Home Historical Novel Raja Muthirai Part 2 Ch35 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

Raja Muthirai Part 2 Ch35 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

57
0
Raja Muthirai Part 2 Ch35 Raja Muthirai Part 2 Sandilyan, Raja Muthirai Part 2 Online Free, Raja Muthirai Part 2PDF, Download Raja Muthirai Part 2 novel, Raja Muthirai Part 2 book, Raja Muthirai Part 2free, Raja Muthirai,Raja Muthirai Part 2 Story in tamil,Raja Muthirai Part 2 Story,Raja Muthirai Part 2 novel in tamil,Raja Muthirai Part 2 novel,Raja Muthirai Part 2 book,Raja Muthirai Part 2 book review,ராஜ முத்திரை ,ராஜ முத்திரை கதை,Raja Muthirai Part 2tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2full story,Raja Muthirai Part 2 novel full story,Raja Muthirai Part 2audiobook,Raja Muthirai Part 2audio book,Raja Muthirai Part 2full audiobook,Raja Muthirai Part 2full audio book,
Raja Muthirai Part 2 Ch35 | Raja Muthirai | TamilNovel.in

Raja Muthirai Part 2 Ch35 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

ராஜ முத்திரை இரண்டாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 35 புதுக் கதை

Raja Muthirai Part 2 Ch35 | Raja Muthirai | TamilNovel.in

கடற்படையின் நிலை பற்றி விவரங்கேட்ட மன்னனை நோக்கி சேனாதிபதி தயங்கித் தயங்கி மெல்லப் பேசினாலும், சொல்ல முற்பட்டதை மென்று விழுங்கி ஆமை வேகத்தில் சொன்னாலும் விஷயம் விபரீதமாகயிருந்ததால் சேனாதிபதியின் சொற்கள் நன்றாகக் காய்ச்சி உருக்கப்பட்ட ஈயம் போல் புகுந்தன மன்னன் செவிகளுக்குள். “எதுவாயிருந்தாலும் சொல்,” என்று மன்னன் துணிவுடன் சேனாதிபதியை ஊக்கி விட்டானே தவிர, அந்த ‘எதுவாயிருந்தாலும்’ இத்தனை விபரீதமாக இருக்குமென்று மன்னன் எண்ணவேயில்லை. ஆகவே சேனாதிபதி மிக மெதுவாக வாழைப்பழத்தில் ஊசியேற்றுவது போல் விஷயத்தை அவிழ்த்தாலும் அந்தச் சொல் ஊசிகள் மன்னன் இதயத்தில் சுரீல் சுரீலென்று பாயவே செய்தன. வீரரவி உதய மார்த்தாண்டவர்மனுக்கு அந்தச் சமயத்தில் வீரரவிப் பட்டத்தை நீக்கி அவனை வெறும் உதயமார்த்தாண்டவர்மனாகவே செய்தன.

இத்தனைக்கும் சேனாதிபதி வெகு சாலாக்காகத் தனது பதிலைத் துவக்கினான், “எதுவாயிருந்தாலும் சொல்,” என்று மன்னன் கட்டளை பிறந்தவுடன். “தாங்கள் இப்படி அவசரப்பட்டு ஆணையிடுவதால் சொல்கிறேன். இல்லாவிடில் நாளைக் காலையில் விஷயத்தைப் பூராவாக ஆராய்ந்து விட்டுத்தான் தங்களைச் சந்தித்துப் பேசுவதாக இருந்தேன்,” என்றான் சேனாதிபதி.
“உனது ஆராய்ச்சி பின்னாலிருக்கட்டும், முதலில் சொல். கடற்படை திரும்பி வருவதாக யார் சொன்னது உனக்கு” என்று வினவினான் மன்னன் கவலையுடன்.

”மன்னா, நான் தங்கள் சேனாதிபதியல்லவா?” என்றொரு அர்த்தமற்றக் கேள்வியைக் கேட்டான் சேனாதிபதி.

“இன்றுவரை நீதான் சேனாதிபதி!” என்று மன்னன் குறிப்பிட்டான் அத்தனை கவலையிலும் விஷமத்தைக் கைவிடாமல்.

“ஏன், என்னை மாற்றிவிடுவதாக உத்தேசமா?” என்று வினவினான் சேனாதிபதியும் இடக்காக.

“மாற்றினால் ஆச்சரியப்பட வேண்டாம் சேனாதிபதி மக்களைக் காக்க, இந்நாட்டைக் காக்க, இத்தலைநகரைக் காக்க யாரையும் எப்பொழுதும் மாற்றுவேன்,” என்றான் வீரரவி மேலும் விஷமத்துடன்.

சேனாதிபதியும் அதற்குச் சளைத்ததாகத் தெரிய வில்லை. “மன்னருக்கு நாட்டிடமும் மக்களிடமுமிருக்கும் அன்பு நன்கு தெரிந்தது. ஆகையால் என்னைப் பதவியைவிட்டு அகற்றினால் நான் ஆச்சரியப்பட மாட்டேன்” என்றான் சேனாதிபதி. இதைச் சொன்ன சேனாதிபதியின் குரலில் விபரீத ஒலி இருந்தது. அவன் தன்னைப் போற்றுகிறானா, தூற்றுகிறானா என்பது விளங்காததால் வீரரவி லேசாக உஷ்ணத்துடன் கேட்டான், “ஆச்சரியப்படாமல் என்ன செய்வீர்?” என்று.
“மகிழ்ச்சியடைவேன்” என்றான் சேனாதிபதி மிகுந்த பணிவுடன்.

“மகிழ்ச்சியடைவாயா?” மன்னன் குரலில் வியப்புத் துளிர்த்தது.

ஆம்,” மீண்டும் பணிவுடன் வந்தது சேனாதிபதியின் பதில்.

“பதவி போவதில் அத்தனை பிரியமா உனக்கு?”

“பதவியின் உயர்வு தாழ்வு சந்தர்ப்பத்தைப் பொறுத் தது. உயர்வு தாழ்வைப்பற்றியது. அதிலுள்ள மோகம் அந்த மோகத்தைப் பொறுத்தது நாம் அதை விரும்புவதும் விரும்பாததும் ,”

புதிரைப்போல் விரிந்த சேனாதிபதியின் சொற் களைக் கேட்ட மன்னன் ஒரு விநாடி குழம்பி நின்றான். பிறகு கேட்டான், “சேரநாட்டு சேனாதிபதி பதவி அற்பமென்று நினைக்கிறாயா?” என்று.

“சமீப காலம்வரை நினைக்கவில்லை,” என்றான் சேனாதிபதி துணிவுடன்.

“எப்பொழுது நினைக்க ஆரம்பித்தீர்?”

“மன்னரே அதற்கு மதிப்புக் கொடுக்காதபோது.”

“எப்பொழுது அதன் மதிப்பைக் குறைத்தேன்?”

“என்று சேரநாட்டுப் படைகளை நடத்திச் செல்ல என்னையும், ராமவர்மனையும் விட்டுப் போசளனைத் தேர்ந்தெடுத்தீர்களோ அன்று,” சேனாதிபதி இந்தச் சொற்களை வெறுப்புடன் உதிர்த்தான்.

மன்னன் அவன்மீது துயரம் நிரம்பிய விழிகளை நாட்டினான். “சேனாதிபதி,” என்று அந்தத் துயரம் குரலிலும் தோய அழைத்தான்.

“மன்னவா!” சேனாதிபதி பணிவுடன் கேட்டான்.

‘உன்னையும் ராமவர்மனையும் இழிவுபடுத்தும் நோக்கத்துடன் சிங்கணனைப் படைகளை நடத்த நான் நியமிக்கவில்லை,” என்றான் மன்னன்.

“மன்னர் செய்யும் காரியங்களுக்குக் காரணங்கள் பல இருக்கலாம்,” என்றான் சேனாதிபதி பதிலுக்கு.

“ஆம். முக்கிய காரணம் உங்களைவிட வீரபாண்டி யனைச் சிங்கணன் நன்கறிவான் என்பது.”

“உண்மை.”

“சிங்கணன் சுந்தரபாண்டியன் கோட்டையில் வேவுத் தொழில் புரிந்திருக்கிறான். வீரபாண்டியன், சுந்தர பார்ண்டியன் இவர்களை நன்றாகக் கவனித்திருக்கிறான். அங்குள்ள படைபலம் அவனுக்குத் தெரியும். அங்கிருந்த சமயத்தில்….” என்று மன்னன் வாசகத்தை முடிக்காமல் விட்டான்.
“பல அரிய சாதனைகளைப் புரிந்திருக்கிறார்” என்று சேனாதிபதி வாசகத்தை முடித்தான்.

சேனாதிபதி தன்னைப் பார்த்து நகைக்கிறா னென்பதைப் புரிந்து கொண்டாலும் மன்னன் அதை வெளிக்குக் காட்டிக் கொள்ளாமல் கூறினான். “சேனாதிபதி! அந்தக் கோட்டையிலிருந்த சமயத்தில் பாண்டியப் படைகளின் பயிற்சி, அவற்றின் போர் முறை, அவை இயங்க வீரபாண்டியன் பிறப்பித்த உத்தரவுகள், அத்தனையையும் சிங்கணன் கவனித்திருக்கிறான். பாம்பின் கால் பாம்பறியும் என்பதுபோல் சிங்கணன் பாண்டிய சகோதரர்களை நன்கறிந்திருந்தான். ஆகையால்தான் அவன் தலைமையில் படைப் பிரிவை அனுப்பினேன்,” என்று.

“பாம்பு என்ன ஆயிற்று மன்னவா! எதிரியைக் கடித்ததா? எதிரியால் அடியுண்டதா?” என்று வினவினான் சேனாதிபதி.

சிங்கணன் கதியைச் சில நாழிகைகளுக்கு முன்பே குறிஞ்சியிடமிருந்து அறிந்திருந்த மன்னன் அதுபற்றி சேனாதிபதிக்கு ஏதும் அறிய வாய்ப்பில்லையென்று நினைத்து, “அதை நீதான் அறிந்து சொல்ல வேண்டும்? உன் ஒற்றர்கள் ஏதும் செய்தி கொண்டு வரவில்லையா?” என்று வினவினான்.

“சென்ற ஒற்றர்களில் இருவர் திரும்பி வந்தார்கள். வந்த இருவரும் கோட்டாற்றுக் கரையை அடைய முடிய வில்லை” என்றான் சேனாதிபதி மெள்ள.

“ஏன்” மன்னன் வினவினான் எரிச்சலுடன்,
“இடையிலுள்ள பாதைகளைப் பாண்டியப் படைகள் கத்தரிக்கின்றனவாம்,” என்றான் சேனாதிபதி.

“அத்தனை படை பாண்டியனுக்கு ஏது? கோட்டாற்றுக் கரைக் கோட்டையைப் பாதுகாத்த சிங்கணன் பெரும் படையை எதிர்க்கவும், நமது தலை நகரின் வழியிலுள்ள பாதைகளைத் துண்டிக்கவும் பெரும்படை வேண்டுமல்லவா?” என்று வினவினான்.

“இத்தனை நாள் அப்படித்தான் நினைத்துக் கொண்டிருந்தேன்,” என்றான் சேனாதிபதி மிகப் பணிவுடன்.

“இப்பொழுது கருத்தை மாற்றிக்கொண்டு விட்டீராக்கும்?” என்ற மன்னன் கேள்வியில் ஏளனமிருந்தது.

“ஆம்.”

“என்ன காரணம்?”

“பாண்டியன் மலைச்சரிவுகளில் முக்கிய இடங்களில் பத்துப் பத்து வீரர்களை நிறுத்தியிருக்கிறான். நமது தலை நகருக்கும் வடக்கெல்லைக்குமிடையே ஓடும் பாதைகள் அந்தச் சரிவுகளிலிருந்து தெளிவாகத் தெரிகின்றன…”

“கடலோரப் பாதைகளா?”

“கடலோரப் பாதைகளும் சரி, கடலை ஒட்டியுள்ள மலைப் பாதைகளும் சரி, இரண்டும் தெரிகின்றனவாம். யாராவது ஒற்றன் புரவிமேல் சென்றால் அவன் குதிரைமீது அம்பு பாய்கிறது. அல்லது அவன்மீதே பாய்ந்துவிடுகிறது. இதில் போனவர் போக மீதி இரண்டு ஒற்றர்கள் தப்பி வந்திருக்கிறார்கள்…” என்று சேனாதிபதி சற்று நிதானித்தான். பிறகு மேலும் தொடர்ந்து, “கோட்டாற்றுக் கரையைத் தனி ஒற்றர் அணுக முடியாதென்றும் சேரநாடு தப்புவது மிகக் கடினம் என்றும் கூறுகிறார்கள்,” என்றான்.

சேரமான் தனது தீ விழிகளைச் சேனாதிபதி மீது திருப்பினான். “இதை என்னிடம் சொல்ல உனக்குத் துணிவு நிரம்பவேண்டும்,” என்றும் சீறினான்.

“எனக்குத் தனிப்பட்ட துணிவு கிடையாது. ஒற்றர்கள் துணிவுதான் எனக்கும் துணிவு கொடுத்தது.” என்று சேனாதிபதி நன்றாக நிமிர்ந்து நின்று மன்னனை நோக்கினான். ”மன்னவா! என் கடமையை நான் உணர்வேன்.. நெருக்கடியான காலத்தில் மன்னனிடம் உண்மையை மறைப்பதல்ல சேனாதிபதியின் கடமை. தவிர, இன்றுள்ள நிலையில், சேரநாட்டுச் சேனாதிபதியாக இருக்க யாரும் விரும்பமாட்டார்கள். இந்நாட்டில் நான் பிறந்த தோஷம், தங்கள் உப்பை நீண்டநாள் தின்ற உணர்வு, கடைசிவரை கடமையைச் செய்ய என்னைத் தூண்டுகிறது. நமது வெற்றியில் நம்பிக்கை இழந்த மக்கள், எதிரியின் தந்திரத்தைப் போற்றும் படை, பாண்டிய குமாரியைத் தாங்கள் சிறையெடுத்ததை எதிர்க்கும் குருநாதர், இத்தனை விபரீதத்தில் நான் சேனாதிபதிப் பதவியை வகிப்பது பலருக்கு விந்தையாயிருக்கிறது. அந்தப் பதவியிலிருந்து நீங்கள் என்னை விலக்கினால் எனக்கு எவ்வித வருத்தமுமில்லை. முன்பு சொன்னபடி மகிழ்ச்சிதான். நீங்கள் பதவியிலிருந்து விலக்கினாலும், நான் சாதாரண வீரனாக போரிட்டு மடிவேன். பதவியல்ல நான் விரும்புவது. சேரநாட்டு நலனை விரும்புகிறேன். தந்திர சாலிகளான பகைவர்களுக்கு எதிரே நமது படைபலம் ஆத்மீக பலம் இரண்டும் குன்றியுள்ள நிலையில், நான் கடமையைக் கைவிட ஆசைப்படவில்லை. அந்தக் கடமையின் காரணமாகவே, ஆட்டங் கொடுக்கும் அபாயம் விளைவிக்கும் இந்தப் பதவியில் இருக்கிறேன். என் கடமையைச் செய்து கொண்டும் வருகிறேன். பாண்டியன் எதிர்ப்பார்ப்பதுபோல் அத்தனை அபாயத்தில், தற்காப்பு சாத்தியமில்லாத நிலையில் நமது தலைநகர் இல்லை,” என்று விடுவிடு என்று வீராவேசத்துடன் மன்னனைத் துரும்பென மதித்துப் பேசினான் சேனாதிபதி.

அவன் ஆவேசத்தைக் கண்டு மன்னன் வியந்தான். துணிவைக் கண்டு வியந்தான். தலைநகர் அத்தனை பலவீனமாயில்லையென்பதைக் கேட்டு மகிழ்ந்தான். ஆகவே சொன்னான், “சேனாதிபதி! தலைநகர் பற்றி நீ சொன்னதுத திருப்தியாயிருக்கிறது.” என்று.

சேனாதிபதி மன்னனை ஏறெடுத்து நிர்ப்பயமாக நோக்கினான். “மன்னவா! செண்டு வெளியில் சேரநாடு அவமானப் பட்ட அன்றே தீர்மானித்தேன். அடுத்த அவமானத்துக்கு இடம் கொடுப்பதில்லையென்று. உடனடியாக நகரக் கோட்டைச் சுவர்களில் விற்பொறிகளை ஏற்றிவிட்டேன். உள்ளே நுழைந்த கும்பலை நகரைவிட்டு வெளியேற்றினேன். வெளிக் கிராமங்களிலிருந்து வந்த யார் நகரத்தில் தங்கினாலும் கடுமையான தண்டனை விதிக்கப் படுமென உத்தரவு பிறப்பித்தேன். ஆகவே நூற்றுக்கு பத்துப் பேர் தங்கினாலும் நகரத்துக்குள் உள்ள காட்டுப் பகுதிகளிலும் உறவினர் இல்லங்களிலும் மறைந்துதான் தங்குகிறார்கள். பாதைகளில் கூட்டமில்லை. நமது படைப் பிரிவுகள், வாகனங்கள், நன்றாகச் சஞ்சரிக்க முடியும். தவிர கடல் பகுதிகளிலும் எரியம்பு எய்யும் விற்கூடங்களை நிறுத்தியிருக்கிறேன். ஆகவே கடலோரப் பாதை வழியாகவும் நாமறியாமல் எதிரி நம்மை அணுகமுடியாது,” என்று விவரித்தான் சேனாதிபதி.

மன்னன் சற்று மனச் சாந்தியடைந்தான். சேனாதிபதியின் ஏற்பாடுகளில் குருநாதர் பயத்துக்கு விடைகளிருப்பதை உள்ளுர உணர்ந்து மகிழ்ந்தான். அந்த மகிழ்ச்சி அவன் முகத்திலும் பிரதிபலிப்பதை சேனாதிபதி கண்டான்.

கண்டதாலோ என்னவோ சற்று முகம் சுளித்தான் சேனாதிபதி. அதுவரை துணிவு நிலவிய அவன் முகத்தில் அச்சம் திடிரெனப் புகுந்தது. “மன்னவா! நான் சொன்ன அற்ப விஷயங்களைக் கேட்டு மகிழ்ந்துவிடாதீர்கள். நகரத்தைப் பாதுகாக்கத்தான் நான் ஏற்பாடு செய்திருக்கிறேன்…” என்று இழுத்தான்.
“வேறென்ன?” என்று வினவினான்.

“வெளிநிலை மோசமாயிருக்கிறது,” என்று சேனாதிபதி தழுதழுத்த குரலில் கூறினான்.

“எப்படி மோசமாகி வருகிறது?”

“பாண்டியன் படை முன்னைவிட அதிவேகமாகத் தலை நகரை நோக்கி வருகிறது.”

“அப்படியா?”

“ஆம். அதுமட்டுமல்ல!”

“வேறு விசேஷமும் இருக்கிறதா?”

“இருக்கிறது. சிங்கணனிடமிருந்து செய்தி ஏதுமில்லை. அவன் படைப்பிரிவில் பாதியைச் சுந்தரபாண்டியனைப் பின்புறத்தில் தாக்க அனுப்பியிருக்க வேண்டும், முதல் ஏற்பாட்டின்படி.

“ஆம்.’

சேனாதிபதி மன்னனை உற்று நோக்கினான். “பின்னால் படை தாக்கும்போது அதைச் சமாளிக்காமல் எதிரி எப்படி முன்னேற முடியும்?” என்று வினவினான்.

அப்பொழுதுதான் மன்னனுக்கு விஷயம் விளங்கியது. “ஆம் சேனாதிபதி, ஆம். பாண்டியன் முன்னேறுவதானால் ஒன்று அவன் படையைப் பின்புறம் யாரும் தாக்கவில்லை. அப்படித் தாக்கியிருந்தால் அந்தப் படையை அவன் நிர்மூலமாக்கியிருக்க வேண்டும்” என்றான் வீரரவி குழப்பம் சிந்தனையை ஆட்கொள்ள.

மன்னன் ஊகம் சரியென்பதற்கு அறிகுறியாகத் தலையசைத்தான் சேனாதிபதி. “இந்த நிலை எனக்குப் புரியவில்லை மன்னவா! அதுமட்டுமல்ல. கடற்படை விவகாரமும் பெரும் விந்தையாயிருக்கிறது. மன்னவா கடற்படை கோட்டாற்றுக்கரையைப் பின்புறம் தாக்க அனுப்பினோம்,” என்று பழைய கதையைத் துவங்கினான் சேனாதிபதி.

“அது பழைய கதை. புதுக் கதையைச் சொல்,” என்றான் மன்னன்.

இருப்பினும் புதுக்கதையைச் சொல்ல இஷ்டப்படாத சேனாதிபதி பழைய கதையையே சுவைக்க இஷ்டப்பட்டு, “நமது கடற்படை கோட்டாற்றுக் கரையைப் பின்புறம் தாக்கவில்லை,” என்றான்.

“ஏன்?” என்று வினவினான் மன்னன் கோபத்துடன்.

“அது கோட்டாற்றுக் கரையை அடையவேயில்லை,” என்று தட்டுத்தடுமாறிக் கூறினான் சேனாதிபதி.

“வேறு எங்கு போயிற்று?”

“கோட்டாற்றுக்கரைக்கு ஒரு காதமிருக் கையில் அதை நோக்கிக் கரையிலிருந்து விளக்கசைக்கப்பட்டது ஓர் இரவில்.

“உம்.”

“அந்த விளக்கசைந்ததும் படைத்தலைவர் இரண்டு படகுகளில் வீரர்களை அனுப்பி அதைக் கவனிக்கச் சொல்லி உத்தரவிட்டார்.”

“சொல்.”

“படகுகள் திரும்பின, இரு வீரர்களுடன்.”

“தாமதிக்காதே. சொல்.”

“அந்த இரு வீரர்களும் சிங்கணனிடமிருந்து இரண்டு ஓலைகளைக் கொண்டு வந்தார்கள். ஓர் ஓலையில் கோட்டை பிடிபட்டதாகவும் வீரபாண்டியன் சரணடைந்து மீதி வீரர்களுடன் வெளிப் போந்ததாகவும், ஆகவே கடற்படை பரலிக்குத் திரும்பலாமென்றும் சிங்கணன் உத்தரவிட்டிருந்தான். இன்னோர் ஓலையில் வீர பாண்டியன் சரணாகதி ஒப்பந்தமிருந்தது.”

மன்னன் முகத்தில் மகிழ்ச்சி துளிர்த்தது. “இதில் துயரத்திற்கு என்ன இருக்கிறது? இந்தப் புதுக் கதை தரமாயிருக்கிறதே” என்ற மன்னன் குரலில் சந்துஷ்டி தெரிந்தது.

“அதனால் திரும்பிய நமது கடற்படை…” என்று தயங்கினான் சேனாதிபதி.

“என்ன!” மன்னன் குரலில் சந்தேகம் தொனித்தது.

“முழுவதும் திரும்பவில்லை. பத்துப் போர்க்கலங்கள் வழியில் தீக்கிரையாயின. மீதி தப்பி வந்தது தம்பிரான் புண்ணியம்,” என்று குரல் நடுங்கிக் கூறிய சேனாதிபதி, “அவரும் வந்திருக்கிறார். வெளியிலிருக்கிறார். அழைக்கட்டுமா?” என்று வினவினான்.

“யார் அது?” மன்னன் குரல் கடினமாயிருந்தது.

”கடற்படையின் உபதளபதி.” சேனாதிபதியின் குரலில் துயரத்தின் சாயை நன்றாகப் பிரதிபலித்தது. அடுத்த விநாடி உபதளபதி உள்ளே நுழைந்தான். அவன் கோலமே அவன் கதையை மட்டுமல்ல: கடற்படையின் புதுக் கதையையும் சொல்லிற்று.

Previous articleRaja Muthirai Part 2 Ch34 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Muthirai Part 2 Ch36 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here