Home Historical Novel Raja Muthirai Part 2 Ch2 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

Raja Muthirai Part 2 Ch2 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

69
0
Raja Muthirai Part 2 Ch2 Raja Muthirai Part 2 Sandilyan, Raja Muthirai Part 2 Online Free, Raja Muthirai Part 2PDF, Download Raja Muthirai Part 2 novel, Raja Muthirai Part 2 book, Raja Muthirai Part 2free, Raja Muthirai,Raja Muthirai Part 2 Story in tamil,Raja Muthirai Part 2 Story,Raja Muthirai Part 2 novel in tamil,Raja Muthirai Part 2 novel,Raja Muthirai Part 2 book,Raja Muthirai Part 2 book review,ராஜ முத்திரை ,ராஜ முத்திரை கதை,Raja Muthirai Part 2tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2full story,Raja Muthirai Part 2 novel full story,Raja Muthirai Part 2audiobook,Raja Muthirai Part 2audio book,Raja Muthirai Part 2full audiobook,Raja Muthirai Part 2full audio book,
Raja Muthirai Part 2 Ch2 | Raja Muthirai | TamilNovel.in

Raja Muthirai Part 2 Ch2 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

ராஜ முத்திரை இரண்டாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 2 தம்பி, நீ யார்?

Raja Muthirai Part 2 Ch2 | Raja Muthirai | TamilNovel.in

கத்திக்குத்துடன் குருதி பெருகக் கணவன் குப்புற விழுந்ததைக் கண்ட மலைமகள் வீரிட்டு அலறியதால் ஏற் பட்ட ஒலி அந்த மலைப்பிராந்தியத்தைப் பயங்கரமாக ஊடுருவி ‘எதிரொலியும் செய்யவே அக்கம் பக்கத்திலிருந்த குடிசைவாசிகள் திடீரெனக் கண்விழித்துக் கொண்டதன்றி வாசல் தட்டிகளைத் திறந்துகொண்டு ஆணும் பெண்ணுமாகப் பலர் அவ்விடத்தை நோக்கி ஓடியும் வந்தனர். மற்றும் சிலர் அவசர அவசரமாகப் பந்தங்களைக் கொளுத்திக் கொண்டு வந்து வெளிச்சம் காட்டவும் முற்பட்டனர். அப்படி வந்தவர்களில் பல ஆடவர் வியப்புடனும் திகைப்புடனும் குருதி நிலத்தில் பாய விழுந்து கிடந்தவனைப் பார்த்ததன்றி, பெண்களிற் சிலர் பயத்தினால் அழத் தொடங்கியும் இன்னும் இருவர் கீழே விழுந்த மலைமகளைத் தூக்கி மடியில் கிடத்திக்கொண்டு முகத்தில் நீரடித்து விசிறவும் தொடங்கினர். மற்றக் குடிசையினர் கொண்டு வந்த பந்தங்களின் வெளிச்சத்தில் அண்ணனின் கத்திக்குத்தை மண்டியிட்டுப் பரிசோதித்த வாலிபன், சிறிது நேரம் சிந்தனையிலாழ்ந்துவிட்டுப் பிறகு திடீரென ஏதோ முடிவுக்கு வந்தவனாய் அங்கிருந்தவர் களை நோக்கி, “அண்ணனைக் குடிசைக்குள் கொண்டு போக இருவர் கை கொடுங்கள். இன்னுமிருவர் அண்ணன் புரவி எங்காவதிருக்கிறதா என்பதைப் பார்த்து, இருக்குமானால் அதைப் பிடித்து வந்து என்னிடம் ஒப்படையுங்கள்,” என்று விடுவிடுவென உத்தரவிட்டு அந்த உத்தரவில் ஒரு பகுதியை நிறைவேற்றுவான் பொருட்டுக்காயமடைந்தவனின் கைகளிரண்டுக்குள்ளும் தன் கைகளை விட்டு மெள்ள அவனைத் தூக்கவும் முற்பட்டான்.

மற்றுமிருவரும் அவனுக்குக் கைகொடுக்கவே மெள்ள ஆடாமல் அசையாமல் காயமடைந்தவனைக் குடிசைக்குள் கொண்டு போய்ப் படுக்க வைத்த வாலிபன், அதற்குமேல் அவனைக் கவனியாமல் வெளியே வந்து மலைமகளைத் தாங்கி மூர்ச்சை தெளிவித்துக் கொண்டிருந்த இரு பெண்களையும் பார்த்து, ” அண்ணியையும் உள்ளே அழைத்துச் சென்று படுக்க வையுங்கள். சத்தம் ஏதும் செய்ய வேண்டாமென்று அண்ணியை எச்சரித்துவிட்டு நீங்களும் உங்கள் குடிசைகளுக்குச் செல்லுங்கள்,” என்றான்.

அங்குக் கூடியிருந்த குடிசை வாசிகள் அனைவரும் அவன் உத்தரவுகளை மிகுந்த வியப்புடன் கேட்டதன்றி அவன் செய்யும் அத்தனை எச்சரிக்கைக்கும் காரணத்தை அறியாமல் திகைத்து, இருந்த இடத்தைவிட்டுச் சிறிதும் நகராமல் நின்றனர். அவர்கள் அப்படித் தன் சொல்லை அணுவளவும் லட்சியம் செய்யாமல் நிற்பதைக் கண்ட வாலிபன் சற்றுச் சினத்துடன் வினவினான், “ஏன், நான் சொல்வது உங்கள் காதில் விழவில்லையா?” என்று.

அந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல விருப்பமில்லாத அக்கூட்டத்தினர் அவனைச் சற்று எரிச்சலுடனும் வெறுப்புடனும் நோக்கினர். அவர்களில் வயோதிகனாயிருந்த ஒருவன் அந்த எரிச்சலுக்கும் வெறுப்புக்கும் சொல்லுருவம் தந்து, “காதில் விழுகிறது தம்பி! ஆனால் உன் அதிகாரத்துக்குக் காரணம்தான் புரியவில்லை எங்களுக்கு,” என்றான்.

அப்பொழுதுதான் வாலிபனுக்குப் புரிந்தது. அவர் களுக்குத் தான் புத்தம் புதியவனென்பது. அந்தக் குடிசைக் கூட்டத்துக்கு வந்து பதினைந்து நாட்களே ஆனவனும் ஊர் பேர் தெரியாதவனுமான தான் உத்தரவிடுவதைச் சேர நாட்டின் அந்தப் பழங்குடி மக்கள் விரும்பவில்லை என்பதை உணர்ந்து கொண்ட வாலிபன் அந்த வயோதிகனை நோக்கி “பெரியவரே! உங்களுக்கு உத்தரவிட நான் தகுதியுடையவனல்ல என்பதை உணருகிறேன். ஆனால் இருக்கும் நிலைமை சில விஷயங்களில் எச்சரிக்கையுடனிருக்கத் தூண்டுகிறது. உங்களுக்கெல்லாம் தலைவனான என் அண்ணன் பிழைக்க வேண்டுமானால் இந்தக் கூட்டம் உடனே கலையவேண்டும். குடிசைக்குள் அனைவரும் பதுங்க வேண்டும். இங்கு ஏதும் நடந்ததே தெரியாத சூழ்நிலையை ஏற்படுத்தவேண்டும்,” என்று கூறினான்.

அவன் குரலில் இருந்த உறுதியையும் அதிகாரத் தையும் கவனித்த கிழவன் சற்று முகம் சுளித்தான் கோபத்தால். “தம்பி! என்னைவிட நீ வயதில் மிகச் சிறியவன்?” என்று சுட்டியும் காட்டினான் கோபத்தைக் குரலிலும் காட்டி.

“ஆம் பெரியவரே” என்று வாலிபனின் குரலில் சற்று அலுப்பும் கோபமும் கலந்து தொனித்தது.

”அனுபவமும் குறைவு உனக்கு,” என்றான் வயோதிகன்.
“இருக்கலாம்…’ என்ற வாலிபன் சற்று நிதானித்து “சில விஷயங்களில்” என்று சொற்களையும் கூட்டினான்.

அந்தச் சொற்கூட்டலைக் கவனிக்க மறுத்த வயோதிகன் “கூத்தனிடம் உனக்குள்ள பரிச்சயத்தைவிட எங்களுக்கு அதிகம். அவன் நன்மையில் எங்களுக்கும் அக்கறை உண்டு,” என்றான்.

“அந்த அக்கறையைக் காட்டத்தான் சொல்கிறேன்,” என்ற வாலிபன் குரல் கடுமையாக ஒலித்தது.

“அந்த அக்கறையைக் காட்டவேண்டுமானால் இப்பொழுது கூத்தனின் காயத்தைக் கவனிக்க வேண்டும்,” என்ற வயோதிகனின் வார்த்தையை இடைமறித்த வாலிபன் “கவனித்துவிட்டேன்,” என்று கூறினான.

“கவனித்து என்ன செய்தாய்?” மீண்டும் எழுந்தது கிழவனின் குரல் மிகக் கடுமையாக.

“ஏதும் செய்யத் தற்சமயம் அவசியமில்லை” என்றான் வாலிபன்.

“ஏன்?” கூட்டத்திலிருந்து கிளம்பியது மற்றொருவன் குரல்.

அத்திசையில் கண்களைத் திரும்பிய வாலிபன் சொன்னான், “காயத்தால் ஆபத்தில்லை அண்ணனுக்கு இப்பொழுது,” என்று.

அந்தப் பதில் கூட்டத்தினிடை சிறிது சலசலப்பை உண்டாக்கியது. மற்றொருவன் கேட்டான். “நீ என்ன மருத்துவனா?” என்று.

“அதுவும் கொஞ்சம் தெரியும்” என்ற வாலிபன் அது வரை காட்டிய நிதானத்தை இழந்து கூட்டத்தை ஒரு முறை சுடும் கண்களால் நோக்கினான். “கூத்தன் உயிரோடு இருக்க வேண்டுமென்ற எண்ணம் உங்களுக்கு அணுவளவாவது இருந்தால் சீக்கிரமாகக் குடிசைக்குச் சென்று படுத்துக் கொள்ளுங்கள். எந்தச் சத்தமும் எந்தக் குடிசையிலிருந்தும் வரவேண்டாம். பந்தங்கள், விளக்குகள் அனைத்தையும் அணைத்துவிடுங்கள். கூத்தனுக்கு இப்பொழுது கத்திக் குத்தை விடப் பெரிய ஆபத்து இருக்கிறது. ஆகையால் செல்லுங்கள். இங்கு எது நடந்தாலும் எந்தக் கூச்சல் கேட்டாலும் குடிசைகளைவிட்டு வெளியே வராதீர்கள். மற்ற விஷயங்களை எனக்கு விட்டுவிடுங்கள்” என்று சுடு நோக்குடன் சுடுசொற்களையும் கொட்டிய அந்த வாலிபன், “உம், செல்லுங்கள், ஏன் நிற்கிறீர்கள்?” என்று சீறவும் செய்தான்.

வயோதிகனும் மற்றோரும் அந்த வாலிபனைச் சில வினாடிகள் உற்று நோக்கினர். பிறகு அந்த வாலிபனின் கூரிய பார்வையைச் சந்திக்கமுடியாத காரணத்தாலோ என்னவோ வயோதிகள் கண்களை நிலத்தில் தாழ்த்தினான். அப்படித் தரையைப் பார்த்தபடியே, “தம்பி! உன்னை நம்பிப் போகிறோம். ஆனால் கூத்தனுக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால் நீ இந்த மலைப்பகுதியில் அரை வினாடி இருக்க முடியாதென்பதை நினைவில் வைத்துக்கொள்” என்று கூறிவிட்டுத் தன் குடிசையை நோக்கி நடந்தான்.

தலைவன் நடந்ததும் மற்றவர்களும் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டும், வாலிபனின் எச்சரிக்கைக் காரணத்தை உணராததால் குழப்பத்துடன் முணு முணுத்துக் கொண்டும் தத்தம் குடிசைக்குச் சென்றனர். அவர்கள் திரும்பிச் செல்ல முயன்றதுமே வெகு துரிதத்தைக் காட்டிய வாலிபன் விடு விடு என்று குடிசைக்குள் ஓடினான். அங்கிருந்த இரு பெண்களின் உபசரணையில் மூர்ச்சை தெளிந்து தேம்பிக் கொண்டிருந்த மலைமகளைப் பார்த்து, “அண்ணி! அண்ணனுக்கு ஆபத்து ஏதுமில்லை. அழாதீர்கள்,” என்று தைரியம் சொல்லி மற்ற இருபெண்களையும் நோக்கி, “நீங்களும் உங்கள் குடிசைகளுக்குச் சென்று படுத்துக் கொள்ளுங்கள்,” என்று அவர்களையும் வெளியே அனுப்பினான்.

அவர்கள் சென்றதும் தரையில் மண்டியிட்டு, “அண்ணி! குடிசைக் கதவைச் சாத்துங்கள். அந்த விளக்கை எடுத்து இப்படிக் காட்டுங்கள்… கிழிசல் துணி இருந்தால் இரண்டு முழம் எடுங்கள்,” என்று கூறிக் கொண்டு கூத்தன் பக்கத்தில் உட்கார்ந்து முதுகுக் காயத்தை மீண்டும் பரி சோதித்தான். “நல்ல வேளையாகக் கத்தி இடப்பக்கத்திலோ வலப் பக்கத்திலோ பாயவில்லை. முதுகெலும்பை நோக்கி நட்ட நடுவில் பாய்ந்திருக்கிறது. தவிர சிறிது திரும்பிப் பாய்ந்திருப்பதால் எலும்பையும் அதிகமாகத் தொட வில்லை” என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்ட வாலிபன், மறுபடியும் எழுந்து அறை மூலைக்குச் சென்று ஒரு பையிலிருந்து ஏதோ மெழுகு ஒன்றைக் கொண்டு வந்து பக்கத்தில் வைத்துக் கொண்டான்.

அதற்குள் மலைமகளும் இரு புடவைக் கிழிசல்களையும் விளக்கையும் எடுத்துக் கொண்டு வரவே, அந்தக் கிழிசல்களைக் கையில் வைத்துக்கொண்ட வாலிபன், “அண்ணி! விளக்கை இப்படிக் காட்டுங்கள், காயத்தில் வெளிச்சம் விழும்படி,” என்றான்.

கண்ணீர் ஆறாகப் பெருக்கெடுக்க விளக்கேந்திய மலைமகளை, “அழ ஏதுமில்லை அண்ணி! என்னிடம் நம்பிக்கையில்லையா உங்களுக்கு? விளக்கை வேண்டுமானால் அந்த விளக்குத் தண்டில் வைத்துவிட்டு நீங்கள் வெளியே செல்லுங்கள். ஏதாவது அரவம் கேட்டால் மட்டும் என்னிடம் வந்து சொல்லுங்கள்” என்று அவளையும் வெளியில் அனுப்பிவிட்டுத் தண்டில் வைக்கப்பட்ட விளக்கு வெளிச்சத்தில் சிகிச்சையைத் தொடங்கினான். கூத்தன் அங்கியைக் கிழித்துக் கழற்றி, கத்தியை லேசாக எடுத்துப் பீறிட்டு வந்த ரத்தத்தை நிறுத்திக் காயத்துக்குள் கிழிசலின் முனையொன்றைத் திணித்தான். பிறகு மெழுகுக் குப்பிலிருந்து மெழுகைச் சிறிது எடுத்து மற்றொரு துணியைத் திரியாகத் திரித்து அதில் மெழுகைத் தடவி முந்திய கிழிசலைக் காயத்திலிருந்து வாங்கித் திரியை உள் நுழைந்து அழுத்திவிட்டு, சற்று நேரம் காயத்தை உற்று நோக்கினான். மெழுகுத்திரி நுழைந்ததும் குருதி நின்று விடவே கவலை தீர்ந்த முகத்துடன் மற்றொரு சீலையால் காயத்துக்குக் கட்டைப் போட்டுவிட்ட வாலிபன் ரத்தக் கறை படிந்த கிழிசல்களை மட்டுமின்றி, கூத்தன் அங்கியையும் குடிசை முலையிலிருந்த ஒரு பானைக்குள் திணித்து விட்டு “அண்ணி! அண்ணி!” என்று குரல் கொடுத்தான்.

உள்ளே வந்த மலைமகள் தனது கணவன் காயம் கட்டப் பட்டிருப்பதையும் குருதி நின்றுவிட்டதையும் கண்டு நன்றி ததும்பும் கண்களை அவ்வாலிபன்மீது ஓட்டினாள். “தம்பி! நீதான் தம்பி எங்களுக்குத் தெய்வம்,” என்றும் கூறிக் கண்ணீரைப் போல பொலவென உதிர்த்தாள்.

“அண்ணி! இப்பொழுது வேண்டியது கண்ணீரல்ல. வீட்டில் ஆட்டுப்பால் இருந்தால் அண்ணன் தலையை மட்டும் சற்றுப் புரட்டி ஒரு வாய் உள்ளுக்குக் கொடுங்கள். அண்ணன் கண் விழித்தால் பேசாதிருக்கும்படி சைகை செய்யுங்கள்,” என்று கூறிவிட்டு வெளியே சென்ற வாலிபன் குருதி பாய்ந்த கத்தியை நன்றாகத் துடைத்துத் தனது உள்ளங்கிக்குள் மறைத்துக் கொண்டான்.

பிறகு கூத்தன் விழுந்த இடத்தைப் பார்த்து அங்கிருந்த ரத்தக்கறை தெரியாதவண்ணம் தரையைத் தனது வாளின் பிடி கொண்டு தேய்த்து மண்ணுடன் மண்ணாக அது மறையக் கலைத்தான். அண்ணன் வந்த திசையை ரத்தச் சொட்டுகள் மூலம் கண்டு அவை கண்ட இடங்களை இருபது இருபத்தைந்து காலடி தூரம்வரை பாதக் குறட்டால் கலைத்துக்கொண்டே சென்றான். அடுத்தபடி மலையுச்சியில் நின்று கொண்டு மலைச் சரிவுகளைக் கவனித்தான். எந்தப் பகுதியிலும் யாரும் தெரியாததைக் கண்டு, “வீரர்கள் ஏன் இன்னும் வரவில்லை?” என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டான்.

சற்று நேரம் சுற்றுமுற்றும் கண்களை ஓட்டிய பிறகு குடிசையருகில் வந்ததும் கூத்தன் புரவியைக் கண்டுபிடித்த இருவர் அதனுடன் வரவே, அவர்களையும் குடிசைக்குச் சென்று படுத்துக்கொள்ளச் சொல்லி அந்தப் புரவியைப் பிடித்துக்கொண்டு குடிசையின் பின்புறம் கட்டினான்.

இந்த ஏற்பாடுகளைச் செய்து முடித்தபிறகு குடிசைக்குள் வந்த வாலிபனை, “தம்பி! உன் அண்ணன் கண்ணைத் திறந்து விட்டார். இதோ பார்!” என்று அழைத்தாள் மலைமகள்.

கூத்தன் கண்களை விழித்ததன்றி மெள்ளப் புன்முறு வலும் கூட்டினான். அத்துடன் சொன்னான், “எல்லாம் அண்ணி சொன்னாள். தம்பி,” என்று.

வாலிபன் தலையை அசைத்தான். பிறகு “அண்ணா ! நீங்கள் தப்பியது தெய்வாதீனம், வீசப்பட்ட கத்தி சரியாகப் பாயவில்லை,” என்று கூறவும் செய்தான்.

கூத்தன் பதில் சொல்லவில்லை, வாலிபனே மேற் கொண்டு சொன்னான், “அண்ணா! நீங்கள் இங்கிருக்கும் ஒவ்வொரு வினாடியும் உங்களுக்கு ஆபத்து,” என்று.

கூத்தன் முகத்தில் வியப்பு விரிந்தது. அதையும் நீ ஊகித்துக் கொண்டாயா தம்பி?” என்று வினவவும் செய்தான் வியப்புடன்.

“ஆம் அண்ணா ” என்ற வாலிபன் சற்று மௌனம் சாதித்தான். அவன் ஏதோ சொல்ல முயல்கிறான் என்பதை உணர்ந்த கூத்தன் கேட்டான், “என்ன தம்பி, சொல், ஏதோ யோசிக்கிறாயே?” என்று.

“அண்ணா! நீங்களும் அண்ணியும் உடனே புறப்பட வேண்டும்,” என்றான் வாலிபன், சிந்தனை ஆழ்ந்து கிடந்ததால் கவலை தோய்ந்த குரலில்.

“எங்கு தம்பி!” இம்முறை மலைமகள் கேட்டாள் கவலையுடன்.

“நான் சொல்லுமிடத்திற்கு” என்றான் வாலிபன்.

“இப்பொழுது இவரால் பயணம் செய்ய முடியுமா தம்பி?” என்று வினவினாள் மலைமகள்.

“முடியும் அண்ணி! அதற்கு நான் செய்கிறேன் ஏற் பாடு” என்ற வாலிபன் இரண்டு மூன்று துணிகளை எடுத்துக் கொண்டு வெளியே சென்று மீண்டும் திரும்பி உள்ளே வந்தான். பிறகு கூத்தனுக்குப் புது அங்கி அணி வித்து, “அண்ணி! கிளம்புங்கள். அண்ணனை ஒருபுறம் தாங்கிப் பிடியுங்கள்,” என்று கூறி மெள்ளக் கூத்தனைத் தூக்கி நிறுத்தினான்.

பிறகு மலைமகளும் அவனுமாகத் தாங்கிப் பிடித்து வர, மெள்ளக் குடிசைக்கு வெளியே வந்த கூத்தன் தனது தம்பியின் புரவி பயணத்துக்குத் தயாராயிருப்பதையும் அதன் முதுகுச் சேணத்தின் மீது துணிகள் மெத்தென்று போடப்பட்டிருப்பதையும் கண்டு, “முன்னேற்பாடு பலமாயிருக்கிறது தம்பி” என்று சிலாகிக்கவும் செய்தான்.

வாலிபன் பதில் சொல்லவில்லை . அவன் காதுகள் எதையோ உற்றுக் கேட்டுக் கொண்டிருந்தன. பிறகு அவன் அவசர அவசரமாகக் கூத்தனைக் குதிரைமீது ஏற்றி அவனுக்குப் பின்னால் மலைமகளையும் ஏற்றிவிட்டு, “அண்ணி! இது சாதிப்புரவி. அவசரமறிந்து, அவசியமறிந்து செல்லக் கூடியது. இதை ஏதும் செய்ய வேண்டாம். கடிவாளக் கயிறுகளை மட்டும் நீங்கள் பிடித்துக் கொள்ளுங்கள். இதுவே போகும்,” என்று தைரியமும் கூறினான்.

புரவியில் கணவனுடன் ஏறிக் கடிவாளக் கயிறுகளையும் பிடித்துக் கொண்டே மலைமகள், “எங்கு போகச் சொல்கிறாய் தம்பி?” என்று வினவினாள் மீண்டும்.

“வடக்கு நோக்கிச் செல்லுங்கள்” என்றான் வாலிபன்.

“வடக்கு நோக்கிச் சென்று……” என்று வினவிய மலை மகளைச் சற்று நிதானிக்கச் சொன்ன வாலிபன், தன் கச்சையிலிருந்த ஒரு பொருளை எடுத்து அவள் கையில் கொடுத்தான்.

இருட்டில் திடீரென எழுந்த மின்னொளியெனப் பிரகாசித்த அப்பொருளைக் கண்ட மலைமகள் வியப்பும் கலவரமும் ஒருங்கே அடைந்து, “தம்பி! நீ யார் தம்பி! எனக்கொன்றும் புரியவில்லையே?” என்று தட்டுத்தடுமாறி வார்த்தைகளை உதிர்த்தாள். அவள் கலவரத்தைக் கண்டு நகைப்பதுபோல் அவள் கரத்தில் ஒளிவிட்டது பாண்டிய நாட்டு ராஜமுத்திரை.

Previous articleRaja Muthirai Part 2 Ch1 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Muthirai Part 2 Ch3 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here