Home Historical Novel Raja Muthirai Part 2 Ch5 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

Raja Muthirai Part 2 Ch5 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

49
0
Raja Muthirai Part 2 Ch5 Raja Muthirai Part 2 Sandilyan, Raja Muthirai Part 2 Online Free, Raja Muthirai Part 2PDF, Download Raja Muthirai Part 2 novel, Raja Muthirai Part 2 book, Raja Muthirai Part 2free, Raja Muthirai,Raja Muthirai Part 2 Story in tamil,Raja Muthirai Part 2 Story,Raja Muthirai Part 2 novel in tamil,Raja Muthirai Part 2 novel,Raja Muthirai Part 2 book,Raja Muthirai Part 2 book review,ராஜ முத்திரை ,ராஜ முத்திரை கதை,Raja Muthirai Part 2tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2full story,Raja Muthirai Part 2 novel full story,Raja Muthirai Part 2audiobook,Raja Muthirai Part 2audio book,Raja Muthirai Part 2full audiobook,Raja Muthirai Part 2full audio book,
Raja Muthirai Part 2 Ch5 | Raja Muthirai | TamilNovel.in

Raja Muthirai Part 2 Ch5 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

ராஜ முத்திரை இரண்டாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 5 கண்மணி

Raja Muthirai Part 2 Ch5 | Raja Muthirai | TamilNovel.in

அந்த அர்த்த ஜாம வேளையில், கட்டுக் காவ லிருக்கும் அந்த தனி மாளிகையில், ஊர் பேர். தெரியாத அந்த வாலிபன், அதுவும் தன்னைக் காவல் செய்ய அரசனால் நியமிக்கப்பட்ட அடிமை, அத்தனை துணிவுடன் தன் கையைப் பற்றியதைக் கண்ட அந்தப் பெண் அச்சத்தையும் ஆச்சரியத்தையும் ஒருங்கே அடைந்தாளானாலும், இருந்த இடத்திலிருந்து நகரவோ, கையைத் திமிறவோ சக்தியற்றவளானாள்.

புதுக் காவலன் தலை நிமிரவுமில்லை . அவள் விழிகளைச் சந்திக்கவுமில்லை. ஆனால் குனிந்த நிலையிலும் தழும்புகள் பல தெரிந்த அவனுடைய விகார முகத்தின் பக்கப் பகுதிகள் அந்த அறை வாயிற்படிருகே எரிந்த விளக்கொளியில் மிகப் பயங்கரமாகத் தெரிந்தன. அதன் விளைவாக அச்சம், வியப்பு இந்த உணர்ச்சிகளுடன் அருவருப்பும் சேர்ந்து கொள்ளவே, அந்தப் பெண்ணின் உதடுகள் லேசாகத் துடித்தன. “உனக்கு என்ன துணி ” என்ற சொற்களும் மெல்ல உதிர்ந்தன சினத்துடன்.

வாலிபன் உடனடியாகப் பதிலும் சொல்லவில்லை. பற்றிய அவள் கையை விடவும் இல்லை . தனது கூர்விழிகளை எதிரேயிருந்த அடுத்த அடுக்கின் வாயிலை நோக்கிச் செலுத்தினான் சில விநாடிகள். பிறகு சர்வசாதாரணமாக, “எனக்குப் பின்னால் அப்படியே உட்கார்ந்துகொள்,” என்று கூறியதன்றி, பற்றியிருந்த அவள் கையைக் கீழ் நோக்கி இழுக்கவும் செய்தான்.

அவன் குரலில் மிகுந்த எச்சரிக்கை மட்டுமின்றி ஆணையிடும் தொனியுமிருந்ததையும், கையின் பிடியும் இரும்பாயிருந்ததையும் கவனித்த அந்தப் பெண் உடனே உட்கார மறுத்து, “நீ யாரென்பதை முதலில் சொல். நண்பனா, விரோதியா? வீரனா? அல்லது ஓர் அபலையின் நிராதரவை உபயோகப்படுத்திக் கொள்ள முயலும் கயவனா?” என்று வினவினாள்.

இதைக் கேட்ட வாலிபன் இதழ்களில் புன்முறுவல் தவழ்ந்தது. “கொஞ்சம் புத்தியிருந்து அதை உபயோகித்தால் நீ கேட்ட அனைத்துக்கும் விடையிருக்கும்,” என்று மெல்லக் கூறிய அந்த வாலிபன், “இதோ பார், விளக்கின் ஒளி உன்மீது தெளிவாக விழுகிறது. பேசாமல் என் பின் புறம் என் முதுகு அளிக்கும் நிழலில் உட்கார். இல்லையேல் அதோ என் முன்புறமிருக்கும் கதவின் காவலன் தனது காவல் நடையை நிறுத்திச் சற்று இப்புறம் திரும்பினால் நீ நின்றிருப்பதைக் கண்டு கொள்ள முடியும்,” என்று அவள் கையை கீழ்நோக்கி இழுக்கவும் செய்தான்.

அவன் சொன்னதில் அர்த்தமிருப்பதை அறிந்தாள் அந்த அழகி. அவன் சொற்படி அவனுக்குப் பின்னாலிருந்த நிழலில் உட்கார்ந்துகொண்டாள்.

அவள் அப்படி உட்கார்ந்ததும் புதுக் காவலன் அவள் கையை விடுதலை செய்தான். பிறகு அதே கையை நீட்டி அந்த அறையின் ஒரு கதவை ஒருக்கணிக்கவும் செய்தான். பிறகு வாயிற்படியில் நன்றாகச் சாய்ந்து கால்களை மடக்கிக் கொண்டு, “இப்பொழுது உன்மீது விளக்கொளி சிறிதும் படாது. என் உடலும் ஒருக்கணிக்கப்பட்ட கதவும் உன்னை அந்தகாரத்தில் ஆழ்த்திவிட்டன. இப்பொழுது நீ கேட்க வேண்டியதையெல்லாம் கேள். நாம் பேசிமுடிக்க இன்னும் ஒன்றைரை ஜாம காலம் இருக்கிறது. எல்லாவற்றையும் சவிஸ்தாரமாகப் பேசலாம்;” என்றான்.

அவன் பின்னாலமர்ந்திருந்த அந்தப் பெண் எதுவும் கேட்கவில்லை. அவனை; ஆயாசப் பெருமூச்சு மட்டும் விட்டாள். பிறகு மெள்ளச் சொன்னாள், “நான் கேட்க வேண்டியதை ஏற்கெனவே கேட்டுவிட்டேன்,” என்று.

“என்ன கேட்டாய்?” என்று வினவினான் வாலிபன் மீண்டும்.

அதுவரை பொறுமையைக் காட்டிய அவள் பொறுமையைத் திடீரென இழந்தாள். திரும்பத் திரும்ப அந்தப் புதுக்காவலன் தன்னை மட்டு மரியாதையின்றி, “நீ. நீ’ என்று அழைப்பதை எண்ணியதால் பொங்கிக் கொண்டிருந்த கோபத்தை நன்றாக வழியவிட்டு, “நீ வீரனாயிருந்தால் முதலில் மரியாதையைக் கற்றுக்கொள்,” என்று சீற்றம் ததும்பும் குரலில் கூறினாள்.
வாலிபன் பதிலுக்கு மெல்ல நகைத்தான். “சதிகாரர்களுக்குள் மரியாதை எதற்கு?” என்றும் வினவினான்.

அவள் ஏதோ சொல்ல வாயெடுத்தாள். பிறகு மௌனமே அடைந்தாள். தன் கதி அந்தப் புதுக் காவலன் கையிலிருப்பதை அவள் உணர்ந்தாள். இருப்பினும் சற்றுத் துணிவடைந்து, “எந்தச் சதியைப் பற்றிக் குறிப்பிடுகிறாய்?” என்று வினவினாள்.

“எதற்காகக் கூத்தனை அழைத்தாய்?” என்று கேட்டான் அந்த வாலிபன் பதிலுக்கு.

அவள் மெள்ளச் சமாளித்துக் கொள்ள முயன்று, “சதி செய்யத்தான் காவலனை அழைக்க வேண்டுமா?” என்று வினவினாள்.

. “காவலனை அழைக்கும் முறையைப் பொறுத்தது.” என்றான் வாலிபன்.

“என்ன முறை?”

”உள்ளிருந்தே ‘யாரங்கே?’ என்றழைப்பது ஒரு முறை…”

“உம்…”

“அது ஒரு தலைவி காவலனை அழைக்கும் அதிகார முறை.”

“உம்….’
“மன்னன் சென்றதும் மெள்ள அடிமேலடி எடுத்து வைத்துப் பூனை போல் நடந்து கதவைச் சிறிதும் சாத்தப்படாமல் திறந்து காவலன் முதுகில் விசிறியால் தட்டி, “கூத்தா! கூத்தா!’ என்று காவலனுக்கு மட்டும் கேட்கும் படி முணுமுணுப்பது ஒரு முறை ” என்ற அந்த வாலிபன் ‘கூத்தா கூத்தா’ என்று இரு சொற்களையும் அவள் குரலிலேயே உச்சரித்துக் காட்டினான்.

இதைக் கேட்ட பின்பு அவள் சில விநாடிகள் மௌனமாக இருந்தாள். பிறகு எழுந்திருக்க முயன்றாள். அவள் எழுந்திருக்க முயன்றதைத் தலையைச் சிறிதும் திரும்பாமல் லேசான அவள் அசைவிலிருந்தே புரிந்து கொண்ட அந்த வாலிபன், “பெண்ணே! உட்கார்ந்த இடத்தைவிட்டு நகராதே!” என்று எச்சரித்தான்.

அந்தக் குரலிலிருந்த அதிகாரத் தோரணை அவள் கோபத்தைக் கிளறினாலும், அதை அவள் வெளிக்குக் காட்டிக் கொள்ளாமல் பழையபடி சரியாக உட்கார்ந்து கொண்டு, “நகர்ந்தால் என்ன செய்வாய்?” என்று வினவினாள்.

“ஏதும் செய்யமாட்டேன், நடந்ததை மன்னனிடம் சொல்லுவேன்,” என்றான் வாலிபன்.

“அத்தனை கயவனா நீ?”

“சேர மன்னனிடம் ஊதியம் வாங்குகிறேன். அதற்குத் துரோகம் செய்ய முடியாது. துரோகம் செய்யவில்லையென வாக்கும் கொடுத்திருக்கிறேன். நானும் என்ன கூத்தனா, உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்வதற்கு?” என்று வினவினான் வாலிபன்.

இதைக் கேட்ட அந்தப் பெண் பெரும் கோபமடைந் திருக்க வேண்டும். “கூத்தனைப் பற்றிப் பேச உனக்கு என்ன யோக்கியதை இருக்கிறது? அபலையாக உன்னிடம் சிக்கியிருக்கும் பெண்ணை நீ நீ என்று கண்ணியமின்றி அழைக்கும் நீ எங்கே, கண்ணியத்தின் உருவான கூத்தன் எங்கே? அவன் கூத்தாடியாயிருந்தாலும் வீர உள்ளம் படைத்தவன்….” என்ற அவளை இடைமறித்த வாலிபன், “அதனால் தான் உங்களிடம் சிக்கிக்கொண்டான். உயிரிழக்க வும் இருந்தான்,” என்று முடித்தான்.

“என்ன! கூத்தன் உயிரிழக்க இருந்தானா?” என்ற அவள் சொற்களில் பயமும் இருந்தது. துக்கமும் இருந்தது.

“ஆம்.”

“ஏன், என்ன நடந்தது?”

“கூத்தனைச் சிறை செய்ய முயன்றார்கள். அவன் தப்பி யோடினான். அவன்மீது குறுவாள் வீசப்பட்டது…”

“அப்புறம்…அப்புறம்…”

“அப்படியும் தப்பிவிட்டான் அந்தத் துரோகி.”

“எப்படித் தப்பினான்?”

“இன்னொரு துரோகி அவனுக்கு உதவினான்.”

“அதெப்படி உனக்குத் தெரியும்?”

“உதவிய துரோகியை நேற்று சிறை செய்து கொட்டிலில் அடைத்திருந்தார்கள்.”

“அவனையும் கொன்று விட்டார்களா?”

“இல்லை, கொல்லவில்லை.”

அவள் சில விநாடிகள் மௌனம் சாதித்தாள். அவளிடமிருந்து ஆசுவாசப் பெருமூச்சு ஒன்றும் வெளி வந்தது. அந்தப் பெருமூச்சைக் கண்ட அந்த வாலிபன் மெல்ல நகைத்தான். அந்தச் சிரிப்பைக் கண்ட அவள் வேதனைப்பட்டுக் கேட்டாள், “நான் சிறையிலிருப்பவள். அனாதரவாயிருக்கிறேன். என் நிலைமை உனக்குச் சிரிப்பாயிருக்கிறதா?” என்று.

“சிறையிலிருப்பதை ஒப்புக் கொள்ளலாம். ஏனென்றால் காவலுக்கு நானே வந்திருக்கிறேன். ஆனால் நிராதரவாயிருப்பதை ஒப்புக் கொள்ள முடியாது.”

“ஏன்?”

“கூத்தன் உங்களுக்காக உயிரைக் கொடுக்கத் தயாராயிருந்திருக்கிறான். அது மட்டுமல்ல, அந்தக் கூத்தனை இன்னொருவன் தப்புவிக்கிறான். பிறகு அவன் சிறைப்பட்டாலும், வாயைத் திறக்க மறுக்கிறான். இன்னும் உன்னைக் காக்க எத்தனை பேரிருக்கிறார்களோ! வீரரவியின் தலைநகருக்குள்ளேயே இத்தனை சதிகாரர்களை உற்பத்தி செய்ய சக்தியுள்ள உன்னை எப்படி நிராதரவாயிருப்பதாக ஒப்புக் கொள்ள முடியும்?”

இதற்கு அவள் பதில் சொல்லவில்லை. வாலிபனின் அறிவையும் அவன் பேச்சு சாமர்த்தியத்தையும் வியந்தாள்.

சற்று யோசித்து விட்டுக் கேட்டாள், “அப்படியா னால் நீயும் எனக்கு உதவுவாயா?” என்று.

வாலிபனின் இதழ்களில் இளநகை அரும்பியது. “நானும் என்ன கூத்தனா?” என்று வினவினான் பதிலுக்கு.

அந்தப் பெண்ணும் மெல்ல நகைத்தாள். பிறகு கேட்டாள், “ஏன் இருக்க முடியாது!” என்று.

“என்ன?” வாலிபனின் கேள்வியில் வியப்பு ஒலித்தது..

“ஆம். நீ ஏன் கூத்தனைப் போலிருக்க முடியாது? நீயும் வீரன். பெண்ணைச் சிறையெடுப்பதை எந்த வீரனும் அனுமதிக்க முடியாது,” என்று துவங்கினாள் அவள்.

“உண்மை,” என்றான் வாலிபன்.

“ஆகவே அதர்மத்துக்கு எதிராக நடப்பது அதர்ப மல்ல.”
“உண்மை.”

“அது கடமை தவறியதும் ஆகாது.”

“கடமை காரியத்தைப் பொறுத்தல்லவே. பணி புரியும் இடத்தைப் பொறுத்தது.” என்றான் வாலிபன் மெள்ள.

“அல்ல, வீரனே, அல்ல, அலுவலையும் பொறுத்தது,’ என்ற அந்தப் பெண் குழையும் குரலில், “வீரனே, ஒரு நிராயுதபாணியைக் கொல்லென்று மன்னன் சொன்னால் நீ கொல்வாயா?” என்று வினவினாள்.

“குற்றம் புரிபவர்களை ஆயுதத்தைக் கொடுத்துப் போராடச் சொல்வதில்லை. திருடன், ஒற்றன், கொள்ளைக்காரன், ராஜத்துரோகி இவர்களை வெட்டுப் பாறையில் வைத்துத் தலையைச் சீவுவதுதான் வழக்கம்” என்று பதில் சொன்னான் வாலிபன்.

அந்தப் பெண்ணின் சித்தத்தில் சினம் பொங்கியது. நிராயுதபாணியைக் கொல்வது தர்மமல்லவென்று சுட்டிக் காட்டி, பிறகு பெண்ணைச் சிறை பிடிப்பது தர்மமல்ல வென்று விளக்கி, அவனைத் தன் பக்கம் இழுக்க முயன்ற அந்தப் பெண் அந்த வாலிபன் வேறு சான்று காட்டிக் கழன்று கொண்டதை எண்ணியதால் ஒரு விநாடி கோபம் கொண்டாலும் பிறகு அதை அடக்கிக்கொண்டு “பெண்ணைக் களவாடுவதும், சிறை பிடிப்பதும் தர்மமா?” என்று நேரிடையாகவே கேட்டாள்.

“அதுவும் சந்தர்ப்பத்தைப் பொறுத்தது. பெண் ணையும் பொறுத்தது,” என்றான் வாலிபன்.

“அப்படியா!” இகழ்ச்சி பெரிதும் ஒலித்தது குரலில்.

வாலிபன் விளக்கினான்: “எவ்வளவோ பேர் முறைப் பெண்ணைத் தாலிகட்டக் களவாடிக் கொண்டு போகிறார்கள். அதைத் தர்மம் அனுமதிக்கிறது. க்ஷத்திரியர்களிடையே காந்தருவ விவாகமும் அனுமதிக்கப்படுகிறது. ராட்சஸ விவாகமும் அனுமதிக்கப்படுகிறது. ஆண் பெண்ணை அபகரித்து வந்து விவாகம் செய்து கொள்வது ராட்சஸ விவாகம். ஆகவே க்ஷத்திரியர்கள் பெண்ணைக் களவாடுவது தவறல்ல. புராணத்தைப் பார். அர்ச்சுனன் எவ்வளவு பெண்களைக் களவாடியிருக்கிறான்? கண்ணன் ருக்மணியைக் களவாடவில்லையா? அபிமன்யு வத்ஸலையைக் களவாடவில்லையா?”

அந்தப் புராண விவரத்தைக் கேட்ட அந்தப் பெண்ணுக்கு என்ன சொல்வதென்று தெரியாததால் பல விநாடிகள் மலைத்து பிரமித்து உட்கார்ந்துவிட்டாள். பிறகு ‘கேட்டாள்: “இஷ்டமில்லாத பெண்ணைத் தூக்கிச் செல்வதும் சிறைவைப்பதும் எப்படி?” என்று.

அது அதர்மம்,” என்று வாலிபன் ஒப்புக்கொண் டான்.

“அந்த அதர்மத்தை எதிர்க்க உதவுவாயா?”

“உதவலாம்.”
“என்னை இஷ்ட விரோதமாகத் தூக்கி வந்திருக்கிறான் சேரமன்னன்.”

“அப்படியா?”

“ஆம் அதனால்தான் கூத்தன் எனக்கு உதவ முன் வந்தான்,”

“அது நியாயம்தான்.”

அந்தப் பெண்ணின் குரல் அடுத்தபடி மிகவும் குழைந்தது. “அப்படியானால் நீயும் உதவுவாயா?” என்று கரும்பினுமினிய குரலில் கேட்டாள்.

வாலிபன் சிறிது யோசித்தான். பிறகு, “சற்று இரு என்று சொல்லிவிட்டு எழுந்திருந்து அறை முன்பு இருந்த மண்டபத்தைக் கடந்து எதிரிலிருந்த அடுத்தக் கட்டு வாயிற்படிக்குச் சென்று உற்று நோக்கினான். அந்த வாயிற்படியின் காவலன் ஒரே சீராக நடை போட்டுக் காவல் புரிந்து கொண்டிருந்ததைக் கண்டதும் திருப்தியடைந்து மீண்டும் கடைக் கட்டு அறைக்கு வந்து தானும் உள்ளே சென்று ஒருக்களித்த கதவைப் பூரணமாக மூடிக் கொண்டான்.

அவன் செய்கையைக் கண்ட அந்தப் பெண் சரேலென எழுந்தாள். அறையின் உள் கோடியிலிருந்த விளக்கின் மிக மங்கலமான வெளிச்சத்திலும் அவள் கண்கள் பளபளத்தன. “என்ன இது, எதற்காகக் கதவைச் சாத்தினாய்?” என்று வினவினாள்.

“அடுத்த கட்டுக் கதவு இதற்கு நேராக இருக்கிறது. இங்கு நாம் பேசுவதை அங்குள்ள காவலன் திட்டமாகக் கவனிக்க முடியாவிட்டாலும் நமது பேச்சு அரைகுறை யாகக் காதில் விழலாம்,” என்று விளக்கிய வாலிபனின் கண்களில் காமக்கனல் வீசுவதைக் கண்ட அந்தப் பெண்ணின் கண்களில் கோபக் கனல் மண்டியது. “சொல்ல வேண்டியதைச் சொல்,” என்றாள் கல்லென உறுதிப்பட்ட குரலில்.

“உனக்கு உதவத் தயாராயிருக்கிறேன். ஆனால் பயனை எதிர்பாராமல் உதவும் உயர்ந்த குணம் எனக்கில்லை,” என்று கூறினான் வாலிபன்.

“என்ன பிரதிபலனை எதிர்பார்க்கிறாய்? பொன்னாமணியா? என்ன வேண்டும் உனக்கு?” என்று வினவினாள் அவள்.

“இரண்டும் வேண்டும்,” என்றான் வாலிபன்.

“எத்தனை பொன் வேண்டும்? மணியில் எது வேண்டும்? வைரமா, ரத்தினமா, முத்தா….?” என்று அடுக்கினாள் அவள்.

“பொன்னைப் பிறகு பெறுகிறேன், மணியை முதலில் கொடு,” என்றான் வாலிபன்.

அவள் கழுத்திலிருந்த ரத்தின ஹாரத்தைக் கழற்றப் போனாள், “அது வேண்டாம்,” என்று அவளைத் தடுத் தான் வாலிபன்.

“வேறெது வேண்டும், முத்தாரம் தரட்டுமா!” என்று அடுத்ததைக் கழற்றப் போனாள் அவள்.

வாலிபன் அவளை நெருங்கி மெல்லச் சொன்னான். “கழற்றும் மணிவகை எதுவுமே வேண்டாம்,” என்று.

அவள் அவனை நோக்கி விழித்தாள். “வேறென்ன வேண்டும்?” என்று வினவினாள் அச்சத்துடன்.

“கழற்ற முடியாத மணி, கழற்ற முடியாத பொன் இரண்டும் வேண்டும்,” என்ற வாலிபன் அவளை உற்று நோக்கினான்.

அந்தப் பெண் பெரும் சங்கடத்துக்குள்ளானாள். “அப்படியும் மணியும், பொன்னுமிருக்கிறதா? என்று வினவினாள்.

“இருக்கிறது,” என்றான் வாலிபன்.

“என்ன மணி அது?” என்று மார்பு படபடக்கக் கேட்டாள் அவள்.

வாலிபன் பதில் அவளை அப்படியே அயர வைத்தது. மிதமிஞ்சிய திகைப்பினால் அவள் சரீரமே உறைந்து போயிற்று.

“கண்மணி” என்று ஒரு வார்த்தை பதிலாக உதிர்ந்தது. அவன் உதடுகளிலிருந்து.
அது மட்டுமல்ல, அவள் கண்ணின் மணிகளை அவன் கூரிய விழிகள் ஊடுருவவும் செய்தன. அவன் கைகளிரண்டும் அவளை நோக்கிச் சென்றன.

Previous articleRaja Muthirai Part 2 Ch4 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Muthirai Part 2 Ch6 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here