Home Historical Novel Raja Muthirai Part 2 Ch36 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

Raja Muthirai Part 2 Ch36 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

57
0
Raja Muthirai Part 2 Ch36 Raja Muthirai Part 2 Sandilyan, Raja Muthirai Part 2 Online Free, Raja Muthirai Part 2PDF, Download Raja Muthirai Part 2 novel, Raja Muthirai Part 2 book, Raja Muthirai Part 2free, Raja Muthirai,Raja Muthirai Part 2 Story in tamil,Raja Muthirai Part 2 Story,Raja Muthirai Part 2 novel in tamil,Raja Muthirai Part 2 novel,Raja Muthirai Part 2 book,Raja Muthirai Part 2 book review,ராஜ முத்திரை ,ராஜ முத்திரை கதை,Raja Muthirai Part 2tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2full story,Raja Muthirai Part 2 novel full story,Raja Muthirai Part 2audiobook,Raja Muthirai Part 2audio book,Raja Muthirai Part 2full audiobook,Raja Muthirai Part 2full audio book,
Raja Muthirai Part 2 Ch36 | Raja Muthirai | TamilNovel.in

Raja Muthirai Part 2 Ch36 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

ராஜ முத்திரை இரண்டாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 36 குருநாதன் எச்சரிக்கை

Raja Muthirai Part 2 Ch36 | Raja Muthirai | TamilNovel.in

கடற்படை உபதளபதியின் தோற்றத்தைக் கண்ட துமே அவன் நீண்ட தூரம் துரிதமாகவும் கஷ்டப்பட்டும் பயணம் செய்து வந்திருக்கிறானென்பதை மன்னன் புரிந்து கொண்டதால் அவன் உட்கார ஓர் ஆசனத்தைத் தன் கையால் சுட்டிக் காட்டி, தானும் தனது மஞ்சத்தில் உட்கார்ந்து கொண்டான். சேனாதிபதியைக்கூட உட்காரும்படி மன்னன் சைகை காட்டத்தான் செய்தான். ஆனால் சேனாதிபதி இருந்த மனோநிலையில் அவன் அதைப் புரிந்து கொள்ளத்தானில்லையோ, அல்லது புரிந்து கொண்டு உட்காரத்தான் இஷ்டமில்லையோ, நின்றது நின்றபடி உபதளபதியை உற்றுக் கவனித்தான். மன்னன் கண்களும் உபதளபதி மீது பல விநாடிகள் நிலைத்தன.

சேரநாட்டுக் கடற்படையின் உபதளபதி நன்றாக ஆறடி உயரமிருந்ததன்றி அடிக்கடி கடற் பிரயாணத்தில் ஈடுபட்டதன் விளைவாக அவன் முகமும் லேசாக கருத்திருந்தது. அங்கியின்மீது கழுத்தில் அவன் தங்கச் சங்கிலியொன்றை அணிந்திருந்தாலும், அவன் காதிலிருந்த வெளுத்த சங்கு வளையங்கள் கடற்பொருள்களில் அவனுக்கிருந்த ஆர்வத்தை நன்கு விளக்கின. அநேகமாகக் கடலில் உலாவியதால் பயத்தை அடியோடு இழந்திருந்த வனாயினும் அன்று மட்டும் அவன் முகத்தில் அச்சம் விரவி நின்றது. கலைந்திருந்த அவன் கேசமும் அதன் இழைகளின் சில நுனிகளில் அப்பொழுதும் முத்துப்போல் தொக்கி நின்ற நீர்த்திவலைகளும் அவன் கடலிலிருந்து நிலம் வந்து அதிக நேரமாக வில்லையென்பதையும் அலைத் திவலை களைத் துணியால் துவட்டி நீக்கக்கூட அவன் நேரத்தைச் செலவழிக்கவில்லை யென்பதையும் அறிவுறுத்தின. கிழிந்த அவன் ஆடைகள் அதிக அவசரத்தைக் குறித்தனவா அல்லது இடையே ஏற்பட்ட சண்டையைக் குறித்தனவா? எதையும் ஊகிக்கும் திறன் வாய்ந்த சேரமானுக்கே புரியவில்லை .

ஆகவே வீரரவி உதயமார்த்தாண்டவர்மன் ஏதும் பேசாமல், எக்கேள்வியும் வாய்விட்டுக் கேட்காமல், புருவத்தின் அசைவால்கூடத் தனது வியப்பைக் காட்டாமல் உட்கார்ந்தேயிருந்தான். கடற்படை உபதளபதியே வாய்திறந்து சொன்னான் சுருக்கமாகவும் திடமாகவும், “பத்து மரக்கலங்களை நாம் இழந்துவிட்டோம்” என்று.

“அதை சேனாதிபதியிடமிருந்தே அறிந்தேன்,” என்றான் மன்னனும் சுருக்கமாக.

“ஓலை விஷயங்களையும் அறிந்திருப்பீர்கள்,” என்றான் கடற்படை உபதளபதி.

“ஆம்., அவற்றையும் அறிந்தேன்,” என்று பதிலளித்தான் மன்னன்.

உபதளபதி சற்றுச் சிந்தித்துவிட்டு, “அந்த ஓலைகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” என்று வினவினான்.
“நினைப்பதற்கு என்ன இருக்கிறது? சிங்கணன் ஓலையில்லாமல் இருக்கலாம். உங்களை ஏமாற்ற எதிரி அனுப்பிய ஓலையாயிருக்கலாம். விளக்கசைத்த வீரர்கள் வீரபாண்டியன் வீரர்களாயிருக்கலாம்” என்றான் மன்னன் குரலில் எந்த உணர்ச்சியையும் காட்டாமல்.

“இப்படி நீங்கள் சந்தேகப்படுவீர்கள் என்று கடற் படைத் தளபதி நினைத்தார்,” என்றான் உபதளபதி.

“நினைத்து அவர் செய்ததென்ன!” மன்னன் குரலில் லேசாக உஷ்ணம் துளிர்க்கலாயிற்று.

“இதை உங்களிடம் காட்டச் சொன்னார்,” என்று இரண்டு ஓலைகளையும் மடியிலிருந்து மன்னனிடம் கொடுத்தான் உபதளபதி.

மன்னன் ஓலைகளை வெகு நிதானமாக ஆராய்ந்தான். சேனாதிபதியும் இரண்டடி எடுத்து வைத்து மன்னனுக்குப் பின்புறம் வந்து நின்று ஓலைகளைக் கவனித்தான். மன்னன் இரு ஓலைகளையும் பல முறை மாறி மாறிக் கவனித்தான். அவற்றில் சந்தேகப்படுவதற்கு ஏதுமில்லை. சிங்கணன் ஓலையில் போசள நாட்டு இலச்சினை இருந்தது. சரணாகதி ஒப்பந்தத்தில் வீரபாண்டியன் முத்திரை, போசள முத்திரை இரண்டுமே இருந்தன. அவ்விரண்டையும் துருவித் துருவி ஆராய்ந்த பிறகு சிங்கணனின் ஓலை வாசகத்தையும் கவனித்தான் வீரரவி. “கடற்படைத்தளபதிக்கு சேராதரைப் படைத் தளபதி போசள சிங்கணன் விடும் ஓலை. வீரபாண்டியன் சரணடைந்து விட்டான். கோட்டை கைவசப் பட்டு விட்டது. கடற்படை திரும்பிச் செல்லட்டும். மன்னரிடம் வெற்றிச் சேதியைச் சொல்லும் முதல் தூதராகும் வாய்ப்பை உமக்குத் தருகிறேன்,” என்றிருந்தது சிங்கணன் ஓலை. கடைசியில் சிங்கணன் கையொப்பமும் போசள முத்திரையுமிருந்தன.

மன்னன் மௌனம் சாதித்தான் பல விநாடிகள். பிறகு கண்களை உயர்த்தி, “உபதளபதி! இப்படி ஓலைகள் நடுவழியில் கிடைத்தது உனக்கோ கடற்படைத் தளபதிக்கோ வியப்பாயில்லை?” என்று வினவினான்.

“இல்லை.”

“ஏன்?”

“இங்கிருந்து கடற்படை புறப்படும் போதே எதிர்க் காற்று பலமாயிருந்தது. மன்னருக்குத் தெரியும். சற்று தாமதித்துத்தான் மரக்கலங்கள் கொல்லத்தை அதாவது கோட்டாற்றுக்கரைக் கோட்டையின் பின்புறத் துறைமுகத்தை அடைய முடியும் என்பதும் தெரியும். கடற்படை சென்றதே தரைப் படைக்குத் தீங்கு நேர்ந்தால் உதவுவதற்காக, ஒருவேளை தரைப்படைக்குக் கோட்டையைத் தாக்குவதில் கஷ்டங்கள் இருந்தால், கடற்படை வரும் வரையில் தரைப்படை தாமதிக்க வேண்டுமென்றும் ஏற்பாடு, கோட்டை கைவசமாகிவிட்டதால் கடற்படைக்கு வேலையில்லை. அது தவிர மன்னர் உத்தரவும் திட்டமாயிருந்தது.” என்று சுட்டிக் காட்டினான்.
“என்ன உத்தரவோ?”

”கடற்படை சிங்கணன் உத்தரவுப்படி நடக்க வேண்டுமென்று தாங்கள் உத்தரவிட்டீர்கள். அதன்படி நடந்தோம்.”

சந்தர்ப்பத்துக்குத் தகுந்தபடி சுயயோசனை அவசியமில்லையா?”

“சந்தர்ப்பத்திலும் தவறு ஏதுமில்லை. கோட்டை வசப்பட்டு விட்டது… திரும்பிச்செல்ல உத்தரவிடுகிறார் போசளர். இந்த நிலை சர்வசாதாரணமானது. இதில் சந்தேகிக்க ஏதுமில்லை.”

“அப்படியானால் பத்து கப்பல்கள் எப்படி எரிந்தன?”

“அந்தக் கேள்விக்கு இன்னும் விடை கிடைக்க வில்லை எங்களுக்கு.”

“உங்களுக்கு ஓலைகளைக் கொண்டுவந்த வீரர்கள் என்ன ஆனார்கள்?”

“ஓலைகளைக் கொடுத்ததும் திரும்பிச் சென்று விட்டார்கள்.”

“ஏன் அனுப்பினீர்கள்?”

“சந்தேகப்படுவதற்கு ஏதுமில்லை. ஓலைகளைக் கொண்டு வந்தவர்கள் கொடுத்த பின்பு திருப்பிச் செல்ல அனுமதி கேட்டார்கள். படகுகளில் அனுப்பி வைத்தோம். இதுவும் சாதாரணமாக நடப்பது.”

மன்னன் விழிகள் தீயைக் கக்கின. “பத்துக் கப்பல்கள் எரிந்தது? அதுவும் சாதாரணமாக நடப்பதுதானோ? உபதளபதி! கடற்படையில் அசாதாரணம் எதுவுமே கிடையாது போலிருக்கிறது. தளபதிகளில் மூளையும் சர்வ சாதாரணம் போலிருக்கிறது” என்று சுடச்சுடச் சொற்களை உதிர்த்தான் மன்னன்.

உபதளபதி மஞ்சத்தை விட்டு எழுந்து மன்னனை நோக்கினான். “மன்னவா! நாங்களிருந்த நிலையில் அசாதாரண மூளையுடனிருப்பவர்கள் என்ன செய்வார்கள்?” என்று வினவினான்.

மன்னனுக்கு இதற்கு என்ன பதில் சொல்வதென்று விளங்கவில்லை. யாரும் அந்த நிலையில் வேறு எதையும் செய்திருக்க முடியாதென்று மன்னனுக்கு நன்றாகப் புரிந்ததேயிருந்தது. ஆகவே மேற்கொண்டு உபதளபதியைக் காரசாரமாக ஏதும் பேசாமல், “உமது உடைகள் ஏன் கிழிந்திருக்கின்றன?” என்று வினவினான்.

“மன்னர் நன்றாகக் கவனிக்க வேண்டும், இவை கிழிசல் இல்லை,” என்றான் உபதளபதி.

“வேறென்ன!” என்றான் மன்னன்.

“தீக்கிரையான மரக்கலங்களிலொன்றில் நானும். இருந்தேன். அதில் தீப்பிடித்த இடங்களைக் கிழித்து ஏறிந்தேன். ஓரங்களில் சில இடங்களில் கரி தட்டியிருப்பதைப் பார்க்கலாம்,” என்று இரண்டு மூன்று இடங்களைக் கையால் காட்டினான் உபதளபதி. பிறகு அங்கியைச் சில இடங்களில் நீக்கி உள்ளிருந்த இரண்டொரு தீப்புண்களையும் காட்டினான்.

மன்னன் அப்புண்களைக் கவனித்துவிட்டுப் பெருமூச்செறிந்தான். பிறகு “நீ சொல்ல வேண்டியது பாக்கி ஏதாவதிருக்கிறதா?” என்று வினவினான்.

“இல்லை,” என்பதற்கறிகுறியாகத் தலையசைத்த உபதளபதியையும், தன் பின்னே ஏதும் பேசாமல் சிலையென நின்றிருந்த சேனாதிபதியையும் தன்னுடன் வரும்படி சைகை செய்து மஞ்சத்திலிருந்தது எழுந்து வெளியே நடந்தான் மன்னன். மன்னனை தொடர்ந்து மற்ற இருவரும் நடக்க மூவரும் குருநாதனிருந்த அறைக்கு வந்து சேர்ந்தார்கள்.

இரவு நடுச்சாமத்தை அடைந்துங்கூட பரதப்பட்டன் உறங்கவில்லை. விளக்கடியில் உட்கார்ந்து பனை நறுக்குகளில் எழுத்தாணி கொண்டு எதையோ எழுதிக் கொண்டிருந்தான். மற்ற இருவருடன் மன்னன் உள்ளே நுழைந்ததும் தலை நிமிர்ந்த பரதபட்டன் கடற்படை உபதளபதியைக் கண்டதும் சற்றே வியப்பைக் காட்டினான். “மன்னவா! இப்பொழுதுதான் கடற்படையைப் பற்றி உன்னை விசாரித்தேன். அதற்குள் உபதளபதியையே பிடித்துக்கொண்டு வந்து விட்டாயா?” என்று சிலாகித்தான். அந்தச் சிலாகிப்பில் ஏதோ விஷமம் ஊடுருவி நின்றதை மன்னன் கவனிக்கவே செய்தான்.
அதனால் வெகுண்ட அவன் இதயம் அடுத்த விநாடி பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகியது. அத்தகைய ஒரு கேள்வியை வீசினான் குருநாதன் உபதளபதியை நோக்கி. “கடற்படைக்கு எவ்வளவு சேதம்?” என்ற கேள்வி வெகு சாவதானமாக எழுந்தாலும் அந்த அறையைப் பயங்கர மாக ஊடுருவியது.

“குருநாதரே!” ஏககாலத்தில் மற்ற மூவர் குரலும் எழுந்தது.

“வியப்பு இருக்கட்டும் விஷயத்தைச் சொல்,” என்றான் குருநாதன் அலுப்புடன் உபதளபதியை நோக்கி.

உபதளபதி மன்னனிடம் சொன்னதையெல்லாம் திரும்பச் சொன்னான். குருநாதன் இமையைக் கூட அசைக்காமல் உணர்ச்சியை எவ்விதத்திலும் லவலேசமும் காட்டாமல் அனைத்தையும் கேட்டான். உபதளபதி கதையைச் சொல்லி முடித்ததும் கூறினான், “உங்கள் மேல் அதிகத் தவறில்லை, தளபதியும் நீயும் நடந்துகொண்டது. சரிதான். இருப்பினும், தலைநகர் நெருங்கும்போது நீங்கள் சற்று எச்சரிக்கையுடனிருந்திருக்க வேண்டும்,” என்று.

இதைக் கேட்ட உபதளபதியின் விழிகள் வியப்பால் மலர்ந்தன. சற்று அச்சமும் உதயமாயிற்று அவன் இதயத்தில், முக்கிய விஷயத்தை மறைத்த காரணத்தால். மன்னன் மீதும் சேனாதிபதி மீதும் அவன் கண்களை ஒரு விநாடி செலுத்தினான். மன்னன் பார்வையிலும் சேனாதிபதியின் பார்வையிலும் கொலையுணர்ச்சி மண்டிக் கிடந்தது. ஆனால் உள்ளே எழுந்த வியப்பில் உபதளபதி அதைச் சிறிதும் லட்சியம் செய்யவில்லை. “குருநாதனுக்கு மந்திரம்தான் தெரிந்திருக்க வேண்டும்” என்று கூறினான் வியப்பு விளிம்பை எட்ட.

“நான் மந்திரவாதியென்பது சேரநாட்டில் யாருக்கும் புதிதல்ல” என்ற பரதபட்டன், “தலைநகருக்கு அரைக்காதமிருக்கையில் பத்து மரக்கலங்கள் தீக்கிரையாக வேண்டுமென்றால் உங்கள் அஜாக்கிரதை அதிகமாயிருந்திருக்க வேண்டும்” என்று குற்றமும் சாட்டினான்.

உபதளபதி தலைகவிழ்ந்து நின்றான். ”அரைக் காதத்தில் அந்தச் சம்பவம் நிகழ்ந்ததென உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று வினவவும் செய்தான்.

“மரக்கலங்கள் தீக்கிரையானதும் படகு ஏறிக் கரைக்கு வந்து எதிர் கிராமமொன்றில் புரவி பெற்று அவசர அவசரமாக நீ வந்திருப்பதிலிருந்து தெரிகிறது.” என்றான் பரதப்பட்டன்.

உபதளபதி பிரமித்து நின்றுவிட்டான். “குருநாதரே…” என்று துவங்கினான்.

குருநாதன் விழிகள் அவனை நோக்கிப் பளிச்சிட்டன. “மீண்டும் மந்திரவாதிப் பட்டத்தைச் சூட்டாதே. இதில் மந்திரம் ஏதுமில்லை . உன் கால்களில் ஆடுதசையில் ஓட்டியிருக்கும் கடல் மணலைப் பார். பாதத்தின் ஓரங்களிலிருக்கும் காவி மண்ணையும் கவனி. அவை கதை சொல்லும். தீப்பிடித்தவுடன் உடனடியாக மன்னனுக்கு அறிவிக்க தளபதி உன்னை நியமிக்கிறான். நீ படகில் ஏறிக் கரை வந்து மணலில் நடந்து கடற்கரை ஓரக் கிராமத்திற்கு வந்து அங்குள்ள படைவீரரிடம் விஷயத்தைக் கூறுகிறாய். நமது கடற்கரைக் கிராமங்களில் ஒன்று உழவு மண் இருக்கிறது. அல்லது காவி மண் இருக்கிறது. நீ சென்ற கிராமத்தின் காவி மண் நீ நடந்தபோது புாதத்தை நன்றாகக் கவ்வியிருக்கிறது. அந்தக் காவியுடன் குதிரையேறி விரைந்து வருகிறாய். ஒரே ஜாமத்தில் அரண்மணையையடைந்து விஷயத்தைக் கூறுகிறாய். கப்பல் தீப்பிடித்த நேரத்திற்கும் நீ இங்கு வந்து சேரும் நேரத்திற்கும் நாள் கணக்கு இருந்திருந்தால், இந்த மணலும் இருக்காது, மண்ணு மிருக்காது. தலைநீரும் உலர்ந்திருக்கும். வெகு துரிதமாக வந்திருக்கிறாய். வெகு அருகிலிருந்தும் வந்திருக்கிறாய்” என்றான் பரதப்பட்டன்.

இந்தச் சமயத்தில் மன்னன் ஏதோ சொல்லப் போனான். பரதபட்டன் மன்னனைக் கையமர்த்தி, “கடற்படை தளபதி வந்ததும் மற்றதை யோசிப்போம். அரண்மனைக்குள் யாரும் உட்புகாதபடி பார்த்துக் கொள். பெரும் போர் நகரை அணுகிவிட்டது. எல்லையை எச்சரிக்கை செய்யும் ஏற்பாடு செய்துவிடு. எந்த மரக்கலமும் பரலியைவிட்டு நகர வேண்டாம்,” என்று உத்தரவிட்டான் குருநாதன்.

குருநாதன் தனக்கு உத்தரவிடுவதைக் கேட்க மன்னனுக்குக் கோபமாயிருந்தும் அவன் அதை வெளிக்குக் காட்டவில்லை. “வேறு உத்தரவு உண்டா?” என்று மட்டும் வினவினான்.
”பாண்டியகுமாரியின் அறையில் காவலைப் பலப்படுத்து, இன்றிரவுக்கு. நாளைக் காலையில் என்னிடம் அவளை அழைத்து வந்துவிடு,” என்று மற்றோர் உத்தரவும் இட்டான் குருநாதன்.

”பாண்டிய குமாரியைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம் குருநாதரே. அந்த அறையை யாரும் நாட முடியாது,” என்றான் மன்னன்.

குருநாதன் மன்னனை நோக்கிப் புன்முறுவல் செய்தான். “நான் ஒரு சந்தேகப் பிராணி, சொன்னேன். எதற்கும் எச்சரிக்கையுடனிரு,” என்று மீண்டும் கூறினான்.

அரசன் அதைப்பற்றிச் சிறிதும் கவலைப்படவில்லை. இருப்பினும் காவலைச் சோதிக்க சேனாதிபதிக்குக் கட்டளையிட்டு, கடற்படை உபதளபதிக்கும் விடை கொடுத்துத் தனது அறைக்குத் திரும்பினான். சிறிது நேரங்கழித்து மன்னனிடம் வந்த சேனாதிபதி பாண்டிய குமாரியின் அறைக் காவலை இரட்டித்து விட்டதாகச் சொன்னான்

“இரண்டு பேர் காவலிருக்கிறார்களா?’ என்று வினவினான் மன்னன்.

“ஆம்” என்றான் சேனாதிபதி.

மன்னன் பலப்பல யோசனைகளுடன் படுத்தான். இருப்பினும் முத்துக்குமரியின் அறைக்காவல் பலப்படுத்தப் பட்டதில் ஒரு திருப்தியும் அடைந்தான். அந்தத் திருப்தி எத்தனை அர்த்தமற்றது என்பதை மன்னன் அடியோடு புரிந்து கொள்ளவில்லை.

Previous articleRaja Muthirai Part 2 Ch35 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Muthirai Part 2 Ch37 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here