Home Historical Novel Raja Muthirai Part 2 Ch3 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

Raja Muthirai Part 2 Ch3 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

61
0
Raja Muthirai Part 2 Ch3 Raja Muthirai Part 2 Sandilyan, Raja Muthirai Part 2 Online Free, Raja Muthirai Part 2PDF, Download Raja Muthirai Part 2 novel, Raja Muthirai Part 2 book, Raja Muthirai Part 2free, Raja Muthirai,Raja Muthirai Part 2 Story in tamil,Raja Muthirai Part 2 Story,Raja Muthirai Part 2 novel in tamil,Raja Muthirai Part 2 novel,Raja Muthirai Part 2 book,Raja Muthirai Part 2 book review,ராஜ முத்திரை ,ராஜ முத்திரை கதை,Raja Muthirai Part 2tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2full story,Raja Muthirai Part 2 novel full story,Raja Muthirai Part 2audiobook,Raja Muthirai Part 2audio book,Raja Muthirai Part 2full audiobook,Raja Muthirai Part 2full audio book,
Raja Muthirai Part 2 Ch3 | Raja Muthirai | TamilNovel.in

Raja Muthirai Part 2 Ch3 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

ராஜ முத்திரை இரண்டாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 3 சூழ்ந்த ஆபத்து

Raja Muthirai Part 2 Ch3 | Raja Muthirai | TamilNovel.in

வானிலிருந்து விண்மீன்கள் வீசிய லேசான ஒளியிலும் பளபளத்துக் கண்ணைப் பறித்த, விலைமதிப் பற்ற வைரங்கள் பதித்த, பாண்டிய ராஜமுத்திரை மோதிரத்தைக் கையில் வாங்கியதும் கலவரத்துக்குட்பட்ட தன்றி, “நீ யார் தம்பி?” என்று அச்சக் குரலும் கொடுத்த மலைமகளை முறுவல் விரிந்த முகத்துடன் நோக்கிய வாலிபன், “அண்ணி! நான் யாராயிருந்தாலென்ன? தற்சமயம் இந்த அண்ணனுக்குத் தம்பி! உங்களுக்குக் கொழுந்தன். மற்றதைப்பற்றி இப்பொழுதென்ன? நான் சொல்கிறபடி செய்யுங்கள்,” என்று கூறினான்.

அவன் அத்தனை திட்டமாகச் சொன்ன பேச்சைக் காதில் வாங்க மறுத்த மலைமகள் பெண் சுபாவத்தைக் காட்டத் தொடங்கி, “அப்படியில்லை தம்பி! நீ வந்த நாளாக உன் பெயரைச் சொல்லவில்லை. கேட்டதற்கு, ‘தம்பி’ என்று அழையுங்கள் அது போதும் என்று கூறினாய். அப்படித்தான் அழைத்து வந்தோம் தம்பி. உன் நல்ல குணத்தால் எங்கள் வீட்டுப் பிள்ளையாகிவிட்டதால் உன் பெயரை நாங்கள் கேட்க மறந்து விட்டோம். மற்றக் குடிசைக்காரரும் கேட்கவில்லை. எல்லோரும், தம்பி, தம்பி,’ என்றழைக்க, கூத்தர் கூட்டத்துக்கே தம்பியாகி விட்டாய். ஆனால் இன்று நிலைமை வேறு. இதுவரை இந்தக் குடிசைக் கூட்டத்தில் நடக்காத விபரீதம் இன்றிரவு நடந்திருக்கிறது. எங்களை எங்கோ அனுப்புகிறாய். கையில் நீ கொடுத்து இருப்பதோ பாண்டியர் முத்திரை மோதிரம். இன்னும் நீ யாரென்று சொல்லாதிருப்பது சரியல்ல தம்பி! நாம் இப்பொழுது பிரிகிறோம். இப்பொழுதாவது சொல்” என்று வினவினாள் கையிலிருந்தத மோதிரத்தையும் பார்த்து, பிறகு அவன் மீது கண்ணை ஓட்டி .

வாலிபன் சிறிது சிந்தித்துவிட்டுப் பதில் கூறினான்: “அண்ணி! நீங்கள் செல்கிற இடத்தில் நான் யார் என் பதைப் புரிந்து கொள்வீர்கள். இப்பொழுது உங்களுக்கு என் பெயரைத் தெரிவிப்பதாலும் பயனில்லை. ஆகவே நான் சொல்கிறபடி செய்யுங்கள், வீணாகப் பேசி கால தாமதம் செய்தால் ஆபத்துதான் அதிகமாகும். அண்ணன் மீது கத்தி வீசியவர்கள் எந்த நேரத்திலும் இங்கு வரலாம்.”

இதை கேட்ட மலைமகள், “அண்ணன்மீது யார் வீசியது கத்தியை? ஏன் வீசினார்கள்?” என்று வினவினாள் சிறிது நிதானித்துவிட்டு.

“சேர வீரர்கள்,” என்ற பதில் வாலிபனிடமிருந்து கடுமையுடன் வந்தது, மலைமகள் காட்டிய நிதானத்தின் விளைவாக.

“இவரும் சேர வீரர்தானே?”

“ஆம்!”

‘இவர்மீது ஏன் கத்தியை வீசவேண்டும் சேர வீரர்கள்?”

“அதை அண்ணனே சொல்லுவார் உங்களுக்கு. செல்லுங்கள். புரவிமீது உட்கார்ந்து பேச நான் உங்களைக் குடிசைக்கு வெளியே அழைத்துவரவில்லை,” என்று கடுமையுடன் பதிலளித்த வாலிபன், “இங்கிருந்து நேராக வடபுறம் செல்லுங்கள். கிட்டத்தட்ட அரை காதத்தில் அடர்த்தியான காடு தெரியும். அந்தக் காட்டுக்குள் புரவியைச் செலுத்துங்கள். வேண்டாம். அதுவே செல்லும். அதற்கு நான் சொல்லியிருக்கின்றேன்…’ என்று மேலும் ஏதோ சொல்லப்போன வாலிபனை இடைமறித்த மலைமகள், “என்ன தம்பி! குதிரையிடம் சொல்லிவிடு கிறாயா?” என்று வியப்புடன் வினவினான்.

“ஆம் அண்ணி,”

“அது புரிந்து கொள்ளுமா?”

“நன்றாகப் புரிந்துகொள்ளும்.”

“அது விலங்கல்லவா?”

“மனிதர்களைவிட விலங்குகளுக்குப் பல விஷயங்களைப் புரிந்து கொள்ளும் சக்தி உண்டு. தவிர இது சாதாரணப் புரவியல்ல; சாதிப் புரவி.”

இதைச் சொன்ன வாலிபன்மீது வியப்புத் ததும்பும் கண்களை நாட்டினாள் மலைமகள். அதுவரை அவர்கள் சம்பாஷணையைக் கேட்டுக்கொண்டிருந்த கூத்தன், “தம்பி! இவளோடு பேசிக் கொண்டிருந்தால் பொழுது விடியும் வரையில் புரவிமீது உட்கார்ந்திருக்க வேண்டியதுதான். சேர வீரர்களும் வந்து என்னைப் பிடித்து விடுவார்கள். நீ சொல்கிறபடி வடக்கே சென்று காட்டில் நுழைகிறேன். அங்கு யார் மறித்தாலும் இந்த மோதிரத்தைக் காட்டு கிறேன். அவ்வளவுதானா? இன்னும் ஏதாவது…” என்று வாசகத்தை முடிக்காமல் விட்டான்.

“ஏதுமில்லை,” என்ற வாலிபன் புரவியை நெருங்கி, அதன் காதில் ஏதோ வார்த்தைகளைச் சொன்னான். புரவி ஒருமுறை அவனைத் திரும்பிப் பார்த்தது. பிறகு கனைத்து விட்டுத் தைையை ஆட்டியது. பிறகு நகர்ந்தது மலைப் பாதையில்.

புரவி நடக்கத் துவங்கியதும், “ஜாக்கிரதை தம்பி! வீரர்களை நான் ஏமாற்றிவிட்டேன். இருப்பினும் அவர்கள் எப்படியும் இங்கு வருவார்கள். வந்தால் எச்சரிக்கையுடன் நடந்து கொள்,” என்று எச்சரித்துக்கொண்டே சென்றான் கூத்தன். மலைமகள் ஏதும் பேசவில்லை. தனக்குத் தெரியாத ரகசியம் ஏதோ தனது கணவனுக்கும், அந்த வாலிபனுக்குமிடையே இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டதால் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டு மௌனமாகவே சென்றாள். புரவியை நடத்தக்கூட அவள் கடிவாளக் கயிறுகளை அசைக்கவோ இழுக்கவோ இல்லை. அதற்குத் தேவையுமிருக்கவில்லை. புரவி வழியை அறிந்தது போல் மலைப் பாதையின் வடக்கு நோக்கி மிகக் கம்பீரமாக நடந்தது.

அதுபோவதை நீண்ட நேரம் நின்றவண்ணம் பார்த்துக் கொண்டிருந்த வாலிபன் அது கண்ணுக்கு மறைந்ததும் நிதானமாகக் குடிசையை அணுகினான். குடிசைக்குள் நுழையுமுன்பு ஆகாயத்தை அண்ணாந்து பார்த்து நட்சத்திரங்களைக் கொண்டு நாழிகைகளைக் கணக்கெண்ணினான். இதர குடிசைகள் மீதும் கண்ணை ஒருமுறை ஓட்டிவிட்டுக் குடிசைக்குள் நுழைந்து கதவைச் சாத்திக் கொண்டான். குடிசையின் உட்புறத்தை அடைந்ததும் மூலையில் பானையில் தான் சற்று முன்பு அடைத்த ரத்தக் கறை படிந்த அண்ணன் அங்கிக் கிழிசல்களையும், இரண்டொரு சட்டி, ஓடுகள், குவளைகளையும் போட்டு மறைத்தான். அடுத்தபடி விளக்கைச் சிறிது தூண்டிவிட்டுத் தகளியொன்றை எடுத்துத் தன் முகத்தைப் பார்த்துக்கொண்டான். முகச் சருமத்தில் பலபடி படிந்திருந்த கருப்புத் திட்டுகளைக் கண்டு துன்பப் புன்முறுவலொன்றை இதழ்களில் கூட்டி. “என் முகம் போயும் போயும் இந்தக் கதிக்கா வர வேண்டும்,” என்ற எண்ணங்களை மனத்தில் ஓடவிட்டுக் கொண்டு பாயொன்றை விரித்தான். பிறகு விளக்கை ஊதி அணைத்துவிட்டுப் படுத்துக்கொண்டான்.

படுத்த சில விநாடிகளுக்குப் பின்பும் உறங்கவில்லை அந்த வாலிபன். அடிக்கடி எதையோ உற்றுக் கேட்கும் பாவனையில் தலையை உயர்த்தி மீண்டும் படுத்தான். சுமார் ஒரு நாழிகைக்குப் பின்பே உற்றுக் கேட்டதற்குப் பலன் கிடைத்தது அவனுக்கு. பத்துப் பதினைந்து புரவிகள் வரும் சத்தம் அவன் காதுகளில் விழவே, அவன் நன்றாக இழுத்துப் போர்த்துக் கொண்டு குப்புறப் படுத்துக் கொண்டான். புரவிக் காலடிச் சத்தம் விநாடிக்கு விநாடி அதிகரித்தது. அடுத்த சில நிமிஷங்களில் புரவிகள் குடிசைக்கெதிரில் நின்றதும் வீரர்கள் பலர் குதித்ததும் தெரிந்தது அவனுக்கு “டேய்! யாரங்கே குடிசைக்குள்? வா வெளியே,” என்று வந்த வீரர்களின் தலைவன் குரலும் பலமாக விழுந்தது அந்த வாலிபன் காதுகளில் அடுத்த விநாடி குடிசைக் கதவு முரட்டுத்தனமாகத் திறக்கப்பட்டது. உள்ளே நுழைந்த வீரனொருவன் வாலிபனைத் தனது கத்தி முனையால் தட்டி, “டேய்! எழுந்திரு” என்று அதட்டவும் செய்தான்.

வாலிபன் அப்பொழுதுதான் கண் விழித்தவன் போல் கண்ணைக் கசக்கிக்கொண்டு எழுந்திருந்து தன்னை எழுப்பிய வீரனை நோக்கி, “யாரது? எதற்காக எழுப்புகிறாய்?” என்று சீறவும் செய்தான்.

“எழுந்து வா தெரியும்,” என்ற வீரன் வாள் முனையை வாலிபன் மீது சற்று அழுத்தவும் செய்தான்.

அதன் விளைவாகச் சிறிது அச்சமுற்றவன் போல் பாசாங்கு செய்த வாலிபன் எழுந்து உடைகளைச் சரிப் படுத்திக்கொண்டு வெளியே வந்தான். அங்கு பதினைந்து பேர் கொண்ட புரவி வீரர் கூட்டமொன்று நின்றிருப்பதையும், அவர்களில் இரண்டொருவர் பந்தங்களைத் தாங்கி நிற்பதையும் கண்டு பயந்தவன் போல் விழித்தான். அவன் பயத்தை லட்சியம் செய்யாத அந்த வீரர்களின் தலைவன், “டேய்! கூத்தன் எங்கே?’ என்று வினவினான்.

“அதுதான் எனக்குத் தெரியவில்லை,” என்றான் வாலிபன் போலிக் குழப்பத்தை முகத்திலும் குரலிலும் காட்டி.
“தெரியவில்லையா?” என்ற தலைவன் குரலில் கோபமிருந்தது.

“தெரியவில்லை. நான் சற்று முன்புதான் இங்கு வந்தேன். குடிசையில் அண்ணியுமில்லை, அண்ணனு மில்லை ” என்றான் வாலிபன்.

“உன் அண்ணனா கூத்தன்?” என்று கேட்டான் வீரர்கள் தலைவன்.

“ஆம்.”

“நீ என்ன செய்கிறாய்?”

அரசர் அரண்மனையில் காவல் புரிகின்றேன்.”

“அரண்மனைக் காவலனா?”

“ஆம்”

“குடிசையில் அண்ணனும் அண்ணியுமில்லாததைக் கண்டதும் அவர்கள் எங்கேயென்று மற்றக் குடிசைகளில் யாரையாவது கேட்டாயா?”

“இல்லை “

“ஏனில்லை?”

“நான் வரும்போது எல்லோரும் உறங்கிவிட்டார்கள். காலையில் விசாரித்துக் கொள்ளலாமென்றிருந்து விட்டேன்.”

இதைக் கேட்ட வீரர்கள் தலைவன் வாலிபனைக் கூர்ந்து நோக்கினான். மெல்ல அவன் கண்களில் கோபம் விரிந்தது. “டேய்! உண்மையைச் சொல். எங்கே உன் அண்ணன்? எங்கே அந்த ஒற்றன்?” என்றான் கோபம் குரலிலும் ஒலிக்க.

“என் அண்ணன் ஒற்றனா? ஜாக்கிரதையாகப் பேசுங்கள்,” என்றான் வாலிபனும் கோபத்துடன்.

“இல்லை. கூத்தன் ஒற்றனில்லை, சேரநாட்டுப் பக்தன்,” என்று ஏளனமாகச் சீறிய வீரர் தலைவன், அரை ஜாமம் முன்புதான் அவனைத் தொடர்ந்தோம். கத்தி வீசினோம். அப்படியும் தப்பிவிட்டான்,” என்று விவரிக்கவும் செய்தான், சீற்றம் சிறிதும் தணியாமலே.

“கத்தி வீசினீர்களா?” என்று வியப்பைக் காட்டினான் வாலிபன்.

“ஆம், வீசினோம்.”

“குறி சரியாயில்லை போலிருக்கிறது?”

“அவன் முதுகிலேயே கத்தி பாய்ந்தது.”

“அப்படியா?”

“ஆம்.”
“அப்படியானால் நீங்கள் வேறு யார் மீதோ கத்தியை வீசியிருக்க வேண்டும்.”

இதைக் கேட்ட வீரர்கள் தலைவன் வெகுண்டான். “டேய்? என்ன எங்களுடன் விளையாடுகிறாயா?” என்று கடுங்கோபத்துடன் வாலிபனை எரித்து விடுபவன் போல் வினவினான்.

“விளையாடுவது நானில்லை தலைவரே? முதுகில் குறுவாள் பாய்ந்தவன் அண்ணியை அழைத்துக்கொண்டு எங்கும் ஓடி விட முடியாது. இருந்தால் இந்தக் குடிசைக் கூட்டத்தில் எங்காவதுதானிருக்க வேண்டும். தவிர, குறுவாள் பாய்ந்தால் குருதி கொட்ட வந்திருக்க வேண்டும் அண்ணன். குடிசைக்குள் அதற்கு அத்தாட்சி காணோம். சாதாரணமாகத்தானிருந்தது குடிசை,” என்று சுட்டிக் காட்டினான் வாலிபன்.

வாலிபன் பேச்சு வீரர்கள் தலைவனை சிந்தனையில் ஆழ்த்தியது. பிறகு அவன் இரு வீரர்களை அழைத்து, குடிசைக்கு வரும் பாதையைப் பந்தங்களின் உதவி கொண்டு பரிசோதிக்குமாறு கூறிவிட்டு, மற்றுமிருவரை விளித்து மற்ற குடிசைகளிலிருப்பவர்களை எழுப்பிக்கொண்டு வரும்படி உத்தரவிட்டு, தானும் புரவியிலிருந்து இறங்கிப் பந்த மொன்றை வீரனொருவன் காட்டிவர, வாலிபன் பின் தொடர கூத்தன் குடிசைக்குள் நுழைந்தான். குடிசையின் பல பகுதிகளிலும் கண்களை ஓட்டியும் தரையை நன்றாகப் பார்த்தும் ரத்தத்தின் அறிகுறி ஏதும் கிடைக்காமல் போகவே மறுபடியும் குடிசையிலிருந்து வெளியே வந்தான்.

சற்று நேரத்திற்கெல்லாம் குடிசைகளிலிருந்து அழைத்து வரப்பட்ட ஆண் பெண்களிடம் கூத்தனைப்பற்றியும், அவன் மனைவியைப் பற்றியும் விசாரித்தும் தகவல் ஏதும் கிடைக்கவில்லை வீரர்கள் தலைவனுக்கு, குடிசைக்கு வரும் கரடு முரடுப்பாதையைப் பார்வையிட்டவர்களும் வந்து ரத்தக்கறை ஏதும் தெரிய வில்லையென்று சொன்னதும் குழப்பத்துக்கு உள்ளானான் தலைவன். பிறகு, “சரி, நீ வா எங்களுடன்,” என்று உத்தரவிட்டான் தலைவன் வாலிபனை நோக்கி.

“எங்கு?’’

“அரண்மனைக்கு “

“எதற்கு?”

“உன் அண்ணனைப் பற்றித் தகவல் சொல்ல.”

“எனக்கு ஏதும் தெரியாதென்றுதான் சொன்னேனே”.

“அதைச் சொல்ல வேண்டியவர்களிடம் சொல்,” என்று அதட்டிய தலைவன் சீக்கிரம் உடையணிந்து வருமாறு அவனுக்கு உத்தரவிட்டான். அதற்குமேல் ஏதும் பேசாத வாலிபன் கூட்டத்திலிருந்த வயோதிகனை நோக்கி, “பெரியவரே! சற்று வாருங்கள். அண்ணன் பெட்டியை உங்களிடம் ஒப்படைக்கிறேன். நானும் போய் விட்டால் அதைக்கவனிப்பாரில்லை,” என்று அவனையும் அழைத்துக் கொண்டு மீண்டும் குடிசைக்குள் சென்றான். உள்ளே சென்றதும் ஒரு பெட்டியை எடுத்துக் கிழவனிடம் கொடுத்து விட்டுக் கோடியிலிருந்த பானையைக் காட்டி, “அதிலுள்ள அங்கிக் கிழிசல்களை எங்காவது புதைத்து விடுங்கள்,” என்று மெல்லக் கூறிவிட்டு உடையும் வாளும் அணிந்து வெளியை வந்தான். குடிசைக்குப் பின்புறமிருந்த புரவியைப் பிடித்துக் கொண்டு அதன்மீது ஆரோகணித்து வீரர்களுடன் சென்றான்.

வாலிபனைத் தலைநகர் சிறைக் கோட்டத்துக்கு அழைத்துச் சென்ற தலைவன், அங்கிருந்த அறையொன்றில் அவனை அடைக்கச் செய்து, மறுநாள் சந்திப்பதாகக் கூறிச் சென்று விட்டான். வாலிபன் அன்றிரவை அந்த அறையிலேயே நிம்மதியாகக் கழித்து, மறுநாள் காலை நன்றாக விடிந்த பிறகே கண் விழித்தான். அவன் விழித்ததும், முகம் கழுவவும், காலை உணவு அருந்தவும் வசதி அளித்து மீண்டும் அவனை அறையிலே வைத்துப் பூட்டினான் சிறைக்காவலன். அன்று உச்சிவேளை கடந்த சில நாழிகைகளுக்குப் பிறகு, முதல் நாள் சிறை செய்த தலைவன் சிறைச் சென்றான். கோட்டத்திலிருந்து பலவிடுதிகள் வழியாக அவனை அழைத்துச் சென்ற தலைவன் கடைசியாக அரண்மனையின் ஆரம்பப் பகுதியிலிருந்து ஒரு விடுதியின் வாயிலுக்கு அழைத்துவந்து, வாலிபனை வெளியிலேயே நிற்க வைத்துவிட்டுத் தான் மட்டும் உள்ளே சென்று சில வினாடிகளில் திரும்பிவந்து, “உள்ளே செல்.” என்று உத்தரவிட்டான்.

வாலிபன் ஏதும் பேசாமல் உள்ளே சென்றதும், அந்தச் சின்னஞ்சிறு விடுதியின் நடுக்கூடத்திலிருந்த மஞ்சத்தில் தன்னந்தனியே வீற்றிருந்த மனிதன் அவனை அருகில் வரும்படி சைகை செய்தான். அந்த மனிதனைக் கண்டதும் “மன்னிக்க வேண்டும்… அழைத்தது தாங்க ளென்று தெரியாது. தெரிந்திருந்தால்…” என்று குழம்பிச் சொற்களை உதிர்த்துத் தலை தாழ்த்தி வணங்கினான். மீண்டும் மெள்ள மெள்ள தலையை நிமிர்த்தியபோது மஞ்சத்திலிருந்தவன் கண்கள் மிகுந்த விஷமத்துடன் வாலிபனின் கண்களைச் சந்தித்தன.

“நான்… நான்…தங்களை.” என்று குழறிய வாலிபன் வார்த்தைகளை, “இங்கு எதிர்பார்க்கவில்லை,” என்று முடித்த சேரமன்னன் வீரரவி உதயமார்த்தாண்ட வர்மனின் சொற்களில் விளங்காத ஏதோ ஓர் ஒலி இருந்ததையும் அவன் காமக் கண்களிலும் விவரம் புரியாத ஒரு சிரிப்பு தவழ்ந்து கொண்டிருந்ததையும் வாலிபன் கவனித்தான். வீரரவியின் இதய ஆழம் முழுவதையும் வாலிபனால் அளக்க முடியாவிட்டாலும், தன்னைப் பெரும் ஆபத்து சூழ்ந்திருக்கிறது என்பதை மட்டும் அவன் சந்தேகமறப் புரிந்துகொண்டான்.

Previous articleRaja Muthirai Part 2 Ch2 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Muthirai Part 2 Ch4 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here