Home Historical Novel Raja Muthirai Part 2 Ch44 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

Raja Muthirai Part 2 Ch44 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

60
0
Raja Muthirai Part 2 Ch44 Raja Muthirai Part 2 Sandilyan, Raja Muthirai Part 2 Online Free, Raja Muthirai Part 2PDF, Download Raja Muthirai Part 2 novel, Raja Muthirai Part 2 book, Raja Muthirai Part 2free, Raja Muthirai,Raja Muthirai Part 2 Story in tamil,Raja Muthirai Part 2 Story,Raja Muthirai Part 2 novel in tamil,Raja Muthirai Part 2 novel,Raja Muthirai Part 2 book,Raja Muthirai Part 2 book review,ராஜ முத்திரை ,ராஜ முத்திரை கதை,Raja Muthirai Part 2tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2full story,Raja Muthirai Part 2 novel full story,Raja Muthirai Part 2audiobook,Raja Muthirai Part 2audio book,Raja Muthirai Part 2full audiobook,Raja Muthirai Part 2full audio book,
Raja Muthirai Part 2 Ch44 | Raja Muthirai | TamilNovel.in

Raja Muthirai Part 2 Ch44 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

ராஜ முத்திரை இரண்டாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 44 பட்டன் திட்டம்

Raja Muthirai Part 2 Ch44 | Raja Muthirai | TamilNovel.in

குருநாதர் நிபந்தனைகளை ஏற்பதுபோல் ஏற்று அவற்றுக்கு நான்கு பக்கத்திலும் தளைகளைக் கட்டிவிடத் தீர்மானித்த மன்னனின் தந்திரத்தையும் அந்தத் தந்திரத்தின் விளைவாகப் பிறப்பித்த உத்தரவுகளையும் நினைத்தே வியப்பும் பிரமிப்பும் அடைந்த சேனாதிபதிக்கு மன்னனின் கடைசி இரு உத்தரவுகள் பேரதிர்ச்சியை அளித்தன. ஆரம்ப உத்தரவுகளைக் கேட்டுக்கொண்டு கிளம்ப முயன்று அறைவாயிலை நோக்கி அடி எடுத்துவைத்த சேனாதிபதியை, “சேனாதிபதி!” என்ற மன்னன் குரல் சற்றே தடுத்ததால் அவன் மீண்டும் திரும்பினான் மன்னனை நோக்கி. மன்னன் சேனாதிபதியை வினவினான் சர்வ சாதாரணத்துடன், “நமது பெரிய ராணி பவனி போகும் வண்டி சரியாயிருக்கிறதா?” என்று.

சேனாதிபதியின் முகத்தில் குழப்பம் தெரிந்தது. “சரியாகத்தானிருக்கும். மன்னர் பவனி ரதமும் சரி; பட்டத்து ராணியார் வண்டி மட்டுமின்றி இளைய ராணியின் வண்டி கூட அடிக்கடி பழுது பார்க்கப் படுகின்றன. ஆகையால் சரியாகத்தானிருக்கும்,” என்று விடை கூறினான் சேனாதிபதி.

“அதை ஊகத்தில் விட வேண்டாம். அரண்மனை ரத வேலைக்காரர்களைக் கொண்டு சோதிக்கச் செய்யும். சரியாயில்லாவிட்டால் செப்பனிடச் செய்யும். எப்பொழு தும் பட்டத்து ராணி வண்டி நீண்ட பயணத்துக்குத் தகுதியுள்ளதாயிருக்கட்டும்,” என்று உத்தரவிட்டான் மன்னன்,

இந்த உத்தரவின் காரணத்தை உணராத சேனாதிபதி மேலும் குழப்பமே அடைந்தானென்றாலும் அதை வெளிக்குக் காட்டாமல், “சரி மன்னவா” என்று பதில் சொன்னான்.

“சாதாரணமாக பவனி வண்டியை இழுக்க அடக்கமாகச் செல்லும் புரவிகளைத்தான் கட்டுவது வழக்கம்” என்று சுட்டிக் காட்டினான் மன்னன்.

“ஆம்!” என்ற சேனாதிபதி மன்னனை நோக்கி விழித்தான்.

“அந்த வழக்கத்தை மாற்றிவிடும்,” என்றான் மன்னன் சாதாரணமாக.

“மன்னவா! சேனாதிபதியின் சொல்லில் வியப்பு மித மிஞ்சி நின்றது.

“என்ன சேனாதிபதி?” என்று வினவினான் மன்னன் – சேனாதிபதியின் வியப்பைக் கவனிக்காதது போல.

“பட்டத்து ராணியார் பவனியில், அதிக வண்டி யாட்டம் இல்லாமல் பவனி சொகுசாயிருப்பதற்கே அடக்கமான புரவிகள் அவ்வண்டியில் கட்டப்படுகின்றன,” என்று இழுத்தான் சேனாதிபதி.

“இது சொகுசுக்குக் காலமா?” என்று வினவிய வீரரவி யின் கேள்வியில் விஷமம் இருந்தது.

“இல்லை.”

“போர் தலைநகரை அநேகமாக நெருங்கிவிட்டது.”

“ஆம் மன்னவா!”

“ஆகவே ராணியின் பவனிக்கும் காலமில்லை.”

“இல்லை, இல்லை .”

“ஆகவே வேகமாகச் செல்லக்கூடிய புரவிகளை அந்த வண்டிக்கு ஏற்பாடு செய்து வையும். எந்த நேரத்திலும் இரவானாலும் சரி, பகலானாலும் சரி, அந்த வண்டி புறப்படத் தயாராயிருக்கட்டும். தவிர அதன் திரைச்சீலைகளை மாற்றி, நல்ல கெட்டித் திரைச்சீலைகளை அமைத்துவையும். அதைக் காவல் புரிந்து செல்ல நான்கு வீரர்கள் எப்பொழுதும் தயாராயிருக்கட்டும்.”

மன்னன் உத்தரவைக் கேட்ட சேனாதிபதி அதன் காரணத்தை உள்ளூரப் புரிந்து கொண்டதைக் காட்டும் பாவனையில், “மன்னர் சித்தம். தங்கள் உத்தரவுப்படி ஒரு போர்க் கப்பலைத் தனிப்பட நிறுத்தி வைக்கிறேன். அதை நோக்கிச் செல்ல பவனி வண்டியையும் சித்தமாக வைக்கிறேன். வண்டி செல்லவேண்டிய பாதையையும் நிர்ணயித்து வைக்கிறேன்” என்றான்.

மன்னன் இதழ்களில் புன்முறுவல் விரிந்தது. “சேனாதிபதி! நீர் மிகுந்த அறிவாளி” என்று பாராட்டி னான் அந்த முறுவலுடன்.

“மன்னருக்கு அது ஒரு நாள் புரியும் என்ற நம்பிக்கை உண்டு எனக்கு,” என்றான் சேனாதிபதி.

சேனாதிபதியின் குத்தலுக்குக் காரணம் மன்ன னுக்குப் புரிந்தேயிருந்தது. சிங்கணன் சேரர் படைகளுக்குத் தலைமை தாங்கிச் சென்றதை சேனாதிபதி சற்றும் பொறுக்காததால், சமயம் கிடைத்தபோதெல்லாம் அதைச் சுட்டிக் காட்டுகிறானென்பதைப் புரிந்து கொண்ட மன்னன் அதைப்பற்றி விளக்காமல், “சரி சேனாதிபதி! குருநாதர் எங்காவது போகவேண்டுமென்றால் எனது ரதத்தையே அவருக்குக் கொடுத்துவிடும்,” என்று மற்றோர் உத்தரவையும் பிறப்பித்து சேனாதிபதியை அனுப்பிவிட்டான்.

அந்த இரண்டாவது உத்தரவுக்கும் காரணத்தைப் புரிந்து கொண்ட சேனாதிபதி, ‘குருநாதருக்கு அரசன் சுதந்திரமளித்தாலும், படைகளை நடத்த அதிகாரமளித்தாலும், அவரை எப்பொழுதும் கண்காணிக்கவும் தனக்கு இஷ்டமானபோது அவரைக் கை கால் அசைக்கவொட்டா மல் செய்யவும் ஏற்பாடு செய்கிறான்,’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டே சென்றான். அப்படிச் சென்ற சேனாதிபதிக்கு ஒரு விஷயம் தெள்ளெனப் புரிந்திருந்தது. அரசன் அந்தச் சமயம் உள்ள விபரீத நிலைமையால் ஏதோ தனக்குச் சாதகமாயிருக்கிறானே தவிர தனது நிலையும் திடமானதல்லவென்று உணர்ந்திருந்தான் சேனாதிபதி. மன்னனுக்கு எதிலும் உள்ள சந்தேகம் தனது நடவடிக்கை களிலும் இருக்குமென்பதில் சற்றும் ஐயமில்லாததால் அதிகமாகப் பொறுப்பைக் கழிக்காமலும் அதிகமாகப் பொறுப்பை ஏற்காமலும் நடப்பதுதான் விவேகமென்பதைப் புரிந்து கொண்டான் சேனாதிபதி. இருப்பினும் அரசன் பிறப்பித்த இரகசிய உத்தரவுகள் எந்தக் கஷ்டத்தில் தன்னைக் கொண்டு போய்விடுமோ என்று திகைப்பே அடைந்தான் அவன். அரசன் மிகத் தந்திரமாகச் செய்துள்ள ஏற்பாடுகளைக் குருநாதர் புரிந்துகொண்டால் ஏற்படக்கூடிய விபரீதம் அவனுக்குத் தெரிந்திருந்தது. குரு நாதரும் அப்படியொன்றும் ஏமாந்தவரல்லவென்பதை உணர்ந்திருந்த சேனாதிபதி அரசனுக்கும் குருநாதருக்குமிடையில் தான் அகப்பட்டுக் கொண்டதை நினைத்துத் தனது விதியை நொந்து கொண்டான். ஆகையால் அந்தச் சிந்தனையிலும் கலக்கத்திலும் அச்சத்திலும் அன்று பொழுதைக் கழித்த சேனாதிபதிக்கு அடுத்த ஒருவார காலம் மன நிம்மதி ஏற்பட்டது.

மன நிம்மதி ஏற்பட்டது சேனாதிபதிக்கு மட்டுமல்ல, அரண்மனையில் வாழ்ந்த அனைவருக்குமே ஏற்பட்டது. மறுநாள் விடியற்காலையிலேயே எழுந்திருந்து காலைக் கடன்களையும் பூசையையும் முடித்துக் கொண்ட வீரரவி உதயமார்த்தாண்டவர்மன் முதலமைச்சரை வரவழைத்துத் தனது மந்திரலோசனை அவையில் சேனாதிபதி. கடற்படைத் தளபதி, குருநாதர் ஆகியவர்களையும் மற்ற மந்திரிகளையும் கூட்டுமாறு உத்தரவிட்டான். அரசன் உத்தரவை நிறைவேற்றச் சென்ற முதலமைச்சர் சுமார் அரை ஜாமத்துக்கெல்லாம் மன்னனைச் சந்தித்து “அனைவரும் தங்களுக்காகக் காத்திருக்கிறார்கள்,” என்று அறிவித்தார்.

முதலமைச்சர் தொடர, காவலர் கட்டியங்கூற, பெண் களிருவர் முன்னால் மலர் தூவ, தனது மேலிருந்து சரிகைத் தகடி தரையில் புரள, இடது கையில் வீரகங்கணம் பளபளக்க, நெற்றியில் தீட்டப்பட்டிருந்த சங்கு வடிவத் திலகம் போருக்கு அறைகூவ மந்திரா லோசனை அறையில் நுழைந்த சேரர் பெருமானைக் கண்டதும் அனைவரும் எழுந்து சிரம் தாழ்த்தினர். அவர்களுக்குப் பதில் வணக்கம் செய்து தனது ஆசனத்தில் அமர்ந்த வீரரவி மந்திராலோசனை சபையைக் கண்டு பூரித்தான். சபையில் சுமார் பத்துப் பேர்கள் தானி ருந்தார்களென்றாலும் அரசின் பத்துவித உறுப்புகளும் அவர்களில் விரிந்து நிற்பதை மன்னன் உணர்ந்தான். அந்தச் சபையிலிருந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு பணியில் சிறந்தவர்களென்பதை உணர்ந்த வீரரவி அந்தச் சமயத்தில் பாண்டியனிடம் உள்ளூர இருந்த பயத்தைக்கூட உதறி விட்டான். ஆகவே மற்றவர்களை அமரச் சொல்லிக் கையமர்த்தி சபை துவங்கலாமென்பதற்கு அறிகுறியாக – முதலமைச்சர்மீது கண்களைத் திருப்பினான். முதலமைச்சர் அரசனுக்குப் பின்னால் வெள்ளி மந்திர தண்டங்களுடன் நின்றிருந்த விருது கூறுவோரை நோக்கினான். அடுத்த விநாடி விருது கூறுவோர் கைகளைத் தண்டத்துடன் உயரக் கூப்பி சேரமன்னர்குல தெய்வச் செய்யுளை முணுமுணுத் தார்கள். பிறகு அரசனின் விருதுகளைக் கூறினார்கள். பிறகு அரசன் பின்னாலிருந்து விலகி அறை வாயிலை நோக்கிச் சென்றார்கள். அடுத்த நிமிடம் அறையின் பெருவாயிற் கதவுகள் சப்தமின்றிச் சாத்தப்பட்டன..

கதவுகள் மூடுவதற்கும் முதலமைச்சர் ஆசனத்தை விட்டு எழுவதற்கும் நேரம் சரியாயிருந்தது. “சேரர் குலச் செல்வர் வீரரவி உதயமார்த்தாண்டவர்மர் சபையில் கலந்துகொள்ள விரும்புகிறார். எதிரிகள் அணுக அஞ்சும் இப்பரலி மாநகரை பாண்டியன் படைகள் அணுக இருக் கின்றன. எதிரிக்கு அஞ்சும் நாடல்ல சேரநாடு. எதிரியைக் குறைத்து மதிப்பிடுவதும் இந்நாட்டு வழக்கமல்ல. எதிரி திறமைசாலி. தந்திரசாலியுங்கூட. அத்தகைய பாண்டிய சகோதரர்களை நாடு எதிர்க்க வேண்டியிருக்கிறது. அணுகி வரும் போரைக் கண்டு அஞ்சுவதோ பின்னடைவதோ இமயவரம்பன் குலத்தாரிடம் கிடையாது. அச்சம் என்பது சேரமக்கள் அறியாத சொல். ஆகவே போர்த் தந்திரங்களை நிர்ணயிக்க இந்தச் சபை கூடியிருக்கிறது,” என்று கூறி அமர்ந்தார்.

மன்னனின் கூரிய விழிகள் எதிரே அமர்ந்திருந்த சபையினரை ஒரு விநாடி துழாவின. பிறகு அவன் உதடுகள் தெளிவாகவும் கம்பீரமாகவும் சொற்களை உதிர்த்தன. “நம் நாடு போரைக் கண்டு நாளாகிறது. காரணம், எந்த நாட்டுடனும் நாம் போரை நாடாததுதான். ஆனால் நாம் போரைக் கண்டு அஞ்சுவோமென்று எந்த நாடாவது நினைத்தால் அதைப்போல் அறிவற்ற நினைப்பு எதுவுமில்லை. பாண்டியர்மீது நாம் போர் தொடுக்க வில்லை. பாண்டியர் நம்மீது போர் தொடுத்திருக்கிறார்கள் பாண்டியன் மகளை நாம் கொணர்ந்ததற்காகப் போர் என்று கூறப்படுகிறது. பெண்களைக் கொணர்ந்து ராக்ஷஸ விவாகம் புரிவது க்ஷத்திரிய தர்மம் என தர்மசாத்திரம் கூறுகிறது. பெண்ணை நாம் கொணர்ந்தது உலகத்தின் கண்களில் தவறாகப்படலாம். ஆனால் தர்மத்தின் கண்களுக்கு அது தவறல்ல. தவிர, ஏன் பாண்டியன் பெண்ணைக் கொணர்ந்தோம்? பாண்டியன் ரகசியமாகப் போருக்குச் சித்தமாகிக் கொண்டிருந்தான். முத்துக்களவில் நமக்குச் சம்பந்தமிருப்பதாகப் புரட்டுகளைக் கிளப்பினான். அதை முன்னிட்டு கொற்கைக்குத் தனது தம்பியையும் மகளையும் வேவுத் தொழில் புரிய அனுப்பினான். வேவுகாரர்களை, சேரர் மீது கண்காணிப்பவர்களை, பிடிப்பதும் தண்டிப்பதும் நமது கடமையாயிற்று. அவ்விருவரையும் கொற்கையிலேயே பிடிக்கப் பார்த்தோம். தந்திரத்தால் தப்பிவிட்டார்கள். பிறகு சேரநாட்டு எல்லையருகிலுள்ள கோட்டையில் ரகசியமாகத் தங்கிப் படை திரட்டினார்கள். அங்கு அவர்களைக் கண் காணித்து, நம் மீது வேவு பார்த்த அவர்கள் அரச குமாரியைத் தந்திரத்தால் கொணர்ந்தோம். அப்பொழுதாவது பாண்டியர்கள் விரோத பாவத்தைக் கைவிட்டுச் சமரசத்தை நாடியிருந்தால், வேவு பார்ப்பதை நிறுத்திக்கொண்டிருந்தால், நாம் அமைதிக்கரத்தை அவர்களுக்கு நீட்டியிருப்போம். ஆனால் அவர்கள் நாடியது சமரசமல்ல, போர். உடனடியாகப் போர் தொடங்கினார்கள். நமது தலைநகருக்குள் ஒற்றர்களை அனுப்பினார்கள். இன்னும் பாண்டிய ஒற்றர்கள் இங்கு உலாவுகிறார்கள். இந்த நிலையில் நாம் இத்தலைநகரைக் காப்பதைத் தவிர வேறு வழியில்லை . நமது கடற்படையில் பத்துப் போர்க் கப்பல்களை எதிரிகள் அழித்திருக்கிறார்கள். போரிலல்ல. திருடன் வீட்டைக் கொளுத்துவது போல கள்ளத்தனமாகக் கொளுத்தியிருக்கிறார்கள்” என்ற மன்னன் சிறிது நிதானித்தான்.

சபையில் சிறிது சலசலப்பு ஏற்பட்டது. ஆங்காரத் தொனிகள் கிளம்பின. அவற்றைக் கவனித்தும் கவனிக் காதது போல மன்னன் மேலும் சொன்னான்; “சேர நாடு யானைகள் பெருத்த நாடு. யானை சாதுவானது. ஆனால் . இதனுடன் விளையாடுவது ஆபத்து. நிதானமாக இயங்கு வது அதன் சுபாவம். ஆனால் நிதானம் மீறிவிட்டால் அதன் வேகத்துக்கும் கோபத்துக்கும் இணை கொடுக்க யாராலும் முடியாது. யானையைப் பாண்டியன் தூண்டுகிறான். அது இப்பொழுது சீற ஆரம்பித்துவிட்டது. இருப்பினும் அது நிதானத்தையும் தர்மத்தையும் இழக்க விரும்பவில்லை. ஆகவே முதலில் இந்தப் போரின் அஸ்திவாரத்தைத் தகர்க்க விரும்புகிறது.’

அரசன் மனத்தில் உதித்திருப்பது என்ன என்பது புரியாததால் மந்திரிகள் அவனைச் சற்றுக் குழப்பத்துடன் நோக்கினர்.
மன்னன் விளக்கினான் மெல்ல, “பாண்டிய மகளை நாம் கொணர்ந்தது தவறு, சிறை வைத்திருப்பது. தவறு என்று பாண்டியன் கூறுகிறான். வேவுகாரர்களைப் பிடிப்பதோ சிறை வைப்பதோ தவறில்லையென்பது என் கருத்தானாலும் குருநாதர் கருத்து வேறுவிதமாயிருக்கிறது அது அதர்மம் என்று நினைக்கிறார் குருநாதர் ஆகவே பாண்டியன் மகளை இன்று முதல் அவரிடம் ஒப்படைத்து விடுகிறேன். தவிர, இன்றுள்ள போர் நிலைமையைச் சமாளிப்பதிலும் அவர் யோசனைப்படி நடக்கத் தீர்மானித் திருக்கிறேன். இன்று முதல் படைகள் அவர் உத்தரவுப்படி இயங்கும்,” என்றான் மன்னன்.

முதலமைச்சர், குருநாதன், சேனாதிபதி இம்மூவரைத் தவிர மற்றவர் முகங்களில் வியப்பு விரிந்தது. அந்த வியப்புடன் சற்றுக் கோபமும் கொண்ட கடற்படைத் தளபதி ஆசனத்திலிருந்து எழுந்து, “குருநாதருக்குக் கடற்படைப் பயிற்சி உண்டா? போர்க்கப்பல்களை நடத்தத் தெரியுமா?” என்று வினவினான்.

மன்னன் பதிலுக்குக் குருநாதனை நோக்கினான் குரு நாதன் சின்னஞ்சிறு விழிகள் கடற்படைத் தலைவனை அலட்சியத்துடன் நோக்கின. “உமக்கு அவற்றில் பரிச்சய முண்டு போலிருக்கிறது.” என்று வினவினான் விஷமமாக.
“உண்டு. சின்னஞ்சிறு வயது முதற்கொண்டே கட லோடியிருக்கிறேன். இருபது ஆண்டுகளாகக் கடற்படைத் தளபதியாயிருக்கிறேன்,” என்றான் கடற்படைத் தளபதி.
“இருந்து நீர் சாதித்தது என்னவோ?” குருநாதன் குரலில் உணர்ச்சி ஏதும் தெரியவில்லை . ஆனால் கண்கள் விஷமத்தைச் சொட்டின.

“சாதனைக்குப் பட்டியல் தர அவசியமல்ல,” என்ற கடற்படைத் தலைவன் குரலில் சீற்றமிருந்தது.

“காரணம் தர அவசியமிருக்கிறது.”

“எதற்கு ?”

“பத்துப் போர்க் கப்பல்கள் எரிந்து போனதற்கு?”

“எதிர்பாராது நடந்தது.”

“அதில்தான் அதிகக் குற்றமிருக்கிறது.”

“நீங்கள் சொல்வது புரியவில்லை .”

“எதிரிக் கப்பல்கள் உமது படைமீது மோதி கப்பல்கள் எரிந்திருந்தால் அது போர் நஷ்டக்கணக்கு. எந்த எதிர்ப்பும் இல்லாதபோது எரிந்திருந்தால் அது கடற்படைத் தலைவன் அஜாக்கிரதை, அசிரத்தை. அஜாக்கிரதை மன்னிக்கத் தகுந்த குற்றமல்ல.”

கடற்படைத் தலைவன் கண்கள் நெருப்பைக் கக்கின. “நான் கலைத்துறையில் இல்லை . இது நடனமாடும் வேலையுமல்ல,” என்றான் மூர்க்கத்தனமாக.

“உண்மை. கலைக்கும் உமக்கும் சம்பந்தமில்லை ,” என்றான் குருநாதன்.

“இப்பொழுது புரிகிறதா உமக்கு?” என்று வினீவினான் கடற்படைத் தலைவன்.

“புரிகிறது. நன்றாகப் புரிகிறது.”

“என்ன புரிகிறது?” என்று வினவினான் கடற்படைத் தலைவன்.

“எந்தக் கலைக்கும் உனக்கும் சம்பந்தமில்லையென்று. போரும் ஒரு கலை,” என்று குருநாதன் விஷமப் புன்முறுவல் கோட்டினான்.

இந்தச் சொற்போரை நீடிக்கவிடாத மன்னன் இடைபுகுந்து, “நமக்குள் சண்டையிட இப்பொழுது அவகாச மில்லை. தலைநகரை எதிர்நோக்கி வரும் பகைவனைச் சமாளிக்கும் வழியைப் பற்றி யோசிப்போம். முதலில் குரு நாதர் யோசனை கூறட்டும்,” என்றான்.

குருநாதன் ஆசனத்தைவிட்டு எழுந்திருக்கவில்லை. உடனடியாக யோசனையும் கூறவில்லை. தீர்க்காலோசனையில் இறங்கி நீண்டநேரம் மௌனம் சாதித்தான். அந்த மௌனம் உடைந்தபோது சொற்கள் உதிர்ந்தன. தனது போர்த் திட்டத்தை மெள்ள மெள்ள விவரித்தான் பரத பட்டன. அந்தத் திட்டம் விரிய விரிய மன்னன் விழிகளும் மந்திரியின் விழிகளும் படைத்தலைவர்கள் விழிகளும் வியப்பால் மலர்ந்தன. ஒரு கட்டத்தில் அவர்கள் நெஞ்சம் கூடத் திடுக்கிட்டது. நெஞ்சம் அஞ்சும் திட்டத்தைத் தீட்டினான் பட்டன் அவர்கள் மனக்கண்களுக்கெதிரே.

Previous articleRaja Muthirai Part 2 Ch43 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Muthirai Part 2 Ch45 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here