Home Historical Novel Raja Muthirai Part 2 Ch34 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

Raja Muthirai Part 2 Ch34 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

97
0
Raja Muthirai Part 2 Ch34 Raja Muthirai Part 2 Sandilyan, Raja Muthirai Part 2 Online Free, Raja Muthirai Part 2PDF, Download Raja Muthirai Part 2 novel, Raja Muthirai Part 2 book, Raja Muthirai Part 2free, Raja Muthirai,Raja Muthirai Part 2 Story in tamil,Raja Muthirai Part 2 Story,Raja Muthirai Part 2 novel in tamil,Raja Muthirai Part 2 novel,Raja Muthirai Part 2 book,Raja Muthirai Part 2 book review,ராஜ முத்திரை ,ராஜ முத்திரை கதை,Raja Muthirai Part 2tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2full story,Raja Muthirai Part 2 novel full story,Raja Muthirai Part 2audiobook,Raja Muthirai Part 2audio book,Raja Muthirai Part 2full audiobook,Raja Muthirai Part 2full audio book,
Raja Muthirai Part 2 Ch34 | Raja Muthirai | TamilNovel.in

Raja Muthirai Part 2 Ch34 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

ராஜ முத்திரை இரண்டாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 34 மன்னன் தலையில் மற்றொரு பேரிடி

Raja Muthirai Part 2 Ch34 | Raja Muthirai | TamilNovel.in

குருநாதன் குரலில் ஒலித்த கவலை மன்னன் மனத்திலும் பெரும் கவலையையும் குழப்பத்தையும் சிருஷ்டித்து விடவே அவன் நீண்ட நேரம் காவலன் கொண்டு வந்த ஓலையையும், கத்தியையும் கையில் திருப்பித் திருப்பிப் பார்த்த வண்ணமே நின்று கொண்டிருந்தான். இந்திரபானு பிடிப்பட மாட்டானென்று குருநாதன் திட்ட வட்டமாகச் சொன்னது எத்தனை சரியாகப் போய் விட்டதென்பதை நினைத்துப் பார்த்துப் பார்த்துப் பிரமிப்படைந்த வீரரவி தன்னைவிடக் குருநாதனின் புத்தி மிகமிகக் கூரியதென்பதை உள்ளூர ஒப்புக்கொண்டதால், அத்தனை கூரிய அறிவுள்ள பரதப்பட்டன் கடற்படையைப் பற்றிக் கவலை கொண்டதில் காரணமிருந்ததென்றே எண்ணினான். ஆனால் காரணம் என்னவென்பது மட்டும் அவனுக்குப் புலப்படவில்லை. மேல் கடலில் சேர நாட்டுக்கு மட்டுமே படைபலமிருக்கும் காரணத்தாலேயே எப்படியும் வீரபாண்டியனைச் சமயத்தில் ஒடுக்கிவிடலாமென்று இறுமாந்திருந்த சேரமன்னனுக்கு, அந்தத் துறையைப் பற்றியும் குருநாதன் கவலை காட்டியதாலும் அந்தக் கவலை அவனையும் தொற்று வியாதிபோல் ஒட்டிக் கொண்டதாலும், ஏதோ விவரிக்க முடியாத அச்சமும் ஏற்படவே, உறுதியான அவன் கால்களும் சற்று உறுதி இழந்து தரையில் அசைந்தன. அப்படி உறுதி சற்றே தளர்ந்த நிலையில் ஏதோ சொல்ல வேண்டுமென்பதற்காக, “இந்தக் கத்தியைப் பார்த்தீர்களா?” என்று காவலன் ஓலையுடன் கொணர்ந்த கத்தியைக் காட்டினான் குருநாதனிடம் வீரரவி.

மன்னன் கையிலிருந்த கத்தியைப் பார்க்காமல் வெளியே தூரத்தில் எரிந்து கொண்டிருந்த சாத்தன் இல்லத்தையே கவனித்துக் கொண்டிருந்த குருநாதன், “பார்த்தேன்,” என்றான்.

“இது தங்கள் மந்திர தண்டத்தின் கத்தியைப் போன்றது. ” என்று சுட்டிக் காட்டினான் மன்னன்.

“ஆம்.”

“சேர வீரனொருவனை எறிந்து கொன்றீர்களே, அதே கத்தியின் உடன் பிறவியாயிருக்க வேண்டும்.”

“ஆம். ஆம். சந்தேகமில்லை . இரண்டு கத்திகளை இந்திர பானுவுக்குக் கொடுத்தேன். இப்பொழுதுதான் ஒன்றை உபயோகித்து இருக்கிறான்.” என்று விளக்கினான் குருநாதன்.

“எதற்குக் கொடுத்தீர்கள்?” மன்னன் கேட்டான் எரிச்சலுடன்.

“நாங்களிருவரும் சிறையில் அடைக்கப்பட்டபோதே அவன் உயிருக்கு ஆபத்தென்பது எனக்குத் தெரியும். ஆகவே கத்தியின் சூட்சமத்தைச் சொல்லி அவனிடம் இரண்டு கொடுத்தேன். அவன் உபயோகிக்கத் தருணமில்லை. செண்டு வெளியில் அத்தனை கேவலமான கொலை நடக்குமென்று அவன் எதிர்பார்க்கவில்லை,” என்ற குருநாதர் குரலில் வெறுப்பு இருந்தது. அந்த வெறுப்பு தன்னைப் பற்றியதென்பதை அறிந்திருந்தும், மன்னன் அதைப் பற்றிச் சிறிதும் கவலைப்படவில்லை. “தன்னைக் கொல்ல வரும் பசுவையும் கொல்லலாம் என்று சாத்திரமிருக்கிறது,” என்று கூறினான் வீரரவி.

“சாத்திரம் எல்லோருக்கும் எல்லாச் சமயங்களிலும் பயன்படுகிறது,” என்று கூறிய குருநாதன் அதைப் பற்றி மேற்கொண்டு விவரிக்காமல், “அந்தப் பழைய கதையைப் பற்றி இப்பொழுதென்ன பேச்சு? புது அபாயத்தைக் கவனி,” என்றான். இப்படிச் சொன்ன குருநாதன் குரலில் கவலை பரிபூரணமாக மண்டிக் கிடந்தது.

அதை மன்னன் கவனித்தான். “எந்தப் புது அபாயத்தைக் குறிப்பிடுகிறீர்கள்?” என்று வினவினான் மன்னனும் கவலையுடன்.

“சேரநாட்டுத் தலைநகருக்கு ஏற்பட்டிருக்கும் அபாயம்.” குருநாதன் சொற்கள் நிதானமாக, திட்டமாக உதிர்ந்தன.

“எதிரிப் படையெடுப்பைப்பற்றிக் குறிப்பிடுகிறீர்களா குருநாதரே?” என்று வினவினான் வீரரவி.

“பரலி மாநகரை நெருங்கி நகரும் பாண்டியன் படை களைக் குறிப்பிடுகிறேன்,” என்றான் குருநாதன் மீண்டும் கவலை தோய்ந்த குரலில்.
“இத்தனை சுலபமாகப் பாண்டியச் சிறுபடை நமது தலைநகரை அணுகிவிட முடியுமா?” என்ற மன்னன் கேள்வியில் வியப்பு ஒலித்தது.

ஆனால் இதற்குப் பதில் சொன்ன பரதபட்டன் குரலில் வியப்பில்லை, வெறுப்பே மண்டிக் கிடந்தது. தலை நகருக்குள் பாண்டியனைச் சந்திக்க உன்னால் முடியுமா?” என்றொரு கேள்வியைக் கேட்டான் குருநாதன்.

“ஏன் முடியாது?” என்று மன்னன் வினவினான்.

“முடிந்தால், அதுதான் நல்லது,”

“ஏன்?”

“பாண்டியன் கிராமங்களைக் கொளுத்தி மக்களை வெளியேற்றி இந்தத் தலைநகரை நிரப்பியிருக்கிறான்…” என்ற குருநாதரை இடைமறித்த சேரமான், “இல்லை இல்லை. நிரப்பவில்லை. வரும் மக்களைத் தெற்கே அனுப்பிக் கொண்டிருக்கிறேன்,” என்று குறிப்பிட்டான்.

குருநாதன் மன்னை ஏறெடுத்து நோக்கி, “அதுவரை நீ செய்தது சரி மன்னா. ஆனால் வடக்கு எல்லையிலிருந்து வரும் மக்களனைவரையும் வெளியேற்றுவது கடினம். நூறு பேர் வந்தால் பத்துப் பேர் இங்குத் தங்குவார்கள். தவிர, பாண்டியன் தொடர்ச்சியாகக் கிராமங்களை நிர்மூல மாக்கி, மக்களை இங்கு அனுப்பிக் கொண்டேயிருப்பான். அப்படி விரட்டும் மக்களுக்குப் பின்பே பாண்டியப் படையும் வரும். கடைசி கிராமங்களின் மக்கள் உள் நுழைவதற்குள் பாண்டியன் பரலியின் கோட்டையைத் தாக்கு வதற்கும் இடைக்காலம் சிறிதுமிருக்காது. மக்கள் நிரம்பியிருக்கும் தலைநகரில் படைகளைத் துரிதமாக நகர்த்துவதும் கடினம். ஆகவே, பாண்டியன் இந்நகருக்கு வெகு தூரத்தில் இருக்கும் போதே அவனை எதிர்ப்பதுதான் நல்லது. ஆனால் அதுவும் முடியாது” என்றான்.

“ஏன் முடியாது?” என்று வினவினான் மன்னன்.

“மக்கள் சாரி சாரியாகப் பாதைகளில் வரும்போது அவர்களுக்கெதிரே படைகள் நகருவது கஷ்டம். அதுவும் விற்கூடங்கள் வேற்கூடங்கள் உள்ள ஆயுத வாகனங்கள் நகருவது அசாத்தியம். வேண்டுமானால் சேனாதிபதியைக் கேட்டுப்பார்,” என்றான் குருநாதன்.

சிறையிலடைப்பட்ட குருநாதன் சகலத்தையும் உணர்ந் திருப்பது பற்றி மன்னன் பெரிதும் வியப்படைந்தான். “இத்தனையும் உங்களுக்கு எப்படித் தெரிந்தது? யார் சொன்னார்கள்?” என்று கேட்டான் வியப்புடன்.

“யாரும் சொல்லத் தேவையில்லை” என்றான் குருநாதன்.

“நீங்களாக ஊகித்தீர்களாக்கும்?” என்றான் மன்னன் ஏளனத்துடன்.

“ஊகத்திற்குப் பாண்டியன் இடம் வைக்க வில்லையே?” என்றான் குருநாதன் விஷமத்துடன்.

“பாண்டியனிடமிருந்து அதை அறிந்து கொண்டு விட்டீர்?”

“அவன் உதவி இதற்கு எதற்கு?”

“வேறு யார் உதவி கொண்டு அறிந்ததீர்?”

“இவற்றின் உதவி கொண்டு,” என்று குருநாதன் பளிச்சிட்ட தனது கண்களைக் கையால் தொட்டுச் காட்டினான். “இந்தச் சிறையிலும் சாளரமிருக்கிறது. ஒன்று வடபுறமும் இருக்கிறது. இப்படி வா,” என்று மன்னனை அழைத்த குருநாதன் தனது அறைக்குள் சென்று வடக்குச் சாளரத்தருகில் நின்று கொண்டான். பிறகு தூரத்தே தெரிந்த மலைப் பகுதியைச் சுட்டிக் காட்டினான்.

மன்னன் தனது கண்களில் விரிந்த காட்சியைக் கண்டு அசைவற்று நின்றான். தூரத்திலிருந்த மலைப் பகுதியில் பந்தங்கள் சாரிசாரியாய் வந்து கொண்டிருந்தன. அவற்றை ஏந்தி வந்துக்கொண்டிருந்த மக்களின் கூச்சல் மட்டுமின்றி, வண்டிகளில் சக்கர அரவம்கூட மிகத் தெரிவாக மன்னன் காதுகளில் விழுந்தன. அந்தக் காட்சியையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த மன்னனுக்கருகில் வந்து நின்றுகொண்டிருந்த குருநாதன் மெல்லச் சொன்னான், “மன்னவா! இந்தக் காட்சியை ஒரு வார காலமாகப் பிரதிதினம் பார்க்கிறேன். இதற்கு விவரணம் தேவையா? இந்த ஊரில் புது அரசன் முடியேற்கப் போகிறானா என்ன? கிராம மக்கள் வேடிக்கை பார்க்கவா வருகிறார்கள்? இந்தக் காட்சி போதாதா பாண்டியன் நோக்கத்தை அறிய? இதைப் பிரதி தினம் பார்த்தேன். புண்ணான மனத்துடன் உட்கார்ந்திருந்தேன். பரலிமா நகரை அழிக்கவே அத்தனை மக்கள் பந்தத்துடன் வருவதாக எனக்குத் தோன்றியது. இருப்பினும் கடற் படையை எண்ணி மன ஆறுதல் கொண்டேன். அந்தப் பலத்தை உடைக்கப் பாண்டியனுக்கு வலு இல்லை, வசதியுமில்லை என்று இறுமாந்திருந்தேன். அந்த இறுமாப்பிலும், ஆறுதலிலும் நீ மண்ணைப் போட்டு விட்டாய். கடற்படை என்ன ஆயிற்றென்று தெரியவில்லை யென்கிறாய்,” என்று மன வேதனையுடன் சொன்னான் குருநாதன்.

“இப்பொழுது என்ன செய்யச் சொல்கிறீர்கள்?” என்று வினவினான் வீரரவி.

“ஒற்றரை அனுப்பி, கடற்படை என்ன ஆயிற்றென்று கவனி. கடற்படை உருப்படியுடனிருந்தால் அதைத் திரும்ப அழைத்துவிடு,” என்றான் குருநாதன்.

“ஏன் குருநாதரே? எதிரி கோட்டை வாயிலில் தாக்கினால் கடலில் நிற்கும் படை எப்படி உதவும்?” என்று வினவினான் வீரரவி.

“பிறகு சொல்கிறேன். முதலில் கடற்படையின் கதியைக் கவனி.” என்ற குருநாதன், “மொத்தம் எத்தனை மரக் கலங்களை அனுப்பியிருக்கிறாய்?” என்றும் வினவினான்.
“ஐம்பது மரக்கலங்களை அனுப்பியிருக்கிறேன்,” என்றான் வீரரவி.

“நம்மிடமிருப்பதே அவ்வளவுதாரனே?”

“ஆம்.”

“அத்தனையும் அனுப்பிவிட்டாய்?”

“ஆம்.”

“கோட்டாற்றுக் கரையைப் பிடிக்க.”

“ஆம்.”

“தரைப் படை பத்தாயிரம், போர்க் கலங்கள் ஐம்பது. அத்தனையும் ஒரு கோட்டையைத் தாக்க? வீரபாண்டியனையும் அவன் சிறு படையையும் அழிக்க? உம்?” என்று சீறிய பரதபட்டன், “எதிரியிடம் உனக்கு அத்தனை மதிப்பு?” என்று சொற்களை உதிர்த்ததன்றி மேலும் கேட்டான். “தலைநகரை மலைப்புறத்திலும் கடற் புறத்திலும் நிர்க்கதியாகவிட உனக்கு யோசனை சொன்ன படைத் தலைவன் யார்? மந்திரி யார்?” என்று.

“சிங்கணன்.” மன்னன் குரல் மெல்ல ஒலித்தது.

“போசளர் படைத் தலைவனா?” என்றான் குருநாதன்.

“ஆம்.”
“ஏன் சேர நாட்டில் உனக்கு யோசனை சொல்ல யாருமில்லையா? உன் படைகளை நடத்தத் திறமைசாலி எவனுமே கிடையாதா இங்கே? அயல் நாட்டுப் படைத் தலைவன் எதற்கு உனக்கு?”

சேரன் நீண்ட நேரம் இதற்குப் பதில் சொல்ல வில்லை. பிறகு பரதன் எரிச்சலுடன் கிண்டிக் கேட்ட போதும் பதில் சொல்ல மறுத்தான். “இந்தப் போரில் சேரநாடு மட்டுமல்ல சம்பந்தப்பட்டிருப்பது” என்றான் கடைசியில்.

“தெரியும் எனக்கு,” என்றான் பரதபட்டன் வெறுப்புடன்.

மன்னன் விழிகள் வியப்புடன் பரதபட்டனை நோக்கின. “என்ன தெரியும் உங்களுக்கு?” என்று அவனிடமிருந்து உதிர்ந்த சொற்களிலும் வியப்பிருந்தது.

“இதில் போசள நாடும், சிங்களமும், சோழ நாடும் சம்பந்தப்பட்டிருப்பது எனக்குத் தெரியும். சேரநாடு அவர்கள் கைப்பாவையாக இயங்குவதும் எனக்குத் தெரியும்” என்றான் குருநாதன், மன்னனைச் சீற்றத்துடன் நோக்கி.

“குருநாதரே!” மன்னன் குரல் வெகுண்டு எழுந்தது.

“என்ன?” குருநாதனும் கேட்டான் சீற்றத்துடன்.

“உமது துணிவுக்கும் எல்லை இருக்க வேண்டும். என்னைக் கைப்பாவை என்கிறீர்?” என்றான் மன்னன் உதடுகள் கோபத்தால் துடிக்க.

“உண்மையைச் சொல்லப் பிரமாத துணிவு தேவையில்லை மன்னா! நீ மற்ற வல்லரசுகளின் கைப்பாவையில்லையேல் அவர்கள் படைப்பிரிவுகள் உனக்கு உதவ ஏன் வரவில்லை? உன்மீது பாண்டியன் படை எடுத்ததும் பாண்டிய எல்லையைப் போசளர் ஏன் தகர்க்கவில்லை? சிங்கணனை மட்டும் ஏன் அனுப்பினார்கள்? சிங்கணன் என்ன கிருஷ்ண பரமாத்மாவா, சூட்சுமத்தால் பெரும் வீரர்களையும் படைகளையும் தகர்த்தெறிய?” என்று சீற்றம் பெரிதும் முகத்தில் துளிர்த்ததால் சிவந்துவிட்ட வதனத்துடன் காலருத்ரன் போல் காட்சியளித்து பரத பட்டன் கேட்டான். “போசளரும், சிங்களரும் உன்னைத் தங்கள் கருவியாக உபயோகிக்கிறார்கள் பாண்டியனை உடைக்க. அவர்கள் வலையில் நீயும் விழுந்துவிட்டாய். அது நடந்த கதை. இனி நடக்கவேண்டிய கதையைக் கவனி. உன் நாட்டைக் காக்கப் பார். கடற்படை என்னவாயிற்று என்று பார்த்து எனக்கு அறிவி. பிறகு என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்கிறேன். போய்வா மன்னவா, போய் வா; சேரநாட்டுத் தலைவிதி எதற்கும் கலங்காத என் தலையைக்கூடக் கலக்குகிறது,” என்று கூறி அறைக்கு வெளியே செல்லும்படி மன்னனுக்குச் சைகை செய்தான்.

பரதப்பட்டனின் கடுங்கோபத்தைக் கண்டு மலைத்து நின்றுவிட்ட மன்னன் மெள்ள மெள்ள அந்த அறையை விட்டு வெளியேறினான். இரவு நேரம் ஓடிவிட்டாலும் அவன் பள்ளியறைக்குச் செல்லவில்லை. பட்டத்து ராணியையோ, இளைய ராணியையோ நாடவில்லை. ஆஸ்தான அறையை அடைந்து சேனாதிபதியை வரவழைத்துக் கடற்படையின் கதியை அறியுமாறு கட்டளையிட்டான்.

சேனாதிபதிக்குப் பதில் சொல்ல நா எழவில்லை. ஏதோ மென்று விழுங்கினான்.

“ஏன் விழுங்குகிறாய்? சொல்” என்று சீறினான் மன்னன்.

“நமது கடற்படையைப் பற்றித்தான் சொல்ல வந்தேன்,” என்று குழறினான், சேனாதிபதி.

“கடற்படைக்கு என்ன?” என்று கேட்டான் மன்னன் கோபத்துடன்.

“திரும்பி வந்துகொண்டிருக்கிறது,” என்று அறிவித்தான் சேனாதிபதி.

சேனாதிபதியின் முகபாவத்திலிருந்தும் சொற்கள் குழறியதிலிருந்தும் அவன் ஏதோ தனக்கு விருப்பமில்லாததைச் சொல்ல முயலுகிறான் என்பதை உணர்ந்து கொண்டான் வீரரவி. ஆகவே, “சொல் சேனாதிபதி! எதுவாயிருந்தாலும் சொல்,” என்றான்.

சேனாதிபதி மெள்ள விஷயத்தை அவிழ்த்தான். வீரரவியின் திகைப்பு எல்லை கடந்தது. தனது தலையில் மற்றொரு பேரிடி இறங்கிவிட்டதை உணர்ந்தான்.

Previous articleRaja Muthirai Part 2 Ch33 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Muthirai Part 2 Ch35 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here