Home Historical Novel Raja Muthirai Part 2 Ch53 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

Raja Muthirai Part 2 Ch53 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

54
0
Raja Muthirai Part 2 Ch53 Raja Muthirai Part 2 Sandilyan, Raja Muthirai Part 2 Online Free, Raja Muthirai Part 2PDF, Download Raja Muthirai Part 2 novel, Raja Muthirai Part 2 book, Raja Muthirai Part 2free, Raja Muthirai,Raja Muthirai Part 2 Story in tamil,Raja Muthirai Part 2 Story,Raja Muthirai Part 2 novel in tamil,Raja Muthirai Part 2 novel,Raja Muthirai Part 2 book,Raja Muthirai Part 2 book review,ராஜ முத்திரை ,ராஜ முத்திரை கதை,Raja Muthirai Part 2tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2full story,Raja Muthirai Part 2 novel full story,Raja Muthirai Part 2audiobook,Raja Muthirai Part 2audio book,Raja Muthirai Part 2full audiobook,Raja Muthirai Part 2full audio book,
Raja Muthirai Part 2 Ch53 | Raja Muthirai | TamilNovel.in

Raja Muthirai Part 2 Ch53 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

ராஜ முத்திரை இரண்டாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 53 போர் ஏற்பாடுகள்

Raja Muthirai Part 2 Ch53 | Raja Muthirai | TamilNovel.in

சேரமானான வீரரவி உதய மார்த்தாண்டவர்மன், குருநாதன் முகத்தில் துலங்கிய வெறுப்புக் குறியாலோ எச்சரிக்கையும் இகழ்ச்சியும் நிரம்பிய சுடுசொற்களாலோ சிறிதும் கலங்கவில்லை . வீரர்கள் பரதபட்டனைச் சிறைக் கூடத்திற்கு அழைத்துச் சென்ற பிறகு பக்கத்தில் நின்ற சேனாதிபதியை நோக்கி, “வேடன் வலையில் சிக்கிக் கொள்ளும் பறவைகள் கூட இப்படித்தான் காது துளைக்கக் கத்துகின்றன!” என்று அலட்சியத்துடன் கூறிப் புன் முறுவல் கோட்டினான். ஆனால் சேனாதிபதிக்கு மன்னனுக்கிருந்த துணிவு இல்லாததால், “குருநாதர் ஏதோராமவர்மரைப் பற்றிக் குறிப்பிட்டாரே,” என்று வினவினான் சிறிது அச்சத்துடன்.

சேனாதிபதியின் குரலிலிருந்து அச்சத்தைக் கவனித்த வீரரவியின் புன்முறுவல் அவன் அழகிய இதழ்களில் நன்றாக விரிந்தது. “ராமவர்மன் உனது உபசேனாதிபதி தானே?” என்று வினவினான் சர்வசாதாரணமாக.

“ஆம் மன்னவா” என்று பதில் கூறினான் சேனாதிபதி.

“அவர் திறமையற்றவன் அல்ல” என்றான் மன்னன் மீண்டும்.

“அல்ல.”

“நாட்டுப்பற்று அதிகமுள்ளவன்.”

“நாட்டுக்காகவும், மன்னனுக்காகவும் எந்தத் தியாகமும் செய்யத் தயங்கமாட்டான்.”

”ஒருவேளை கோட்டாற்றுக்கரை போர் நமக்கு எதிராக முடிந்திருந்தாலும் அதற்காக ராமவர்மனை நாம் வெறுக்கவா போகிறோம்?”

“இல்லை.”

“ஆகையால் அவன் வரட்டும் பார்ப்போம். வந்தபின் சொல்வதையும் கேட்போம். வீரபாண்டியனின் போர் முறைகளை நேரில் கண்டவன் கொண்டுவரும் செய்தி நமக்கும் படிப்பினையாயிருக்கும்,” என்று சுட்டிக் காட்டினான் மன்னன்.

“ஆம் ஆம்” என்று சேனாதிபதியும் ஒப்புக் கொண்டான்.

வீரரவி அத்துடன் சேனாதிபதியைக் கூர்ந்து நோக்கி, “சேனாதிபதி! கோட்டாற்றுக்கரை போர் வெற்றியில்லாமல் நமது படை பின்வாங்கி வந்தாலும் நகரின் படைபலம் பெருகத்தான் செய்யும். இங்கு தலைநகருக்குள்ளே வீர பாண்டியனிடம் நட்புக் காட்டி நமக்கு உபதேசம் செய்து கொண்டிருந்த புல்லுருவி குருநாதரைச் சிறையிலடைத்து விட்டோம். பாண்டியர் உபதலைவனான இந்திர பானுவையும் சிங்களத்துக்கு அனுப்பிவிட்டோம். எந்த முத்துக்குவியலுக்காகவும், மகளுக்காகவும் பாண்டிய சகோதரர்கள் போர் தொடுத்திருக்கிறார்களோ அந்த முத்தும் சரி, முத்துக்குமரியும் சரி சிங்களத்தை நோக்கிப் பயணம் செய்வதற்கு ஏற்பாடு செய்துவிட்டோம். தவிர குருநாதன் மிகத் தந்திரத்துடன் பாண்டிய வீரர்களை அழிக்கச் செய்த திட்டமும் நம் வசம் சிக்கிவிட்டது. இனி அச்சத்திற்குக் காரணம் ஏதுமில்லை ,” என்று கூறி அவனுக்குத் துணிவையும் ஊட்டினான் மன்னன்.

மன்னனின் அத்தனை உறுதியும் சேனாதிபதிக்கு நம்பிக்கையளிக்க மறுத்தது. ஆகவே சற்றுத் தயங்கவே செய்தான் சேரர் படைத்தலைவன்.

அவன் தயக்கத்தைக் கண்ட மன்னன், “தயக்கம் வெற்றியைத் தருவதில்லை. வீரர்கள் சாவுக்கும் அஞ்சுவதில்லை ,” என்றான் சற்று எரிச்சலுடன்.

“நான் சாவுக்கஞ்சவில்லை மன்னவா! இத்தலை நகரின் நலத்துக்கு அஞ்சுகிறேன்,” என்றான் சேனாதிபதி.

“சேனாதிபதி!” சற்று உக்கிரத்துடன் எழுந்தது அரசன் குரல்.

“மன்னவா!”

“எதிரியின் படைபலம் எத்தனை தெரியுமா?”

“நமது படைபலத்தில் ஐந்திலொரு பகுதிதான்.”

“அந்தச் சொற்பப் படையை வைத்துக்கொண்டு போரில் அவன் என்ன செய்யமுடியும்?”

இதைக் கேட்ட சேனாதிபதி மெள்ள, “அவன் கோட்டாற்றுக்கரையில் என்ன செய்து தொலைத்தானோ தெரியவில்லையே,” என்றான் லேசாக விஷமத்தைக் காட்டி.

சேனாதிபதியின் குத்தலை வீரரவி நன்றாகப் புரிந்து கொண்டான். “அங்கும் பாண்டியன் படைபலம் மிகக் குறைவுதானே என்கிறாயா?” என்று வினவினான்.

‘ஆம்.”

“அங்கு மாத்திரம் எப்படி அவன் நமது பெரும் படையை முறியடித்தானென்று வியக்கிறாய்!”

“ஆம்.”

“முறிடியத்தானென்பது என்ன நிச்சயம்?”

“நிச்சயமில்லை.”

“அப்படியா? முறியடித்திருந்தாலும் ஒரு வித்தியாசமிருக்கிறது.”

“என்ன வித்தியாசமோ?”

“அங்கு வீரபாண்டியனை எதிர்நோக்கியவன் சிங்கணன்…” என்று சுட்டிக் காட்டினான் மன்னன்.
“இங்கு தாங்கள் போலிருக்கிறது?” என்றான் சேனாதிபதி சற்று விஷமமாக.

“தந்திரம் என்று வந்துவிட்டால் வீரரவியும் சளைத்தவனல் “

“இது போர் விஷயம்.”

“அதிலும் என் தந்திரத்தைச் சீக்கிரம் புரிந்து கொள்வாய். நிம்மதியுடன் போய்வா. குருநாதர் இந்திர பானுவையும், முத்துக்குமரியையும் மறைத்துவிட்டதாகவும் அதற்காக அவர் சிறை செய்யப்பட்டிருப்பதாகவும் செய்தியை நகரத்தில் பரப்பு,” என்று கூறிய மன்னன் அவன் செல்லலாமென்பதற்கு அறிகுறியாகக் கையை அசைத்தான்.

அன்றும் மறுநாளும் மன்னன் மிகுந்த குதூகலத்துடன் காணப்பட்டான். அடிக்கடி ரதத்தில் சென்று கடற்கரைப் பகுதியையும் கிழக்கிலிருந்து மலைப்பகுதிப் போர் ஏற்பாடுகளையும் தானே நேரிடையாகக் கவனித்தான். நகரமெங்கும் மக்கள் சர்வ சுதந்திரத்துடன் உலாவுவதையும் குதூகலத்துடனிருப்பதையும் கண்டான். அந்தக் குதூகலத்திற்குச் சிறிதும் இடைஞ்சலேற்படாத வகையில் பரலிமாநகர்க் காவல் ஏற்பாடுகளையும் உபசேனாதிபதிகளையும், கடற்படைத் தளபதி, உபதளபதி இவர்களை இருமுறை வரவழைத்து நகரக் காவலுக்கான திட்டங்களையும் விளக்கினான். ஐயாயிரம் குதிரைப் படையினர் மேற்குக் கோட்டைமதிள் நெடுக நான்கு பிரிவுகளாகப் பிரித்து நிற்கட்டும். குருநாதன் இடையிடையே வைத்துள்ள முரசுகள் முழங்கியதும் அவை கிழக்கு வாயில் வழியாக வெளியே செல்லட்டும். குதிரைப் படைக்கும் முன்பாகக் காலாட்படை நிற்கட்டும். அவர்கள் வில் வளைத்து நாணேற்றி முன் செல்ல, குதிரைப்படை அவர்களைத் தொடரும். வெளியே சென்றதும் இரு படைகளும் சக்கிர வியூகமாக வளைந்து மூன்று பிரிவுகளாகப் பிரிந்து மூன்று வழிகளில் முன்னேறும் இடையே எப்பொழுது எதிரி வந்தாலும் பிரிந்த படைகள் ஒன்று சேர்ந்து அர்த்த சந்திர வடிவத்தில் கொடுவானைப் போல் ‘எதிரியை நெருங்கும்,” என்று கூறிய மன்னன் கடற்கரைப் பகுதியைப் பற்றியும் கூறினான். “கடற்கரைப் பகுதியில் கப்பல்கள் மீது விற்கூடங்கள் இருக்கட்டும். குருநாதர் எதிர் பார்ப்பதுபோல் வீரபாண்டியன் படை கடற்கரையோரப் பாதையில் வந்தால் – வெளிக் கிராமங்களிலிருந்து வரும் மக்களை முதலில் அவன் முன்பு சாரி சாரியாகத் தள்ளுங்கள். சாதாரண மக்களைக் கண்டு அவன் குழம்பும் போது நமது மரக்கலங்களில் உள்ள காலாட் படையினர் படகுகளில் இறங்கி வந்து வீரபாண்டியன் பின்புறத்தைத் தாக்கட்டும். அவன் பின்புறம் திரும்பினால் சாதாரண மக்கள் கடற்கரைப் பாதையை விட்டுக் கடலோரம் சென்று விடுவார்கள்.. அப்பொழுது நாம் அவனை வடக்கு வாசல் மூலமாகத் தாக்குவோம். இப்படி இரு படைகளுக்கிடையில் வீரபாண்டியன் சிக்கிக் கொள்வான்,” என்று தனது போர்த்திட்டத்தை விவரித்தான்.

இதற்கு யாரும் எந்தவித ஆட்சேபனையும் சொல்ல வில்லை. சேனாதிபதி மட்டும் ஒரு கேள்வி கேட்டான், “கடற்கரைப் பாதையிலுள்ள சாதாரணக் குடிமக்கள் நாம் நினைக்கிறபடி நகர முடியுமா? படைகள் நகருவதற்குக் கொம்பூதும் அடையாளங்கள் உண்டு ,” என்றான்.

“அவர்களை இன்று முதல் படைகளைப்போல் நடத்தப் பழக்குங்கள்,” என்றான் மன்னன்.

“அப்படியானால்….” என்று இழுத்தான் ஓர் உப சேனாதிபதி.

அந்த உபசேனாதிபதியை மன்னன் உற்று நோக்கினான் சில விநாடிகள். பிறகு கூறினான்: “நமது முன்பு எதிரி நிற்கிறான். இந்தத் தலைநகர் வீழ்ந்தால் அரசு வீழ்ந்தது. அரசு வீழ்ந்தால் மக்களின் கதி அதோகதி. ஆகவே மக்களும் இப்போரில் சம்பந்தப்பட்டவர்கள். அவர்களையும் படைவீரர்களைப் போல் பழக்க ஏற்பாடு செய்யுங்கள்.”

சேனாதிபதியும் சரி, கடற்படைத் தலைவனும் சரி, இதர உபசேனாதிபதிகளும் மன்னன் எண்ணத்தைச் சந்தேகமறப் புரிந்து கொண்டார்கள். “மக்களைக் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வருவதென்றால், படை முறையில் அவர்களை இயங்கச் செய்வதென்றால், அவர்களிடம் படைத் தலைவர்கள் அபரிமிதக் கண்டிப்புக் காட்டும்படி யாயிருக்கும். அதனால் மக்கள் கசப்பு அதிகரிக்கும்,” என்று நினைத்தார்கள்.
அவர்கள் நினைப்பை மன்னனும் உணர்ந்தான். ”மக்களைக் காக்க மக்களுக்குச் சில கஷ்டங்களை விளைவிப்பது அவசியம். குழந்தையைக் காக்க முற்படும் மருத்துவன் குழந்தைக்கு மருந்து இனிக்குமா என்று யோசிப்பதில்லை,” என்றான் முடிவாக. அத்துடன் அந்த மந்திராலோசனை கலைந்தது. மறுநாள் முதல் பரலிமாநகரின் கடலோரங்களில் மக்கள் அடுத்து வரும் போருக்கு ஆயுத்தம் செய்யப்பட்டார்கள். உபசேனாதி பதிகள் புரவி வீரர்களைக் கொண்டு அவர்களைக் கூடவும் பிரியவும் கடற்கரை நோக்கி ஓடவும் பயிற்சியளிக்கத் தொடங்கினார்கள். எரிபரந்தெடுத்தல் கொள்ளையில் வீடு வாசல்களைவிட்டு ஓடிவந்து தலைநகரில் அடைக்கலம் புகுந்த அந்த மக்கள் முதலில் முணுமுணுத்தார்கள். பிறகு வேறு வழியின்றிப் படைத்தலைவர்கள் சொற்படி ஆடினார்கள். காலையிலும் மாலையிலும் கிராம மக்கள் குழந்தை குட்டிகளுடன் இரண்டு மூன்று முறை கூட்டமாக நடந்தும் பிரிந்தும் அல்லாடினார்கள், அலுத்தார்கள். ஓய்வு பெற்ற வேளைகளில் மன்னனைச் சபிக்கவும் செய்தார்கள்.

இதற்கெல்லாம் வீரரவி மசியவில்லை. போர்க் காலத்தில் சில கஷ்டங்களும், அநீதிகளும் தவிர்க்க முடியாதவை என்று எண்ணினான். நகரப் பாதுகாப்பை தனது இரும்புக் கரத்தால் மிகப் பலமாகச் செய்தான். நகரம் படையின் அரணுக்குள் பிடிபட்டுக் கிடந்தது. கோட்டை மதிள்களில் விற்பொறிகளும் வேற்பொறிகளும் மறைந்து கிடந்தன. ஆங்காங்கு தீ நாக்குகளைத் துருத்திக் காட்டி எரிந்து கொண்டிருந்த பந்தங்கள் மேற்குத் தொடர்ச்சி மலையை ஊடுருவிப் பார்த்துக் கொண்டிருந்தன. படை எந்த நிமிஷத்திலும் முன்னேறத் தயாராயிருந்தது.

இந்த ஏற்பாடுகளைக் கண்டு பூரித்தான் வீரரவி. எப்படியும் தனது பெரும் படைபலத்தால் பாண்டியனை அழித்து விடலாம் என்று திடமனத்துடனிருந்தான். ஆகவே குருநாதன் சொன்னதுபோல் ராமவர்மன் கொண்டுவந்த பயங்கரச் செய்தியும் அவனுக்கு எத்தகைய மன உளைச்சலையும் அளிக்கவில்லை.

குருநாதன் சொன்னதுபோல் ராமவர்மன் மறுநாள் வரவில்லை. இரண்டு நாள் கழித்தே வந்தான். வந்தவன் பெருந்திகில் அளிக்கும் பயங்கரச் செய்தியைக் கொண்டு வந்தான்.

Previous articleRaja Muthirai Part 2 Ch52 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Muthirai Part 2 Ch54 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here