Home Historical Novel Raja Muthirai Part 2 Ch6 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

Raja Muthirai Part 2 Ch6 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

54
0
Raja Muthirai Part 2 Ch6 Raja Muthirai Part 2 Sandilyan, Raja Muthirai Part 2 Online Free, Raja Muthirai Part 2PDF, Download Raja Muthirai Part 2 novel, Raja Muthirai Part 2 book, Raja Muthirai Part 2free, Raja Muthirai,Raja Muthirai Part 2 Story in tamil,Raja Muthirai Part 2 Story,Raja Muthirai Part 2 novel in tamil,Raja Muthirai Part 2 novel,Raja Muthirai Part 2 book,Raja Muthirai Part 2 book review,ராஜ முத்திரை ,ராஜ முத்திரை கதை,Raja Muthirai Part 2tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2full story,Raja Muthirai Part 2 novel full story,Raja Muthirai Part 2audiobook,Raja Muthirai Part 2audio book,Raja Muthirai Part 2full audiobook,Raja Muthirai Part 2full audio book,
Raja Muthirai Part 2 Ch6 | Raja Muthirai | TamilNovel.in

Raja Muthirai Part 2 Ch6 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

ராஜ முத்திரை இரண்டாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 6 பாலுக்கும் காவல்

Raja Muthirai Part 2 Ch6 | Raja Muthirai | TamilNovel.in

‘கண்மணி’ என்ற சொல்லைக் காவலன் துணிவுடன் உதிர்த்ததும் கதிகலங்கிப் போன அந்தக் கட்டழகி அவன் கண்கள் தன் கண்களை ஊடுருவியதும் அக்கண்களிலிருந்து விடுபட மாட்டாமல் திகைத்து நின்றுவிட்டதால், அவன் கைகளிரண்டும் அவளுடைய தோள்கள் மீது பதிந்த பிறகும் பதுமைபோல் நின்ற இடத்தில் சலனமற்றுச் சிலையென நிற்கவே செய்தாள். அந்தச் சில விநாடிகளில் அவள் உள்ளமே உறைந்து விட்டது போலும் உணர்ச்சிகள் பறந்தோடிவிட்டது போலும் ஏற்பட்ட அதிசய நிலையிலிருந்து அவள் விடுபடவும் சக்தியற்றவளானாள். அந்தக் காவலன் கண்களில் ஏதோ தன் உணர்ச்சிகளை ஈர்த்து நிறுத்தும் விவரிக்க இயலாத விபரீத சக்தியிருந்ததை அவள் உணர்ந்தாலும், வாய்விட்டு ஏதும் சொல்ல இயலாதவளர்னாள். அப்படி உடலும் உணர்ச்சிகளும் சக்தியற்று நின்ற நிலையிலும் காவலன் பார்வையிலிருந்த ஏதோ ஒரு தனி ஒளி மட்டும் அவள் சிந்தனையை ஒரு மூலையில் கிளறிக் கொண்டிருந்தது. அப்படித் தூண்டப்பட்ட சிந்தனை மூலையில் ஏதோ ஒரு புதுக்கண் திறந்ததும் மூச்சைத் திடீரென ஒரு முறை இழுத்துப் பிடித்துக் கொண்டாள் அந்தப் பெண். அந்த அகக்கண் காட்டிய காட்சிக்கும், புறக்கண் முன்பு தோன்றிய தோற்றத்திற்கும் சிறிதும் சம்பந்தமில்லாது போகவே இருக்காது! இருக்காது!’ என்று அவள் உள்ளம் முணுமுணுத்தது.

அந்த முணுமுணுப்பை யொட்டித் துளிர்த்த உள் உணர்ச்சி மெல்ல இயங்க ஆரம்பிக்கவே, காவலன் கண்கள் விஷமத்தை உதிர்ப்பதையும் கண்டாள். அந்த விஷமப் பார்வை அவளுக்குப் புதிதல்ல. அவள் அறிந்த பார்வை தான் அது. அனுபவித்த பார்வையுங்கூட. ஆனால் அதற்குடையவன் இந்தக் காவலனாயிருக்க முடியாது என்று அவள் உறுதி கொண்டு தோளிலிருந்த அவன் கைகளை எடுக்க முயன்றதன்றி, “என்ன துணிவு உனக்கு!” என்று சீற்றம் நிரம்பிய குரலில் மெல்ல முணுமுணுக்கவும் செய்தாள்.

அவன் கைகள் அவள் தோள்களிலிருந்து அசைய மறுத்தன. பிடி இரும்புப் பிடியாயிருந்தது. ஆனால் அவன் பேசியதில் இரும்பின் கடினமில்லை. கரும்பின் இனிப்பே யிருந்தது. “எதற்குத் துணிவு,” என்ற சொற்களை மிக இன்பமாகவும் உதிர்த்தான் அந்த வாலிபன்.

அந்தச் சமயத்தில் அவன் குரலின் ஒலியும் மறுபடியும் அவளை ஒரு விநாடி அயர வைத்தது. இருப்பினும் அவள் தலையை ‘இல்லை’ என்பதற்கு அறிகுறியாக ஆட்டிவிட்டு, “நீ அழைத்த முறைக்கு!” என்றாள் அவள்.

“நான் எங்கே அழைத்தேன் உன்னை?” என்று மெல்ல நகைத்தான் அவன்.

அதைக் கேட்ட அவள் கோபிக்க எண்ணியும் முடியாததைக் கண்டு உள்ளூர வியந்து கொண்டாள். “அழைக்காமல் என்ன செய்தாய்?” என்றும் வினவினாள்.
“சன்மானம் கேட்டேன்,” என்றான் வாலிபன் சர்வ சாதாரணமாக.

“என்ன சன்மானம்?”

“பொன்னும் மணியும் தருவதாகச் சொல்ல வில்லையா நீ?”

“ஆம். சொன்னேன்.”

“முதலில் மணியைக் கேட்டேன்.”

“அதுதான்….”

“கண்மணி.”

இதைக் கேட்டதும் அவள் கைகளை ஆத்திரத்துடன் தனது தோள்களிலிருந்து எடுத்தெறிந்தாள் அவள்.

“கண்ணைப் பிடுங்கித் தரச் சொல்கிறாயா?” என்றும் சீற்றத்துடன் வினவினாள்.

இம்முறை அவள் சற்று இரைந்தே பேசியதால், “உஷ்,” என்று அவள் வாயைப் பொத்திய அவன், “மெல்லப் பேசு. அடுத்த கட்டின் காவலன் காதில் விழப் போகிறது,” என்று எச்சரிக்கவும் செய்தான்.

“ஏன், விழுந்தாலென்ன?” என்ற அந்தப் பெண் இகழ்ச்சியுடன் அவனை நோக்கினாள்.

“அவனும் பரிசு கேட்பான்,” என்றான் வாலிபன்.

“அவனுக்கும் ஒரு கண்ணைப் பிடுங்கித் தருகிறேன்,” என்றாள் அவள் எரிச்சலுடன்.

“அதில் கஷ்டமிருக்கிறது,” என்றான் அந்த வாலிபன்.

“ஏன்?” என்று வினவினாள் அவள் பெரும் குழப்பத் துடன்.

“எல்லாவற்றிலும் இரண்டிரண்டு நீ கொடுக்கும் படியாயிருக்கும்,” என்று சுட்டிக்காட்டினான் வாலிபன்.

“எல்லாவற்றிலுமென்றால்?” இம்முறை அந்தப் பெண்ணின் குரலில் குழப்பத்துடன் சினமும் இழைந்து கிடந்தது.

வாலிபன் முகத்தில் சற்று வருத்தச் சாயை படர்ந்தது. “மணிக்கு இரண்டு கண்களைக் கொடுத்து விடுகிறாய். அத் துடன் நிற்காதே விஷயம்?” என்றான் வாலிபன்.

“நிற்காமல் என்ன செய்யும்?” என்று கேட்டாள் அவள்.

“பொன்னும் மணியும் கொடுப்பதாகச் சொன்னாய் எந்த மணி வேண்டும் என்று சொன்னேன். உன் தாராளம், இரண்டு கண்களையும் தானம் செய்து விடுவதாகக் கூறுகிறாய்; அடுத்தது பொன்னைக் கேட்பானே…” என்று இழுத்தான் வாலிபன்.

அந்தப் பெண் அந்த வாலிபன் மீது விசித்திரப் பார்வையொன்று வீசினாள். “அதற்கென்ன கையை வெட்டிக்கொடுக்கச் சொல்வாயா?” என்று கேட்டாள்.

“அதைக் கேட்கமாட்டேன்,” என்றான் அந்த வாலிபன் மிக மிருதுவான முறையில்.

“வேறு என்ன கேட்பாய்?” என்று வினவிய அந்தப் பெண் அந்த வாலிபன் வதனத்தில் ஏற்பட்ட பெரு மாறுதலைக் கண்டு வியந்தாள்.

அவள் கேள்விக்கு அவன் உடனடியாகப் பதில் சொல்லவில்லை. அவன் விகார முகம்கூடச் சிறிது கனிவதைக் கண்கள் அறிவுறுத்தின. கண்களில் கனிவு மட்டுமின்றி மெள்ள மெள்ளக் கனவும் விரிந்தது. அவன் ஒரு கை மீண்டும் மெள்ள எழுந்து அவள் தோளின் மீது பதிந்தது. “கையைக் கேட்கமாட்டேன். ஆனால் காலைக் கேட்பேன். அதையும் கேட்பது கஷ்டம். அதிலும் நீ தாராளத்தைக் காட்டினால் இரு கால்களும் போய்விடும்.” என்ற அவன் வார்த்தைகள் மிக மென்மையாயும் சொப்பனத்தில் பேசுபவன் பாணியிலும் உதிர்ந்தன.

அந்த மென்மைக்கும் கனவுக்கும் காரணத்தை அறியாத அந்தக் காரிகைக்கு என்ன சொல்வது, என்ன செய்வதென்பது தெரியவில்லை. தன்னைப்பற்றியே வியந்து கொண்டாள் அவள். மிகச் சுதந்தரமான முகம் படைத்தவனும் ராஜ்யாதிகாரியுமான சேர மன்னனைப் பார்க்கவும் இஷ்டப்படாத தான், எப்படி இந்த விகார முக வாலிபரின் அதிகப் பிரசங்கத்தையெல்லாம் தாள முடிகிறது என்பதை நினைத்து வியப்பின் உச்சியை எய்தினாள். அவன் தன்னைத் தொட்ட பிறகும் தான் சகிப்புத் தன்மையைக் காட்டும் காரணமும் விளங்க வில்லை அவளுக்கு. தனக்கும் விளங்காத புதிர் ஒன்று தன்னை ஆட்கொண்டிருப்பதை உணர்ந்தாள் அவள்.

வாலிபன் சொப்பன உலகத்திலிருந்தான். அவன் கண்களில் விரிந்த கனவு விகார முகம் பூராவையும் நன்றாக ஆக்ரமித்துக்கொண்டது. அந்தக் கனவில் வார்த்தைகளை மேற்கொண்டும் மெல்லமெல்ல உதிர்த்தான் அவன்: “ஆம்! இரு கால்களும் போய்விடுமே? அதை நான் எப்படிச் சகிக்க முடியும்! கையின் பெருமையும், அருமையும் எனக்குத் தெரியாது. ஆனால் கால்கள்! அவை விஷயம் வேறு. அந்த அருவி நீர்தான் எத்தனை பளபளப்பு ! அந்த நீரின் அடியி லிருக்கும் கூழாங்கற்கள் கூட அந்த வெளிச்சத்தில் அசல் தங்கங்கட்டிகளைப் போலத்தான் இருக்கின்றன. அவை யென்ன பத்தரை மாற்றுத் தங்கமா? பசும்பொன்னா? இரண்டுமில்லை . ஆனால் அந்த அருவியில் துளையும் கால்கள்! தூக்கி மடித்த சேலையின் கீழே தெரியும் அந்தப் பொன்னிறக் கால்கள்! அப்பா! எத்தனை அழகிய பசும்பொன்! பத்தரைமாற்றுத் தங்கத்தைவிடக் கொஞ்சம் அதிகமாகத் தானிருக்கும். மற்றைய நாடுகளில் பத்தரை மாற்றுத் தங்கம் பிரமாதமாயிருக்கலாம். ஆனால் பாண்டிய நாட்டு மாத்திரை எத்தனையோ அதிகமாயிருக்க வேண்டும். இல்லாமற்போனால் பாண்டிய நாட்டில் விளைந்த அந்தத் தங்கத்துக்கு எத்தனை பொலிவு ! எத்தனை பொலிவு ! இயற்கைப் பொற்கொல்லன் அவற்றை எப்படித்தான் இழைத்தானோ?”

அவன் சொற்கள் முத்துக்குமரியின் இதயத்தில் எத்தனையோ இன்ப வேதனைகளைக் கிளப்பின. ‘இவனுக்கு எப்படி இதெல்லாம் தெரியும்?’ என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டாள். அத்தனையும் காட்டுக் கோட்டையில் அருவிக்கரையில் நடந்த சம்பவம். இதை இவன் எப்படி அறிந்தான் என்று எண்ணிப் பெருவியப்பும், சந்தேகமும் எய்தினாள் அவள். ஆகவே சிந்தனையிலும் இறங்கினாள்.

சில விநாடிகள் அந்த அறையில் மௌனம் நிலவியது. அந்த வாலிபன் தனது கனவு நிலையிலிருந்து மெள்ள மீண் டான். திடீரெனத் தனது கச்சையிலிருந்து ஒரு பெருமுத்தை எடுத்து அவளிடம் நீட்டினான்.

அந்த முத்தைக் கண்டதும் அவள் இதயத்தில் மீண்டும் வியப்புத் துளிர்ந்தது. “இந்த முத்து ஏது உனக்கு?” என்று வினவினாள் அவள். அத்துடன் அதைக் கையில் வாங்கிக் கொண்டு அறைக் கோடியிலிருந்த விளக்கிடம் விடுவிடு என்று நடந்து சென்று உற்று நோக்கவும் செய்தாள். “ஆம் ஆம். அதுதான் சந்தேமில்லை ,” என்று சற்று வாய்விட்டுக் கூறினாள்.

அந்தச் சமயத்தில் வாலிபன் தனக்குப் பின்பு வெகு அருகில் நிற்பதை அந்த அழகி உணர்ந்தாள். உணர்ந்த பின்னும் உறைந்தவண்ணம் நின்றாள். சற்றுத் திரும்பினாலும் தன் சரீரம் அவன் மீது உராய்ந்துவிடும் என்ற நினைப்பால் உள்ளம் கொதிக்க ஒரு விநாடி நின்றவள் சட்டென்று விளக்கைத் தாண்டி அப்புறம் சென்று சரேலென அவனை நோக்கித் திரும்பினாள்.

எதிர்பாராதவிதமாக விளக்கை இருவருக்குமிடையே அந்தப் பெண் இருத்திவிட்டதைக் கண்ட வாலிபன் அதற்கு மேல் அவளை நெருங்க முடியவில்லை. விளக்கொளியில் அவள் உருவத்தை நன்றாக ஆராய்ந்தான். அந்த அழகியின் கண்களில் பல கேள்விகள். நோக்கி நின்றன. “இது ஏது உனக்கு?” என்று வினவினாள் அவள் சற்று சிந்தித்த பிறகு.

“கிடைத்தது,” என்று பதில் கூறினான் அந்த வாலிபன்.

“எங்கு கிடைத்தது?” என்று மீண்டும் கேட்டாள் அவள்.

“நீ எறிந்த இடத்தில்.”

“அருவிக் கரையில் ஒன்று எறிந்தேன்.”

“ஆம்.”

“அது தெரியுமா உனக்கு?”

“தெரியும்.”

“எப்படித் தெரியும்?”

“நான் பார்த்தேன்.”

“பார்த்து எடுத்துக்கொண்டாயா?”

“இல்லை, எடுக்கவில்லை”

“ஏன்?”

“இளவரசருக்கு இருக்கட்டுமென்று விட்டு வைத்தேன்.”

“எந்த இளவசருக்கு?”

“வீரபாண்டியத் தேவருக்கு.”

“அப்படியானால் நான் யாரென்று தெரியுமா உனக்கு?”

“தெரியும் முத்துக்குமரி” என்ற வாலிபனின் சொற்கள் மிக நிதானமாகவும் உறுதியுடனும் உதிர்ந்தன.

அந்தச் சந்தர்ப்பத்தில் அந்தச் சொற்கள் பாண்டியன் மகளுக்கு எந்த விதத்திலும் வியப்பளிக்கவில்லை. அவன் முகத்தைக் காட்டியதுமே அவன் தான் இன்னாரென்பதைப் புரிந்து கொண்டுவிட்டானென்பதை உணர்ந்து கொண்டாள். ஆகவே சிங்கணனைத் தவிர, தன்னை வேவு பார்க்க இவனும் கோட்டையில் இருந்திருக்கிறானென்பதை ஊகித்துக் கொண்டாள். இன்னும் எத்தனை ஒற்றர்கள் பாண்டிய மன்னன் படையில் இருக்கிறார்களோ என்ற ஏக்கமும் அவளுக்கு ஏற்பட்டது. அந்த ஏக்கத்தின் விளைவாக அவள் பெருமூச்சு விட்டாள். அந்தப் பெருமூச்சில் இடையிலிருந்த விளக்கின் சுடர் சிறிது சலனப்பட்டது. அதைப் போலவே சலனப்பட்ட மனத்துடன் கேட்டாள் முத்துக்குமரி: “அந்த முத்தை விட்டு வைத்தாய். இந்த முத்து எங்கு கிடைத்தது?”

“காட்டுக் கோட்டையிலிருந்து சேர நாட்டுக்குப் பிரியும் மலைப்பாதையில்.”

“நீ எதற்கு அங்கு வந்தாய்?”

“வீரக் காட்சியைப் பார்க்க.”

வாலிபனை மீண்டும் கூர்ந்து நோக்கினாள் முத்துக் குமரி. பிறகு கேட்டாள், “என்ன காட்சியைப் பார்த்தாய்?” என்று.

“ஒரு பெண் பலருடன் போராடும் காட்சியைப் பார்த்தேன். பெண் அத்தனை லாகவமாகக் கோடரி வீசுவதை அன்றுவரை நான் கண்டதில்லை,” என்ற அந்த வாலிபன் கண்களில் பெருமிதம் மண்டிக் கிடந்தது.

முத்துக்குமரியின் அழகிய விழிகளில் பெரும் சந்தேகம் துளிர்த்தது. “ஒரு பெண் பலருடன் போராடும் போது பார்த்துக் கொண்டிருப்பது தர்மமா?” என்று வினவினாள் அவள், சந்தேகம் குரலிலும் ஒலிக்க.

“இல்லை ” என்றான் வாலிபன் திட்டமாக.

“அப்படியானால் அவள் உதவிக்கு நீ ஏன் செல்ல வில்லை?” என்று வினவினாள்.
சந்தர்ப்பம் சரியில்லை . அவசியமும் இல்லை.” என்றான் வாலிபன்.

நீ சந்தர்ப்பவாதியா?” என்று உஷ்ணத்துடன் வினவினாள் முத்துக்குமரி.

“ஆம்,” என்று சர்வசாதாரணமாக ஒப்புக்கொண் டான் வாலிபன்.

“சந்தர்ப்பத்தை முன்னிட்டு யார் பக்கம் வேண்டு மானாலும் சேருவாயா?” என்று மீண்டும் கேட்டாள் பாண்டியன் செல்வி.

“சேருவேன்,” என்று சிறிதும் வெட்கமில்லாமல் சொன்னான் அந்த வாலிபன்.

வெறுப்பு வழிந்தோடிய விழிகள் வாலிபனை நோக்கின. “இதை ஒப்புக்கொள்ள உனக்கு வெட்கமா யில்லை?” என்று அருவருப்புத் ததும்பிய குரலில் கேட்டாள் பாண்டியன் மகள்.

“இல்லை.”

“ஏன், அதே பழக்கமா?”

“ஆம். பலமுறை கட்சி மாறியிருக்கிறேன்.”

முத்துக்குமரியின் விழிகளில் வெறுப்பும் கோபமும் கலந்து தாண்டவமாடின. இதழ்களும் இகழ்ச்சியுடன் ஒரு முறை மடிந்து விரிந்தன. “அட வெட்கங் கெட்டவனே! நீயும் ஒரு வீரனா?” என்று உதடுகள் சுடுசொற்களை உதிரத்தன.

“அப்படி நினைத்துத்தான் சேரமன்னன் என்னைக் காவலுக்கு அமர்த்தியிருக்கிறார்,” என்றான் வாலிபனும் வெட்கமின்றி நகைத்து.

“அவருக்கும் சதி நினைக்கிறாயா நீ?” என்று இகழ்ச்சி யுடன் கேட்டாள் அவள்.

“ஆம்.”

முத்துக்குமரி அந்த வெட்கங்கெட்ட வாலிபனை மீண்டும் நேராக நோக்கினான் புன்சிரிப்புடன். “இத்தனை வெட்கங் கெட்ட மனிதனை, கயவனை இதுவரை நான் கண்டதில்லை !” என்று கூறினாள்.

“அது தவறு!” என்றான் வாலிபன்.

“எது?”

“கண்டதில்லை என்பது.”

“உன்னை நான் ஏற்கெனவே பார்த்திருக்கிறேனா?”

வாலிபன் பதில் அவசியமின்றி வந்தது. “பார்த்திருக்கிறீர்கள்,” என்றான் அவன்.

“இல்லை. நீ யாரென்பது இன்றுவரை எனக்குத் தெரியாது.”
“தெரியும்.”

“யார் நீ?”

“இந்திரபானு” வாலிபனின் பதில் திட்டமாக வெளி வந்தது.

Previous articleRaja Muthirai Part 2 Ch5 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Muthirai Part 2 Ch7 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here