Home Historical Novel Raja Muthirai Part 2 Ch31 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

Raja Muthirai Part 2 Ch31 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

65
0
Raja Muthirai Part 2 Ch31 Raja Muthirai Part 2 Sandilyan, Raja Muthirai Part 2 Online Free, Raja Muthirai Part 2PDF, Download Raja Muthirai Part 2 novel, Raja Muthirai Part 2 book, Raja Muthirai Part 2free, Raja Muthirai,Raja Muthirai Part 2 Story in tamil,Raja Muthirai Part 2 Story,Raja Muthirai Part 2 novel in tamil,Raja Muthirai Part 2 novel,Raja Muthirai Part 2 book,Raja Muthirai Part 2 book review,ராஜ முத்திரை ,ராஜ முத்திரை கதை,Raja Muthirai Part 2tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2full story,Raja Muthirai Part 2 novel full story,Raja Muthirai Part 2audiobook,Raja Muthirai Part 2audio book,Raja Muthirai Part 2full audiobook,Raja Muthirai Part 2full audio book,
Raja Muthirai Part 2 Ch31 | Raja Muthirai | TamilNovel.in

Raja Muthirai Part 2 Ch31 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

ராஜ முத்திரை இரண்டாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 31 வீட்டில் மலர்ந்த காட்டு மலர்

Raja Muthirai Part 2 Ch31 | Raja Muthirai | TamilNovel.in

பணிப்பெண் குறிஞ்சி காட்டிய இரண்டாவது மோதி ரத்தைக் கண்டதும் பெருமலைப்புக்கும் குழப்பத்துக்கும் பாத்திரமாகிவிட்ட சேரமான், அவள் மஞ்சத்தில் உட்கார ஆணையிட்டதும், மறுத்து ஏதும் பேசாமல் அவள் சுட்டிக் காட்டிய இடத்தில் அமர்ந்து அவள் சொல்ல முற்பட்டதைக் கேட்க வெகு ஆவலுடன் அவள் அழகிய முகத்தில் தனது விழிகளை நாட்டினான். குறிஞ்சி மெள்ளப் புன்முறுவல் செய்து, “மன்னா, அந்த இரண்டாவது மோதிரம் போசள நாட்டு முத்திரை மோதிரம்,” என்று மெல்லிய குரலில் கூறினாள். மன்னன் புத்தியில் தனது சொற்கள் உறைக்கும் வரை காத்திருந்து மீண்டும் சொன்னாள், “இதை நான் திருடவில்லை. போசளத் தளபதியே எனக்குக் கொடுத்தார்,” என்று.

வீரரவியின் விழிகள் வெறித்த நிலையிலிருந்து மீண்டும் வியப்பு நிலைக்குத் திரும்பின. “என்ன! சிங்கணனா!” என்று அவன் உதடுகளிலிருந்து உதிர்ந்த சொற்களிலும் அந்த வியப்பு மிதமிஞ்சி ஒலித்தது.

“ஆம்! போசளர் தளபதி சிங்கணன்தான்.” என்ற பணிப்பெண் குறிஞ்சி, “நான் பாண்டியர் வேவுகாரியா யிருந்தால் போசள ராஜமுத்திரை என்னிடமிருக்க காரண மில்லை. நான் போசளர் வேவுகாரியாயிருந்தால் பாண்டிய ராஜமுத்திரை என்னிடமிருக்கக் காரணமில்லை இருவருக்கும் வேவுகாரியாக இருந்தால் இத்தனை நாள் என் உயிர் காலனிடம் சரணடைந்திருக்கும்,” என்றும் விளக்கினாள்.

அவள் விளக்கம் சரியென்பதற்கு அறிகுறியாகத் தலையை மட்டும் ஆட்டினான் வீரரவி. ஆனால் அந்தத் தலையசைவிலும் அவன் குழப்பம் விலகாததை முகத்தின் தோற்றத்திலிருந்தே கண்டு கொண்ட குறிஞ்சி, “இதிலிருந்து தெரியவில்லையா நான் யாருக்கும் வேவுகாரியல்ல வென்று?” என்று சுட்டிக் காட்டினாள்.

வீரரவி அவளை நன்றாக ஏறெடுத்து நோக்கினான் ஒருமுறை. பிறகு பெருமூச்சொன்றும் அவனிடமிருந்து வெளி வந்தது. அந்தப் பெருமூச்சைத் தொடர்ந்து, “எனக்கு எதுவும் தெரியவில்லை, புரியவில்லை!” என்று அவன் கூறிய சொற்களில் குழப்பத்தோடு அலுப்பும் இருந்தது.

மன்னன் புத்தியிலோடிய உணர்ச்சிகளை சந்தேக மறப் புரிந்து கொண்டாள் குறிஞ்சி. மிகப் புத்திமானான வீரரவிக்குத் தன்னால் ஒரு பணிப் பெண்ணின் மனத்திலிருப்பதை அவிழ்க்க முடியவில்லையே என்ற ஏக்க மிருந்ததையும் அதன் காரணமாக அவன் சொற்களில் அலுப்புத் தொனித்ததையும் அவள் அறிந்து கொண்டதால் அவள் சற்று அனுதாபத்துடன் வீரரவியை நோக்கி, “மன்னா! சேரநாடு பெரும் அபாயத்தில் சிக்கியிருக்கிறது. ஆகையால் அதன் குடிகள் அதைக் காப்பாற்றப் பலவித வேடங்கள் தரிக்க வேண்டியிருக்கிறது. அந்த வேடங்களில் இந்தப் பணிப்பெண் வேடமும் ஒன்று. இந்த வேடம் எனக்குப் பலனளித்தது,” என்று கூறினாள்.

“என்ன பலன் பெண்ணே?” என்று வினவினான் சேர மன்னன் ஏதும் புரியாமல்.

“முதல் பலன் வீரபாண்டியன் நம்பிக்கைக்குப் பாத்திரமானது. இரண்டாவது பலன் சிங்கணர் நம்பிக்கைக்குப் பாத்திரமானது. நான் மருத்துவச் சாதியாதலால், கோட் டாற்றுக்கரைக் கோட்டைக்கு வெளியில் எப்பொழுதும் சென்றுவர இம்முத்திரை மோதிரத்தை வீரபாண்டியர் கொடுத்தார். போரில் காயமடைந்த பாண்டிய வீரர்களுக்கு மூலிசை கொண்டுவரும் காரணம் காட்டிக் கோட்டைக்கு வெளியே சென்று மலைக்காட்டில் மறைந்து இராக் காலங்களில் சிங்கணரைச் சந்தித்தேன். கோட்டையில் வேவு பார்க்க அவர் இம்மோதிரத்தை என்னிடம் கொடுத்தார்,” என்று கூறினாள் குறிஞ்சி.

“அப்படியானால், நீ சேர நாட்டுக்குப் பெரும் பணி புரிந்திருக்கிறாய்,” என்றான் வீரரவி.

“பணி புரிந்திருக்கிறேனா!” இம்முறை குறிஞ்சியின் சொற்களில் வியப்பு இருந்தது.

“ஆம்,” என்றான் மன்னன்.

“என்ன பணி?”

“சிங்கணன் வெற்றிக்கு நீ உதவியிருக்க வேண்டு மல்லவா?”
“சிங்கணன் வெற்றியா!”

“ஆம், வீரபாண்டியன் சரணாகதி சிங்கணன் வெற்றி தானே?”

வீரரவியின் இந்தச் சொற்களைக் கேட்ட குறிஞ்சி கலகலவென நகைத்தாள். “என்ன! கனவு ஏதாவது கண்டீர்களா மன்னா?” என்று வினவினாள் சிரிப்பின் ஊடே.

அவள் சிரிப்பும் கேள்வியும் வீரரவியின் சினத்தைக் கிளறி விடவே, “கனவல்ல பெண்ணே! செண்டுவெளியன்று செய்தி வந்தது சிங்கணனிடமிருந்து,” என்று சீறினான் சேரமன்னன்.

“என்ன செய்தி”

“வீரபாண்டியன் சரணடைய ஒப்புக் கொண்டதாக.”

“ஒப்புக் கொள்வது வேறு: சரணடைவது வேறு அல்லவா?”

அந்தக் கேள்விக்கு நேரிடையாகப் பதில் சொல்ல வில்லை மன்னன். “மன்னா! அந்தச் செய்திக்குப் பின்பு ஏதாவது செய்தி வந்ததா சிங்கணரிடமிருந்து?” என்று ஒரு கேள்வியை மீண்டும் கேட்டாள் குறிஞ்சி.

“இல்லை,” என்றான் மன்னன்.

“ஏனில்லை? முதல் செய்தி வந்து நாட்கள் ஆகவில்லை?”

“ஆகிறது.”

“பல நாட்கள் செய்தி அனுப்பாமல் ஒரு படைத் தலைவன் வாளாவிருக்க முடியுமா?”

“அது அங்குள்ள போர் நிலையைப் பொறுத்தது.”

இதைக் கேட்ட குறிஞ்சி சற்று நிதானித்துவிட்டுச் சொன்னாள், ”உண்மை மன்னா! ஆனால் போர் நிலையைப் பற்றி உபதலைவராவது ஏதாவது செய்தி யனுப்பியிருக்கலாம் அல்லவா?” என்று.

“அனுப்பியிருக்கலாம்,” என்றான் மன்னன்.

“ஏன் அனுப்பவில்லை?” என்று கேட்ட குறிஞ்சி, “அனுப்பும் நிலையில் அவர்கள் இல்லை. சரணாகதிப் போர்வையில் வீர பாண்டியர் சிங்கணன் படைகளுக்குப் பெரும் சேதம் விளைவித்துவிட்டார். அதற்கு நானே சாட்சி,” என்றாள் குறிஞ்சி மெள்ள.

“என்ன, வீரபாண்டியன் சிங்கணனுடைய படை களுக்குச் சேதம் விளைவித்தானா? அவன் சிறு படையெங்கே, சேரர் மாபெரும் படையெங்கே?” என்றான் வீரரவி உக்கிரத்துடன்.

குறிஞ்சி சிறிதளவும் அச்சத்தைக் காட்டாமல் உறுதியுடன் நின்ற இடத்தில் நின்றாள். “மன்னா! இந்தப் போரில் படைபலம் வெல்லவில்லை. அறிவு வென்றது. யாராலும் அளவிட முடியாத ஆழம்படைத்த வீரபாண்டியரின் அறிவு வென்றது,” என்று குறிஞ்சி மேலும் சொன்னாள்: “மன்னா. சிங்கணர் பெரும் படைத்தலைவர். தந்திரசாலி. ஆனால் வீரபாண்டியர் போர்த் தந்திரதை ஊகிக்கக்கூட முடியவில்லை சிங்கணரால். பக்கத்திலேயே இருந்த என்னாலேயே ஊகிக்க முடியவில்லை. அவர் சிந்தனையில் திட்டம் உருவாகிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதப் பணி இடுகிறார். ஏன் அப்பணி இடுகிறார் என்பது பணியை மேற்கொள்பவருக்கே புரியாது. ஆனால் அந்தப் பல பணிகள் காலப் பிரமாணப்படி ஒன்று சேரும் போது எதிர்பாராத விளைவுகள் ஏற்படுகின்றன. அவர் தனது சிந்தனைகளை, திட்டங்களை யாருடனும் பகிர்ந்து கொள்வதில்லை. அவர் மனைவி அந்த இளநங்கையிடம் கூட முழுவதும் அவர் எதையும் சொல்வதில்லை . மனைவி, பணிப்பெண், படைத் தலைவர்கள் எல்லோரும் சதுரங்கக் காய்கள். பாண்டிய இளவரசர் தமது இஷ்டப்படி காய்களை நகர்த்துகிறார். இப்படித்தான் நடந்தது கோட்டையில் அவர் தாக்கச் சொன்ன இரவில் சிங்கணர் தாக்கினார். அதுவும் வீரபாண்டியர் திட்டத்துக்கு முற்றும் மாறான இடத்தில், அவர் எதிர்பாராத இடத்தில் தாக்கினார். ஆனால் வீரபாண்டியர் அதை முன்பாக எதிர்பார்த்திருக்க வேண்டும். எப்படியென்று என்னைக் கேட்காதீர்கள் எனக்கே சரியாகத் தெரியாது. இளநங்கையையும் முந்நூறு. வீரர்களையும் கொண்டு சிங்கணரின் தாக்குதலை முறித்து விட்டார் வீரபாண்டியன். அந்தப் போரின்போது நானும் இருந்தேன். நானும் பங்கு கொண்டேன்.”
எதற்கும் அசையாத அவன் மனமும், அப்பொழுது அசைந்து கிடந்தது. “நீ சொல்வது உண்மையா?” என்று வினவினான்.

“ஆம்.”

”அப்படியானால் சிங்கணன் சரணடைந்து விட்டானா?”

“இல்லை.”

“நீ எப்பொழுது கிளம்பினாய் கோட்டாற்றுக் கரையிலிருந்து?”

“நான் குறிப்பிட்ட போர் முடிந்த மறுநாள்.” “ஏன் கிளம்பினாய்?”

“வீரபாண்டியர் உத்தரவுப்படி பாண்டிய மன்னனுக்கு ஓலை கொண்டு கிளம்பினேன்.”

“என்ன ஓலை?”

“அது தெரியாது. ஆனால் பயணத்தில் ஒன்று கண்டேன்.”

“என்ன?”

“மலைவழி பூராவும் ஆங்காங்கு கண்காணிப்பு இருந்தது. பாண்டியப் படைகள் கோட்டாற்றுக் கரைக்கும் தலை நகர எல்லைக்கும் இடையே யாரும் புகமுடியாத திரையை அமைத்திருக்கின்றன. அதைக் கிழித்துக் கொண்டு இங்கு செய்தி வருவதும் சாத்தியமல்ல”.

வீரரவிக்கு இது பெரும் வியப்பாயிருந்தது. சற்றுச் சிந்தித்துவிட்டு வினவினான். “எப்படி அத்தகைய திரையை அமைக்க முடியும்? பாண்டியர்களிடம் அத்தனை பெரும் படையில்லையே? தவிர, நமது கடற்படை அங்கு வந்திருக்க வேண்டுமே?” என்று.

“கடற்படை அங்கு வரவில்லை.” குறிஞ்சியின் சொற்கள் மெள்ள மெள்ள உதிர்ந்தன.

வீரரவி மலைத்து நின்றான். “ஏன் வரவில்லை?” என்று சீறினான் சில விநாடிகளுக்குப் பிறகு.

“காரணம் தெரியவில்லை. ஆனால், அதுவும் வீரபாண்டியன் சூழ்ச்சியாகத்தான் இருக்க வேண்டும். நான் கோட்டாற்றுக் கரையில் அவரிடம் பணிபுரிந்த ஒவ்வொரு நாளும் அவர் சதா ஓலைகளை எழுதிக் கொண்டிருந்தார். அவற்றுடன் வீரர்களைக் கோட்டைக்கு வெளியே அனுப்பிக் கொண்டிருந்தார். அந்த ஓலைகள்…” என்று சொல்லிக்கொண்டு போன குறிஞ்சி வாசகத்தை முடிக்கு முன்பு, “சிங்கணனைக் குழப்பின. வீண் தைரியத்தை அவனுக்கு அளித்துவிட்டன. எதிரியின் சூழ்ச்சியில் சிங்கணன் சிக்கிவிட்டான்” என்று வீரரவி சொற்களை இடைபுகுந்து வெட்டினான். அத்துடன் அந்த அறையில் நடமாடிக்கொண்டு “இப்பொழுது புரிகிறது ஓரளவுக்கு. வீரபாண்டியன் சரணாகதியடையப் போவதாக அண்ணனுக்கு ஓலை எழுதி, அதை அகஸ்மாத்தாகச் சிங்கணனிடம் கிடைக்க ஏற்பாடு செய்திருக்கிறான். சிங்கணன் அதை நம்பியிருக்கிறான். அதில் ஏமாந்து விட்டான். இருப்பினும் சிங்கணனும் அப்படியொன்றும் போர்த் தந்திரம் அறியாதவனல்லவே? தவிர இந்தக் கடற்படை என்ன ஆயிற்று?” என்று சற்று இரைந்து சொல்லிக் கொண்டு குறிஞ்சியையும் இருமுறை நோக்கினான். “நீ வரும் போது கோட்டாற்றுக்கரை நிலை என்ன?” என்று வினவவும் செய்தான்.

“முதல் முதலில் சிங்கணர் தந்திரத்தால் வெல்லப் பட்டார். பிறகு நான் கிளம்பிவிட்டேன்’ என்று பதில் கூறினாள் குறிஞ்சி.

“பாண்டியன் பாசறைக்கு நீ வந்து எத்தனை நாளாகிறது?”

“நான்கு நாட்களாகின்றன.”

“பாண்டியன் இங்கு வேவு பார்க்க உன்னை அனுப்பினானா?”

“ஆம்.”

“வேவு பார்ப்பதாக உத்தேசமா?”

மன்னனின் இந்தக் கேள்வியைக் கேட்டதால் சற்றுப் புன்னகை கொண்டாள் குறிஞ்சி. பிறகு மடியிலிருந்த ஓர் ஓலையை எடுத்து மன்னனிடம் நீட்டினாள். மன்னன் ஓலையைப் பிரித்துப் படித்தான். வீரபாண்டியன் வெகு விவேகியென்றும், அவனை வெற்றி கொள்ளச் சிங்கணனால் முடியாதென்றும் கோட்டாற்றுக் கரைக் கோட்டைத் தலைவனான விஜயவர்மன் எழுதியிருந்தான் அந்த ஓலையில். அதைப் படித்து முடித்ததும் மன்னன் சொன்னான், “இதில் புதிதாக ஏதுமில்லையே?” என்று.

“இருக்கிறது பாருங்கள்” என்றாள் குறிஞ்சி.

“என்ன புதுமை இதில்?”

“ஓலை கனமாயில்லையா?”

“ஆம்.”

“பனை ஓலை இத்தனை கனமா?”

மன்னன் மீண்டும் ஓலையைக் கவனித்தான். இரண்டு பனை ஓலைகளை ஒன்றின் மேலொன்று, ஒரே சீராக ஒட்டப்பட்டிருப்பதைக் கண்டான். மெல்ல ஒட்டியிருந்த இடத்ததை நகத்தால் கீறி ஓலையைப் பிரித்தான். அடி ஓலையில் சின்னஞ்சிறு வரிகள் நிரம்ப இருந்தன. அதைப் படிக்கப் படிக்க மன்னன் முகத்தில் பெருவியப்பு மண்டியது. ” இது உண்மையா?” என்ற கேள்வியில் உள்ளத்தின் வியப்புப் பெரிதும் பிரதிபலித்தது.

“ஆம்,” என்றாள் குறிஞ்சி.

மன்னன் மஞ்சத்தில் உட்கார்ந்தான். “இப்படி உட்கார்,” என்று அவளுக்கும் தன்னருகில் இடம் விட்டான். “இப்பொழுது சொல், வீட்டில் வளர்ந்த காட்டு மலரே, சொல் கேட்கிறேன். உன் விசித்திரக் கதையைச் சொல்” என்றான் சேரமன்னன்.

Previous articleRaja Muthirai Part 2 Ch30 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Muthirai Part 2 Ch32 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here