Home Historical Novel Raja Muthirai Part 2 Ch17 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

Raja Muthirai Part 2 Ch17 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

56
0
Raja Muthirai Part 2 Ch17 Raja Muthirai Part 2 Sandilyan, Raja Muthirai Part 2 Online Free, Raja Muthirai Part 2PDF, Download Raja Muthirai Part 2 novel, Raja Muthirai Part 2 book, Raja Muthirai Part 2free, Raja Muthirai,Raja Muthirai Part 2 Story in tamil,Raja Muthirai Part 2 Story,Raja Muthirai Part 2 novel in tamil,Raja Muthirai Part 2 novel,Raja Muthirai Part 2 book,Raja Muthirai Part 2 book review,ராஜ முத்திரை ,ராஜ முத்திரை கதை,Raja Muthirai Part 2tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2full story,Raja Muthirai Part 2 novel full story,Raja Muthirai Part 2audiobook,Raja Muthirai Part 2audio book,Raja Muthirai Part 2full audiobook,Raja Muthirai Part 2full audio book,
Raja Muthirai Part 2 Ch17 | Raja Muthirai | TamilNovel.in

Raja Muthirai Part 2 Ch17 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

ராஜ முத்திரை இரண்டாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 17 இதயம் நனையவில்லை

Raja Muthirai Part 2 Ch17 | Raja Muthirai | TamilNovel.in

மன்னன் அமர்ந்திருந்த உயர் மேடைக்கெதிரில் பெரு வளையமாகக் காட்சியளித்த மக்கள் கூட்டத்தின் வடமூலையிலும் தென்மூலையிலும் மக்கள் வளையம் இரண்டு இடங்களில் காவலர் அணிவகுப்பால் பிளக்கப் பட்டிருந்தபடியால், அந்தப் பிளவுகளுக்குள் வீரர் புரவிகளில் விரைந்து செண்டு வெளிக்குள் நுழைய வசதியிருந்த தன்றி, செண்டு வெளியின் ஈசானிய மூலையில் செண்டாயுதத்தின் கூரிய வேல் நுனி பதிய, பெரியதொரு மீன் இலக்கமும் பதிக்கப் பெற்றிருந்தது. அதிலிருந்து சற்று எட்டத் தள்ளி, பாண்டியர் கொற்கை ராஜமுத்திரையைப் போல் யானையும் கட்டாரியும் பிணைந்த மற்றோர் இலக்கம் இரண்டு பெருந்தூண்களுக்கு இடையில் தொங்கவிடப்பட்டு ஆடிக் கொண்டிருந்தது. மன்னன் கையசைத்துப் புரவி வீரரிருவர் செண்டுவெளிக்குள் புகுந்து இரண்டு செண்டாயுதங்களை மீன் இலக்கை நோக்கி வீசியதும் மக்கள் பெருத்த ஆரவாரம் செய்தார்கள். அந்தச் சமயத்தில் அரண்மனைக் கட்டியக்காரன் மேடையின் ஒரு கோடியில் எழுந்து நின்று கையிற் பிடித்திருந்த பெருங்கோலை ஆட்டவே மீண்டும் முரசுகள் ஒலித்தன. மன்னர் ஏதோ அறிவிக்க விரும்புகிறாரென்பதை உணர்ந்த மக்கள் சட்டென்று கூச்சலை அடக்கிக் கொண்டார்கள். செண்டு வீசிய புரவி வீரர் இருவரும் புரவிகளை அடக்கி, செண்டு வெளி நடுவில் நின்றார்கள்.

நிசப்தம் நிலவியதும் கட்டியக்காரன் பெருங்குரலில் சேர மன்னன் விருதுகளை இரைந்து அறிவித்தான். ‘ப்ரசு ராமர் நாட்டினரான சேரர் பெருமான், மேலைக்கடல் எம்பிரான், பல்யானைச் செய்குழு குட்டுவன் பரம்பரையில் வந்த பரலீசன், மக்களுக்குத் தனது வாழ்த்துக்களைச் சொல்லுகிறார்…” என்று கட்டியக்காரன் கூறி நீளக் கைக்கோலை மேடையில் மும்முறை தட்டி, “ஜெய விஜயீபவ!” என்று கூச்சலிட்டதும் மன்னன் தனது ஆசனத்தில் எழுந்திருந்தான். ஒருமுறை தனது குடிமக்களை ஆவலுடன் நோக்கினான். பிறகு உரத்த குரலில், “சேர நாட்டுப் பெருமக்களே! இந்த மண்ணை வெற்றி கொள்ள மாற்றானொருவன் முயல்கிறான் அது முடியுமா?” என்று கேட்டான்.

“முடியாது, முடியாது. பாண்டியப் படைகளைக் கிழித்தெறிவோம்!” என்ற மக்கள் கூச்சல் வானைப் பிளந்தது.

சேர மன்னன் அந்தக் கூச்சலைக் கையமர்த்தி அடக்கிவிட்டு, “உண்மை. சேரமக்களின் உணர்ச்சி வெள்ளம் பாண்டியப் படைகளை அடித்துக்கொண்டு போய்விடும். மக்கள் கொந்தளிப்பு எனும் தீயில் பாண்டியர் மாண்டு மடிவார்கள், சேரர் வீரத்துக்கு இந்தச் செண்டு வெளி அத்தாட்சியல்லவா?” என்று மீண்டும் மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டினான்.

இந்தக் கேள்விக்குப் பதில் முன்னைவிட மும்முரமாயிருந்தது. “ஆம்! ஆம்! செண்டு வெளி வீரர் பிறக்குமிடம், வீரர் மடியும் இடம்” என்று மக்கள் பலபலவிதமாகக் கூவினர்.

மன்னன் ஒரு விநாடி தாமதித்துவிட்டு மீண்டும், “இந்தச் செண்டுவெளித் திருநாளுக்கு, நமது படைகளை நடத்திச் சென்றுள்ள சிங்கணர் ஒரு செய்தியனுப்பியிருக்கிறார். படிக்கிறேன், கேளுங்கள்,” என்று மடியிலிருந்து ஒரு நீட்டோலையை எடுத்தான். அந்த ஓலையைக் கண்டதும் மக்களிடம் பெரும் அமைதி ஏற்பட்டது. மன்னன் இரைந்து ஓலையைப் படித்தான்: “சேரர் திலகமே! மன்னரே! என் தலைமையில் திரண்டு வந்த தங்கள் படை பலத்தைக் கண்டதும் கோட்டாற்றுக் கோட்டைக்குள் உள்ள வீரபாண்டியன் நடுங்கிவிட்டான் அவன் சரணடையத் தயாராகி விட்டான். அதுபற்றிய செய்தியை முதலில் தந்திரத்தால் அறிந்தேன். பிறகு அவனே நேரிடையாக என்னிடம் சரணடையச் சம்மதித்து விட்டான். வாழ்க சேரநாடு! வாழ்க சேர மக்கள்! வாழ்க சேரர் மாமன்னர்! இப்படிக்கு ஊழியன் சிங்கணன்.”

வாசகத்தை ஒவ்வொன்றாகத் தனது குரலுக்கு உணர்வும் ஒலியும் கொடுத்து மக்கள் மனத்தில் உறையும்படி படித்தான் சேரமன்னன். அது முடிந்ததும் மக்கள் உணர்ச்சி கரை கடந்து போகவே பல இடங்களில் வீரர் காவலும் அணியும் கூட உடைக்கப்பட்டன. மக்கள் உணர்ச்சி அளவுக்கு மீறிப் போய்விட்டதை உணர்ந்த வீரரவி பக்கத் திலிருந்த சேனாதிபதியை நோக்கிப் புன்முறுவல் செய்து ஆசனத்தில் உட்கார்ந்தான்.
மக்கள் ஆரவாரம் அதிகமாயிருந்தது. அந்த ஆரவாரத்துடன், மக்கள் கூட்டத்தைச் சரி செய்து நிறுத்த வீரர் சிலர் கிளப்பிய ஒலிகளும், சுற்றிச் சுற்றிப் புரவிகளில் ஓடி மக்களைப் பின்னடையச் செய்ய முயன்ற மற்றும் சில வீரர்களின் சத்தமும் குழப்பத்தைக் குறைப்பதற்குப் பதில் அதிகப்படுத்திக் கொண்டிருந்தன. ஆனால் திரும்பத் திரும்ப முரசுகள் ஒலித்ததும் மக்கள் கூச்சல் அடங்கியது. வீரர்கள் பழையபடி செண்டுவெளி அரங்கையும் சரிசெய்யவே, ஆரம்பத்தில் உட்புகுந்து செண்டு வீசி பிறகு அரங்கின் நட்டநடுவில் நின்றுவிட்ட புரவி வீரர் இருவரும் மீண்டும் புரவிகளின் பக்கவாட்டிலிருந்து வாட்களை உருவிச் சண்டையிட்டனர். மக்களைச் சுயநிலைக்குக் கொண்டு வரும் நோக்கத்துடன் நடந்த அந்தச் சண்டைக்குப் பிறகு மக்கள் அடங்கி விடவே செண்டுவெளி விழா மேலும் தொடர்ந்தது.

முதலில் வந்த இரு புரலிவீரர் சென்றதும் மீண்டும் இருயவனர்கள் வந்து புரவிகளை அந்த அர்த்த சந்திர அரங்கில் சுற்றிச் சுற்றி வரச்செய்து வெகுவேகத்துடன் வேல்களை மீன் இலக்கை நோக்கி எறிந்தனர். இருவேல்களும் மீன் இலக்கில் பதிந்துவிடவே இருவரும் புரவிகளைப் போட்டியிட்டுச் செலுத்தி வேல்கள் இரண்டையும் மீண்டும் உருவியெடுத்து பாண்டியர் ராஜ முத்திரையை நோக்கி வீசினர்: ஆனால் ஆடிக்கொண்டிருந்த ராஜமுத்திரையை அவை தொடாது போகவே மக்கள் பெரிதாக நகைத்தனர். யவனர்கள் சிரம் தாழ்த்திச் சென்றதும் மற்றுமிரு சேரவீரர் செண்டு எறியக் காலோட்டமாக வந்து வெகு வேகத்துடன் மீன் இலக்கத்தை நோக்கி செண்டுகளை எறிந்தனர். ஒரு செண்டு பதிந்தது. மற்றொரு செண்டு தவறியது. இப்படித் திரும்பத் திரும்பப் பல வீரர்கள் பங்கு கொண்ட செண்டுவெளி விழா நேரமாக ஆக, உச்சஸ்தாயியை எட்டிக் கொண்டிருந்தது.

செண்டு வீசி இலக்கம் தவறிய வீரர்கள் பலர் அந்தச் செண்டுகளை மீண்டும் எடுத்து ஒருவருடன் ஒருவர் போரிட்டனர். அதில் காயமுற்றவர்களைப் பலர் அப்புறப் படுத்தினர். அவ்வப்போது வீரர் குருதியால் அந்தச் செண்டு வெளி வீரபூமி நனைந்து கொண்டிருந்தாலும் முழுதும் இரண்டு இலக்கங்களையும் எந்த வீரனையும் அடிக்க வில்லையாதலால் மக்கள் ஆட்சேபக் கூச்சலிட்டார்கள். அதனால் சேரமன்னனே தனது ஆசனத்திலிருந்து எழுந்து மேடையிலிருந்து இறங்கி அதனருகில் அத்தனை விளையாட்டுக்கும் போருக்கும் அசையாமல் சிலையென நின்று கொண்டிருந்த வெண்புரவிமீது ஆரோகணித்தான். அவன் கை நீட்ட அவனிடம் அளிக்கப்பட்டது ஒரு பெரும் செண்டு.

மன்னனும் அந்த விழாவில் பங்கு கொள்ளப் போவதை அறிந்த மக்கள் களிவெறி கொண்டனர். வீரரவி செண்டாயுதத்தை ஏந்தி ஒருமுறை புரவியில் செண்டு வெளிக்குக் குறுக்கே சென்றான். அவன் திரும்பியபோது புரவி காற்றெனப் பாய்ந்தது. பாய்ந்தது புரவியா, செண்டா என்று மக்கள் உணருமுன்பு மன்னன் கையிலிருந்த செண்டு மீன் இலக்கத்தை ஊடுருவிச் சென்றுவிட்டது. அது சென்ற வேகத்தில் மீன் இலக்கத்திலிருந்த பனைநார்கள் நாற்புறமும் சிதறின. மக்கள் கூச்சல் எல்லை கடந்தது. அவர்களுக்கு மேலும் வெறியூட்ட வீரரவி மீண்டும் ஒரு செண்டை ஏந்தி மக்களை நோக்கிக் கூறினான்: “பாண்டியர் மீன் வீழ்ந்தது பாருங்கள். இதோ, அவர்கள் இலச்சினை அறுந்து விழும்!” அதைச் சொல்லிக்கொண்டே ஊஞ்சலாடிக் கொண்டிருந்த அந்த இலச்சினைமீது செண்டை வீசிவிட்டான். செண்டு குறி தவறாது அந்த இலச்சினையை அறுத்து விட்டதானாலும் அதே சமயத்தில் பெரும் அற்புதம் ஒன்று நேர்ந்தது. கூட்டத்தில் ஒரு மூலையிலிருந்து செண்டு வெளியில் பாய்ந்து விட்ட வீரன் ஒருவன் அந்த இலச்சினை பூமியில் விழுமுன்பு அதைத் தாங்கிப் பிடித்தான். பிறகு அதன் கயிறுகளை முடிந்து தனது தோளில் மாட்டிக்கொண்டான்.

கூட்டத்தில் சட்டென நிசப்தம் நிலவியது. பலர் மூச்சை இழுத்துப் பிடித்துக்கொண்டார்கள். பாண்டியர் இலச்சினையைத் தாங்குவது பெரும் துரோகம் என்று கருதிய மக்கள் அந்த வாலிபனைப் பரிதாபத்துடன் பார்த்தார்கள். அவன் முகத்தைப் போலவே புத்தியும் விகாரப்பட்டிருக்குமோ என்று பலர் நினைத்தார்கள். மேடையிலிருந்து அந்த நிகழ்ச்சியைக் கண்ட முத்துக் குமரியின் முகத்தில் பயத்தின் வியர்வை துளிர்த்தது. இந்திர பானுவின் அந்தத் துணிகரச் செயல் அவளைத் திக்பிரமை யடையச் செய்து விட்டது. மன்னன் அவனைத் தீர்த்துவிட வேறு அத்தாட்சி வேண்டியதில்லையென்று நினைத்தாள். தான் பாண்டியரைச் சேர்ந்தவன் என்று பறைசாற்ற அந்தத் துணிகரச் செயலைவிடச் சிறந்தது எதுவும் கிடையாதென்ற நினைப்பு அவள் புத்தியில் அக்னியை வாரித் தெளித்தது. மேடையின் ஒரு மூலையில் தன்னந்தனியே உட்கார்ந்திருந்த பரதப்பட்டனும் அதைக் கவனித்தாலும் அவன் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை . அவன் முகத்தில் அதிக உணர்ச்சி ஏதுமில்லை. சுவையற்ற ஒரு நாடகத்தைப் பார்ப்பவனைப் போன்ற வெறுப்புத் துலங்கிய முகத்துடன் உட்கார்ந்திருந்தான்.

ஆனால் மற்றவர்கள் வியக்க, பயமடைய, அடுத்து நிகழ்ச்சிகள் நடந்தன. வீரனைத் தொடர்ந்து பெரும் புரவி யொன்றும் செண்டுவெளிக்குள் ஓடிவந்தது. அந்த விகார முக வீரன் அதில் தாவி ஏறிக்கொண்டு, புரவி மீதிருந்த மன்னனுக்கு முன்வந்து “மன்னர் அனுமதித்தால் அடிய வனும் செண்டு வீசுவேன்,” என்று அடக்கத்துடன் கூறித் தலை வணங்கினான். அந்த வீரனிடம் மக்கள் பெருங் கோபத்தைக் காட்டினாலும் வீரரவியின் முகத்தில் கோபம் ஏதுமில்லை. மகிழ்ச்சிப் புன்முறுவலொன்று உதடுகளில் படர்ந்து முகம் பூராவும் பரவியது.

“செண்டு எறி” என்று கூறி அவனிடம் இரண்டு செண்டாயுதங்களைக் கொடுக்கக் காவலருக்கு உத்தர விட்டான். பிறகு மேடைக்குச் சென்று அமர்ந்தான்
.
வீரன் புரவியில் செண்டுவெளியை வெகுவேகமாகச் சுற்றினான் இருமுறை. திடீரெனத் திரும்பி ஒரு செண்டை வீசி மீன் இலக்கை அறுத்தான். அது கீழே விழு முன்பு அதைப் புரவியில் பாய்ந்து சென்று கையில் ஏந்தினான். அதைப் புரவியின் கழுத்தில் தனக்கெதிரில் வைத்துக் கொண்டான். இப்படித் தோளில் இலச்சினையும் மடியில் இலக்குமாக மீண்டும் புரவியில் சுற்றிய அந்த விகாரமுக வீரன் செண்டு வெளியில் ஒரு பக்கத்தில் தனிச் சுவரில் பொருத்தப்பட்டிருந்த சேரர் இலச்சினையை நோக்கிச் செண்டை வீசினான். செண்டு மிக வேகமாகச் சென்று அந்த உலோக இலச்சினையில் கிளாங்’ என்று தாக்கிக் கீழே விழுந்தது. பிறகு அந்த வாலிபன் புரவியில் கடுகி அரங்கின் கோடியில் சாத்தப்பட்டிருந்த செண்டுகளில் இரண்டைக் கையில் எடுத்துக்கொண்டான்.

அவன் செய்கை ஒவ்வொன்றும் மக்களுக்கு வெறி யூட்டவே, “கொல்லுங்கள் அவனை, கொல்லுங்கள் துரோகியை!” என்ற கூக்குரல்கள் எங்கும் எழுந்தன. அவனை நோக்கிச் சேரவீரர் இருவர் புரவிகளில் செண்டுகளை ஏந்தி வந்தனர். அந்த இரண்டு வீரர்களையும் அந்த வாலிபன் ஒரே சமயத்தில் எதிர்கொண்டான். வெகு வேகமாகப் பாய்ந்த அவன் புரவியாலும், சமயத்தில் அவன் செண்டைத் திருப்பிய சாமர்த்தியத்தாலும், இரு சேர வீரரும் புரவிகளிலிருந்து தரையில் உருண்டனர். அடுத்து வந்த இரு யவனர் கதியும் அவ்வாறே இருக்கவே, மக்கள் வெறி உச்சநிலை அடைந்தது. மக்களை மட்டும் மன்னன் வீரர்கள் கட்டுப்படுத்தாதிருந்தால் அவனை அவர்கள் கிழித்தெறிந்திருப்பார்கள். ஆனால் அவர்கள் உடைக்க முடியாதபடி அரங்கில் – வீரர் அணிவகுப்பு பலமாயிருந்தது.

அது எதையுமே லட்சியம் செய்யாத இந்திரபானு வெகு அலட்சியமாகவும் ஆணவத்தால் நிமிர்ந்த தலையுடனும் செண்டுவெளியை வலம் வந்தான். தன்னை எதிர்த்த நான்கு வீரர்கள் தரையில் உருண்டதும், அவனே கீழே இறங்கி அவர்களை அவர்கள் புரவிகளின் முதுகில் தூக்கிப் போட்டுப் புரவிகளை விரட்டினான். வெளியே பிறகு வெற்றிக் குறி முகத்தில் துலங்க வீரரவியிருந்த இடத்துக் கருகில் புரவி மீதமர்ந்தவாறே வந்தான். அவன் வந்து கொண்டிருந்தபோதே மன்னன் கண்கள் சேனாதிபதியை நோக்கின. சேனாதிபதியின் கண்கள் மேடையின் மூலைக்கு அப்பாலிருந்த உப்பரிகையின் முக்கூடலை நோக்கின. அவ்வளவுதான். விபரீத நிகழ்ச்சிகள் அடுத்த விநாடி வெகு துரிதத்துடன் தொடர்ந்தன. முத்துக்குமரி கூடல்வாயை நோக்கி வீறிட்டு மயக்கமுற்றுச் சாய்ந்து விட்டாள் உட்கார்ந்த இடத்திலேயே.

அந்த வீறலின் காரணத்தை அறியாத மக்கள் திடீ ரெனக் குழப்பமடைந்தபோது முக்கூடலில் ஒரு விபரீதம் நேரிட்டது. அங்கு செண்டு தாங்கி நின்ற ஒரு பிணம் கூடல் வாயிலில் உருண்டுவந்து செண்டுவெளியில் தொப்பென்று விழுந்தது. செண்டு வெளியில் அடுத்த விநாடி பெருங் குழப்பம் கூச்சல் எல்லாம் ஏற்பட்டன. வீரர் அணி எங்கும் உடைக்கப்பட்டு மக்கள் செண்டுவெளிக்குள் புகுந்து விட்டனர். மக்களை அடக்க ஊதப்பட்ட தாரைகள், ஒலிக்கப்பட்ட முரசுகள் அத்தனையும் அர்த்தமற்றதாயின. மக்கள் கிளப்பிய ஒலி விளைவித்த குழப்பம் மற்ற எல்லா ஒலிகளையும் அடக்கிவிடவே, மக்கள் சமுத்திரம் வெகுசீக்கிரம் உள்ளே நுழைந்துவிட்டது. அந்தச் சமுத்திர அலைகளை மன்னனின் யவன வீரர்கள் தேக்க முடியவில்லை. அத்தனையையும் பார்த்துக் கொண்டிருந்த பரத பட்டன் உதடுகள் இகழ்ச்சியால் மடிந்தன. “வினை விதைத்தவன் வினையறுப்பான்,” என்ற சொற்களும் அவன் உதடுகளிலிருந்து மெல்ல உதிர்ந்தன.

உட்புகுந்த மனித அலைகளைத் தேக்க நீண்டநேரம் பிடித்தது வீரர்களுக்கு. கடைசியாக செண்டுவெளியில் அமைதி துலங்கியபோது மன்னன் மேடையிலிருந்து இறங்கிச் சென்று மூலையில் குப்புறக் கிடந்த பிணத்தை வெறுப்புடன் பார்த்தான். தன் பாதக் குறட்டால் அந்த உடலைத் திருப்பித்தள்ளியும் பார்த்தான். அப் பிணத்தின் இதயத்திலிருந்து குருதி பெருமளவில் வந்துகொண்டி ருந்தது. அந்தக் குருதியின் ஒரு பகுதியால் மன்னன் பாதக் குறடு நனைந்தது! ஆனால் அவன் இதயம் மட்டும் நனையவில்லை . வீரரவியின் இதயத்தில் ஈரம் இம்மியளவும் இல்லை. கோபமே மண்டிக் கிடந்தது. “முட்டாள்!” என்ற சொல் அருவருப்புடன் அவன் வாயிலிருந்து உக்கிரத்துடன் உதிர்ந்தது.

Previous articleRaja Muthirai Part 2 Ch16 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Muthirai Part 2 Ch18 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here