Home Historical Novel Raja Muthirai Part 2 Ch41 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

Raja Muthirai Part 2 Ch41 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

74
0
Raja Muthirai Part 2 Ch41 Raja Muthirai Part 2 Sandilyan, Raja Muthirai Part 2 Online Free, Raja Muthirai Part 2PDF, Download Raja Muthirai Part 2 novel, Raja Muthirai Part 2 book, Raja Muthirai Part 2free, Raja Muthirai,Raja Muthirai Part 2 Story in tamil,Raja Muthirai Part 2 Story,Raja Muthirai Part 2 novel in tamil,Raja Muthirai Part 2 novel,Raja Muthirai Part 2 book,Raja Muthirai Part 2 book review,ராஜ முத்திரை ,ராஜ முத்திரை கதை,Raja Muthirai Part 2tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2full story,Raja Muthirai Part 2 novel full story,Raja Muthirai Part 2audiobook,Raja Muthirai Part 2audio book,Raja Muthirai Part 2full audiobook,Raja Muthirai Part 2full audio book,
Raja Muthirai Part 2 Ch41 | Raja Muthirai | TamilNovel.in

Raja Muthirai Part 2 Ch41 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

ராஜ முத்திரை இரண்டாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 41 மூன்று நிபந்தனைகள்

Raja Muthirai Part 2 Ch41 | Raja Muthirai | TamilNovel.in

கடந்த இரவில் நடந்த விசித்திர நிகழ்ச்சிகளெல்லாம் தன்னால்தானென்று குருநாதன் ஒப்புக் கொண்டதைக் கேட்டுப் பலவித உணர்ச்சிகளுக்கு உள்ளான மன்னன் அந்த உணர்ச்சிகளை வேறு யார்மீதும் காட்டாமல் கையிலிருந்த செண்பகப் பூவைப் பலமாக நெருடினான். அப்பொழுது தான் செண்பகப் பூவைக் கவனித்த குருநாதன், “இப்படிக் கொடு அந்தச் செண்பகப் பூவை,” என்று அரசனைக் கேட்டு அதை வாங்கிச் சற்று எட்ட நீட்டிக்கொண்டே அதைக் கவனித்தான். பிறகு மன்னனை நோக்கிக் கேட்டான்; “இதே மாதிரி இன்னொரு பூ இருக்க வேண்டுமே. அது கிடைத்ததா?” என்று.

மன்னன் முகத்தில் கோபம் அதிகமாகத் துளிர்க்கவே, “பூவைத் தேட இங்கு நான் வரவில்லை,” என்று சினத் துடன் கூறினான் குருநாதனை நோக்கி.

”வேறு எதற்கு வந்தாய்?” என்று குருநாதன் கேட்டான் இகழ்ச்சியுடன்!

“இவர்கள் மயக்கத்துக்குக் காரணம் கண்டு பிடிக்க,” என்று மன்னன் மீண்டும் சீறினான்.

“மயக்கத்திற்கும் பூவுக்கும் சம்பந்தமுண்டு என்று புலப்படவில்லையா உனக்கு?” என்ற பரதப்பட்டன் குரலில் இகழ்ச்சி அதிகமாக ஒலித்தது.
“சம்பந்தம் உங்களுக்கும், மயக்கத்துக்கும் தானென்று கூறவில்லையா நீங்கள்?” என்ற அரசன் கேள்வியில் கோபம் அதிகமாகத் தெரிந்தது.

“எனக்கும் இவர்கள் மயக்கத்துக்கும் சம்பந்தம் உண்டு. இவர்கள் மயக்கத்துக்கு நான் காரணம்தான். ஆனால் இடைக் கருவிகள் தேவை” என்றான் பரதபட்டன்.

“இடைக் கருவிகளா?” ஏதும் புரியாமல் வினவினான் மன்ன ன்.

“ஆம்.”

“என்ன இடைக் கருவிகள்?”

“என் திராவகத்தைத் தடவ ஒரு சிறு கிழிசல் துணி அல்லது ஒரு சிறு புஷ்பம், அந்தக் கிழிசல் அல்லது மலரை ஏந்திவர ஒரு மனிதன், இவையனைத்தும் தேவை.”

மன்னன் பொறுமை அதற்கு மேல் நிலைக்கவில்லை. “சொல்வதை விளங்கச் சொல்லும்,” என்று கூவினான் சினக் கதிர்கள் முகத்தில் வீச.

பதிலுக்குப் பரதப்பட்டன் முகத்தில் வருத்தக் குறி பெரிதும் படர்ந்தது. “பாண்டிய நாட்டில் அறிவு வளர்ந்து வருகிறது. சேரநாட்டில் அது குன்றி வருகிறது.” என்று சற்று இரைந்து சொல்லிக் கொண்டான்.
அதைக் காதில் வாங்கிய மன்னன், “குருநாதரே! உமது துணிவு எல்லை மீறிப் போகிறது,” என்றான் குரலில் உஷ்ணம் அலைபாய.

“எல்லை மீறிப் போவது அது மட்டுமல்ல….” என்றான் குருநாதன்.

“வேறெது?”

“தலைநகரின் ஆபத்து.”

பதிலுக்குப் பெரும் அதிர் வெடியை எடுத்து வீசினான் குருநாதன். “இந்திரபானு இந்த அறைக்கு வந்து போனதிலிருந்து,” என்று குருநாதன் கூறிய சொற்களைக் கேட்ட வீரரவி உதய மார்த்தாண்டவர்மன் அவருக்கு ஒருவேளை புத்தி பிசகிவிட்டதோ என்று உள்ளூர நினைத்தான்.

அவன் முகபாவத்திலிருந்தே அவன் நினைப்பதை ஊகித்த குருநாதன் மெல்ல நகைத்தான். “மன்னா! உன் காவலன் வீடு பற்றி எரிகிறது. பிறகு கிடைக்கிறது இந்திர பானுவின் ஓலை உனக்கு. தீய் பிடித்ததில் அரண்மனை பின்புறக் காவல் சிறிது குழம்புகிறது. அந்தக் குழப்பத்தில் உனது காவலர் உடையில் இந்திரபானு உள்ளே நுழைந்தால் யார் கவனிக்கப் போகிறார்கள்? இங்கிருந்த காவலனையும் பணிப்பெண்ணையும் ரசாயனம் தடவிய செண்பகப்பூவை முகரச்சொல்லி இருவரையும் கும்பகர்ணர்கள் ஆக்கி விட்டதால் அவன் இரவில் ஒரு முழு ஜாமத்தை இங்கு கழிப்பதை யார் தடுக்க முடியும்?” என்று வினவவும் செய்தான். அத்துடன் மேலும் சொன்னான்; “அந்த ரசாயனத்தை இந்திரபானுவின் தற்காப்புக்காகக் கொடுத்தேன். அதுவும் அவன் என் குடிசையில் இருந்த நாளில் கொடுத்தேன். முத்துக்குமரியைச் சிங்கத்தின் வாயிலிருந்து மீட்க வரும் ஒரு வாலிபனுக்கு உதவியாயிருக் கட்டுமென்று கொடுத்தேன். அறிவாளியான அவன் அதை வெகு சாமர்த்தியமாக உபயோகப்படுத்தியிருக்கிறான், அவன் நிதானமாக அலுவல்களைப் புரிகிறான். நீ அவசரத்தில் காரியத்தைக் கெடுக்கிறாய்.”

மன்னன் மெள்ள தன் கோபத்தை ஒரு கட்டுக்குள் கொண்டு வந்தான். “என்ன அவசரப்பட்டு விட்டேன் நான்?” என்று வினவினான்.

பரதப்பட்டன் சிறு விழிகள் மன்னனை நோக்கிப் பளிச்சிட்டன ஒரு விநாடி. பிறகு அவன் உதடுகள் சொற்களை நிதானத்துடன் உதிர்க்கத் தொடங்கின. “நீ என்ன அவசரப் பட்டுவிட்டாய் என்று சொல்வதைவிட நானாயிருந்தால் எப்படி நடந்துகொண்டிருப்பேன் என்று சற்றுச் சிந்தித்துப் பார்க்கிறேன். திடீரென ஒரு புதுப் பணிப் பெண் முளைத்து இரண்டு ராணிகளைத் தாண்டி என்னிடம் வந்து விட்டால் முதலில் அவளிடம் எச்சரிக்கையுடனிருப்பேன், அவள் சொல்வதைக் கேட்டுக் கொள்வேனே தவிர அவளை அரண்மனையில் இருத்திக்கொள்ள மாட்டேன். அவளைத் தேடி வந்த பணிப் பெண்ணிடம் அவள் இரவு வரமாட்டாளென்று சொல்லியனுப்பியிருக்கமாட்டேன். நிதானித்திருப்பேன். அந்தப் பெண்ணைப் போக விட்டு அவளைக் கவனிக்க ஏற்பாடு செய்திருப்பேன். அவள் எந்த இல்லத்துக்குப் போகிறாள், எந்தக் காவலனுடன் தங்கியிருக்கிறாள், அந்த இல்லத்தில் வேறு யார் யார் இருக்கிறார்கள் என்று கவனிக்கச் செய்வேன். அவள் விஷயத்தில் மேலுக்கு வெகு அசிரத்தை காட்டுவேன். உள்ளூர வெகு எச்சரிக்கை யுடனிருப்பேன். என் அசிரத்தை அவளுக்கும் அவளைச் சேர்ந்தவர்களுக்கும் துணிவைக் கொடுக்கும். அந்தத் துணிவில் ஏதாவது ஒரு சரிவு, ஓர் இடைவெளி கிடைக்கும். அப்பொழுது என் கரம் குறுக்கே நிற்கும். இது என் வழி. உன் வழி உடனுக்குடன் நடவடிக்கை. ஆத்திரத்தின் வழி அது. ஆத்திரக்காரனுக்கு…” மேலே சொல்லவில்லை பரதப்பட்டன். ஆனால் அரசன் உணர்ந்து கொண்டான். காவலர் எதிரில், முத்துக்குமரியின் எதிரில் தன்னை நிந்திக்க பரதபட்டனுக்கு மிதமிஞ்சிய துணிவு இருக்கவேண்டு மென்று நினைக்க நினைக்க ஆத்திரம் எல்லை மீறியது. மீண்டும் குருநாதனை இழுத்துச் செல்லுமாறு காவலருக்கு உத்தரவு பிறப்பிக்க வாயெடுத்தான். அப்பொழுது குறிஞ்சி மெல்லக் கண்களைத் திறந்தாள்.

மன்னன் ஆணையிடுவதைச் சற்றே தேக்கிக்கொண்டான். குருநாதர், அரசர், காவலர், அந்த அறை யிலிருந்ததைக் கண்ட குறிஞ்சி மெள்ளத் தன் ஆடைகளைச் சீர் செய்து கொண்டும் தலையைக் கோதிக்கொண்டும் எழுந்து உட்கார்ந்து கண்களைச் சற்றுக் கசக்கிவிட்டுக் கொண்டாள். அதே சமயத்தில் வாயிற்படியில் சாய்ந்து கிடந்த வீரனும் மெள்ள எழுந்திருந்து தள்ளாடித் தள்ளாடி உள்ளே வந்து மன்னனைக் கண்டதும் தலை வணங்கக்கூட உணர்ச்சியற்றுப் பிரமை பிடித்து நின்றான்.
“இதுதான் நீ காவல் புரியும் லட்சணமா?” என்று வினவினான் மன்னன்.

பதிலுக்கு – நடுங்கினான் வீரன். “எல்லாம் அந்தச் செண்பகப்பூ…” என்று குளறினான்.

“எந்தச் செண்பகப்பூ?” என்று மன்னன் வினவினான்.

“அந்த இன்னொரு காவலன் கொடுத்தது?” என்று மீண்டும் குளறினான் அவன்.

“எங்கே அது?” அரசன் கையை நீட்டினான் பூவை வாங்க.

காவலன் தனது கச்சையில் தேடிப் பார்த்தான். “காணவில்லை. அவன்தான் எடுத்துக்கொண்டு போயிருக்க வேண்டும்” என்றான் காவலன்.

“அவனை இதற்கு முன்பு பார்த்திருக்கிறாயா?” என்று குருநாதன் வினவினான்.

“இல்லை, பார்த்ததில்லை,” என்றான் காவலன்.

“அவன் முகம்…” என்ற குருநாதன் வார்த்தையை முடிக்கவில்லை.

“மிக விகாரம்,” என்று வீரன் வார்த்தையை முடித்தான் இடைபுகுந்து.

மன்னன் அவனைச் செல்லுமாறு பணித்துவிட்டுக் குறிஞ்சியை நோக்கினான். குறிஞ்சி மன்னன் கேள்வியை ஊகித்துப் பதில் சொன்னாள். “யாரோ என்னை மயக்க ரசாயனத்தை முகர வைத்திருக்கிறார்கள். இத்தனைக்கும் நான் அதிகமாக உறங்குவதில்லை. முகர வைத்தவன் யாரா யிருந்தாலும் அவன் படு சாமர்த்தியசாலியாக இருக்க வேண்டும். நான் படுத்து உறங்கும் வரையில் காத்திருந்து மெல்ல வந்து என் முகத்திற்கு எட்டாமையில் வைத்தே அதை நான் சுவாசிக்கச் செய்திருக்கிறான். அவன் கொண்டு வந்த மலரோ துணியோ சற்று என்மீது பட்டிருந்தாலும் நிலைமை வேறாயிருக்கும்,” என்றாள் மன்னனை நோக்கி.

மன்னன் பரதபட்டனை நோக்கினான். பரதப்பட்டன் தான் அவளை ஏதும் கேட்க விரும்பவில்லையென்று கூறிவிட்டு அறையைவிட்டு வெளியே சென்றான். காவலரிருவர் குருநாதனைத் தொடர்ந்தனர். மன்னனும் அத்துடன் விசாரணையை நிறுத்திக்கொண்டு காவலர் தலைவனை விளித்துக் காவலை அந்த அறையில் பலப்படுத்தும்படி உத்தரவிட்டுத் தனது சயன அறையை நோக்கிச் சென்றான்.

மீண்டும் தனது பஞ்சணையில் படுத்த வீரரவி வெகு நேரம் சிந்தனையில் ஆழ்ந்தான். பரதப்பட்டன் சொன்ன அனைத்தும் உண்மையென்பது அவன் கூரிய அறிவுக்கு மிகத் தெளிவாகத் தெரிந்தது. தனது அவசரத்தாலேயே பல காரியங்கள் கெட்டு விட்டன என்பதையும் அவன் புரிந்து கொண்டான். பரதபட்டன் உதவியும் யோசனையும் அந்த நெருக்கடியான கட்டத்தில் சேர நாட்டுக்குத் தேவையென் பதையும் உணர்ந்தான் சேரமன்னன். இருப்பினும் குரு நாதன் இந்திரபானுவைத் தான் கொல்ல முயன்றதையும், முத்துக்குமரியைச் சிறை வைத்திருப்பதையும் ஒப்பவில்லை யென்பதைப் புரிந்து கொண்டானானதால் அவனுக்குக் குருநாதன்மீது ஓரளவு கோபமும் துளிர்த்தது. கோபத்தைக் காட்ட அது சமயமல்லவாதலால் குருநாதனிடம் ஓரளவு ஒத்துப் போவதே சிறந்த வழி என்பதை உணர்ந்து வீரரவி அதற்கான யோசனையில் இறங்கினான். தனது அந்தரங்க ஆலோசனைகளில் குருநாதனுக்கும் ஓரளவு இடங் கொடுத்து அவன் யோசனைகளில் இறங்கினான். தனக்குப் பிடித்தமானதை எடுத்துக் கொள்ளவும் தீர்மானித்தான் உதயமார்த்தாண்டவர்மன். ‘உள்ள நிலைமை இன்று புரியும். இன்று எப்படியும் கடற்படை துறைமுகத்துக்கு வந்துவிடும், கடற்படைத் தலைவனையும் விசாரிப்போம்,’ என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்ட சேரமான் வழக்கத்துக்கு விரோதமாக அன்று நீண்ட நேரம் கழித்தே நீராடச் சென்றான். நீராடிய பிறகு லேசாகக் காலை உணவருந்தி முதலமைச்சரை வரவழைத்தான் தனது சயன அறைக்கே.

முதலமைச்சர் மிகுந்த கவலையுடன் சயன அறைக்குள் நுழைந்தார். மன்னன் சயன அறைக்குள் நுழைய யாருக்குமே அனுமதி கிடையாது. மன்னனுக்கு உடல்நிலை சரியில்லையென்றால் மருத்துவர் மட்டும் அங்கு நுழையலாமென்பதுதான் அரண்மனை விதி. அப்படியிருக்கத் தம்மை மன்னன் அங்கு அழைத்ததை எண்ணிப் பெருங்கவலையுடன் வந்த முதலமைச்சர், ”மன்னர் உடலுக்கு…” என்று விசாரித்து முகத்தில் துன்பத்தைக் காட்டினார்.

“உடல் நிலைக்கு ஏதுமில்லை, முதலமைச்சரே! மனநிலைதான் சரியில்லை ,” என்றான் மன்னன்.

“புதிதாக என்ன ஏற்பட்டுவிட்டது மன்னரைக் கவலைக்குள்ளாக்க?” என்று வினவினார் முதலமைச்சர்.

மன்னன் பஞ்சணையை விட்டு எழுந்திராமல் கடந்த இரவில் நடந்ததை விளக்கமாகச் சொன்னான். முதல மைச்சர் முகத்தில் முதலில் வியப்பு விரிந்தது, பிறகு கவலை படர்ந்தது. முடிவில் அதிர்ச்சி தெரிந்தது. “மிக விசித்திரம் மிக விசித்திரம்,” என்றார் முதலமைச்சர் நிகழ்ச்சி முழுவ வதையும் கேட்ட பின்பு.

“இதிலிருந்து உமக்கு என்ன தெரிகிறது?” என்று வினவினான் மன்னன் சர்வ சாதாரணமாக.

முதலமைச்சர் சற்றுத் தயங்கியே பதில் சொன்னார், “அரண்மனைக் காவல் அத்தனை சரியாயில்லையென்று தெரிகிறது. தவிர, தலைநகரில் எதிரி வேவுகாரர் நடமாட்டம் அதிகமென்று தெரிகிறது. அதுமட்டுமல்ல, வெகு திறமைசாலிகளான ஒற்றர்களை நாம் சமாளிக்க வேண்டியிருப்பதும் தெரிகிறது.” என்று.

“வேறு என்ன தெரிகிறது?” என்று வினவினான் மன்னன் பஞ்சணையில் எழுந்து உட்கார்ந்து.

முதலமைச்சர் சிறிது தயங்கினார். “சொல்லத் தயக்கமாயிருக்கிறது,” என்றும் கூறினார்.

“என்ன தயக்கம்?” என்று கேட்டான் மன்னன்.

“நமது மதிப்புக்குரியவர்மீது குறை சொல்வது தயக்கத்தை தருகிறது.”

“தயக்கம் வேண்டாம். சொல்லும்.”

“குருநாதர் வெளிப்படையாகக் கூறுவதை கூட அதிக மாக விஷயமறிந்திருக்கிறார் என்று தெரிகிறது.”

மன்னன் ஆமோதிக்கும் வகையில் தலையசைத்தான். “அவரிடமிருந்து விஷயத்தை வரவழைப்போமா?” என்று வினவினான்.

“குருநாதரைத் தங்களுக்குத் தெரியாதா? இஷ்ட மில்லாததைச் சொல்லமாட்டார். அவரைத் தொட்டாலும் மக்கள் நம்மைச் சும்மா விடமாட்டார்கள்,” என்றார் முதலமைச்சர்.

“வேறு வழி?” மன்னன் குரல் கவலையுடன் ஒலித்தது.

“அவர் நிபந்தனைக்குட்பட்டு அவரை நமது பக்கம் இழுக்க வேண்டும்,” என்றார் முதலமைச்சர்.
மன்னன் சிறிது நேரம் சிந்தனையில் இறங்கினான். பிறகு குருநாதனையும் சயன அறைக்கு வரவழைத்து எதிரிலிருந்து மஞ்சத்தில் உட்காரச் சொல்லி முதலமைச்சர் முன்பாக அவர் ஒத்துழைப்பை நாடினான்.

ஒத்துழைக்கக் குருநாதன் ஒப்புக்கொண்டான் மூன்று நிபந்தனைகளின் மேல். அந்த மூன்று நிபந்தனைகளும் வேப்பங்காயாகயிருந்தன வீரரவியின் இதயத்துக்கு.

Previous articleRaja Muthirai Part 2 Ch40 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Muthirai Part 2 Ch42 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here