Home Historical Novel Raja Muthirai Part 2 Ch58 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

Raja Muthirai Part 2 Ch58 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

62
0
Raja Muthirai Part 2 Ch58 Raja Muthirai Part 2 Sandilyan, Raja Muthirai Part 2 Online Free, Raja Muthirai Part 2PDF, Download Raja Muthirai Part 2 novel, Raja Muthirai Part 2 book, Raja Muthirai Part 2free, Raja Muthirai,Raja Muthirai Part 2 Story in tamil,Raja Muthirai Part 2 Story,Raja Muthirai Part 2 novel in tamil,Raja Muthirai Part 2 novel,Raja Muthirai Part 2 book,Raja Muthirai Part 2 book review,ராஜ முத்திரை ,ராஜ முத்திரை கதை,Raja Muthirai Part 2tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2full story,Raja Muthirai Part 2 novel full story,Raja Muthirai Part 2audiobook,Raja Muthirai Part 2audio book,Raja Muthirai Part 2full audiobook,Raja Muthirai Part 2full audio book,
Raja Muthirai Part 2 Ch58 | Raja Muthirai | TamilNovel.in

Raja Muthirai Part 2 Ch58 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

ராஜ முத்திரை இரண்டாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 58 செல்வம் முளை விட்டது

Raja Muthirai Part 2 Ch58 | Raja Muthirai | TamilNovel.in

மறுநாள் காலை அருணோதயத்துக்குச் சற்று முன்பாகவே கண் விழித்துக்கொண்ட மருத்துவப் பெண்ணான குறிஞ்சி கூடாரத்துக்கு வெளியே வந்து மலைப்பகுதியின் அழகைக் கண்களால் பருகிக்கொண்டு நின்றாள். மலர்மரங்கள் பல இடங்களில் பொன்போலும் வெள்ளி போலும் மலர்களை உதிர்த்திருந்தன. மலர்களில்லாத மரங்கள் உலர்ந்த சருகுகளை உதிர்த்திருந்தன, பொன்னும் வெள்ளியுமில்லாத ஏழை செப்புக்காசுகளைத் தருமம் செய்வதுபோல் இன்னும் சில மரங்கள் தளிர் விட்டிருந்தாலும் பொன் போன்ற தளிர்களை மலைக்குத் தராமல் லோபியைப்போலத் தாங்களே வைத்துக்கொண்டு அழகு பார்த்துக் கொண்டிருந்தன. தூரத்தே தெரிந்த ஒரு சிற்றருவி தனது நீரை அள்ளிப் பாய்ச்சிக் கொண்டிருந்தது கேட்டாலும் கேட்காவிட்டாலும் தானாகவே தரும் வள்ளலைப்போல. இதற்கிடையே மெல்ல மெல்ல எழத் தொடங்கிய அருணன் லோபி, வள்ளல், பணக்காரன், ஏழை அனைவரும் தனக்குச் சமம் என்பதை அறிவிப்பவன் போல் அந்தப் பகுதியின் சராசரம் அனைத்தின் மீதும் செவ்விய கிரணங்களை வீசத் தொடங்கினான்.

அந்த நிலையில் மலை மனோகரமாயிருந்தது. ஆங்காங்கு கூவிய பட்சி ஜாலங்கள் நானாவித ஒலிகளைக் கிளப்பினாலும் அந்த ஒலிகளின் சுருதிகளில் வேறுபாடு இருந்தாலும், அவையெல்லாம் சேர்ந்து ஏதோ ரம்மியமான, தெய்வீகமான, ஒரு பெரும் சுருதியில் லயித்துக் கொண்டிருந்ததாக தோன்றியது அந்த மருத்துவப் பெண்ணுக்கு அந்த மலையின் அழகே மனோவியாதிகளைப் போக்க வல்லதென்றாலும் உடற்பிணியைப் போக்கும் பல மூலிகைகளும் அந்தப் பகுதியிலிருந்ததை அறிந்திருந்த குறிஞ்சி, ‘இத்தகைய மலையில் மனிதன் மனிதனைக் கொல்லுவதற்கான ஆயத்தம் நடக்கிறதே’ என்று எண்ணிப் பெருமூச்சு விட்டாள். அப்படி இன்பமும் துன்பமும் இணைந்த உணர்ச்சிகளுடன் சற்று எட்ட இருந்த அருவிக்குச் சென்று அருவிக் கரையிலிருந்த வேம்பின் குச்சியால் பல்விளக்கி முகம் கழுவி வெளியேறிய குறிஞ்சி அந்த அருவி வளைந்தோடிய மற்றொரு மறைவிடத்தி லிருந்து வீரபாண்டியன் நீராட்டத்தை முடித்துக்கொண்டு ஈர உடையைப் பிழிந்து கொண்டு வெளியே வருவதைக் கவனித்து நின்ற இடத்திலேயே நின்றாள்.

நீராட்டியதன் காரணமாக இடுப்பில் ஒரு நூலாடையுடனும் கையில் பிழிந்த ஒரு நூல் துண்டுடனும் எதிரே வந்த வீரபாண்டியனின் திண்மையான மார்பையும் திரண்ட தோள்களையும், நீண்ட கரங்களையும் கண்ட குறிஞ்சி பிரமித்து நீண்ட நேரம் மலைத்து நின்றுவிட்டாள். மறைக்கப்படாத அவன் மார்பையும், புஜங்களையும் நீர் அப்பொழுதும் தழுவிக்கொண்டிருந்தது. துவட்டப்பட்ட தலையில் தாறுமாறாகக் கிடந்த முடி நுனிகளில் திரண்டு உருண்டு பளபளத்து நின்று பிறகு சொட்டிய துளிகளுங்கூட அவன் வதனத்துக்கு ஒரு கம்பீரத்தை அளித்து அவன் வீரத்தனத்தை எடுத்துக் காட்டின. அவன் அவயவத்தின் ஒவ்வோர் இடத்திலும் புருஷத்தன்மை சொட்டுவதைப் பார்த்த குறிஞ்சியின் மனத்தில் இளநங்கை எத்தனை பாக்கியசாலி என்ற எண்ணம் எழுந்தது. அந்த எண்ணத்துடன் வேறோர் எண்ணமும் எழவே அவள் சிந்தனையில் சிறிது கலக்கமும் உதயமாகியது. முந்திய நாளிரவு மருதமரக் குடிலில் கண்ட இளநங்கையின் முகம் அவள் இதயக் கண்கள் முன்பாக நன்றாக எழுந்தது. இதயக் கண்கள் அந்த முகத்தை மீண்டும் ஆராயவே, “ஆம், ஆம், அப்படித்தான்,” என்ற சொற்களும் அவள் வாயைவிட்டு உதிர்ந்தன.

அந்தச் சமயத்தில் அவளை அணுகிய வீர பாண்டியன் லேசாக நகைத்து, “என்ன குறிஞ்சி, நீயாக ஏதோ பேசிக் கொண்டிருக்கிறாயே?” என்று வினவினான் கையிலிருந்த துணியை மீண்டும் பிழிந்து.

“இப்படிக் கொடுங்கள். நான் பிழிந்து தருகிறேன்.” என்றாள் குறிஞ்சி பேச்சை மாற்றி.

ஆனால் வீரபாண்டியன் விடவில்லை. “நான் கேட்ட தற்குப் பதில் சொல்லவில்லையே குறிஞ்சி!” என்றான்.

“பதில் சொல்லும்படி என்ன கேட்டுவிட்டீர்கள்?” என்றாள் குறிஞ்சி.

“நீயாக ஏதோ பேசிக் கொண்டிருந்தாய்….”

“ஆம்.”

“அது என்ன என்று கேட்டேன்.”

“அதுவா …”

“ஆம்.”

”அதற்கென்ன இப்பொழுது? சொன்னால் போகிறது” என்றான் குறிஞ்சி அலட்சியமாக

வீரபாண்டியன் அவளை உற்று நோக்கினான். அவள் எதையோ சொல்ல மறைக்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டு, “ஏன் குறிஞ்சி, என்னிடம் மறைக்கக்கூடிய விஷயங்களும் இருக்கின்றனவா?” என்று கெஞ்சினான். வீர பாண்டியனின் தீட்சணமான கண்கள் நகைப்பதைக் கண்டாள். உதடுகள் சற்று விலகி, கோடிகளுக்குச் சென்று கண்களில் நகைப்புக்கு இணைப்பு கருதி கூட்டுவதையும் கண்டாள். அவசியமானால் வீரபாண்டியன் குழந்தையாக மாறமுடியும் என்பதை உணர்ந்தும் கொண்டாள்.

அவள் இதயத்திலும் பெரும் பரிதாபம் அவனைப் பற்றி எழுந்து கிடந்தது. “படைத் தலைவரே! என் மனத்தில் தோன்றியதைச் சற்று நேரம் கழித்துச் சொல்கிறேன்,” என்று மெல்ல மன்றாடினாள்.

“சற்று நேரம் கழித்து நீ மன்னர் முன்பு உன் செய்தியைச் சொல்ல வேண்டியிருக்குமே குறிஞ்சி!” என்றான் வீரபாண்டியன் கெஞ்சும் குரலில்.

“ஆம்,” என்றாள் குறிஞ்சியும் தீர்க்காலோசனையுடன்.

“அப்பொழுதே இதையும் சேர்த்துச் சொல்லிவிடுகிறே னென்கிறாயா?” என்று வினவினான் வீரபாண்டியன்.

“இதை அங்கு சொல்ல முடியாது படைத்தலைவரே!”

“ஏன்?”

“அங்கு பலர் இருப்பார்கள்.”

“ஆம்.”

“பலர் முன்னிலையில் சொல்லக்கூடிய விஷயமல்ல இது.”

வீரபாண்டியன் கண்களில் சிரிப்பு மறைந்து சிந்தனை படர்ந்தது. “குறிஞ்சி?” என்றான் மெல்ல.

“ஏன் படைத்தலைவரே!” என்று வினவினாள் குறிஞ்சியும்.

அந்தக் கேள்வியும் குழப்பமிருந்ததைப் புரிந்து கொண்ட இளவரசன், “நீ எதை மறைக்கிறாய் குறிஞ்சி ! ஏன் மறைக்கிறாய்?” என்று வினவினான் கவலையுடன்.
“உங்கள் படைக்கு வந்துள்ள பலவீனத்தைச் சொல்ல மனம் வரவில்லை” என்றாள் குறிஞ்சி மிக மெல்லிய குரலில்.

“பலவீனமா! நமது படைக்கா! எங்கிருக்கிறது அந்தப் பலவீனம்?” என்று சற்று இரைந்தே கேட்டான் வீரபாண்டியன். அதே சமயத்தில் அவ்விருவரையும் நோக்கி இளநங்கை வந்து கொண்டிருந்தாள்.

அவளைக் கூர்ந்து நோக்கினாள் குறிஞ்சி, இளநங்கையின் நடை பழைய உறுதியான நடையாயில்லை. சற்றே துவண்டிருந்தது. இடுப்பிலிருந்த உடையும் லேசாக ஒருபுறம் சரிந்திருந்தது. அவள் கண்கள் சோர்வடைந் திருந்தன. அந்த நிலையில் கூட இளநங்கையின் அழகு அபரி மிதமாகச் சுடர் விட்டது. அந்தக் காலை நேரத்தில், இளநங்கையைக் குறிஞ்சி உற்று நோக்குவதைக் கண்ட இளவரசன், “என்ன அப்படிப் பார்க்கிறாய் குறிஞ்சி,” என்று வினவினான்.

“நீங்கள் என்ன பலவீனம் என்று கேட்டீர் களல்லவா?” என்றாள் குறிஞ்சி.

“ஆம்.” என்றான் இளவரசன்.

“உங்கள் படையின் பலவீனம் அதோ இருக்கிறது,” என்று தூரத்தே வந்துகொண்டிருந்த இளநங்கையைச் சுட்டிக் காட்டினாள் குறிஞ்சி.

“என்ன இளநங்கையா! படையின் பலவீனமா? பாண்டியப் படையின் சிறந்த உபதளபதி அவள்!” என்றான் வீரபாண்டியன் இரைந்து.

“அந்த உபதளபதி உங்களுக்கு இனிப் பயன்பட மாட்டாள்,” என்றாள் குறிஞ்சி மெதுவாக.

“ஏன் குறிஞ்சி! ஏன்?” என்று கலவரத்துடன் கேட்டான் இளவரசன்.

பதிலுக்குப் பெரும் வெடியை எடுத்து வீசினாள் பணிப்பெண். அதைக் கேட்ட இளவரசன் பிரமித்துப் பல விநாடிகள் நின்றுவிட்டான். “உங்கள் செல்வம் அவள் கருவில் முளை விட்டிருக்கிறது” என்ற சொற்களை மிக லேசாகத்தான் சொன்னாள் மருத்துவப் பெண் குறிஞ்சி ஆனால் அந்த ஒவ்வொரு சொல்லும் பனித்துளிகள் போல் அவன் சித்தத்தில் இறங்கி, சித்தத்தை அடியோடு உறையச் செய்துவிட்டன.

பணிப்பெண் குறிஞ்சி சொன்ன சொற்கள் பனித்துளி களென வீரபாண்டியன் சிந்தையிலிறங்கி உறைந்து அவன் சிந்தனாசக்தியை அடியோடு நிலைகுலையச் செய்து விட்டதால் பிரமித்த பார்வையுடன் வெகுநேரம் நின்று விட்ட பாண்டிய இளவரசன், இளநங்கை தானிருந்த இடத்தை நெருங்கிவிட்டதை உணர்ந்தானில்லை. அருகில் வந்த இளநங்கை அவனையும் நோக்கிக் குறிஞ்சியையும் நோக்கியதோ அவள் அழகிய விழிகளில் பல கேள்விகள் எழுந்து துள்ளியதையோ காணவும் இல்லை பாண்டிய சகோதரன். அவள் வாய்விட்டுச் சற்றுக் கடுமையுடன் கேள்வியொன்றை எழுப்பிய பின்பே அவன் சுயநிலைக்கு

வந்தான். “குறிஞ்சி! இவர் ஏன் இப்படிப் பேய் அறைந்தது போல நிற்கிறார்?” என்று வினவினாள் இளநங்கை.

குறிஞ்சியின் இதழ்களில் லேசாகக் குறுநகை அரும் பியது. “இவர் நிலைக்கும் பேய்க்கும் சம்பந்தம் இருக்கிறது அம்மணி,” என்றாள் குறும்பு குரலில் தொனிக்க.

“எந்தப் பிசாசு பிடித்திருக்கிறது இவரை?” என்றாள் கோபத்துடன் இளநங்கை.

“எது பிடித்தால் மருந்தும் மாந்திரீகமும் பயன் படாதோ அந்தப் பிசாசு அம்மணி,” என்றாள் குறிஞ்சி.

“அப்பேர்ப்பட்ட பிசாசா?” என்று மீண்டுமொரு கேள்வியை வீசினாள் இளநங்கை.

“ஆம் அம்மணி.”

“அது எப்படியிருக்குமோ?”

“அழகாக இருக்கும்.”

“அழகாக இருக்குமா?”

“மோகினிப் பிசாசு அழகில்லாமலிருக்குமா?’ என்ற குறிஞ்சி மெல்ல நகைத்தாள்.
இதைக் கேட்ட இளநங்கை கோபம் தணிந்து குறு நகை கோட்டி, ” குறிஞ்சி,” என்று இன்பம் சொட்ட அழைத்தாள்.

“ஏன் அம்மணி?”

“மோகினிப் பிசாசு பிடித்தால் தவறா குறிஞ்சி?”

“தவறில்லை அம்மணி, அதுவும் இவரைப் பிடிப்பதில் இவருக்கு ஏதும் கஷ்டமில்லை,” என்று கூறிய குறிஞ்சி இளவரசன் மீது தனது விஷமக் கண்களை நாட்டினாள்.

குறிஞ்சியின் சொற்களைக் கேட்டு இளநங்கையும் நகைத்தாள். “அப்படியானால் பிசாசுக்குத்தான் கஷ்டமா?” என்று வினவினாள் நகைப்பொலி சொற்களிலும் ஊடுருவ.

“ஆம் அம்மணி.”

“எப்படி!”

“அப்படித்தான்.”

“அப்படியென்றால்?”

“நாள் செல்லச் செல்ல மோகினியின் முகம் வெளுக்கிறது. சற்று, சிரமத்திலும் முகம் குறு வியர்வை கொள்கிறது. ஆபரணங்களைச் சுமக்கும் சக்தியைக்கூட இழந்து விடுகிறது….” என்ற குறிஞ்சி சொற்களை முடிக்காமல் இள நங்கையை நோக்கினாள். இளநங்கை தலையைக் கவிழ்ந்து கொண்டாள்
.
‘ஏன் தெரியுமா அம்மணி? அதன் வயிற்றில் வேறொர் ஆபரணம் வளருவதால் மற்ற ஆபரணங்களை உடல் சுமக்க முடிவதில்லை . உடல் இளைத்து முகம் வெளுத்து நகை குறைந்து… அப்பப்பா எத்தனை சிரமம் அம்மணி….” என்ற குறிஞ்சியின் சொற்கள் இளநங்கையின் காதில் தெளிவாக விழுந்ததும் அவள் உடனே பதில் சொன்னாளில்லை. பிறகு மெள்ள வினவினாள் தனையை நிமிராமலே, “நாள் கூட அதிகமாகவில்லையே குறிஞ்சி? நீ எப்படி ஊகித்தாய்?” என்று.

“நான் மருத்துவப் பெண் அம்மணி,” என்று சுட்டிக் காட்டினாள் குறிஞ்சி.

“அதனால்?”

“கண்டுபிடிக்க முடிந்தது.”

“எப்படி?”

“நேற்றிரவு நான் உள்ளே வந்தவுடன் அவசரமாய் எழுந்து உட்கார்ந்தீர்கள்…”

“ஆம்.”

“அப்பொழுது உங்கள் மூச்சு ஆயாசத்துடன் வெளி வந்து கொண்டிருந்தது, துரிதமாகவும் வந்தது…”

*உம்.”

“முகம் அளவுக்கதிகமாக வெளுத்திருந்தது.”

“உம்.”

“கழுத்து சற்று இளைத்திருந்தது.”

“உம்.”

“நான் வந்த அதிர்ச்சியைக்கூட முகம் தாங்க முடியாமல் குறுவியர்வை கொண்டது,” என்று குறிகளைச் சொன்ன குறிஞ்சி சற்று நிதானித்தாள்.

இதற்குப் பிறகு நீண்ட நேரம் மௌனம் சாதித்தாள் இளநங்கை. “இதை எதற்காக இவரிடம் இத்தனை அவசர அவசரமாகச் சொன்னாய் குறிஞ்சி?”

“எந்த விநாடியிலும் போர் துவங்கலாம் அம்மணி,” என்று கூறினாள் குறிஞ்சி.

“அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?” என்ற இள நங்கை தலையை நிமிர்த்திக் குறிஞ்சியை நோக்கினாள்.

“பாண்டியப் படையின் முக்கிய உபசேனாதிபதி குறைவதற்கும் இதற்கும் சம்பந்தமில்லையா அம்மணி?” என்று கேட்டாள் குறிஞ்சி.

இளநங்கையின் பலவீனமெல்லாம் எங்கோ பறந்து விட்டது. “குறிஞ்சி!” என்ற சொல் சீற்றத்துடன் வெளி வந்தது.

“என்ன அம்மணி!”

“ஒன்று நினைவில் வைத்துக்கொள்.”

“என்ன அது?”

“போர் முன் நிற்கும் போது வீட்டுக்கோடும் உபதளபதியல்ல நான்?”

“அப்படியானால்?”

“இவருடன் தோளுக்குத் தோள் நின்று போர் புரிந்து சேரனைப் புறமுதுகு காணப்போகிறேன். முத்துக்குமரியைச் சிறை மீட்கவும் போகிறேன்.”

குறிஞ்சியின் கண்கள் இளநங்கையை ஏறெடுத்து நோக்கின. “இளவரசியார் சேரர் தலைநகரில் இல்லை ,” என்ற சொற்களை மிக நிதானமாகச் சொன்னாள் குறிஞ்சி.

குறிஞ்சியின் இந்தச் செய்தி முந்திய செய்தியைவிட அதிக அதிர்ச்சியைத் தரவே, “என்ன? முத்துக்குமரி பரலியில் இல்லையா?” என்ற கேள்வி இளவரசன், இளநங்கை இருவரிடமிருந்து ஏககாலத்தில் எழுந்தது.

“முத்துக்குமரியும் இல்லை, முத்தும் இல்லை பரலியில்,” குறிஞ்சியின் பதில் திடமாக எழுந்தது.

“வேறெங்கு இருக்கிறாள் முத்துக்குமரி? முத்து எங்கே போய்விட்டது?” என்று சீறினான் வீரபாண்டியன்.

“சிங்களத்துக்கு,” என்றாள் குறிஞ்சி.

“இதை ஏன் முன்பே சொல்லவில்லை?” வீரபாண்டி யன் குரல் கடுமையுடன் ஒலித்தது.

“நேற்றிரவே சொல்ல முயன்றேன். கேட்கும் நிலையில் நீங்கள் இல்லை,” என்று சுட்டிக் காட்டினாள் குறிஞ்சி.

வீரபாண்டியன் இரண்டு விநாடிகள் தான் சிந்தித் தான். “சரி சரி, நீ மன்னரிடம் சென்று விஷயத்தைச் சொல் இதோ நானும் வந்துவிட்டேன்” என்று கூறிவிட்டு இளநங்கையைக்கூடக் கவனிக்காமல் கையிலிருந்த பிழிந்த துணியுடன் மருதமரக் குடிலை நோக்கி ஓடினான் வீரபாண்டியன்.

இளநங்கை இரண்டு விநாடிகள் பிரமித்தாள். பிறகு அவளும் குடிலை நோக்கி நடந்தாள். அத்தனை இளைப்பிலும் இம்முறை அவள் நடை துரிதமாகவும் உறுதியுடனும் இருந்தது. சேனைகளை நடத்தும் திறனை அந்த நடையில் பார்த்தாள் குறிஞ்சி. ‘வீரப் பெண்கள் இப்படித்தான் இருப்பார்கள் போலிருக்கிறது?’ என்று தனக்குள் சொல்லிக்கொண்ட குறிஞ்சி மன்னன் கூடாரத்தை நோக்கிச் சென்றாள்.

Previous articleRaja Muthirai Part 2 Ch57 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Muthirai Part 2 Ch59 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here