Home Historical Novel Raja Muthirai Part 2 Ch40 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

Raja Muthirai Part 2 Ch40 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

65
0
Raja Muthirai Part 2 Ch40 Raja Muthirai Part 2 Sandilyan, Raja Muthirai Part 2 Online Free, Raja Muthirai Part 2PDF, Download Raja Muthirai Part 2 novel, Raja Muthirai Part 2 book, Raja Muthirai Part 2free, Raja Muthirai,Raja Muthirai Part 2 Story in tamil,Raja Muthirai Part 2 Story,Raja Muthirai Part 2 novel in tamil,Raja Muthirai Part 2 novel,Raja Muthirai Part 2 book,Raja Muthirai Part 2 book review,ராஜ முத்திரை ,ராஜ முத்திரை கதை,Raja Muthirai Part 2tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2full story,Raja Muthirai Part 2 novel full story,Raja Muthirai Part 2audiobook,Raja Muthirai Part 2audio book,Raja Muthirai Part 2full audiobook,Raja Muthirai Part 2full audio book,
Raja Muthirai Part 2 Ch40 | Raja Muthirai | TamilNovel.in

Raja Muthirai Part 2 Ch40 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

ராஜ முத்திரை இரண்டாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 40 எல்லாம் என்னால் தான்

Raja Muthirai Part 2 Ch40 | Raja Muthirai | TamilNovel.in

மலைச்சரிவின் புதர் அசைந்ததும் அதன் கிளைகள் இரண்டு நீங்க, அதிலிருந்து தலையை மெல்ல வெளியே நீட்டிய கூத்தன் இருபுறமும் கண்களை ஓட்டிவிட்டுப் பிறகு சற்று எட்ட நின்றிருந்த இந்திரபானுவை நோக்கினான். காட்டு இருட்டு அதிகமாயிருந்த போதிலும், இந்திரபானு நின்றிருந்த இடத்திற்கு நேர் மேலேயிருந்த மரக்கிளைகள் பலவும் விலகிக் கிடந்ததால் கிருஷ்ணபட்சத்து உதயச் சந்திரனின் ஆரம்ப வெளிச்சத்தின் இரண்டொரு கதிர்கள் அவன்மீது விழுந்திருந்ததின் காரணமாக அவனை நன்றாகப் பார்த்துவிட்ட கூத்தன் தைரியத்துடன் வெளிப் போந்து. புதருக்குள்ளிருந்த சாத்தனையும் வெளியே வரும்படி அழைத்தான். அரண்மனைக் காவலைத் தவிர, வேவு விவகாரங்களை அடியோடு அறியாதவனான சாத்தன். கடந்த தினத்திலிருந்து ஏற்பட்ட பலவித நிகழ்ச்சி களால் அதிகத் திகிலுக்கும், குழப்பத்துக்கும் உள்ளாகி யிருந்ததால் உடல் சற்று நடுக்கத்துடனேயே வெளியே வந்து கூத்தனைத் தொடர்ந்து இந்திரபானு நின்றிருந்த இடத்துக்கு வந்து சேர்ந்தான். பிறகு திகிலுடன் கேட்கவும் செய்தான். “இனி நான் போகலாமா?” என்று.

அந்தக் கேள்வி இந்திரபானுவை நோக்கிக் கேட்கப் பட்டதானாலும் கூத்தன் சினத்துடன் அவனை நோக்கித் திரும்பி வினவினான், “எங்கு போகப் போகிறாய் சாத்தா?” என்று .

“அரண்மனைக்கு,” என்றான் சாத்தன் அப்பொழுதும் குரலில் திகில் ஒலிக்க.

“போய் என்ன செய்கிறதாக உத்தேசம்?” இம்முறை கூத்தனின் குரலில் ஏளனம் ஒலித்தது.

சாத்தன் ஏளனத்தைப் பற்றிக் கவலை கொண்ட தாகத் தெரியவில்லை. “என் அலுவலை ஏற்றுக்கொள்ளப் போகிறேன். அரண்மனை உப்பை இத்தனை நாள் தின்றிருக் கிறேனல்லவா?” என்றான் சாத்தன் கூத்தனை அலட்சியத் துடன் நோக்கி.

கூத்தன் இதழ்கள் இகழ்ச்சியுடன் மடிந்தன. “போனால் என்ன ஆகும் தெரியுமா?” என்று கூத்தன் உதடுகள் ஒரு கேள்வியையும் வெளியிட்டன இகழ்ச்சியுடன்.

“என்ன ஆகும்?” சாத்தன் குரலில் இகழ்ச்சி தொனித்தது.

“அரண்மனை உப்பு உன் உடம்பில் ஊறியிருக்கிறதல்லவா?” என்று வினவினான் கூத்தன்.

“ஆம்…”

“மீண்டும் ஊறும்.”

“நீ சொல்வது விளங்கவில்லை எனக்கு.”

“உன் தோலை உரித்து உப்பைத் தடவுவார்கள்?”

“எதற்காக?”

“வேவுக்காரர்களுக்கு உடந்தையாயிருந்ததற்காக விருந்தளிப்பார்களென்று எதிர்பார்க்கிறாயா?”

இந்தக் கேள்விக்குச் சாத்தன் உடனடியாகப் பதில் சொல்லவில்லை. சிறிது யோசனைக்குப்பின் சொன்னான், “எது நடந்தாலும் சரி. நான் அரண்மனைக்குப் போகப் போகிறேன். கடந்த நாட்களில் நடந்ததைக் கூறிவிடப் போகிறேன். மேற்கொண்டு அரசத் துரோகத்துக்கு என் மனசாட்சி இடங்கொடுக்கவில்லை,” என்று.

கூத்தன் முகத்தில் சினம் அதிகமாகத் துளிர்த்தது. ஏதோ சொல்ல வாயெடுத்தான் சாத்தனை நோக்கி. அவனைப் பேச வேண்டாமென்று கையமர்த்திய இந்திரபானு சாத்தனைக் கனிவுடன் நோக்கி, “சாத்தா! உன் அரச

பக்தி மெச்சத் தகுந்தது. நீ போவதாயிருந்தால் போ. ஆனால் இதையும் சிந்தித்துப் பார். பரதபட்டர் சேரநாட்டுப் பற்றிலும் அரசபக்தியிலும் யாருக்கும் சளைத்தவரல்லர். ஆனால் அவரே அரசனுக்கு எதிராக அலுவல்களைப் புரிகிறார். அரச தர்மத்துக்குப் பிரஜைகள் பணிய வேண்டியதுதான். அரச அதர்மத்துக்குப் பணியும்படி எந்த அறவிதியும் கூறவில்லை . தவிர இன்னொன்றும் நீ கவனிக்கவேண்டும்,” என்றான்.

“என்ன கவனிக்க வேண்டும்?” என்று கேட்டான் சாத்தன்.

“அரசர் அறியாதது எதையும் நீ கூற முடியாது. பணிப் பெண்ணை வேலைக்கமர்த்தியது நீயென்று அரண்மனையில் தெரியும். அவளை அரசர் நிறுத்திக் கொண்டிருக்கிறார் ஏதோ சந்தேகத்தின்மேல். அவர்கள் சந்தேகப்பட்ட வினாடியிலிருந்து அரண்மனையில் பல கண்கள் அவள் மீது நிலைத்திருக்கும். இத்தனை நேரம் அவள் பல விஷயங்களை அரசரிடம் கூறியிருக்கலாம் இல்லையேல் இரவில் காவலர் உனது இல்லம் தேடி வரச் காரணமில்லை. உன் வீடு எரிந்திருக்கிறது. வீட்டுக்கெதிரேயுள்ள மரத்திலிருந்து எனது ஓலையும் அரசரிடம் போயிருக்கிறது. இவற்றைத் தவிர வேறு என்ன மன்னருக்கு நீ சொல்ல முடியும்?” என்று கேட்டான் இந்திரபானு. அதைத் தொடர்ந்து மேலும் சொன்னான், “சாத்தா! அந்தப் புரத்தில் பாண்டியகுமாரி அறைக் காவலனொருவன் மயக்கமுற்றுக் கிடக்கிறான். ஒரு காவலன் மறைந்து விட்டான். அந்தக் காவலன் நீயா நானா? அந்தப்புர வழிகள் எனக்குத் தெரியக் காரணமில்லை . உனக்குத் தெரியக் காரணமுண்டு. தவிர, பணிப்பெண்ணை அமர்த்தியதும் நீ. அவளை மாலையில் சந்திக்க முயன்று முடியாமல் திரும்பியிருக்கிறாய். இரவில் சந்தர்ப்பம் கிடைத்தபோது மைத்துனியைப்பார்க்க நீ ஏன் போயிருக்கக் கூடாது? தவிர, அவள் மைத்துனியென்று நீ கூறியதற்கு உண்மை என்ன என்பதற்கு என்ன அத்தாட்சி? அவள் உன் காதலியாகக்கூட இருக்கலாமே? நீ, உன் காதலி இருவரும் ஒற்றர்கள். என்னையும் கூத்தனையும் சேர்ந்தவர்கள். ஆகவே அவளை விடுவித்துக் கொண்டு வர நீ இந்தத் தீயையும் குழப்பத்தையும் பயன்படுத்திக் கொண்டிருக்கலா மல்லவா?” என்று.

சாத்தன் மூளை அடியோடு குழம்பிவிட்டதால் அவன் பதிலேதும் சொல்லத் தெரியாமல் விழித்தான். அவன் நிலைமையைக் கண்டு பரிதாபப்பட்ட இந்திரபானு, “சாத்தா! உன்னைப்போன்ற வீரர்கள் நாட்டின் மாணிக்கங்கள். ஆனால் மன்னர்களுக்கு அத்தகைய மாணிக்கங்களை மதிக்கத் தெரியாது. அதுவும் சினத்துக்கும் காமத்துக்கும் வசப்பட்ட மன்னர்களுக்கு மனிதர்களின் தராதரம் தெரிவது கிடையாது. வேண்டுமானால் நீ எங்களைவிட்டுச் செல். ஆனால் அரண்மனைக்குச் செல்லாதே. அரண்மனையில் உனக்குச் சித்திரவதை காத்திருக்கிறது,” என்றான்.

அத்துடன் சாத்தனுடன் பேசுவதை நிறுத்திக் கொண்ட இந்திரபானு கூத்தனை நோக்கி, “அண்ணா அதோ பார், அந்தப்புர உப்பரிகைத் தாழ்வரையை,” என்று சுட்டிக் காட்டினான்.

உப்பரிகைத் தாழ்வரையில் பந்தங்கள் வேகமாக அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தன. பிறகு ஒரு பந்தம் படிகளில் இறங்கிக் கீழே ஓடிவந்தது. அடுத்த வினாடி நாலைந்து பந்தங்கள் மாடிப் படிகள் ஏறிச் சென்றன. சில வினாடிகளுக்குள்ளாகப் பல விளக்குகளும் ஏற்றப்பட்டன. இத்தனையும் மௌனமாகப் பார்த்த கூத்தன், “ஆம் தம்பி! நீ சென்று வந்தது தெரிந்துவிட்டது,” என்றான்.

“நான் என்று திட்டமாகத் தெரியாது அவர்களுக்கு, யாரோ ஒருவன் வந்திருக்கிறான் என்றுதான் தெரியும். அனேகமாக, சாத்தன் மீதுதான் அவர்களுக்குச் சந்தேகம் விழும்,” என்றான் இந்திரபானு. பிறகு ஒருவினாடி சிந்தித்து விட்டு, “அண்ணா ! இனி இந்தப் பகுதி சல்லடை போட்டுச் சலிக்கப்படும். வா நாம் போகலாம்” என்று கூத்தனை அழைத்துக்கொண்டு கிளம்பினான். அவர்கள் போவதை ஒரு வினாடி கவனித்துக்கொண்டிருந்த சாத்தன் முகத்தில் குழப்பம் மிதமிஞ்சிக் கிடந்தது. சிறிது அவகாசத்துக்குப் பிறகு சாத்தன் சோகப் பெருமூச்சு விட்டுக்கொண்டு அவர் களை மெல்லப் பின்பற்றிச் சென்றான். அரண்மனைக்குள் அடுத்து நிகழக்கூடிய நிகழ்ச்சிகளைப்பற்றியே அவன் மனம் சிந்தித்துக் கொண்டிருந்தது.

அரண்மனை நிகழ்ச்சிகள் இந்திரபானு எதிர்பார்த்த படிதான் இருந்தன. பாண்டியகுமாரியின் அறைக் காவல னொருவன் தூங்கிவிட்டான் என்பதை அறிந்தவுடன் அந்த அறைக்கு நாலைந்து வீரர்களுடன் விரைந்த காவலர் தலைவன் வாயிற்படியில் சாய்ந்து கொண்டு நிம்மதியுடன் உறங்கிக் கொண்டிருந்த காவலனைக் கண்டதும் வெகுண்டு, “டேய்! எழுந்திரு,” என்று கூறி, பாதக் குறட்டால் அவனைக் குத்தவும் செய்தான்.
அந்தக் குத்தலுக்கும் காவலன் மசியவில்லை . தலைவன் கையால் பிடித்து உலுக்கியதற்கும் மசியவில்லை. பிறகு தலைவன் வீரனொருவனை விளித்து, “இவனை தூக்கி நிறுத்தி முகத்தில் நீர் அடியுங்கள்,” என்றான்.

ஒரு வீரன் அவனைத் தூக்கி நிறுத்தி, மற்றொரு வீரன் நீர் கொண்டு வந்து முகத்திலடித்ததும் லேசாகக் கண்களைத் திறந்த காவலன் மீண்டும் கண்ணை மூடிக் கொண்டு தன்னை நிற்க வைத்தவர் மீது தடாலெனச் சாய்ந்துவிடவே இருவரும் தரையில் விழுந்தனர். அடியில் விழுந்த வீரன், உறங்கியவன் உடலிலிருந்து தன்னை விடு வித்துக் கொண்டு விலகி, “அப்பா! பிணம் கனம் கனக்கிறான். இறந்து விட்டான் போலிருக்கிறது” என்றான் காவலர் தலைவனை நோக்கி.

“சற்று முன்பு கண் விழித்தானே,” என்று சீறினான் காவலர் தலைவன்.

“ஆமாம்.” கீழே விழுந்த வீரன் ஒப்புக்கொண்டான் பணிவுடன்.

“பிணம் விழிக்குமா?” என்று மீண்டும் கூறினான் தலைவன்.

“விழிக்காது.” விழுந்த வீரன் குரலில் பணிவு அதிக மாகயிருந்தது.

“பின் எப்படி இவனைப் பிணமென்கிறாய்?” என்றான் தலைவன் ஆத்திரத்துடன். “தங்கள்மீது இவன் விழுந்திருந்தால் தாங்களும் ஒப்புக்கொள்வீர்கள்,” என்றான் வீரன்.

காவலர் தலைவனுக்கு அந்த வீரனை ஓங்கி அறைந்து விடலாம் போலிருந்தாலும் சினத்தை அவன்மீது காட்டாமல் மற்றொருவனை நோக்கி, “இந்த அறையின் பணிப் பெண் எங்கே?” என்று சீறி விழுந்தான்.

“உள்ளேயிருக்க வேண்டும்.”

“அழைத்து வா அவளை.”

அறைச் சீலையை விலக்கிக் கொண்டு உள்ளே சென்ற காவலன் சில வினாடிகளுக்குப் பின்பு திரும்பி வந்து, “தலைவரே! பணிப்பெண்ணும் உறங்குகிறாள்,” என்றான்.

“வாளால் தட்டி எழுப்ப நான் சொல்லித் தர வேண்டுமா?” என்று வினவினான் தலைவன் ஆக்ரோஷத் துடன்.
“வேண்டியதில்லை. நானே வாள் பிடியால் குத்திக் கூடப் பார்த்தேன். அவள் எழுந்திருக்கவில்லை,” என்றான் வீரன்.

“நீ சொல்வது விளங்கவில்லை,” என்றான் தலைவன்.

“அவளும் இவன் நிலையில் தானிருக்கிறாள்,” என்று வீரன் விளக்கவே என்ன செய்வதென்றறியாமல் விழித்த காவலர் தலைவன், “நீ சென்று மன்னர் சயன அறைக் காவலனிடம் இதைத் தெரிவித்துவிட்டு வா,” என்றான்.

“மன்னர் எங்கு சயனித்திருக்கிறாரோ? பட்டத்து ராணியின் மாளிகையிலா? இளைய ராணியின் மாளிகையிலா?” என்றான் வீரன்.

“மன்னர் இரண்டு மாளிகைகளுக்கும் செல்லவில்லை. இந்தப் பகுதியின் சயன அறையில் தானிருக்கிறார்,” என்று காவலர் தலைவன் கூறியதும் விரைந்த வீரன் சில நிமிடங்களுக்கெல்லாம் மற்றொரு காவலனுடன் திரும்பினான். வந்த காவலன் மிக வயோதிகனாயிருந்தான். அரண்மனைக் காவலிலேயே ஆயுள் காலத்தைக் கழித்துக் கொண்டிருந்த அவன் நீண்டநேரம் உறங்கிக் கொண்டிருந்த அந்தக் காவலனைக் கவனித்தான். பிறகு உள்சென்று அங்கிருந்த பணிப்பெண்ணைக் கவனித்துவிட்டு வெளிவந்தான். பிறகு காவலர் தலைவனை நோக்கி, “இவன் உறங்குவதை எப்பொழுது அறிந்தீர்கள்?” என்றான்.

“மூன்றாம் ஜாமக் காவல்னொருவன் சொல்லியனுப்பினான்,” என்று பதில் கூறினான் தலைவன்.

அரசனின் சயன அறைக் காவலன் சற்றுச் சிந்தித்து விட்டு, “உறங்குபவன் உறங்கட்டும். பணிப்பெண்ணையும் ஏதும் செய்ய வேண்டாம். இங்கு காவலைப் பலப்படுத்துங்கள். காலையில் மன்னரே அவர்கள் நிலையை நேரில் பார்க்கட்டும்,” என்று கூறிச் சென்றான்.

காவலர் தலைவன் காவலைப் பலப்படுத்த வேறு யாரையும் நியமிக்கவில்லை. தன்னுடன் வந்த காவலர்களோடு தானே காவல் புரிந்தான்.

நான்காம் ஜாமமும் வெகு துரிதமாக ஓடியது. உதய கால தாரைகள் அரண்மனையில் சப்தித்தன. அந்தப்புரத்திலும் பணிமக்கள் நடமாட்டம் துவங்கியதால் சிலம்பொலிகள் ஆங்காங்கு கேட்டன. எங்கோ கோவிலில் பாடப்பட்ட திருப்பள்ளியெழுச்சியும் தொடர்ந்து கேட்டது. சற்று நேரத்திற்கெல்லாம் பாண்டியகுமாரியின் அறைக்கு வயோதிகக் காவலன் பின்தொடர வந்து மன்னன் உறங்கிக் கிடந்த காவலனை இருமுறை காலால் உதைத்தான். பிறகு உள்ளே சென்று பணிப் பெண்ணையும் இருமுறை உதைத்துப் பார்த்தான். பிறகு உள்ளறைச் சீலையை விலக்கச் சென்றான். அவன் அதை அணுகு முன்பு, “யாரது?” என்று அதிகாரச் சத்தமிட்டுத் திரைச் சீலையை விலக்கிக்கொண்டு வெளியே வந்த முத்துக்குமரி அரசனை நோக்கி தீ விழி விழித்தாள். “அனுமதியின்றி உங்களை யார் நுழையச் சொன்னது இங்கே?” என்று கனல் கக்கும் சொற்களையும் உதிர்த்தாள்.

மன்னன் அவள் சினத்தைவிட அதிக சினத்தைக் காட்டி, “இங்கு என்ன நடந்தது இரவில்?” என்றான்.

“அரண்மனையில் நடப்பதைக் கண்டுபிடிப்பது சிறையிருப்பவள் வேலையா?” என்றாள் குமரி.

“நேற்றிரவு இங்கு இருவர் மயக்கமுற்றிருக்கிறார்கள்.”

“அரண்மனையில் பலருக்குப் பலவித மயக்க மிருக்கிறது.”

“பாண்டியகுமாரி! இதோ உன் பணிப்பெண் மயக்கமாகப் படுத்திருக்கிறாள். வாயிலில் காவலனொருவன் மயக்கமாகப் படுத்திருக்கிறான்,” என்றான் கோபத்துடன் மன்னன்.

“அதற்கு நான் என்ன செய்ய?”

“உன்னை நாடி யார் வந்தது இரவில்?”

“யாரும் வரவில்லை?”

‘பொய்.”

“வந்திருந்தாலும் உங்களிடம் சொல்வேனென்று எதிர் பார்க்கிறீர்களா?”

“வேறுவிதமாக அறிய மார்க்கமில்லையென்று நீ நினைக்கிறாயா?”

“இருக்கும் போது என்னைக் கேட்பானேன்?” என்ற முத்துக்குமரி உள்ளறையை நோக்கித் திரும்பினாள்.
“நில்!” என்று அதட்டிய மன்னன் அவளுக்கு முன்பு உள்ளறைக்குள் நுழைந்து சுற்றும்முற்றும் கவனித்தான். பஞ்சணையில் விழுந்திருந்த செண்பகப் பூவைக் கண்டதும் அதைக் கையிலெடுத்துக்கொண்டு, “இது எது?” என்றான்.

“உங்கள் அரண்மனைப் பூக்காரியைத்தான் கேட்க வேண்டும். சேர நாட்டில் செண்பகம் விளையுமிடம் எனக் கெப்படித் தெரியும்.

அரசன் காவலனொருவனை விளித்து, “பரத பட்டரை இங்கு அழைத்து வா,” என்று உத்தரவிட்டான்.

சற்று நேரத்திற்கெல்லாம் அங்கு வந்த பரதபட்டன் காவலனையும் நோக்கினான். பணிப் பெண்ணையும் நோக்கினான். பிறகு மன்னனை நோக்கி, “இந்த மயக்கம் தானாகச் சரியாகப் போய்விடும். இன்னும் ஒரு நாழிகையில் இருவரும் கண் விழித்துக் கொள்வார்கள்,” என்றான்.

“இவர்கள் எப்படி மயக்கமுற்றார்கள்? யாரால்?” என்றான் அரசன்.

பரதப்பட்டன் தனது சின்னஞ்சிறு விழிகளை அரசன் மீது திருப்பினான். “எல்லாம் என்னால்தான்,” என்றான்.

அரசன் திகைத்து நின்றான். “உங்களாலா!” என்ற அரசன் சொல்லில் ஒலித்தது வியப்பா, வேதனையா, கோபமா என்பது புரியவில்லை .

Previous articleRaja Muthirai Part 2 Ch39 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Muthirai Part 2 Ch41 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here