Home Historical Novel Raja Muthirai Part 2 Ch30 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

Raja Muthirai Part 2 Ch30 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

62
0
Raja Muthirai Part 2 Ch30 Raja Muthirai Part 2 Sandilyan, Raja Muthirai Part 2 Online Free, Raja Muthirai Part 2PDF, Download Raja Muthirai Part 2 novel, Raja Muthirai Part 2 book, Raja Muthirai Part 2free, Raja Muthirai,Raja Muthirai Part 2 Story in tamil,Raja Muthirai Part 2 Story,Raja Muthirai Part 2 novel in tamil,Raja Muthirai Part 2 novel,Raja Muthirai Part 2 book,Raja Muthirai Part 2 book review,ராஜ முத்திரை ,ராஜ முத்திரை கதை,Raja Muthirai Part 2tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2full story,Raja Muthirai Part 2 novel full story,Raja Muthirai Part 2audiobook,Raja Muthirai Part 2audio book,Raja Muthirai Part 2full audiobook,Raja Muthirai Part 2full audio book,
Raja Muthirai Part 2 Ch30 | Raja Muthirai | TamilNovel.in

Raja Muthirai Part 2 Ch30 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

ராஜ முத்திரை இரண்டாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 30 பார்த்திபனைக் குழப்பிய பணிப்பெண்

Raja Muthirai Part 2 Ch30 | Raja Muthirai | TamilNovel.in

பணிப் பெண்களின் தலைவியின் பவள உதடு களிலிருந்து உதிர்ந்த சொற்களால் படபடத்த இதயத் துடனும், கொந்தளித்த உள்ளத்துடனும் பேச நா எழாமல் பல விநாடிகள் நின்றுவிட்ட சாத்தன், குறிஞ்சியால் அன்றிலிருந்து தனது மானம் மரியாதை எல்லாம் காற்றில் பறந்து விடுமென்பதையும், மறுநாள் காவலுக்கு வரும்போது மற்ற காவலரின் இகழ்ச்சிப் பார்வைக்கும் அரண்மனைப் பணிப் பெண்களின் அவதூறுக்கும் இலக்காக வேண்டியிருக்கும் மென்பதையும் சந்தேகமறப் புரிந்து கொண்டான். அந்தச் சிந்தனையில் வேதனை நிறைந்த இதயத்துடன் பெரும் பளுவைத் தூக்கிச் செல்பவனின் சிரமம் மிகுந்த நடையுடன் தனது இல்லத்தை நோக்கி மெல்ல மெல்ல நடந்தான். அரண்மனையிலிருந்து சிறிது தூரமே உள்ள தனது இல்லத்துக்குச் சென்றபோது மனம் பல எண்ணங்களில் சுழன்று கொண்டிருந்தபடியால் அந்தச் சிறிது தூரத்தைக் கடக்கச் சாதாரண நாட்களில் பிடிக்கும் அவகாசத்தைவிட நான்கு மடங்கு அதிக அவகாசம் பிடித்தது அவனுக்கு. குறிஞ்சி ஒரே பகலுக்குள் அரசனை அணுக எப்படி முடிந்தது? அப்படியே அணுகினாலும் அவருடன் அந்தரங்கமாகப் பேசும் அளவுக்கு வழிவகை செய்து கொள்ள – என்ன தந்திரத்தைக் கையாண்டிருக்க முடியும்?’ என்ற கேள்வி வீடு போகும் வரையிலும், ஏன் வீட்டை அடைந்த பின்பும் கூட அவன் மனதில் எழுந்து எழுந்து அவனைத் திகைக்கச் செய்து கொண்டிருந்தன. அவனை மட்டுமல்ல அக்கேள்விகள் திகைக்க வைத்தது. அரண்மனைப் பணிப்பெண் தலைவியையும் கூட அவை அறவே திகைக்க அடித்தன. சாத்தான் அந்தப்புரத்தை விட்டு நடந்த பின்பு அந்தப்புர வட்டாரத்திலும் அது பற்றிய பேச்சே நடந்தது.

சாத்தன் மைத்துனியை அழைத்துவரச் சென்ற நேரங் கழித்து அந்தத் திகைப்பூட்டும் செய்தியைக் கொண்டுவந்த பணிப்பெண்ணை நோக்கி, பணிப்பெண்களின் தலைவி கேட்டாள், “உண்மையில் அரசரே உன்னிடம் சொன்னாரா?” என்று.

“ஆம் அம்மணி! மன்னரே சொன்னார். இந்த விஷயத்தில் நான் பொய் சொல்வேனா??” என்றாள் பணிப் பெண் பதிலுக்கு.

“மாட்டாய். ஆனால் மன்னரை எப்படி நீ சந்தித்தாய்?” என்று வினவினாள் தலைவி.

“அம்மணி! காலையில் இவளை இரண்டாவது ராணியார் மாளிகையில் பணிபுரிய அனுப்பினீர் களல்லவா?”

“ஆம்.”

“அங்குதான் முதலில் சென்று பார்த்தேன். அங்கில்லை இவள். அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த மற்றொருத்தி இவள் நடுப்பகலில் பட்டத்து ராணியாரி ருக்கும் மாளிகைக்குச் சென்றுவிட்டதாகச் சொன்னாள். அங்கிருந்து பட்டத்து ராணியாரின் மாளிகைக்கு வந்தேன். அங்குமில்லை இவள். அங்கு விசாரித்ததில் பட்டத்து ராணியார் சற்றுமுன்புதான் இவளை மன்னரிடம் அனுப்பியதாகத் தெரிந்தது. அங்கிருந்து அந்தப்புர முன்பகுதியிலிருக்கும் மன்னர் கட்டுக்குச் சென்றேன். அங்கு காவல் புரிந்த வீரர்கள் யாரோ ஒரு புதுப் பெண்ணுடன் மன்னர் அந்தரங்க அறையில் பேசிக் கொண்டிருப்பதாகக் கூறினார்கள். நான் அந்தரங்க அறையின் வாயிலில் நின்றுகொண்டிருந்தேன். மன்னர் திடீரென வெளியே வந்தார். என்னைப் பார்த்ததும் ‘நல்லதாய்ப் போயிற்று. இன்று குறிஞ்சி வரமாட்டாளென்று அவள் வீட்டுக்குச் சொல்லியனுப்பிவிடு’ என்று கூறினார். உடனே வந்துவிட்டேன். இந்த அந்தப்புர மாளிகையில் ஒன்றை விட்டு ஒன்று ஏறி இறங்கி என் கால் முறிந்துவிட்டது.”

அந்த விவரத்தைக் கேட்ட பணிப் பெண்களின் தலைவி முகத்தில் பிரமிப்பு விரவிக் கிடந்தது. அதுவரை அந்த அரண்மனையில் நடந்திராத விசித்திரம் அது. கட்டழகுள்ள பெண்களைக் கண்டால் வீரரவி சற்று மகிழ்ந்து பார்ப்பாரென்பதைப் பணிப் பெண்களின் தலைவி உணர்ந்திருந்தாலும், எந்தப் பணிப் பெண்ணும் தானாக அரசனை அணுகுவதையும், அந்தரங்க முறையில் பேசுவதையும் அவள் அங்கு பணி செய்த பதினைந்து ஆண்டுகளில் கண்டதுமில்லை; கேட்டதுமில்லை. தவிர அரண்மனை வேலையில் முன்னேற விருப்பமுள்ளவர்கள் கூட தன்னைத் திருப்தி செய்து முன்னேற முற்படுவார்களே யொழிய மன்னரை நேராக அணுகும் துணிவு யாருக்கும் கிடையாதென்பதையும் தலைவி உணர்ந்திருந்தாளாதலால், இந்தப் புதுப் பணிப்பெண்ணின் துணிகர சாகசச் செயலை நினை த்து நினைத்து வியந்து கொண்டிருந்தாள்.

அவள் வியப்பைவிடப் பன்மடங்கு அதிக வியப்பில் அன்று ஆழ்ந்திருந்தான் சேரநாட்டு அதிபதி வீரரவி உதய மார்த்தாண்டவர்மன். தனது அந்தரங்க அறையில் காவலன் அறிவிப்பில்லாமல் எதிர்பாராத விதமாகத் திடீரென நுழைந்துவிட்ட குறிஞ்சியை முதன் முதலில் வியப்புடன் ஏறெடுத்து நோக்கினான் வீரரவி. அவள் திடீரென்று வேகத்துடன் உள்ளே நுழைந்ததையும், அவளைத் தடுக்க முயன்று முடியாமல் அவளைத் தொடர்ந்து வந்த காவலன் தன்னைக் கண்டதும் பயத்தால் அசைவற்று நின்று விட்டதையும் விநாடி நேரம் கவனித்த வீரரவி, காவலனை வெளியே செல்லுமாறு சைகை செய்தான். காவலன் வெளியே சென்றதும் குறிஞ்சியின் மீது நிதானமாகத் தன் கண்களைச் சில வினாடிகள் ஓட்டினான். நல்ல தேகக் கட்டுடன் அழகு ததும்ப நின்றிருந்த குறிஞ்சியைப் பார்த்த, மன்னன் அவள் ஆடைகள் தான் நகரத்து ஆடைகளே தவிர, அவள் மலைவாசியென்பதை விநாடி நேரத்தில் புரிந்து கொண்டான். மலைசாதியானாலும் அவளிடம் நாகரிகம் சற்று அதிகமாகவே கலந்து காணப்படுவதையும், அவள் நின்ற தோரணையிலிருந்து அவள் மாளிகை வட்டாரத்துப் பழக்கவழக்கங்களில் பயிற்சி உள்ளவளென்பதையும் நொடிப் பொழுதில் உணர்ந்துகொண்ட வீரரவி தனது கண்களுடன் அவளது கண்கள் நிர்ப்பயமாகக் கலந்து நிற் பதைக் கண்டு பெரும் வியப்பும் கொண்டான், “சூறாவளி காட்டில் உதயமானாலும். நாட்டில் நுழையும்போது வேகத்துடன்தான் நுழைகிறது. அதையாரும் தடுக்க முடிவதில்லை,” என்று அந்த வியப்பின் ஊடே சொற்களையும் உதிர்த்தான் சேரர் பெருமான்.

மன்னன் சொற்கள் குறிஞ்சியின் அசையா மனத்தையும் ஒரு விநாடி அசைய வைத்தன. அவன் ஒரே பார்வையில் தன்னை இன்னாரென்று எடை போட்டுவிட்டதைப் புரிந்து கொண்டாள் அவள். தனது நாகரிக உடை மன்னன் கண்களை மறைக்க முடியவில்லையென்பதையும் தான் மலைவாசியென்பதைப் புரிந்து கொண்டே காட்டுச் சூறாவாளி வேகத்துடன் பிரவேசிப்பதைத் தன் அசந்தர்ப்ப அந்தரங்க அறைப் பிரவேசத்துக்கு மன்னன் உவமை கூறுகிறானென்பதையும் உணர்ந்து கொண்டாள். ஆகவே குறிஞ்சியும் சற்றுத் தன்னைத் திடப்படுத்திக்கொண்டு மன்னனுக்குத் தலைதாழ்த்தி, “உவமையாலேயே உண்மையை உணர்த்தக்கூடிய தனிப்பெரும் சக்தி எங்கள் சேரர் பெருமானைத் தவிர வேறு யாருக்கு உண்டு?” என்று மெல்ல மெல்லப் பதில் சொல்லும் பாவனையில் சொற்களை உதிர்த்தாள்.

மன்னன் இதழ்கள் அந்தப் பாராட்டின் விளைவாகச் குறுநகை கொண்டன. “உண்மைக்குச் சான்று கூறுவது உவமை. உண்மையை முற்றிலும் அவிழ்க்க உவமைக்குச் சக்தி இல்லையல்லவா?” என்றான் மன்னன், மீதியைக் கூற வேண்டியது குறிஞ்சியென்பதைச் சுட்டிக் காட்ட.
“அவிழ்ப்பது தங்கள் பணி மக்கள் கடமை,” என்றாள் குறிஞ்சி மன்னனை நோக்கி.

“அந்தக் கடமையை நிறைவேற்ற மன்னன் வாயிலிருந்து உத்தரவு வேண்டுமா மருத்துவப் பெண்ணே?” என்று கேட்டான் மன்னன்.

மீண்டும் அதிர்ச்சியடைந்து நின்றாள் குறிஞ்சி. ”மன்னா!” என்று அதிர்ச்சியின் விளைவாக ஒற்றைச் சொல்லையும் உதிர்த்தாள்.

மன்னன் மெல்ல நகைத்தான். “பச்சிலை கசக்கும் கைகளில், சாயம் போகாத சில பச்சிலைகள் அடையாளங்களை விட்டு வைக்கின்றன,” என்றும் கூறி அவள் இடுப்பில் மடங்கியிருந்த உட்கையின் சாயத்தைச் சுட்டிக் காட்டினான்.

குறிஞ்சி அதைத் திருப்பிப் பார்த்தாள், பயத்துடன் மன்னனை நோக்கினாள். “மன்னா! உங்கள் கண்களிலிருந்து தப்பக்கூடியது ஏதாவது உண்டா?” என்று வினவவும் செய்தாள்.

“உண்டு” என்றான் வீரரவி மேலும் நகைத்து.

“என்ன அது?”

“பெண்க ளின் மனம்.”

“பெண்களின் மனமா?”
“ஆம். அதை என் கண்களும் அண்ட முடிவதில்லை, என் சிந்தையும் அண்ட முடிவதில்லை.”
“அப்படியா!

“ஆம். உதாரணமாக உன் இதயத்தில் என்ன இருக்கிற தென்பதைக்கூட என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.”

“மன்னவா” குறிஞ்சியின் குரல் பயத்துடன் ஒலித்தது.

“பெண்ணே, உன்னை இன்றுவரை நான் அந்தப் புரத்தில் பார்த்ததில்லை. ஆகையால் நீ இன்றோ நேற்றோ புதிதாகச் சேர்ந்திருக்கவேண்டும். இந்தக் குறுகிய காலத்திற்குள் பட்டத்துராணி உன்னை இங்கு அனுப்பிவைக்கும் பெரும் பதவிக்கு உயர்ந்துவிடுகிறாய். இந்த அரண்மனையில் இந்தப் பதவிக்கு வரச் சுமார் பத்து வருடம் காத்திருப்பவர்கள் இருக்கிறார்கள் தெரியுமா உனக்கு? உன் திடீர் உயர்வு உனக்கே வியப்பாயில்லை?” என்று வினவினான் மன்னவன்.

குறிஞ்சி உடனடியாகப் பதில் சொல்லவில்லை . மன்னனைச் சிறிது உற்று நோக்கவிட்டுச் சொன்னாள், “இல்லை,” என்று திடமாக.

மன்னன் விழிகளில் சிறிது வியப்பு மலர்ந்து மறைந்தது. “இல்லையா?” என்று கேட்டான் மன்னவன் அகத்தே எழுந்த வியப்பைப் புறத்தே காட்டாமல்.

“இல்லை மன்னா! இரண்டாவது ராணியார் பட்டத்து ராணியாரிடமும் பட்ட மகிஷி தங்களிடமும் என்னை அனுப்பியதற்குக் காரணம் இருக்கிறது,” என்றாள் குறிஞ்சி.

“என்ன காரணம்?” மன்னன் கேள்வி சர்வசாதாரண மாக எழுந்தாலும் அதில் உள்ளூரக் கோபம் துளிர்த்தது குறிஞ்சிக்குப் புரிந்தது.

ஆனால் அவள் அதை லட்சியம் செய்யாமல் சொன்னாள்; “பெரும் அரசியல் ரகசியம் என்னிடமிருப்ப தாகக் கூறினேன் இரண்டு ராணிகளிடமும்.”

“என்ன ரகசியம் என்று அவர்கள் கேட்க வில்லையோ?”

“கேட்டார்கள்.”

“நீ என்ன பதில் சொன்னாய்?”.

“மன்னரைத் தவிர வேறு யாரிடமும் அதைச் சொல்ல முடியாதென்று சொன்னேன்.”

“உன்னை அவர்கள் காவலரிடம் ஒப்படைப்பதாகக் கூறவில்லையா?”

“கூறினார்கள். அதைப்பற்றிக் கவலையில்லையென்று கூறினேன். கடைசியில் நீங்களே விசாரித்துத் தண்டிக்கட்டு மென்று இங்கு அனுப்பினார்கள்.”

குறிஞ்சியின் சொற்கள் வீரரவியின் கோபத்தைவிட வியப்பையே அதிகமாகக் கிளறிவிட்டன. இரண்டு ராணிகளை எதிர்த்து, குழப்பி, தன்னை காணவந்த அவள் துணிவு அவனைத் திகைக்கக்கூடச் செய்தது. ஆகவே கேட்டான், “நான் உன் ரகசியத்தைக் கேட்க மறுத்துச் சிறையிலடைத் தால் என்ன செய்வாய்!” என்று.

“எதுவும் செய்யமாட்டேன். பரிதாபப்படுவேன்,” என்றாள் குறிஞ்சி நன்றாகத் தலைநிமிர்ந்து மன்னனை நோக்கி.

“எதைப் பற்றிப் பரிதாபப்படுவாய்?” என்று வினவினான் மன்னன்.

“சேரநாட்டுத் தலைவிதியைப் பற்றி.” இந்தச் சொற்களை மெல்ல அழுத்தமாக உச்சரித்தாள் பணிப்பெண் குறிஞ்சி.

“அதன் தலைவிதி கேவலம் பணிப்பெண்ணொருத்தியின் கரத்திலா இருக்கிறது?” என்று சீறினான் சேரன்.

“தற்சமயம் அப்படித்தானிருக்கிறது,” என்றாள் குறிஞ்சியும் உறுதியாகவும் திட்டமாகவும்.

அந்தச் சந்தர்ப்பத்தில் வீரரவியைத் தவிர வேறு யாராக இருந்தாலும் கண்டிப்பாக நிலைகுலைந்திருப்பார்கள். கோபத்தின் வசப்பட்டுக் குறிஞ்சியை வெளியே இழுத்துச் செல்லும்படி காவலரை அழைத்து உத்தரவும் பிறப்பித்திருப்பார்கள். ஆனால் உணர்ச்சிகளை அடக்கிக் கொள்ளும் ஆற்றல் வாய்ந்தவனும் பெரும் அறிவாளியுமான சேர மன்னன் தன்னைப் பெரிதும் அடக்கிக் கொண்டான். குறிஞ்சியின் தோரணையிலிருந்தே அவள் ஏதோ பெரும் ரகசியத்தை வைத்திருக்கிறாளென்பதைப் புரிந்தும் கொண்டான். ஆகவே கேட்டான், “சொல் பெண்ணே! அத்தனை பெரிய ரகசியம் என்னவென்பதைப் பார்ப்போம்,” என்று.

குறிஞ்சி உடனடியாகப் பதில் சொல்லவில்லை. அக்கம் பக்கம் கண்களை ஓட்டினாள். பிறகு வெளியே செல்லக் காலடி எடுத்து வைத்தாள். “இரு” என்று சொல்லிவிட்டு மன்னனே எழுந்திருந்து வெளியே சென்றான். குறிஞ்சியைத் தேடி வந்து அங்கு காத்து நின்ற பணிப்பெண்ணை நோக்கி, “எதற்கு வந்தாய்? இங்கு என்ன வேலை உனக்கு?” என்று சீறினான்.

“இன்று ஒரு புதுப் பணிப் பெண் வேலைக்கு வந்தாள்…” என்று கூறு முன்பு, “அவள் இங்கு தானிருக்கிறாள். இப்பொழுது வரமாட்டாள். யாராவது கேட்டால் சொல்லி விடு,” என்று கூறிவிட்டு உள்ளே சென்றான் மன்னவன். அந்தச் செய்தியை தலைவிக்கும் சாத்தனுக்கும் அறிவிக்கப் பணிப்பெண் ஓடியதும் அந்தரங்க அறைக்குள் மீண்டும் வந்து மன்னவன், “பெண்ணே! இனி யாரும் இங்கு வர மாட்டார்கள். விஷயத்தைச் சொல்,” என்றான்.

“மன்னவா….” என்று துவங்கினாள் குறிஞ்சி.

“என்ன பெண்ணே ?”

‘என் பெயர் குறிஞ்சி!”

“சரி.”

“நான் மருத்துவக் குலத்தவள். மலையில் பச்சிலை தேடுபவள்.”

“இவைதான் ரகசியமா,” என்ற மன்னன் குரலில் உஷ்ணம் தெரிந்தது.

“இல்லை மலைப்பகுதியிலிருந்து வருகிறேன்,” என்றாள் குறிஞ்சி.

“அதுவும் பெரிய ரகசியமில்லை,” என்றான் சேரன்.

“இல்லை. அதுகூட ரகசியமில்லை . ஆனால் நான் சேர நாட்டு எல்லை மலைப்பகுதிலியிருந்து வருகிறேன் என்பது ரகசியம். அதுவும் பாண்டிய மன்னனிடமிருந்து வருகிறேன் என்பது பெரும் ரகசியமல்லவா?” என்று மெதுவாகச் சொன்னாள் குறிஞ்சி.

அதுவரை பெரிதும் அடங்கிக்கிடந்த சேரன் உணர்ச்சிகள் படீரென வெடித்தன. “என்ன! என்ன சொன்னாய்?” என்று படபடத்துக் கேட்டான்.

“ஆம் மன்னா, நான் பாண்டியனிடமிருந்துதான் வருகிறேன். அவர் நம்பிக்கைக்குப் பாத்திரமாகத்தான் வருகிறேன். வேண்டுமானால் இதைப் பாருங்கள்,” என்று மடியிலிருந்து ஒரு மோதிரத்தை எடுத்துச் சேரனிடம் நீட்டினான்.

பாண்டிய நாட்டு ராஜமுத்திரை அந்த அந்தரங்க அறையில் மணி விளக்குகளில் கண்ணை அள்ளும் படியாகப் பளிச்சிட்டது. அது அள்ளித் தெளித்த வர்ண ஜாலங்கள் சேரமன்னன் முகத்தில் தாக்கித் தாக்கி அசைந்தன. அம்மோதிரத்தை மன்னன் கையில் வாங்கியதும் பல விநாடிகள் அசைவற்று நின்றான். திரும்பத் திரும்ப அந்த முத்திரை மோதிரத்தைப் பார்த்துக் கொண்டு நின்றான். நீண்ட நேரத்திற்குப் பின் தலை தூக்கிய அவன் குறிஞ்சியைக் குழப்பத்துடன் நோக்கினான். “இம் முத்திரை மோதிரம் பாண்டிய நாட்டுப் படைத் தலைவர்களுக்கு மட்டும் கொடுக்கப்படுகிறது,” என்றும் கூறினான்.

“ஆம்,” என்றாள் குறிஞ்சி மெதுவாக.

“விசேஷத் தூதர்களுக்கும் கொடுக்கப்படுகிறது,” என்றும் சுட்டிக் காட்டினான் சேரன்.

“ஆம்,” என்று மீண்டும் ஆமோதித்தான் குறிஞ்சி.

“அந்த இரண்டில் நீ யார்?” என்று வினவினான் வீரரவி.

“இரண்டுமில்லை.”

“அப்படியானால் பாண்டியன் ராஜமுத்திரை உனக்கு எப்படிக் கிடைத்தது?”
“அது பெரும் கதை.”

“அந்தக் கதையைச் சொல் குறிஞ்சி. நீ பாண்டியன் வேவுகாரியா அல்லவாவென்பதை முடிவு செய்கிறேன்.”

இதைக் கேட்ட குறிஞ்சியின் இதழ்களில் நகை அரும்பியது. அத்துடன் மடியிலிருந்து மற்றொரு மோதிரத் தையும் எடுத்து, “இதையும் பாருங்கள் மன்னவா,” என்று அரசனிடம் நீட்டினாள்.

அதை கையில் வாங்கியதும் அடியோடு குழம்பிப் போனான் மன்னன். “இதென்ன, எனக்கேதும் புரிய வில்லையே,” என்றான் அந்த இரண்டு மோதிரங்களையும் மாறிமாறிப் பார்த்துக் குழம்பிக் கொண்டே. சேரநாட்டுப் பார்த்திபனையே குழப்பிவிட்ட பணிப்பெண் குறிஞ்சி, “உட்காருங்கள் மன்னா! விவரமாகச் சொல்கிறேன்,” என்று மன்னனுக்கு அவனது மஞ்சத்தைச் சுட்டிக் காட்டினாள் அவன் உட்கார்ந்தும் வீரரவியும் வியந்து மலைக்கும் விவரங்களைக் கூற முற்பட்டாள் குறிஞ்சி.

Previous articleRaja Muthirai Part 2 Ch29 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Muthirai Part 2 Ch31 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here