Home Historical Novel Raja Muthirai Part 2 Ch25 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

Raja Muthirai Part 2 Ch25 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

89
0
Raja Muthirai Part 2 Ch25 Raja Muthirai Part 2 Sandilyan, Raja Muthirai Part 2 Online Free, Raja Muthirai Part 2PDF, Download Raja Muthirai Part 2 novel, Raja Muthirai Part 2 book, Raja Muthirai Part 2free, Raja Muthirai,Raja Muthirai Part 2 Story in tamil,Raja Muthirai Part 2 Story,Raja Muthirai Part 2 novel in tamil,Raja Muthirai Part 2 novel,Raja Muthirai Part 2 book,Raja Muthirai Part 2 book review,ராஜ முத்திரை ,ராஜ முத்திரை கதை,Raja Muthirai Part 2tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2full story,Raja Muthirai Part 2 novel full story,Raja Muthirai Part 2audiobook,Raja Muthirai Part 2audio book,Raja Muthirai Part 2full audiobook,Raja Muthirai Part 2full audio book,
Raja Muthirai Part 2 Ch25 | Raja Muthirai | TamilNovel.in

Raja Muthirai Part 2 Ch25 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

ராஜ முத்திரை இரண்டாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 25 அராபியர் இருவர்

Raja Muthirai Part 2 Ch25 | Raja Muthirai | TamilNovel.in

இயற்கை ஏராளமாக அள்ளிக் கொட்டிய காரமிளகையும், நெசவாளர் கைத்திறனில் விளைந்த செயற்கைப் பட்டையும் ரோமாபுரி மாதர் விரும்பியதன் விளைவாக, யவனவரும் அராபியரும் அவற்றைப்பெறுவான் வேண்டி, கொண்டு குவித்த பொற்காசுகள் நிரம்பி வழிந்ததால், திருவின் தாண்டவம் எங்கும் தெரிந்ததன் காரணமாகத் திருவாழுங்கோடு என்று பிரசித்தி பெற்றிருந்த பரலி மாநகரத்திலிருந்து குமரிக்குச் – செல்லும் பாதையில், அம்மாநகரின் தெற்குக் கோடியிலிருந்தது அந்தச் சிறு சத்திரம்.

பரலிக்கு வரும் வெளிநாட்டார் தங்குவதற்கு வசதியும் உண்ண உதவும் அளிக்கச் சேர மன்னர்கள் பல தலைமுறைகளுக்கு முன்பு கட்டிய சத்திரங்களில் அந்தச் சிறுசத்திரமும் ஒன்றானாலும், பரலியிருந்து குமரிக்குச் செல்லும் பாதையில் அது இருந்தபடியாலும் குமரியில் வெளிநாட்டு வர்த்தகம் அதிகமில்லாத காரணத்தாலும், அந்தச் சத்திரத்தில் சாதாரணமாகக் கூட்டம் அதிகமிருப்பதில்லை. கடலோர வணிகர் விடுதிகளிலும், சற்று உள்ளடங்கி நகரின் நடுவிலிருந்த மற்றும் சில சத்திரங்களிலுமே சாதாரண நாட்களில் கூட்டமிருப்பது வழக்கம். அந்த விடுதிகளிலும் சத்திரங்களிலும் இடமில்லாத சமயங்களிலேயே தெற்குக் கோடியிலிருக்கும் இந்தச் சிறு சத்திரத்துக்கு வணிகர்கள் வருவார்களாதலால், அப்படி வரும் வணிகர்கள் தொகை மிகக் குறைவாகவே இருக்கும். வாணிபத்துக்கன்றி வேறு காரணங்களுக்காகப் பயணம் செய்பவர்களும் அங்கு தங்குவது குறைவு.

ஆனால் இந்தச் சாதாரண கால நிலைக்கு முற்றிலும் புறம்பான நிலை சேனாதிபதியின் திட்டத்துக்குப் பிறகு தலைநகரில் இருந்ததால், சத்திரத்தில் அன்று அளவுக்கு மீறிய கூட்டம் இருந்தது. சத்திரத்தில் உள்ள கூட்டத்தில் முக்கால்வாசி, பாண்டியனின் ‘எரிபரந்தெடுத்தல்’ போர் முறையால் கிராமங்களிலிருந்து வெளிப்பட்டு வந்தவர் களாதலால், சத்திரத்தின் உணவு மண்டபத்தில் கூட மூலைகளில் மூட்டை முடிச்சுக்கள் நிரம்பிக் கிடந்தன. மக்கள் ஆங்காங்கு கூட்டம் கூட்டமாக உட்கார்ந்து நானாவிதமாகப் பேசிக்கொண்டிருந்ததால், சத்திரத்தின் சூழ்நிலை கடைவீதியின் சூழ்நிலையைத் தூக்கியடித்தது.

கூச்சல் நிரம்ப இருந்த அந்தச் சூழ்நிலையில், கூட்டத்தில் கலக்காமல் தீபஒளி வீசாத இருட்டடித்த மூலையில் முக்காடிட்டு உட்கார்ந்திருந்த இருவர் கலங்களிலிருந்த உணவை நிதானமாகவே அருந்திக் கொண்டிருந்தாலும், அவர்களிடமிருந்து நாலைந்து முழம் தள்ளி உட்கார்ந்திருந்த நான்கு பேர்கள் உரையாடல் மட்டும் அவர்கள் கவனத்தை இழுக்கவே, அவர்களிருவரும் உணவருந்துவது போல் பாசாங்கு செய்து கொண்டு உரையாடலைக் கேட்க முற்பட்டார்கள்.
சற்றுத் தள்ளியிருந்த நான்கு பேர்களில் ஒருவன், “இத்தனை கூட்டத்தை இந்தச் சத்திரத்தில் என்றாவது பார்த்திருக்கிறாயா?” என்று வினவினான்.

“திருவிழாக் காலங்களில் பார்த்திருக்கிறேன்,” என்றான் மற்றொருவன்.

“இப்பொழுது நடப்பது திருவிழாவல்லவே? அதற்கு நேர்மாறானதல்லவா நடக்கிறது?” என்றான் இன்னொருவன்.

“ஆம், ஆம்.” என்றான் முதலில் உரையாடலைத் துவக்கியவன்.

“இப்படி எல்லாக் கிராமங்களிலிருந்தும் மக்கள் வந்தால் இந்நகரம் தாங்குமா?” என்றான் இரண்டாமவன்.

“தாங்காதென்பது சேனாதிபதிக்குத் தெரியும்,” என்றான் முதல்வன்.

“தெரிந்து என்ன செய்யப் போகிறார்?” என்று கேட் டான் அலுப்புடன் இன்னொருவன்.

“நாளை முதல் என்ன நடக்கிறது பார்,” என்றான் முதல்வன்.

இதைக் கேட்ட மற்ற மூவரும் தலைநிமிர்ந்து முதல்வனை ஊன்றிப் பார்த்தார்கள். “என்னப்பா நடக்கும்?” என்று மற்ற மூவரும் ஏககாலத்தில் கேட்கவும் செய்தார்கள்.
“ரகசியத்தைக் காக்க உங்களால் முடியுமா?” என்றான் முதல்வன், தான் முக்கியஸ்தன் என்ற தோரணையில் சற்றுப் பெருமையுடன் மற்றவர்களை நோக்கி.

“ஏன் முடியாது?”

“நாங்கள் மூச்சுவிட மாட்டோம்.”

“சொல்லப்பா. நீ அரண்மனையில் இருப்பதால் உனக்குத்தான் தெரியும்”

இப்படி மூவரும் கெஞ்சவே முதல்வன் சற்றுத் தனது சகாக்களை நோக்கிக் குனிந்து, “வருகின்ற கும்பலை நகரத்தை விட்டு வெளியேற்றப் படைகளுக்கு ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது,” என்றான்.

“அப்படியா!” மற்ற மூவரும் வியப்புடன் வினவி னார்கள்.

“ஆம். இன்று நாளைக்குள் நகரத்திலிருந்து இந்தக் கும்பல் வெளியேறிவிடும். அதுமட்டுமல்ல இனி வரும் கும் பலைச் சூட்டோடு சூட்டாக வெளியேற்றி விடவும் உத்தரவு இருக்கிறது. இப்பொழுதுகூடச் சத்திரத்தின் மாடியிலிருந்து பார்த்தால் மக்கள் வரிசை நதிப்பிரவாகம் போல் தெற்கு நோக்கிப் போய்க் கொண்டிருப்பதைப் பார்க்கலாம்,” என்றான் முதல்வன்.
‘அதனால் தான் குதிரை வீரர் அணிவகுப்புக் கிடையே மக்கள் வருகிறார்களா?” என்று கேட்டான் ஒருவன்.

“ஆம்.”

“அப்படியானால் இந்தச் சந்திரத்திலிருப்பவர்கள் என்றைக்கு வெளியேற்றப்படுவார்கள்?”

“இன்னும் ஒரு நாளையில். இவர்களெல்லாம் முன்னமே வந்து தங்கிவிட்டவர்கள். இருப்பினும் எந்த வினாடியிலும் படைவீரர்கள் வந்து இவர்களைக் கிளப்பிவிடலாம்.”

“அப்பொழுது சத்திரம் காலியாகிவிடும்?”

“ஆம். அதுமட்டுமல்ல, இங்கு தங்கும் யாராயிருந்தாலும் அவர்கள் கண்காணிக்கப்படுவார்கள்.”

“ஏன்?”

“இந்தக் கூட்டத்தில் பாண்டியன் ஒற்றர்களும் கலந்து கும்பலோடு கும்பலாக நகரத்துக்குள் நுழையலாமென்று சேனாதிபதி நினைக்கிறார்.”

“அப்படியானால் இங்கு தங்குவது ஆபத்து என்று சொல்!”

“ஆம். மிகவும் ஆபத்து.”
இந்தச் சமயத்தில் சம்பாஷணை சிறிது நின்றது. “அரண்மனையில் வேலை பார்ப்பதால் உனக்கு இத்தனையும் தெரிகிறது. எங்களுக்கு என்ன தெரிகிறது?” என்றான் மற்ற மூவரில் ஒருவன் முதல்வனைப் பார்த்து.

அந்தப் பாராட்டுதல் அரண்மனைக் காவலனின் பெருமையைக் கிளறிவிடவே மேலும் அவன் வாய்மடை திறந்தது. “அதுமட்டுமல்ல தம்பி!” என்று துவங்கினான் அவன்.

“வேறென்னப்பா?” மூவரிலொருவுன் ஆசையுடன் கேட்டான்.

“பாண்டியன் மகளைச் சிறையெடுத்திருக்கிறாரே மன்னவர்…” என்ற அரண்மனைக் காவலன் சற்றுப் பயத்துடன் முன்னும் பின்னும் பார்த்து மூலையில் உட்கார்ந்திருந்த இருவரை நோக்கியதும், “யாரோ அந்த மூலையில் இருக்கிறார்கள்” என்று கூறி வாயை மூடிக் கொண்டான்.

அதுவரை உணவருந்துவதைவிட்டு உரையாடலைக் கவனித்துக் கொண்டிருந்த இருவரும் மீண்டும் கலத்தை நோக்கி உண்ணுவதுபோல் பாசாங்கு செய்தனர். அதைச் சுட்டிக் காட்டிய ஒருவன் சொன்னான், “அவர்கள் அராபியர், தமிழ் தெரியாது” என்று.

“உனக்கெப்படித் தெரியும்?” அரண்மனைக் காவலன் கேள்வியில் சந்தேகம் ஒலித்தது.
“இத்தனை செய்திகளை நீ சொல்லும்போது தமிழ் தெரிந்தவனாக இருந்தால் தலைகுனிந்து உணவருந்தவா செய்வான்?” என்று மற்றவன் ஊக்கவே முதல்வன் பேச ஆரம்பித்து, “பாண்டியர் மகளை அரசர் கடற்கரை மாளிகைக்குத் திரும்ப அனுப்பவில்லை. அரண் மனையிலேயே சிறை வைத்திருக்கிறார்,” என்றான்.

“ஏனாம்?”

“செண்டுவெளியில் ஒருவன் தப்பியோடி விட்டானே…”

“ஆம்.”

“அவன் வந்து பாண்டியர் மகளை மீட்க முயலலா மென்று அரசர் அவளை அரண்மனையில் பலமான காவலில் வைத்திருக்கிறார்.”

“பலமான காவலென்றால்?”

”அரண்மனையில் மேற்புற வாசலுக்கருகில் அரண்மனையின் கடைசிக் கட்டு இருக்கிறதல்லவா?”

“ஆம்.”

“அங்குதானிருக்கிறாள் பாண்டியகுமாரி. அங்கு சுமார் நூறு வீரர்கள் மாற்றி மாற்றிக் காவல் புரிகிறார்கள். அரசர் உத்தரவின்றி யமன்கூட அங்கு நுழையமுடியாது. நேற்று வரை சிறையில் தள்ளப்பட்டிருந்த குருநாதரும் அந்த இடத்துக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்,” என்றான் அரண்மனைக் காவலன்.

“குருநாதரைச் சிறை செய்ய மன்னனுக்குத் துணிவு வேண்டும்,” என்றான் மற்ற மூவரில் ஒருவன்.

“போதாத காலம் வந்தால் எதற்கும் துணிவு வரும்,” என்ற அரண்மனைக் காவலன், “இதைப் பற்றி நாம் பேசினால் மன்னன் நம்மையும் சிறையில் தள்ளுவான். உணவை முடித்துக் கொள்ளுங்கள். செல்வோம்” என்றும் கூறினான்.

அதற்கு மேல் அந்த நால்வரும் பேசவில்லை, உணவை முடித்துக்கொண்டு செல்லப் புறப்பட்டார்கள். அரண்மனைக் காவலன் மட்டும் உணவருந்தி முடிந்ததும் சத்திரத்தின் வாயிலை நோக்கிச் சென்றான். அவ்வளவுதான். மூலையில் முக்காடிட்டிருந்த இருவரும் தட்டில் அவசர அவசரமாகக் கை கழுவி நீளமாக நாற்புறமும் தொங்கிய தங்கள் அராபிய உடையில் துடைத்துக் கொண்டு, அந்த அரண்மனைக் காவலனைத் தொடர்ந்து சென்றார்கள். அவர்கள் வாயிலில் வந்ததும் சற்றுத் தூரத்தில் கண்ணுக்குத் தென்பட்ட அக்காவலனைத் தொடர்ந்தனர். – அரண்மனைக் காவலனும் சத்திரத்துக்குப் பின்புறமிருந்த பாதையில் திரும்பி அரண்மனை நோக்கிச் சென்ற தெருவில் சென்றான்.

அவன் நடையில் பெருமை இருந்தது. கால்களை வீசி அனாயாசமாகத் தலையை நிமிர்ந்து நடந்து சென்றான். அந்த உற்சாகத்தினாலும் தெரு நடுவில் கும்பல் சென்று கொண்டிருந்தபடியாலும் பின்னால் நிழல் போல் தொடர்ந்து வந்த இருவரைக் கவனிக்காமலே கைகளை வீசி நடந்த அரண்மனைக் காவலன், தன்மீது பலமாக உரசிக் கொண்டே ஒருவன் சென்ற பின்பே சற்றுச் சுரணை வந்ததால், “யார் நீ? மாடு போல் மோதுகிறாய்.” என்று சீறினான்.

அவனை உரசியவன் அரபுநாட்டு மொழியில், “மன்னிக்க வேண்டும், கவனிக்கவில்லை,” என்று சொல்லிக் கையைப் பூமியில் தொட்டுச் சிரம்தாழ்த்தி வணங்கிவிட்டுச் சென்றான்.

அப்படி அவன் வேகமாக இடித்துக்கொண்டு சென்றாலும் முன் சென்றதும் நடையைத் தளர்த்திக் கொண்டதையும் நிதானமாக நடக்க முற்பட்டதையும் கண்ட அரண்மனைக் காவலனுக்குச் சந்தேகம் ஏற்படவே பின்னால் திரும்பி நோக்கினான். பின்னும் ஓர் அராபியன் தன்னைத் தொடர்ந்து வருவதைப் பார்த்ததும், சற்று வேகமாக நடக்கத் துவங்கினான். அவன் வேகமாக நடக்கத் துவங்கியதும் அவன் அடி ஓசை கேட்டதனாலோ என்னவோ முன் சென்ற அராபியனும் துரிதமாக நடந்தான். பின்வந்தவனும் துரித நடை போட்டான்.

அரண்மனைக் காவலனின் சந்தேகம் தெளிந்து விட்டது. அந்த இருவரும் தன்னைக் காரணமாகவே தொடர்ந்து வந்திருக்கிறார்களென்பதையும், இப்பொழுது அவர்கள் தனக்கு முன்னும் பின்னும் இருப்பதால் தான் அவர்கள் கைக்குள் சிக்கியிருப்பதையும் உணர்ந்தான். ஆகவே அவன் சற்று நிதானத்துடனேயே மீண்டும் நடக்க முற்பட்டான்! இப்படித் தெரு முழுவதும் காவல் வீரரும் மிக அதிகமாய் இருந்ததால் துணிவு கொண்டு சரேலென நடுவீதிக் கும்பலை அடைந்து அதில் கலந்து கொண்டான்.

தெரு சற்றுக் குறுகலானதால் ஜனநெருக்கம் அதிகமாயிருந்தது. இத்தகைய கும்பலில் கலந்துவிட்ட அரண்மனைக் காவலன் நிம்மதிப் பெருமூச்சு விட்டான். அப்பொழுதும் வீதியோரமாகத் தன்னைப் பார்த்துக் கொண்டே வந்திருந்த அராபியனை வீரர்களிடம் காட்டிக் கொடுத்துவிட்டால் தனது ஆபத்து நீங்கியது என்று தீர்மானித்த அரண்மனைக் காவலனுக்கு மனநிம்மதியோடு மனமகிழ்ச்சியும் ஏற் பட்ட து.

அப்பொழுது தனக்கு நேர் எதிரில் அடுத்த தெரு முனையில் நின்று கொண்டிருந்த இரு புரவி வீரர்களுக்குச் சமிக்ஞை செய்யக் கை உயர்த்த முற்பட்டான். கை உயரவில்லை. சற்று உயர முற்பட்ட கை சட்டென்று கீழேயே விழுந்தது. அரண்மனைக் காவலன் மார்பு படபடவென்று அடித்துக்கொண்டது. பின்னால் வந்த அராபியன் கூட்டத்தில் தன்னுடன் மிக நெருங்கி நிற்பதையும், அவன் உடல் தன் உடலுடன் அழுந்தி நிற்பதையும் புரிந்து கொண்ட அரண்மனைக் காவலன் திகிலடைந்தான். அந்தத் திகிலை அதிகப்படுத்த அவன் முதுகை, அராபியன் சீலைக்குள் மறைந்திருந்த கத்தியின் முனை தடவிக் கொண்டிருந்தது. “பேசாமல் நட. சைகை எது செய்தாலும் அடுத்த சைகை செய்ய முடியாது,” என்று அவன் காதுக்கருகில் பயங்கரச் சொற்கள் ஒலித்தன.

அரண்மனைக் காவலன் பேசாமல் நடந்து சென்றான். அதற்குப் பிறகு அரண்மனைக் காவலனை அவன் முதுகிலிருந்த கத்தி முனையும் அராபியனின் கையெழுத்துமே திருப்பிச் சென்றன. சூத்திரப்பாவையென நடந்து சென்ற அவன் சற்று நேரத்திற்கெல்லாம் ஒரு மலைப் பாதையின் சரிவில் காட்டுக்குள் இறக்கிச் செல்லப் பட்டான். அதற்குள் முன் சென்ற அராபியனும் தனது நண்பனுடன் சேர்ந்து கொள்ளவே இருவருக்கிடையிலும் – நண்பன் போல் நடந்து சென்ற அரண்மனைக் காவலன் பக்கத்திலிருந்த காட்டுக்குள் அழைத்துச் செல்லப்பட்டான். ஒரு மரத்தடிக்கருகில் வந்ததும் அராபியரில் ஒருவன் சொன்னான் காவலனை நோக்கி, “நண்பரே! இனி நாம் நிதானமாகப் பேசலாம்” என்று.

“யார் நீ?” காவலன் கேள்வி கிலியுடன் வெளிவந்தது. பதிலுக்கு முக்காட்டை எடுத்தான் அராபியன்.

காவலன் முகத்தில் பீதி எல்லையற்றுப் பரவியது. “நீயா!” என்ற ஒற்றைச் சொல் கிலியுடன் தோய்ந்து உதிர்ந்தது. அது யார்?” என்று அடுத்த கேள்வியும் நடுங்கிய குரலில் வெளிவந்தது அரண்மனைக் காவலனிடமிருந்து.

“என்னைவிட அவர் உனக்குத் தெரிந்தவர்,” என்ற முதல் அராபியன் மற்றவனை முக்காட்டை நீக்கச் சொன்னான்.
அவ்வளவுதான். காவலன் முகத்திலிருந்து கிலி நீங்கி, பிரமிப்பு அந்த இடத்தை ஆட்கொண்டது.

Previous articleRaja Muthirai Part 2 Ch24 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Muthirai Part 2 Ch26 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here