Home Historical Novel Raja Muthirai Part 2 Ch57 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

Raja Muthirai Part 2 Ch57 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

62
0
Raja Muthirai Part 2 Ch57 Raja Muthirai Part 2 Sandilyan, Raja Muthirai Part 2 Online Free, Raja Muthirai Part 2PDF, Download Raja Muthirai Part 2 novel, Raja Muthirai Part 2 book, Raja Muthirai Part 2free, Raja Muthirai,Raja Muthirai Part 2 Story in tamil,Raja Muthirai Part 2 Story,Raja Muthirai Part 2 novel in tamil,Raja Muthirai Part 2 novel,Raja Muthirai Part 2 book,Raja Muthirai Part 2 book review,ராஜ முத்திரை ,ராஜ முத்திரை கதை,Raja Muthirai Part 2tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2full story,Raja Muthirai Part 2 novel full story,Raja Muthirai Part 2audiobook,Raja Muthirai Part 2audio book,Raja Muthirai Part 2full audiobook,Raja Muthirai Part 2full audio book,
Raja Muthirai Part 2 Ch57 | Raja Muthirai | TamilNovel.in

Raja Muthirai Part 2 Ch57 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

ராஜ முத்திரை இரண்டாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 57 இயற்கையின் உக்கிரம்

Raja Muthirai Part 2 Ch57 | Raja Muthirai | TamilNovel.in

பரலி மாநகரின் தலைவிதியை நிர்ணயித்துவிட்ட பயங்கரச் செய்தியைச் சொல்லப் பாண்டிய இளவரசன் பாசறையைப் பாவை குறிஞ்சி எய்திய சமயத்தில், போருக்கான எவ்விதக் கெடுபிடியோ சிந்தனையோ இல்லாமல் இளவரசன் இளநங்கையுடன் சிரித்துச் சல்லாபம் செய்து கொண்டிருந்ததை வெளியிலிருந்தே உணர்ந்த பணிப்பெண் சற்று நிதானித்து, பாசறையின் புறப்பகுதியைச் சுற்றுமுற்றும் நோக்கினாள். இளவரசனிருந்த இடத்துக்கும் சுற்றுமுற்றுமிருந்த குடிசைகளுக்கும் பெருவித்தியாசமிருந்தது. ரசிகனுக்கும் மற்றவர்களுக்கு முள்ள வித்தியாசம் தான் அது.

நான்கு நாட்களுக்கு முன்பு தான் வந்தபோதிருந்த கூடாரத்தில் இளவரசனில்லை என்பதையும், தனக்காக ஒரு புது விடுதியை அமைத்துக் கொண்டிருக்கிறானென்பதையும் புரிந்து கொண்டாள் பணிப்பெண் குறிஞ்சி. பெரிதாக வளர்ந்திருந்தாலும் கிளைகள் தழைத்துக் கிடந்த மருதமரத்தின்கீழ் இளவரசன் தனது குடிலை நிர்மாணித் திருந்ததன்றி, அதன் கூரைக்காகக் கூடாரத் துணியேதும் கட்டாமல் மருதமரத்தின் தழையடர்ந்த கிளைகளையே வளைத்தும், ஒன்றுக்கொன்று குறுக்கே செல்லும்படி பின்னியும், அர்த்த சந்திர வடிவத்தில் கூரையும் அமைத்திருந்ததையும் கவனித்தாள் குறிஞ்சி குடிலைச் சுற்றிலும் பெருங்கிளைகள் நடப்பட்டு சுவர்களுக்குப் பதில் வேலியையே சுவர்களாக அமைத்திருந்ததையும், அந்தக் குடிலின் வாயிலிலிருந்த ஈட்டிப் பந்தங்கள் குடிலின் சுவர்களாக விளங்கிய பச்சைமரக் கிளைகளிலிருந்து சற்று எட்டவே நடப்பட்டிருந்ததையும் கவனித்த குறிஞ்சி, அதன் காரணத்தையும் புரிந்து கொண்டாள். பச்சை மரக்கிளைகளினருகே பந்த ஜ்வாலை பட்டால் இலைகள் கருகும் என்பதற்காகவே வீரபாண்டியன் பந்தங்களைத் தள்ளி நட்டிருக்கிறானென்பதை உணர்ந்து கொண்ட குறிஞ்சி, பச்சை மரத்தினிடமும் பரிவு காட்டும் இந்த இளவரசனை எதற்காகப் போருக்கிழுக்கிறான் சேர மன்னன்?’ என்று தனக்குத்தானே கேட்டுக் கொண்டாள். பிறகு சுற்றிலும் சற்றே தள்ளித் தள்ளி நாலைந்து பேர்களாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த வீரர்கள் கூட்டத்தையும், தூர தூரக் கட்டப்பட்டிருந்த துணைப் படைத் தலைவர்கள் குடிசைகளையும், பாறை உச்சிகளில் ஆங்காங்கு வேலும் கையுமாகக் காவல் புரிந்து சதா தூரத்தே தெரிந்த பரலி மாநகரைக் கவனித்துக் கொண்டிருந்த வீரர்களையும், ஆங்காங்கே மரங்களில் கட்டப்பட்டுக் கனைத்துக் கொண்டிருந்த புரவிகளையும் கண்ட குறிஞ்சி, பாண்டியர் படை எந்த நேரத்திலும் போருக்குத் தயாராயிருப்பதைப் புரிந்து கொண்டாள். இளவரசன் குடிலிலிருந்து நன்றாக எட்டத் தள்ளியிருந்த சுந்தரபாண்டியன் கூடாரத்தின் தலையிலிருந்த மீன்கொடி பரலி மாநகரை விழுங்கத் துடிப்பது போல் காற்றில் படப்படத்துக் கொண்டிருந்தது. பரலி மாநகரின் பிரதான கிழக்கு வாயிலுக்கெதிரேயிருந்த பாண்டிய மன்னன் பாசறை எப்பொழுது வீரபாண்டியனிருந்த வடக் கெல்லைக்கு வந்தது? ஏன் வந்தது என்பது புரியவில்லை பணிப்பெண்ணுக்கு. இப்படிப் பல யோசனைகளில் மூழ்கி நேரங்கடத்திவிட்ட பணிப்பெண்ணின் சிந்தனையை உள்ளே கலீரென எழுந்த வீரபாண்டியன் சிரிப்பொலி கலைத்துவிட அவள், “இளவரசே! இளவரசே!” என்று இருமுறை அழைத்தாள்.

உள்ளே சிரிப்பொலி சட்டென்று அடங்கியது. “யார் அது?” என்ற வீரபாண்டியன் குரல் அதட்டலுடன் எழுந்தது.

“குறிஞ்சி” என்று சற்றே இரைந்தே சொன்னாள் மருத்துவப் பெண்.

அடுத்த விநாடி பாசறையின் கதவாகப் பணியாற்றிய சிறிய தட்டி திறக்க, குறிஞ்சி உள்ளே நுழைந்தாள். நுழைந்ததும் மிகவும் தர்மசங்கடமான நிலையில் தான் உட்புகுந்துவிட்டதை உணர்ந்ததால் முறுவலும் காட்டி னாள் விஜயவர்மன் மகள். கீழேயிருந்த புலித் தோலில் உதிர்ந்து கிடந்த இரண்டொரு மலர்களிலிருந்து இளநங்கை அவசரமாக எழுந்து உட்கார்ந்திருக்கிறாளென்பதையும், அவள் உட்கார்ந்திருந்த இடத்துக்கருகில் இளவரசன் தகடி நீண்டு கிடந்ததிலிருந்து அதை எடுத்துத் தோள்மேல் போட்டுக் கொள்ளக்கூட வீரபாண்டியனுக்கு அவகாசமில்லால் போய்விட்டதையும் ஒரே நோக்கில் அறிந்தாள் பணிப்பெண். அந்தக் குடிசைக் கோடியிலிருந்த சிறு விளக்கும் நன்றாக இழுக்கப்ட்டிருந்ததால் மங்கலான ஒளியை வீசிக் கொண்டிருந்தாலும், சந்திரனும் மேலே பயிருந்து ஓரிரு ஒளிக்கதிர்களை வளைக்கப்பட்டிருந்த மருதமரக்கிளைகள் வழியாக உள்ளே செலுத்தியிருந்ததால் அவசியமான மனோகரமான வெளிச்சம் அறைக்குள் இருந்ததையும் கண்டாள் குறிஞ்சி. தன் வரவால் திடீரென எழுந்துவிட்ட இளநங்கை தன் ஆடையைச் சரிப்படுத்திக் கொள்ள அவகாசம் கொடுத்த குறிஞ்சி வீரபாண்டியனையும் நோக்கி, குடிசை மேலிருந்த கிளைகளையும் நோக்கினான்.

அவள் கண்கள் போன திக்கைப் பார்த்தவீர பாண்டியன், “என்ன பார்க்கிறாய் குறிஞ்சி?” என்று வினவினான்.

“பாசறை மாறிவிட்டதே என்று பார்த்தேன்,” என்றாள் குறிஞ்சி.

“ஆம். துணிக்கூடாரம் பிடிக்கவில்லை குறிஞ்சி! ஆகவே மருதமரத்தின் கிளைகளையே கூரையாக்கிக் கொண்டேன்.” என்றான் வீரபாண்டியன்.

“ஆம். படைத்தலைவரே, படுத்திருக்கும் போது வானி லிருந்து மதியின் வெள்ளிக் கம்பிகள் உடல் மீது விழும். தவிர மருதமலர்களும் கொட்டும்.” என்றாள் பணிப்பெண். அவள் அப்படிச் சொல்லிக் கொண்டிருக்கையில் இரண்டு மூன்று குயில்கள் இன்பமாகக் கூவவே, “இது வேறா?” என்றும் கேட்டாள் அவள்.
“ஆம் குறிஞ்சி. இந்த மரக்கிளைகள் மீது மாதவிக் கொடியொன்றும் ஓடிக் கொண்டிருந்தது. அதைக் கெடுக்காமல் அதையும் சேர்த்துக் கூரையை வளைத்து விட்டேன்,” என்றான் வீரபாண்டியன்.

“மேலே மாதவிப்பந்தலா?” என்று வினவினாள் குறிஞ்சி நகைத்து.

“ஆம் குறிஞ்சி. அதனால் தான் இந்த மரத்தின் கீழ் குடிலை அமைத்தேன்,” என்றான் வீரபாண்டியன்.

“அதனாலென்ன உபயோகமோ?” என்று மீண்டும் கேட்டாள் குறிஞ்சி.

“குறிஞ்சி! மாதவிப்பந்தல் மேல்தான் குயில்கள் அதிகமாக வசிக்கும். அதன் மேல் இருக்கும் போதுதான் அடிக்கடி இனிமையாகக் கூவும்,” என்றான் வீரபாண்டியன்.

“மேலே இசையிருக்கிறது. மதி இருக்கிறான். மலர்களும் இருக்கின்றன. கீழே என்ன இருக்கிறது படைத் தலைவரே?” என்று வினவினாள் குறிஞ்சி.

“அத்தனையும் கலந்த ஒன்று இருக்கிறது” என்ற வீர பாண்டியன், சற்று எட்டத் தள்ளி உட்கார்ந்து விட்ட இளநங்கையை நோக்கினான்.

குறிஞ்சி நகைத்தாள். ” அதுமட்டுமில்லையே வீரபாண்டியரே” என்று கூறவும் செய்தாள்.

“வேறென்ன குறிஞ்சி?”

“உக்கிரமும் இருக்கிறதே!”

“உக்கிரமா?”

“ஆம். புலித்தோலில்லையா?”:

“ஆமாம் குறிஞ்சி ஆமாம்.”

“என்ன ஆமாம்?”

“இயற்கை விளையாட்டில்….”

“என்ன படைத்தலைவரே?”

“உக்கிரமும் கலந்து விடுகிறது.”

குறிஞ்சிக்கே வெட்கம் தாங்கமுடியவில்லை. இளநங்கை சுடும் விழிகளுடன் அவ்விருவரையும் பார்த்தாள். குறிஞ்சி சற்றே கடிந்தே சொன்னாள், “படைத்தலைவரே! நீங்கள் மகாமோசம்” என்று.

இளவரசன் ஏதுமறியாதது போல் அவளை நோக்கினான். “என்ன குறிஞ்சி?” என்றும் கேட்டான்.

“முறை தவறிப் பேசுகிறீர்கள். நீங்கள் பேசுவது பெண்கள் முன்னிலையில் பேசக் கூடிய பேச்சல்ல” என்று தரையை நோக்கிக் கொண்டே சொன்னாள்.

“என்ன சொல்லி விட்டேன்? எனக்கேதும் புரிய வில்லையே?” என்றான் இளவரசன்.
“உக்கிரம் அது இதுவென்று…” என்றாள் பணிப்பெண்.

“இந்த மருதக் கிளைகளைப் பார் குறிஞ்சி” என்று தலைமேலிருந்த கூரையைச் சுட்டிக் காட்டினான் இளவரசன்.

தரையிலிருந்த கண்களை கூரைமீது நாட்டிய குறிஞ்சி, அவற்றுக்கென்ன?” என்று வினவினாள்.

“முரட்டுக் கிளைகள் ” என்று சுட்டிக்காட்டினான் வீரபாண்டியன்.

“ஆம்.”

“காற்று வேகமாக அடிக்கும் போது கிளைகள் ஒன்றுக் கொன்று உராய்கின்றன உக்கிரமாக”

“அதற்கென்ன?”

“உணர்ச்சியும் காற்றைப்போல்தான்.”

“அப்படியா?”

“ஆம். சிலசமயம் வேகமாக அடிக்கிறது. சில சமயம் மந்தப்படுகிறது.”

இளவரசன். இதைச் சொல்லி இளநகை கோட்டினான். இளநங்கை நெருப்பு விழிகளை இருவர் மீதும் திருப்பினாள். “உங்கள் இருவருக்கும் வெட்கமில்லை?” என்று வினவினாள் சுடுசொற்களால்.
“எதற்கு வெட்கம் இளநங்கை?” என்று வினவினான் இளவரசன்.

“எதற்கு வெட்கமா?” ஆத்திரத்துடன் எழுந்தது அடுத்த கேள்வி இளநங்கையிடமிருந்து.

“ஆம். வெட்கம் எதற்கு? நாங்கள் இயற்கையை விவாதிக்கிறோம்” என்ற இளவரசன், “இல்லையா குறிஞ்சி” என்று குறிஞ்சியை நோக்கிக் கேட்டான்.

“ஆம்…” என்று இழுத்தாள் குறிஞ்சி.

“என்ன குறிஞ்சி இழுக்கிறாய்?” என்று கேட்டான் இளவரசன்.

“ஒன்றுமில்லை. நீங்கள்….”

“நான் என்ன?”

“இயற்கையைப் பற்றி நீங்கள் என்னுடன் பேசியதை விட…”

“இளநங்கையுடன் பேசியிருக்கவேண்டுமென்கிறாயா”

“ஆம்.”

“ஏன்?”

“அதில் பலனுண்டு.”

“ஏன் உன்னிடம் பேசினால் பலனில்லையா?”

இதைக் கேட்ட குறிஞ்சி, “படைத்தலைவரே!” என்று சீறினாள்.

“என்ன குறிஞ்சி?”

“உமக்குப் பேச்சுத் திறமையும் போய்விட்டது.”

“போய்விட்டதா?”

“ஆம். அர்த்தம் தெரியாமல் பேசுகிறீர்கள்.”

“என்ன அப்படிப் பேசிவிட்டேன்?”

“நான் போன பிறகு உபதளபதியைக் கேளுங்கள்.”

“நீ இருக்கும் பொழுது கேட்டாலென்ன?”

“உபதளபதி பதில் சொல்லமாட்டார்.”

“போன பிறகு?”

“பதில் சொல்வார்.”

“வாயைத் திறவாவிட்டால்?”

“வேறு விதத்தில் பதில் சொல்லுவார்.”

இந்த இடத்தில் மீண்டும் இரைந்து ஒலித்தது இளநங்கையின் குரல். “குறிஞ்சி!” என்று.
“அம்மணி?”

“சொல்ல வந்ததைச் சொல்லிவிட்டுப் போ.”

“அதைச் சொல்லவிடவில்லையே படைதலைவர்.” இம்முறை இளநங்கை வீரபாண்டியனை நோக்கி, “வீண் வார்த்தை பேசாமல் அவள் சொல்ல வந்ததைக் கேளுங்கள் ” என்றாள்.

“அதைக் காலையில் கேட்போமே இளநங்கை” என்றாள் வீரபாண்டியன்.

“ஏன்?” என்று கேட்டாள் இளநங்கை.

“குறிஞ்சி நீண்ட நேரம் பயணம் செய்து வந்திருக்கிறாள்…” என்ற வீரபாண்டியனை இடைமறித்த குறிஞ்சி, ”இல்லை படைத்தலைவரே, எனக்குக் களைப்பு ஏதுமில்லை ” என்றாள்.

அவளைக் கையமர்த்தி அடங்கிய வீரபாண்டியன், “இல்லை குறிஞ்சி! உனக்குக் களைப்பாக இருக்கும். நீ சென்று சற்று எட்ட உள்ள எனது பழைய கூடாரத்தில் படுத்துக் கொள். காவலுக்கு இரு வீரர்களை அழைத்துப் போ. காலையில் பேசலாம்” என்றான்.

“இப்பொழுதே பேசினாலென்ன?”

“போர்ப் பேச்சு சுவையாயிருக்காது. இத்தனை நேரம் நாம் பேசிய பேச்சின் இன்பத்தைக் கெடுத்துவிடும்.”

“வேறெதைக் கெடுத்துவிடுமோ?”

அதற்குமேல் குறிஞ்சியைப் பேசவிடாத வீரபாண்டியன் அவளை அழைத்துப் போய்க் குடிலுக்கு வெளியில் விட்டு, “அதோ இருக்கிறது எனது கூடாரம், போய்ப் படுத்துக் கொள். இரண்டு காவலரை வாயிலில் காவல் புரிய அழைத்துச் செல்” என்றான்.

“நீங்கள்?” என்று விஷமத்துடன் கேட்டாள் குறிஞ்சி.

”நான்… நான்…” என்று எதற்கும் திணராத வீரபாண்டியனும் திணறினான்.

”தெரியும் படைத்தலைவரே!” என்ற குறிஞ்சி மருதமரக் கிளைகளைப் பார்த்தாள், நகைத்தாள். கிளைகள் காற்றில் உராய்ந்தன.

இளவரசன் பதிலேதும் கூறாமல் படலை மூடிக்கொண்டு உள்ளே சென்று புலித்தோலில் படுத்துக் கொண்டான். “இளநங்கை! இப்படி வா!” என்றழைத்தான்.

கிட்டே நெருங்கி வந்த இளநங்கை, “என்ன!” என்றாள் கோபத்துடன்.

“படுத்துக்கொள். நேரமாகிறது.” என்றான் வீர பாண்டியன்.

அவன் பரிவைக் கண்ட மருதமரம் கலகலவென மலர்களை உதிர்த்து நகைத்தது. கிளைகள் உக்கிரத்துடன் தழுவி உராய்ந்தன. வீரபாண்டியன் கரம் இளநங்கையை நோக்கி நகர்ந்தது.

Previous articleRaja Muthirai Part 2 Ch56 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Muthirai Part 2 Ch58 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here