய செல்வாக்கு எத்தன்மையென்பதை இந்திரபானு நன்றாக உணர்ந்தான். அவன் கூத்தர் குடிசைக் கூட்டத்தை அடைந்த மறுநாள் காலையில் அந்தக் கூட்டத்தார் அவனைச் சந்தேகத்துடன் பார்த்தார்களானாலும், அவனை அனுப்பி வைத்தது யாரென்பதை அறிந்ததும் யாரும், மூச்சுப் பேச்சு விடாதது மட்டுமல்ல, அவனைத் தங்களில் ஒருவராக நடத்தவும் முற்பட்டார்கள். அங்கு மட்டுமல்ல, இந்திரபானு பரதப்பட்டன் பெயரின் சக்தியை அறிந்தது. கூத்தனுடன் அடுத்த மூன்று நாட்கள் பரலிமா நகருக்குள் சென்ற பொழுது பல இடங்களில் கூத்தன் அவனைக் குருநாதரின் புதுச் சீடனென்று அறிமுகப் படுத்தினான். அந்த இடங்களிலெல்லாம் அவனுக்கு வரவேற்பும் அபரிமிதமாகக் கிடைத்தது. முதல் மூன்று நாட்களுக்குள், மன்னனுக்கு அடுத்தபடி மக்கள் அச்சப்படுவது குருநாதரிடம்தானென்பதைப் புரிந்துகொண்ட இந்திரபானு, தான் குருநாதரின் சீடனாயிருப்பது தனக்குப் பெரும் கவசமென்பதையும் உணர்ந்து கொண்டான்.

மூன்றாவது நாள் கூத்தன் இந்திரபானுவிடம் விடை பெற்றுக்கொண்டு மன்னனைச் சந்திக்க சென்றான். அரண்மனையில் வேலை கேட்ட கூத்தனை ஒரு விநாடி கூர்ந்து நோக்கினான் சேரன். “கூத்தா! சிறந்த கலைஞனான உனக்குக் காவல் வேலை எதற்கு?” என்று வினவினான்.

“கூத்து இப்பொழுது பயனளிக்கவில்லை. மன்னருக்கும் பாண்டியருக்கும் போர் ஏற்பட்ட பின்பு அரண்மனையில் கூட யாரும் அழைப்பதில்லை என்னை,’ என்றான் கூத்தன்.

அது முற்றிலும் உண்மை என்பதைப் புரிந்து கொண்ட மன்னன், “சரி கூத்தா! உனக்கு இங்கேயே வேலை தருகிறேன்,” என்று அவனை அரண்மனையில் காவல் வேலைக்கு அமர்த்தும்படி காவலர் தலைவனுக்கு உத்தரவிட்டான். அந்த வேலை கிடைத்ததும் அதைப் பற்றிக் குதூகலத்துடன் அன்றிரவு இந்திரபானுவிடம் கூறிய கூத்தன், “மன்னனே இன்று என்னிடம் ஏமாந்து விட்டான்,” என்று நகைக்கவும் செய்தான்.

ஆனால் வீரரவி சிறிதும் ஏமாறவில்லை. கூத்தன் சென்ற பின்பு காவலர் தலைவனை நோக்கி, “கூத்தன் மீது எதற்கும் ஒரு கண்ணை வைத்துக்கொள்,” என்று உத்தரவிட்டான்.
“ஏன் மன்னவா? அவன் மீது தங்களுக்குச் சந்தேகமா?” என்று வினவினான் காவலர் தலைவன்.

“கூத்தன் காவலனாவதைக் கேட்டிருக்கிறாயா?” என்று வினவினான் வீரரவி புன்முறுவலுடன்.

“இல்லை.” என்றான் காவலர் தலைவன்.

“தனக்குப் பழக்கமில்லாத வேலைக்கு ஒருவன் வந்தால் அவன் கவனிக்கத்தக்கவன்,” என்று கூறினான் வீரரவி.

மறுநாள் காவல் பொறுப்பை ஏற்றுக்கொண்ட கூத்தன் காலக்கிரமத்தில் மெள்ள மெள்ள முத்துக்குமரி இருப்பிடத்தைப்பற்றி விசாரித்தான். அவன் விசாரித்த மூன்று நாட்களுக்குள் அவளைக் காக்கும் பணியே அவனுக்குக் கிடைத்தது. ஆகவே கூத்தன் இந்திரபானு விருப்பப்படி காவலர் தலைவனிடம் சொல்லி. அவனையும் அரண்மனைக்காவலர்களில் ஒருவனாக்கினான். இந்திரபானு அரண்மனையிலும் கூத்தர் குடிசைப் பகுதியிலும் கிடைத்த சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்திக் கொண்டான். பகலில் காவல் நேரம் போக மீதி நேரங்களில் நகரத்தைச் சுற்றினான். கடைவீதியிலும் மற்றப் பிரமுகர் வீதியிலும் மக்கள் பேசிய பேச்சுக்களிலிருந்து சிங்கணன் படை புறப்படுவதைப் பற்றியும் அறிந்தான். வீரபாண்டியன் கோட்டாற்றுக் கரைக்குச் சென்ற செய்திகளையும் அறிந்தான். சேரர் தலைநகரில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலமாயிருந்தன. நகருக்கு வரும் மார்க்கங்களில் படைப் பிரிவுகள் காவல் புரிந்தன. படையின் வாகனப் பிரிவுகள் சதா நகரில் இரவும் பகலும் ஓடிக் கொண்டிருந்தன. எங்கும் பலத்த தற்காப்பு ஏற்பாடுகளிருப்பதைக் கண்ட இந்திரபானு, அடிக்கடி குடிசைக் கூட்டத்திலிருந்து காட்டுப் பகுதிக்கு இரவில் சென்று கொண்டிருந்தான்.

அவன் முகம் விகாரமாயிருந்ததாலும், அவன் சிரித்துக் சிரித்துக் குழந்தைகளிடம் பேசியதாலும், பெண்களிடம் அதிகமாக நெருங்காமல் விலகி நின்றதாலும் கூத்தன் கூட்டத்தாரின் அன்பை அவன் பெரிதும் பெற்றான். மதம் பிடித்த யானையொன்று காட்டிலிருந்து வந்து குடிசைகளை அழிக்க முயன்றபோது வேலெறிந்து அவன் அதைக் கொன்றது அவர்களுக்கு அவனிடமிருந்த மதிப்பை அதிகப் படுத்தியது. இப்படியிருந்த ஒரு நாளில்தான் கூத்தன் முதுகில் கத்திக்காயத்துடன் வந்து குடிசைக்கருகில் விழுந்தான்.

அதற்குப் பிறகு நடந்த துரித நிகழ்ச்சிகளில் அந்தக் குடிசைக் கூட்டத்தாருக்குப் பங்கேதுமில்லையென்றாலும் இந்திரபானுவின் பங்கு நாளுக்கு நாள் அதிகப்பட்டது. மன்னன் அவன் முன்பு பரதபட்டனைக் கொண்டு வந்து நிறுத்தி, செண்டுவெளிக் களியாட்டத்துக்கு வித்திட்டது இந்திரபானுவுக்கு இட்ட மரண வித்தென்பதை மன்னனைத் தவிர வேறு யாரும் அறியவில்லை. எப்படியும் செண்டு வெளியில் இந்திரபானுவை ஒழித்துவிடக் கங்கணம் கட்டிக்கொண்ட வீரரவி முத்துக்குமரியைப் பார்த்து அதைப்பற்றிப் பிரஸ்தாபித்த பிறகுதான் அவன் மகிழ்ச்சியைப் பன்மடங்கு அதிகப்படுத்தும் ஓலை கிடைத்தது. சிங்கணனிடமிருந்து கிடைத்த அந்த ஓலையளித்த மகிழ்ச்சியால், “இதற்கே ஒரு செண்டுவெளி நடத்தலாமே?” என்று மன்னன் இரைந்து சொல்லிக் கொண்டு தூதுவனுக்குத் தன் கையிலிருந்த ஒரு வீரகங்கணத்தையும் கழற்றிப் பரிசளித்தான். “செண்டு வெளி உண்மையில் சேரர்களின் வெற்றி வெளியாகும். இதை மக்களுக்கு அன்றே அறிவிக்கிறேன” என்று கூறித் தூதனை அனுப்பினான். அன்றிலிருந்து வீரரவி மிகுந்த உற்சாகத்தைக் காட்டினான். மன்னன் உற்சாகத்தைக் கண்டு மாளிகையே உல்லாசத்தை அடைந்தது. உற்சாகமும் உல்லாசமும் ஒருவனுக்கு மட்டும் ஏற்படவில்லை. உள்ளத்தில் கவலை மட்டும் லேசாகத் துளிர்த்திருந்தது. அந்தக் கவலையை பரதப்பட்டன் வாய்விட்டுச் சொல்லவில்லை. இருப்பினும் இந்திரபானு அதை உணர்ந்து கொண்டான். அது பற்றி விசாரிக்கவும் முற்பட்டு, “தலைநகர் களிவெறியில் மூழ்கியிருக்கிறது குருநாதரே!” என்று துவங்கினான்.

“ஒருவர் மகிழ்ச்சி இன்னொருவருக்குத் துன்பம். இது உலக நீதி!” என்றான் பரதபட்டன்.

“செண்டுவெளி…”

“மன்னனுக்கு மகிழ்ச்சி.”

“மற்றோருக்கு?”

“அன்றுதான் தெரிய வேண்டும்.”
“செண்டுவெளியில் ஏதாவது விசேஷத்தை எதிர் பார்க்கிறீர்களா!”

“பரதபட்டன் இந்திரபானுவைக் கூர்ந்து நோக்கினான். “இல்லை. விபரீதத்தை எதிர்பார்க்கிறேன்,” என்று மெல்லச் சொற்களை உதிர்த்தான்.

Previous articleRaja Muthirai Part 2 Ch14 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Muthirai Part 2 Ch16 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here