Home Historical Novel Raja Muthirai Part 2 Ch21 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

Raja Muthirai Part 2 Ch21 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

88
0
Raja Muthirai Part 2 Ch21 Raja Muthirai Part 2 Sandilyan, Raja Muthirai Part 2 Online Free, Raja Muthirai Part 2PDF, Download Raja Muthirai Part 2 novel, Raja Muthirai Part 2 book, Raja Muthirai Part 2free, Raja Muthirai,Raja Muthirai Part 2 Story in tamil,Raja Muthirai Part 2 Story,Raja Muthirai Part 2 novel in tamil,Raja Muthirai Part 2 novel,Raja Muthirai Part 2 book,Raja Muthirai Part 2 book review,ராஜ முத்திரை ,ராஜ முத்திரை கதை,Raja Muthirai Part 2tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2full story,Raja Muthirai Part 2 novel full story,Raja Muthirai Part 2audiobook,Raja Muthirai Part 2audio book,Raja Muthirai Part 2full audiobook,Raja Muthirai Part 2full audio book,
Raja Muthirai Part 2 Ch21 | Raja Muthirai | TamilNovel.in

Raja Muthirai Part 2 Ch21 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

ராஜ முத்திரை இரண்டாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 21 பட்டன் இட்ட தீ

Raja Muthirai Part 2 Ch21 | Raja Muthirai | TamilNovel.in

முதலமைச்சர் நீட்டிய ஓனையைக் கையில் வாங்கி அதன்மீது கண்களை ஓட்டிய மன்னன் முகத்தில் விபரீதச் சாயை ஒன்று வெகு வேகமாகப் படர்ந்தது. ஓலையைப் படித்து முடித்து அதைக் கொண்டு வந்த உபசேனாதி பதியை நோக்கிய மன்னன் கண்களில் கோபக்கனல் மிதமிஞ்சி வீசிக்கொண்டிருந்தது. “இதை யார் கொண்டு வந்தது?” என்ற சொற்களும் நெருப்புத் துண்டங்கள் போல் உதிர்ந்தன, வீரரவியின் உதடுகளிலிருந்து.

“யாரும் கொண்டுவரத் தேவையில்லை மன்னவா! நகரத்தில் பல பேரிடம் இது இன்று காலை காணப்பட்டது,” என்று உபசேனாதிபதி மிகுந்த பயத்துடன் மன்னனுக்குப் பதில் கூறினான்.

அடுத்து மன்னன் பதில் பேசாமல் மீண்டும் ஒருமுறை ஓலையின் மீது கண்களை ஓட்டினான். “சேர மன்னன் அதர்மங்கள் அத்துமீறுகின்றன. மக்கள் விழித்துக் கொள்ளட்டும். இல்லையேல் சேரநாடு அழிந்துவிடும் – பரதப்பட்டன்” என்ற வரிகள் மன்னன் கண்களை எரித்தன. இந்த ஓலையை யார் படித்தாலும் இது மாதிரி பத்து ஓலைகள் எழுதி மற்றவருக்குக் கொடுங்கள்,’ என்ற அடிக்குறிப்பு மன்னனுக்கு இணையில்லா ஆவேசத்தை அளித்தது. அந்த ஆவேசத்துடன் முதலமைச்சரை நோக்கிக் கேட்டான் மன்னன், “இந்த ஓலையைக் குருநாதர் எப்பொழுது எழுதியிருப்பார்? எப்பொழுது பரப்பியிருப்பார்? யார் மூலம் அனுப்பியிருப்பார்?” என்று.

இந்தக் கேள்வி எதற்கும் பதில் கூற இயலாத முதலமைச்சர் கவலை தோய்ந்த முகத்துடன் மன்னனை நோக்கி, “மன்னா! குருநாதரின் திறமை நீங்கள் அறியாத தல்ல. அவர் காரியத்தை எப்படிச் செய்கிறார். எப்பொழுது செய்கிறார். என்பதைத் திட்டமாகக் கண்டுபிடிப்பது கஷ்டம்” என்று கூறினார்.

“குருநாதர் திறமையைப் பாராட்ட இங்கு நாம் கூட வில்லை,” என்று மன்னன் இரைந்தான்.

“இல்லை. அவரைத் தண்டிக்கக் கூடினோம், விசாரிக்க எண்ணமிட்டோம். அவர் நம்மைத் தண்டித்து விட்டார். விசாரணை நடக்க இயலாத வழியையும் வகுத்து விட்டார்,” என்றார் முதலமைச்சர் துன்பம் தாண்டவ மாடிய குரலில்.

“விசாரிப்பதை யார் தடுக்க முடியும்? குருநாதரை நான் தண்டிப்பதைத்தான் யார் தடுக்க முடியும்?” என்று கேட்டான் மன்னன் சீற்றம் குரலில் முற்றிலும் ஒலிக்க.

இந்த சமயத்தில் சேனாதிபதி குறிக்கிட்டுச் சொன்னான் “யார் என்பதைவிட எது என்று கேட்பது பொருந்தும்” என்று.

எது? சொல்லுங்கள் படைத்தலைவரே?’ என்று வினவினான் மன்னன்.
படைத்தலைவன் சற்றுத் தயங்கினான். “பட்டன் இட்ட தீ!” என்ற சொற்கள் அவன் வாயிலிருந்து தயக்கத் துடன் உதிர்ந்தன.

“பட்டன் இட்ட தீயா!” என்ற மன்னன் குரலில் இகழ்ச்சி தொனித்தது.

அடுத்துப் பேச முற்பட்ட சேனாதிபதியைத் தனது கையை அசைத்துத் தடுத்த முதலமைச்சர் தானே பதில் கூறினார் மன்னனுக்கு. “மன்னவா! உரிய காலத்தில் இதமான யோசனை கூறுவது எனது கடமை. ஆகையால் தங்களுக்குப் பிரியமில்லாததைச் சொல்லுகிறேன். கேளுங்கள்” என்று துவங்கி துணிவுடன் தமது யோசனை யைச் சொன்னார்.

“இந்த ஓலையைக் குருநாதர் எப்பொழுது எழுதினார் என்பது நமக்குத் தெரியாது. ஆனால் அவர் சிறைப்பட்ட பின்னர் எழுதியிருக்க முடியாது. அப்படி எழுதியிருந்தாலும் நேற்றிரவுக்குள் அதை வெளியிலனுப்பி மக்களிடை பரப்பியிருக்க முடியாது. ஆகவே பின்னால் ஏற்படக் கூடிய விளைவுகளை முன்னதாகவே எதிர் பார்த்து, இந்த ஓலையுடன் தயாராக குருநாதர் செண்டு வெளிக்கு வந்திருக்கவேண்டும். செண்டுவெளி முடிவுக்கும் அவர் சிறையிலடைக்கப் பட்டதற்கும் இடையே அவர் இந்த ஓலையை யாரிடமோ கொடுத்திருக்கவேண்டும். இந்த ஓலையை அல்ல அல்ல – இந்தத் தீயை மக்களிடை அனுப்பியிருக்கிறார் குருநாதர். அவர் இட்ட தீ மூண்டு விடும் என்பதைச் சந்தேகமற அறிந்தே இந்த ஓலையை மக்களிடை அனுப்பியிருக்கிறார். தீ மூண்டு விட்டதற்கு, இத்தனை அதிகாலையில் இது அரண்மனைக்கு வந்திருப்பதே தகுந்த சான்று. ஆகையால் மன்னவா! குருநாதரை விடுதலை செய்துவிடுங்கள், பெருத்த விபரீதத்திலிருந்து நாம் மீள அதுதான் வழி!” என்றார் முதலமைச்சர் உறுதியுடன்.

முதலமைச்சர் பேசப் பேச மன்னன் தனது உணர்ச்சிகளை ஒரு கட்டுக்குள் கொண்டு வந்து விட்டான். அவனுடைய இயற்கையான ஆனால் பயங்கரமான புன் முறுவல் அவன் உதடுகளில் மீண்டும் தவழ்ந்தது. மிகமிருது வான குரலில் கேட்டான் வீரரவி, “முதலமைச்சரே! உமது கடமையை நீர் செலுத்திவிட்டீர் அல்லவா?” என்று.

“செலுத்திவிட்டேன் மன்னவா,” என்றார் முதலமைச்சர் மன்னனின் திடீர் சாந்தத்துக்குக் காரணத்தை அறியாமல்.

“எனக்கும் கடமை உண்டல்லவா?” என்று வினவினான் வீரரவி அதே சாந்தமான குரலில்.

“உண்டு மன்னவா,” என்று ஆமோதித்தார் முதலமைச்சர்.

“இந்த நாட்டு மக்களைக் காப்பது என் கடமை யல்லவா?”

“ஆம்.”

“அந்தக் கடமையைச் செலுத்த அவசியமான எதையும் செய்வதும் என் கடமை.”

“ஆம்.”

“நாட்டுப் பாதுகாப்புக்கு இடைஞ்சலாக நிற்கும் எதையும், யாரையும் களையெடுப்பதும் காவலன் கடமை.”

“சந்தேகமில்லை. ஆனால்….”

“கடமையைச் செலுத்துவதில் ‘ஆனா’லுக்கு இடமில்லை அமைச்சரே. அதன் விளைவுகளைச் சந்திப்பதிலும் அர்த்தமில்லை. இந்நாட்டு மக்கள் நலன், அவர்கள் உயிருடன், செழிப்புடன் வாழ வேண்டியதற்கு வகை செய்யும் பொறுப்பு, அவர்களுக்குத் தீங்கு செய்யும் யாவரையும் அழிக்க வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. அந்தக் கடமைகளை, பொறுப்புகளை நிறைவேற்றுவதைத் தடுக்க யார் முயன்றாலும், யார் தீ வைத்தாலும், பிரளயத்தையே கிளப்பினாலும் அஞ்சுவது அறமல்ல அரசனுக்கு. அதைக் கண்டு அலறுவதோ, புலம்புவதோ, பின்னடைவதோ, பலமல்ல புரவலனுக்கு. ஆகவே, இந்த பட்டன் இட்ட தீயைக் கண்டு நான் அஞ்சப் போவதில்லை. அவனைச் சிறையிலிருந்து விடுவிக்கப் போவதுமில்லை,” என்று விடுவிடு என்று முதலமைச்சரை நோக்கிப் பேசிய மன்னன் பின்பு சேனாதிபதியை நோக்கி “சேனாதிபதி! குருநாதனை அரண்மனையைவிட்டு அகற்ற வேண்டாம், இந்தச் சிறையிலேயே அவன் கிடக்கட்டும்,” என்று உத்தரவிட்டபின், சற்று நிதானித்துவிட்டு, “பாண்டியன் மகள் விழித்து விட்டாளா?” என்றும் வினவினான்.

“நேற்று இரவு அரண்மனை மருத்துவர் பார்த்த போதும் செண்டு வெளியில் அடைந்த மயக்கம் தீரவில்லை பாண்டியன் மகளுக்கு. மருத்துவர் ஏதோ மருந்து கொடுத்து விட்டுப் போனார். ‘இரவு உறங்கட்டும், காலையில் விழித்துக் கொள்வார் இளவரசி’ என்றும் சொல்லிச் சென்றார். இன்று காலையில் விழித்திருக்க வேண்டும்,” என்றான் சேனாதிபதி.

“அவளை மீண்டும் கடற்கரை மாளிகைக்கு அனுப்ப வேண்டாம். இங்கேயே காவலில் இருக்கட்டும். அவளை யாரும் நெருங்கக் கூடாதென்று திட்டம் செய்யுங்கள்,” என்று சேனாதிபதிக்கு மேலும் உத்தரவிட்ட வீரரவி, “என்ன முதலமைச்சரே! வேறு ஏதாவது நீர் எனது இதத்தை முன்னிட்டு யோசனை சொல்ல வேண்டியது பாக்கியிருக்கிறதா?” என்று வினவினான் முதலமைச்சரை நோக்கித் திரும்பி.

முதலமைச்சர் சிறிதும் அச்சமின்றி மன்னனை ஏறெடுத்து நோக்கினார். “மன்னர் பெருமானே! அபாய மான துறையில் இறங்குகிறீர்கள். கடலின் அலைகளை எதிர்க்கலாம். சுழலை எதிர்க்க முடியாது. அரசியல் கடலிலும் அலைகளும் உண்டு சுழல்களும் உண்டு. இப்பொழுது உங்கள் முன் காணப்படுவது சீறிவரும் அலையல்ல, உங்களை அழுத்த முயலும் சுழல். அதில் அகப்பட்டுக் கொள்ள வேண்டாம். குருநாதன் பெரிய சுழல், பெரிய புயல். அவரை விட்டு விடுவது அனைத் துக்கும் நல்லது. தவிர நாட்டு வாயிலில் மாற்றான் நிற்கும் போது மக்களின் மதிப்புக்கு உரியவர்களை விரோதித்துக் கொள்வது மக்களையே விரோதித்துக் கொள்வதாகும். மக்கள் விரோதத்துடன் மாற்றானை வெற்றி கொண்ட மன்னன் எவரும் வரலாற்றில் கிடையாது,” என்று கூறிவிட்டுத் தலை வணங்கி வெளியே சென்றார்.

தான் அனுமதிக்கும்வரை காத்திராது வெளியே சென்று விட்ட முதலமைச்சர் சென்ற வழியை நோக்கிக் கொண்டிருந்த மன்னன் அவர் அறை வாயிற்படியைத் தாண்டியதும் சேனாதிபதியை நோக்கினான். சேனாதி பதியின் முகத்தில் விவரிக்க இயலாத உணர்ச்சிகள் பரவிக் கிடந்தன. படைத் தலைவன் உள்ளத்திலிருந்த சஞ்சலத்தை முகத்தோரணையிலிருந்தே ஊகித்துக் கொண்ட மன்னன் கேட்டான், “என்ன சேனாதிபதி! நீங்கள் ஏதாவது யோசனை சொல்ல வேண்டியது பாக்கியிருக்கிறதா?” என்று.

“இந்த விவகாரங்களில் நான் யோசனை சொல்லத் தகுதியற்றவன்,” என்றான் சேனாதிபதி.

“ஏன் உமது தகுதிக்கு என்ன குறைச்சல்?” என்று மன்னன் வினவினான் விஷமத்துடன்.

“நான் ராஜதந்திரியல்ல, படைவீரன்,” என்று கூறினான் சேனாதிபதி.

“அதனால்?”

“ராஜதந்திர சம்பந்தமான விஷயத்தில் நான் யோசனை சொல்வது சரியல்ல.”

“வேறு எதில் யோசனை சொல்லுவீர்?”

“படைகளை நடத்துவது, அணிவகுப்பது, நகரப் பாதுகாப்பை வலுப்படுத்துவது ஆகிய விஷயங்களில் நான் யோசனை சொல்ல முடியும்.”

“நகரத்தில் ஒழுங்கு குலைந்தால்?”

“அதைப் படைகளைப் பிரித்து நிறுத்திச் சமாளிப்பேன்.”

“இவை அனைத்தையுமே செய்ய வேண்டிய சமயம் வந்து விட்டது சேனாதிபதி,” என்று கூறினான் மன்னன் சர்வ நிதானமாக.

“இவை அனைத்தையுமா?” என்று வினவினான் சேனாதிபதி வியப்புடன்.

“ஆம் சேனாதிபதி! பரதபட்டன் இட்ட தீ பரவினால் தலை நகரில் ஒழுங்கு குலையும். ஆகவே அதைப் பரவாது தடுக்க முயலவேண்டும். அப்படிப் பரவினால் மக்களைக் கட்டுப்பாட்டில் நிறுத்த முயலவேண்டும். அதற்குத் தகுந்தபடி தலைநகரப் படையை வகுத்துவிடும். இன்று முதல் படைகள் பாசறையில் இல்லாது நகரத் தெருக்களில் உலாவட்டும். நகரத்தின் முக்கிய இடங்களில் குதிரைப் படையின் பகுதிகள் காவல் நிற்கட்டும். ரதங்கள் நகரக் கோட்டை முகப்பில் வளைய வரட்டும். இத்தகைய ஓலையை யாராவது பத்துப்பேர் கூடி நின்று படித்தால் அவர்களில் ஒருவனைப் பிடித்துச் சிறையில் அடையுங்கள். பரதப்பட்டனுக்குத் தரப்படும் ஆதரவு ராஜத் துரோக குற்றமாகும் என்பது வலியுறுத்தப்படட்டும்,” என்றான்.

“அப்படிப் பறையறைவித்து விடட்டுமா?” என்று வினவினான் சேனாதிபதி.

மன்னன் இதழ்களில் இகழ்ச்சி நகை அரும்பியது. “அது தீயை அணைக்காது, சேனாதிபதி, தீயைக்கிளறும் பரதபட்டன் எத்தனை லாகவமாகத் தீயை வைத்திருக்கிறானோ அத்தனை லாகவமாக அதை நாம் அணைக்க வேண்டும். எதிரிகள் நடமாட்டம் எல்லையில் அதிகமிருப்பதாகவும் மக்கள் எச்சரிக்கையாயிருக்க வேண்டுமென்றும் பறையறைவித்துவிடுங்கள். படை நடமாட்டம் எதிரிகளைக் குறித்ததாக மேலுக்கும், பட்டனை எதிர்ப்பதாக உள்ளேயும் இருக்கட்டும். பரத பட்டனைப் பற்றிய விஷயத்தைப் படைவீரர்கள் மக்கள் காதில் விழும்படி வாய் வார்த்தையாகப் பேசிக் கொண்டால் போதும்” என்றான் மன்னன். மன்னன் ஏற் பாட்டின் முழு ஆழம் சேனாதிபதிக்கு விளங்காது போகவே மன்னன் மேற்கொண்டு சொன்னான்: “மக்கள் மனக்கிளர்ச்சி ஒரு விஷயத்தில் லயித்திருக்கும் போதே அதை வேறுவிஷயத்தில் திருப்பி விட்டால் முதல் விஷயம் அடியோடு மறைந்துவிடும். எதிரியின் நடவடிக்கை மும்முரமாகிறதென்றால் பரதபட்டன் ஓலை செண்டுவெளி நிகழ்ச்சிகள் இவை அனைத்தும் மக்கள் மனத்திலிருந்து அகன்றுவிடும். போர் முரசு ஆங்காங்கு அடிக்கப்படும் போது பேராபத்து தலைநகரத்திற்கு ஏற்பட்டிருக்கிறதென்ற நிலையில் மக்கள் குருநாதனை மறந்து விடுவார்கள். இப்படி மக்கள் உணர்ச்சிகளுக்குப் பக்க வாய்க்கால் வெட்டுவதி லிருக்கிறது நமது வெற்றி.”

மன்னனின் திட்டத்தைக் கேட்ட சேனாதிபதி பல விநாடிகள் வியப்பின் வசப்பட்டு நின்றான். மன்னன் மனோதத்துவத்தை அறிந்திருக்கும் முறையும், அவன் மனத்தின் ஆழமும், அந்த ஆழத்திலிருந்து கிளம்பிய இணையிலா தந்திரமும் பிரமிப்பை அளித்தது படைத் தலைவனுக்கு. மன்னன் தன் திட்டத்தை விவரிக்கும் வரையில் குருநாதரின் கூரிய அறிவை நினைத்து அஞ்சிய அவன், “உண்மையில் யார் அறிவு கூர்மையானது? அரசன் அறிவா, குருநாதர் அறிவா?’ என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டான்.

ஆனால் வீரன் என்ற முறையில் விளைவைப் பற்றி எண்ணுவதை விட்டு மன்னனை நோக்கி, “சரி மன்னவா! தங்கள் ஆணையை நிறைவேற்றுகிறேன். இன்று மாலைக்குள் பரலி மாநகர் முழுப் போர்க்கோலம் கொள்ளும். மக்கள் கூடிக் கூடி நிற்பது அபாயம் என்பதும் வலியுறுத்தப்படும். எதிரி நமது தலைவாயிலில் நின்றால் நிலை என்னவோ அந்த நிலைக்கு பரலி மாநகர் இன்று மாலை வந்து விடும்,” என்று கூறித் தலை வணங்கினான்.

அத்துடன் சேனாதிபதியைப் போகவிட்ட மன்னன் தீவிர சிந்தனையில் இறங்கினான். ‘பரதபட்டன் இட்ட தீயை அணைத்துவிட ஏற்பாடு செய்து விட்டேன். ஆனால் தீ அணையுமா!’ என்று சற்று சந்தேகத்துடன் தன்னைக் கேட்டுக் கொண்டான். பரதப்பட்டன் இட்ட தீ அன்று மாலைக்குள் ஓரளவுக்கு அடங்கவே செய்தது. ஆனால் வேறொரு திசையில் மற்றொரு தீ பிடித்துக் கொண்டிருந்தது. அது புயல் வேகத்தில் சேரன் தலைநகரை நோக்கி நகரவும் ஆரம்பித்தது.

Previous articleRaja Muthirai Part 2 Ch20 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Muthirai Part 2 Ch22 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here