Home Historical Novel Raja Muthirai Part 2 Ch19 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

Raja Muthirai Part 2 Ch19 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

61
0
Raja Muthirai Part 2 Ch19 Raja Muthirai Part 2 Sandilyan, Raja Muthirai Part 2 Online Free, Raja Muthirai Part 2PDF, Download Raja Muthirai Part 2 novel, Raja Muthirai Part 2 book, Raja Muthirai Part 2free, Raja Muthirai,Raja Muthirai Part 2 Story in tamil,Raja Muthirai Part 2 Story,Raja Muthirai Part 2 novel in tamil,Raja Muthirai Part 2 novel,Raja Muthirai Part 2 book,Raja Muthirai Part 2 book review,ராஜ முத்திரை ,ராஜ முத்திரை கதை,Raja Muthirai Part 2tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2full story,Raja Muthirai Part 2 novel full story,Raja Muthirai Part 2audiobook,Raja Muthirai Part 2audio book,Raja Muthirai Part 2full audiobook,Raja Muthirai Part 2full audio book,
Raja Muthirai Part 2 Ch19 | Raja Muthirai | TamilNovel.in

Raja Muthirai Part 2 Ch19 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

ராஜ முத்திரை இரண்டாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 19 எழுத்தின் வலிமை

Raja Muthirai Part 2 Ch19 | Raja Muthirai | TamilNovel.in

மனிதனுக்கு மிதமிஞ்சிய துணிவு ஏற்படுவதற்கு பெரும் சாதனை, பெரும் பயம், பெரும் ஏமாற்றம் மூன்றுமே காரணமாகின்றன. பெரும் சாதனைக்காக வாழ்க்கையை அர்ப்பணிக்கும் வீரன் லட்சிய பூர்த்தி கண்ணுக்கெதிரில் தோன்றும்போது எதற்கும் துணிந்துவிடுகிறான். பெரும் பயம் சூழ்ந்து ஏதாவது செயலில் இறங்கினாலொழிய தான் பிழைக்க முடியாதென்ற நிலையில் கோழைகூடப் பெரும் துணிவு கொள்கிறான். எதிர்பார்த்த காரியங்கள் விபரீத நிலையில் திரும்பி, பெரும் ஏமாற்றம் உணர்ச்சிகளைத் தடுமாற வைக்கும் போதும் மனிதன் துணிவு அபரிமிதமாகிறது.

சேரநாட்டில் எவருமே தொடவோ நெருங்கவோ அஞ்சும் குருநாதனைச் சிறை செய்யும் அளவுக்கு வீரரவிக்குத் துணிவு பிறந்ததற்குப் பெரும் ஏமாற்றத்தால் ஏற்பட்ட மன உளைச்சலே காரணமென்பதைச் சொல்லவும் வேண்டுமா? தான் திட்டமிட்டு நடத்திய நாடகத்தின் முடிவு அத்தனை விபரீதமாக, தான் எதிர் பார்த்ததற்கு நேர் எதிராக, தனக்குப் பெரும் அவமானம் அளிக்கும் தன்மை வாய்ப்பதாக இருக்குமென்பதைச் சொப்பனத்தில் கூட நினைக்காததால், வீரரவியின் மனம் பெரும் தீக்கனியாக இருந்ததென்றால், பரதபட்டன் மந்திரக் கோலின் மகிமை அந்தத் தீக்கனியை விசிறிப் பெரும் ஜ்வாலையாக அடித்து விட்டது. அதிலும் பெரும் ஏமாற்றத்தை அடைந்துவிட்ட காரணத்தால் சேர மன்னன், நாட்டில் யாரும் அஞ்சும் செய்கையில், பரத பட்டனைச் சிறை செய்யும் செய்கையில் துணிவுடன் இறங்கினான்.

“இன்றைய நிகழ்ச்சிகளை இது விளக்கும்” என்று பரத பட்டன் மந்திரக் கோலை நீட்டிய போதோ, அதைக் கையில் வாங்கி உற்றுப் பார்த்து விழித்தபோது, “ஆராய்ச்சிக் கண்ணுடன் பார். தெரியும், என்று ஊக்கிய போதோ அந்த மந்திரக்கோலின் தந்திரத்தைச் சிறிதும் உணராத மன்னன், பரதப்பட்டனே அதை விளக்கிய பின்பு பெரும் சீற்றத்துக்கு உள்ளானான்.

தன் கண்களையே நம்பமுடியாத அத்தனை மர்மம் அந்த மந்திரக்கோலிலிருந்து விரிந்தது. மந்திரக்கோலை மன்னன் கையிலிருந்து வாங்கிய பரதபட்டன் அதை ஒரு விநாடி உற்றுப் பார்த்துவிட்டு மீண்டும் மன்னை நோக்கி, “மன்னா! இந்த மந்திரக்கோல் நமது காடுகளில் கிடைக்கும் உரமுள்ள பிரம்பால் செய்யப்பட்டது. இதன் பிடியின் மேற்பாகம் பிரம்புக்கு இயற்கையான அடிப்பாகம் போல் பழுப்புத் தட்டி உருண்டு காட்சியளிக்கிறது. ஆனால் அப்படித் தெரிவது பிரம்பின் அடிப்பாகமல்ல, இதோ பார் ” என்று கூறி விட்டுப் பிரம்பின் வழவழத்த தலையைத் தன் கட்டை விரலால் அழுத்தித் தூக்கினான்.

வழவழத்த பழுப்பு நிறமுள்ள அந்தத் தலை ஏதோ வெண்ணெயைப்போல் வெகு சுலபமாக நழுவி எழுந்தது. பிறகு இடது கையில் மந்திரக்கோலின் மத்தியைப் பிடித்துக் கொண்ட குருநாதன் வலது கையால் அந்தத் தலையை லேசாக எடுத்தான். அடுத்தபடி மந்திரக்கோலைத் திருப்பி லேசாக உலுக்கினான். மந்திரக் கோலிலிருந்து ஒன்றன் பின் ஒன்றாகத் தரையில் விழுந்த மூன்று கத்திகள் ‘கிளாங் கிளாங்’ என்ற ஒலிகளை எழுப்பின. அந்த ஒலிகள் மன்னன் அறையின் பெரும் சுவர்களில் எதிரொலிகளையும் பயங்கர மாகக் கிளப்பின.

மன்னன் விழிகள் மட்டுமின்றி, பக்கத்தில் நின்ற சேர நாட்டுச் சேனாதிபதியின் விழிகளும் மிதமிஞ்சிய பிரமிப்பால் மலர்ந்தன சில விநாடிகள் பெரும் மௌனம் மன்னனின் அந்தரங்க அறையில் நிலவியது. தரையில் விழுந்த கத்திகள் அன்றைய கதையைக் கூறின. கூடல் வாயிலிருந்து உருண்டு செண்டு வெளியில் பிணமாக விழுந்த வீரன் மார்பில் தைத்திருந்த கத்தியின் உடன் பிறவிகளே கீழே விழுந்த அந்தச் சிறு கத்திகளென்பதை சந்தேகமற மன்னனும் சேனாதிபதியும் உணரவே ஒருவரை யொருவர் பார்த்துக் கொள்ளவும் செய்தனர். சில விநாடிகள் இருவர் விழிகளும் கோபாக்கினியையும் கக்கின. ஆனால் அதைப் பற்றிச் சிறிதும் லட்சியம் செய்யாத பரதபட்டன் குனிந்து அந்தக் கத்திகளிலொன்றைக் கையிலெடுத்துக்கொண்டு, “மன்னா! அந்தத் திரைச் சிலைக்குப் பின்னால் யாராவது இருக்கிறார்களா?” என்று வினவினான்.

“இல்லை” என்றான் மன்னன் உக்கிரம் மிகுந்த குரலில்.

“இந்தக் கத்தி பார்ப்பதற்குச் சிறியது மன்னா! ஆனால் அம்பைவிட வேகமாகப் பறந்து செல்லக்கூடியது. இதன்பிடி அதற்காகவே சற்றுக் கனமாக வைக்கப்பட்டிருக் கிறது. இது எத்தனை சுலபமாக, எத்ததனை வேகமாகச் செல்கிறது பார்’ என்று கூறிக் கையிலிருந்த கத்தியை வீசினான் பரதப்பட்டன்.

கத்தி ஜிவ்வென்று பறந்து கோடியிலிருந்த திரைச் சிலையில் பாய்ந்து அதைக் கிழித்து, பிடி மட்டும் வெளியே தெரிய சிலையில் நான்கு விரற்கடை தூரம் கீழே இறங்கவும் செய்தது.

அந்தக் கத்தியின் கூர்மையையும் அதை எறிந்த பரத பட்டன் லாவகத்தையும் பார்த்த மன்னன் புத்தி பலவித உணர்ச்சிகளால் சுழன்று கொண்டிருந்தது. அந்த உணர்ச்சிகளை அதிகமாகக் கிளறிவிடச் சொன்னான் பரதபட்டன்: “மன்னா! இந்தக் கத்தியைக் கொலைக்கு உபயோகப் படுத்துவது இதுதான் முதல் தடவை ,” என்று.

அவ்வளவுதான். மன்னன் அதுவரை அடக்கி வைத்திருந்த உணர்ச்சிகள் காற்றில் பறந்தன. “இந்தக் குரு நாதனைப் பிடித்துச் சிறையில் அடையுங்கள்,’ என்று கூச்சலிட்டான் வீரரவி.

குருநாதன் மன்னை நோக்கி இகழ்ச்சி நகை புரிந்தான். “சேரமன்னா ! உன் துணிவு வியக்கத்தக்கது!”

சேரமன்னன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தன. “எனது துணிவு இருக்கட்டும், உமது துணி வைப்பற்றி என்ன நினைக்கிறீர்,” என்று வினவினான்.
“என் துணிவு உலகமறிந்தது.” என்றான் பரதபட்டன் இகழ்ச்சியைக் குரலில் சற்று அதிகமாகக் காட்டி.

“என் துணிவும் உலகமறிந்ததுதான்” என்றான் வீரரவி.

”சரியாக அறியவில்லை உலகம். நான் அறிய வைக்கிறேன்,” என்றான் பரதபட்டன்.

“என்ன அறிய வைப்பீர் குருநாதரே?”

“திருடர்களைவிட்டுப் பாண்டியன் மகளைத் திருடவும், செண்டு வெளியில் வீரனொருவனைக் கொல்ல ஒரு கொலைகாரனை உப்பரிகை முனையின் நிறுத்தி வைப்பதும் துணிவுக்கு அடையாளமல்லவென்பதை.”

“இரண்டுக்கும் நியாயமிருக்கிறது.”

“என்ன நியாயம்?”

“தனி நியாயம்”

“தனி நியாயமா? உனக்கு மட்டும் உலகில் இல்லாத நியாயமா?”

“அசாதாரண நீதிகளையும் தர்மங்களையும் சாத்திரம் விதித்திருக்கிறது. காதலுக்கும் போருக்கும் தனி நியாய முண்டு .”
மன்னனின் இந்தச் சொற்களைக் கேட்ட பரதப்பட்டன் மன்னனை நோக்கி மெல்ல நகைத்தான். “காதலுக்கும் போருக்கும் நியாயம் மற்ற நாடுகளில் இருக்கலாம். தமிழகத்தில் கிடையாது. பொதுப்படையான அறவழிக்குத் தான் தமிழர் சமுதாயம் இடமளிக்கிறது. தவிர, நீ இன்று செய்ய முற்பட்டது காதலிலும் சேராது. போரிலும் சேராது” என்றும் சுட்டிக்காட்டினான் பரதபட்டன் வெகு அலட்சியமாக.

“என்ன சொல்கிறீர் குருநாதரே?” சீற்றத்துடன் எழுந்தது மன்னன் கேள்வி.

“மன்னா! காதல் இருவழிபட்டது. முத்துக்குமரி உன்னை வெறுக்கிறாள். இஷ்டவிரோதமாக அவளைக் கொணர்ந்திருக்கிறாய். இன்று செண்டுவெளி உன்னிஷ்டப் படி நடந்திருந்தால், அவளை ராணியாக்கப் போவதாக மக்களுக்கு அறிவித்திருப்பாய்,” என்றான் பரதபட்டன்.

இதைக் கேட்டதும் மன்னனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. தான் முத்துக்குமரியிடம் கடற்கரை மாளிகையில் தனிப்படச் சொன்னதைக் குருநாதன் அறிந்தது எப்படி என்று வியந்தான். அந்த வியப்பைக் கண்ட குருநாதன் மேலும் சொன்னான்: “மன்னா! இதற்குப் பெரும் மந்திரமோ தந்திரமோ தேவையில்லை. ஊகமே போதும். மக்கள் பத்தினியை வழிபடும் இந்நாட்டில் முத்துக்குமரியை அடையவேண்டுமானால் நீ முறைப்படி அடைய முடியும். பாண்டியன் மனதை உடைக்க நீ எதையும் செய்ய முற்படுவாய் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. ‘அதற்கு நீ வித்து விதைக்க இன்றைய செண்டுவெளியைச் சாக்காக வைத்து இந்திர பானுவையும் அழித்து, சிங்கணன் வெற்றிச் செய்தியில் மக்கள் களிவெறி கொண்டுள்ள நிலையில் பாண்டியன் மகளை ராணியாக்குவதாக நீ கூறியிருந்தால் மக்கள் எதிர்த்திருக்க மாட்டார்கள். மகிழ்ச்சிக் கூச்சலிட்டிருப்பார்கள். ஆனால் உன் திட்டங்களை விதி உடைத்துவிட்டது”

பரதப்பட்டன் மேலும் ஏதோ சொல்லப் போனான். ஆனால் அவனை மன்னன் அடக்கி, “விதியல்ல தடுத்தது. துரோகியான நீர்தான் தடுத்தீர்,” என்று சீறினான்.

“இல்லை மன்னா! விதியின் கைதான் நான். அதர் மத்தை அடக்க ஆண்டவன் அவ்வப்பொழுது பல கருவிகளைக் கையாளுகிறான். அக்கருவிகளில் நான் ஒன்று ,” என்றான் பரதபட்டன்.

உமது செயலுக்கு ஆண்டவனை ஏன் இழுக்கிறீர்கள்?’ என்று இரைந்தான் மன்னன்.

“நான் அவனை இழுக்காத நாளில்லை. அவனறியாத செயல் எதையும் நான் செய்ததில்லை. நான் என்ன, யாருமே செய்ய முடியாது,” என்றான் பரதபட்டன்.

“குற்றத்தை மறைக்க வேதாந்தம் பேசுகிறீரா?”

“அது குற்றம் செய்பவர்கள் செய்யவேண்டிய காரியம்.”

“நீர் செய்தது சேரநாட்டுக்குத் துரோகம் அல்லவா?”

“அல்ல. அதற்கு இழுக்கு ஏற்படுத்த முயன்ற உன்னிடமிருந்து, காப்பாற்றினேன். பாண்டியன் மகளை நீ திருடி வந்தது அதர்மம். இந்திரபானுவைச் சதியால் கொல்ல முயன்றதும் அதர்மம். மக்கள் களிவெறியெனும் திரைமறைவில் முத்துக்குமரியை மணக்கத் திட்டமிட்டது அதர்மம். இந்த மூன்று அதர்மங்களிலிருந்து உன்னையும் சேரநாட்டையும் காத்த என்னைச் சிறைசெய்ய முற்படுவது பெரிய அதர்மம். இத்தனைக்கும் நீ பதில் சொல்ல வேண்டியிருக்கும்,” என்று சீறினான்.

“யாரிடம் பதில் சொல்ல வேண்டியிருக்கும்? ஆண்டவனிடமா?” என்று சீற்றத்துடன் வினவினான் மன்னன்.

“அது – பிறகு. இப்பொழுது மக்களுக்குப் பதில் சொல்ல வேண்டியிருக்கும். உன்னிடமிருந்து தப்பிய இந்திரபானுவுக்கும் நீ பதில் சொல்ல வேண்டியிருக்கும்,” என்று மன்னனை ஏறெடுத்து நோக்கிச் சொன்னான் பரதப்பட்டன்.

இதற்குப் பிறகு பரதபட்டன் பேச்சைத் தாங்கமுடி யாத வீரரவி சேனாதிபதியை நோக்கி, “குருநாதனை அரண் மனைச் சிறையில் அடைத்து வை. தண்டனையை நாளைக் காலையில் கூறுகிறேன்,” என்றான்.

“நடவுங்கள் குருநாதரே,” என்ற சேனாதிபதியின் உத்தரவைக் கேட்டதும் மன்னனை வெகு அலட்சியமாக நோக்கிவிட்டு வீரர்களுக்கு இடையில் நடந்தான் குருநாதன்.

மன்னனிருந்த உப்பரிகைக் கட்டுகள் பலவற்றைத் தாண்டி குருநாதனை வீரர்கள் அழைத்துச் சென்றனர். அப்பொழுதும் அரண்மனையை அடுத்த செண்டு வெளியில் மக்கள் கூச்சலும் குழப்பமும் இருந்து கொண்டிருந்தது. அந்தச் செண்டு வெளிப்பக்கம் வந்த சமயத்தில் குருநாதன் கைப்பிடிச் சுவரின் மூலம் எட்டிப் பார்த்தான். பிறகு தன் மடியிலிருந்து ஏதோ ஒரு பொருளை எடுத்துக் கூட்டத்தில் வெகு வேகமாக வீசினான்.

குருநாதனின் செய்கை கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து விட்டபடியால் வீரர்களால் அவனைத் தடுக்க முடிய வில்லை. பரதப்பட்டன் மீது கையை வைக்க அவர்கள் அஞ்சியபடியால் மேலே நடக்கும்படி பணிவுடன் கேட்டுக் கொண்டார்கள். பரதப்பட்டனும் அதற்குப் பின்பு எந்தத் தொந்தரவும் செய்யாமல் நடந்தான். அரண்மனையின் கட்டிடங்களிலொன்றிலிருந்த சிறையில் அடைக்கப்பட்ட பரதபட்டன் மிக நிம்மதியாகச் சிறையில் தரையில் உட்கார்ந்து கொண்டான். அறையில் குருநாதன் நுழைந்ததும் அதைப் பூட்டிய வீரர்கள் காவலரை எச்சரித்து நடந்தனர். அவர்கள் சென்றதும் தோளிலிருந்த சிறு துண்டால் தரையைத் தட்டிவிட்டுப் படுத்து நன்றாக காலை நீட்டிக் கொண்ட பரதப்பட்டன் முகத்தில் பெரும் சாந்தியிருந்தது.

அந்தச் சாந்தியில் அவன் உதடுகள் முணுமுணுத்தன. “என் சக்தியின் வலிமையை விட எழுத்தின் வலிமை அதிகம். எழுத்தின் வலிமை அளவிட முடியாதது. அதை மன்னன் நாளை புரிந்துகொள்வான். தெரியாமலா பீஜாட் சரங்களைக் கொண்டு முனிவர்கள் மந்திரங்களை வகுத்தார்கள்?” என்று.

இதற்குப் பிறகு பரதபட்டன் நிம்மதியாக உறங்கினான். ஆனால் சிறையின் தரையில் பரதப்பட்டன் அடைந்த நிம்மதி அரண்மனையில் பஞ்சணையில் படுத்திருந்தது மன்னன் அடையவில்லை. மனம் அவனைப் புரட்டிக்கொண்டிருந்தது. கவலை வாட்டிக் கொண் டிருந்தது. சுகம் தருவது பஞ்சணையல்ல என்பதை மன்னன் சந்தேகமறப் புரிந்து கொண்டான். ஆனால் அன்றிரவை விட மறுநாள் காலையில் அவனுக்குப் பெரும் தொல்லை காத்திருந்தது. எழுத்து அளித்த தொல்லை அது. பரதபட்டன் சிறையில் முணுமுணுத்த எழுத்தின் வலிமையை மன்னன் பூர்ணமாகப் புரிந்து கொண்டான். பெரும் இடி தலையில் இறங்கிவிட்ட நிலையில் வீரரவி தவித்தான் மறுநாள் காலையில்.

Previous articleRaja Muthirai Part 2 Ch18 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Muthirai Part 2 Ch20 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here