Home Historical Novel Raja Muthirai Part 2 Ch37 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

Raja Muthirai Part 2 Ch37 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

59
0
Raja Muthirai Part 2 Ch37 Raja Muthirai Part 2 Sandilyan, Raja Muthirai Part 2 Online Free, Raja Muthirai Part 2PDF, Download Raja Muthirai Part 2 novel, Raja Muthirai Part 2 book, Raja Muthirai Part 2free, Raja Muthirai,Raja Muthirai Part 2 Story in tamil,Raja Muthirai Part 2 Story,Raja Muthirai Part 2 novel in tamil,Raja Muthirai Part 2 novel,Raja Muthirai Part 2 book,Raja Muthirai Part 2 book review,ராஜ முத்திரை ,ராஜ முத்திரை கதை,Raja Muthirai Part 2tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2full story,Raja Muthirai Part 2 novel full story,Raja Muthirai Part 2audiobook,Raja Muthirai Part 2audio book,Raja Muthirai Part 2full audiobook,Raja Muthirai Part 2full audio book,
Raja Muthirai Part 2 Ch37 | Raja Muthirai | TamilNovel.in

Raja Muthirai Part 2 Ch37 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

ராஜ முத்திரை இரண்டாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 37 கால் வருடிய கரம்

Raja Muthirai Part 2 Ch37 | Raja Muthirai | TamilNovel.in

பாண்டிய ராஜகுமாரியின் அறைக் காவலைப்பற்றி சேரமான் வீரரவி திருப்தியடைந்தானென்றால் அதற்குக் காரணம் இருக்கவே செய்தது. அரண்மனைப் பகுதியிலேயே அந்தப்புரப் பகுதி பெரும் காவலுள்ள தென்றால் அதில், முத்துக்குமரியின் அறையைவிட அதிகக் காவலும் கண் பார்வையுமுள்ள அறை அந்தப்புரத்தில் வேறெங்கும் கிடையாது. அரண்மனையின் பின்புறத்தில் இருந்த அந்தப்புரத்தின் தெற்குக் கோடி அறை அது. அரண்மனையின் பின்புறத்தில் அந்தப்புரம் இருந்த காரணத்தாலேயே அதற்கு நேர் எதிரில் அரண்மனை மதில்களுக்கெதிரில் காவலர் இல்லங்களுக்குப் பின்புறம் மலைச்சரிவும் காடும் இருந்ததால், அந்தக் காட்டுக்கு ஓர் அரண் போலவும் அரண்மனை மதிலை ஒட்டி ஓடிய வீதிக்கு எதிரே மற்றொரு மதில்போலவும் காவலர் இல்லங்கள் காட்சியளித்தன. அந்த வீதிக்கு இருபுறத்திலும் அதாவது காவலர் இல்லங்கள் வரிசையிலும், மதிலோரமும் ஆயுதம் தரித்த புரவிக்காவலர் சதா உலாவிக்கொண்டிருந்தனர். அரண்மனையின் அந்த மேற்குப்புற மதிலுக்கும் வடக்கு தெற்காக இருந்த அந்தப்புரக் கட்டிடத்திற்கும் இடையிலிருந்த திறந்தவெளி அரங்கிலும் பலத்த காவலிருந்தது. அந்தக் காவலின் முடிவிடம் தெற்கு முனை யிலிருந்தபடியால் அதே தெற்கு முனையின் உப்பரிகைப் பகுதியும் சரி, அடிப்பகுதியும் சரி, எப்பொழுதும் காவலர் கண்காணிப்பில் இருந்தன. தெற்குப் புறத்திலிருந்து உப்பரிகைக்கு ஓடிய படிகளின் அடியிலும் மேலும் காவலர் உருவிய வாளுடன் நின்றிருந்தார்கள்.

இரவிலும் பகல் போல் ஆங்காங்கு பந்தங்கள் எரிந்து கொண்டிருந்தன. அரண்மனை மகளிரை எழுப்பக்கூடாதென்ற விதியின் காரணமாக அரவம் சிறிதுமின்றிக் காவலர் மெதுவாகப் பேய்கள் போல உலாவினர். இத்தகைய கெடு பிடியில் மன்னனின் கண்டிப்பான உத்தரவின் காரணமாக உப்பரிகையின் தெற்குக் கோடி அறையின் மீது வீரர் கண்ணோட்டம் சதா இருந்து கொண்டிருந்தது. அந்தப்புரத்திலிருந்தே யாரும் காவலர் அறியாமல் உள்ளே வரவோ, வெளியே செல்லவோ இயலாது. அதுவும் தெருக்கோடி அறைத் தாழ்வறையிலிருந்து பணிப்பெண்கள் தலையை நீட்டினால் கூடத் திரும்பி உள்ளே செல்லும்படி வீரர்கள் ஈட்டியால் சைகை செய்து வந்தார்கள். உத்தரவின்றி யாரும் எங்கும் அசையக் கூடாதென்ற அரசர் கண்டிப்பால், காவலர் அந்தப் பகுதியில் பலமாகக் கடமையைச் செலுத்தினர். நின்ற காவலர் நின்றபடியிருந்தார்கள் நடந்து காவல் புரிந்தவர் நடந்தபடி இருந்தார்கள். அன்றிரவில்கூடத் திடீரென்று சாத்தன் வீடு தீப்பிடித்ததன் காரணமாகச் சிறிது நேரம் காவலர் வெளியே ஓடியதைக் கூடக் காவலர் தலைவன் கண்டித்துப் பழையபடி காவலைத் திடப்படுத்திவிட்டான்.

இத்தனை திறமையான காவலிருந்ததால் முத்துக் குமரி அறையில் பணிப் பெண்ணொருத்தியும் கதவுக்கு வெளியே காவலனொருவனுமே அவளைக் கவனிக்கப் போதுமானதாயிருக்க, இன்னொரு காவலனையும் அன்று நியமித்தபின் அரசன் திருப்தியுடன் படுத்தானென்றால் அதில் வியப்பென்ன இருக்கிறது? பல கவலைகளை உடைய மன்னன் இந்த ஒரு விஷயத்தில் திருப்தியடைவது அல்ப சந்தோஷமென்றாலும் சில சமயங்களில் அந்த அல்ப சந்தோஷமும் பெரும் சந்தோஷமாகிறது. எதிரியின் படையெடுப்பு அணுகிவிட்டதைக் குருநாதன் எச்சரித்ததிலிருந்து பெரும் கவலைக்குள்ளான, மன்னன் முத்துக்குமரி காவலைப்பற்றி திருப்தி கொண்டானென்றால், பெருங்கவலையில் ஏற்பட்ட அந்தத் திருப்தி, காரிருளில் பளிச்சிடும் அகல் விளக்கைப் போல அவன் இதயத்தில் சாந்தி தீபத்தைப் பெரிதாக ஏற்றவே செய்தது.

ஆனால் அந்தப்புரத்தின் தெற்குக் கோடி அறையின் பஞ்சணையில் படுத்திருந்த பாண்டியன் பைங்கிளி மனச்சாந்தி எதுவுமின்றி விழித்தவண்ணம் அறைக் கூரையை நோக்கிக் கொண்டிருந்தாள். அறைக்குள் அறையாக இருந்த அந்தப் பெரிய அறையின் உள்ளறையில் விளக்கை அணைத்துவிடச் செய்து படுத்திருந்த முத்துக் குமரிக்கு வெளி அறையிலிருந்தது மங்கலிலும் மங்கலாக வந்து கொண்டிருந்த சிறு வெளிச்சம் கூட வேதனை யளித்தது. உள்ளறைச் சாளரத்தின் மூலம் வந்து கொண்டிருந்த நட்சத்திர ஒளிகூடச் சூரிய வெளிச்சம் போல் பட்டது அவளுக்கு. அன்று அவள் தனிமையை மட்டுமின்றி இருளையும் நாடினாள். மனக் கவலைக்கு இருட்டும் தனிமையுமே தகுந்த துணை என்று எண்ணி, புதிதாக வந்த பணிமகளைத் தன்னறை விளக்கை அணைத்துவிடச் செய்தாள். முதலில் புதிதாக வந்த பணிப்பெண் விளக்கை அணைக்க இஷ்டப்படாமல், “அரசகுமாரி! விளக்கு சிறியது தானே? வேண்டுமானால் சற்று இழுத்து மெல்லியதாக வைக்கிறேனே?” என்றாள்.

புதிதாக வந்த பணிப்பெண்ணைப் பார்த்ததும் ஆரம்பத்திலேயே வெகுண்ட முத்துக்குமரி அவள் தன்னை மீறிப் பேசியதும் அளவுக்கு மீறிய சினங்கொண்டு, “நீ எப்பொழுது அரண்மனையில் வேலைக்கு வந்தாய்” என்று வினவினாள் குரலில் கோபம் விளையாட.

“இன்றுதான் அம்மணி,” என்றாள் புதுப்பணிப்பெண்.

“அதற்குள் இங்கெப்படி பணி புரிய வந்தாய்?” என்று மீண்டும் கேட்டாள் கோபத்துடன் முத்துக்குமரி.

“மன்னர் அனுப்பினார்,” என்றாள் பணிப்பெண்.

முத்துக்குமரியின் இதழ்களில் இகழ்ச்சியும் விஷமமும் தாண்டவமாடின.

“மன்னரை ஒரே நாளில் கைக்குள் போட்டுக் கொண்டு விட்டாயா?” என்று வினவினாள் இகழ்ச்சியுடன்.

பணிப்பெண்ணின் முகத்திலும் சினம் துளிர்த்தது. அவள் மலர் விழிகள் நன்றாக மலர்ந்தன ஒரு விநாடி.

“அரசகுமாரிகள் கூடப் பணிமக்களைக் கண்டபடி பேசமுடியாது,” என்றாள் சொல்லிலும் உஷ்ணத்தைக் காட்டி.

முத்துக்குமரி அப்பொழுதும் பணிமகளின் நெஞ்சுக் குரோதத்தைப்பற்றி லட்சியம் செய்யவில்லை. சேர மன்னனின் காமவேட்கையைப் பற்றி அறிந்திருந்த முத்துக் குமரி, “பணிமகளிடம் அரசர் திடீரென அசாத்திய நம்பிக்கை வைப்பது யாருக்கும் வியப்பளிக்கும்,” என்றாள்.

பணிமகள் பாண்டிய குமாரியை உற்று நோக்கினாள். “காவலரிடம் அரசகுமாரிகளுக்கு அன்பு ஏற்படுவது எப்படி?” என்றும் வினவினாள் பதிலுக்குத் துணிவுடன்.

முத்துக்குமரியின் கண்களில் கோபக் கனல் தெரிந்தது. “எந்த அரசகுமாரியைப் பற்றிக் கூறுகிறாய்?” என்று சீறினான்.

“எனக்குத் தெரிந்த ஓர் அரசகுமாரி.”

”என்ன செய்தாள்?”

“அவளை அழைத்துச் சென்ற ஒரு காவலன் வலையில் வீழ்ந்தாள். இரவில் ஏதோ, அருவிக் கரையாம்…”
பணிமகள் வாசகத்தை முடிக்கு முன்பு, “நிறுத்து! யார் நீ?” என்று கேட்டாள்.

“பணிமகள்.”

“பெயர்?”

“குறிஞ்சி”

“இதெல்லாம் உனக்கெப்படித் தெரியும்?”

“இதில் ரகசியமில்லை. நாடறிந்த கதை!”

முத்துக்குமரி சில விநாடிகள் மௌனம் சாதித்தாள். பணிமகள் அவளை மீண்டும் குத்தினாள். “அரசகுமாரி காவலரிடம் அன்பு கொள்ளலாமென்றால் பணிமகள் அரசனிடம் அன்பு கொள்வது எப்படித் தவறாகும்?” என்று கேட்கவும் செய்தாள்.

முத்துக்குமரி உணர்ச்சி மிகுதியில், “அவர்….அவர்…” என்று தடுமாறினாள்.

“அவர்?”

“படைத் தலைவர்களில் ஒருவர்.”

“இருந்தாலும் மன்னனிடம் பணி புரிபவர்தானே?”

“இருந்தாலும்…”

“என்ன?”

“சேர மன்னரைப் போன்றவரல்ல….”

“என்ன வித்தியாசமோ?”

“அறவழியில் செல்பவர்.”

குறிஞ்சி பதிலுக்குச் சிரித்தாள்.

“ஏன் சிரிக்கிறாய்?” என்று வினவினாள் முத்துக்குமரி.

“அவரவர் விரும்புபவர் அவரவர் சம்பந்தப்பட்ட வரையில் அறவழியாளர், செம்மனத்தவர். கற்பின் இலட்சியம்….” என்ற குறிஞ்சி மெள்ளப் புன்னகை பூத்தாள்.

முத்துக்குமரிக்குப் பதிலேதும் சொல்லத் தெரியாததால் பணிமகளோடு மேற்கொண்டு பேசாமல் மௌனம் சாதித்தாள். குறிஞ்சியும் அதைப்பற்றிக் கவலைப்படாமல் வெளி அறைக்குச் செல்லக் காலடி எடுத்து வைத்தாள்.

“அறை விளக்கை அணைத்துவிட்டுச் செல்,” என்று சீறிய முத்துக்குமரி. தானே எழுந்து சென்று திரியை இழுத்து விளக்கை அணைத்துவிட்டு வந்து பஞ்சணையில் விழுந்தாள்.

குறிஞ்சி பாண்டிய குமாரியின் பதட்டத்தைக் கண்டு சிறிது முறுவல் கொண்டு வெளியறைக்குச் சென்று படுத்துக் கொண்டாள். சிறிதுநேரத்தில் நித்திரை வசப்படவும் செய்தாள். இரண்டு நாள் பயண அலுப்பால் சுரணையின்றித் தூங்கவும் செய்தாள்.

உள்ளறைப் பஞ்சணையில் படுத்திருந்த முத்துக் குமரிக்கு உறக்கம் சிறிதும் பிடிக்கவில்லை . புதிதாக வந்த பணிப்பெண்ணின் பேச்சை நினைத்து நினைத்து ஆக்ரோஷப்பட்டாள். ‘என்ன துணிவு இவளுக்கு? கேவலம் பணிப்பெண்!’ என்று உள்ளூரப் பெரும் சினம் கொண்டாள். அந்தச் சினம் மெள்ள மெள்ள அடங்கப் பணிப்பெண் தன்னை இடித்துக் கூறியதில் எத்தனை உண்மை இருந்ததென்பதையும் உணர்ந்து உணர்ந்து இன்பத்தின் வசமும் ஆனாள். காட்டுக் கோட்டையின் அருவிக்கரை அவள் கண்முன் வந்து நின்றது. சலசலத்துப் பந்தத்தின் வெளிச்சத்திலோடிய அருவி நீர் அவள் இதயக்கண் முன்பு பளபளத்தது. சீலை அருவி நீரில் நனையாதிருக்கத் தன் காலுக்குமேல் அதை எடுத்து மடித்து மடியில் திணித்திருந்ததையும், இந்திரபானு தனது கால்களை உற்று உற்றுப் பார்த்ததையும் எண்ணினாள். ‘பணிமகள் சொன்னதில் தவறில்லை: சேனைக்கு உபதலை வராயிருந்தாலும் மன்னருக்கு நீங்கள் பணி மகன்தானே? அரசன் மகளான என்னை எப்படி நீங்கள் தொடலாம்?” என்று தனக்குள் கேட்டுக் கொண்டாள். ‘அது மட்டுமா செய்தீர்கள்? கடற்கரை மாளிகைக்கே காவல் செய்ய வந்தீர்களே!’ காவலாசெய்தீர்கள்? கள்ளத்தனம் செய்து என் பள்ளியறையிலே புகுந்துவிட்டீர்களே! அப்பப்பா! எத்தனை துணிவு! எத்தனை மோசம் நீங்கள்? கற்சிலைக்குப் பக்கத்தில் என்னை எத்தனை இறுக்கிப் பிடித்தீர்கள்’ என்று ஏதேதோ சொல்லிக் கொண்டாள் தன்னுள். சிந்தனைச் சொற்கள் அவை. அது மட்டுமல்ல, உணர்ச்சிச் சொற்களும் அவை. சிந்தனை பேசப்பேச உணர்ச்சிகளும் பேசின. இடை துவண்டு உடல் நெளிந்தது. எதனாலோ மார்பு வேகமாக ஓடியது. கால்கள் மெல்ல அப்புறமும் இப்புறமும் அசைந்தன. பஞ்சணையை அருவியென்று பாண்டியகுமாரி நினைத்தாளோ என்னவோ? சீலையை முழங்காலுக்கு மேலும் இழுத்து மடியில் மடக்கிக் கொண்டாள். அந்த அறையில் விளக்கு இல்லைதான். எனினும், வெளியறை விளக்கின் வெளிச்சம் அவள் கால்களுக்குப் பெரும் மெருகைக் கொடுத்தது. அவள் உதடுகள் காரணமின்றி அசைந்தன. மடிந்தன. மீண்டும் பழையபடி மலர்ந்தன.சிந்தனைகளில் சிக்கியிருந்ததால் வெளியே நடந்த எதுவுமே அவளுக்குத் தெரியவில்லை . சாத்தன் வீடு தீப் பிடித்ததையோ, அதனால் காவல் சற்றுக் குழம்பியதையோ பிறகு பழையபடி திடப்படுத்தப்பட்டதையோ அவள் அறியவில்லை. இரண்டாவது காவலனொருவன் நடுச் சாமத்திற்குமேல் வந்ததைக்கூட அவள் உணரவில்லை. அவள் நிலை உணர்ச்சியற்ற நிலையல்ல. உணர்ச்சிமிக்க நிலைதான். ஆனால் உணர்ச்சிகள் சுழன்ற இடம் வேறு. அவை நாடிய சூழ்நிலை வேறு. தேடிய மனிதர் வேறு. ஆகவே இருந்த சூழ்நிலை இல்லாததாகவும் இல்லாத சூழ்நிலை இருந்ததாகவும் ஆகிவிட்டது அவளுக்கு. அவள் உடல் அப்பொழுதிருந்தது சேரமான் கோட்டையில் தான். ஆனால் சிந்தனையிருந்தது, காட்டுக் கோட்டையில்தான். அதிலிருந்த அரண்மனை அந்தப்புரத்தில் தான். ஆனால் சிந்தனையிருந்தது காட்டுக் கோட்டையில், அருவிக் கரையில் உடல் புரண்டது அந்தப்புரப் பஞ்சணையில், உணர்ச்சி புரண்டது பாறைகள் நிரம்பிய அருவிக்கரையில். உள்ளறைச் சாளரத்தின் வெளியே விண்ணில் விண்மீன்கள் கண்ணைச்சிமிட்டின. அவை தெரிந்தன அவளுக்கு. ஆனால் சாளரம் தெரியவில்லை. தான் உட்கார்ந்திருந்த பாறை தெரிந்தது காலருகே ஓடிய அருவி தெரிந்தது. அதன் மேலேயிருந்த விண் தெரிந்தது. அந்த விண்தான் அவள் அன்று கண்ட விண்ணும். அந்தப் பழைய தாரகைகள் தான் அன்றும் கண்ணுக்குத் தெரிந்தன பாண்டிய குமாரி சம்பந்தப்பட்ட வரையில்.
அந்தப் பழைய கனவில் திளைத்த பாண்டிய குமாரி அப்பொழுதும் நினைத்தாள். “இப்படி எனது கால் சேலையின் பாதுகாப்பின்றிக் கிடப்பதற்கு அவர் இருந்தால் வாளாவிருப்பாரா?’ என்று நினைத்துப் பெருமூச்சு விட்டாள்.
அவள் எந்தத் தெய்வத்தைப் பிரார்த்தித்தாளோ என்னவோ அவள் எண்ணப்படி அவள் கால் மெல்ல வருடப்பட்டது ஒரு கையால். அதனால் திடீரென்று பயந்து பேச முற்பட்ட பவள வாயும் மூடப்பட்டது… எதனால்?

Previous articleRaja Muthirai Part 2 Ch36 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Muthirai Part 2 Ch38 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here