Home Historical Novel Raja Muthirai Part 2 Ch51 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

Raja Muthirai Part 2 Ch51 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

57
0
Raja Muthirai Part 2 Ch51 Raja Muthirai Part 2 Sandilyan, Raja Muthirai Part 2 Online Free, Raja Muthirai Part 2PDF, Download Raja Muthirai Part 2 novel, Raja Muthirai Part 2 book, Raja Muthirai Part 2free, Raja Muthirai,Raja Muthirai Part 2 Story in tamil,Raja Muthirai Part 2 Story,Raja Muthirai Part 2 novel in tamil,Raja Muthirai Part 2 novel,Raja Muthirai Part 2 book,Raja Muthirai Part 2 book review,ராஜ முத்திரை ,ராஜ முத்திரை கதை,Raja Muthirai Part 2tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2full story,Raja Muthirai Part 2 novel full story,Raja Muthirai Part 2audiobook,Raja Muthirai Part 2audio book,Raja Muthirai Part 2full audiobook,Raja Muthirai Part 2full audio book,
Raja Muthirai Part 2 Ch51 | Raja Muthirai | TamilNovel.in

Raja Muthirai Part 2 Ch51 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

ராஜ முத்திரை இரண்டாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 51 செல்வியும் செல்வமும்

Raja Muthirai Part 2 Ch51 | Raja Muthirai | TamilNovel.in

வீரன் சொன்ன செய்தியால் அதிர்ச்சியேதும் அடையவில்லை பாண்டியன் மகள். அதிர்ச்சியை மீறிய நிலையில் எதுவும் பாதிக்காத மனப் பக்குவத்தில் இருந்தாள் அவள். ஆகவே, வீரன் சொன்ன பதிலைத் தொடர்ந்து ஆத்திரத்தையோ சினத்தையோ சிறிதும் காட்டாமல் தூரத்தே கடலில் ஆடி நின்ற மரக்கலத்தையும் கடற்கரையையும் மாறி மாறிப் பார்த்தாள்.

காட்டு முகப்பிலிருந்து கடற்கரை சற்றுத் தள்ளியே இருந்தாலும் வங்கக் கடல் பகுதியில் காணப்படுவதுபோல அங்கு முந்திரிக் காடோ வேறு காட்டு மரத் தோப்புகளோ மணற்பரப்பைத் தொடக்கூட இல்லாததைத் கவனித்த முத்துக்குமரி தனக்கு உதவி ஏதாவது வருவதாயிருந்தால் காட்டு முகப்பை ரதம் எட்டுவதற்குள் வந்திருக்கவேண்டு மென்றும் வெட்ட வெளியான மணற்பரப்பில் யாரும் வருவதோ, உதவுவதோ முடியாதென்றும் உணர்ந்து கொண்டாள். தவிர, தான் சொன்னபடி குறிஞ்சி தனது தகடியுடன் தாழ்வரை விளக்கில் நின்றிருந்தாலும் தன்னை மன்னன் உடனடியாக ரதத்தில் வேகமாக அனுப்பி விட்டதால் அவர்கள் உதவுவதாயிருந்தாலும் அதற்கு அவகாசமில்லையென்பதைப் புரிந்துகொண்டாள் முத்துக் குமரி. ஆகவே, நிர்க்கதியான நிலையில் கடற் பகுதியை உற்று நோக்கினாள்.

கடலின் அலைகள் சற்று அதிகமாகவே கொந்தளித்தால் தூரத்தே நின்ற போர்க்கலம் அதிகமாக ஆடிக் கொண்டிருந்தது. கரையோரமாக இழுத்துத் தளைகளில் பிணைக்கப்பட்டிருந்த இரண்டு படகுகளின் மீதும் கோபப்படுவனபோல் அலைகள் ஆத்திரத்துடன் வந்து அவற்றை அறைந்து கொண்டிருந்தன. சில சமயங்களில் அலைகள் பெரிதாகி நீர்ப்படகுகளின் அடியை ஊடுருவியதால் இரண்டு வினாடிகள் படகுகள் எழுந்து மிதந்து மீண்டும் மணலில் பதிந்தன. கடலின் கொந்தளிப்பும் மரக்கலத்தின் ஆட்டமும் தனது மனக் கொந்தளிப்பையும் ஆட்டத்தையும் போலவே இருப்பதைக் குமரி உணர்ந்தாள். படகுகள் தமிழகத்துத் தரையைவிட்டு அகல இஷ்டப்படாததைப் போலவே தன் மனமும் இஷ்டப்படவில்லையென்றும் குமரி அறிந்து கொண்டாள். இருப்பினும் சேரமான் ஆணையால் அந்தப் படகுகள் தளைகளிலிருந்து அவிழ்க்கப்பட்டுக் கடலோடிச் செல்லுமென்றும், அப்படியே தன் சிறைத்தளைகளை அவிழ்த்துவிட்ட சேரமான் ஆணை தன்னைப் போர்க் கப்பலில் ஏற்றிவிடத் தவறாதென்றும் புரிந்து கொண்டாள். அதன் விளைவாக அவளிடமிருந்து பெருமூச்சென்று வெளிக் கிளம்பியது.

இந்திரபானு வெறும் கல்லென உணர்ச்சியற்று நின்று கொண்டிருந்தான். கவசத்தின் துவாரங்கள் மூலம் பள பளத்த அவன் கண்கள் தூரத்தேயிருந்த படகுகளையும், படகுகளிருந்த இடத்திலிருந்து வந்து கொண்டிருந்த நாலைந்து மாலுமிகளையும் கவனித்துக் கொண்டி ருந்ததைப் பார்த்தாள் பாண்டிய குமாரி. அவன் இடைக் கச்சையில் அவன் வீரவாள் அப்பொழுதும் தொங்கிக் கொண்டிருந்தது. ஆயினும் அவன் அதை உபயோகப்படுத்த முயலும் அறிகுறி எதுவும் அவன் நின்றிருந்த தோரணையிலும் காணோம். அதைத் தவிர அவன் சேரமான் உத்தரவுக்கு இசைந்து விட்டவன் போலவும் தோன்றியது முத்துக்குமரிக்கு. அது உண்மையென்பதற்கு அத்தாட்சியும் அடுத்த வினாடி கிடைத்தது அவளுக்கு.

தன்னையும் அவளையும் காத்து நின்ற இரு வீரர்களை நோக்கிய இந்திரபானு. “ஏன்? எதற்காகக் காத்திருக்கிறோம்! போர்க்கலத்துக்குப் போகலாமே?” என்று கூறினான்.

    வீரர்களில் ஒருவன் சொன்னான், ''அதோ மாலுமிகள் வருகிறார்கள், வந்ததும் போகலாம்" என்று.

“மாலுமிகள் வரும்வரை நாம் காத்திருப்பானேன்?”

இந்தக் கேள்வி வீரர்களை வியப்பில் ஆழ்த்தியது. இந்திரபானு நடுவழியில் தப்பிச் செல்ல முயன்றால் என்ன செய்வது என்ற திகிலுடன் வந்திருந்த வீரர்களுக்கு அவன் தப்புவதற்கு எந்தவித ஆர்வத்தையும் காட்டாததே வியப்பாயிருந்தது. இந்திரபானுவின் வாள் திறனை அவர்கள் உணர்ந்திருந்ததால், அவனை வாளுடன் அனுப்புவதையே அவர்கள் முதலில் விரும்பவில்லை . ஆனால் சேனாதிபதி யின் உத்தரவு திட்டமாயிருந்தது. ரதத்தைத் தயார் செய்த பிறகு இந்திரபானுவை எந்தவிதத்திலும் அவர்கள் தொந்தரவு செய்யக் கூடாதென்றும் அவன் எப்படி வருகிறானோ அப்படியே கொண்டு போய்க் கடலில் சேர்க்க வேண்டியதென்றும் சேனாதிபதி திட்டமிட்டிருந் தான்.

”அவர் தப்பிச் செல்ல முயன்றால்?” என்று வினவினான் வீரனொருவன்.

“தப்பிச் செல்லமாட்டார்,” என்று திட்டமாகக் கூறினான் சேனாதிபதி.

ஆனால் வீரர்கள் நம்பவில்லை; தவிர மன்னன் நேரிடையாக வந்து முத்துக்குமரியை ரதத்தில் ஏற்றிய போது மன்னனை அதே கேள்வியைக் கேட்க அவர்களுக்குத் துணிவில்லை. ஆகவே மிகுந்த கிலியுடனேயே அவர்கள் ரத்தத்தில் வந்தார்கள். வழியில் எந்தவிதத் தொந்தரவும் இல்லாததே பெரும் இதமாயிருந்தது அவர்கள் இதயங்களுக்கு இறங்கிய பின்பும் இந்திரபானு எந்தவிதச் செயலிலும் இறங்காதது வியப்பாயிருந்தது அவர்களுக்கு. அவன் மரக்கலத்துக்குப் போகத் துடித்தது அந்த வியப்பை உச்சத்துக்குக் கொண்டு செல்லவே வீரனொருவன் ஏளனத்துடன் கேட்டான், சேர நாட்டிலிருந்து செல்ல அத்தனை துடிப்பா உங்களுக்கு?” என்று.

“ஆம்” என்றான் இந்திரபானு.

“மரக்கலம் எங்கு செல்கிறது தெரியுமா?” என்று வினவினான் மற்றொரு வீரன்.
“தெரியாது,” என்றான் இந்திரபானு.

“அறிந்து கொள்ள இஷ்டப்படவில்லையா?” என்று வினவினான் மற்றொரு வீரன்.

“இல்லை.”

“ஏன்?”

“சேரமான் எது செய்தாலும் நியாயமாகத்தான் * செய்வார்.”

இதைக் கேட்ட வீரன் மட்டுமல்ல, முத்துக்குமரியும் வியப்படைந்து இரண்டாம் முறையாக அவனை நோக்கினாள். “என்ன சொன்னீர்கள்” என்று வினவவும் செய்தாள்.

“மன்னர் எது செய்தாலும் நியாயமாகத்தான் செய்வாரென்றேன்” என்றான் இந்திரபானு சர்வசாதாரணமாக.

“சேரமான் நியாயத்தில் உங்களுக்கு அத்தனை நம்பிக்கையா?” என்று சீறினாள் முத்துக்குமரி.

“ஆம்,” என்று இந்திரபானுவின் பதில் திட்டமாக வெளிவந்தது.

“எத்தனை நாளாக இந்த நினைப்பபோ?”

“சில நாட்களாக.”

“நினைப்புக்குக் காரணம்?”

”மன்னன் நடந்துகொண்ட முறை, சொன்ன விஷயங்கள், செய்த காரியங்கள்.”

“மன்னர் பல விஷங்களை உங்களிடம் சொன்னாரோ?”

“என்னிடம் சொல்லவில்லை.”

“பிறரிடம் சொன்னாரோ?”

“ஆம்.”

“அது உங்களுக்குத் தெரிந்துவிட்டது.”

“ஆம்.”

“அதிலிருந்து உங்களுக்கு அவர் நியாயத்தில், தர்மத்தில் நம்பிக்கை பிறந்து விட்டது.”

“அது மட்டுமல்ல,” என்றான் இந்திரபானு மெள்ள.

“வேறென்ன?” என்று சீற்றம் ததும்பிய குரலில் கேட்டாள் குமரி.

“அவர் செயல்களிலும் நியாயமிருந்தது. சொன்ன வண்ணம் செய்தார்” என்றான் இந்திரபானு. அவன் குரலில் பெரும் பக்தியிருந்ததை முத்துக்குமரி மட்டுமின்றி வீரர்களும் கவனித்தார்கள்.
முத்துக்குமரியின் வெறுப்பு அதிகமாகிவிட்டதால் அவள் அதற்குமேல் பேசவில்லை. இந்திரபானுவை அந்தச் சமயத்தில் அடியோடு வெறுத்தாள் அவள். “நீங்கள் இத்தனை துரோகியென்று அடியோடு தெரியாது எனக்கு,” என்று கூறினாள் இதயம் வெடித்துக் கொண்டிருந்ததை உணர்த்தும் குரலில்.

“ஏற்கனவே இந்தப் பட்டத்தை அளித்திருக்கிறாய் நீ” என்றான் இந்திரபானு ஏளனம் ஒலித்த குரலில்.

“எப்பொழுது?” என்று கேட்டாள் குமரி.

“கொட்டுத்தளத்தை நினைத்துப் பார்,” என்றான் இந்திரபானு.

முத்துக்குமரியின் எண்ணங்கள் பழைய நிகழ்ச்சியில் சுழன்றன. கொட்டுந்தளத்தில் இந்திரபானு சேரன் பக்கம் சேர்ந்திருந்ததையும், பிறகு அவனே சேர நாட்டுக்கு அழைத்துச் செல்ல வீரரவியால் நியமிக்கப்பட்டதையும் நினைத்துப் பார்த்தாள். பிறகு அவனே பாதை மாற்றிக் காட்டுக்கோட்டைக்குத் தன்னையும் இளநங்கையையும் அழைத்துச் சென்றதையும் எண்ணிப் பார்த்தாள். இப்பொழுது அவன் செய்கை பழையபடி இருந்தது. ‘ஒருவேளை சேரன் பக்கம் சேர்ந்துவிட்டதுபோல் பாசாங்கு செய்கிறாரே இவர்? வேறு ஆழ்ந்த கருத்து ஏதாவது இருக்குமோ இவருக்கு’ என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள். ஆனால் இந்திரபானுவின் அடுத்த சொற்கள் அவள் ஊகம் தவறு என்பதை நிரூபித்தன.

“என் பழைய நிலைமை வேறு. இன்றைய நிலைமை வேறு அரசகுமாரி. அன்று கொட்டுத்தளத்தில் எனக்கு அழகு இருந்தது. ஆனால் இன்று முகத்தை வெளியில் காட்டக்கூடாத நிலையில் இருக்கிறேன். இந்த நாட்டை விட்டு என் முகமறியாத இடத்துக்குப் போவதுதான் என் வாழ்வுக்கு நல்லது. அதற்கு உதவும் மன்னனுக்கு நான் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறேன்” என்றான் இந்திரபானு.

அவன் சொற்களில் துயரம் தொனித்ததைக் கண்டாள் பாண்டியன் மகள். அவனுக்குக் குருநாதன் இழைத்தது பெரும் அநீதிதானென்பதை உணர்ந்து கொண்டாள். அதனால் பெருமூச்சும் விட்டாள்.

இந்திரபானுவும் அவள் அனுதாபத்தைக் கண்டான். அதன் விளைவாகச் சொன்னான், “அரசகுமாரி! இந்த அனுதாபத்திலிருந்து தப்பத்தான் நான் வெளிநாடு செல்லச் சம்மதித்தேன். என் முகத்தை அறியாத தேசத்திற்குச் சென்றுவிட நான் விரும்பியதை மன்னன் ஏற்றுக் கொண்டான். அவனுக்கு என் இதயம் நன்றி பாராட்டுகிறது. முன்பும் என் முகத்தை விகாரப்படுத்திக் கொண்டேன் முத்துக்குமரி. உன் பொருட்டு துணிந்து செய்தேன் அதை அப்பொழுது விகாரம் சிறிதளவுதான். என் ஜாடையை மறைப்பதற்கு வேண்டிய தழும்புகள் மட்டும் ஏற்படுத்தப்பட்டன. இன்று நிலைமை வேறு, பகலில் உலாவக் கூடாதநிலை. நான் ஏன் இந்த நாட்டைவிட்டு ஓடிவிட நினைக் கிறேனென்பது உனக்குத் தெரியாதா இப்பொழுது?” என்று.
நன்றாகப் புரிந்தது பாண்டியன் மகளுக்கு, மன முடைந்த நிலையில் தகாத செய்கையும் தகுந்த செய்கையாக இந்திரபானுவுக்குப் படுவதை அவள் உணர்ந்து கொண்டதால் மேற்கொண்டு ஏதும் பேசவில்லை அவள். இந்திரபானுவும் மௌனம் சாதித்தான். இந்த உரையாடல் முடிவதற்கும், மாலுமிகள் வருவதற்கும் சமயம் சரியாயிருக்கவே மாலுமிகளிடம் இந்திரபானுவையும் முத்துக்குமரியையும் வீரர்கள் ஒப்படைத்தனர். வந்த மாலுமிகள் மொத்தம் அறுவர். அவர்கள் பூர்ண ஆயுதங்கள் அணிந்தே வந்திருந்தார்கள். அவர்களில் சற்று உயரமாயிருந்தவன் கேட்டான் இந்திரபானுவை நோக்கி, “போகலாமா?” என்று.

“போகலாம். நீங்கள் கடற்படை உபதளபதியாயிருக்ககும் பட்சத்தில்” என்றான் இந்திரபானு.

அந்த மாலுமி தனது கச்சையிலிருந்து செப்புப் பட்டயம் ஒன்றை எடுத்து நீட்டினான் இந்திரபானுவிடம். இந்திரபானு அதை நிலவொளியில் பார்த்துவிட்டுத் திரும்பி மாலுமியிடம் கொடுத்துவிட்டுத் தன் கச்சையிலிருந்த வாளை அவிழ்த்து, “உபதளபதி! இதோ நான் உங்களிடம் அடைக்கலம்,” என்று அவனிடம் நீட்டினான்.

வாளைப் பெற்றுக்கொண்ட கடற்படை உபதளபதி ரதக்காவலரைத் திருப்பிச் செல்லும்படி பணித்துவிட்டு முத்துகுமரியையும் இந்திரபானுவையும் தன்னைத் தொடரும் படி சைகை செய்து முன் நடந்தான். உபதளபதி முன் செல்ல மற்ற மாலுமிகள் பின்தொடர நடந்த இந்திர பானுவும் முத்துக்குமரியும் படகுகளிருந்த இடத்துக்கு வந்தததும் உபதளபதி அவ்விருவரையும் தன்னுடைய படகில் ஏற்றிக் கொண்டு படகைக் கடலில் தள்ள இரு மாலுமிகளைப் பணித்தான். படகு கடல் அலைகளைச் சேர்ந்ததும், ”அரச குமாரி, பக்கப் பலகையைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள், இன்று அலை சற்று அதிகமாக இருக்கிறது” என்று எச்சரித்துவிட்டுத் தானே துடுப்புகளை நீரில் பாய்ச்சித் துழாவிப் படகைச் செலுத்தினான்.

எத்தனையோ கோர அலைகள் படகை நோக்கி வந்தும் படகை வெகுலாவகமாக அவற்றைத் தாண்டச் செய்த உபதளபதி தங்களுக்கு அதிக அவதியேதுமில்லாமல் படகை செலுத்தியதைக் கண்ட முத்துக்குமரிக்கு மன வேதனை பல இருந்தும் அந்தப் பயணம் சற்று அதிசயத்தை அளித்தது. மனிதன் லாவகம் கடலையும் வெற்றி கொள்வதை நினைத்து சிருஷ்டியையும் ஓரளவு வெற்றி கொள்ளும் மனிதன் திறத்தை நினைத்து நினைத்து வியந்தாள் அவள். மனிதன் மட்டும் இந்தச் சக்தியை நல்வழியில் உபயோகப்பபடுத்தினால் உலகத்தில் எத்தனை மகிழ்ச்சியிருக்கும் என்பதை நினைத்துப் பார்த்தாள் அவள். அந்தச் சக்தியையும் அளித்து ஆசாபாசங்களாகிற குறையையும் ஆண்டவன் அளித்ததற்கு ஏதோ மனித புத்தியால் உணர முடியாத காரணம் இருக்குமென்று தனக்குள் சொல்லிக் கொண்டாள் முத்துக்குமரி. இப்படிப்பலபடி எண்ணிக் கொண்டே மரக்கலத்தை அடைந்தாள்.
கப்பல் தளத்தில் முத்துக்குமரியுடன் நின்ற இந்திரபானு சுற்றுமுற்றும் நிலவொளியில் அழகாகவும் பயங்கரமாகவுமிருந்த மேற்றிசைக் கடலைக் கண்டான். குடக்கடலைச் சுற்றிலும் தொட்டுக்கொண்டிருந்த வானத்தையும் கண்டான். ஆனந்தப் பெருமூச்சொன்று அவளிடமிருந்து வெளிவந்தது. பிறகு தான் நின்று கொண்டிருந்த தளத்தைச் சுற்றிலும் கவனித்தான். சேர நாட்டின் பெரும் போர்க்கலமொன்றில் தானிருப்பதைப் புரிந்து கொண்டான். அந்தப் போர்கலத்தின் தளத்தின் கொடிகளிலும் பாய்மரத்தின் அடியிலும் பாய் விரிப்ப தற்குத் தயாராயிருந்ததையும் பார்த்தான். “அந்தப் படகு வந்ததும் கப்பல் பாய் விரித்தோடும்,” என்று உபதளபதி சுட்டிக் காட்டியபோது அவன் உணர்ச்சி ஏதும் காட்டாமல் தலையை மட்டும் அசைத்தான்.

அவர்களிருவரையும் மரக்கலத்தின் நடுப்பகுதிக்கு அழைத்துச் சென்ற உபதளபதி, “பாண்டியர் உபதலைவரே! இது போர்க் கப்பலாதலால் இதில் மரக்கலத் தலைவனுக்குத் தான் தனி அறை உண்டு. மாலுமிகளுக்குப் பொதுக் கூடந்தான். ஆகவே நீங்களிருவரும் என் அறையில் தான் தங்க வேண்டும்,” என்று கூறி மரக்கலத்தின் நடுவிலிருந்த தனது அறையைத் திறந்துவிட்டான். இருவரும் அறைக்குள் நுழைந்ததும் தானும் உடன் வந்து அங்கிருந்த விளக்கொன்றை ஏற்றிவிட்டு, “நீங்களிருங்கள்! நான் பாய் விரித்து மரக்கலத்தை ஓடவிட்டு வருகிறேன்,” என்று கூறிச் சென்றான்.

அவன் சென்றதும் கடற்காற்றில் சரேல் சரேலென்று மூடியும் திறந்து கொண்டுமிருந்த அறைக் கதவைத் தாளிட்ட இந்திரபானு அங்கிருந்த தலைவன் மஞ்சத்தில் சாய்ந்து கொண்டான். “ஏன், உட்கார்,” என்று முத்துக் குமரியையும் அழைத்தான்.

“வேண்டாம், நிற்கிறேன்,” என்ற அவளைத் திடீரென்று பெரிதாக ஆட்டங்கொடுத்த கப்பல் அவனை நோக்கித் தள்ளியது. அவன் கைகளில் விழுந்தாள் பாண்டியன் மகள். அவளை இறுகப் பிடித்த கைகளிலிருந்து அடுத்த விநாடி திமிறவும் முயன்றாள். அவன் கைகள் அவளை விடவில்லை.

“விடுங்கள் என்னை,” என்றாள் முத்துக்குமரி.

“முடியாது,” என்றான் இந்திரபானு.

“ஏன்?” என்று சீறினாள் அவள்.

“பாண்டியன் செல்வியையும் விடமுடியாது. பாண்டியன் செல்வத்தையும் விடமுடியாது,” என்றான் இந்திரபானு.

என்ன உளறுகிறீர்கள்?” என்று திமிறினாள் அவள்.

“உளறவில்லை. இந்த மரக்கலத்தில் பயணம் செய்வது நீயும் நானும் மட்டுமல்ல,” என்றான் இந்திரபானு.

“வேறு யார் பயணம் செய்கிறார்கள்?”

“எது என்று கேள்?”

“எது?”

“பாண்டிய நாட்டு முத்தும் பயணம் செல்கிறது. முத்து நிரம்பிய மூன்று பெட்டிகள், கொற்கையின் களவு போன பெரும் செல்வம் நம்முடன் வருகிறது,” என்று இந்திரபானு நகைத்தான் மெல்ல.

நகைத்தது அவன் மட்டுமல்ல. அதே நேரத்தில் அரண்மனையிலிருந்த வீரரவியும் நகைத்துக் கொண்டு தானிருந்தான்.

Previous articleRaja Muthirai Part 2 Ch50 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Muthirai Part 2 Ch52 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here