Home Historical Novel Raja Muthirai Part 2 Ch16 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

Raja Muthirai Part 2 Ch16 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

67
0
Raja Muthirai Part 2 Ch16 Raja Muthirai Part 2 Sandilyan, Raja Muthirai Part 2 Online Free, Raja Muthirai Part 2PDF, Download Raja Muthirai Part 2 novel, Raja Muthirai Part 2 book, Raja Muthirai Part 2free, Raja Muthirai,Raja Muthirai Part 2 Story in tamil,Raja Muthirai Part 2 Story,Raja Muthirai Part 2 novel in tamil,Raja Muthirai Part 2 novel,Raja Muthirai Part 2 book,Raja Muthirai Part 2 book review,ராஜ முத்திரை ,ராஜ முத்திரை கதை,Raja Muthirai Part 2tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2full story,Raja Muthirai Part 2 novel full story,Raja Muthirai Part 2audiobook,Raja Muthirai Part 2audio book,Raja Muthirai Part 2full audiobook,Raja Muthirai Part 2full audio book,
Raja Muthirai Part 2 Ch16 | Raja Muthirai | TamilNovel.in

Raja Muthirai Part 2 Ch16 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

ராஜ முத்திரை இரண்டாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 16 வீரர் திருவிழா

Raja Muthirai Part 2 Ch16 | Raja Muthirai | TamilNovel.in

பரதபட்டனும் இந்திரபானுவும் மெய்க் காவலர் இல்லத்தில் இருத்தப்பட்ட நாளையடுத்த நான்காம் நாளும் மெல்ல மெல்ல அணுகவே அன்றைய உதயசூரியன் தன் செவ்விய கிரணங்களை அரண்மனையின் செண்டு வெளியின் மீது வீசினான். செம்மண் குழம்பு கொண்டு மூன்று நாட்களாகப் பதனிடப்பட்டதால் செவ்வரியோடியிருந்த அந்தச் செண்டுவெளிமீது காலைக் கதிரவன் செங்கதிர்களும் படவே, அன்று இரவு அந்த இடத்தில் வீரர்கள் ரத்தம் சிந்துவதற்கு முன் கூட்டி இயற்கை அத்தாட்சியளிப்பதைப் போன்ற பிரமையை அளித்தது அந்தத் திறந்தவெளி அரங்கு, மெய்க் காவலர் வீதியின் மீது நின்று அதை உற்று நோக்கிய பரத பட்டன் தீர்க்கா லோசனையில் ஆழ்ந்திருந்தானானாலும் அவனருகே நின்ற இந்திரபானுவின் உள்ளம் மட்டும் இரவு விளையாட்டை நினைத்து மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தது. ஆகவே பரதபட்டனை நோக்கிக் கேட்டான், “குருநாதரே! செண்டு வெளி எத்தனை சிவந்து கிடக்கிறது பார்த்தீர்களா?” என்று.

பரதபட்டன் குரல் உற்சாகமின்றி ஒலித்தது. “ஆமாம் பார்த்தேன்,” என்ற சொற்களில் கவலை ஊடுருவி நின்றது.

பரதபட்டன் எண்ணங்கள் எந்தத் திசையில் ஓடுகின்றன என்பதை அறியாமலே, “இந்தச் செண்டு வெளியைப் பார்த்தால் கவிகள் இதற்கு என்ன உவமை காட்டுவார்கள்?” என்று வினாவினான்.

பரதபட்டன் அவனைத் திரும்பி நோக்கினான். “இப்பொழுது அதைப்பற்றி என்ன?” என்று விசாரித்தான் சர்வ சாதாரணமாக. அவன் குரலில் இகழ்ச்சி பெரிதும் மண்டிக் கிடந்தது.

“சரச கவியாயிருந்தால் பெண்களின் இதழ்களுக்கு இந்தச் சிவப்பை ஒப்பிடுவான். செண்டுவெளிச் சிவப்பு அவ்வளவு சிவந்திருக்கிறது.” என்றான் குதூகலத்துடன் இந்திரபானு.

“அப்படியும் ஒப்பிடலாம்,” என்ற பரதபட்டன் குரலில் இகழ்ச்சி முன்னைவிட அதிகமாக ஒலித்தது.

“வேறு எப்படி ஒப்பிடலாம் குருநாதரே?” என்று கேட்டான் இந்திரபானு.

“புலியின் உதடுகளுக்கு ஒப்பிடலாம்” என்றான் பரத பட்டன்.

“புலியின் இதழ்களுக்கா!” இந்திரபானு வியப்புடன் வினவினான்.

“ஆம். புலியின் உதடுகளும் சிவப்பாகத்தானிருக்கும். அது மட்டுமல்ல…”

“வேறென்ன குருநாதரே?”

“புலியின் இதழ்கள் மனித ரத்தத்ததை உறிஞ்சும். இந்தச் செண்டு வெளிக்கும் அந்தக் குணம் உண்டு.”

“குருநாதரே!” என்றான் இந்திரபானு குரலில் அதிர்ச்சி ஒலிக்க.

“அவசரப்படாதே. ஆத்திரமும் படாதே. இன்றிரவு பார்,” என்றான் பரதபட்டன் வெறுப்புடன்.

இந்திரபானு சந்தேகம் நிரம்பிய விழிகளைக் குருநாதர் மீது திரும்பினான். “செண்டு வெளியில் போராட்டத்தின் போது ரத்தம் சிந்துவதுண்டு. ஆனால் யாரும் இறப்பது கிடையாது,” என்று மேலும் சொல்லப் போன இந்திரபானுவுக்குப் பதிலேதும் சொல்லாமல் செண்டுவெளியையும் பார்த்து அரண்மனை உப்பரிகைப் பகுதிகளையும் ஊன்றிப் பார்த்து விட்டுக் கீழே இறங்கிச் சென்றான் பரதபட்டன்.

சேரர் தலைநகர் பூராவும் களிவெறியில் மூழ்கியிருக்கப் பரதபட்டன் மட்டும் சிறிதளவுகூடச் சந்துஷ்டியில்லாமவிருப்பதற்கு எத்தகைய காரணமும் இல்லையென்றே நினைத்தான் இந்திரபானு. மிகக் கூரிய அறிவுள்ள இந்திரபானுவுக்கூட எவ்வித சந்தேகமும் ஏற்படாத சூழ்நிலையைச் சேரமன்னன் ஏற்படுத்தியிருந்தாலும் பரதபட்டனை மட்டும் அவனால் சிறிதளவும் ஏமாற்ற முடியவில்லை. சேர மன்னன் சூதை விநாடி நேரத்தில் ஊகித்தறிந்த பரதபட்டன் அன்று பகல் வெளியே போய் வந்த இந்திரபானுவின் உற்சாகப் பேச்சை வெறுப்புடனேயே கேட்டான். இரவு ஏற்படவிருந்த செண்டுவெளிப் போராட்டத்தை முன்னிட்டுப் புரவி ஏறிப் பயிற்சி செய்துவிட்டு வந்த இந்திரபானு, “குருநாதரே! நகரம் களிவெறி கொண்டிருக்கிறது.” என்றான்.

பஞ்சணையில் உட்கார்ந்தபடியே பரதபட்டன் பதில் சொன்னான், “மக்களும் விசித்திரம்; மன்னனும் விசித்திரம்,” என்று.

“ஏன்? என்ன விசித்திரம் அதில்?” என்று வினவினான் இந்திரபானு.

“செண்டு வெளிக் களியாட்டத்துக்கு இதுதான் சமயமா?”

“இந்தச் சமயத்திற்கென்ன?”

“தலைநகரிலிருந்து மூன்று காதத்தில் பாண்டியன் படை நிற்கிறது.

“ஆம்.”

“போரில் வெற்றி தோல்வியை நிச்சயமாகச் சொல்ல முடியாது.”

“ஆம்,”

“இந்த சமயத்தில் மன்னன் களியாட்டத்துக்கு ஏற்பாடு செய்கிறான்! இதை மக்கள் குதூகலத்துடன் வரவேற்கிறார்கள்!”

இந்திரபானு சற்றுச் சிந்தித்தான். பிறகு கேட்டான்: “இதையெல்லாம் மன்னர் சிந்திக்காமலா இருப்பார்?”

“சுயநலத்தைவிடப் பொதுநலத்தில் சிரத்தையுள்ள மன்னனாயிருப்பவன் சிந்திப்பான்.” என்று பட்டும் படாமலும் பரதப்பட்டன் பதில் சொன்னான். அத்துடன் நிறுத்தாமல் மேலும் சொன்னான்: “மன்னன் தான் அறிவில்லாமல் அலுவல் புரிகிறானென்றால் மக்களுக்கு எங்கே போயிற்று அறிவு? தமிழ் மக்களுக்கே கூத்து களியாட்டம் என்றால் தலைகால் புரிவதில்லை. இந்தக் கலைப் பைத்தியத்தாலேயே தமிழ் மக்கள் அழிந்து போகிறார்கள்.’

இந்திரபானு சற்று யோசித்துவிட்டு, “ஒரு நாளைக்குத் தானே இந்தக் களியாட்டம் குருநாதரே! நாளைக்கே நகரம் பழையபடி போர்ப் பாதுகாப்பில் இறங்கி விடுகிறது. மன்னனும் நகர எல்லைகளில் பாதுகாப்பைப் பலப் படுத்தித்தான் இந்தச் செண்டு வெளிக் களியாட்டத்தையும் ஏற்பாடு செய்திருப்பான். தவிர, குருநாதரே -” என்று மேலும் எதோ சொல்லப் போனான்.

“என்ன?” என்று கேட்டான் பரதபட்டன்.

“மன்னன் மற்றபடி எத்தனை கேவலமாக நடந்து கொண்டாலும் இந்தக் களியாட்ட சம்பந்தமாக நியாய மாகத்தான் நடக்கிறான்.”

“எப்படி?”
”உதாரணமாக வீரர்களுக்குச் சுதந்திரமிருந்தால் தான் களியாட்டத்தில் ஈடுபட முடியும்,”

“உம்,”

“ஆகவே, எனக்குக்கூட மூன்று நாட்களாக நிரம்பச் சுதந்திரத்தை அளித்திருக்கிறான்.”

“உனக்குக்கூட என்றால்?”

“என்னைக் கூத்தன் வேலைக்கமர்த்தினான். அவன் மீதுள்ள சந்தேகம் என்மீது விழுமல்லவா?”

“ஆம்?”

“இருப்பினும், நான் இஷ்டப்படி உலாவ முடிகிறது இந்நகரத்தில் இஷ்டப்பட்டபோது மூன்று நாட்களாக அரண்மனைக்கு வெளியே சென்று வருகிறேன். தவிர மெய்க்காவலனுக்குள்ள மரியாதையும் எனக்குக் கிடைக்கிறது.”

“உம்.”

”என்ன குருநாதரே? எதற்கெடுத்தாலும் உம் கொட்டுகிறீர்களே?”

பரதப்பட்டனின் கண்களில் ஒரு விநாடி விஷம் ரேகையொன்று படர்ந்து மறைந்தது. உதடுகளில் லேசான புன்முறுவல் ஒன்றும் தெரிந்தது. “உம் கொட்டாமல் என்ன செய்யமுடியும்? உன் சுதந்திரம் தரும் வியப்பு, பேச்சைத் தடை செய்கிறது,” என்ற பரதபட்டன் மெல்ல நகைக்கவும் செய்தான்.

“என் சுதந்திரம் வியப்பைத் தருகிறதா?” என வினவினான் இந்திரபானு.

“ஆம் இந்திரபானு! மூன்று நாட்களாகக் கிடைத்திருக்கும் சுதந்திரம் விசித்திரமானது” என்றான் பரதபட்டன்.

“என்ன விசித்திரம் இதில்?”

“அளவுக்கு மீறிய எதுவும் விசித்திரம்தான். அளவுக்கு மீறிச் சுதந்திரமோ, உபசரிப்போ எது கிடைத்தாலும் விசித்திரம்தான்! ஆட்டைப் பலியிடுவதற்கு முன்பு அதற்கு என்ன உபசரிப்பு நடக்கிறது. எவ்வளவு தடவை குளிப்பாட்டுகிறார்கள்? எத்தனை முறை மஞ்சள் பூசி மாலை சூட்டி எவ்வளவு அழகாய் அலங்கரிக்கிறார்கள்? அது எத்தனை மிடுக்குடன் பலிபீடத்திற்கு நடந்து செல்லுகிறது,” என்ற பரதபட்டன் அதற்குமேல் எதுவும் பேச மறுத்தான்.

பரதபட்டன் அன்றிரவில் ஏதோ விபரீதத்தை எதிர் பார்க்கிறானென்பதை இந்திரபானு சந்தேகமற உணர்ந்திருந்தாலும், அதுபற்றி முத்துக்குமரி முன்பே கோடி காட்டியிருந்தாலும், அவன் சிறிதும் லட்சியம் செய்ய வில்லை. அவன் மனக்கண் முன்பு மதுரை அரண்மனைச் செண்டு வெளிக் களியாட்டமும், போர்க்கூத்தும் மக்கள் ஆரவாரமுமே எழுந்து நின்றன. ஆகவே அவற்றை நினைத்து நினைத்துச் சேரநாட்டிலும் அது போன்ற வெறியாட்டம் இருக்குமென்ற மகிழ்ச்சியில் அன்று பகலைக் கழித்தான். அந்த மகிழ்ச்சி அவனுக்கு மட்டுமல்ல. சேரமன்னன் வீரரவிக்கும் இருந்தது. அன்று வீரரவி இரண்டு மூன்று முறை உப்பரிகையில் நின்று செண்டு வெளியைக் கவனித்தான். அங்கிருந்த ஏற்பாடுகளையும் தனது கண்களால் ஆராய்ந்து திருப்திப்பட்டுக் கொண்டான். பிறகு தனது அறையில் சேனாதிபதியை வரவழைத்து, “என்ன! நான் சொன்ன ஏற்பாட்டைச் செய்துவிட்டாயா?” என்று வினவினான்.

“செய்து விட்டேன்,” என்றான் சேனாதிபதி வெறுப்புடன்.

“யாரை உப்பரிகை முன் கூடலில் நிறுத்தப் போகிறாய்?”

“செண்டு வெளியில் பிரசித்திப் பெற்ற வீரனை” என்றான் சேனாதிபதி.

“குறி தவறாமல் எறியக்கூடியவனா?” என்று மன்னன் மீண்டும் வினவினான்.

“அவன் செண்டு பலபேர் உயிரை ஏற்கனவே குடித்திருக்கிறது,” என்ற சேனாதிபதி, அதற்கு மேல் ஏதும் கூறாமல் மௌனம் சாதித்தான்.

சேனாதிபதி மௌனத்துக்குக் காரணம் தெரிந்திருந்த படியால் மன்னன் மேற்கொண்டு சம்பாஷணையை நீட்டாமல், அவனுக்குப் போக அனுமதியளித்தான். அன்றைய பகலைப் பற்பல யோசனைகளிலும் பற்பல ஏற்பாடுகளிலும் செலவழித்தான். அன்றிரவு நிகழவிருந்த சதியைப் பார்க்க இஷ்டமில்லாத பரிதியும் மேலைக் கடலில் இறங்க முற்பட்டான்.

அன்று பௌர்ணமிக்கு முந்தின நாளாதலால், செண்டுவெளிக் களியாட்டத்தைக் காணப் பொழுதிருக்கும் போதே வானத்தில் தோன்றிவிட்ட மதி தன் கதிர்களின் வெண்மையை மெள்ள மெள்ள அதிகப்படுத்தலானான். அந்திவானம் சிவந்ததுமே அரண்மனையை நோக்கி நகர முற்பட்ட மக்களின் கூச்சலும் கூட்டத்தைக் கட்டுப்படுத்த வீரர்கள் புரவிகளை ஓடவிட்டதால் ஏற்பட்ட ஓலிகளும், படைத்தலைவர் பலர் ரதங்களில் வேகமாகச் சென்றதால் கிளம்பிய சகட நாதமும் பரலி மாநகரைத் திருவிழா நகரமாக அடித்திருந்தது. கூலவாணிகரும், கூத்தரும், சேரவீரரும், யவனக் காவலரும் பலப்பல உடைகளையும், பலப்பல ஆயுதங்களையும் தரித்துச் செண்டுவெளியை நோக்கி நடந்தது சேரமாநகரின் மக்களமைப்பு எத்தன்மையது என்பதை எடுத்துக் காட்டியது. இப்படி வெள்ளமென நகர்ந்த பலதரப்பட்ட மக்களின் கூட்டம் அரண்மனையின் பல வாயில்கள் மூலமும் உட்புகுந்தது. எந்த வாயிலில் புகுந்தாலும் செண்டு வெளிக்குச் செல்ல வசதியிருந்ததால் நான்கு பக்கங்களிலிருந்தும் நான்கு நதிகளென செண்டு வெளியை நோக்கி வந்த மக்கள் பிரவாகத்தைச் செண்டுவெளி முனையில் பெரும் யவனவீரர்கள் ஈட்டிகளைக் கொண்டு தேக்கி நிறுத்தினர். மக்களில் பலர் களிவெறி கொண்டு கூச்சலிட்டார்கள். பலர் பாடினார்கள். பலர் ஆடினார்கள். குதூகலம் எங்கும் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது.
இரவு மெல்ல மெல்லப் புகுந்துவிட்டதால் பட்டப் பகல் போல் காய்ந்த வெண்ணிலவு செண்டு வெளியின் செம்மண் நிலத்திற்குப் புதுமெருகு கொடுத்திருந்தது. அத்தனை நிலவு காய்ந்தும், அது போதாதென்று செண்டு வெளியை அடுத்திருந்த அரண்மனைச் சுவர்களில் பதிக்கப் பெற்றிருந்த லட்சம் வெண்கல அகல்களும், ஏற்றப் பட்டிருந்தபடியால், அந்த அரங்கை இயற்கையின் லட்சம் கண்கள் பார்ப்பது போல் தோன்றியது. இவை தவிர மன்னரும் மற்றப் பெருங்குடி மக்களும் உட்காருவதற்காக நிர்மாணிக்கப் பட்டிருந்த மேடையின் அருகே பெரும் பந்தங்கள் பல சுடர்விட்டெரிந்து தங்கள் தீச்செண்டுகளை லேசாகக் காற்றில் ஆற்றிக்கொண்டிருந்ததும் அந்த வையாளி வீதிக்குப் பெரும் கம்பீரத்தை அளித்திருந்தது. சேனாதிபதிகளும் உபசேனாதிபதிகளும், புரவிப் படைப் பெருவீரரும், அரச குடும்பம், தளபதிகள் குடும்பம், புரோகிதர் குடும்பம் இவற்றைச் சேர்ந்த நாரீமணிகள் பலரும் பற்பல அழகிய உடைகளை அணிந்து அந்த மேடைக்குள் புகுந்து கொண்டிருந்தனர். தளபதிகள் அணிந்திருந்த பெருங் கவசங்களும் புரோகிதர்களின் பீதாம்பரங்களும், மங்கையரின் நானாவித சரிகைச் சேலைகளும் பந்தவெளிச்சத்திலும், லட்ச தீப ஒளியிலும் கண்ணைக் கவர்ந்தன. மேடைமீதும் கீழுமிருந்த மக்களின் பாகுபாட்டையும், உடையிலும் மற்றதிலுமிருந்த ஏற்றத் தாழ்வையும் காணச் சகியாதவன் போல வான்மதி சின்னஞ்சிறு வெண்ணிற மேகமொன்றில் ஒரு விநாடி மறைந்தான். அந்தச் சமயத்தில் அரண்மனை முரசுகள் முழங்கின.
முரசு முழங்கியதும் பட்டென்று செண்டு வெளி எங்கும் நிசப்தம் உலாவியது. இருமுறை தூய வாத்தியங்கள் முழங்கின. அரண்மனைத் தாதிகள் பலர் அப்சர ஸ்திரீகள் போல் மேடைமீது தாவி வந்து மலர்களைத் தூவிச் சென்றனர். அடுத்தபடி சங்க நாதங்களும் இன்னிசைக் கருவிகளும் அறை கூவுவோரின் வெற்றி முழக்கங்களும் பலமாக எழுந்தன. அந்த ஒலிகளுக்குச் செவிசாய்த்துப் புன்முறுவல் செய்துகொண்ட அந்தப் பெரு மேடையின் முன்புறத்தில் மன்னன் தோன்றினான். அன்று மன்னன் வெண்புரவியில் அமர்ந்து செண்டுவெளி அரங்கு வழியே மேடைக்கு வந்தான்.

மன்னன் உடை மிகக் கம்பீரமாயிருந்தது. யவனர் உடையை அணிந்திருந்தான் அன்று வீரரவி. சாதாரண மாகவே அழகிய தோற்றமுள்ளவனான உதயமார்த்தாண்ட வர்மன் அன்றைய உடையில் மெல்லிய இரும்புக்கம்பிகளில் நெய்யப்பட்டிருந்த மார்புச் சட்டையில், ‘கைகளின் முன் புறத்தை (முழங்கையிலிருந்து கணுக்கை வரை) முடியிருந்த பித்தளைத் தகட்டில், தலையில் கவித்திருந்த சொர்ணக் கிரீடத்தில், அதன் முகப்பில் செருகியிருந்த செங்கழுகின் இறகில், மிகமிகக் கம்பீரமாகவும் அழகாகவும் காட்சியளித்தான். பரசுராமன் சிருஷ்டித்த நாட்டைச் சேர்ந்த வீர ரவியின் இடையில் அன்று ஒரு பொற்பரசும் பளிச்சிட்டது. அவன் பொற்கிரீடமும் மற்றக் கவசங்களும் தீபங்களின் ஒளியில் செந்நிறம் பெற்றதற்கும், அவன் ஏறி வந்த புரவியின் வெண்மைக்குமிருந்த மாறுபாடே பிரமிக்கத்தக்க தாயிருந்தது.
வெண்புரவியில் வரும் இந்திரனைப்போல், பூம்புகாரின் இந்திரவிழாவை நிகர்த்த அந்தச் செண்டு வெளி விழாவிற்கு வந்த வீரரவி உதயமார்த்தாண்டவர் மனைக்கண்டதும் வீரர்கள் ஜெயகோஷம் செய்தார்கள். மக்கள் மகிழ்ச்சிக் கூச்சலிட்டார்கள். அவற்றை வரவேற்கும் பாவனையில் சிரமசைத்த உதயமார்த்தாண்டவர்மன் அந்த ஆராவாரங்களுக்கிடையே, தனது வெண்புரவியை நடத்திச் சென்று மேடையின் மத்தியப் பகுதிக்கு வந்ததும் புரவியை நிறுத்த, இரு வீரர்கள் புரவியின் கடிவாளத்தைப் பிடித்தனர். மற்றுமிருவர் மன்னன் கால்வைத்து இறங்கப் பஞ்சணைப் படியொன்றை வைத்தார்கள். புரவியிலிருந்து அப்படியில் காலை வைத்து இறங்கி மன்னன் மேடைமீது ஏறவே, அந்த அலங்கார மேடைமீதிருந்த பெருங்குடி மக்கள் அனைவரும் எழுந்து நின்றனர்.

மன்னன் அவர்களையும் அவர்கள் வணக்கத்தையும் ஏற்றுத் தனது ஆசனத்தில் அமர்ந்தான். அவன் அமர்ந்த அதே சமயத்தில் மேடையின் பின்புறமாக இரு சேடிகளுக் கிடையில் அழைத்து வரப்பட்ட முத்துக்குமரி மன்னன் உட் கார்ந்திருந்த ஆசனத்தின் பின்னால் உட்கார்ந்தாள். அவள் வந்ததைத் திரும்பிப் பார்த்த மன்னன் மீண்டும் செண்டு வெளியை நோக்கித் திரும்பித் தன் வலது கரத்தை அசைத்தான். அந்தக் கை அசைந்ததும் அந்தச் செண்டு வெளியரங்கின் முரசுகள் மூலைகளில் டமடமவென்று முழங்கின. இரண்டு மூலைகளிலிருந்து இரு புரவிகள் பாய்ந்து செண்டுவெளிக்குள் காற்றெனப் பறந்து வந்தன. செண்டாயுதங்கள் இரண்டு வேகமாக அங்கு குறுக்கே பறந்தன. வீரர்களின் திருவிழாவான செண்டு வெளி மிக மும்முரமாகவும் ஆரவாரத்துடனும் துவங்கிவிட்டது.

Previous articleRaja Muthirai Part 2 Ch15 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Muthirai Part 2 Ch17 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here