Home Historical Novel Raja Muthirai Part 2 Ch61 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

Raja Muthirai Part 2 Ch61 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

67
0
Raja Muthirai Part 2 Ch61 Raja Muthirai Part 2 Sandilyan, Raja Muthirai Part 2 Online Free, Raja Muthirai Part 2PDF, Download Raja Muthirai Part 2 novel, Raja Muthirai Part 2 book, Raja Muthirai Part 2free, Raja Muthirai,Raja Muthirai Part 2 Story in tamil,Raja Muthirai Part 2 Story,Raja Muthirai Part 2 novel in tamil,Raja Muthirai Part 2 novel,Raja Muthirai Part 2 book,Raja Muthirai Part 2 book review,ராஜ முத்திரை ,ராஜ முத்திரை கதை,Raja Muthirai Part 2tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2full story,Raja Muthirai Part 2 novel full story,Raja Muthirai Part 2audiobook,Raja Muthirai Part 2audio book,Raja Muthirai Part 2full audiobook,Raja Muthirai Part 2full audio book,
Raja Muthirai Part 2 Ch61 | Raja Muthirai | TamilNovel.in

Raja Muthirai Part 2 Ch61 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

ராஜ முத்திரை இரண்டாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 61 குறிஞ்சிக்குப் போர்ப் பணி!

Raja Muthirai Part 2 Ch61 | Raja Muthirai | TamilNovel.in

பாண்டிய மன்னன் உத்தரவுப்படி படைகளை நகர்த்துவதிலிருந்த சுலபம் இளநங்கையைக் கொற்கைக்கு அனுப்புவதில் இல்லை வீரபாண்டியனுக்கு. மன்னன் உத்தரவைக் கேட்டதுமே வெகுண்ட இளநங்கை, பல்லக்குத் தயாராகி பர்ணசாலை வாசல் வந்த பின்பும் கிளம்ப மறுத்து அடம்பிடித்து மல்லுக்கு நின்றாள் இளவரசனிடம். “நான் எதற்காகப் போகவேண்டும் கொற்கைக்கு? என்ன வந்து விட்டது எனக்கு?” என்று சீறினாள் வீரபாண்டி யனை நோக்கி.

வீரபாண்டியன் கைகள் அவளைச் சுற்றிச் சென்று பூ உடலைச் சற்று இறுகவே அணைத்தன. “என்ன வந்திருக்கிறது என்பதைக் குறிஞ்சி சொல்லவில்லையா? இந்த நிலையில் நீ எப்படிப் போராட முடியும்? முடிந்தாலும் நான் அனுமதிப்பது எப்படி நியாயமாகும்?” என்று மெல்ல அவள் காதுக்கருகில் அவன் உதடுகள் சொற்களை – உதிர்த்தன. சற்று அகன்று கன்னங்களையும் தடவின.

சாதாரணச் சமயமாயிருந்தால் அந்த ஒரு செய்கையிலேயே இளநங்கையின் பலமெல்லாம் காற்றில் பறந்திருக்கும். அவன் கையில் உருகியிருப்பாள் அவள். ஆனால் அன்றிருந்த கோபத்தில் அவன் சரசம் கோபத்தைக் கிளறவே, “இதெல்லாம் வேண்டாம். நானிருப்பது உங்களுக்கு இஷ்டமில்லாவிட்டால் நான் போகிறேன்” என்றாள்; கோபம் குரலில் தெறிக்க.

வீரபாண்டியன் கைகளிலொன்று அவள் முதுகை மெள்ளத் தடவியது. “இளநங்கை! உன்னைவிட்டுப் பிரிந்திருப்பது எனக்கு மட்டும் சுலபமென்று நினைக்கிறாயா? நிலைமை இந்தப் பிரிவை சிருஷ்டித்திருக்கிறது,” என்று சமாதானப்படுத்தினான்.

“என்ன நிலைமை?” இளநங்கை அவன் அணைப்பி லிருந்தபடியே கேட்டாள்.

“நம்மை மீறிய நிலைமை.” வீரபாண்டியன் சங்கடத் துடன் கூறினான்.

“இதொன்றும் நம்மை மீறிய நிலைமை அல்ல…”

“என்ன இளநங்கை ?”

“நம்மால் உண்டான நிலைமைதான். அதுவும் உங்களால் உண்டானதுதான்,” இளநங்கையின் சொற்கள் எரிச்சலுடன் வெளிவந்தன.

அந்த எரிச்சலிலும் ஒரு பெருமை துள்ளி விளையாடு வதைக் கண்ட வீரபாண்டியன் புன்முறுவல் கொண்டான். அவன் மார்பில் அவள் முகம் புதைந்ததால் முறுவலை அவள் கவனிக்கவில்லை. “வீணாக என்மீது குற்றம் சாட்டுகிறாய்..” என்றான் வீரபாண்டியன் மகிழ்ச்சியுடன்.

“வீணாகக் குற்றம் சாட்டுகிறேனோ?” என்றாள் அவள் சீற்றத்துடன்.

“ஆமாம்!”

“சாமர்த்தியத்தால் பேச்சை மாற்றாதீர்கள்.”

“இல்லை இளநங்கை. யோசித்துப் பார். நீ என்ன செய்கிறாய்?”

“நானா?”

“ஆமாம். இதோ மாதவிக்கொடி இருக்கிறது. இதில் பூ அழகாகப் பூக்கிறது. அதைப் பறித்துச் சூட்டிக்கொள்கிறாயல்லவா,”

“ஆம்.”

அது உன் குற்றமா? பூவின் அழகின் குற்றந்தானே?’

“நல்ல கெட்டிக்காரர் நீங்கள். பழியை என்மீதே போடுகிறீர்களா?”

“இல்லை இளநங்கை.”

“ஆண்ட வன் மீதா?”

“ஆம். அவன் ஏன் இத்தனை அழகாக உன்னைச் சிருஷ்டித்தான்? பொருநையைத்தான் சிருஷ்டித்தான்? அதில் உன்னை ஏன் நீந்தவிட்டு என் கண்ணில் மோதவிட்டான்? ஆகவே…”

“ஆகவே?” என்று கேட்டு, அவனை நோக்கித் தலை நிமிர்ந்தாள் இளநங்கை.

‘’குற்றம் உனதுமில்லை, எனதுமில்லை. ஆண்டவனுடையது,” என்ற வீரபாண்டியன் ஒரு கையால் அவளை அணைத்த வண்ணம் அவள் கண்களை வருடினான்.

அந்த ஸ்பரிசம் அவளை மேலும் இளக்கவே, “ஆம். ஆண்டவனுடையதுதான்…” என்றாள் லேசாகப் புன் முறுவல் செய்து.

“இப்பொழுது ஒப்புக்கொள்கிறாயா?” என்று வினவினான் வீரபாண்டியன்.

“ஒப்புக் கொள்கிறேன். என்னை ஆண்டவர் நீங்கள் தானே? ஆண்டவருக்கு முன்னால் கை’ என்று ஒரு உயிர் மெய்யெழுத்தையும் சேர்த்தால் சரியாகப் போய்விடும்,” என்ற இளநங்கை வெட்கத்துடனும் தைரியத்துடனும் அவனை ஏறெடுத்துப் பார்த்தாள்.

அந்தப் பார்வையை தாங்கமுடியாத இளவரசன் அவளை மீண்டும் கைகளைக் கொண்டு இறுக்கித் தனது உடலுடன் இணைத்துக் கொண்டான்.

இளவசரன் அவளை வலிக்க வலிக்க அணைத்து நொறுக்கியபோது, ‘இப்படியே என்னை நொறுக்கிவிட்டாலும் எனக்கு இன்பமாயிருக்குமே. என்னை எதற்காகக் கொற்கைக்கு அனுப்பப் பார்க்கிறார் இவர்?” என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள்.

அப்படி அவள் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே வெளியிலிருந்து குறிஞ்சியின் குரல் கேலியுடன் ஒலித்தது, “பல்லக்கு வந்துவிட்டது. வீரர்கள் காத்திருக்கிறார்கள்,” என்று.

விரபாண்டியன் இளநங்கையைச் சுற்றியிருந்த கைகளை விலக்கினான். “புறப்படு இளநங்கை,” என்ற சொல் அதிகாரத்துடன் ஒலித்தது திடீரென்று.

கடமை என்று வந்தால் தனது கணவன் அதிகாரியாக மாறிவிடுவானென்பதையும், மன்மதனுடைய புஷ்பபாணங்கள்கூட அவனிடம் செலாவணியாகாதென்பதையும் பன்முறை உணர்ந்துகொண்டிருந்த இளநங்கை, மெல்ல குடிலின் வாயிலை நோக்கிச் சென்றாள். கதவருகில் சென்றதும் குடிலின் நட்ட நடுவில் நின்று கொண்டிருந்த இளவரசனைத் திரும்ப நோக்கினாள். அவள் பார்வையில் காதல் இருந்தது. துக்கமும் இருந்தது. ஆனால் வீரபாண்டியன் இருந்த இடத்தைவிட்டு நகரவில்லை. அவன் முகம் கல்லாயிருந்தது. “போய் வா இளநங்கை! பரலிப்போரை முடித்துக் கொண்டு உன்னைக் கொற்கையில் சந்திக்கிறேன்,” என்றான் வீரபாண்டியன் உணர்ச்சி வறண்டு போன குரலில்.

இளநங்கை குடிலின் கதவைத் திறந்து கொண்டு பல்லக்கை நோக்கி நடந்தாள். வீரபாண்டியனும் திறந்த கதவின் மூலம் வெளிவந்து அவள் பல்லக்கில் ஏறுவதைக் காண நின்றான். பல்லக்கு அருகில் சிறிது நேரம் நிலைத்து நின்றாள் இளநங்கை. பிறகு பல்லக்குத் தூக்க நின்றிருந்த ஆட்களை விலக்கிக்கொண்டு தனக்குக் காவல் புரிந்துவர நின்றிருந்த வீரர்களிடம் சென்று அவர்கள் குதிரைகளில் ஒன்றின்மீது தாவி அதன் கடிவாளத்தை இழுத்துவிட குதிரை ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து பறந்தது. அவள் ஆத்திரத்தைக் கண்டு வாயடைந்து நின்றான் வீர பாண்டியன். பிறகு வீரர்களை நோக்கி, “உம்! ஏன் நிற்கிறீர்கள்? போங்கள்,” என்று சீற வீரர்களும் புரவிகளில் பாய்ந்து இளநங்கை சென்ற திக்கை நோக்கிச் சென்றார்கள்.

குறிஞ்சி பிரமித்து நின்றாள் நீண்ட நேரம். “இதற்கென்ன அர்த்தம் இளவரசரே?” என்று வினவினாள் வீர பாண்டியனை நோக்கி நீண்ட யோசனைக்குப் பிறகு.

“கருவுற்றிருந்தாலும் கொற்றைச் செல்வி கொற்கைச் செல்விதான். வீரன் மகள் வீராங்கனைதான்!” என்றான் வீரபாண்டியன்.

“எனக்குப் புரியவில்லை வீரபாண்டியரே.” என்றாள் குறிஞ்சி.

“குறிஞ்சி! இளநங்கை ஆண்பிள்ளை போல் வளர்ந்தவன் குதிரையெற்றம், சிலம்பம், வாட்போர் சகலத்தையும் இளவயதில் பயின்றவள். அவளைத் தொந்தரவு செய்ய முயன்ற வாலிபர் இருவரைக் கொற்கையில் காலை உடைத்தவள்; ஒருவனுக்குக் கத்திக் காயமும் ஏற்பட்டதாகக் கேள்வி. வெகு முரட்டுப் பெண். பயம் சிறிதும் அறியாதவன். அவளைக் கண்டு கொற்கையில் அஞ்சாத ஆடவரில்லை. நான் ஒருவன்தான் எது எப்படியானாலும் ஆகட்டும் என்று துணிவுடன் அவளை நெருங்கினேன் …” என்றான் வீரபாண்டியன்.

“ஆம் ஆம். அவள் பெண்மையைத் தூண்டியது நீங்கள் தானே,” என்றாள் குறிஞ்சி.

“இருப்பினும் பிறவிக்குணம் போகவில்லை. என்ன அலட்சியமாகப் பல்லக்கை விட்டுக் குதிரையில் தாவிப் போய்விட்டாள்!” என்ற வீரபாண்டியன் அவள் சென்ற திக்கை நோக்கிக்கொண்டே நின்றான். பிறகு மெள்ள சங்கோசத்துடன், ” இதனால் அவள்…” என்றான் தயங்கியவாறு.

பெண்கள் கருவுற்றார்கள் என்று கேள்விப்பட்டதுமே ஆண்களுக்கு உண்டாகும் அச்சத்தையும் எச்சரிக்கையையும் நினைந்து உள்ளூர நகைத்துக் கொண்டாள் குறிஞ்சி. இந்த எச்சரிக்கை முன்னதாக இருந்தால் இந்தத் தொல்லை இல்லையே’ என்றும் உள்ளூரச் சொல்லிக் கொண்ட குறிஞ்சி “இதனால் இளவரசிக்கு எக்கெடுதலும் ஏற்படாது. இரண்டாவது மாதந்தான் துவங்கியிருக்கிறது. நான் மருத்துவச்சியாதலால் எனக்குத் தெரிந்தது மற்றவர்களுக்குத் தெரியாது” என்று தைரியமூட்டினாள்.
.
வீரபாண்டியனிடமிருந்து ஆசுவாசப் பெருமூச் சொன்று வெளிவந்தது. “சரி சரி, பல்லக்கை எடுத்துச் செல்லுங்கள்” என்று கூறிவிட்டுச் சுந்தரபாண்டியன் கூடாரத்தை நோக்கி நடந்தான் வீரபாண்டியன்.

அங்கு மன்னனுடன் நீண்ட நேரம் படைகளை நகர்த்துவது சம்பந்தமாகப் பேசிக்கொண்டிருந்தான். பிறகு உதவிப் படைத் தலைவர்களை வரவழைத்தான் மன்னனின் கூடாரத்துக்கு. சுமார் பத்து உதவிப்படைத் தலைவர்கள் கூடினார்கள் இளவரசன் ஆணைக்குக் கீழ்ப்படிந்து. அவர்களை நோக்கி வீரபாண்டியன் கூறினான்: “இங்கிருந்து பரலி ஒரு நாள் பயணத்திலிருக்கிறது. ஆனால் நாம் மலைப்பாதைகள் வழியாகவும், பாதைகளற்ற வழிகளிலும் செல்லவேண்டியிருப்பதால் பயணம் ஒன்றரை நாட்கள் பிடிக்கும் என்று நினைக்கிறேன். நம்மிடம் நமது படையினர் ஐயாயிரவர் தவிர, எரிபரந்தெடுத்தலில் பாண்டிய மன்னர் காட்டிய கருணையைக் கண்டு நமது படையில் சேர்ந்தவர்கள் ஆயிரமும் சேர்ந்து சுமார் ஆறாயிரம் வீரர்கள் இருக்கிறார்கள்! தவிர இந்திரபானுவைச் சேர்ந்த வீரர்கள் பலர் பரலியுள் இருக்கிறார்கள். ஆனால் அந்த வேவுப் படையைப்பற்றி நான் திட்டமாக எதுவும் சொல்வதற்கில்லை. இந்திரபானுவைச் சேரமன்னன் சிங்களம் கடத்திவிட்டதாக நமக்குச் செய்தி வந்திருக்கிறது. ஆகவே நாம் இந்த ஆறாயிரம் வீரர்கள் கொண்ட படையைக் கொண்டுதான் நமது போர்த்திட்டத்தை அமைக்க வேண்டும். இதிலும் புதிதாகச் சேர்ந்த ஆயிரம் வீரர்களைக் கணக்கில் சேர்க்காது ஒடுக்க வேண்டும். நமது படையிலுள்ள ஐயாயிரம் வீரர்களைக் கொண்டுதான் பரலியின் முற்றுகையைத் துவங்க வேண்டும்…’
இதைச் சொல்லி சற்று நிறுத்தி உபதலைவர்களை உற்று நோக்கினான் வீரபாண்டியன். அவர்கள் முகங்களில் எந்த வித மாறுதலுமில்லை. கட்டளையைக் கேட்கும் கர்ம வீரர்களாக உட்கார்ந்திருந்தார்கள். வீரபாண்டியன் தொடர்ந்து சொன்னான்: “நமது படைபலத்தைவிட

நாலைந்து மடங்கு பெரியது சேரன் படைபலம். சுமார் இருபதினாயிரம் வீரர்கள் பரலியில் நம்மை எதிர்க்கப் போர் சன்னத்துடன் நிற்கிறார்கள். மதிள்களில் விற்பொறிகளும், வேற்பொறிகளும் கிழக்கைச் சதா எதிர் பார்த்த வண்ணம் தயாராக இருக்கின்றன. அந்தக் கிழக்குத் திசைக்கு, பரலியின் பிரதான வாயிலுக்கு நாம் செல்கிறோம் இதோ கவனியுங்கள்.”

இப்படிச் சொல்லிவிட்டுக் கையில் அதுவரை மடக்கி வைத்திருந்த புலித்தோலை விரித்தான் அவர்களுக்கெதிரே இளவரசன். அதில் அவன் கைக்கொண்டு இழுத்திருந்த கோடுகளையும் குறிகளையும் உற்றுப் பார்த்தனர் உபதலைவர்கள்.

“இதுதான் பரலியின் நான்கு வாயில்கள். பிரதான வாயிலான கிழக்கு வாயிலுக்கெதிரேயுள்ள மலைக் காட்டுக்கு இப்பொழுது நாம் செல்கிறோம். அங்குள்ள முகப்புக் காட்டை சேரன் அழித்து அதை வெட்ட வெளியாக்கியிருக்கிறான். அதன் முகப்பில் நாம் சென்றால் விற்பொறிகளும் வேல்பொறிகளும் நம்மை அழித்துவிடும். ஆகவே சற்றுத் தள்ளி மலையின் மேற்பகுதியிலிருக்கும் காட்டுக்கு நாம் செல்கிறோம். அங்கு சென்றதும் படை ‘நான்காகப் பிரிக்கப்படும். ஒரு பிரிவு பிரதான வாயிலுக்கெதிரில் இருக்கும். இன்னொரு பிரிவு சற்றுத் தள்ளி ‘மலைச்சரிவில் உள்ள தெற்கு வாயில் முன்பும் மற்றொரு பிரிவு வடக்கு வாயில் முன்பும் நிற்கும். படைகள் மறைந்தே நிற்கும் அடர்ந்த மரங்களுக்கிடையில். நட்ட நடுவிலுள்ள பரலியின் பிரதான வாயிலுக்கெதிரே மலையின் மேற்பகுதியிலுள்ள காட்டில் நானும் இருப்பேன். நமது புதிய பயங்கரப் பொறிகளும் இருக்கும். மன்னரும் என்னுடனிருப்பார். என் படைக்கு இருபுறத்திலும் அதாவது தெற்குப் புறத்திலும் வடக்குப் புறத்திலும் இரு படைப் பிரிவுகள் இருக்கட்டும், இடதுகை வலது கைபோல். மீதி ஏற்பாட்டைப் பிறகு சொல்கிறேன்.”

இதைக் கேட்ட உபதலைவன் ஒருவன் சந்தேகமொன்றைக் கிளப்பினான். “படைகள் நான்கு பிரிவாகப் பிரிக்கப்படும் என்கிறீர்கள், மூன்று பிரிவுகளில் இடங்களைக் குறிப்பிட்டீர்கள். நான்காவது பிரிவைப்பற்றி ஏதும் சொல்லவில்லையே?” என்று வினவினான்.

“அந்தப் படை ஒரு பெண்ணின் தலைமையில் இயங்கும்.”

உபதலைவர்கள் துணுக்குற்று எழுந்தார்கள். “பெண்ணின் தலைமையிலா? எந்தப் பெண் அவள்?”

சுந்தரபாண்டியனுக்கும் இது புதுமையாகயிருக்கவே, “யார் தம்பி அது? இளநங்கையும் போய்விட்டாளே?” என்று வினவினான்.

“குறிஞ்சி!” என்றான் வீரபாண்டியன் மெதுவாக.

”குறிஞ்சியா!” என்றான் சுந்தரபாண்டியன் வியப்புடன்.

“ஆம்” என்ற வீரபாண்டியன் பரலிப் போரில் குறிஞ்சியின் பணியைப்பற்றி விவரித்தான். அதைக் கேட்ட உபதலைவர்கள் திக்பிரமையடைந்தனர். மன்னனும் அதற்கு ஒப்ப மறுத்தான். “மிகப் பயங்கரமான யோசனை தம்பி! அதை விட்டுவிடு. குறிஞ்சி அழிந்து விடுவாள்,” என்றான் திட்டமாக.

ஆனால் வீரபாண்டியன், மன்னன் சொன்னதை ஒப்புக்கொள்ள மறுத்து, புலித்தோலைக் கூடாரத் தூணொன்றில் ஆணி கொண்டு அறைந்து, “இதைக் கவனியுங்கள்,” என்று தனது போர்த்திட்டத்தை விளக்கலானான்.

Previous articleRaja Muthirai Part 2 Ch60 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Muthirai Part 2 Ch62 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here