Home Historical Novel Raja Muthirai Part 2 Ch49 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

Raja Muthirai Part 2 Ch49 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

61
0
Raja Muthirai Part 2 Ch49 Raja Muthirai Part 2 Sandilyan, Raja Muthirai Part 2 Online Free, Raja Muthirai Part 2PDF, Download Raja Muthirai Part 2 novel, Raja Muthirai Part 2 book, Raja Muthirai Part 2free, Raja Muthirai,Raja Muthirai Part 2 Story in tamil,Raja Muthirai Part 2 Story,Raja Muthirai Part 2 novel in tamil,Raja Muthirai Part 2 novel,Raja Muthirai Part 2 book,Raja Muthirai Part 2 book review,ராஜ முத்திரை ,ராஜ முத்திரை கதை,Raja Muthirai Part 2tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2full story,Raja Muthirai Part 2 novel full story,Raja Muthirai Part 2audiobook,Raja Muthirai Part 2audio book,Raja Muthirai Part 2full audiobook,Raja Muthirai Part 2full audio book,
Raja Muthirai Part 2 Ch49 | Raja Muthirai | TamilNovel.in

Raja Muthirai Part 2 Ch49 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

ராஜ முத்திரை இரண்டாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 49 கவசம்

Raja Muthirai Part 2 Ch49 | Raja Muthirai | TamilNovel.in

இந்திரபானுவின் முகநிலை கண்டதும் அவனிடம் தீரா விரோதம் கொண்டிருந்த வீரரவியின் இதயத்தில் கூட அனுதாபம் உண்டானதால் பல விநாடிகள் அம்முகத்தைப் பார்த்தது பார்த்தபடி நின்றுவிட்டான் அவன். அதிர்ச்சி யால் உள்ளமும் உடலும் ஒருங்கே உறைந்துவிட நின்று விட்ட மன்னனுக்கு, குருநாதன் பேச்சும் குரூரப் புன்முறுவ லும் வேப்பங்காயாயிருந்தது. ஒரு சிறந்த வீரனை இந்த நிலைக்குக் கொண்டு வந்த குருநாதன் ஒரு மனிதப் பிறவி தானா என்ற சந்தேகங்கூட மன்னன் இதயத்தில் எழுந்தது.

சிகிச்சை முடிந்து எழுந்த சமயத்தில் முதல் நாள் முகத்தை மூடியிருந்த துணியை எடுத்து விட்டிருந்த தால் மன்னன் மிகத் தெளிவாகப் பார்க்க முடிந்தது பாண்டியர் உபதலைவன் முகத்தை. அந்த முகத்தில் முன்பிருந்த பெரும் தழும்புகள் இல்லை. திட்டுத் திட்டாகத் தீப்புண் வடுக்கள் போலிருந்த விகாரங்கள் இல்லைதான். ஆனால் முகம் பூராவும் வெந்து தழும்பாகி விட்டதுபோல் பளபளப்புடன் காணப்பட்டது. தலைக்குழலிலிருந்து முகவாய்க் கட்டை வரை இருந்த சருமம் முழுவதும், கன்னங்களும் காதுகளின் ஒரு பகுதியும்கூட அடியோடு வெந்துபோன மாதிரி இருந்தது. அனைத்தையும் மறைத்தும் மறைக்காமலுமிருந்த பச்சிலைச் சாறு முகத்திற்கு அதிக பயங்கரத்தை அளித்தது. அந்த முகத்தை மீண்டும் மீண்டும் பார்த்த வீரரவி, “குருநாதரே! விரோதியிடம் நடந்து கொள்ளும் முறையில் கூட ஓரளவு தர்மம் இருக்க வேண்டும்” என்றான்.

சேர மன்னன் ரத்தத்தில் ஓடிய அந்தப் பரம்பரைப் பெரும் குணம் தலையெடுத்துவிட்டதைக் கண்ட குருநாதன் மகிழ்ச்சியடைந்தான். இருப்பினும் அதை வெளிக்குக் காட்டாமல் கேட்டான், “மறைவிலிருந்து வேலெறிந்து கொல்வதைவிட நான் செய்தது தர்மக் குறைவா?” என்று.

சேரமன்னன் நாசியிலிருந்து பெருமூச்சொன்று வெளிவந்தது. “அது அதர்மம்தான் குருநாதரே! ஆனால் நீர் இப்பொழுது செய்திருப்பதற்கு என்ன பெயர் சூட்டுவதென்றே எனக்குத் தெரியவில்லை,” என்று கூறிய மன்னன், ”குருநாதரே! இவனை விடுதலை செய்து வீர பாண்டியனிடம் அனுப்பிவிடுங்கள். அல்லது இவன் எங்கு செல்ல வேண்டுமென்று பிரியப்படுகிறானோ அங்கு அனுப்பி விடுங்கள். நீர் இன்று செய்திருப்பது சேர நாட்டுக்கே பெருத்த அவமானம்” என்று கூறிவிட்டு விடுவிடு என்று நடந்து அறையைவிட்டு அகன்றான்.

மன்னன் சென்றதும் குருநாதன் அறைக் கதவைச் சாத்திவிட்டுத் திரும்பிவந்து இந்திரபானு படுத்திருந்த மஞ்சத்தருகில் உட்கார்ந்துகொண்டான். “இந்திரபானு!” என்று மெள்ள அழைக்கவும் செய்தான்.

“என்ன குருநாதரே?”

“மன்னன் சொன்னது காதில் விழுந்ததா?”
“விழுந்தது.”

“நீ இனி எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்” என்றான் குருநாதன்.

“எங்கும் செல்ல விரும்பவில்லை,” என்று இந்திரபானு கூறினான்.

“ஏன்?”

“இப்பொழுது பல விஷயங்கள் புரிந்து விட்டன,” என்று இந்திரபானு, “நீங்களும் சேனாதிபதியும் நேற்றிரவு இங்கு வந்தபோது நான் உறங்கவில்லை,” என்று சுட்டியும் காட்டினான்.

இதைக் கேட்ட குருநாதன் முகத்தில் அச்சம் பெரிதும் ‘ விரிந்தது.

“அனைத்தும் கேட்டேன். உங்கள் திட்டமும் புரிந்தது. தற்காப்பைத் தளர்த்தி, நகர நிலைகாட்டி, முத்துக்குமரியை யும் முத்தையும் ஒப்படைத்து, பாண்டியன் படையெடுப்பை நிறுத்தப் பார்க்கிறீர்கள். அது முடியாவிட்டால்…” என்று இந்திரபானு நிதானித்தான்.

“முடியாவிட்டால்?”

“பாண்டியனை அழித்துவிட நீர் செய்திருக்கும் ஏற்பாட்டையும் புரிந்துகொண்டேன்.”

“அதைப்பற்றி நான் ஏதும் சேனாதிபதியிடம் சொல்ல வில்லையே?”

“குருநாதரே! நீர் பாண்டியனுக்குத் தயாரித்திருக்கும் பெரும் பள்ளம் எத்தன்மைய தென்பதை வாய் விட்டுச் சொல்லவில்லையென்பது உண்மைதான். ஆனால் நல்ல அறிவுள்ள எவனும் அதைப் புரிந்து கொள்ளமுடியும். ஒரு பக்கத்தில் மக்களுக்குச் சுதந்திரம் அளித்திருக்கிறீர்கள். மற்றொரு பக்கம் அதற்குப் பெரும் வேலியைக் கட்டியிருக்கிறீர்கள். இந்தப் பரலி மாநகரின் எல்லைக்குள் சுதந்திர மிருக்கிறது. ஆனால் எல்லைப் பகுதியை வளைத்துப் பெரும் காவலும், பெரும் அணிவகுப்பயும் இருக்கிறது. நீங்கள் சேனாதிபதியுடன் பேசியதிலிருந்து கிழக்குவாயில் முகப்புக்காட்டை அழிக்கச் சொன்ன காரணம் தெரிந்து கொண்டேன். கிழக்குக் கோட்டை மதிள்களில் விற்பொறிகள் வேற்பொறிகள் ஏற்றப்பட்டிருக்கின்றன. மதிளோரம் காலாட் படையும் குதிரைப் படையும் சஞ்சரிக்கின்றன. தென்பகுதியிலும், வடபகுதிகளிலும் படைப்பகுதிகளிலும் மலை உட்புகுந்த இடங்களிலும், கடற்கரை யோரப் பகுதிகளிலும் படைப் பகுதிகள் வரிசையாக உலாவுகின்றன. துறைமுகத்தில் கடற்படை தயாராக இருக்கிறது. உண்மையில் இந்த நகரைச் சுற்றிப் பெரிய படை வளையம் இருக்கிறது. அரைஜாமத்தில் அந்த வளையத்தை இறுக்கிவிட ஆங்காங்கு முக்கிய இடங்களில்

முரசுகளையும் வைத்திருக்கிறீர்கள். அரை ஜாமத்தில் இந்தத் தலைநகரில் கேளிக்கைகளை நிறுத்திவிடலாம். மக்களை இல்லங்களில் பதுங்கச் சொல்லலாம். தலை நகரைச் சுற்றிலும் உள்ள படைகள் நினைத்த மாத்திரத்தில் பல உள்வளையங்களை நிர்மாணித்துக் கொள்ளலாம். இதனால் வளையத்துக்குள் வளையமாகப் பல வளையங்கள் உள்ள பெரும் வியூகம் வெகு சீக்கிரமாக வகுக்கப்படும். அத்தகைய வியூகத்தைப் பாண்டிய சகோதரர்களின் சிறு படை உடைப்பது கஷ்டம்.

இதைச் சொல்லி முடித்த இந்திரபானு மேற்கொண்டு ஏதும் பேசாமல் மௌனம் சாதித்தான். குருநாதன் முகத் தில் அதிர்ச்சி மிக அதிகமாகத் தெரிந்தது. “இந்திரபானு! உன் முகத்தில் தடவிய பச்சிலைச்சாறு வேலை செய்கிறதா என்பதைப் பார்க்கவே நள்ளிரவில் வந்தேன். புறப்படும் போது என் அறைக்குச் சேனாதிபதியும் வந்ததால் அவனையும் அழைத்துவந்தேன். நீ உறங்குவதைப் பார்த்து சேனாதிபதியிடம் பேசிவிட்டேன்,” என்று கூறிய குருநாதன் பேச்சில் கவலை தொனித்தது.

அந்தக் கவலையைக் கவனித்த இந்திரபானு கேட்டான், “ஏன் கவலைப்படுகிறீர்கள் குருநாதரே?” என்று.

“நான் சேரநாட்டை நேசிக்கும் அளவுக்கு நீ பாண்டிய நாட்டை நேசிக்கிறாய் என்பது எனக்குத் தெரியும்,” என்றான் குருநாதன்.
“அதனாலென்ன?” என்று வினவினான் இந்திரபானு.

“எதிரியிடம் எனது பாதுகாப்பு ஏற்பாடு சிக்கி விடுவதைவிட ஆபத்து ஏதாவது உண்டா?” என்று கேட்டான் குருநாதன்.

“நான் எதிரியா?”

“ஆம். சேரநாட்டின் பகைவன் நீ.”

“அதைவிட வீரரவியின் பகைவன் என்று சொல்வது பொருந்தும் குருநாதரே.”

  "இப்பொழுது இரண்டும் ஒன்றுதான். வீரரவி அதர்மத்தின் வழியைக் கடைப்பிடித்தபோது அவனுக் கெதிராக மக்களுக்கு நானே ஓலை விடுத்தேன். ஆனால் இப்பொழுது வீரரவி பாண்டியன் மகளையும் என்னிடம் ஒப்படைத்துவிட்டான். உன்னையும் என்னிடம் ஒப்படைத்து விட்டான். அவனை நான் வெறுத்த காரணம் நீங்கி விட்டது." என்று விளக்கினான் குருநாதன்

இந்திரபானு மஞ்சத்தில் படுத்தபடியே தலையைத் தலையணையில் சற்று அசைத்துத் தான் புரிந்து கொண்டு விட்டதைத் தெரியப்படுத்தினான். அப்பொழுது குருநாதன் சொன்னான்: “நீ புரிந்து கொண்டது போல் சேனாதிபதியும் புரிந்து கொண்டிருந்தால் இப்பொழுதுள்ள நிலை தலைகீழாய் மாறும்.”

“ஏன்?” என்று கேட்டான் இந்திரபானு.

“என் போர் ஏற்பாடுகளின் சூட்சுமம் இதுவரை வீர ரவிக்குத் தெரியாது. அவன் சேனாதிபதிக்கும் தெரியாது. ஆனால் என் உத்தரவுகளின் மர்மத்தை சேனாதிபதி புரிந்து கொண்டு மன்னனிடம் சொல்லிவிட்டால் ஆபத்து இருக்கிறது.” என்றான் குருநாதர்.

இந்திரபானு இதற்குப் பதில் சொல்லவில்லை. “நான் எப்பொழுது கிளம்பலாம்?” என்று மட்டும் கேட்டான் குருநாதனை நோக்கி.

“எங்கு?” குருநாதன் கேள்வி.

“பாண்டிய மன்னனிடம்,” என்றான் இந்திரபானு.

“யார் உன்னை அனுப்பப் போவது “

“மன்னன் உத்தரவிடவில்லையா?”

“உத்தரவிட்டான்.”

“அதை நீங்கள் எதிர்க்க முடியுமா?”

“ஏன் முடியாது? மன்னன் உத்தரவு எதற்கு இதுவரை நான் பணிந்தேன்?”

“அப்படியானால் என்னைச் சிறை வைத்திருக்கத் தான் போகிறீர்களா?”

“ஆம்”

“என் முகத்தைத்தான் கெடுத்தீர்கள். கடமையையும் ஏன் கெடுக்கப் பார்க்கிறீர்கள்?”

பதிலுக்கு மெல்ல நகைத்தான் பரதபட்டன் வேறெதுவும் சொல்லாமல் அறையைவிட்டு அகன்றான். அதற்குப் பிறகு மூன்று நாட்கள் அந்த அறைக்கே வரவில்லை குருநாதன். அறைக் காவலையும் பலப்படுத்தி விட்டான். இதையெல்லாம் கவனித்த இந்திரபானுவின் இதயத்தில் கவலை ஏறிக்கொண்டு இருந்தது. எப்படிக் காவலிலிருந்து தப்பலாம் என்று யோசித்த வண்ணம் அந்த மூன்று நாட்களை ஓட்டினான். நான்காம் நாளிரவு பரதபட்டன் அந்த அறைக்குள் செம்பருத்திக் குழம்புடனும் இலவம்பஞ்சுடனும் நுழைந்தான். மீண்டும் இந்திர பானுவைப் படுக்க வைத்து அந்தக் குழம்பை முகத்தில் பஞ்சால் தடவித் துடைத்தான். பிறகு இந்திரபானுவின் முகத்தை நீண்ட நேரம் உற்று நோக்கினான். கடைசியாக “இப்படி வா” என்று இந்திரபானுவை அறைக் கோடியிலிருந்து விளக்கிடம் அழைத்துச் சென்று கையிலொரு தகளியைக் கொடுத்து, “முகத்தைப் பார்” என்றான்.

உற்று நோக்கினான் தகளியில் தெரிந்த முகத்தை இந்திரபானு . அவன் இதயம் விவரிக்க இயலாத உணர்ச்சி களால் தாக்குண்டது. கண்களைத் தகளியிலிருந்து அகற்றிக் குரு நாதனை ஏறிட்டு நோக்கினான். “இப்பொழுது சொல் நீ விடுதலையடைய விரும்புகிறாயா?” என்று வினவினான் குருநாதன். இந்திரபானு பதில் கூறவில்லை . குருநாதன் தனது கையிலிருந்த ஒரு பட்டுக் கவசத்தை எடுத்து இந்திர பானுவின் தலையோடு முகத்தையும் மூடினான். “சில நாட்களுக்கு இப்படியே இரு” என்று கூறிவிட்டு நடையும் கட்டினான் குருநாதன்.

தகளியில் முகத்தைக் கண்ட இந்திரபானுவின் இதயம் விவரணத்துக்கும் அப்பாற்பட்ட உணர்ச்சிகளால் தாக்கப்பட்டதால் குருநாதன் பட்டுக்கவசம் கொண்டு அவன் தலையையும் முகத்தையும் மூடியபோதும் அவன் ஆட்சேபிக்கவில்லை. “இப்படியே சில நாட்கள் இரு,” என்று உத்தரவிட்டபோது பதிலேதும் கூறவில்லை. பார்ப்பவர் யாரும் பரிகசிக்கக்கூடிய வீரர்கள் வெறுக்கக்கூடிய அந்தப்பட்டுக் கவசத்தை அணிந்து அடுத்த இரண்டு நாட்கள் அரண்மனைப் பகுதிகளில் உலாவவும் தொடங்கினான். காவலர் அவனைப் பார்த்து நகைத்தார்கள். அந்தப்புரச் சேடிகள் இகழ்ச்சிப் புன்முறுவல் கோட்டினார்கள். ரகசியத் தில் அதைப் பற்றிப் பலபடி கேலியும் செய்தார்கள். எந்த ரகசியமும் வெளியாவது போல் இந்திரபானுவின் பரிகாச நிலையும் முத்துக்குமரியின் காதுகளுக்கெட்டவே அவள் குறிஞ்சியை அழைத்து மெள்ள விசாரித்தாள்.

முதலில் விஷயத்தை மறைக்க முயன்ற குறிஞ்சி உண்மையை அவிழ்த்தாள். “ஆம் அம்மணி. அது உண்மை தான்,” என்று கூறினாள், வேதனையுடன்.
இதைக் கேட்ட முத்துக்குமரியை இதயம் சுக்குநூறாக வெடித்துவிடும் போலிருந்தாலும் அவள் அதை வெளிக்குக் காட்டவில்லை. அவள் முகத்தில் கம்பீரம் கலந்த வெறுப்பே தாண்டவமாடியது. வீரனுக்கு இகழ்ச்சியைவிட மரணம் பெரிதென்று நினைத்த பாண்டியகுமாரி அன்று பிற்பகலே இந்திரபானுவின் அறைக்குச் சென்று, “திறவுங்கள் கதவை” என்று சீறினாள்.

“யாரது?” என்ற குரல் கடுமையுடன் உள்ளிருந்து வந்தது.

“பாண்டியன் மகள்.” அரச கம்பீரத்துடன் பதில் கூறினாள் முத்துக்குமரி

“எதற்கு வந்தாய்?” இந்திரபானுவின் இந்தக் கேள்வியில் சீற்றமே இருந்தது.

“உங்கள் அழகைப் பார்க்க வந்தேன்.” வெறுப்பும் சினமும் கலந்த குரலில் பதில் கூறினாள் பாண்டியன் மகள்.

“பிறகு பார்க்கலாம்.”

“இல்லை. இப்பொழுதே பார்க்க வேண்டும்.”

“முடியாது.”

“ஏன்?”

“உன் அழகை நான் பார்க்க விரும்பவில்லை” என்ற இந்திரபானு நகைத்தான்.

முத்துக்குமரியின் கோபம் எல்லை கடந்தது. இத்தனை கேவல நிலையிலும் அவன் மிடுக்குப் போகாததைக் கண்டு “என்ன நகைக்கிறீர்கள்?” என்று கேட்டாள் ஆவேசத்துடன்.

“ஏன், நகைக்கக்கூடாதா?”

“உங்களைப் பார்த்துத்தான் பிறர் நகைக்கிறார்களே?”

“அவர்களைப் பார்த்து நான் நகைக்கிறேன்.” என்ற இந்திரபானு உள்ளிருந்து பயங்கரமாக நகைத்தான். பிசாசு நகைத்தால் இப்படித்தானிருக்குமென்று நினைத்தாள் முத்துக்குமரி. அதனால் வெகுண்டு, “சரி சரி, நான் போகிறேன். இரவில் சந்திக்கிறேன்,” என்று கூறிவிட்டுத் தடதடவென்று திரும்பிச் சென்றாள் அவள்.

அரண்மனையின் தாழ்வறையில் நடந்து சென்ற அவளை அவன் சிரிப்பின் எதிரொலி தொடர்ந்து வந்தது. ஒருவேளை இந்திரபானுவுக்குப் புத்தி பிசகிவிட்டதோ என்றுகூட நினைத்தாள் அவள். அந்த நினைப்புடன் தனது அறைக்கு வந்து படுத்தவள் அன்று உணவுகூட அருத்தவில்லை . எப்படியும் இரவில் அவனைச் சந்தித்து அவன் பட்டுக் கவசத்தைக் கிழித்தெறிவதென சபதம் செய்து கொண்டாள்.

இரவு அவனைச் சந்தித்தாள்; ஆனால் பட்டுக் கவசத் தைக் கிழிக்க முடியவில்லை ; அவள் சபதம் பலிக்கவில்லை . அவனையும் அவளையும் தாங்கிய பட்டத்து ராணியின் ரதம் காற்று வேகத்தில் பரலி மாநகரின் காட்டை ஊடுருவிச் சென்று கொண்டிருந்தது.

Previous articleRaja Muthirai Part 2 Ch48 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Muthirai Part 2 Ch50 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here