Home Historical Novel Raja Muthirai Part 2 Ch43 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

Raja Muthirai Part 2 Ch43 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

57
0
Raja Muthirai Part 2 Ch43 Raja Muthirai Part 2 Sandilyan, Raja Muthirai Part 2 Online Free, Raja Muthirai Part 2PDF, Download Raja Muthirai Part 2 novel, Raja Muthirai Part 2 book, Raja Muthirai Part 2free, Raja Muthirai,Raja Muthirai Part 2 Story in tamil,Raja Muthirai Part 2 Story,Raja Muthirai Part 2 novel in tamil,Raja Muthirai Part 2 novel,Raja Muthirai Part 2 book,Raja Muthirai Part 2 book review,ராஜ முத்திரை ,ராஜ முத்திரை கதை,Raja Muthirai Part 2tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2full story,Raja Muthirai Part 2 novel full story,Raja Muthirai Part 2audiobook,Raja Muthirai Part 2audio book,Raja Muthirai Part 2full audiobook,Raja Muthirai Part 2full audio book,
Raja Muthirai Part 2 Ch43 | Raja Muthirai | TamilNovel.in

Raja Muthirai Part 2 Ch43 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

ராஜ முத்திரை இரண்டாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 43 இரு பெரும் சக்திகள்

Raja Muthirai Part 2 Ch43 | Raja Muthirai | TamilNovel.in

அரசனால் அவசரமாக அழைக்கப்பட்ட சேனாதிபதி அழைக்க வந்த காவலன் அரசன் சயன அறைப் பக்கம் திரும்பியதுமே சிறிது வியப்படைந்தா னென்றால், அந்த அறைக்குள் நுழைந்த மன்னன் எதிரில் நின்றதும் அவன் வியப்பு உச்ச நிலைக்குச் சென்றது. அவன் வந்த போது மன்னன் பஞ்சணையில் உட்கார்ந்தேயிருந்தானென்றாலும் அவன் கண்கள் மட்டும் மேலைக்கடலை நோக்கி வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்ததைப் பார்த்துப் பிரமித்த சேனாதிபதி, ‘மன்னருக்கு விஷயம் தெரியும் போலிருக்கிறது,’ என்று தனக்குள்ளேயே சொல்லி கொண்டான்.

அந்தப் பிரமிப்பையும் தூக்கியெறியும் தினுசில் அமைந்த அரசன் கேள்வி சேனாதிபதியை அடியோடு அசர வைத்தது. “மீதிக் கடற்படை எப்பொழுது வந்தது துறை முகத்துக்கு?” என்று வினவினான் மன்னன் சேனாதி பதியை ஏறிட்டு நோக்காமலும் கடலிலிருந்து கண்ணை எடுக்காமலும்.

சேனாதிபதி பிரமித்தான்,தயங்கினான். தடுமாறினான். “ஒரு ஜாமத்திற்கு முன்பு…” என்று குளறவும் செய்தான்.

“உடனே ஏன் என்னிடம் சொல்லவில்லை?” என்று கேட்டான் மன்னன் உள்ளிருந்த கோபத்தைச் சிறிதளவும் வெளிக்குக் காட்டாமல்.

“மன்னர் ஆஸ்தான அறைக்கு வந்தபின் சொல்வது தான் மரபு. சயன அறைக்கு வர யாருக்கும் அனுமதி கிடையாது” என்றான் சேனாதிபதி மிக அடக்கமாக

மன்னன் கடலிலிருந்து கண்களை நீக்கி அவற்றைச் சேனாதிபதி மீது நிலைக்கவிட்டு, “சம்பிரதாயங்களைக் கை விடமாட்டீர் போலிருக்கிறது?” என்று வினவினான்.

“எப்படி விட முடியும்?” நீண்ட கால சம்பிரதாயம்…” என்றான் சேனாபதி.

“விடமுடியாது, விடமுடியாது, என்றான் மன்னன்.

“மன்னன் அடியவன் கூறுவதை ஒப்புக்கொள்வா ரென்பது எனக்குத் தெரியும்,” என்றான் சேனாதிபதி.

“இதை எப்படி ஒப்புக் கொள்ளாதிருக்க முடியும்? சம்பிரதாயமாயிற்றே?”

“ஆம்.”

“எப்பொழுதும் அதை விட்டு விடவேண்டாம்.”

“ஒருக்காலும் விடமாட்டேன்.”
“எதிரி தலைநகரில் புகுந்துவிட்டாலும் விடாதேயும். சம்பிரதாயத்தையும் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளும். எதிரி தலைநகரைப் பிடித்துக் கொள்ளட்டும்.”

அப்பொழுதுதான் மன்னன் தன்னை இகழ்ந்து பேசுகிறானென்பதைப் புரிந்துகொண்ட சேனாதிபதி, “மன்னவா!” என்று ஆட்சேபக் குரல் எழுப்பினான்.

மன்னன் இகழ்ச்சி மேலும் ஒலித்தது. “சேனாதிபதி! அவரவர்களுக்கு வேண்டியதை அவரவர்கள் பிடித்துக் கொள்ளுகிறார்கள். எதிரிக்கு வேண்டியது தலைநகர். உமக்கு வேண்டியது சம்பிரதாயம். குருநாதருக்கு வேண்டியது அதிகாரம்,” என்ற மன்னன், “எனக்கு வேண்டியது என்ன என்பதுதான் யாருக்கும் புரிய வில்லை,” என்று சலித்துக் கொண்டான்.

சேனாதிபதி மெல்லச் சலிப்பை அகற்ற முயன்று, “ஏன் புரியவில்லை ?” என்று கூறினான்.

“என்ன புரிந்துவிட்டது?” என்று கேட்டான் மன்னன்.

"மன்னருக்கு வேண்டுவதெல்லாம் அவர் வசமேயிருக்கிறது,” என்று இழுத்தான் சேனாதிபதி.

“என்ன இருக்கிறது?”

“தமிழகத்தின் சிறந்த அரசு.”

“உம்.”

“சிறந்த தலைநகர்”

“உம்”

“பாண்டியர் முத்து…”

“உம்”

“பாண்டியன் மகள்…”

“உம்”

அதற்கு மேல் சொல்ல ஏதுமில்லாததால் மௌனமாய் நின்றான் சேனாதிபதி. “ஏன் நிறுத்திவிட்டீர்? உம்மைப் போன்ற சேனாதிபதி, குருநாதரைப் போன்ற சேரர் குலபக்தர், இவற்றையும் சேர்த்துக் கொள்ளலாமே?” என்று கேட்ட மன்னன் சேனாதிபதியைப்பரம இகழ்ச்சியுடன் நோக்கினான்.

சேனாதிபதி மன்னன் மனோநிலையை உணர்ந்ததால் பதிலேதும் சொல்லவில்லை. மன்னனே பேசட்டுமென்று மௌனம் சாதித்தான். வீரரவி மேலும் கேட்டான், “ஏன் சேனாதிபதி! நீர் முன்பு சொன்னீரே நான்கு விஷயங்கள்… அரசு, தலைநகர், முத்து, பாண்டியன் மகள்….. இவை என்னிடமிருப்பதில் ஆட்சேபணையில்லையே உமக்கு?” என்று.
“மன்னவா!” சேனாதிபதி அச்சக் குரல் எழுப் பினான். அதில் வியப்பும் கலந்திருந்தது.

மன்னன் சேனாதிபதியின் முகத்தில் விரிந்த உணர்ச்சிகளைச் சர்வ சாதாரணமாகக் கவனித்துவிட்டுச் சொன்னான், “சிலருக்கு ஆட்சேபணையிருப்பதால், உம் கருத்து என்ன வென்று கேட்டேன்.” என்று.

“அரசர் கருத்துக்கு மாறுபடுவது அரசர் துரோகமல் லவா?” என்று சேனாதிபதி நடுக்கத்துடன் சொன்னான்.

“சிலர் அப்படி நினைக்கவில்லை.”

“யார்?”

“குருநாதர்.”

“ஆம் ஆம்.”

“முத்தும் பாண்டிய குமாரியும் என்னிடமிருப்பது தவறென்று நினைக்கிறார்.”

இதற்குச் சேனாதிபதி பதிலேதும் சொல்லவில்லை. அவன் மௌனத்தைக் கண்ட மன்னன் கேட்டான், “குரு நாதர் கருத்தில் உமக்கும் உடன்பாடு உண்டா ?” என்று .

சேனாதிபதி இப்படியுமில்லாமல், அப்படியு மில்லாமல் பதில் சொன்னான்; “மன்னரின் சொந்த விஷயத்தில் கருத்துக் கொள்வதோ, யோசனை கூறுவதோ சேனாதிபதியின் கடமையல்ல…”

“அது யார் கடமையோ?” என்று வினவினான் மன்னன்.

“மன்னரின் சொந்த நடவடிக்கைகள் நாட்டைப் பாதிப்பதானால், அதுபற்றித் தலையிட வேண்டியவர் முதலமைச்சர். படைகளை நடத்தி நாட்டைப் பாதுகாப்பது ஒன்று தான் சேனாதிபதியின் கடமை; அதில் மன்னர் கருத்துக்கும் என் கருத்துக்கும் முரண்பாடிருந்தால் சொல்லத் தவற மாட்டேன்” என்றான் சேனாதிபதி.

சேனாதிபதியின் சாமர்த்தியத்தை உள்ளூர வியந்து கொண்ட வீரரவி, “உமது பதவியை வேறு யாராவது மேற்கொள்ள விரும்பினால் என்ன செய்வீர்?” என்று கேட்டான்.

“முன்பு செய்தது போல் செய்வேன்,” என்றான் சேனாதிபதி.

“முன்பா?”

“ஆம். சிங்கணனைப் படைகளை நடத்திச் செல்ல நியமித்தபோது.”

“ஆம், ஆம். முதலில் எதிர்த்தீ ர்…”
“பிறகு பணிந்துவிட்டேன் அரசர் விருப்பம் தெரிந்த பிறகு… ஆனால்….”

“ஆனால் என்ன?”

“சிங்கணனும் அதிகம் ஏதும் சாதித்து விட்டதாகத் தெரியவில்லை.”

“சாதிக்கவில்லையென்று எப்படித் தெரியும்?”

“கோட்டாற்றுக்கரையில் நாம் எதிர்பார்த்தபடி அவன் அபரிமித வெற்றியடைந்திருந்தால் வீரபாண்டியன் சரணடைந்து சிங்கணன் கையில் சிக்கியிருந்தால், சேரநாட்டு வடக்குப் பாதைகளில் எதிரி கெடுபிடியும், சஞ்சாரமும் இவ்வளவிருக்காது. ஆனால் இது என் ஊகம்தான். சிங்கணன் சாமர்த்தியம் மன்னருக்குத் தெரியுமாதலால் அதைப்பற்றி எதிர்த்துக் கூறுவது சரியாகாது.”

மன்னன் நன்றாகப் புரிந்து கொண்டான் சேனாதிபதி தன்னைப் பார்த்து நகைக்கிறானென்று. இருப்பினும் சிறிதளவும் கோபத்தைக் காட்டாமல், “நடந்தது இருக்கட்டும். நடக்கப் போவதைக் கவனிப்போம். மீண்டும் உமது பதவிக்குப் போட்டி வந்திருக்கிறது,” என்றான் வீரரவி.

சேனாதிபதி இகழ்ச்சிப் புன்முறுவல் செய்து, “இம் முறை அது யாரோ?” என்று வினவினான்.

மன்னன் மெள்ளத்தான் பதில் சொன்னான். ஆனால் அதைக் கேட்ட சேனாதிபதி பதில் சொல்ல நா எழாமல் நின்றான். “குருநாதர்!” என்ற மன்னன் சொல் ஏதோ மின்னல் தாக்குவதுபோல் அவன் புத்தியைத் தாக்கியதால் நிலைகுலைந்து நின்றான் சேனாதிபதி,

“என்ன திகைக்கிறீர் சேனாதிபதி?” என்று வினவினான் மன்னன் புன்முறுவலுடன்.

“ஒன்றுமில்லை. குருநாதர் படைகளை நடத்தப் போவதாகக் கூறுகிறீர்கள்…” என்று முணுமுணுத்தான் | சேனாதிபதி.

“நடத்தப் போவதாக யார் சொன்னது?” என்று கேட்டான் மன்னன்.

“நீங்கள் தானே சொன்னீர்கள்?”

“அது குருநாதர் விருப்பம் என்று சொன்னேன்.”

“அப்படியானால் தங்கள்…”

“விருப்பம் அதுவல்ல….”

“மன்னா !”

“தவிர, ஒரு முறை செய்த தவறை இரண்டாம் முறை செய்ய நான் விரும்பவில்லை.”

“அப்படியானால் குருநாதர் கோபிப்பாரே!”
“அங்குதான் நமது ராஜதந்திரம் வேலை செய்ய வேண்டும்,” என்ற மன்னன் மேலும் விளக்க முற்பட்டான்; “சேனாதிபதி, நாடு மிக இக்கட்டான நிலையில் இருக்கிறது, எதிரி நம் தலைநகரை நோக்கி வருகிறான். கடற்படை பத்துக் கப்பல்களைப் பலி கொடுத்துவிட்டுத் துறை முகத்தில் வந்து நிற்கிறது. கோட்டாற்றுக்கரை நிலை மர்ம மாயிருக்கிறது. தலைநகரத்தில் எதிரி ஒற்றர்கள் நடமாட்டம் மிக அதிகமாயிருக்கிறது. அவர்களில் ஒருவன் நேற்றிரவு பாண்டியகுமாரியின் அறைக்கு வந்து போயிருக்கிறான். ஆகவே, நிலைமை என்னவென்பதை நான் விளக்கத் தேவையில்லை; இந்த நிலையில் மக்களால் விரும்பப்படும் குருநாதரைச் சிறையில் வைத்திருப்பது அபாயம். ஆனால் குருநாதரை முற்றிலும் நம்பவும் முடியாது. கடந்த கால நிகழ்ச்சிகள் அவரிடம் எனக்கு நம்பிக்கையூட்டவில்லை. எதிரியிடம் அவருக்குப் பாசமிருக்கிறது. எதிரி மகளுக்கு நம்மிடம் ஏதும் ஆபத்தில்லையென்றாலும் நாட்டைக் காப்பதைவிட அவளைக் காப்பதில் முனைந்திருக்கிறார் குருநாதர். இந்த நிலையில் அவர் ஒத்துழைப்பை நாடினேன். அதற்கு அவர் மூன்று நிபந்தனைகள் கூறுகிறார்.” இந்த இடத்தில் மன்னன் சிறிது நிதானித்து, சேனாதிபதியை நோக்கினான்.

சேனாதிபதி. உணர்ச்சியற்ற வறண்ட குரலில் கேட்டான், “என்ன நிபந்தனைகள் அவை?” என்று.

“நிலப்படை கடற்படை இரண்டும் அவர் சொற்படி இயங்க வேண்டுமாம். இந்திரபானு உடனடியாகச் சரணடைய முரசறைவிக்க வேண்டுமாம். முத்துக்குமரியை அவர் வசம் ஒப்படைக்க வேண்டுமாம்” என்று பதில் கூறினான் மன்னன்.
“என்ன பதில் கூறினீர்கள் குருநாதருக்கு?”

“நாளை பதில் கூறுவதாகச் சொல்லியிருக்கிறேன்.”

“என்ன பதில் கூறப் போகிறீர்கள்?”

“அதைப்பற்றி உமது கருத்தைக் கேட்கவே உம்மை அழைத்தேன்” என்ற மன்னன், “சேனாதிபதி! எனது படைகளுக்கு நீர் தலைவர். உமதிஷ்டப்படிதான் முடிவு செய்யப் போகிறேன். நீர் என்ன சொல்கிறீர்?” என்று மன்னன் வினவியதன்றி, சேனாதிபதியின் முகத்தைக்கூர்ந்து நோக்கவும் செய்தான்.
மன்னன் தன்மீது பொறுப்பைத் தள்ளுவதைச் சேனாதிபதி உணர்ந்தான். குருநாதர் யோசனையை ஏற்க வேண்டாமென்று சொல்லும் பட்சத்தில் மக்கள் விரோதம் தனக்கு ஏற்படும் என்பதை நன்றாக உணர்ந்துகொண்ட சேனாதிபதி, என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் திகைத்தான் சில வினாடிகள். பிறகு சாதுர்யமாகச் சொன்னான் , “என் கருத்து எதுவானாலும் அது மன்னர் கருத்துக்கு எதிராயிருக்காது. ஆகவே மன்னர் உள்ளத்தைத் திறந்தால் அதன்படி நடப்பது அடியவன் கடமை,” என்று.

சேனாதிபதி தன்னைவிட ஒரு படி மிஞ்சி, கோலத்துக்குள் நுழைவதைக் கண்ட மன்னன் புன்முறுவல் செய்தான். “உமது கஷ்டம் புரிகிறது எனக்கு. சரி, நானே சொல்கிறேன், கேளும், நாம் குருநாரைத் தற்சமயம் விரோ தித்துக் கொள்ள முடியாது. ஆகவே, அவர் நிபந்தனை களுக்கு ஒப்புக்கொள்ள வேண்டியது…” என்று மன்னன் மெள்ளத் தனது உள்ளத்தைத் திறந்தான்.

“சரி மன்னவா” என்றான் சேனாதிபதி.

மன்னன் புன்முறுவல் விரிந்தது. உள்ளத்தில் கள்ளத் தனமும் அந்த முறுவலில் துலங்கியது. “குருநாதர் சொற்படி அவரே நிலப்படைக்கும், கடற்படைக்கும் தலைவரா யிருக்கட்டும். அவர் சொற்படி படைகள் தலைநகரின் தற்காப்புக்கு நிறுத்தப்படட்டும். அவர் இஷ்டப்படி இந்திரபானுவைச் சரணடைய முரசும் அறிவிப்போம். இந்திரபானு சரணடையாவிட்டல் குருநாதர் அந்தத் தோல்வியிலேயே மனமுடைந்து போவார். இல்லையேல், மக்களுக்கு அவர்மீதுள்ள மதிப்புக் குறையும். இரண்டும் நமக்கு நல்லது. ஒருவேளை, அவன் முட்டாள் தனமாகச் சரணடைந்தால் வீரனான ஓர் எதிரி நமது கையில் சிக்கி விடுகிறான். இதுவும் நமக்கு அனுகூலம்,” என்ற மன்னன் சேனாதிபதியை நோக்கினான்.
.
“ஆம் ஆம்,” என்றான் சேனாதிபதி.

”முத்துக்குமரி குருநாதரிடம் ஒப்படைக்கப் பட்டாலும் தலைநகரில் தானிருக்கிறாள். இந்திரபானு சிறைப்பட்டால் அவளை விடுவிக்கத் துணியும் பெருவீரன் நமது பாதையிலிருந்து அகற்றப்படுகிறான்…” என்று சுட்டிக் காட்டினான் மன்னன்.

சேனாதிபதியின் கண்கள் வியப்பால் மலர்ந்தன. இருப்பினும் ஒரு சந்தேகம் கேட்டான். “ஒருவேளை குரு நாதர் இருவரையும் சேர்த்துத் தப்பவிட்டால்?”

“குருநாதரை நாம் கண்காணித்து வருவோம். அவர் சொற்படி நாம் கேட்டு, அவர் கேட்ட அதிகாரங்களைக் கொடுத்த பின்பும் அவர் நாட்டு எதிரிகள் தப்ப உதவினால், அதுவும் போர் தலைநகரை அணுகிய சமயத்தில் உதவினால், மக்கள் விரோதம் அவருக்கு ஏற்பட்டுவிடும். அப்பொழுது அவர் தலையைச் சீவினாலும் மக்கள் ஆமோதிப்பார்கள்…” என்றான் மன்னன்.

மன்னன் உள்ளத்தின் ஆழமும் தந்திரமும் மெள்ள மெள்ளத் துலங்கவே, சேனாதிபதி மலைப்புடன் பார்த்தான் மன்னனை. “ஒருவேளை அவர் இருவரையும் தப்பவிடவில்லையென்றால்?”

“தப்பிச்செல்ல நாம் துணைபுரிவோம். இவர்கள் தப்பிச் செல்லும்போது அவர்களை நமது இஷ்டப்பட்ட இடத்துக்குக் கடத்திச் செல்ல நமக்கு வாய்ப்பு இருக்கிறதல்லவா?”

“இருக்கிறது.”

அப்போது அவர்கள் தப்பியதன் பொறுப்பைக் குரு நாதர்மீது போடலாம். அதற்காகவும் அவரைத் தண்டிக்கலாம். அப்பொழுதும் அவர்கள் பாண்டியனிடம் போயிருப்பதாகக் குருநாதர் மனப்பால் குடிக்கலாம். ஆனால் அவர்களில் ஒருவர் சேரனிடம் இருப்பார்கள். இன்னொருவர்…”

“இன்னொருவர்?”

மன்னன் பஞ்சணையிலிருந்து எழுந்து தாழ்வரைக்குச் சென்று, திரும்பி வந்து, “இன்னொருவர் கடல் பயணம் செய்வார் நாம் குறிப்பிடும் இடத்திற்கு அவசியமானால் இருவருமே பயணம் செய்வார்கள். ஒரு கப்பலைத் தவிர எல்லாக் கப்பல்களும் இயங்கட்டும் குருநாதர் உத்தரவுப் படி. ஆனால் ஒரு மரக்கலம் துறைமுகத்திலிருந்து கிளம்பி, சற்றுத் தெற்கே வந்து சஞ்சரிக்கட்டும். நாம் சொல்லும் இரவில் செல்லட்டும்,” என்றான் ரகசியமாக

“எங்கு?” சேனாதிபதியின் குரல் ஒலித்தது, பயத்துடன் அரசன் ரகசிய உத்தரவை நோக்கி.

அரசன் குரல் மேலும் ரகசியமாக ஒலித்தது, “சிங்களத்துக்கு,” என்று. அத்துடன் நிற்கவில்லை வீரரவியின் உத்தரவு.

”அக்கப்பல் தனிப்படச் செல்லாது.” என்றும் கூறினான் மன்னன்.

“வேறு எப்படிச் செல்லும்?” என்று வினவினான் சேனாதிபதி.
“பாண்டியன் மகளையும் தாங்கிச் செல்லும்,” என்ற வீரரவி கபடத்துடன் நகைத்து, “வெகு சீக்கிரம் புரிந்து கொள்வார் குருநாதர். குருநாதர் தந்திரத்தை விட வீரரவியின் தந்திரம் பெரிதென்பதை,” என்று கூறினான். சேனாதிபதி இதைக் குறித்தே அதிர்ச்சியடைந்தான். ஆனால் இன்னும் அதிர்ச்சியடையும்படியான வேறு இரு உத்தரவுகளையும் மன்னன் பிறப்பித்தான். அன்று மன்னன் அறையிலிருந்து அகன்ற சேனாதிபதியின் உணர்ச்சிகள், விவரிக்கத் தகாததாயிருந்தன. குருநாதர் , அரசன் இரண்டு பெரிய சக்திகளுக்கிடையில் தான் சிக்கியிருப்பதை உணர்ந்ததால் அவன் புத்தி பிரமை பிடித்துத் திணறிக் கொண்டிருந்தது.

Previous articleRaja Muthirai Part 2 Ch42 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Muthirai Part 2 Ch44 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here