Home Historical Novel Raja Muthirai Part 2 Ch24 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

Raja Muthirai Part 2 Ch24 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

59
0
Raja Muthirai Part 2 Ch24 Raja Muthirai Part 2 Sandilyan, Raja Muthirai Part 2 Online Free, Raja Muthirai Part 2PDF, Download Raja Muthirai Part 2 novel, Raja Muthirai Part 2 book, Raja Muthirai Part 2free, Raja Muthirai,Raja Muthirai Part 2 Story in tamil,Raja Muthirai Part 2 Story,Raja Muthirai Part 2 novel in tamil,Raja Muthirai Part 2 novel,Raja Muthirai Part 2 book,Raja Muthirai Part 2 book review,ராஜ முத்திரை ,ராஜ முத்திரை கதை,Raja Muthirai Part 2tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2full story,Raja Muthirai Part 2 novel full story,Raja Muthirai Part 2audiobook,Raja Muthirai Part 2audio book,Raja Muthirai Part 2full audiobook,Raja Muthirai Part 2full audio book,
Raja Muthirai Part 2 Ch24 | Raja Muthirai | TamilNovel.in

Raja Muthirai Part 2 Ch24 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

ராஜ முத்திரை இரண்டாம் பாகம் – சாண்டில்யன்

Raja Muthirai Part 2 Ch24 | Raja Muthirai | TamilNovel.in

எல்லைப்புற குடிமக்கள் பாண்டியன் கையாளும் எரிபரந்தெடுத்தல் முறையை விளக்கியதும் சேனாதிபதி பெருந்திகிலடைந்ததன்றி, அதன் விளைவு பயங்கரம் என்று கூறியதைக் கேட்ட மன்னன், முதலமைச்சர் இருவருமே வியப்படைந்தார்களென்றாலும், மன்னனே சேனாதி பதியை நோக்கிக் கேட்டான் முதலில், “இதில் பயங்கரம் என்ன இருக்கிறது?” என்று.

மன்னன் கேள்விக்குச் சேனாதிபதி உடனடியாகப் பதில் சொல்லவில்லை. எல்லைப்புறத்திலிருந்து வந்து நிலைமையை விளக்கிய குடிமகனையும் மற்றக் கிராமவாசி களையும் வெளியே செல்ல உத்தரவிட்டான். அவர்கள் சென்று பொது மண்டபக் கதவுகள் சாத்தப்பட்டதும் வீரரவியை நோக்கி, “பாண்டியன் மன்னன் கையாளும் முறை விசித்திரமாகத் தெரியவில்லையா உங்களுக்கு?” என்று வினவினான் சேனாதிபதி கவலை பாய்ந்த குரலில்.

“என்ன விசித்திரத்தைக் கண்டாய் சேனாதிபதி?” என்றான் மன்னன் ஏதும் புரியாமல்.

சேனாதிபதி மீண்டும் ஒரு கேள்வியை வீசினான். “நீங்கள் இத்தகைய போர் முறையில் ஈடுபட்டால் என்ன செய்வீர்கள்?” என்று.
“திடீரெனத் தாக்குவேன், கிராமங்களைக் கொளுத்தி விட்டு மேலே முன்னேறுவேன்,” என்று கூறினான் மன்னன்.

“அதுதான் போர்முறை மன்னவா, கலிங்கம் கொண்ட கருணாகர பல்லவனும் அப்படித்தான் துரிதமாகப் போரிட் டிருக்கிறான். தவிர, போரில் துரிதம்தான் பயனளிப்பது. படையெடுப்பவன். தற்காப்புக்குப் போராடுபவனுக்கு நினைக்கவும் நேரமளிக்கக் கூடாது,” என்று சுட்டிக் காட்டினான் சேனாதிபதி.

“ஆம், ஆம். திடீரென எல்லைகளைத் தாக்கி எரிய விட்டு எதிரிக்கு அவகாசம் கொடுக்காமல் முன்னேறுவது தான் சம்பிரதாயப் போர்முறை” என்று ஒப்புக் கொண்டான் மன்னன்.

இதுவரை மௌனமாயிருந்த முதலமைச்சர் இடை புகுந்து, “ஆனால் பாண்டியன் முறை நேர் விரோத மாயிருக்கிறது,” என்றான்.

சேனாதிபதி முதலமைச்சரை நோக்கித் தலையை அசைத்து, “ஆம் அமைச்சர் பெருமானே! நேர்விரோத மாயிருக்கிறது. ஒவ்வொரு கிராமத்திற்கும் முன்னெச்சரிக்கை செய்கிறான் பாண்டிய மன்னன். எல்லோரும் கிராமத்திலிருந்து நகர உதவுகிறான். கிராமக் காவலரைக் கூட அவன் சிறை பிடிப்பதில்லை. ஆயுதங்களைப் பிடுங்கிக் கொண்டு விட்டுவிடுகிறான். இப்படி ஒவ்வொரு கிராமத்தையும் பிடிப்பதால் பாண்டியன் ஆமை வேகத்தில் தான் நகர முடியும்,” என்றான்.
”யானை தன் தலைமேல் தானே மண்ணைப் போட்டுக் கொள்கிறது,” என்றான் வீரரவி.

“யானை என்று யாரைக் குறிக்கிறீர்கள்” என்று கேட் டான் சேனாதிபதி.

“பாண்டியனைத்தான்.”

“பாண்டிய நாட்டில் யானைகள் அதிகம் கிடையாது. சேரநாடுதான் யானைகளுக்குப் பேர் போனது.”

“என்ன சொல்கிறாய் சேனாதிபதி?”

“யானையின் தலைமேல் பாண்டியன் மண்ணைப் போடுகிறான்.”

“நம் தலையிலா?”

“ஆம்.”

“பாண்டிய மன்னனிடம் உமக்குப் பெருமதிப்புப் போலிருக்கிறது. அவன் பலத்தை அளவுக்கு மீறி மதிப்பிடுகிறீர்,” என்று சீறினான் வீரரவி உதயமார்த்தாண்டவர்மன். அவன் முகத்தில் கடுமை விரிந்தது. கண்களில் கனல் தெறிந்தது.

மன்னனின் சீற்றத்தைச் சிறிதும் லட்சியம் செய்ய வில்லை. “மன்னர் பெருமானே! எதிரி பலத்தையும் அறிவையும் குறைத்து மதிப்பிடுவதில் பொருளில்லை,” என்று சற்றுக் கடுமையாகக் கூறினார்.

“என்ன பலத்தை, அறிவை பாண்டியனிடம் கண்டுவிட்டாய்?” என்று சீற்றம் மிகுந்த குரலில் கேட்டான் உதய மார்த்தாண்டவர்மன்.

சேனாதிபதி மன்னனை ஒரு வினாடி உற்று நோக்கி விட்டுக் கூறினான், “மன்னவா! நாட்டு நலத்தை முன்னிட்டு உண்மையைக் கூறுவது சேனாதிபதியின் கடமை. ஆகையால் சொல்கிறேன். கேளுங்கள். பாண்டியன் கிராமம் கிராமமாகக் கொளுத்துகிறான். கிராம மக்களில் ஒருவரைக்கூடக் கொல்வதில்லை. இந்தத் தலைநகருக்கு வர உதவுகிறான். அவன் முன்னேற முன்னேறக் கிராமம் கிராமமாகச் சூன்யப்பட்டு மக்கள் இங்கு வரத் தொடங் கினால், இன்னும் பதினைந்து நாட்களுக்குள் இந்தத் தலைநகரின் ஜனத்தொகை அளவுக்கு மீறிப் பெருகி, படைகள் நடமாடுவதுகூடக் கஷ்டமாகிவிடும். பரலிமாநகர் பெரிதுதான் மன்னவா. ஆனால் சேர நாட்டு மக்கள் அனைவரையும் ஒரு நகரம் தாங்க முடியாது. மக்கள் நகரத்தில் பெருகிவிட்டால் அவர்களுக்கு உணவு இருப்பிடம் இவ்வசதிகளைக் கவனிப்பதற்கும், போர்க்கால நோய்களைத் தடுப்பதற்குமே வீரர்களுக்கு வேலை சரியாயிருக்கும். போர்ச் சமயத்தில் எந்த உத்தரவையும் நாம் நிறைவேற்றுவது முடியாமற் போய்விடும். இந்தப் பரலிமாநகர் பெரும் மக்கள் நிறைந்த சந்தையாகித் திணறும்,” என்று.
மன்னன் தீவிர சிந்தனையில் இறங்கினான். முதலமைச்சரும் சிறிது சிந்தித்தார். நிலைமை எத்தனை சீர்கேடு அடைந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டதால், “இப்படிக் கிராமம் கிராமமாக மக்களை இங்கு பாண்டியன் அனுப்புவதால் அவனை நோக்கி இங்கிருந்து படைகள் முன்னேறுவதும் தாமதப்படும்,” என்று சுட்டிக் காட்டினார் முதலமைச்சர்.

“ஆம் அமைச்சர் பெருமானே, வடக்கெல்லையி லிருந்து மக்கள் சாரி சாரியாக வரும்போது, படைப் பிரிவுகள் துரிதமாக முன்னேற முடியாது. பாதைகளில் மக்கள் கூட்டம் வேகத்தைத் தடை செய்யும்,” என்று ஒப்புக் கொண்டான் சேனாதிபதி.

“ஆம், ஆம். பெருந்தொல்லைதான்,” என்று முணு முணுத்தார் முதலமைச்சர்.

“அதுமட்டுமல்ல அமைச்சரே…” என்று இழுத்தான் சேனாதிபதி.

“வேறென்ன?” அதுவரையில் சிந்தனையில் ஆழ்ந் திருந்த மன்னன் அவர்கள் உடையாடலில் புகுந்தான் எரிச்சலுடன்.

“பெருங்கூட்டமாக மக்கள் நகருக்குள் உட்புகும் போது அவர்களில் யார் குடிமக்கள், யார் எதிரியின் ஒற்றர்கள் என்று கண்டுபிடிப்பதும் கஷ்டம்,” என்றான் சேனாதிபதி.

“ஆம், ஆம். ஒற்றர்கள் உட்புக முடியும்,” என்றார் முதலமைச்சர்.

“பரலி மாநகரில் குடிமக்கட் கூட்டத்தோடு ஒற்றர் களும் கலந்துவிட்டால் தலைநகரில் பலவீனம் அளவிடத்தகாது.” என்றான் சேனாதிபதி.

“பாண்டியனைப் பாராட்டியது முடிந்துவிட்டதா இல்லையா?” என்று மன்னன் கேட்டான் சினம் குரலில் பொங்கி வழிய.

“இன்னும் ஒன்றிருக்கிறது,” என்று மெள்ளக் கூறினான் சேனாதிபதி.

“அதையும் பாடிவிடு, புகழ்பாட நீ கவிஞனாயிருக்கலாம்,” என்றான் மன்னன்.

“அப்படியாகியிருந்தால் பாண்டியன் விளைவிக்கும். இந்தத் தொல்லையில் நான் சிக்கியிருக்க மாட்டேன்,” என்று பதிலுக்கு இடித்துக் கூறிய சேனாதிபதி, “பாண்டியன் புகழை நான் பாட வேண்டியதில்லை மன்னவா! அவனால் உணவும் உடையும் வசதிகளும் பெற்று வந்திருக்கும் சேர நாட்டுக் குடிமக்களே பாடுவார்கள். பாண்டியன் தங்களை நடத்திய முறையைக் குடிமக்கள் வர்ணித்ததைத் தாங்களே கேட்டீர்கள். அவன் வர்ணித்தபோது முகத்திலும் குரலிலும் விளங்கிய சந்துஷ்டியைக் கவனித்தீர்களா? இங்கு வரும் குடிமக்கள் அவனைப்பற்றி நல்லெண்ணத்துடன் வருவார்கள். அது இன்னும் ஆபத்து நமக்கு. நாம் எதிரியிடமிருந்து பாதுகாக்க வேண்டிய பெரு நகரில் எதிரியிடம் அன்பும் மதிப்பும் கொண்ட மக்கள் இருந்தால், அவர்கள் இங்குள்ள மற்றவர்களிடமும் பாண்டியன் பெருமையைப் பரப்புவார்கள். பாண்டியன் மகள் நம்மிடமிருப்பதால் எதிரிமீது அனுதாபமும் அதிகரிக்கும். இத்தகைய மக்களை மடியில் கட்டிக்கொண்டு போராடுவது பூனையை மடியில் கட்டிக்கொண்டு சகுனம் பார்ப்பது போலாகும்,” என்று விளக்கினான் உள்ள நிலையை.

சேரமன்னன் சிறிது நேரம் மௌனம் சாதித்தான். பிறகு கேட்டான், “உள்ள ஆபத்தை விளக்கிவிட்டீர்களா சேனாதிபதி ! இதற்குப் பரிகாரம் ஏதாவது தெரியுமா?” என்று.

“இருக்கிறது மன்னவா,” என்றான் சேனாதிபதி சிறிதும் சளைக்காமல்.

“என்ன பரிகாரம்? எல்லைப்புற மக்களை மேலும் தலைநகருக்குள் வராமல் தடுக்கலாமா?” என்று வினவினான் மன்னன்.

“வராமல் தடுப்பது அவர்கள் விரோதத்தைச் சம்பாதிப்பதாகும். அது அல்ல மன்னவா வழி. நகருக்குள் இதுவரை வந்தவர்களையும் இனி வரப் போகிறவர்களையும் நகருக்குத் தெற்கேயுள்ள கிராமங்களிலும் காடுகளிலும் அனுப்பி, போர் முடியும் வரை வசிக்கச் செய்யலாம். இந்தப் புதுக் கூட்டங்களைத் தாங்கும் கிராமப் பெருமக்களுக்கு அதிக மான்யங்களை வழங்கலாம். இப்படிச் செய்தால் வடக்கிலிருந்து வரும் மக்கள் தெற்கே சென்றுவிடுவார்கள். தலைநகரம் கூட்டத்தால் திணறாது. நகருக்குள் கூட்டம் நுழைய நுழைய நாம் வெளியில் அனுப்பிக் கொண்டேயிருந்தால், வெளியில் அவர்கள் வாழ வழி செய்துவிட்டால், தலைநகரப் பிரச்சனை தீர்ந்துவிடும். இந்தக் கூட்டத்தில் யாராவது ஒற்றர்கள் கலந்து வந்தாலும் அவர்களும் கூட்டத்தோடு தலைநகரை விட்டு வெளியேற வேண்டியிருக்கும். அப்படிச் சிலர் கும்பலிலிருந்து விலகமுயன்றால் வரும் கூட்டத்தை ஒழுங்கு செய்து அனுப்பும் நமது வீரர்கள் அவர்களை உடனடியாகச் சிறை செய்வார்கள். அப்படி நம்மிடம் சிக்குபவர்களை நாம் விசாரிக்கலாம்,” என்றான் சேனாதிபதி.

“நல்லது சேனாதிபதி! நல்லது!” என்று சிலாகித்தான் மன்னன்.

“அத்துடன் கோட்டாற்றுக்கரை உண்மை நிலையும் தெரிந்தால் சிங்கணனைப் பாண்டியர்களைப் பின்புறத்தில் தாக்க உத்தரவு அனுப்பலாம். நமது கடற்படை திரும்பி வந்ததும் அதை மீண்டும் வடக்கே ஒரு காதம் போகவிட்டு அதன் வீரர்களில் ஒரு பகுதியைத் தரையில் இறக்கி, பாண் டியனை நோக்கி நகரச் சொல்லலாம். இப்படிச் செய்தால் வடக்கே, பாண்டியன் பின்புறம் சிங்கணன் பெரும் படையும், மேற்கே அவன் இடைப்பக்கம் நோக்கிக் கடற்படை வீரர்களும் நகருவார்கள். பாண்டியப் படையின் முதுகும் இடையும் ஏககாலத்தில் தாக்கப்படும். அதே சமயத்தில் தலைநகரப் படையின் ஒரு பிரிவுடன் நானும் தலைநகரிலிருந்து வெளியேறி அரைகாதத்திற்கு முன்பே பாண்டியனை எதிருக்கு எதிராகச் சந்திப்பேன்,” என்று தனது போர் முறையை விளக்கினான் சேனாதிபதி.

இந்த விளக்கத்தைக் கேட்டதும் வீரரவியின் காமக் கண்கள் அகல விரிந்து வீரத்தைக் கொட்டின. வியப்பையும் சிந்தின. சேனாதிபதியை நோக்கிய கண்களில் பெருமையும் விரிந்தது. “சேனாதிபதி! இதைவிடச் சிறந்த போர்த் திட்டத்தை என்னாலும் வகுக்க முடியாது,” என்று பாராட்டினான் வாய்விட்டு வீரரவி. “என்ன முதலமைச்சரே, உமது கருத்து என்ன?” என்று வினவினான் உற்சாகத்துடன்.

முதலமைச்சர் முகத்தில் அத்தனை உற்சாகம் துலங்கவில்லை. “போர்த் திட்டம் சிறந்தது தான். நகரத்தில் கூட்டம் மிகைப்படாதிருக்க – சேனாதிபதி சொன்ன வரையில் சரிதான். ஆனால் மேற்கொண்டு பாண்டியனை எதிர்க்கும் திட்டம் நிறைவேறுவது வீரபாண்டியனைப் பொறுத்தது,” என்றார் முதலமைச்சர்.

“என்ன! வீரபாண்டியனையா?” என்று கேட்டான் மன்னன்.

“ஆம் மன்னவா. வீரபாண்டியன் சரணடைந்திருந் . தால் சிங்கணன் பாண்டியனைப் பின்புறத்தில் தாக்க முடியும். அப்பொழுதுதான் கடற்படை வீரர்களை கொண்டு இடையில் தாக்கச் சேனாதிபதி வகுத்திருக்கும் திட்டமும் பயனளிக்கும். அந்த இரண்டு தாக்குதல்களும் இருந்தால் தான் சேனாதிபதியும் தலைநகரைவிட்டு வெளியேறிப் பாண்டியனை எதிர்கொள்ள முடியும்,” என்றார் முதலமைச்சர்.
“அப்படியானால் கோட்டாற்றுக்கரை பிடிபட்ட தாகவும் வீரபாண்டியன் சரணடைந்துவிட்டதாகவும் சிங்கணன் அனுப்பிய ஓலை பொய்யென்கிறீரா?” என்றான் மன்னன் சினத்துடன்.

“அது மெய்யென்பது தெரியவேண்டும். அது மெய்யானால் அதற்கான அறிகுறிகள் பாண்டியன் நடவடிக்கையில் தெரிய வேண்டுமென்று முன்னமே சொன்னேன்,’ என்று சுட்டிக் காட்டினார் முதலமைச்சர். அத்துடன் நிற்காமல் மேலும் சொன்னார், “ராமவர்மனுக்கு நான் அனுப்பியிருக்கும் ஓலைக்குப் பதில் வரட்டும். பிறகு உள்ள நிலைகொண்டு திட்டம் வகுப்போம்,” என்று.

அதுவரை ” சேனாதிபதி கேட்டான் கோபத்துடன்

“நீங்கள் முன்பு சொன்னது போல் நகரத்தில் கூட்டம் பெருகாமல் பார்த்துக் கொள்ளுவோம்,” என்றார் முதலமைச்சர்.

“உமது ஓலைக்குப் பதில் வராது போனால்?” மன்னனும் கோபத்துடன் கேட்டான்.

“தூதுவன் இடையில் யாராலும் பிடிக்கப்படாமல் சென்றால் கண்டிப்பாகப் பதில் கிடைக்கும்.”

“பிடிபட்டால்?”

“பதில் வராது.”

“பிடிபட்டான் என்பது எப்படித் தெரியும்?”
“அவனுக்குப் போய்வர நான்கு நாள் அவகாசம், அதற்குள் வரவில்லையானால் பிடிபட்டதாக வைத்துக் கொண்டு மேற்கொண்டு செய்யவேண்டியதை யோசிப்போம்,” என்றார் முதலமைச்சர்.

அந்த யோசனைக்கு மன்னனும் இசைவு தெரிவித் தான். அவ்விருவர் யோசனையையும் சேனாதிபதி ஏற்கவில்லை; ‘போரில் வீண் ஆலசியம் கூடாது மன்னவா,” என்றான் சேனாதிபதி.

மன்னன் முதலமைச்சரை நோக்கினான். முதலமைச்சர் முறுவல் கொண்டார். “சேனாதிபதி! ஒரு வேளை வீரபாண்டியன் சரணடையாதிருந்தால் உமது திட்டம் என்ன ஆகும்? போயிருக்கும் கடற்படைதான் இங்கு திரும்ப முடியுமா? அல்லது சிங்கணன் தான் முற்று கையைக் கைவிட்டுப் பாண்டிய மன்னன் முதுகைத் தாக்க வர முடியுமா?” என்று வினவினான்.

இது இரண்டும் முடியாதென்பது சேனாதிபதிக்குத் தெரிந்திருந்ததால், “திட்டத்துக்குக் குறை சொல்லுவது எளிது. மாற்றுத் திட்டம் ஏதாவது இருக்கிறதா முதலமைச்சரே?” என்று கேட்டான்.

“இருக்கிறது.”

“என்ன அது?”

“நிதானித்தல்.”

“அதுவரை?”
“நகரத்தின் மீது ஒரு கண்ணை வைத்திருத்தல். ஒற்றர்கள் உட்புகுந்தால் சிறை செய்தல். வெளியில் ஒற்றர்களையும் அனுப்பி நிலைமையை ஆராய்தல். படைப் பிரிவுகளை என்றும் கிளம்பும் நிலையில் சன்னத்தமாக வைத்திருத்தல்.”

இதற்குமேல் சேனாதிபதி பேசவில்லை. மன்னனை நோக்கினான். மன்னன் சொன்னான், “முதலமைச்சர் சொல்கிறபடி நிதானிப்போம். சேனாதிபதி, எதற்கும் நகரத்தின் வெளிப்புறத்திலும் ஒரு கண்ணை வைத்திரு,” என்றான் மன்னன்.

அடுத்த இரண்டு நாட்களுக்குள் பரலிமாநகரில் கெடு பிடி நூறு மடங்கு அதிகப்பட்டது. மக்களின் இரவு நட மாட்டம் அடக்கப்பட்டது. வெளியிலிருந்து வரும் மக்களை வரிசை வரிசையாகத் தென்புறம் அனுப்பிக் கொண்டிருந்தார்கள் புரவிப் படைவீரர். யாரும் நகருக்குள் நுழைவது கடினமாயிற்று அதைப்பற்றி மக்கள் அன்னச் சத்திரங்களிலும், இதர ரகசியமான விடுதிகளிலும் பேசவும் முற்பட்டார்கள். அத்தகைய உரையாடலொன்று பரலிமா நகரின் தென்புறத்திலிருந்த சிறு சத்திரமொன்றிலும் மறு நாளைக்கு மறுநாள் நிகழ்ந்து கொண்டிருந்தது. சத்திரத்துக் கூடத்தின் மூலையில் இருட்டடித்த இடத்தில் உணவருந்திக் கொண்டிருந்த இருவர் மக்களின் அந்த உரையாடலை ஊன்றிக் கேட்கவும் முற்பட்டார்கள். அந்த இருவர் முக்காடிட்டு முகத்தைப் பெருமளவு மறைத்துக் கொண்டு மிருந்தார்கள். சத்திரப் பேச்சின் ஆரம்பத்தில் சற்று முகத்தை நிமிர்த்திய இருவரும் உரையாடல் அதிகப்பட அதிகப்பட அதைக் கேட்பதில் முனைந்துவிட்ட படியால் கலத்திலிருந்த உணவை அருந்துவதையும் மறந்தார்கள். உணவைவிடச்சத்திரத்துப் பேச்சு அத்தனை இன்பமாயிருந்தது அவர்கள் செவிகளுக்கு.

Previous articleRaja Muthirai Part 2 Ch23 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Muthirai Part 2 Ch25 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here