Home Historical Novel Raja Muthirai Part 2 Ch39 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

Raja Muthirai Part 2 Ch39 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

65
0
Raja Muthirai Part 2 Ch39 Raja Muthirai Part 2 Sandilyan, Raja Muthirai Part 2 Online Free, Raja Muthirai Part 2PDF, Download Raja Muthirai Part 2 novel, Raja Muthirai Part 2 book, Raja Muthirai Part 2free, Raja Muthirai,Raja Muthirai Part 2 Story in tamil,Raja Muthirai Part 2 Story,Raja Muthirai Part 2 novel in tamil,Raja Muthirai Part 2 novel,Raja Muthirai Part 2 book,Raja Muthirai Part 2 book review,ராஜ முத்திரை ,ராஜ முத்திரை கதை,Raja Muthirai Part 2tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2full story,Raja Muthirai Part 2 novel full story,Raja Muthirai Part 2audiobook,Raja Muthirai Part 2audio book,Raja Muthirai Part 2full audiobook,Raja Muthirai Part 2full audio book,
Raja Muthirai Part 2 Ch39 | Raja Muthirai | TamilNovel.in

Raja Muthirai Part 2 Ch39 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

ராஜ முத்திரை இரண்டாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 39 பட்டன் அளித்த பிரசாதம்

Raja Muthirai Part 2 Ch39 | Raja Muthirai | TamilNovel.in

அந்தப்புரத்தில் அந்தக் கடைசி அறையின் சாளரத் தருகில் விண்மீன்கள் வீசிய மெல்லிய ஒளியில் காதலால் கட்டுண்ட அந்த வாலைப்பருவத்தினர் இருவரும் தன்னை இம்சை செய்தால் என்ன செய்வதெனப் பஞ்சணை பயந்தது பொருளில்லாது போயிற்று. வெளியறையிலிருந்த பணிப் பெண்ணைப் பற்றியும், வாயிற் காவலைப்பற்றியும் நினைப்பு வந்தவுடனேயே தாங்களிருந்தது சொர்க்க மில்லையென்பதையும், யார் பார்த்துவிட்டாலும் ஆபத்து பலமென்பதையும் புரிந்து கொண்டதால் அந்த இருவரும் சற்று எச்சரிக்கையடைந்து விட்டனர். சிறிது அச்சத்துக்கும் உள்ளானாள் முத்துக்குமரி. அவள் அச்சம் இருவிதமாயிருந்தது. இடையைச் சுற்றி வளைத்து இறுக்கிக் கொண்டும் மெல்ல நெருடிக் கொண்டுமிருந்த அந்த வாலிபக் கரங்கள் தன்னை விடுவித்து விட்டால் என்ன செய்வது என்றோர் அச்சம். இத்தனை துணிகரமாக வந்து சொந்த வீட்டிலிருப்பவன் போல் பேசிக்கொண்டிருந்த பாண்டிய உபதலைவன் சேரமான் காவலரிடம் சிக்கிக் கொண்டால் அவன் கதி என்ன ஆகுமோ என மற்றொருவித அச்சம். இப்படி இரண்டுவித அச்சங்களுக் கிடையில் சிக்கித் தவித்த அந்தச் சித்திரப்பாவை மெள்ளக் கேட்டாள், “இத்தனை நாழி நிதானித்து இங்கு என்னுடன் தங்கியிருக்க என்ன துணிவு உங்களுக்கு?” என்று.

இந்திரபானுவின் கரங்கள் அவள் இடை வளைவை இருபக்கத்திலும் பிடித்துச் சிறிதளவு சதையையும் இழுக்கவே அவளுக்கு வலித்தது. அந்த வலி தேவையாயிருந்தாலும் அவள், “உம் ! வலிக்கிறது,” என்று பொய்க் கோபம் காட்டினாள்.

“வலிக்கட்டும் என்றுதானே கிள்ளுகிறேன்” என்றான் இந்திரபானு மெல்ல நகைத்து.

“ஏன் கிள்ளுகிறீர்கள்? நான் என்ன செய்தேன்? கோபத்துடன் கேட்டாள் பாண்டியன் செல்வி.

“குற்றத்திற்குத் தண்டனை.”

“என்ன குற்றம் செய்தேன்?”

“ஒரு வீரனைப் பார்த்து உனக்கு என்ன துணிவு என்று கேட்பதைவிட பெரும் குற்றம் என்ன இருக்க முடியும்?”

முத்துக்குமரி இதற்குப் பதில் சொல்லவில்லை. மெல்ல அவனுடன் இழைந்தாள். பிறகு மெல்லக் கேட்டாள், “நீங்கள் எப்படி அரண்மனைக்குள் நுழைந்தீர்கள்?” என்று.

இந்திரபானு அவளை அணைத்து நின்ற கரமொன்றை நீக்கித் தனது தலையில் தட்டிக் காட்டி, “இதன் உதவியால்,” என்று கூறினான்.
“இந்த விஷயத்தில் தங்கள் மூளை அதிகமாகத்தான் வேலை செய்கிறது” என்றாள் முத்துக்குமரி லேசாக நகைத்து

“என் மூளை மட்டுமல்ல குமரி எந்த முட்டாளின் மூளையும் வேலை செய்யும்.”

“முட்டாளின் மூளை வேலை செய்யுமா?”

“ஆம்.”

“விசித்திரமாயிருக்கிறதே.”

“இதில் விசித்திரம் ஏதுமில்லை, விஷயம் அப்பேர்ப் பட்ட து.”

“என்ன விஷயமோ?”

“பெண் விஷயம்.”

“உம்.” சற்றே நிமிர்ந்து பார்த்தாள் பாண்டியன் மகள், தந்தையின் உபதலைவனை.

“பெண்ணை அடைய எவன் மூளையும் துரிதமாக வேலை செய்யும். இல்லாத தந்திரங்களைக் கையாளும். எதற்கும் துணிவு கொள்ளும். இதில் முட்டாள் கெட்டிக் காரன் என்ற வித்தியாசம் கிடையாது. ஏனென்றால்….” என்று இழுத்தான் இந்திரபானு.

“என்ன சொல்லுங்கள்?” முத்துக்குமரியின் குரலில் உக்கிரம் தெரிந்தது.

ஏனென்றால்..” என்று மீண்டும் தயங்கிய இந்திர பானு, “காதலுக்குக் கண்ணில்லையென்று பெரியோர்கள் சொல்லுகிறார்கள். கண் மூளையின் வெளிப்பகுதி. ஆகவே காதலிப்பவர் எல்லோருமே முட்டாள்கள் தான்” என்றான்.
முத்துக்குமரி அவனைத் தன்னிடமிருந்து தள்ளினாள். “சரி, சரி. விலகுங்கள். என்னால் நீங்கள் முட்டாளாக வேண்டாம்.”

இந்திரபானு சிரித்தான். ‘அடடே! உன்னைச் சொல்லவில்லை. உன்னைப் போன்ற பெண்ணை விரும்புபவன் பெரும் ரசிகன் , கவி!” என்று கூறினான் சிரிப்பின் ஊடே.

“பரிகாசம் செய்கிறீர்களா?” என்றாள் கோபத்துடன் அவனிடமிருந்து தன்னை நன்றாகத் திமிறி விடுவித்துக் கொண்டு,

“இல்லை இல்லை. இதோ பார். நான் எவ்வளவு கஷ்டப்பட்டு வந்திருக்கிறேன் லீலாசுகர் மாதிரி” என்றான் இந்திரபானு அவளை மீண்டும் பிடித்து

“லீலாசுகரா!” வியப்பும் கோபமும் கலந்தொலித்தது குமரியின் குரலில்.

“ஆம்.”

“யாரது?”

“பெரிய வடநாட்டுக் கவி.”

“அவருக்கென்ன;”

“ஒரு பெண்ணிடம் காதல் கொண்டிருந்தார். அவளை அடைய வீட்டிலிருந்து கிளம்பி ஆற்று வெள்ளத்தைப் பிணக்கட்டையின் உதவியால் நீந்தித் தாண்டி, அவள் சாளரத் தருகேயிருந்த மரத்தில் தொங்கிக் கொண்டிருந்த மலைப் பாம்பைக் கயிறென நினைத்துப் பிடித்து ஏறித் தாவி அறைக்குள் குதித்தார்…”

“சே! இவ்வளவு பெண்பித்தன் ஒரு கவியா!”

“ஆம், பெரிய கவி.”

“நீங்களும் கவியோ?” ஏளனத்துடன் வினவினான் முத்துக்குமரி

“இல்லை. இல்லாததால் தான் அத்தனை ஆபத் தில்லை. பிணத்தைக் கட்டிக்கொண்டு ஆற்றைத் தாண்டவில்லை; பாம்பைப் பிடித்து ஏறிக் குதிக்கவில்லை,” என்றான் இந்திரபானு பதிலுக்கு.

பிணம், பாம்பு என்பதெல்லாம் லீலாசுகரைப் பற்றிய பழைய கதையானாலும் அதைக் கேட்கப் பயம் சூழ்ந்து கொண்டது பாண்டிய குமாரியின் உள்ளத்தில். இந்திரபானு பல கட்டுக்காவல்களைத் தாண்டி அங்கு வந்ததற்கும் தன்னிடமுள்ள பித்துதான் காரணமென்பதை அறிந்தாள். அந்த அறிவு ஓரளவு இன்பத்தைக் கொடுத்தாலும் பெரும் பயத்தையும் அளிக்கவே கேட்டாள், “நீங்கள் எப்படித் தான் வந்தீர்கள்? காவலர் அயர ஏதாவது சந்தர்ப்பம் கிடைத்ததா?” என்று.

“இல்லை குமரி! சந்தர்ப்பத்தை நானே ஏற்பாடு செய்து கொண்டேன்” என்றான் இந்திரபானு.

“எப்படி?” கவலையுடன் கேட்டாள் முத்துக்குமரி.

“உன்னிடம் இன்று வந்த பணிப்பெண் நமது ஒற்றர்களில் ஒருத்தி. இந்த அரண்மனைக் காவலனான சாத்தனைக் கொண்டு அவளை இங்கு வேலைக்கமர்த் தினேன். இரவு திரும்பியிருக்க வேண்டிய அவள் வர வில்லையென்று மன்னரிடம் பேசிக் கொண்டிருக்கிறா ளென்றும் இரவின் ஆரம்பத்தில் இல்லம் திரும்பிய சாத்தன் சொன்னான். ஆகவே பணிப்பெண் எங்கோ தவறி மன்னனிடம் அகப்பட்டுக் கொண்டு விட்டாளென்பதை ஊகித்தேன்,” என்ற இந்திரபானு தன் திட்டம் குமரியின் மனத்தில் உறைய சற்று நிதானித்தான்.

“உம் சொல்லுங்கள்” அவள் குரலில் அப்பொழுதும் பயமிருந்தது.

“அதனால் மேற்கொண்டு சாத்தனில்லத்தில் தாமதிப் பதில் பயனில்லை என்று சாத்தனையும் கூத்தனையும் வெளியே அனுப்பிவிட்டு நான் சாத்தன் உடையை அணிந்து கொண்டு சாத்தனில்லத்துக்கு நெருப்பு வைத்தேன். மன்னனுக்கு ஓர் ஓலை எழுதிக் காவலர் கண்களில் படும்படி மரத்தில் கத்தியால் தைத்து வைத்தேன்,” என்று கூறினான் இந்திரபானு.

“உம்.”

“நெருப்பைக் கண்டதும் காவலில் குழப்பமேற்பட்டது. பல காவலர் அரண்மனையைவிட்டு வெளியே ஓடிவந்தார்கள் தீயை அணைக்க. நானும் அவர்களுடன் கலந்து கொண்டேன். சாத்தனுடையில் நானிருந்ததாலும் தலையை நிமிர்த்தாததாலும் பந்தங்களின் வெளிச்சத்தைத் தவிரவேறு வெளிச்சமில்லாததாலும் தவிர அரை நாழிகை குழப்ப மாயிருந்ததாலும் நானும் கும்பலோடு கும்பலாகக் கலந்து உள்ளே நுழைந்தேன். பிறகு அந்தப்புரத்தின் கோடிப் படியில் ஏற முற்பட்டேன். அப்பொழுது தலைமைக் காவலன் என்னை அழைத்தான்…’’

“அப்பா! எத்தனை அபாயம்!” ஆமென்பதற்கு அறிகுறியாகத் தலையை அசைத்த இந்திரபானு சொன்னான். “அது அபாய நிலைதான். ஆனால் நான் சமாளித்துக் கொண்டேன். இன்னொரு வீரனையும் தூரத்திலிருந்தே காட்டிய காவலர் தலைவன் ‘நீங்களிரு வரும் பாண்டிய குமாரியின் அறையில் காவலிருங்கள்’ என்று கூறி, ‘மிகுந்த எச்சரிக்கையாயிருங்கள்’ என்றும் எச்சரித்தும் அனுப்பினான். நான் காவலுக்கு வந்தேன். சிறிது நேரம் இருவரும் காவல் புரிந்தோம். பணிப்பெண் உள் அறை விளக்கை அணைத்துப் படுத்துக் கொண்டாள். நான் எனது மடியிலிருந்து ஒரு செண்பகப் பூவை எடுத்து முகர்ந்து ‘அப்பாடா’ என்று ரசித்தேன்.”

“அப்பொழுது இன்னொரு காவலன்?” என்று கேட்டாள் முத்துக்குமரி.

“என்ன அது என்று கேட்டான். ‘இந்தா உனக்கும் ஒன்று’ என்று அவனுக்கு ஒரு பூவை மடியிலிருந்து எடுத்துக் கொடுத்தேன். அவன் முகர்ந்தான். தள்ளாடினான். எங் காவது கீழே தடாலென்று விழுந்து என் பிராணனை வாங்கப் போகிறானென்று அவனைக் கட்டிப் பிடித்து அறை வாயிற் கதவில் சாத்தினேன். அவன் கையிலிருந்த மலரையும் திரும்பப் பெற்றுக்கொண்டேன். அவன் அனுமதியில்லாமலே.”

முத்துக்குமரி தனது முத்து விழிகளை அவன்மீது திருப்பினாள். “நன்றாகத்தான் திட்டமிட்டிருக்கிறீர்கள்,” என்று. சிலாகிக்கவும் செய்தாள்.

அதைக் கவனிக்காதவன் போல் மேலும் சொன்னான் இந்திரபானு. “அந்தச் செண்பகப் பூவை உறங்கிக்கொண்டிருந்த பணிப்பெண் நாசியிலும் வைத்தேன். அவர்கள் இருவரும் நாமாக இஷ்டப்பட்டாலொழியக் காலை வரையில் நம்மைத் தொந்தரவு செய்யமாட்டார்கள்” என்று.

முத்துக்குமரி முறுவல் கொண்டாள். பூக்கள் மாறி யிருந்தால் என்ன செய்வீர்கள்?” என்று கேட்கவும் செய்தாள் விஷமத்துடன்.
“மாறியிருக்காது. ஏனென்றால் கச்சையின் வலப் புறத்திலொன்றும் இடப்புறத்திலொன்றுமாக மாற்றி வைத்திருந்தேன். காலையில் எழுந்து சென்று விடுவேன், என்றான் இந்திரபானு.

“இந்த மயக்கத்துக்குக் கால நிர்ணயம் உண்டா?” என்று வினவினாள்.

“உண்டு. மயக்க ரசாயனம் எத்தனை பூவில் தடவப் படுகிறது என்பதைப் பொறுத்தது. அதிகமாகத் தடவி விட்டால் முகருபவர்களுக்கு வைகுந்த வாசமோ கைலாச வாசமோ நரகவாசமோ கிடைக்கும் அவரவர் மதப்படி, அவரவர் வினைப்படி” என்றான் இந்திரபானு.

“இதெல்லாம் உங்களுக்கு யார் சொல்லிக் கொடுத்தார்கள்?”

“சிங்கணன்.”

“யார், போசளத் தளபதியா?”

“ஆம். சேர நாடு வந்த பிறகு, காட்டுக் கோட்டையில் நடந்த அனைத்தைப் பற்றியும் அறிந்தேன். பரலிமாநகரில் அதுவே பெருங்கதையாயிற்று. சிங்கணன் படையெடுத்துக் கோட்டாற்றுக் கரைக்குச் செல்லுமுன்பு, அதுபற்றி பரத பட்டரைக் கேட்டேன். அவர் விளக்கம் தந்தார். எதற்கும் இருக்கட்டுமென்று பிரசாதமும் தந்தார்.”

“ரசாயனமா?”

“ஆம்.”

“அதுவும் குருநாதர் அளித்த பிரசாதமா?”

“ஆம். சேரன் உன்னைத் தூக்கி வந்ததே குரு நாதருக்குப் பிடிக்கவில்லை. அவர் அதர்மத்தை வெறுப்பவர்.”

“ஆம். ஆம்,” என்றாள் முத்துக்குமரி வருத்தத்துடன். பிறகு “வாருங்கள் போவோம், இவர்கள் விழிக்கு முன்பு” என்றாள் அடுத்த அறையை நோக்கிக் கண்ணைக் காட்டி,

“இல்லை. உன்னை அழைத்துப் போக நான் வர வில்லை,” என்றான் இந்திரபானு.

இதைக் கேட்ட பாண்டியன் மகள் பெரும் அதிர்ச்சி யடைந்தாள். “பின் எதற்காக வந்தீர்கள்?” என்றும் வின வினாள் அதிர்ச்சி நிரம்பிய குரலில்.

“உன்னை எச்சரிக்க. உன் உதவி பெற” என்ற இந்திரபானு விளக்கலானான்; “குமரி! உன் ஒருத்தியை முன்னிட்டுத்தான் குருநாதர் சேரனை எதிர்க்கிறார். உன்னை நான் சிறை மீட்டுவிட்டால் குருநாதர் இதயத்தில் சாந்தி ஏற்பட்டு விடும். பிறகு அவர் கவலை சேரனைப் பற்றியும், சேர மக்களைப் பற்றியுமிருக்கும். அத்தகைய கூரிய அறிவுடைய வரை சேரன் பக்கத்துக்கு நாமாக அனுப்புவது மதியீனம். நீ இங்கு சிறையிருப்பதுதான் பாண்டிய நாட்டுக்குப் பலம்.

தவிர எந்தச் சமயமும் சேரமான் குருநாதரையும் மீறி நட வடிக்கைகள் எடுப்பான். திடீரென எதிர்பார்க்காத சம்பவங்கள் இங்கு நிகழும். அப்படி ஏற்படும்போது இங் கிருந்து எங்களுக்குச் செய்தி அறிவிக்கக் கூடியது நீ ஒருத்தி தான். எது நடந்தாலும் வெளித் தாழ்வரையில் பந்த வெளிச்சத்தில் வந்து அரை நாழிகை நில். நான் புரிந்து கொள்வேன்…”

முத்துக்குமரியின் அதிர்ச்சியும் பிரமையும் அதிகமாயிற்று. “பகலில் ஏதாவது விளைந்தால்!” என்று வினவினாள் பயத்துடன்.

“பகலில் எதுவும் ஏற்படாது. இரகசியமாகப் புரியப் படும் அலுவல் இரவில் தான் புரியப்படும். தவிர பகலில் எது நடந்தாலும் எனக்குத் தெரியாமல் நடக்காது” என்றான் இந்திரபானு.

பிறகு அவள் தோள் மீது தனது இரு கைகளையும் வைத்து, “குமரி, எச்சரிக்கையுடனிரு. யாரையும் நம்பாதே. இந்தத் தலைநகரை போர் நெருங்கிக் கொண்டிருக்கிறது” என்று கூறினான் உணர்ச்சி ததும்ப.

“இந்தப் பணிப்பெண் உங்கள் வேவுகாரி, இவளையும் நம்பக்கூடாதா?” என்று வினவினாள் முத்துக்குமரி
“போர் நடக்கும் போது யாரையும் முழுக்க நம்புவது தவறு முத்துக்குமரி,” என்ற இந்திரபானு அவள் தோளி லிருந்த தனது கைகளை இறக்கிச் செண்பகப் பூக்களைத் திரும்பவும் மடியில் செருகிக்கொண்டு வெளியே சென்றான். முத்துக்குமரி பஞ்சணையில் படுத்தாள்: நான்காம் ஜாமம் நெருங்கியதும் அந்த அறைக்கு மாற்றுக் காவலர் படியிலேறி வந்து கொண்டிருந்தனர். இந்திரபானு மற்றொரு காவலனைக் கிளப்ப முயன்றான். முடியாததால் தான் மட்டும் உடையைச் சீர்செய்து கொண்டு இடையில் வாளைக் கட்டிக்கொண்டான். வந்த இரு காவலரும் உறங்கிக் கொண்டிருந்தவனைக் கோபத்துடன் பார்த்தனர். பிறகு இந்திரபானுவை நோக்கிக் கேட்டான். “இவன் எப்படி உறங்கலாம்?”

“அவனைத்தான் கேட்க வேண்டும்,” என்றான் இந்திரபானு.

“எழுப்ப வேண்டியது உன் கடமையல்லவா?” என்றான் மற்றொரு காவலன்.

“இல்லை. மன்னர் காவலைப்பற்றி எச்சரித்திருக்கும் போது உறங்காதிருப்பது இவன் கடமை. கடமை மீறிய வர்களைப்பற்றிக் காவலர் தலைவனிடம் முறையிடுவது நமது கடமை,” என்றான் இந்திரபானு திட்டமாக.

“அப்படியானால் நீ போய் நமது தலைவரை அனுப்பு: அவரே நேரில் பார்க்கட்டும் இவனை” என்றான் புதிதாக வந்த இருவரில் ஒருவன்.

அந்த உத்தரவை நிறைவேற்ற இந்திரபானு படிகளில் இறங்கிச் சென்றான். மதிலுக்கும் அரண்மனைப் பின்புறக் கட்டிடத்திற்குமுள்ள இடைவெளியில் வந்ததும் பாண்டிய குமாரி. அறைக் காவலன் உறங்குவதாகத் தலைவரிடம் தெரிவி” என்று அங்கிருந்த ஒரு வீரனிடம் கூறிவிட்டு வெளியே சென்றான். நான்காம் ஜாமக் காவல் துவங்கி விட்டதால் மூன்றாம் ஜாமக் காவலர் பலர் வெளியே சென்று கொண்டிருந்தார்கள். அவர்களுடன் கலந்து இந்திரபானுவும் சென்றான். அப்பொழுதும் சாத்தன் இல்லம் லேசாகப் புகைந்து கொண்டிருந்தது. அதை நோக்கி நடந்த இந்திரபானு அதைத் தாண்டிப் பின்புறமிருந்த மலைச்சரிவின் காட்டுக்குள் புகுந்தான். சிறிது நேரம் காட்டின் ஒரு பகுதியில் நின்று மடியிலிருந்து ஒரு செண்பகப் பூவை எடுத்துத் தூர எறிந்தான். பிறகு கச்சையின் மற்றொரு பகுதியிலிருந்து சின்னஞ்சிறு வெண்கலச் சிமிழை எடுத்துப் பார்த்தான். “அப்பா! பட்டர் அளித்த பிரசாதம் நன்றாக வேலை செய்கிறது. என்ன அபாயமான பிரசாதம்?” என்று கூறிக்கொண்டு மீண்டும் மடியில் செருகிக் கொண்டான். பிறகு தனது வலக்கை நடுவிரலையும் கட்டை விரலையும் சேர்த்து இருமுறை சொடுக்கிச் சத்தம் செய்தான். சற்று தூரத்திலிருந்த புதரில் சலசலப்பு ஏற்பட்டது.

Previous articleRaja Muthirai Part 2 Ch38 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Muthirai Part 2 Ch40 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here