Home Historical Novel Raja Muthirai Part 2 Ch32 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

Raja Muthirai Part 2 Ch32 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

61
0
Raja Muthirai Part 2 Ch32 Raja Muthirai Part 2 Sandilyan, Raja Muthirai Part 2 Online Free, Raja Muthirai Part 2PDF, Download Raja Muthirai Part 2 novel, Raja Muthirai Part 2 book, Raja Muthirai Part 2free, Raja Muthirai,Raja Muthirai Part 2 Story in tamil,Raja Muthirai Part 2 Story,Raja Muthirai Part 2 novel in tamil,Raja Muthirai Part 2 novel,Raja Muthirai Part 2 book,Raja Muthirai Part 2 book review,ராஜ முத்திரை ,ராஜ முத்திரை கதை,Raja Muthirai Part 2tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2full story,Raja Muthirai Part 2 novel full story,Raja Muthirai Part 2audiobook,Raja Muthirai Part 2audio book,Raja Muthirai Part 2full audiobook,Raja Muthirai Part 2full audio book,
Raja Muthirai Part 2 Ch32 | Raja Muthirai | TamilNovel.in

Raja Muthirai Part 2 Ch32 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

ராஜ முத்திரை இரண்டாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 32 கதையும் யோசனையும்

Raja Muthirai Part 2 Ch32 | Raja Muthirai | TamilNovel.in

வீட்டில் வளர்ந்த காட்டு மலரெனக் குறிஞ்சியை விளித்து அவள் விசித்திரக் கதையைச் சொல்லுமாறு வீரரவி பணித்த பின்பும், குறிஞ்சி தன் கதையைச் சொல்லாமல் மன்னனை உற்றுப்பல விநாடிகள் நோக்கிவிட்டு, “மன்னவா! ஓலையை நன்றாகப் படித்தீர்களல்லவா?” என்று வினவினாள் கவலை சொட்டிய குரலில்.

மன்னனும் அவளை நன்றாக ஏறெடுத்து நோக்கினான். அவள் முகத்தில் தோய்ந்து கிடந்த கவலை அவனுடைய வியப்பை அகற்றி அவன் உள்ளத்திலும் கவலையைப் பெருக்கி விடவே, “படித்தேன் குறிஞ்சி. நீ மலைவாசியானாலும் விஜயவர்மன் மகளென்பதைப் புரிந்து கொண்டேன். சேரநாடு அபாயத்திலிருப்பதாகவும், நிலைமையை நீ விளக்கிச் சொல்லுவாயென்பதையும், உன் சொற்படி நடப்பது நலன் தருமென்றும் விஜயவர்மன் ஓலையில் குறித்திருக்கிறான்,” என்று உள்ளத்தே படர்ந்த கவலையின் சாயை குரலிலும் தொனிக்கக் கூறிய வீரரவி, “சேரநாட்டுக் கோட்டைத் தலைவன் ஒருவன் தனது மகளின் பேச்சைக் கேட்கும்படி மன்னனுக்கு எழுதப் பெரும் துணிவு வேண்டுமல்லவா?” என்று வினவினான்.

குறிஞ்சி தனது விழிகளை அகலவிரித்து மன்னனை நோக்கி, “தேவை எந்தத் துணிவையும் அளிக்கும் மன்னவா! நாட்டு நலன் கண்முன் நிற்கும்போது, தனிப்பட்ட அந்தஸ்து, பதவி அனைத்தும் கண்ணுக்கோ அறிவுக்கோ புலப்படாததும் இயற்கை,” என்று சுட்டிக் காட்டினாள்.

“உண்மை குறிஞ்சி, உண்மை. விஜயவர்மன் எனது சிறந்த படைத்தலைவர்களுள் ஒருவன். நாட்டுப் பற்று மிகக் கொண்டவன். ஆனால் அமைச்சர்களும் மற்றப் படைத் தலைவர்களும் இங்கிருக்க ஒரு பெண்ணின்-அதுவும் வயது முதிர்ச்சி சிறிதுமற்ற வாலிபப் பருவத்திலிருக்கும் ஓர் அழகியின்- யோசனையைக் கேட்கும்படி படைத் தலைவன் வலியுறுத்துவது விந்தையல்லவா?” என்று வினவினான் வீரரவி.

“இங்குள்ள தங்கள் அமைச்சர்களும் படைத் தலைவர்களும் அறியாததை அங்கிருந்து வரும் நானறிந் திருப்பதில் வியப்பில்லையல்லவா? விஷயமறியாது அறிவாளிகள் கூறக் கூடிய யோசனைகளைவிட விஷய மறிந்த சாதாரணக் குடிமகளொருத்தி கூறும் யோசனை சிறந்ததல்லவா?” என்று கேட்டாள் குறிஞ்சி.

குறிஞ்சியின் துணிவு மன்னனுக்குப் பெரும் வியப்பை அளித்தாலும் அதை வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. லேசாகப் புன்முறுவல் செய்துவிட்டு, “சொல் குறிஞ்சி சொல். உன் யோசனையையும் கேட்போம்,” என்று கூறி விட்டு மஞ்சத்தில் நன்றாகச் சாய்ந்து கொண்டான் ‘மன்னன்.

கோட்டாற்றுக்கரையை வீரபாண்டியன் அடைந்ததிலிருந்து நடந்த விஷயங்களை விவரமாகச் சொன்னாள் குறிஞ்சி. மெல்ல மெல்ல, விஜயவர்மனின் பெரும் படை எப்படி ஊடுருவப்பட்டது, தாக்கப்பட்டது, எப்படி எதிர்பாராத, புதுவிதப் போர் முறையை வீரபாண்டியன் கையாண்டான் என்ற விவரங்களைத் தெளிவாகச் சொன்னாள் குறிஞ்சி, கோட்டைச் சுவரிலிருந்த விற்கூடங்களைத் திருப்பி நிறுத்திய முறை – இவற்றையும் சொன்னாள். எப்படிச் சரணாகதியடைவதாகச்சிங்கணனை ஏமாற்றினான், எப்படி மேலுக்குப் போர் புரிவதாகச் சொல்லிப் பிறகு உண்மைப் போர் புரிந்து சிங்கணன் சற்றும் எதிர்பாராத விதத்தில் அவன் படையை உடைத்தான் என்ற விவரங்களையும் சொன்னாள். கோட்டாற்றுக்கரை நிகழ்ச்சிகளையெல்லாம் விவரித்த குறிஞ்சி, கடைசியாகக் கூறினாள்: “கோட்டைக்கு வெளியே என் தந்தையை வீரபாண்டியன் முறியடித்த வுடனேயே என் தந்தை புரிந்து கொண்டார், மிகுந்த விவேகமுள்ள ஒரு மனிதனிடம் கோட்டை சிக்கிக் கொண்டிருப்பதை. ஆகவே வீர பாண்டியன் தமது மனைவிக்குப் பணிப்பெண் கேட்டதும் என்னையே அனுப்பினார். என்னையே தேர்ந் தெடுக்கும்படியான சூழ்நிலையையும் என் தந்தை சிருஷ்டித்தார். தன் மகளென்று சொல்லாதபடி கட்டுத் திட்டமும் எனக்குச் செய்து அனுப்பினார்,” என்று.

இதைச் சொன்ன குறிஞ்சி சற்று நிதானித்தாள். அந்தச் சமயத்தில் மன்னன் கேட்டான் : “இளநங்கை எப்பொழுது வீரபாண்டியன் மனைவியானாள்?” என்று.”
குறிஞ்சி மன்னனைச் சற்று வெறுப்புடன் பார்த்தாள். “எங்கள் கோட்டையில் தான் அவருக்கு மனைவியானாள். ஆனால் அதுவா முக்கியம் இப்பொழுது?” என்று வெறுப்புக் கலந்த குரலில் கூறிய குறிஞ்சி, “மன்னருக்குப் பெண்களென்றால் தனிப் பிரியமுண்டு என்பதைக் கேட்டிருக்கிறேன். அந்த விஷயங்களுக்கு இப்பொழுது சமயமில்லை மன்னவா! நாடு நிலைத்த பிறகு சுகபோகங்களைக் கவனியுங்கள்” என்றும் தெளிவாகச் சொன்னாள்.

இதைக் கேட்ட மன்னன் முகத்தில் சுடர்விட்ட கோபத்தைக்கூடக் கவனிக்காமல் மேலும் சொன்னாள் குறிஞ்சி. “மன்னவா! என் தாய் மலை இனத்தவள். கோட்டாற்றுக் கரை மாளிகையில் மருத்துவர் பச்சிலை தேடக் காட்டுக்குச் சென்றபோது பச்சிலையை மட்டுமின்றி அனாதையாயிருந்த என் தாயையும் அழைத்து வந்து தனது பெண்ணைப்போல் வளர்த்தார். மருத்துவர் மனைக்கு என் தந்தை வந்த சமயங்களில் அங்கிருந்த காட்டு மலரையும் சொந்தமாக்கிக் கொண்டார். நான் அவர்கள் அன்பின் செல்வியாகப் பிறந்தேன். மாளிகையில் வளர்ந்தேன். மாளிகை வாழ்க்கைப் பிடிக்காத என் தாய் என்னை அடிக்கடி மலைக்காடுகளுக்கு அழைத்துச் செல்லுவாள். மலைப் பச்சிலைகளைக் காட்டிக் கொடுப்பாள், சில நாட்கள் தனது இனத்தாருடன் விட்டும் வருவாள். இப்படி நான் காட்டிலும் வீட்டிலுமாக வளர்ந்தேன். காட்டுப் பாதைகளை, மூலிகைகளை நன்றாக அறிந்தேன். தாய் இறந்த பிறகு மருத்துவருக்கு நானே பச்சிலைகளைக் கொணர்ந்தேன். என் பிறப்பு விஷயம் மெள்ள மெள்ள வெளிப்பட்டது. ஆனால் என் தந்தையான விஜயவர்மன் அதைப்பற்றி லட்சியம் செய்யவில்லை. என்னைப் பெண்ணாகவே நடத்தினார். அவர் என்னைத் தன் பெண்ணாகக்கூடப் பகிரங்கமாக ஒப்புக்கொண்டிருப்பார். ஆனால் அந்தச் சமயத்தில் போர் வந்தது. வீரபாண்டியர் கோட்டைக்குள் நுழைந்தார். நான் பணிப் பெண்ணா னேன். பணிப்பெண் மட்டுமல்ல வேவுகாரியும் ஆனேன். ஆனால் வீரபாண்டியரிடம் அதிகமாக வேவு பார்க்க முடியவில்லை. அவர் செய்யச் சொன்ன பல காரியங்கள் அர்த்தமற்று இருந்தன. நான் அவர் அலுவல்களைத் தந்தையிடம் சொன்னபோது தந்தைக்கு ஏதும் விளங்கவில்லை. சிங்கணன் முதல் மோதலில் முறியடிக்கப்பட்ட பின்புதான் அவரிடும் அலுவல்களுக்கு அர்த்தம் புரிந்தது. அதற்குமேல் தாமதிப்பது தவறென்று தந்தை என்னிடம் இந்த ஓலையைக் கொடுத்துச் சமயம் கிடைக்கும்போது கோட்டையை விட்டுச் சென்றுவிடும்படி கூறினார். அந்தச் சமயத்தை வீரபாண்டியரே ஏற்படுத்திக் கொடுத்தார். பாண்டிய மன்னருக்கு ஓலை கொடுத்தார்….”

சற்று நிதானித்தாள் குறிஞ்சி. மன்னனும் சில விநாடி கள் பேசவில்லை. பிறகு, “இப்பொழுது உன் யோசனை என்ன?” என்று வினவினான்.

குறிஞ்சி பதில் சொல்லத் தயங்கினாள். பிறகு, “மன்னவா!” என்று துவங்கினாள்.

“உம்.”
“நான் பாண்டியர் பாசறையிலிருந்து வருகிறேன்…”

“ஆம்.”

“பாண்டிய மன்னர் எரிபரந்தெடுத்தல் கொள்கை விளைவாக வந்த கிராம மக்கள் கூட்டத்தில் கலந்து வந்தேன்.”

“சரி.”

“வரும் போது மக்கள் பேசிக் கொண்டார்கள்.”

“என்ன பேசிக் கொண்டார்கள்?”

“பாண்டிய மன்னரின் பெருந்தன்மையைப் பற்றிப் பேசிக் கொண்டார்கள். கிராமங்களுக்குத் தீயிடுமுன்பு தங்களுக்கு உதவி புரிந்து வெளியேற்றியதைப் பற்றிப் பேசிக் கொண்டார்கள். பெண்ணை அபகரித்துச் சென்றால் யார்தான் வாளாவிருப்பார்கள் என்றும் பேசிக் கொண்டார்கள்.”

“அப்படியா!”
“ஆம். அது மட்டுமல்ல. இங்கு வந்த பின்பு குருநாதர் சிறைப்பட்டதைப் பற்றியும் வெறுப்புடன் மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.”

மன்னன் கோப விழிகளை அவள் மீது நாட்டினான். ”நாட்டுக்குச் சதி செய்பவர்கள் யாராயிருந்தாலும் தண்டிக்க வேண்டியது, மன்னன் கடமையில்லையா?” என்றும் வினவினான் கோபத்துடன்.

குறிஞ்சியின் மலர் விழிகளில் வேதனை தெரிந்தது. “மன்னவா! குருநாதர் நாட்டுக்குச் சதி செய்யாமாட்டாரென்று, மக்கள் திட்டமாக நம்புகிறார்கள். பாண்டிய குமாரியை நீங்கள் சிறைப்படுத்தியிருப்பதை மட்டும் அவர் ஒப்புக் கொள்ளவில்லை என்று கூறுகிறார்கள்,” என்றாள் குறிஞ்சி வேதனையுடன்.

“என் மக்களை எனக்குத் தெரியும்,” என்றான் வீரரவி சீற்றத்துடன்.

“குருநாதருக்கும் தெரியும்,” என்ற குறிஞ்சி “மன்னவா! நீங்கள் அறியாத விஷயமில்லை . பத்தினித் தெய்வத்தைக் கொண்டாடும் சேரநாட்டில் பெண்கள் பலவந்தமாகக் கொண்டு வரப்படுவதை யாருமே விரும்புவதில்லை. இதனால் குருநாதர் விரோதப்பட்டார். மக்களும் விரோதப்பட்டிருக்கிறார்கள். இஷ்டமில்லாத மக்களை வைத்துக் கொண்டு போர் நடத்துவது அபாயம். இது என் தந்தையின் கருத்து.”

“இஷ்டமுள்ள மக்களை வைத்துக்கொண்டு உன் தந்தை நடத்திய போர் என்னவாயிற்று?” என்று கேட்டான் மன்னவன்.

குறிஞ்சி இதற்குப் பதில் சொல்லமுடியாமல் தவித் தாள். “சரி உன் யோசனையைச் சொல்லிவிடு. குருநாதரையும், பாண்டியகுமாரியையும் விடுவிக்க வேண்டும். அவ்வளவுதானே?” என்று மற்றொரு கேள்வி யையும் வீசினான் மன்னவன்.

“குருநாதர் ஒருவர்தான் இப்பொழுது நாட்டைக் காக்க முடியும். வீரபாண்டியர் அறிவுக்குச் சமமான அறிவைப் படைத்தவர் குருநாதர். மற்றவர்கள் பார்க்காத இடங்களில் அவர்கள் பார்வை செல்லும். ஆகவே அவர் யோசனைப்படி நடப்பது நல்லது. இது என் கருத்து. நிற்க, கோட்டாற்றுக்கரைக் கோட்டைப் போர் நான் வரும் போது முடியவில்லை. ஆனால் முடிவை நான் இங்கிருந்தே சொல்ல முடியும். சிங்கணரால் ஒருகாலும் வீரபாண்டி யரை வெற்றி கொள்ள முடியாது,” என்றாள் குறிஞ்சி.

“குருநாதர் புகழையும், வீரபாண்டியர் புகழையும் பாடவந்தாயா குறிஞ்சி? இந்தப் பாட்டைப் பலர் பாடக் கேட்டு என் காது புளித்துவிட்டது. உன்னால் வேறு ஏதாவது சொல்ல முடியுமா?” என்றான் மன்னவன்.

‘இல்லை’ என்பதற்கு அறிகுறியாகத் தலையை அசைத்தாள் குறிஞ்சி.

மன்னன் அடுத்த கேள்வியை வீசினான். “உன்னுடன் யார் வந்திருப்பது?” என்று வினவினான், உணர்ச்சியற்ற குரலில்.

“பாண்டிய மன்னர் வேவுகாரர் இருவர்,” என்றாள் குறிஞ்சி.

“அவர்கள் யார்?”

“தெரியாது. இன்று காலை நான் வரும்போது அரண்மனைக் காவலன் இல்லத்தில் இருந்தார்கள்.”

“காவலன் பெயர்?”

“சாத்தன்.”

“அவன் எப்பொழுது வேவுகாரனாக மாறினான்?”

“அவன் மாறவில்லை. அவனை மிரட்டி, சொற்படி கேட்க வைத்தார்கள்.”

“உன் சகாக்களா?”

“ஆம்.”

“அந்தச் சகாக்கள் பெயர் என்ன?”

“தெரியாது.”

“தெரியாதா?”

“ஆம் தெரியாது. என்னை அவர்களுடன் இங்கு பாண்டிய மன்னர் அனுப்பியபோது, இவர்களுடன் செல்’ என்று மட்டும் கூறினார்,”

“அவர்கள் உனக்கிட்டுள்ள பணி என்ன?”

“முத்துக்குமரியைப் பாதுகாப்பது. இளவரசியைத் தப்புவிக்க வழி தேடுவது.”
வீரரவியின் முகத்தில் குழப்பம் தெரிந்தது. ‘வேவு பார்க்க வந்தவள் இத்தனை விவரமாக ஒளிவு மறைவு இல்லாமல் விஷயங்களை ஏன் சொல்லுகிறாள்? ஒரு வேளை சேர நாட்டிடம் உண்மையிலேயே பற்று உள்ளவளா?’ என்று சிந்திக்க மன்னன் மேற்கொண்டு ஏதும் பேசாமல் கைதட்டி வெளியிலிருந்த காவலனை அழைத்து, “இந்தப் பெண்ணைப் பாண்டியர் மகளிடம் பணிபுரிய அமர்த்தி விடு,” என்று உத்தரவிட்டான்.

பணிப்பெண் குறிஞ்சி வியப்பு நிரம்பிய விழிகளை அவன் மீது திருப்பினாள். மன்னன் அவளைப் பார்த்துப் புன்முறுவல் செய்து, “நீ செய்ய வந்த பணிக்கு இந்தப் பணி உதவும்,” என்று கூறி வெளியே செல்ல அவளைப் பணித்தான். அவள் வெளியே சென்றதும் மற்றொரு – காவலனை விளித்து, “சாத்தன் என்ற நமது காவலன் இல்லம் தெரியுமா உனக்கு?” என்று வினவினான்.

“தெரியும்,” என்றான் காவலன்.

“பத்து வீரர்களுடன் அங்கு செல்.”

“உத்தரவு.”

“சென்று சாத்தனையும் அந்த வீட்டிலுள்ள மற்றவர்களையும் சிறைப்படுத்தி வா.”

“உத்தரவு மகாராஜா,” என்று கூறிக் காவலன் தலை வணங்கிச் சென்றான்.

மன்னன் மேலும் முறுவல் கொண்டான். “சாத்தன் இல்லத்தில் இந்திரபானு இருக்கிறான். சந்தேகமில்லை. தந்திரசாலியான இந்திரபானு பிடிப்பட்டால், வீரபாண்டியன் வலது கை உடைந்தது போலாகும். அதுமட்டுமல்ல. இந்திரபானு முத்துக்குமரி இருவரின் சிறையிருப்பு பாண்டியனை மிரட்டச் சிறந்த ஆயுதமுங்கூட” என்று சற்றே இரைந்தே சொல்லிக் கொண்டான். பிறகு தனது மேலங்கியை அணிந்துகொண்டு குருநாதன் சிறை வைக்கப் பட்டிருந்த இடத்தை நோக்கி நடந்தான். நாலைந்து கட்டுகளைத் தாண்டியிருந்த கடைசி அறையை நெருங்கியதும் அங்கிருந்த காவலர் தலை வணங்க உள்ளே சென்ற வீரரவி குருநாதன் இருந்த நிலையைக் கண்டு பெரிதும் வியந்தான்.

குருநாதன் அங்கிருந்த மஞ்சத்தில் படுக்காமல் தரையில் உட்கார்ந்து கொண்டிருந்தான். வெள்ளைவெளேரென்றிருந்த அவன் மேல் துண்டு பக்கத்தில் விழுந்திருந்தது. மந்திரதண்டம் கைக்கெட்டும் தூரத்தில் இருந்தது. அந்த மந்திர தண்டத்தைக் கண்டதும் சேர மன்னன் சிறிது கலங்கினான். அந்த மந்திர தண்டத்திலிருந்த கூரிய சிறு கத்திகளின் மகிமையை அவன் ஏற்கனவே உணர்ந்திருந்த தால் உள்ளத்தே எழுந்த கலக்கம் முகத்திலும் தெரிந்தது. அவன் நின்ற இடத்திலேயே சில விநாடிகள் நின்றான்.

அவனைக் குருநாதன் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. கையிலிருந்த ஓலை நறுக்குகளில் எழுத்தாணிகொண்டு சொற்களைப் பொறித்துக் கொண்டிருந்தான். “குருநாதரே!” என்று மன்னன் விளித்த பின்பே சற்றுத் தலையை உயர்த்தினான்.

“என்ன?” என்ற அவன் கேள்வியில் அசட்டை இருந்தது. மன்னன் முகத்தில் கவலை மறைந்து அந்த இடத்தைக் கோபம் ஆக்கிரமித்துக் கொண்டது. “உமக்கு மீண்டும் துணை அனுப்புகிறேன்,” என்றான் மன்னவன்.

“மகிழ்ச்சி” இகழ்ச்சியுடன் வெளிவந்தது குருநாதனின் பதில்.

“மகிழ்ச்சி அதிக நாள் நீடிக்காது,” என்று சீறினான் மன்னன்.

“யார் மகிழ்ச்சி? உன் மகிழ்ச்சியா, என் மகிழ்ச்சியா?” என்று பதிலுக்குக் கேட்டான் குருநாதன்.

“உமது மகிழ்ச்சிதான். இந்திரபானுவைச் சிறை செய்யக் காவலரை அனுப்பியிருக்கிறேன்,” என்றான் மன்னன்.

பதிலுக்கு இரைந்து நகைத்தான் குருநாதன். “உனக்குப் பைத்தியந்தான்” என்றும் கூறினான்.

Previous articleRaja Muthirai Part 2 Ch31 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Muthirai Part 2 Ch33 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here