Home Historical Novel Raja Muthirai Part 2 Ch22 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

Raja Muthirai Part 2 Ch22 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

60
0
Raja Muthirai Part 2 Ch22 Raja Muthirai Part 2 Sandilyan, Raja Muthirai Part 2 Online Free, Raja Muthirai Part 2PDF, Download Raja Muthirai Part 2 novel, Raja Muthirai Part 2 book, Raja Muthirai Part 2free, Raja Muthirai,Raja Muthirai Part 2 Story in tamil,Raja Muthirai Part 2 Story,Raja Muthirai Part 2 novel in tamil,Raja Muthirai Part 2 novel,Raja Muthirai Part 2 book,Raja Muthirai Part 2 book review,ராஜ முத்திரை ,ராஜ முத்திரை கதை,Raja Muthirai Part 2tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2full story,Raja Muthirai Part 2 novel full story,Raja Muthirai Part 2audiobook,Raja Muthirai Part 2audio book,Raja Muthirai Part 2full audiobook,Raja Muthirai Part 2full audio book,
Raja Muthirai Part 2 Ch22 | Raja Muthirai | TamilNovel.in

Raja Muthirai Part 2 Ch22 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

ராஜ முத்திரை இரண்டாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 22 தர்மத்தின் சக்தி

Raja Muthirai Part 2 Ch22 | Raja Muthirai | TamilNovel.in

மக்கள் மனோதத்துவத்தை உள்ளபடி உணர்ந்து மன்னன் துரிதமாக எடுத்த நடவடிக்கைகள், பட்டன் இட்ட தீ பரலிமாநகரில் அதிகமாகப் பிடித்துப் பரவி விடாமல் ஓரளவு தடுக்கவே செய்தன. பட்டன் முன் யோசனையுடன் செய்த முயற்சி மன்னன் சூழ்ச்சியால் சற்றுத் தோல்வியடைந்தது என்று சொல்வது கூடமிகை யாகாது.

செண்டு வெளி விழாவை நடத்த மன்னன் தீர்மானித்து விட்டான் என்பதைக் கேட்டதிலிருந்தே மன்னன் எண்ணத்தைப் புரிந்து கொண்ட பரதபட்டன், தனது ஒவ்வொரு நடவடிக்கையும் எப்படியிருக்க வேண்டுமென்பதை தீர்மானித்துக் கொண்டான். வீரனான இந்திரபானுவை ஒழித்து விட மன்னன் செண்டுவெளியில் ஏற்பாடு செய்வானென்பதைத் திட்டமாக அறிந்து கொண்ட பரதபட்டன், அந்த ஏற்பாட்டின் விளைவாக மன்னன் தன்னைச் சிறைசெய்யும் பட்சத்தில் எடுக்க வேண்டிய எதிர் நடவடிக்கையையும் நிர்ணயித்துக் கொண்டான். ஆகவே, செண்டுவெளிக்கு வந்த போது மந்திரக்கோலை அவன் எடுத்துக்கொண்டதன்றி ஓர் ஓலை நறுக்கையும் எடுத்து மக்களுக்கு அதில் ஒரு செய்தியையும் பொறித்து மடியில் செருகிக் கொண்டான். அந்த ஓலை பரலிமாநகரில் யார் கையில் கிடைத்தாலும் அது விளைவிக்கக் கூடிய பரபரப்பு எத்தன்மையதாயிருக்கும் என்பதை உணர்ந்திருந்த பரதப்பட்டன், மன்னன் தன்னைச் சிறைசெய்த பின்பு அந்த ஓலையை உபயோகிக்கத் தீர்மானித்துவிட்டான். ஆகையால் தான் செண்டுவெளி வழியாக வந்தபோது மாளிகை உப்பரிகைகளில் கைப்பிடியில் சற்று எட்டிப் பார்த்து ஓலையைப் பலமாக வீசினான். அவன் வீசிய. சமயத்தில் செண்டு வெளிக்கூட்டம் ஓரளவு கலைந்திருந்தாலும் மக்கள் பூராவும் வெளியேறாத காரணத்தால், சட்டென்று தலைமேல் விழுந்த ஓலையைச் சேரநாட்டுக் குடிமகன் ஒருவன் பிடித்து என்னவென்று பிரித்துப் பார்த்தான். அவ்வளவுதான், ஓலை அவன் மடியில் அடுத்த கணம் மறைந்தது. ஓலை கிடைத்ததும் கும்பலிலில் மோதி ஊடுருவீ வெளியேறிய அந்தக் குடிமகன், இல்லம் சேர்ந்து பத்து ஓலைகளைத் தயார் செய்து கொண்டு உடனடியாக வெளிக் கிளம்பினான். சேரமாநகரின் பெரும் அங்காடியில் அவற்றை விநியோகம் செய்து திரும்பினான். அதற்கு பிறகு பட்டன் இட்ட தீ ஓலை மூலம் மிகத்துரிதமாகப் பரவியது. சாதாரண ஓலையில் பிடிக்கும் தீ எப்படிக் கண் இமைக்கும் நேரத்தில் பெரிதாக எரிந்து காற்றில் விசிறுமோ, அப்படியே விசிறிய அந்த நறுக்கு ஓலைத் தீயும் அன்றைய இரவுக்குள் நகரின் பிரதான இடங்களில் பிடித்து விடியற்காலைக்குள் அரண்மனையையும் பற்றிக் கொண்டது.

அந்தத் தீயின் வலிமை பற்றி வீரரவிக்குச் சிறிதளவும் சந்தேகமில்லை. தன்னையும் மீறிய செல்வாக்குப் பரதபட்டனுக்கு மக்களிடத்தில் உண்டு என்பதை அவன் அறிந்திருந்தான். நகருக்குள் வராமல் காட்டிலேயே வசித்து வந்தபடியாலும், பாம்புகள் மீதும் மற்ற பிசாசு கணங்கள் மீதும் அவனுக்குப் பெரும் சக்தியிருந்ததாக மக்கள் நம்பியிருந்ததாலும், அவனைத் தொடுவது நாட்டுக்கு நல்லதல்ல என்பது மக்களின் தீவிர நம்பிக்கை என்பதை உணர்ந்திருந்தான் சேரமன்னன். அத்தகைய பரத பட்டனைச் சிறை செய்தால் ஏற்படும் கொந்தளிப்பும் அவன் அறியாத ஒன்றல்ல. இருப்பினும் தனக்கு பொதுவாகப் பாண்டியன் மீதும், குறிப்பாக இந்திர பானுவின் மீதும் இருந்த விரோதத்தை முன்னிட்டு பரத பட்டனை எக்காரணத்தைக் கொண்டும் விடுதலை செய்வதில்லையென்று உறுதி கொண்டான். அந்த உறுதியின் விளைவாகப் பட்டனைப் பற்றிய பேச்சை நகரத்தில் அடக்கிவிடத் தந்திரமாகத் திட்டமும் இட்டான்.

பட்டனிடமிருந்த கிலியைவிட அதிகக் கிலியையும் பர பரப்பையும் அளிக்க கூடிய செய்தியை நகரில் பரப்பினாலொழிய மக்கள் கொந்தளிப்பை அடக்க முடியாதென்பதை அறிந்திருந்த மன்னன் மக்களிடையே போர்க்கிலியை மூட்டி விடச் சேனாதிபதிக்கு உத்தரவிட்டான். எதிரி நடமாட்டம் நகர எல்லையில் இருக்கிறதென்றால் மக்கள் அதிகமாக வெளியில் உலாவ மாட்டார்கள். அப்படியே உலாவினாலும் போரின் அவசியத்தை முன்னிட்டு அவர்கள் கூடுவதையும் பேசுவதையும் படைவீரர்கள் ஓரளவு தடை செய்ய முடியும். தவிர, கோட்டைக் கதவுகளுக்கருகிலும் பாதுகாப்பு அதிகமிருக்குமாகையால் யாவரும் வெளியே செல்லவும் முடியாது. வெளியே யாரும் அனுமதிக்காவிட்டால் பரலி மாநகர் விவகாரம் சேரநாட்டின் மற்ற பகுதிகளுக்கு உடனடியாகப் பரவாது. தவிர, காவலைக் கடந்து இந்திரபானு வெளியேறுவதும் நடவாத காரியம். இப்படிப் பலபடியாக யோசித்தே மன்னன் நகரத்தை எச்சரிக்க உத்திரவிட்டான் சேனாதிபதிக்கு.

அன்று முரசுகள் நகரின் பல மூலைகளிலும் முழங்கின. எதிரியின் அபாயம் பற்றித் தலைநகருக்கு மட்டும் விஷயத்தை அறிவிக்க உத்தரவு பெற்றிருந்த பறையறிவிப்பவர்கள் மன்னன் திட்டப்படி அபாயத்தை மிகைப்படுத்திக் கூறினார்கள். முதலில் மக்களுக்கு அதை நம்புவது சந்தேகமாயிருந்தது. முரசொலியையும் முரசறைவிப்பின் செய்தியைக் கேட்டதும் ஆங்காங்கு கூடிய மக்கள் கும்பல் வியப்பை அடைந்தது. கோட்டாற்றுக் கரையில் வீரபாண்டியன் சரணாகதியடைந்து விட்டதாகவும் தளபதி சிங்கண்ணன் பெருவெற்றி எய்தி விட்டதாகவும் முந்திய இரவில் மன்னனே அறிவித்திருக்க, ஒரே இரவில் நிலைமை மாறி எதிரி பயம் தலைநகருக்கு எப்படி ஏற்படும் என்று மக்கள் ஒருவரையொருவர் கேட்டுக்கொண்டார்கள். இருப்பினும் அன்று மாலைக்குள் படைகள் தலை நகரத்தின் பல பகுதிகளுக்குப் பாசறைகளிலிருந்து விரைந்து விட்டதையும், ரதங்களும் எங்கும் வீரர்களைத் தாங்கி விரைந்தோடுவதையும் கண்ட மக்கள் முரசறைவிப்பில் ஏதோ உண்மையிருக்கிறதென்று நம்பலானார்கள். தவிர, கோட்டை வாயில்களிலும், காவல் பலமாகி வெளியே போகிறவர்கள் வருகிறவர்கள் விசாரிக்கப்படவே, நிலைமை ஏதோ நெருக்கடியாகிவிட்ட தென்று ஒப்புக் கொள்ளவும் செய்தார்கள்.

முரசறைவித்த இரண்டு மூன்று நாட்களில் பரலி மாநகர் முழுதும் போர்க்கோலம் பூண்டு நின்றது. காட்டை நோக்கிக் கொண்டிருந்த வடக்கு, கிழக்கு வயல்களில் இருந்த பாத்துகாப்பைப் போல் கடற்புறத்திலும் காவல் பலமாயிருந்தது. கடற்கரை ஓரமாகப் பூரண போர்க் கவசம் பூண்ட யவனர்கள் புரவிகளில் ஏறி உலாவிக் கொண்டிருந்தனர். சற்று எட்ட கடலில் நின்ற மரக்கலங்களுக்கு வர்த்தக நிமித்தமாகப் படகுகளில் சென்றவர்களை விசாரிக்கவும் சோதிக்கவும் அலை ஓரமாக இருந்த படகுத் தளைகளின் அருகே ஒற்றர்களும் சுங்கக் காவலரும் நின்றிருந்தார்கள். ஒரு மனிதன்கூடக் காரணமில்லாமல் படகுகளில் ஏற அனுமதிக்கப்படவில்லை. மரக்கலங்களிலிருந்து படகுகளில் வந்து கரையிலிறங்கியவர்களும் விசாரிக்கப்பட்டனர்.

இப்படி மன்னன் பெரும் பாதுகாப்பை ஏற்படுத்தி, சைன்னியத்தின் இரும்பு வளையத்தில் நகரத்தை கட்டுப் படுத்தி விட்டபடியால் பட்டனைப் பற்றிப் பேசுவதைக் கூட மக்கள் குறைத்துக்கொண்டனர். அவர்கள் கவனம் முழுவதும் எதிரி நடமாட்டத்தைப் பற்றிய செய்திகளில் திரும்பிவிட்டதை ஒற்றர்கள் மூலம் அறிந்த மன்னன் பெரிதும் மகிழ்ச்சி கொண்டான்.
மூன்று நாட்களில் மக்கள் மனம் வேறு வழியில் திரும்பி விட்டதைக் கண்ட மன்னன் நான்காவது நாள் முதலமைச்சரை வரவழைத்து, “அமைச்சரே! பட்டன் இட்ட தீ அணைந்துவிட்டதாகத் தெரிகிறது,” என்று சற்று இகழ்ச்சியுடன் கூறினான்.

அந்த இகழ்ச்சியில் மகிழ்ச்சியும் ததும்பியதை முதலமைச்சர் கண்டார். இருப்பினும் அவர் அந்த மகிழ்ச்சியில் பங்கு கொள்ளாமல், “இடைக்கால மாறுதல்,” என்று கூறினார்.

“எது இடைக்கால மாறுதல்?” என்று வினவினான் மன்னன், புருவங்களை வியப்பால் சற்று உயரத் தூக்கி.

“மக்களின் மனமாற்றம்,” என்றார் முதலமைச்சர்.

“அப்படியா!” இலேசாகச் சிரித்தான் மன்னவன்.

“இதில் சிரிப்பதற்கு ஏதுமில்லை மன்னவா மக்களால் மதிக்கப்படும் குருநாதரைச் சிறை செய்திருக்கிறீர்கள். எதிரி வந்துவிட்டான் என்ற பயம் காட்டி மக்கள் எண்ணத்தை வேறு திசையில் திருப்பியிருக்கிறீர்கள். மக்கள் உண்மையை உணர்ந்து கொண்டால், சற்றுச் சிந்திக்கத் துவங்கினால், அப்புறம் என்ன ஆகும்? பிரளயம் ஏற்படும் மன்னவா, பிரளயம் ஏற்படும்,” என்ற முதலமைச்சர் மீண்டும் கூறினார், “மன்னவா! செண்டுவெளியன்றுதான் மீண்டும் வீரபாண்டியன் சரணடைந்து விட்டதாக அறிவித்திருக்கிறீர்கள். மறுநாள் எதிரி பயம் தலைநகருக்கு ஏற்பட்டு விட்டதாக முரசறைவிக்கிறீர்கள். மக்கள் சற்று நிதானப் பட்டுக் கோட்டையாற்றுக் கரையின் பெரு வெற்றிக்குப் பின்பு சிங்கணன் பெரும் படை என்ன செய்கிறது என்று சிந்திக்கத் துவங்கினால்? அந்த வெற்றிக்குப் பின்பு இங்கிருந்து நீங்கள் அனுப்பிய கடற்படை எதற்காகக் கோட்டாற்றுக் கரையின் துறைமுகமான கொல்லத்தில் தூங்கவேண்டும் என்று எண்ணத் துவங்கினால்? மக்களுக்கு முரசறைவிப்பில் அர்த்தமில்லை யென்பது புரியும். மன்னவன் தங்களை ஏமாற்றியிருப்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள். அப்புறம் உங்கள் கதி? உங்களுக்கு அமைச்சனான என்கதி?” இதைச் சொன்ன முதலமைச்சர் பெருமூச்சு விட்டார்.

“மக்கள் புரிந்து கொள்ள நாளாகும்.” என்றான் மன்னன்.

“மக்கள் புரிந்து கொள்ள நாளாகும் மன்னவா. ஆனால் ஒருமுறை புரிந்துகொண்டு விட்டால் அவர்கள் திரும்பும் முறை பயங்கரமாயிருக்கும். பொங்கி வரும் மக்கள் கடலை நமது படைபலம் தடுக்க முடியாது,” என்றார் முதலமைச்சர்.

“அவர்கள் புரிந்து கொள்வதற்குள் நமது வெற்றிப் படைகள் சேரநாடு திரும்பும், அப்பொழுது மக்கள் கடல்பொங்கும். என்னை நோக்கி அல்ல அமைச்சரே! வெற்றி வீரர்களை வரவேற்க. அந்த உற்சாக வெள்ளத்தில் பட்டன் மீண்டும் அடித்துக் கொண்டு போகப்படுவான்- அதுவரை அவன் இருந்தால்,” என்ற மன்னன் லேசாகப் புன்முறுவல் செய்தான்.

முதலமைச்சரும் இம்முறை புன்முறுவல் செய்தார். “மன்னா! பெரிதும் முன்னோக்கித்தான் சிந்திக்கிறீர்கள். ஆனால் இத்தனையும் உங்கள் புத்தியில் விளைவது. புத்திக்கும் அப்பாற்பட்டது ஒன்று உண்டு அதுதான் தர்மம். அந்தத் தர்மத்தை யாரும் அழித்துவிட முடியாது. எந்த யுக்தியும் அதன் வலிமையையோ, செயலையோ எதிர்க்க முடியாது மன்னா! தவிர கோட்டாற்றுக்கரை வெற்றியுடன் போர் முடிந்துவிடுமென்று எனக்குத் தோன்றவில்லை. நாட்டு எல்லையில் இதுவரை தாக்கிவிட்டுத் தாக்கிவிட்டுக் காடுகளில் பின் வாங்கிக் கொண்டிருந்த பாண்டிய மன்னன் இப்பொழுது நமது நாட்டுக்குள் புகுந்து விட்டதாயும் எல்லை ஊர்களை நாசம் செய்வதாகவும் ஒற்றர்கள் செய்தி கொண்டு வந்திருக்கிறார்கள்,” என்றும் கூறினார் முதலமைச்சர்.

வீரரவி சற்று யோசனையில் இறங்கினான், “நாட்டுக்குள் பாண்டியன் இறங்கத் துவங்கிவிட்டானா?” என்றும் விசாரித்தான் பல விநாடிகள் கழித்து.

“ஆம்”

“எந்தத் தைரியத்தில் நுழைகிறான்?”

“அதுதான் எனக்கும் புரியவில்லை.”

“கோட்டையாற்றுக் கரைப் போர் முடிந்ததென்றால் சிங்கணன் பெரும்படை சேரநாட்டை நோக்கித் திரும்புமே?”

“ஆம்”

“அதைச் சமாளிக்கவே பாண்டியனிடம் படை இல்லை. தவிர, இங்குள்ள படையும் அவனைத் தாக்கும். முன்னும் பின்னும் தாக்கும் இரு படைகளை அவன் எப்படிச் சமாளிப்பான்?”

இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல முதலமைச்சரால் முடியவில்லை. “எனக்குப் புரியவில்லை மன்னா! ஆனால் பாண்டியன் அறிவீனனல்ல, மூர்க்கனுமல்ல,” என்றார் முதலமைச்சர்.

வீரரவியும் அதை ஆமோதித்துத் தலையசைத்தான். “நாமும் அறியாத பலம் அவனுக்கு ஏதாவது இருக்குமா அமைச்சரே?” என்றும் கேட்டான் கடைசியாக.

முதலமைச்சரின் இதழ்கள் இகழ்ச்சியுடன் மடிந்தன. “ஒரு பலம் அவனிடம் இருப்பது தெரியும் எனக்கு,” என்றார் மெல்ல.

“என்ன பலம் அது?” என்று வினவினான் மன்னன்.

“தர்மத்தின் பலம். அவன் இப்போது போரிடுவது நாட்டாசையால் அல்ல. தனது முத்துக்களைத் திரும்பப் பெறவும், பெண்ணை விடுவித்துக் கொள்ளவும் போராடு கிறான். நமது நிலை நேர் எதிரானது,” என்றார் முதலமைச்சர்.

“படைபலமில்லாது தர்மத்தின் பலத்தில் மட்டும் போரில் வெற்றி கொள்ள முடியுமா?” என்று வினவினான் வீரரவி.
“கண்டிப்பாக முடியும்,” என்ற முதலமைச்சர், “தர்மம் பெரு நெருப்பு மன்னவா? அதன் வேகம் நமக்குப் புலப்படாது. அது வெற்றியைத் தோல்வியாக்கும். தோல்வியை வெற்றியாக்கும்,” என்று தெரிவித்தார்.

இது வெறும் வேதாந்தம்,’ என்று வீரரவி எண்ணி னான். ஆனால் வேதாந்தத்தில் முழுக்கப் புதைந்து கிடப்பது சாத்தியம் எனும் பெரும் சக்தி என்பதை அவன் உணரவில்லை. அடுத்த நான்கு நாட்களில் அவன் அதை உணர்ந்தான். நான்கு நாட்கள் கழித்து முதலமைச்சர் ஓர் ஒற்றனைக் கொண்டுவந்து மன்னன் முன்பு நிறுத்தினார். “இவன் செய்தி ஒன்று கொண்டு வந்திருக்கிறான் நாட்டு எல்லையிலிருந்து,” என்றும் தெரிவித்தார் மன்னனிடம்.

“சொல்,” என்று மன்னவன் ஆணையிட்டான்.

“இப்பொழுது நடப்பது…” என்று தயங்கினான் ஒற்றன்.

“சொல்.”

பதிலுக்கு ஒற்றைச் சொல்லைச் சொன்னான் ஒற்றன். “எரிபரந்தெடுத்தல்,” என்ற சொல் திகிலுடன் உதிர்ந்தது அவன் உதடுகளிலிருந்து.

Previous articleRaja Muthirai Part 2 Ch21 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Muthirai Part 2 Ch23 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here