Home Historical Novel Raja Muthirai Part 2 Ch28 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

Raja Muthirai Part 2 Ch28 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

58
0
Raja Muthirai Part 2 Ch28 Raja Muthirai Part 2 Sandilyan, Raja Muthirai Part 2 Online Free, Raja Muthirai Part 2PDF, Download Raja Muthirai Part 2 novel, Raja Muthirai Part 2 book, Raja Muthirai Part 2free, Raja Muthirai,Raja Muthirai Part 2 Story in tamil,Raja Muthirai Part 2 Story,Raja Muthirai Part 2 novel in tamil,Raja Muthirai Part 2 novel,Raja Muthirai Part 2 book,Raja Muthirai Part 2 book review,ராஜ முத்திரை ,ராஜ முத்திரை கதை,Raja Muthirai Part 2tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2full story,Raja Muthirai Part 2 novel full story,Raja Muthirai Part 2audiobook,Raja Muthirai Part 2audio book,Raja Muthirai Part 2full audiobook,Raja Muthirai Part 2full audio book,
Raja Muthirai Part 2 Ch28 | Raja Muthirai | TamilNovel.in

Raja Muthirai Part 2 Ch28 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

ராஜ முத்திரை இரண்டாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 28 குறிஞ்சியும் சாத்தனும்

Raja Muthirai Part 2 Ch28 | Raja Muthirai | TamilNovel.in

காட்டு மலரைப் போலவே செழித்து வளர்ந்திருந்த கட்டழகி குறிஞ்சி விஜயவர்மனின் பணிப்பெண் என்பதை அறிந்ததும் சாத்தன் எதற்காக அத்தனை அச்சப்பட்டான், குழறினான் என்பதை அறியாத இந்திரபானுவும் கூத்தனும் பெருங்குழப்பத்துடன் அரண்மனைக் காவலனை உற்று நோக்கினர்.

“அது மட்டுமல்ல,” என்று அவன் கூறியதில் ஏதோ யாருமறியாத உண்மை புதைந்து கிடப்பதையும் அவர்கள் உணர்ந்து கொண்டதால் பணிப்பெண் குறிஞ்சிமீது அவர்கள் சந்தேகம் கலந்த பார்வையும் வீசினார்கள்.

இத்தனைக்கும் பணிப்பெண் குறிஞ்சி எந்தவித அச்சத்தையும் சஞ்சலத்தையும் காட்டாமல் உதட்டில் அரும்பி நின்ற புன்னகை அரும்பியபடியே நின்றுகொண்டிருந்தாள். “சரி சாத்தா! அரண்மனைக்குக் கிளம்பலாமா?” என்று அவள் கேட்ட கேள்வியிலும் அலட்சியம் நிறைந்திருந்ததே யொழிய அரண்மனைக்குள் போகப் போகிறோமே, ஆபத்தில் தலையிடப் போகிறோமே என்ற அச்சம் சிறிதும் இல்லை.

அவள் நிதான நிலை சாத்தன் அச்சத்தையும் ஓரளவு துடைத்துவிடவே, அவன் வியப்பு நிரம்பிய விழிகளை அவள் மீது திருப்பியதன்றி, “சரி அம்மணி, தங்கள் இஷ்டம் இதுவானால் ஏழை காத்திருக்கிறேன்,” என்றும் கூறினான்.

அரண்மனைக் காவலன் பேச்சின் தோரணை திடீரென மாறிவிட்டதையும், அவன் பேச்சின் பாணி பணிப்பெண்ணுடன் பேசும் பேச்சைப்போல் இல்லை யென்பதையும் கவனித்த இந்திரபானு, பணிப் பெண்ணையும் சாத்தனையும் சந்தேகம் துளிர்த்த கண்களுடன் மாறிமாறிப் பார்த்தான். “சாத்தா! இவளைப் பற்றி உனக்கென்ன தெரியும்?” என்று சந்தேகம் ஒலித்த கேள்வியொன்றையும் வீசினான். அவன் கேள்வியில் வழக்கமான நகைச்சுவையில்லை. கண்களில் தவழும் விஷமமும் இல்லை. குரல் வறட்சியுடன் ஒலித்தது. கண்களில் சீறிய பார்வை படர்ந்து கிடந்தது.

சாத்தன் தயங்கினான். வெளியிடத் தகாத விஷயத்தை வெளியிட்ட பீதி அவன் முகத்தில் மண்டிக் கிடந்தது. அந்தப் பீதியுடன் குறிஞ்சியை ஒருமுறை நோக்கினான். பிறகு கண்களை நிலத்தில் தாழ்த்தினான். அவன் வாயிலிருந்து சொற்கள் ஏதும் வெளிவரவில்லை.

“சாத்தா! நான் கேட்பது உன் காதில் விழவில்லை?” என்ற கேள்வி இந்திரபானுவிடமிருந்து சீறி வந்தது.

“விழுந்தது,” நிலத்தை உற்று நோக்கிக்கொண்டே கூறினான் சாத்தன்.

“பின் ஏன் பதில் சொல்லவில்லை?” என்று மீண்டும் கேட்டான் இந்திரபானு உஷ்ணத்துடன்.

சாத்தன் மெள்ளத் தலை நிமிர்ந்து இந்திரபானுவைத் திடமாக நோக்கினான். அவன் உள்ளத்தில் ஏதோ ஒரு முடிவு ஏற்பட்டதை அந்தப் பார்வையிலிருந்தே புரிந்து கொண்ட இந்திரபானு சாத்தன் பதிலை நிதானத்துடன் எதிர்பார்த்து நின்றான்.

சாத்தன் மெள்ளச் சொன்னான், “இவர்கள் யாரென்பது அறிந்ததும் ஏற்பட்ட அதிர்ச்சி என்னைக் கலக்கிவிட்டது,” என்று.

இதை அடுத்துக் கூத்தன், “யாரென்று அறிந்தாய் சாத்தா?” என்று வினவினான்.

சாத்தன் அவனைக் கூர்ந்து நோக்கினானேயொழிய, பதிலேதும் சொல்லாமல் இந்திரபானுவை நோக்கியே உரை யாட முற்பட்டு, “இவர்கள் விஜயவர்மனின் பணிப்பெண் என்று அறிந்தேன் ” என்றான்.

“அதைத்தான் இவளே சொன்னாளே!” என்றான் இந்திரபானு.

“ஆம், சொன்னார்கள்.”

“அப்படியிருக்க அதிர்ச்சி எங்கிருந்து வந்தது?”

“கோட்டாற்றுக் கரைக் கோட்டையிலிருக்க வேண்டிய இவரை இங்கு நான் எதிர்பார்க்கவில்லை.”

“ஏன் எதிர்பார்க்கவில்லை?”

“கோட்டாற்றுக் கரைக் கோட்டையைச்சுற்றிலும் எங்கள் படை நிற்கிறது. தவிர, வீரபாண்டியன் சரணடைய ஒப்புக்கொண்டதாகச் சிங்கணன் ஓலையனுப்பியிருப்பதையும் மன்னர் செண்டுவெளியில் படித்துக் காட்ட வில்லையா?”

“ஆம், காட்டினார்.”

“அப்படியிருக்க, விஜயவர்மனின் பணிப்பெண் இங்கு வருவதானால் சிங்கணன் அனுப்பி வரவேண்டும் அல்லது, வீரபாண்டியர் சரணடைந்த பின்பு விஜயவர்மர் அனுப்பி வரவேண்டும். யார் அனுப்பினாலும் சேரர் படைத் தலைவர் அனுப்பி, சேரநாட்டுச் சார்பில் மன்னர் அரண்மனைக்கு வரவேண்டும்.”

“ஆம், ஆம்.”

“அப்படிக்கின்றி, இவர்கள் பாண்டிய மன்னன் ஒற்ற ராக மற்ற இரு ஒற்றர்களுடனும் கலந்து வந்திருக்கிறார் கள்…” இந்த வாசகத்தைச் சாத்தன் முடிக்கவில்லை. இருப்பினும் அவன் சொல்வதில் அர்த்தமிருப்பதாகவே தெரிந்தது கூத்தனுக்கு. சாத்தன் குழப்பத்துக்கும் குழறலுக்கும் இந்தக் காரணமே போதுமென்று நினைத்தான் கூத்தன்.
இந்திரபானு அப்படி நினைக்கவில்லை. சாத்தன் காட்டிய காரணத்தில் நியாயமிருந்தபோதிலும், அவன் எதையோ மறைக்கிறானென்பதை உணர்ந்துகொண்ட இந்திரபானு ஒரு வினாடி சாத்தனை உற்று நோக்கினான். அத்துடன், “சாத்தா! காரணம் கோவையாகத் தானிருக்கிறது” என்றும் கூறினான்.

அதைக் கேட்ட சாத்தன் முகத்தில் கவலை மறைந்தது. சாந்திப் பெருமூச்சு ஒன்றும் நாசியிலிருந்து கிளம்பியது. அந்தச் சாந்திப் பெருமூச்சையும் கவனித்தான் இந்திரபானு. அவன் முக உல்லாசத்தையும் பார்த்தான். அதனால் நிச்சயமான உள்ளக் கருத்துடன் கேட்டான்; “சாத்தா! நீ கூறுவதெல்லாம் உண்மைதான். ஆனால் இந்தச் சாதாரணப் பணிப்பெண்ணை எதற்காக, ‘நீங்கள் இவர்கள்’ என்று மிகுந்த மரியாதையுடன் அழைக்கிறாய்?” என்று.

“பெண்களிடம் மரியாதையாயிருப்பது தவறா?” என்று கேட்டான் சாத்தன் சிறிதும் மசியாமல்.

“தவறல்ல சாத்தா! பண்பாட்டுக்கு அறிகுறி அது. ஆனால் உன் பண்பாடு அடிக்கடி மாறுகிறதே?” என்றான் . இந்திரபானு.

“பண்பாடு மாறுகிறதா?” வியப்புடன் வினவினான் சாத்தன்.

“ஆம். சாத்தா. முதலில் இப்பணிப்பெண்ணை நீ நீ என்று அழைத்தாய். திடீரென்று நீங்கள் நீங்கள் என்று அழைக்க முற்பட்டு விட்டாய். எதிலும் ஒரு தொடர்ச்சி இருப்பது நல்லதல்லவா?” என்ற இந்திரபானு விஷமப் புன்னகை கோட்டினான். எதிலும் என்ற வார்த்தையை அவன் அளவுக்கு அழுத்தியும் உச்சரித்தான்.

இந்திரபானுவின் விஷமப் புன்னகையையோ, எதிலும் என்ற சொல்லைச் சற்று அழுத்திச் சொன்னதையோ கவனிக்கத் தவறாத சாத்தன் மீண்டும் சங்கடத்திற்குள்ளாகி, “நீங்கள் சொல்வது விளங்கவில்லை,” என்றான் குரலில் சங்கடம் சந்தேகமின்றித் துலங்க.

அதுவரை அவர்கள் உரையாடலில் கலக்காமல் தனித்து நின்ற பணிப்பெண் குறிஞ்சி இடை புகுந்து, “சாத்தா! நீ திடீரென்று என்னிடம் மரியாதை காட்டியது இவருக்குச் சந்தேகத்தை அளித்திருக்கிறது. அதற்குக் காரணத்தைக் கூறிவிடேன்,” என்றாள் சர்வசாதாரணமாக.

இந்திரபானு குறிஞ்சியின் முகத்தின்மீது தனது பார் வையை நிலைக்க விட்டான். அவன் பார்வையைக் கண்டு அஞ்சவில்லை குறிஞ்சி. அழகிய அவள் விழிகள் மிகுந்த அலட்சியத்துடனும் தைரியத்துடனும் அவன் கண்களுடன் கலந்தன. அந்தக் கண்களின் காந்தத்திலிருந்து இந்திர பானுவே தனது கண்களை இழுத்துக் கொண்டான். அதைக் கண்டு லேசாக நகைத்த குறிஞ்சி, “உண்மையைச் சொல் சாத்தா! இவர்கள் சந்தேகமும், சந்தேகத்தில் விளைந்த அச்சமும் அகலட்டும்!” என்று கூறினாள்.
சாத்தன் மெள்ள தைரியத்தை வரவழைத்துக் கொண்டு இந்திரபானுவை ஏறிட்டு நோக்கினான். “இவர்கள் சாதாரணப் பணிப் பெண்ணல்ல. விஜயவர்மர் அரண்மனையில் இவர்களுக்குத் தனி இடமுண்டு. கோட்டைத் தலைவருக்குள்ள மரியாதை இவர்களுக்கும் காட்டப்படும் அங்கு,” என்று திட்டமான குரலில் அறிவித்தான் சாத்தன்.

“ஏன் அப்படி?” இந்திரபானுவின் கேள்வியும் உறுதியுடன் எழுந்தது.

இம்முறை குறிஞ்சி பதில் கூறினாள். “ஏனென்றால் நான் அரண்மனை மருத்துவர் மகள். கோட்டைத் தலைவருக்குத் தலைவலியென்றால் கூடச் சுக்கு அரைத்துப் போடுகிறவள் நான்தான். அவர் மனைவி ஈன்றெடுத்த இரு குழந்தைகளையும் உலகின் ஒளிக்கு எடுத்துவந்தவள் நான்தான். நாங்கள் அரச மருத்துவர் குலம். சேரநாட்டின் எட்டு வைத்தியக் குடும்பங்களில் எங்கள் குடும்பம் பிரதானமானது,” என்ற குறிஞ்சி பெருமிதத்துடன் இந்திர பானுவை நோக்கினாள்.

இந்திரபானுவுக்கு அவள் சொன்னது சரியென்றே புலப்பட்டது. இருப்பினும் விவரிக்க இயலாத சந்தேக மொன்று அவன் மனத்திலிருந்து அகல மறுத்தது. ஆகவே மீண்டும் கேட்டான் அவன், “விஜயவர்மரின் அந்தரங்க மருத்துவப் பெண் எதற்காகப் பாண்டியர் வேவுகாரியாக மாற வேண்டும்?” என்று.

குறிஞ்சியின் செவ்விய இதழ்கள் இகழ்ச்சியுடன மடிந்தன. “இந்தக் கேள்வியை நீங்கள் என்னிடம் கேட்க வேண்டியதில்லை,” என்றாள் அவள் இந்திரபானுவைச் சிறிதும் லட்சியம் செய்யாமல்.

“வேறு யாரிடம் கேட்கவேண்டும்?” இந்திரபானுவின் குரல் சற்று உஷ்ணத்துடன் ஒலித்தது. அவன் நிலை குலைந்துவிட்டானென்பதையும் அந்த ஒலி விளக்கிக் காட்டியது.

குறிஞ்சியின் இகழ்ச்சி முகத்திலும் படர்ந்தது. “உங்கள் கேள்வியை நீங்கள் ஒன்று பாண்டிய மன்னனிடம் கேட்க வேண்டும். அல்லது வீரபாண்டியரிடம் கேட்க வேண்டும்,” என்றாள் குறிஞ்சி இகழ்ச்சி குரலிலும் ஒலிக்க.

இந்திரபானு பதில் சொல்ல வகை தெரியாமல் திணறினான். சிறிது நேரம் தீவிர சிந்தனையிலும் இறங்கினான். செண்டு வெளியிலிருந்து தப்பிச் சென்ற தன்னைக் காட்டு முகப்பில் சந்தித்ததும் கூத்தன், பிறகு இந்தப் பெண்ணைத் திடீரென அழைத்து வந்ததும் கூத்தன், குறிஞ்சியைப் பாண்டிய மன்னர் அனுப்பியதாகவும் அவளை முத்துக் குமரிக்குத் துணையாகச் சேர்த்து விடுமாறு உத்தரவிட்டதாகவும் செய்தி கொண்டு வந்ததும் கூத்தன், இந்திரபானு கடைசியில் அவனையே கேட்டான், “கூத்தா! இவளை எப்படி நீ சந்தித்தாய்?” என்று.

“என்னையும் என் மனைவியையும் கூத்தர் குடிசைக் கூட்டத்திலிருந்து உங்கள் புரவியில் ஏற்றிவிட்டதும் உங்கள் உத்தரவுப்படி வடமேற்கில் காட்டுக்குள்ளே பயணம் செய்தேன்! நீங்கள் எதிர்பார்த்தபடி பாண்டிய வீரர்களால் இரண்டு காதத்துக்குப் பிறகு சூழ்ந்து கொள்ளப்பட்டேன். ராஜமுத்திரை பொறித்த முத்திரை மோதிரத்தைக் காட்டியதும் பாண்டிய மன்னர் பாசறைக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். அங்கு மன்னனே என்னை நேரில் விசாரித்தார். நீங்கள் சேரர் தலைநகரில் இருப்பதைக் கேட்டதும் பெருமகிழ்வு கொண்டார். எனக்கும் என் மனைவிக்கும் சகல வசதிகளும் அளிக்கப்பட்டன. அடிக்கடி பாண்டியப் படைகள் காடு விட்டுக் காடும், ஊர்விட்டு ஊரும் நககர்ந்து கொண்டிருந்தன. திடீரென ஒருநாள் இவள் வந்து சேர்ந்தாள். வீரபாண்டியரிடமிருந்து ஓர் ஓலையும் கொண்டு வந்தாள். அதைப் படித்ததும் இவளை அழைத்துக்கொண்டு இந்தத் தலைநகருக்குச் செல்லுமாறும், உங்களைச் சந்திக்குமாறும் உத்தரவிட்டார். நாங்கள் தலை நகருக்கும் வந்தபோது தனியாக வரவில்லை. இன்னும் பத்துச் சாதாரணக் குடிகளும் வந்தார்கள். இவளை அவர்களுடன் தங்கவிட்டுத் தங்களைக் காட்டு முகப்பில் சந்தித்தேன். பிறகு நடந்தது உங்களுக்குத் தெரியும்,” என்று விளக்கினான் கூத்தன்.

இந்திரபானு தீவிரச் சிந்தனையில் இறங்கினான். பிறகு கேட்டான், “கூத்தா! இவளைப் பற்றி பாண்டிய மன்னர் என்ன சொன்னார்?” என்று.

“இவள் எதைச் சொன்னாலும் அதற்குப் பணியும்படி உத்தரவிட்டார் பாண்டிய மன்னர்,” என்றான் கூத்தன்.
“உன்னிடம் பாண்டிய மன்னரே அப்படி நேரில் சொன்னாரா?” என்று மீண்டும் வினவினான் இந்திரபானு.

“ஆம் தம்பி! இவள் முன்னதாகவே சொன்னார் பாண்டிய மன்னர். ‘கூத்தா! இவளை நமக்குச் சமதையாக நடத்தும்படி வீரபாண்டியன் எழுதியிருக்கிறான். இவள் சொற்படி கேள், இந்திரபானுவையும் கேட்கச் சொல். இவள் ஆணை என் ஆணையாகும். என்று திட்டமாக உத்தரவிட்டார் சுந்தரபாண்டியத் தேவர்.” என்று கூத்தன் தங்கு தடையில்லாமல் அரசாக்ஞையை எடுத்துச் சொன்னான்.

இந்திரபானு அதற்கு மேல் அதிகம் பேசவில்லை . “சாத்தா! இவளை அழைத்துக்கொண்டு அரண்மனைக்குச் செல். இவள் உத்தரவு எதுவானாலும் எங்களுக்குத் தெரிவி” என்று சாத்தனிடம் கூறிவிட்டு, “குறிஞ்சி! நீ விஜயவர்மன் பணி மகளானாலும் சரி, அவர் மதிப்புக்குரிய மருத்துவர் மகளானாலும் சரி, இப்பொழுது பாண்டிய மன்னரின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவள் என்பதை நினைப்பில் வைத்துக் கொள். அதற்குத் துரோகம் செய்யாமல் நடந்து கொள்,” என்று பணிப்பெண்ணை நோக்கிக் கூறிவிட்டு அவர்கள் செல்லலாமென்பதற்கு அறிகுறியாகக் கையை ஆட்டினான்.

அதற்குமேல் ஏதும் பேசாத சாத்தன் குறிஞ்சியைத் தன்னுடன் வரச் சைகை செய்துவிட்டுத் தனது விடுதியை விட்டுக் கிளம்பினான். விடுதிக்கு வெளியே கூப்பிடு தூரத்தில் அரண்மனையின் பெரிய சுவர் இருந்தது. அதன் தளத்தில் வீரர்கள் நடமாட்டமிருந்ததாலும் வாயிலில் புரவி வீரர் காவல் புரிந்ததாலும் அரண்மனைப் பகுதி அந்தக் காலை நேரத்தில் வெகு கம்பீரமாகக் காட்சியளித்தது. அரண்மனையின் பெரிய மதில்களுக்கும் காவலர் விடுதிகளுக்கும் இடையேயிருந்த பெருவீதியில் காவலுக்கு விரைந்து கொண்டிருந்த வீரர்கள் புரவிகளை அடித்த சாட்டையொலி எங்கும் எதிரொலித்தது.

விடுதியிலிருந்து வீதிக்கு வந்த சாத்தனும், குறிஞ்சியும் நீண்ட தூரம்வரை பேசாமலே நடந்தனர். கிட்டத்தட்ட அரண்மனை வாயிலருகில் வந்த சமயத்தில் குறிஞ்சியே பேச்சைத் தொடங்கினாள், “சாத்தா! நமது நிலை எப்படி?” என்று .

“மிக சௌக்கியம்,” சாத்தன் வெறுப்புடன் பதில் சொன்னான்.

“நல்லவேளை சாத்தா. நான் யாரென்பதை உளறா திருந்தாயே?”

“நீங்கள் குறுக்கிடாதிருந்தால் உளறித்தானிப்பேன்!’

‘ “என்ன வென்று! விஜயவர்மன் மகளென்றா?”

“உச், வாயை மூடு! உனக்கென்ன – பைத்தியமா!” என்று சாத்தன் மிகுந்த திகிலால் அடியோடு மரியாதை யைக் கைவிட்டுக் கூவினான்.

Previous articleRaja Muthirai Part 2 Ch27 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Muthirai Part 2 Ch29 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here