Home Historical Novel Raja Muthirai Part 2 Ch18 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

Raja Muthirai Part 2 Ch18 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

55
0
Raja Muthirai Part 2 Ch18 Raja Muthirai Part 2 Sandilyan, Raja Muthirai Part 2 Online Free, Raja Muthirai Part 2PDF, Download Raja Muthirai Part 2 novel, Raja Muthirai Part 2 book, Raja Muthirai Part 2free, Raja Muthirai,Raja Muthirai Part 2 Story in tamil,Raja Muthirai Part 2 Story,Raja Muthirai Part 2 novel in tamil,Raja Muthirai Part 2 novel,Raja Muthirai Part 2 book,Raja Muthirai Part 2 book review,ராஜ முத்திரை ,ராஜ முத்திரை கதை,Raja Muthirai Part 2tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2full story,Raja Muthirai Part 2 novel full story,Raja Muthirai Part 2audiobook,Raja Muthirai Part 2audio book,Raja Muthirai Part 2full audiobook,Raja Muthirai Part 2full audio book,
Raja Muthirai Part 2 Ch18 | Raja Muthirai | TamilNovel.in

Raja Muthirai Part 2 Ch18 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

ராஜ முத்திரை இரண்டாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 18 மந்திரக்கோலின் மகிமை

Raja Muthirai Part 2 Ch18 | Raja Muthirai | TamilNovel.in

சேர வீரர்களாலும் யவனக் காவலராலும் மக்கள் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுச் செண்டு வெளியிற் சிறிது குழப்பமும் அடங்கிய பிறகு மேடையிலிருந்து குதித்து வந்து கூடல் வாயிலிலிருந்து மாண்டு விழுந்த மாபெரும் வீரன் உடலைத் தன் இடது காலால் உதைத்துப் புரட்டிய வீரரவியின் உள்ளம் பெரும் எரிமலையாயிருந்தபடியால், தனது பாதக்குறட்டில் நனைந்த ரத்தத்தைக்கூட அவன் சட்டை செய்யவில்லை. ‘முட்டாள்’, என்ற சொல்லை உதிர்த்த போதும் அவன் முகத்தில் பெரும் வெறுப்பே மண்டிக் கிடந்தது. மன்னன் மேடையிலிருந்து குதித்து மாண்டவனை நோக்கிச் செண்டு வெளிக்குக் குறுக்கே நடந்த போது அவனைத் தொடர்ந்து வந்த சேனாதிபதியும் மற்றும் சில அரண்மனைக் காவலரும் மன்னனுக்கு அக்கம் பக்கத்திலும் பின்னாலும் நின்று, அந்த விபரீதக் காட்சியை உற்றுப் பார்த்து ஏதும் புரியாமல் விழித்துக் கொண்டிருந்தனர். செண்டு வெளியில் புது வீரனொருவன் புகுந்து பாண்டியர் இலச்சினைகளுக்கு மரியாதையும், சேரர் இலச்சினைக்கு அவமரியாதையும் செய்ததால் கோபவெறி கொண்டிருந்த மக்கள் ஒரு விபரீத மரணமும் அன்று நேர்ந்து விட்டபடியால் பலவிதமாகப் பெருங் கூச்சலிட்டுக் காவலர் அரணை உடைக்க முயன்று கொண்டிருந்தார்கள். மன அலைகள் பல பெரிதாக எழுந்து மோதிக் கொண்டிருந்ததால் மனித அலைகள் எழுப்பிய கூச்சலும் அதனால் ஏற்பட்ட குழப்ப ஒலிகளும் வீரரவியின் காதுகளில் அறவே விழவில்லை . நீண்ட நேரம் தனது காலடியில் கிடந்த பிணத்தை ஊன்றிக் கவனித்த சேரமன்னன் சேனாதிபதியைத் திரும்பி நோக்கி, “இவன் எப்படி இறந்தான்?” என்று வினவினான்.

அன்று நடந்த நிலவரங்களால் பெரும் குழப்ப மடைந்த சேனாதிபதி, “யாராவது கொன்றிருக்க வேண்டும்” என்று பதில் கூறினான்.

உள்ளத்திலிருந்த அத்தனை கோபத்தையும் மீறி வீர ரவியின் இதழ்களில் புன்முறுவல் தோன்றியது. “இதை எப்படிக் கண்டுபிடித்தாய் சேனாதிபதி!” என்ற மன்னன் கேள்வியில் ஏளனம் இருந்தது.

“எதை மன்னவா?”

“இவனை யாராவது கொன்றிருக்க வேண்டு மென்பதை!”

“இவன் இறந்து விழுந்ததிலிருந்து…”

“இவன் தானாகச் செத்திருக்க முடியாதென்று நிர்ணயித்தாய்!” என்ற மன்னன் முகத்தில் எள்ளும் கொள்ளும் திடீரென வெடித்தன. “கொஞ்சம் அறிவை பயன்படுத்து. இவன் தானாகச் சாகவில்லையென்பதை அறிய சேனாதி பதியின் கூரிய மூளை தேவையில்லை. அது இங்கு கூடியுள்ள சாதாரண மக்களெல்லாருக்குமே தெரியும், இவன் இறந்த காரணத்தைக் கேட்கிறேன்,” என்று கடுங் கோபத்தினிடையே கேட்டான் வீரரவி.
சேனாதிபதிக்கு ஏதும் விளங்கவில்லை. “மன்னர் சொல்வது விளங்கவில்லை,” என்று பகிரங்கமாக ஒப்புக் கொண்டான்.

வீரரவியின் இதழ்களில் இகழ்ச்சி பெரிதும் மண்டிக்கிடந்தது. “உனக்கு அத்தனை விளங்கிவிட்டால் பாண்டியருடன் போராடப் போசளத்திலிருந்து சிங்கணன் வருவானேன்?” என்ற சேரமன்னன், “சரி, சரி! இவனை உற்றுப்பார்,” என்று பிணத்தை மீண்டும் பாதக் குறட்டால் உந்திக் காட்டினான்.

சேனாதிபதி பார்த்தான். ஏதும் விளங்காததால் ஏதோ சொல்ல வேண்டுமென்பதற்காக, “இதயத்திலிருந்து ரத்தம் அதிகமாக வந்து கொண்டிருக்கிறது” என்றான்.

“ரத்தம் வரக் காரணம்?” என்று வினவினான் வீரரவி.

அப்பொழுதுதான் சேனாதிபதிக்கு விஷயம் புரிந்தது. இறந்து கிடந்தவன் மார்பில் கத்தி ஏதும் தெரியவில்லை. அப்படியிருக்க அங்கு குருதி குபுகுபுவென்று எப்படிக் கிளம்பியது என்று புரியாததால் திருதிருவெனச் சில விநாடிகள் விழித்தான். பிறகு பிணத்திடம் சென்று உட்கார்ந்து அதன் மேலங்கியை உற்றுப் பார்த்தான். அப்பொழுதும் ஏதும் புரியாததால், தனது கத்தியை எடுத்து அதை அகற்ற முயன்றான். மேலங்கி மற்ற இடத்தில் சுழன்றாலும், இதயத்துக்கு எதிரே அகல மறுத்தது. அதைக் கண்ட சேனாதிபதி தனது கையை இதயத்துக்கு எதிரே கொண்டு போய் வைத்து அங்கியை நெருடினான். அவ்வளவுதான். அவன் முகத்தில் பெரும் பிரமிப்பு சூழ்ந்து கொண்டது. “மன்னவா! இதென்ன விசித்திரம்! இதென்ன விபரீதம்!” என்று கூவினான் பலமாக.

வீரரவியின் முகம் உணர்ச்சியற்றுக் கல்லாகிக் கிடந்தது. “என்ன விசித்திரம் சேனாதிபதி” என்று வினவினான் மன்னன் வறண்ட குறலில்.

“இவனைக் கொன்றிருப்பது மிகக் சிறிய, மிகக் கூர்மையான கத்தி” என்று வினவினான் சேனாதிபதி.

“எடு அதை,” மன்னன் கட்டளை வேகத்துடன் பிறந்தது.

அங்கியுடன் சேர்த்து மிகச் சிரமப்பட்டுக் கத்தியை பிடுங்கிய சேனாதிபதி எழுந்திருந்து மன்னனிடம் கத்தியைப் நீட்டினான். கத்தியை ஆராய்ந்த மன்னன் கண்களிலும் வியப்பு மிதமிஞ்சி விரிந்தது. கத்தி சுமார் இரண்டு பிடி நீளமே இருந்தது. மிக மெல்லியதாயும் இருந்தது. ஆனால் அதன் சிறிய பிடி சிறிது கனமாயிருந்ததையும், கத்தியின் இரு புறமும் மிகக் கூர்மையாயிருந்ததையும் விரல்களைக் கொண்டு தடவியறிந்த மன்னன், எந்த மனிதனின் உயிரையும் சாத்தப் படாமல் உறிஞ்ச அந்த கத்தியைவிடச் சிறந்த ஆயுதம் வேறெதுவுமில்லை யென்பதை உணர்ந்தான். தவிர அதைக் கொண்டு குறி தவறாது எய்ய மிகுந்த திறமை வேண்டுமென்பதையும் அறிந்து கொண்ட மன்னன் இரண்டொரு விநாடிகள் வியப்படைந்தாலும், அதை அதிகமாக வெளிக்குக் காட்டாமல் அந்தப் பிணத்திடமிருந்து திரும்பி செண்டு வெளியின் நடுவில் வந்து கடைசியாகப் போரிட்ட இந்திரபானுவை நோக்க முயன்றான்.

அடுத்த விநாடி அந்தச் செண்டு வெளியில் தூள் பறந்தது. இருந்த இடத்தில் இந்திரபானுவோ அவன் புரவியோ காணாது போகவே, “எங்கே அவன்? எங்கே அந்தத் துரோகி?” என்று இரைந்து கூவினான் மன்னன். அதுவரை இந்திரபானுவைப் பற்றிக் கவனிக்காத சேனாதிபதியும் காவலரும் திடீரென்று, “எங்கே அவன்? பிடியுங்கள் அவனை!” என்று கூக்குரலிட்டனர். “பிடி அவனை, பிடி அவனை!” என்ற கூச்சல் மக்களிடையேயும் எழுந்தன. தான் பாண்டியர் வீரனென்பதைப் பறை சாற்றிய வீரன், பிணம் விழுந்த போது ஏற்பட்ட குழப்பத்தில் செண்டு வெளிக்குள் மக்கள் புகுந்து விட்ட கும்பலில் மறைந்து நழுவியிருக்க வேண்டுமென்பதை உணர்ந்ததால் எங்கும் நானாவித சர்ச்சைகளும் கூச்சல்களும் கிளம்பின. இந்த இரண்டாவது குழப்பத்தின் விளைவாக மக்கள் மீண்டும் காவலர் அணியை உடைக்க முற்பட்டதால் மேற்கொண்டு செண்டுவெளிப் போராட்டத்தை நடத்த முற்படாத சேரமன்னன் கையை அசைக்க, முரசுகள் பலமாக முழங்கின. மக்களைக் கலைக்க முரசுகளைத் தொடர்ந்து கொம்புகளும் ஊதப்பட்டன. சேனாதிபதியும் இதர படைத் தலைவர்களும் மக்களைச் செல்லும்படி கைகளைப் பலமாக வீசினர். இத்தனைக்கும் மக்கள் அசையவில்லை. போக முயன்ற மக்களை, போக இஷ்டப்படாமல் நின்று வேடிக்கை பார்க்க இஷ்டப்பட்ட மக்கள் தடை செய்ததாலும், கும்பல் ஓர் ஒழுங்கில் அசையாமல் குறுக்கும் நெடுக்கும் அசைந்ததாலும் குழப்பம் முன்னை விட அதிகமாயிற்று. தவிர மக்கள் சீராகச் செல்வதற்கு உதவிய வீரர்களும், இடையிடையே விகாரமுக வீரனைத் தேட முயன்ற வீரர்களுமாகச் சேர்ந்து விளைவித்த இன்னல்களும் செண்டு வெளிப் பிரதேசத்தைச் சந்தை வெளியாக அடித்திருந்தது. நடந்து வந்த மக்கள் குறுக்கும் நெடுக்கும் நின்றதால் வாகனங்களில் வந்த பிரபுக்கள் போக முடியாததன் விளைவாக, பலவிடங்களிலும் ரதங்கள் தேங்கி நின்றும் மெள்ளச் செல்ல முயன்றும் பலவித இடையூறுகள் விளைந்து கொண்டிருந்தன. மக்களை அகற்றவும் ஒழுங்காகச் செல்லவும் ரதசாரதிகள் கிளப்பிய வேண்டுகோள்களும் இரைந்து கேட்டன. இடையிடையே புகுந்து கூட்டத்தைச் சரிசெய்து மக்கள் சாரிசாரியாகச் செல்ல முரசு கொட்டியும், புரவிகளைக் குறுக்கே விட்டும் ஒழுங்கு செய்ய முயன்று கொண்டிருந்த வீரர்கள் செயல்களும் பலவித ஓசைகளைக் கிளப்பிக் கொண்டிருந்தன.

இப்படியேற்பட்ட பெரும் கூச்சலையும் குழப்பத் தையும் மேடையின் ஒரு மூலையிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த பரதபட்டன் மட்டும் இருந்த இடத்தை விட்டு அசையவில்லை. இந்திரபானு மீது சதிச் செண்டெறிய நிற்க வைக்கப்பட்ட வீரனைக் கூடல் வாயில்மீது பார்த்ததால் வீறிட்டு மயக்கமுற்ற முத்துக் குமரியின் மீது, இருந்த இடத்திலிருந்தே கண்களை ஓட்டிய பரதப்பட்டன் அவளைச் சேடிகள் மூர்ச்சை தெளிவித்துப் பிடித்து அழைத்துக் கொண்டுபோன பிறகு சாந்திப் பெருமூச்சு விட்டான். வேறெதையும் லட்சியம் செய்யாமல் உட்கார்ந்திருந்த பரதபட்டன் கடைசியாக மன்னன் அரண்மனைக்குள் சென்றதும் தானும் கிளம்பி மற்றொரு வழியாக மெய்க் காவலர் இல்லத்தை அடையக் கிளம்பினான். அப்படிக் கிளம்பி அரண்மனையின் பக்க வழியொன்றில் புகுந்த பரதபட்டனைக் குறுக்கே மறித்த இரு வீரர்கள், “குருநாதரை மன்னர் பார்க்க விரும்புகிறார்,” என்று அறிவித்தனர்.

“என்ன விசேஷம்?” என்று வினவினான் பரதப்பட்டன் அவர்களை நோக்கி

“எங்களுக்குத் தெரியாது,” என்றான் வீரரில் ஒருவன்.

“நாளை பார்க்கிறேனென்று சொல்” என்று கூறிப் பரதப்பட்டன் நகர முயன்றான்.

வீரர்களை வழிமறித்து நின்றனர். “உங்களைக் கையுடன் அழைத்து வரும்படி உத்தரவு,” என்றான் இன்னொரு வீரன்.

பட்டன் அவர்களை நோக்கி இகழ்ச்சி நகை புரிந்து ரிட்டு, “சரி நடவுங்கள்,” என்று கூறி அவர்களைத் தொடர்ந்தான். பல கட்டுகளைத் தாண்டி மன்னனின் அந்தரங்க அறையை அடைந்ததும் வீரர்கள் வெளியே நின்றுவிடவே சேனாதிபதியால் எதிர்கொள்ளப் பட்ட பரதப்பட்டன் அலட்சியமாக மன்னன் அந்தரங்க அறையில் பிரவேசித்து அடிபட்ட புலிபோல் அந்த அறையில் சினந்து நடந்து கொண்டிருந்த மன்னனை ஏறெடுத்து நோக்கினான்.
பரதப்பட்டனைக் கண்டதும் வீரரவி அவன் உட்கார ஓர் ஆசனத்தைக் காட்டி, “குருநாதா அமரவேண்டும்,” என்று சொல்லித் தலையும் வணங்கினான்.

ஆனால் குருநாதன் அமரவில்லை. “என்னை அழைத்த காரணம் என்ன?” என்று கோபத்துடன் கேட்டான் பரதபட்டன்.

வீரரவியும் சளைக்கவில்லை, “இன்றைய நிகழ்ச்சி களைப் பற்றி விசாரிக்க அழைத்தேன்,” என்றான் குருநாதனுக்கு இணையான சீற்றத்தைக் குரலில் காட்டி.

என்னை விசாரிக்க உனக்கு அதிகாரம் கிடையாது மன்னா,” என்று உரைத்தான் பரதபட்டன்.

“அவசியம் அதிகாரத்தை அளிக்கிறது,” என்று சீறினான் மன்னன்.

“என்ன அவசியம்?”

“இன்று நேர்ந்த நிகழ்ச்சிகள் அளித்த அவசியம்.”

“விளங்கச் சொல்.”

“சொல்லுகிறேன் கேளுங்கள் குருநாதரே!” என்று துவங்கிய மன்னன், “செண்டு வெளியில் சேரநாடு இன்று அவமதிக்கப்பட்டது. என்னிடம் வேலைக்கு அமர்ந்த வீரனொருவன் பாண்டியர் இலச்சினையைத் தாங்கினான். சேரர் இலச்சினை மீது செண்டை எறிந்தான். இதைவிட இந்த நாட்டுக்கு வேறென்ன அவமானம் வேண்டும்!” என்று கேட்டான் கடுங்கோபத்துடன்.

“வேறெதும் வேண்டியதில்லை,” என்று ஒப்புக்கொண்டான் பரதப்பட்டன்.

“அப்படி இந்த நாட்டை அவமானப்படுத்தியதற்கு என்ன தண்டனை?” என்று வினவினான் அரசன்.

“மரண தண்டனை,” என்று விளக்கினான் ருருநாதன்.

“அதை அந்த வீரனுக்கு அளிக்கவேண்டும்,” என்றான் மன்னன்.

“அளிப்பதை யார் தடுத்தது?” என்று கேட்டான் பரதபட்டன்.

“அவன் நழுவி விட்டான்.”

“தப்பி விட்டனா?”

“ஆம்!”

“எப்படி?”

“கூடல்வாய்ப் பிணம் விழுந்த குழப்பத்தில், செண்டு வெளிக்குள் புகுந்துவிட்ட கூட்டத்தில்.”
“ஆம், ஆம். அப்பொழுது பெரும் குழப்பம்தான். அதிருக்கட்டும், கூடல்வாயிலிருந்து பிணம் எப்படி விழுந்தது?”

பரதபட்டனின் இந்தக் கேள்விக்கு மன்னன் நேரிடையாகப் பதில் சொல்லவில்லை. “அதைப் பிறகு சொல்லுகிறேன். முதலில் அந்தப் பாதகனைச் சிறை செய்ய வேண்டும்” என்ற மன்னன் சற்று நிதானித்து, “அதற்கு நீங்கள் உதவவேண்டும்,” என்று கேட்டான்.

“நான் எப்படி உதவ முடியும்” என்று பதிலுக்குக் கேட்டான் பரதபட்டன்.

“அவனிருக்குமிடம் தங்களுக்குத் தெரியும்!” என்ற மன்னன் பரதபட்டனை உற்று நோக்கினான்.

“ஆம்! தெரியும்” என்று ஒப்புக்கொண்டான் பரத பட்டன்.

இதைக் கேட்ட மன்னன் முகத்தில் வியப்பு மண்டியது. நாட்டுத் துரோகியிருக்குமிடம் தனக்கு தெரியுமென்று சாவதானமாகக் கூறும் பரதப்பட்டன் துணிவு அவனை அசர வைத்தது. இருப்பினும் அதை வெளிக்குக் காட்டிக்கொள்ளாமல் கேட்டான், “அவன் எங்கிருக் கிறான்,” என்று.

” என்னுடன்தான் தங்கியிருக்கிறான்,” என்றான் பரத பட்டன்.

“அது தெரியும் எனக்கு,” என்றான் மன்னன் கோபத்துடன்.
“பின் அங்கு தேட வேண்டியதுதானே?” என்றான் பரதபட்டன் இகழ்ச்சியுடன்.

மன்னன் முகத்தில் கோபம் மண்டியது. “குருநாதரே! என்னுடன் விளையாடுவது அபாயம்,” என்று கூவினான் வீரரவி சுயநிலை மறந்து.

”என்னைப் பகைத்துக்கொள்வதும் அபாயம்!” என்றான் பரதபட்டன்.

மன்னன் மிதமிஞ்சிய கோபத்தால் தன் இடையி லிருந்த வாளைத் தொட்டான். அதைக் கண்ட பரத பட்டன் முகத்தில் இகழ்ச்சி அதிகமாகப் படர்ந்தது. “மன்னா! உன் கத்தியைத் தொட்டு அச்சுறுத்த முயலாதே; உன் வாளைவிட இது அதிக வலு உள்ளது,” என்று தன் கையிலிருந்த மந்திரக்கோலைக் காட்டிய பரதப்பட்டன், “வேண்டுமானால் சோதித்துப் பார்,” என்று கூறி அவனிடம் மந்திரக்கோலை நீட்டவும் செய்தான்.

மன்னன் மந்திரக்கோலைக் கையில் வாங்கித் திருப்பித் திருப்பிப் பார்த்தும் ஏதும் விளங்கவில்லை! ஆகையால் குழப்பம் மிகுந்த விழிகளை பரதப்பட்டன் மீது திரும்பினான். “இதில் ஏதும் விளக்கவில்லை எனக்கு,” என்றான் இறுதியில்.

“ஆராய்ச்சிக் கண்ணுடன் பார்! விளங்கும்,” என்றான் பரதப்பட்டன்.

“என்ன விளங்கும்?” என்று வினவினான் மன்னன்.
“இன்றைய நிகழ்ச்சிகளுக்குக் காரணம் விளங்கும்.”

மந்திரக் கோலைப் பலமுறை திருப்பிப் பார்த்தும் ஏதும் விளங்காது மன்னன் விழிக்கவே, இப்படிக் கொடு,’ என்று மந்திரக் கோலைக் கையில் வாங்கிய பரதபட்டன் அதன் சக்தியை விளக்கினான். மந்திர தண்டத்தின் மகிமை விளங்கவே மன்னன் மதி பெரும் பிரமிப்பில் ஆழ்ந்தது. அடுத்தி விநாடி கோபமும் துடித்தெழுந்தது. “இந்தக் குருநாதனைச் சிறையில் அடையுங்கள்” என்று உத்தரவும் சீற்றத்துடன் பிறந்தது மன்னன் உதடுகளிலிருந்து. அடுத்த விநாடி வீரர் இருவருக்கிடையில் சிறைப்பட்டு நின்றான் பரதபட்டன்.

Previous articleRaja Muthirai Part 2 Ch17 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Muthirai Part 2 Ch19 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here