Home Historical Novel Raja Muthirai Part 2 Ch20 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

Raja Muthirai Part 2 Ch20 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

63
0
Raja Muthirai Part 2 Ch20 Raja Muthirai Part 2 Sandilyan, Raja Muthirai Part 2 Online Free, Raja Muthirai Part 2PDF, Download Raja Muthirai Part 2 novel, Raja Muthirai Part 2 book, Raja Muthirai Part 2free, Raja Muthirai,Raja Muthirai Part 2 Story in tamil,Raja Muthirai Part 2 Story,Raja Muthirai Part 2 novel in tamil,Raja Muthirai Part 2 novel,Raja Muthirai Part 2 book,Raja Muthirai Part 2 book review,ராஜ முத்திரை ,ராஜ முத்திரை கதை,Raja Muthirai Part 2tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2full story,Raja Muthirai Part 2 novel full story,Raja Muthirai Part 2audiobook,Raja Muthirai Part 2audio book,Raja Muthirai Part 2full audiobook,Raja Muthirai Part 2full audio book,
Raja Muthirai Part 2 Ch20 | Raja Muthirai | TamilNovel.in

Raja Muthirai Part 2 Ch20 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

ராஜ முத்திரை இரண்டாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 20 புது விபரீதம்

Raja Muthirai Part 2 Ch20 | Raja Muthirai | TamilNovel.in

மறுநாள் பொழுது புலருவதற்கு இரண்டு நாழிகைகளுக்கு முன்பே பஞ்சணையிலிருந்து எழுந்துவிட்ட வீரரவி உதயமார்த்தாண்டவர்மன் மெள்ள கடற்பக்கமிருந்த தனது அறைச் சாளரத்தின் மூலம் வெளியே எட்டிப் பார்த்தான். பரலி மாநகரின் கடற்புறம் அரண்மனையிலிருந்து நீண்டதூரமிருந்த போதிலும் அரண்மனை உப்பரி கையிருந்த மலைப்பகுதியின் காரணமாகக் கடலின் விளம்பிலிருந்த கட்டிடங்களும் அவற்றுக்கு அப்பாலிருந்த மணல் பரப்பும், அந்த மணல் பரப்பில் மோதிய சிற்றலைகளுங்கூட அவன் கண்ணுக்குத் தெரிந்தன. சாதாரண சமயமாயிருந்தால் மனத்துக்குப் பெரும் உற்சாகத்தை அளிக்கக் கூடிய அந்த இன்பக் காட்சி மன்னனிருந்த அன்றைய நிலையில் அவனுக்கு இன்பத்துக்கு பதில் துன்பத்தையே அளித்தது. கடல்வரை அசையாது உயரமாக நின்ற தனது தலைநகரின் கட்டிடங்களைக் கண்ட வீரரவி தன் முந்தைய நாள் திட்டம் அக்கட்டிடங்களைப் போல் திடமாயில்லாமல் தூரத்தே தெரிந்த சமுத்திர அலைகளைப் போல் உடைந்து விழுந்து விட்டதை எண்ணிப் பெருமூச்சு விட்டான். அவன் அறைக்கும் கடற்கரைக்கும் இடையேயிருந்த பல தோப்புகளிலிருந்து வந்த இன்பமான காலைக் காற்றும் அவனுக்கு ஆறுதலளிக்க மறுக்கவே அவன் துன்பப் பெருமூச்சொன்றை வெளியில் விட்டான்.

இரவு முழுவதும் அவனை அல்லல் படுத்திய எண்ணங்கள் அந்தக் காலை நேரத்திலும் அவனைத் தொடர்ந்து வாட்டிக் கொண்டிருக்கவே, அவன் கண்களின் பார்வை சற்று நேரத்திற்கொருமுறை அறுந்து அறுந்து தடைப்பட்டதால் இடையிடையே வெறித்த அர்த்தமற்ற பார்வை கண்களிலிருந்து வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. இந்திரபானு மிதமிஞ்சிய துணிவுடன் செண்டு வெளியில் சேரர் இலச்சினையை அவமதித்ததும், பிறகு கூட்டத்தின் குழப்பத்தில் தப்பிச் சென்றதும் அந்தக் காலை நேரத்தில் கூடப் பெரு விசித்திரமாய்த் தெரிந்தது அவன் புத்திக்கு. அத்துடன் சேர நாட்டு மக்களால் வணங்கப்படும் குரு நாதன் துரோகம் அவன் துன்பத்தை ஆழக் கிளறி விட்டிருந்ததால் வீரரவி எதையும் சகிக்கும் ஆற்றலை இழந்திருந்தான். குருநாதன் மட்டும் இடைபுகாமலிருந்திருந்தால் செண்டு வெளி அரங்கின் முடிவில் தனது பிரச்சினைகள் பலவற்றுக்கும் முடிவு கண்டிருக்க முடியுமென்று எண்ணிய சேர மன்னனுக்குப் பரதபட்டன் மீதிருந்த கோபம் எல்லை கடந்ததால், என்ன ஆனாலும் பரதபட்டனை லேசில் விடுவதில்லையென்று சபதம் செய்து கொண்டான் அவன். பரதபட்டன் துரோகத்தை மட்டும் சரியாகப் பறைச்சாற்றினால் மக்களுக்கு ருருநாதன் மீதிருந்த பிரமையைக் கூட உடைத்து விடமுடியும் என்று தீர்மானித்த வீரரவி அந்தத நினைப்பில் சிறிது மகிழ்ச்சியும் அடைந்தான். அவன் மகிழ்ச்சிக்குச் சுருதி கூட்டுவன போல் அரண்மனையின் உதயகால வாத்தியங்கள் ஒலித்தன.
சேரமன்னன் மனப்புண்ணுக்கு நரம்பு வாத்தியங் களின் மிருதுவான இசை பெரும் ஆறுதலை அளித்தது. பரம கலா ரசிகனான உதயமார்த்தாண்டவர்மன் அத்தனை மனப் புண்ணிலும் அந்த வாத்தியங்களின் இசையைக் காதில் வாங்கிக் கொண்டான். அந்த இசை ஓலிகளின் காரணமாகவோ என்னவோ அரண்மனை நந்தவனப் பறவைகளும் கூவ முற்பட்டதால் விளைந்த புது இன்ப நாதங்கள் கூட அரசனுக்குச் சற்று மனோரம்மியமாயிருந்தது. மெள்ள மெள்ளப் புலர்ந்த பொழுதும் அவன் கண்களுக்குக் குளுமையை அளித்தது. இந்த உதயத்திலாவது அறுந்த தனது திட்டங்கள் மீண்டும் கூடுவதற்கு வழி ஏதாவது ஏற்படாதா என்று சிந்தித்தான் மன்னன். அந்தச் சிந்தனையில் நம்பிக்கை அம்சங்கள் பல எழுந்து உலாவவும் தொடங்கின. கூட்டத்தின் குழப்பத்தில் தப்பிவிட்ட இந்திரபானு எப்படியும் நாட்டை விட்டுத்தாண்டி விட முடியாதென்றும், எப்படியும் காவலரால் கைப்பற்றப் படுவானென்றும், அப்படிக் காவலரிடமிருந்து தப்பினாலும் கொந்தளித்துக் கொண்டிருக்கும் சேர மக்களிடமிருந்து தப்ப முடியாதென்றும் எண்ணினான் மன்னன். செண்டு வெளியில் இந்திரபானு செய்த துரோகச் செயல் தலைநகரில் இரவே பரவியிருக்குமென்பதிலும் எந்த இடத்திலும் இந்திரபானுவுக்கு அபயம் கிடைக்காதென்பது திண்ணமென்றும் நம்பினான் வீரரவி. ‘அதுட்டுமல்ல, மக்களிடம் சிக்கிக் கொண்டால் அவர்களே அவனை அடித்துக் கொன்று விடுவார்கள். நாட்டை அவமதித்ததை மட்டும் சேரமக்கள் பொறுக்க மாட்டார்கள்’ என்று தனக்குள் சொல்லியும் கொண்டான் சேரர் புரவலன். இன்னொரு யுக்தியும் அவன் புத்தியில் தோன்றியது. இந்திரபானுவைப் போன்ற சேரத் துரோகிக்குக் குருநாதர் உதவியிருக்கிறார் என்ற விஷயத்தையும் மக்களுக்குத் தெரியப்படுத்தினால் மக்கள் அவர்மீதும் கொதித்தெழு வார்கள் என்று தீர்மானித்த வீரரவி அதற்கான ஏற்பாட்டைச் செய்யவும் முடிவு செய்தான்.

பாண்டியன் சேரநாட்டு மீது போர் தொடுத்திருக்கும் இந்தச் சமயத்தில் பாண்டிய நாட்டு உபதளபதியான இந்திரபானுவுடன் சேர்ந்து பரதபட்டன் நாட்டுக்குத் துரோகம் செய்தான் என்று பறையறைவித்துவிட்டால் மக்கள் கோப அலைகள் குருநாதரின் மீது திரும்பும்: அந்தக் கோப அலைகள் அடங்கு முன்பு முத்துக்குமரியையும் திருமணம் செய்து கொண்டு விட்டால் பாண்டியன் மனத்தையும் உடைத்து விடலாம்’ என்று எண்ணமிட்ட வீரரவி அதற்கான ஏற்பாடுகளைச் செய்துவிடவும் தீர்மானித்தான்.

இத்தகைய திட்டத்தில் ஓரளவு நிம்மதியடைந்த மனத்துடன் காலைக் கடன்களை முடிக்கப் பணிமக்களை அழைக்குமாறு அறைக் காவலருக்கு உத்தரவிட்டான். அவன் உத்தரவு பிறந்த சில விநாடிகளுக்குள் வந்த பணிமக்கள் நாலவர் மன்னனுக்குத் தலை வணங்கினர். அவர்களில் இருபெண்கள் நீராட்டத்துக்குச் சகலமும் தயாராயிருப்பதாக அறிவிக்கவே மன்னன் நீராட்ட அறையை நோக்கிச் சென்றான். மனத்தில் புதுத் திட்டமொன்று உருவாகியிருந்த காரணத்தால் நீராட்டத்தை வெகு சீக்கிரத்தில் முடித்துக்கொண்ட வீரரவி தனது அரசாங்க அறைக்கு வந்து முதலமைச்சரையும் சேனாதிபதியையும் அழைத்து வரக் காவலர் இருவரை ஏவினான். காவலர் விரைந்த இரண்டு நாழிகைகள் கழித்து அந்த அறைக்குள் நுழைந்த முதலமைச்சரும், சேனாதிபதியும் மன்னன் முகத்தில் ஓரளவு சாந்தி பரவியிருந்ததையும், பொற் கிண்ணத்தில் அவன் நிதான மாகப் பாலை அருந்திக்கொண்டிருந்ததையும் பாலைக் கொண்டுவந்து கொடுத்து விட்டுப் பாத்திரத்தை வாங்கிச் செல்ல, பக்கத்தில் நின்று கொண்டிருந்த பணிமகள் முகத்தில் புன்முறுவலிருந்ததையும் கண்டதால் சற்று நிதானத்துக்கு வந்து, “மன்னர் வாழ்க! சேரர் மாநிலம் வாழ்க!” என்று விருது கூறித் தலை வணங்கினார்கள்.

பொற்கிண்ணத்தில் பாலை உறிஞ்சிய வண்ணமே அந்த வணக்கத்தை ஏற்கும் முறையில் தலையசைத்த வீரரவி இரண்டு விநாடிகளுக்குப் பிறகு பாற்கிண்ணத்தைப் பணிமகளிடம் நீட்டினான். அதை ஒரு கையால் வாங்கிக் கொண்ட பணி மகள் மற்றொரு கையிலிருந்த பாத்திரத்திலிருந்து நீரை வார்க்கக் கைகளையும் வாயையும் லேசாகத் துடைத்துக் கொண்டான் மன்னன். பிறகு பணி மகளின் முழங்கையில் தொங்கிக் கொண்டிருந்த பட்டுச் சீலைத் துண்டால் கையையும் வாயையும் லேசாக ஒற்றிக் கொண்டு, “அமைச்சரே! நகரம் எப்படியிருக்கிறது?” என்று வினவினான்.

அமைச்சர் பெருமான் உடனடியாகப் பதில் சொல்ல வில்லை. பிறகு மெள்ளச் சொன்னார்: “சிறிது கலங்கித் தானிருக்கிறது,” என்று.

மன்னன் விழிகள் லேசாக அவர் முகத்தில் பதிந்தன ஒரு விநாடி. பிறகு உதடுகளிலிருந்து மெள்ளச் சொற்கள் உதிர்ந்தன. “நேற்றைய செண்டு வெளி யாரையும் கலக்க வல்லது,” என்று கூறினான் வீரரவி.

“ஆம்.” முதலமைச்சர், சேனாதிபதி இருவரும் ஏக காலத்தில் ஆமோதித்தனர்.

ஒன்றாக ஒலித்த அந்த இரட்டை ஆமை’ காதில் வாங்கிய மன்னன் உதடுகளில் புன்முறுவல் விரிந்தது. அத்துடன் சற்று மகிழ்வுடன் சொன்னான் மன்னன், “நேற்றைய சம்பவங்கள் நமக்குப் பெருமையளிக்க வல்லவை,” என்று.

மன்னன் சொற்களைக் கேட்ட முதலமைச்சர் முகத்தில் வியப்பு விரிந்ததென்றால், சேனாதிபதி பிரமை பிடித்து நின்றான். அவர்கள் உள்ளத்திலோடிய உணர்ச்சிகளைப் புரிந்து கொண்ட மன்னன், “நான் சொல்வது உங்களுக்கு வியப்பாயிருக்கலாம். ஆனால் அதுதான் உண்மை ,” என்று கூறினான்.

“எது மன்னவா? அந்தப் புதுமை வீரன் நம்மை அவமதித்ததா? அல்லது நமது வீரனொருவன் பிணமாய் விழுந்ததா?”

“இரண்டுமல்ல.”
“பிறகு எது?” இம்முறை சேனாதிபதி கேட்டான் குரலில் சற்று வெறுப்பைக் காட்டி.

“சேரநாட்டுப் பொது அமைப்பு, அதன் பண்பாடு,” என்றான் மன்னன்.

”விளக்கிச் சொல்லுங்கள்,” என்று கேட்டார் முதலமைச்சர்.

“செண்டுவெளி, வீரர்கள் போர்க்கூத்துக்குப் பொது விடம். அங்கு யாரும் நுழையலாம். யாரும் வீரத்தைக் காட்டலாம். ஆகையால் எதிரி வீரன் அதில் நுழைந்ததும் தவறாகாது,” என்ற மன்னன் சற்றுப் பேச்சை நிறுத்தினான்.

முதலமைச்சரும் சேனாதிபதியும் மௌனம் சாதித்தனர். மன்னனே மேற்கொண்டு விவரிக்கத் தொடங்கி, “செண்டு வெளியில் யார் பிரவேசிப்பதையும் பரலி மாநகர்ப் பொதுமகக்கள் தடை செய்வதில்லை. நமது செண்டுவெளியில், யவனர், அரேபியர், சோனகர் பலரும் பல முறைகள் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப் பலருக்கும் இடமளிக்கும் பரந்த நோக்கமுள்ள வர்கள் பரலி மக்கள். இந்த நோக்கம் சேரர் பண்பாட்டை விளக்குகிறது. ஆகையால் செண்டுவெளி விழாவில் நாம் எப்பொழுதும் பெருமை அடைகிறோம். நேற்று செண்டு வெளியில் நடந்த துரோகச் செயலைக்கூட மக்கள் ஓரளவு பொறுத்தார்கள் என்று சொல்ல வேண்டும். துரோகியை அவர்கள் கிழித்தெறியாது தப்பிச் செல்ல விட்டது கூட அவர்கள் பொறுமைக்கும், கட்டுப்பாட்டுக்கும் அத்தாட்சி,” என்று கூறினான்.
செண்டு வெளியில் ஏற்பட்ட குழப்பம் அதிகமில்லையென்பதையும் மக்கள் அடியோடு கட்டுப்பாடுகளை மீறியிருந்தால் நடந்திருக்கக்கூடிய அனர்த்தமும் நாசமும் அதிகமென்பதையும் உணர்ந்து கொண்ட முதலமைச்சர் அரசன் மக்களைப் பாராட்டுவதை ஆமோதித்தார். “மக்களிடம் மன்னன் வைத்திருக்கும் அன்பும் நம்பிக்கையும் பாராட்டத்தக்கது,” என்று வாய்விட்டும் சொன்னார்.

“மக்களுக்கும் தங்களிடம் அந்த பக்தியும், அன்பும் உண்டு,” என்று சேனாதிபதியும், முதலமைச்சருடன் ஒத்துப் பாடினான்.

பிறகுதான் வீரரவி மெள்ள தன் திட்டத்தை அவிழ்த்தான். “இருப்பினும் அமைச்சரே! தர்மம் நீதி இரண்டையும் நிலை நிறுத்துவது அரசன் கடமையல்லவா?” என்று வினவினான் மெள்ள.

“ஆம் மன்னவா! அதில் சந்தேகமென்ன?” என்றார் முதலமைச்சர்.

“துரோகம் விளைவிப்பது யாராயிருந்தாலும் தண்டிக்க வேண்டியதுதானே?” என்று கேட்டான் மன்னன்.

“ஆமாம். அதிலும் சந்தேகமில்லை ” என்றார் முதலமைச்சர்.

“குருநாதர் அதற்கு விலக்காக முடியுமா?” மெல்ல கேள்வி எழுந்தது அடுத்தபடி அரசனிடமிருந்து. கபடமான பார்வையொன்றும் அவன் முகத்தில் உதயமாயிற்று.

இதைக் கேட்ட முதலமைச்சர் மெல்ல இருந்த இடத்தில் அசைந்தார். “நியாயப்படி பார்த்தால் குருநாதரும் துரோகச் செயலிலிருந்து தப்பமுடியாது,” என்று சங்கடத் துடன் இழுத்தார் சொற்களை.

“நியாயம் வழங்குவது எனது கடமையென்று சற்று முன்புதானே ஒப்புக் கொண்டீர்?”

“ஒப்புக்கொண்டேன். இருப்பினும்….”

“இருப்பினும் என்ன?”

“குருநாதரிடம் மக்கள் பெருமதிப்பு வைத்திருக் கிறார்கள்.”

“அதனால் அவர் குற்றங்களைப் புரிய முடியுமா?

“தர்ம நியாயப்படி முடியாது.”

“வேறு என்ன நியாயமிருக்கிறது அவர் தப்புவதற்கு?”

“நியாயம் என்பது எதுவும் இல்லை. ஆனால் மக்கள் குருநாதர் தவறு செய்யமாட்டார் என்று நம்புகிறார்கள்.”

“தவறு செய்ததை நாம் நிருபித்தால்?”

“நிரூபிப்பது கஷ்டம்.”

“ஏன்?”

“குருநாதர் கூரிய அறிவு படைத்தவர். விஷயத்தை எப்படியாவது நம்மீது திருப்பினால் நமக்கு ஆபத்து.” என்ற முதலமைச்சர் குரலில் லேசாகப் பயமும் ஒலித்தது.

மன்னன் அவரைக் கூர்ந்து நோக்கிவிட்டுக் கூறினான். “முதலமைச்சரே! மக்கள் என்ன நினைக் கிறார்கள் என்பதை வைத்து நாம் நீதி செலுத்த முடியாது. நீதி சொல்வதைச் செய்வதுதான் நமது கடமை. அந்தக் கடமையைச் செய்வதில் உயிரிழந்தாலும் பாதகமில்லை.” என்று.

“அது நடக்கலாம்,” என்றார் முதலமைச்சர்.

“எது? கடமையைச் செலுத்துவதுதானே?” என்று வினவினான் மன்னன்.

“இல்லை. உயிரிழப்பது,” என்று விஷமமாகப் பதில் சொன்னார் முதலமைச்சர்.

மன்னன் முகத்தில் கோபம் மெள்ளத் துளிர்ந்தது. “ஏன் குருநாதரைத் தண்டித்தால் மக்கள் என்னைக் கொன்று விடுவார்களா?” என்று வினவினான் மன்னன்.

“தங்களிடம் வரமாட்டார்கள்?”

“ஏன்?”
“தங்கள் பெயரால் நீதி செலுத்துபவர்களை விசாரித்து விடுவார்கள்.”

மன்னன் கோபம் தலைக்குமேல் ஏறியது. “நீதி செலுத்த அஞ்சுகிறீரா முதலமைச்சரே!” என்று சீறிய மன்னன், “குருநாதரின் துரோகச் செயலை மக்களுக்கு பறையறிவித்துக் கூறும். அவரைப் பொது மண்டபத்திலே நாமே விசாரித்துவிடுவோம். அவர் எந்தக் கத்திமூலம் சேர நாட்டு வீரனொருவன் உயிரை உறிஞ்சினார் என்பதை மக்களுக்குக் காட்டுவோம். மக்களை வளைப்பது நமது கையிலிருக்கிறது,” என்றான் மன்னன்.

அவன் மேலும் ஏதோ சொல்லப் போன சமயத்தில் அவசரமாக உள்ளே நுழைந்த காவலன் உபசேனாதிபதி யொருவர் உடனடியாக முதலமைச்சரைப் பார்க்க விரும்பு வதாகத் தெரிவித்தான். “உள்ளே வரச்சொல்” என்று மன்னன் ஆணையிட சற்று நேரத்திற்குள் உள்ளே நுழைந்த உபசேனாதிபதி அங்கிருந்த மூவருக்கும் தலைவணங்கி, கச்சையிலிருந்தது ஓர் ஓலையை எடுத்து முதலமைச்சரிடம் கொடுத்தான். அதைப் பிரித்து வாசித்த முதலமைச்சர் முகத்தில் விவரிக்க இயலாத உணர்ச்சிகள் விரிந்தன. “போதாக் குறைக்கு இது வேறா?” என்ற சொற்கள் அவர் உதடுகளிலிருந்து உதிர்ந்தன. “இந்தப் புது விபரீதத்தைப் பாருங்கள்,” என்று மன்னனிடம் அந்த ஓலையை நீட்டினார் முதலமைச்சர்.

Previous articleRaja Muthirai Part 2 Ch19 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Muthirai Part 2 Ch21 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here