Home Historical Novel Raja Muthirai Part 2 Ch59 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

Raja Muthirai Part 2 Ch59 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

60
0
Raja Muthirai Part 2 Ch59 Raja Muthirai Part 2 Sandilyan, Raja Muthirai Part 2 Online Free, Raja Muthirai Part 2PDF, Download Raja Muthirai Part 2 novel, Raja Muthirai Part 2 book, Raja Muthirai Part 2free, Raja Muthirai,Raja Muthirai Part 2 Story in tamil,Raja Muthirai Part 2 Story,Raja Muthirai Part 2 novel in tamil,Raja Muthirai Part 2 novel,Raja Muthirai Part 2 book,Raja Muthirai Part 2 book review,ராஜ முத்திரை ,ராஜ முத்திரை கதை,Raja Muthirai Part 2tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2full story,Raja Muthirai Part 2 novel full story,Raja Muthirai Part 2audiobook,Raja Muthirai Part 2audio book,Raja Muthirai Part 2full audiobook,Raja Muthirai Part 2full audio book,
Raja Muthirai Part 2 Ch59 | Raja Muthirai | TamilNovel.in

Raja Muthirai Part 2 Ch59 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

ராஜ முத்திரை இரண்டாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 59 வீரபாண்டியன் சிருஷ்டி

Raja Muthirai Part 2 Ch59 | Raja Muthirai | TamilNovel.in

தரையிலிருந்து கிளம்பிக் கூடாரத்தின் தலையை ஊடுருவிக் கிளம்பி நின்ற பெரிய நடுத்தூணின் மூலையில் தென்னவன் கொடி பரலியை நோக்கிக் காற்றில் படபடக்க, கொடித்துணியில் தீட்டப்பட்டிருந்த பெருமீன் காற்றில் துணி வளைந்ததால் உடல் வளைத்துப் பரலியை விழுங்க ஆசைப்படுவதுபோல் வாளைக் கண்ணால் அம்மாநகர் நோக்கி விழிக்க, கூடார வாயிலில் காவல் புரிந்த யவன வீரர் இருவர் குறுக்கும் நெடுக்கும் நடந்ததால் மலைக்கற்களில் உராய்ந்த அவர்கள் பாதக்குறடுகள்கர் கர்ரென்று மலையின் பொடிக்கற்களைப் படுசூரணம் செய்து ஒலி கிளப்பிப் பரலியும் அப்படிச் சூரணமாகும் நாள் தூரத்திலில்லை என்பதை அறிவுறுத்த, பார்ப்பதற்குப் பயத்தையும் மதிப்பையும் ஒருங்கே கொடுத்த மன்னன் இருப்பிடத்தை நோக்கி நடந்த குறிஞ்சிக்கு அந்தக் கூடாரத்தை எட்டியதும் பெருவியப்பு காத்திருந்தது. அவள் காவலரை அணுகியதும், “பணிப் பெண்ணை உள்ளே அனுப்பு,” என்ற மன்னன் குரல் மிகக் கம்பீரத்துடன் ஒலித்தது. அந்த உத்தரவால் வழிவிட்டு விலகிநின்ற இரு யவனக் காவலரையும் தாண்டி, குறுக்கே கிடந்த வழிச்சீலையை அகற்ற உள்ளே நுழைந்த குறிஞ்சி மன்னனை நோக்கி, தலை மிகவும் தாழ வணங்கினாள்.

அவள் உள்ளே நுழைந்தபோது ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் கூடாரத்தின் நடுவேயிருந்த மஞ்சத்தில் அமர்ந்திருக்கவில்லை . கூடாரத்தின் ஒரு மூலையில் அரபு நாட்டுச் சீலைகள் இரண்டு கூடியிருந்த இடத்தருகே நின்று கொண்டிருந்தான். அவளை உடனடியாக சுந்தரபாண்டியன் விசாரிக்கவும் இல்லை. அவளை நோக்கித் திரும்பவும் இல்லை. கூடாரத்தின் கீழே முனைகள் நன்றாக இறுக்கப்பட்டிருந்ததால் நன்றாக ஒன்றுக்கொன்று இடைவெளி தெரியாமல் பிணைந்து நின்ற அரபு நாட்டுக் கெட்டித் துணிக்கு அருகிலேயே நின்றிருந்தான். நீண்ட நேரம் இப்படி நின்றிருந்து பிறகு திரும்பி மன்னன் குறிஞ்சியை நோக்கி, “ஏன்? தம்பி வரவில்லையா?” என்று வினவினான்.

இந்தக் கேள்வி குறிஞ்சியை அயரவைத்து, “தம்பியா?” என்று பிரமிப்புடன் ஒற்றைச் சொல்லை உதிர்த்தாள் அவள்.

“ஆம்,” என்ற ஜடாவர்மன் குறிஞ்சியைத் தனது அருகில் வரும்படி சைகை செய்தான். அவள் அருகில் வந்ததும் கூடாரத்தின் இணைந்த துணிகளில் ஒன்றை இடது கையால் சற்று நீக்கி, “இப்பொழுது வெளியே பார்,” என்று உத்தரவிட்டான்.

பார்த்தாள் குறிஞ்சி. பார்த்துப் பார்த்துப் பிரமிக்கவும் செய்தாள். விலகிய அந்த சீலை மூலம் தானும் இளவரசனும் இளநங்கையும் நின்று பேசிக்கொண்டிருந்த இடம் மிகத் தெளிவாகத் தெரிந்தது. மன்னன் காதில் தங்கள் பேச்சு விழாவிட்டாலும் தான் கூறிய செய்தியால் வீரபாண்டியன் அடைந்த அதிர்ச்சி, துரிதம், இள நங்கையின் வியப்பு அத்தனையும் மன்னன் கண்ணால் கண்டிருப்பானென்பதைச் சந்தேகமற உணர்ந்தாள் குறிஞ்சி. அதனால் ஏற்பட்ட பிரமிப்பு குரலிலும் துலங்கக் கேட்டாள் பணிப் பெண். “பாண்டிய மன்னர் இத்தனை காலையில் இவ்வழி நோக்க வேண்டிய அவசியம்?” என்று.

ஜடாவர்மன் இதழ்களில் இளநகை அரும்பிற்று. அவன் சிங்கக் கண்களிலும் சிரிப்பு சற்று சிந்தியது. “தன்னைச் சுற்றிலும் என்ன நடக்கிறதென்பதை அறியாத மன்னன் நீண்ட நாள் உயிர் வாழ முடியாது. ஆகையால் இப்படிச் சீலை இணைப்புகளை நாற்புறமும் வைத்திருக்கிறேன். வேண்டிய போது விலக்கிப் பார்க்கிறேன் விடியற்காலையில் பார்ப்பதை சம்பிரதாயமாக வைத்துக் கொண்டிருக்கிறேன்,” என்று கூறிய ஜடாவர்மன் சுந்தர பாண்டியன், “சரி, நீ கொணர்ந்த செய்தி என்ன? வீரபாண்டியனையே கவலையில் ஆழ்த்தும் செய்தியானால் அது நாம் நேரிடையாகக் கேட்கத் தகுந்ததாகவே இருக்கும்,” என்றான்.

“அவரும் வந்துவிடட்டும்,” என்றாள் குறிஞ்சி சற்றுத் தயங்கி.

“ஏன்? அவர் எதற்கு? அவரிடந்தான் சொல்லியாகி விட்டதே” என்றான் சுந்தரபாண்டியன்.
“அவரைப்பற்றிய செய்தியும் இருக்கிறது….” என்று செய்திகள் சொல்ல வேண்டிய முறையை மெல்லமாற்றினாள் குறிஞ்சி.

முதலில் ஜடாவர்மன் முகத்தில் முறுவலின் சாயை அதிகமாகப் பரவியது. தலையைச் சற்றுப் பின்னுக்குத் தள்ளி அவன் சிரித்தபோது அவன் முரட்டு முடிகளில் சில தலையிலும் வண்டுகள் போல் விழுந்து துள்ளின. “மிகவும் கெட்டிக்காரி நீ” என்ற மன்னன் குரலில் ஏளனமிருந்தது.

குறிஞ்சி அச்சத்தின் வசப்பட்டாள். மன்னவன் தன் உள்ளத்தை ஊடுருவிப் பார்த்துவிட்டானென்பதால் பெரும் பீதியடைந்தாள் அந்தப் பணிப்பெண்.

ஆகவே, “மன்னவா!…” என்று ஒரு சொல்லைச் சொன்னாள். அத்துடன் மேலும் ஏதோ பேச வாயெடுத்தாள். மன்னன் அவளைத் தன் கையை உயர்த்தித் தடுத்து, “சற்றுப் பொறு, தம்பியும் வந்துவிட்டான்,” என்று சொல்லிக் கொண்டிருந்த சமயத்தில் அதிவேகமாக உள்ளே நுழைந்தான் வீரபாண்டியன். அண்ணனைக் கண்டதும் தலைவணங்கிவிட்டு,, “குறிஞ்சி முக்கிய செய்தி கொண்டு வந்திருக்கிறாள்,” என்று கூறினான்.

“கொண்டு வந்த செய்தியையும் கேட்போம், கண்டு வந்த செய்தியையும் கேட்போம், இதுதான் வரிசைக் கிரமம். உனக்கு அவசியமானால் கிரமத்தை மாற்றிக் கொள்,”

என்றான் ஜடாவர்மன் தம்பியை நோக்கிச் சர்வ சாதாரணமாக.

மன்னன் சொன்னது நன்றாக விளங்கியது வீர பாண்டியனுக்கு. இருப்பினும் விளங்காததுபோல் கேட்டான். “நீங்கள் சொல்வது விளங்கவில்லை எனக்கு” என்று.

“கொண்டுவந்த செய்தி பரலிமா நகரிலிருந்து கொண்டு வந்தது. கண்டு வந்த செய்தி இங்கு வந்தபின் கண்டு வந்தது. கண்டு உவந்தது என்றுகூடச் சொல்லலாம்,” என்ற ஜடாவர்மன் பெரிதாக நகைத்தான்.

வீரபாண்டியனும் குறிஞ்சியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். ஜடாவர்மன் இரைந்தே சொன்னான்: “மனைவியைப்பற்றிய எந்த விஷயமும் கணவனுக்குத்தான் ரகசியம், மற்றவர்களுக்கு அல்ல. கொற்கை ராஜமுத்திரைக்கு அடுத்த தலைமுறை ஏற்படப் போகிறதென்பதை இரண்டு நாட்களுக்கு முன்பே கண்டு விட்டேன் தம்பி.”

“மன்னர் மருத்துவர் அல்லவே” என்று குறுக்கிட்டாள் குறிஞ்சி.

“மருத்துவனில்லா விட்டாலென்ன, இளநங்கையின் அழகிய வீரநடை குலைந்தபோதே விஷயம் புரிந்துவிட்டது. தவிர மருத்துவப் பெண்ணே…” என்ற ஜடாவர்மன் குறிஞ்சியைப் பார்த்து நகைத்தான். – “என்ன மகாராஜா?” என்று வினவினான் குறிஞ்சி.

”குடும்ப வாழ்க்கை நீ எய்தவில்லை. தம்பியும் அதற்குப் புதியவன். நான் அப்படியில்லை . எனக்குப் பெண் பிள்ளகள் இருக்கிறார்கள். அனுபவத்தில் வராதது மருத்துவத்தில் மட்டும் வந்துவிடாது. உனக்குத் திருமணமான பின்பு நீயும் புரிந்து கொள்வாய் மருத்துவம் இரண்டாம் பட்சம் என்று,” எனக் கூறிய பாண்டிய மன்னன் கடகடவென நகைத்தான்.

அவன் விஷம நகைப்பு அவளுக்கு வெட்கத்தை அளித்தது. அவன் கூரிய அறிவையும் கிரகிக்கும் கண்களின் பார்வையையும் நினைத்து அவள் வியப்பும் கொண்டாள். அவள் மீண்டும் ஏதோ பேசத் துவங்கிய போது கையமர்த்திய சுந்தரபாண்டியன், “சரி குறிஞ்சி! நமது உபதளபதிகளில் ஒருவர் உபயோகப்படமாட்டார். அவரைக் கொற்கைக்கு அனுப்ப ஏற்பாடு செய்வோம்,” என்று கூறினான். அத்துடன் அந்த வேடிக்கைப் பேச்சு முடிந்தது. மஞ்சத்தில் உட்கார்ந்துகொண்ட மன்னன் முகத்தில் கம்பீரமும் உறுதியும் சுடர்விட்டது. “சரி, இனி நீ கொண்டுவந்த செய்தியைச் சொல்,” என்றான்.

குறிஞ்சி பல விநாடிகள் மௌனம் சாதித்தாள். பிறகு சொன்னாள் தடுமாற்றக் குரலில், “மன்னவர் விரும்பத்தகாத செய்தி அது. சொல்ல அச்சமாகவும் இருக்கிறது.” என்று.
“கேட்பதற்கு எனக்கு அச்சமில்லை, சொல்” என்றான் ஜடாவர்மன்.

குறிஞ்சி திரும்பி வீரபாண்டியனை நோக்கினாள். அவன் முகம் பார்ப்பதற்குப் பயங்கரமாயிருந்தது. போரில் இறங்கும் போது ஏற்படும் பேய் முகத்தைக் கண்டாள். கழுகுகளின் பார்வையைப் போன்ற பார்வையையும் கண்டாள். ஆகவே சட்டென்று முகத்தைத் திருப்பி மன்னனை நோக்கி, “சித்தத்தைக் கலக்கும் செய்தி மன்னவா, இருப்பினும் கடமையைச் செய்கிறேன்” என்று துவங்கி, “பரலிமா நகரில் இளவரசியும் இல்லை . முத்துச் செல்வமும் இல்லை” என்றாள் பயத்துடன்.

“எங்கே?” மன்னன் குரல் பயங்கரமாக ஒலிக்க வில்லை. உணர்ச்சி ஏதுமற்று வறண்டு ஒலித்தது.

“சிங்களத்துக்குக் கடத்தப்பட்டார்கள்,” என்று குறிஞ்சி சொன்னாள். சொன்ன உதடுகள் நடுங்கின. உடலும் லேசாக உள்ளூர நடுக்கம் கொடுத்தது.

அடுத்த சில நிமிடங்கள் கூடாரத்தின் உள்ளே மௌனம் நிலவியது. மன்னன் தீவிரமாக எதையோ யோசித்தான். பிறகு அதே வறண்ட குரலில் கேட்டான், “குருநாதருக்கு இது தெரியுமா?” என்று.

“குருநாதர் சிறையிலிருக்கிறார்.” என்றாள் குறிஞ்சி மெல்ல.

“இந்திரபானு இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தானா?” என்றான் வீரபாண்டியன் கடுமையான குரலில்.

“இந்திரபானுவும் சிங்களத்துக்குக் கடத்தப்பட்டு விட்டார்?” என்றாள் குறிஞ்சி.

“முத்துக்குமரிக்கு இப்படி நடக்கப் போவது தெரியுமா?” என்றான் மன்னன்.

“தெரிந்திருக்க வேண்டும். தனது ஆடையை உடுத்திக் கொண்டு நள்ளிரவில் அந்தப்புரத் தாழ்வரை விளக்கொளி யில் நிற்கச் சொன்னார்கள்,” என்றாள் குறிஞ்சி.

மீண்டும் மௌனம் நிலவியது அம் மூவரிடையேயும். ஜடாவர்மன் நீண்ட நேரம் தரையை நோக்கிக் கொண்டிருந்தான். பிறகு சொன்னான். “தம்பி! நீதான் வெற்றியடைந்தாய்,” என்று.

புரிந்து கொண்டதற்கு அறிகுறியாகத் தலையை அசைத்தான் வீரபாண்டியன். “தங்கள் சபதம் பலிக்கிறது” என்றும் கூறினான் கம்பீரமான குரலில்.

ஜடாவர்மன் தரையை மீண்டும் நோக்கினான். “என் மனம் கேட்கவில்லை தம்பி! நிராயுதபாணிகளான பலர் உயிர் விடுவார்களே” என்றான் பரிதாபத்துடன்.

“சேரன் தலைநகரை அழிப்பதில் இத்தனை பரிதாபமா உங்களுக்கு? அப்படியானால் காட்டுக் கோட்டையில் ஏன் சொன்னீர்கள். ‘பத்தினி ஆட்சி நடக்கட்டும்; பரலி பற்றி எறியட்டும்’ என்று?”

“உணர்ச்சி வேகத்தில் சொன்ன சொல் அது.”

“இப்பொழுது உணர்ச்சி மாற சேரன் என்ன செய்து விட்டான்?”

“இருப்பினும் உன் ஆயுதம் பயங்கரம் தம்பி!”

“அவனிடம் படைபலம் அதிகம்.”

“ஆம் தம்பி ஆம், இருப்பினும்…”

“இருப்பினும் என்ன அண்ணா? கிழக்குக் கோட்டை வாயில் நெடுகிலும் மரங்களை வெட்டிப் பாலைவனமாக்கி விட்டான் சேரன். விற்பொறிகளும் வேல் பொறிகளும் மதிள்கள் மேல் தயாராக நிற்கின்றன. நமது வீரர்கள் கோட்டையை நெருங்கக்கூட முடியாது. காட்டின் மறைவு நமக்கில்லை: வெட்ட வெளியில் போனால் அரைஜாம நேரத்தில் அழிக்கப்படுவோம்…”

ஜடாவர்மன் பெருமூச்சு விட்டான். “ஆம் தம்பி உண்மை” என்றும் சொன்னான்.

மேலும் சொன்னான் வீரபாண்டியன், “அண்ணா ! கோட்டைக்கு உள்ளே வளையத்துக்குள் வளையமாகச் சேரன்படை நிற்கிறது. அவற்றைத் திடீரென ஒன்று சேர ஆங்காங்கு முரசுகளும் வைக்கப்பட்டிருக்கின்றன. முரசுகள் ஒலித்தால் வளையங்கள் கூடிவிடும். நாம் ஒருவேளை விற் பொறிகளுக்குத் தப்பி உள்ளே நுழைந்தால் அந்தப் பயங்கரப் படை வளையங்களுக்குள் அகப்பட்டுக் கொள்வோம். வளையம் நெருக்கப்பட்டால் அடியோடு மடிந்து போவோம்.”

இதைச் சொன்ன வீரபாண்டியன் கம்பீரமாக எழுந்து நின்றான். “ஓர் உபதளபதி நமது திட்டத்திலிருந்து குறைந்துவிட்டதை எண்ணிக் கவலை வேண்டாம். அவர் பணியையும் நானே செய்கிறேன். உத்தரவு கொடுத்தால் நமது ஆயுதங்களைக் காட்டின் முகப்புக்கு நகர்த்துகிறேன்,” என்றும் கூறினான் வீரபாண்டியன்.

இருவர் பேசுவதின் பொருள் சற்றும் விளங்கவில்லை குறிஞ்சிக்கு. பரலிமாநகர் தற்காப்பு ஏற்பாடுகளையும் குருநாதர் திட்டங்களையும் பாண்டிய சகோதரர்கள் உணர்ந்திருக்கிறார்களென்று அவளுக்கு விளங்கியதே தவிர அவ்விருவரும் பரலியை அழித்துவிட முடியும் போல் பேசுவது விந்தையாயிருந்தது. அதனால் மன்னனை நோக்கிச் சொன்னாள்: “மன்னவா! சுமார் இருபதினாயிரம் படை வீரர்கள் உங்களை எதிர்நோக்கியிருக்கிறார்கள். தவிர

கடற்படையும் சமயத்தில் கைக்கொடுக்கச் சித்தமாயிருக்கிறது.”

அவள் உள்ளே எழுந்த எண்ணத்தை உணர்ந்து கொண்ட ஜடாவர்மன் தனது சிங்கக் கண்களைக் கொண்டு அவளை நோக்கினான். “குறிஞ்சி! இருபதினாயிரம் வீரர்களையும் அழிக்கும் ஆயுதத்தை இளவரசன் ஏற்பாடு செய்திருக்கிறான். அத்தகைய அழிவை நான் விரும்ப வில்லை. நான் விரும்பினால் என்ன, விரும்பா விட்டால் என்ன? அது நடக்கத்தான் போகிறது. இளவரசருடன் சென்று அந்த ஆயுதத்தைப் பார்த்துவிட்டு வா. அதன் பயங்கரம் பரலிமா நகர்மீது உன் இதயத்திலும் கருணையை விளைவிக்கும்,” என்று கூறி “தம்பி! குறிஞ்சிக்கு உன் விபரீத சிருஷ்டியைக் காட்டு!” என்று வீரபாண்டியனுக்கு உத்தர விட்டான். தன்னுடன் வரும்படி குறிஞ்சிக்கு உடன் சைகை செய்து வெளியே நடந்தான் வீரபாண்டியன்.

குறிஞ்சி அவனைத் தொடர்ந்தாள். மலைப்பாதையில் நீண்ட தூரம் நடந்து, படைப்பிரிவுகள் பலவற்றைத் தாண்டிக் காட்டர்ந்த ஓர் இடத்துக்கு வந்தாள். வீர பாண்டியன் சிருஷ்டியைக் கண்டாள். மிகப் பயங்கர சிருஷ்டி அது. “பரலி தீர்ந்தது,” என்று நடுக்கத்துடன் தன் மனத்தே சொல்லியும் கொண்டாள்.

Previous articleRaja Muthirai Part 2 Ch58 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Muthirai Part 2 Ch60 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here