Home Historical Novel Raja Muthirai Part 2 Ch68 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

Raja Muthirai Part 2 Ch68 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

79
0
Raja Muthirai Part 2 Ch68 Raja Muthirai Part 2 Sandilyan, Raja Muthirai Part 2 Online Free, Raja Muthirai Part 2PDF, Download Raja Muthirai Part 2 novel, Raja Muthirai Part 2 book, Raja Muthirai Part 2free, Raja Muthirai,Raja Muthirai Part 2 Story in tamil,Raja Muthirai Part 2 Story,Raja Muthirai Part 2 novel in tamil,Raja Muthirai Part 2 novel,Raja Muthirai Part 2 book,Raja Muthirai Part 2 book review,ராஜ முத்திரை ,ராஜ முத்திரை கதை,Raja Muthirai Part 2tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2full story,Raja Muthirai Part 2 novel full story,Raja Muthirai Part 2audiobook,Raja Muthirai Part 2audio book,Raja Muthirai Part 2full audiobook,Raja Muthirai Part 2full audio book,
Raja Muthirai Part 2 Ch68 | Raja Muthirai | TamilNovel.in

Raja Muthirai Part 2 Ch68 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

ராஜ முத்திரை இரண்டாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 68 பிறவிக் குணம்

Raja Muthirai Part 2 Ch68 | Raja Muthirai | TamilNovel.in

மார்பில் மரணகாயமுற்று மண்ணில் மல்லாந்து கிடந்த அந்த நேரத்திலும், மன்னனான வீரரலியின் வதனத்தில் மந்தஹாசம் லேசாக மண்டிக் கிடந்தது. வழக்கமாக அவன் முகத்தில் இருக்கும் விஷமச்சாயையும், இதழ்களில் துளிர்க்கும் காமப் புன்முறுவலும் அந்த நேரத்திலும் இருக்கவே செய்தது. அவன் மண்ணில் கிடந்ததும் புரவியிலிருந்து விழுந்த வேகத்தில் அவன் தலைக்கவசம் தெறித்து அப்பால் கிடந்ததுமே அவன் தோல்வியைச் சுட்டிக் காட்டினவே யொழிய அவன் முகத்தில் அத்தகைய குறி ஏதும் தெரியவில்லை. அப்பொழுதும் வாளை இறுகப் பிடித்திருந்த கை போர்ச் சன்னத்தை மன்னன் இழக்க வில்லை என்பதை பலமாக அறிவுறுத்தியது. சுந்தர பாண்டியன் வெற்றி முரசு முழங்கியதால் ஆங்காங்கிருந்த படைப் பிரிவுகள் தொடர்ந்து முரசையும் சங்கங்களையும் ஊதியதன் விளைவாக அந்தக் கிழக்கு வாயிலில் ஏற்பட்ட ஒலிகள் கூட வீரரவியின் வீரத்துக்குச் சான்று கூறுவன போலிருந்தது. அப்படி வீழ்ச்சியிலும் கம்பீரமாயிருந்த வீரரவியைப் பாண்டிய சகோதரர் இருவரும் வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றன. நீண்ட நேரம். பிறகு வீரபாண்டியன் சேரமன்னன் பக்கத்தில் மண்டியிட்டு உட்கார்ந்து அவன் மார்பில் புதைந்து கிடந்த தனது பொற்கோடரியைப் பிடுங்கத் தனது கையைக் கொண்டு சென்றான். “நில்!” என்ற அதட்டலான குரல் அவன் கையைத் தேக்கியது. வீரபாண்டியன் உட்கார்ந்த வண்ணமே தனது கண்களை ஏறெடுத்து அதிகாரச் சொல் வந்த திசையை நோக்கினான்.

சுந்தரபாண்டியன் கண்களும் அந்தத் திசையை நோக்கின. வீரரவியின் தலைப்பக்கத்திலிருந்த வீரர்களை விலக்கிக் கொண்டு பரதப்பட்டன் உள்ளே நுழைந்தான். அவனைத் தொடர்ந்து அந்த வீரர் வளையத்துள் குறிஞ்சியும் நுழைந்தாள்.

பரதப்பட்டனின் சின்னஞ்சிறு கண்கள் பந்தங்களின் ஒளியில் நன்றாகத் தீட்டப்பட்ட வேல்களின் நுனிகள் போல் பளிச்சிட்டதைப் பாண்டிய சகோதரர் இருவரும் கண்டனர். நிர்ப்பயமாக எவரையும் லட்சியம் செய்யாத களை முகமெங்கும் விரவிக் கிடக்கப் பரதப்பட்டன் மெள்ள சேரமன்னனை அணுகி வந்தான். சற்று நேரம் மன்னன் முகத்தைக் கூர்ந்து கவனித்துக் கொண்டு நின்றான். அடுத்து அவன் கண்கள் வீரபாண்டியன் பொற்கோடரிமீது ஒரு விநாடி நிலைத்தது. பிறகு பரதபட்டன் வீரபாண்டியனை நோக்கிக் கூறினான் உணர்ச்சியற்ற குரலில், “எழுந்திரு வீரபாண்டியா! உன் அலுவல் முடிந்து விட்டது!” என்று.

வீரபாண்டியன் அப்பொழுதும் மண்டியிட்ட நிலையிலிருந்து எழுந்திருக்கவில்லை . பரதபட்டன் மீது தனது கழுகுக் கண்களை நாட்டினான். எதிரே நின்றவன் வயது, தோற்றம் இவற்றிலிருந்தே அவன் பரதபட்டன் என்பதைப் புரிந்து கொண்டான். அவன் தனக்கெப்படி உத்தரவிட முடியும் என்ற கோபத்தால், “நீ யார் எனக்கு உத்தரவிட?” என்று சீறினான்.

பரதப்பட்டன் கண்களில் துளிர்த்தது, கோபமல்ல. பெரும் பரிதாபம் அவனை ஆட்கொண்டது. “வெற்றியில் அடக்கத்தைக் காட்டுபவன்தான் வீரன், பதட்டத்தைக் காட்டுபவன் பதீதன் , படுகளத்தில் வீழ்ந்துவிட்ட எதிரியிடம் வீரத்தைக் காட்டும் நிலைக்கோ அவனை அவமானப்படுத்தும் நிலைக்கோ பாண்டியர் வீரம் இழந்து விடவில்லையென்று நினைக்கிறேன்” என்று பரதபட்டன் சற்று எட்ட நின்றிருந்த ஜடாவர்மனை நோக்கினான்.

எழுந்திரு தம்பி! உனக்கு உத்தரவிடுபவர் குருநாதராயிருக்க வேண்டும்,” என்றான் சுந்தரபாண்டியன் நிதானமான குரலில்.

வெற்றியிலும் நிதானத்தைக் காட்டிக் கொண்டு அமைதியான சமயத்தில் பார்க்கும் சிங்கத்தின் பார்வையுடன் நின்றுகொண்டிருந்த பாண்டிய மன்னனுக்குத் தலை தாழ்த்திய பரதபட்டன் சேரமன்னனை நோக்கி மண்டி யிட்டு உட்கார்ந்தான். வீரரவியின் கண்களை விரித்துப் பார்த்தான். நாசியில் கையை வைத்துப் பார்த்தான். பிறகு மார்பில் இருந்த கோடரியைக் கவனித்தான். வீரரவியின் இரும்புக் கவசத்தைப் பிளந்து கொண்டு கோடரி மார்பில் புதைந்துவிட்டதைக் காண வியப்புற்ற பரதபட்டன் அந்த வியப்புக் கண்களால் வீரபாண்டியனை நோக்கி, “நன்று வீர பாண்டியா! நன்று! பெருவீரன் நீ. இரும்புக் கவசத்தை உடைக்கும் அளவுக்கு வேகத்துடன் கோடரி வீச வல்லவன் தமிழகத்தில் நீ ஒருவன்தானென்று நினைக்கிறேன்” என்று பாராட்டினான். பிறகு பாண்டிய மன்னனை நோக்கி, “மன்னவா! பாண்டிய வீரம் போரை வென்றது. பாண்டியர் தர்மம் இனி என்ன செய்யப் போகின்றது?” என்று வினவினான்.

“குருநாதர் தர்மம் தெரிந்தவர் எனக் கேள்விப் பட்டிருக்கிறேன். ஆகவே அடுத்து ஆக வேண்டியதை நீங்களே நிர்ணயிக்கலாம்” என்றான் சுந்தரப்பாண்டியன்.

“நன்றி மன்னா! உன் அடக்கத்துக்கு நன்றி! உன்னைத் தென்னவன் என்றழைக்கிறார்கள் புலவர்கள். இந்த நிதானமும், மேம்பாடும் உன்னைத் தென்னகம் முழு வதையும் ஆளவைக்கும்” என்று சுந்தரபாண்டியனை நோக்கிக் கூறிய பரதப்பட்டன் பக்கத்திலிருந்த வீரனை அழைத்து, “சேரர் சேனாதிபதியை அழைத்துவா! ஆங்காங்கு போர் நிறுத்தத்துக்கு ஏற்பாடு செய்” என்றான்.

வீரன் செல்ல அவசியமில்லாது போயிற்று. சேனாதிபதியே வீரர்களை விலக்கிக்கொண்டு வீரர் வளையத்துக்குள் வந்து மண்ணில் கிடந்த மன்னனைக் கண்டு மண்டியிட்டான். பிறகு எழுந்து, “குருநாதரே! போரை நிறுத்த ராமவர்மனை அனுப்பிவிட்டேன். மன்னரை எடுத்துச் செல்ல அரண்மனை அலங்காரம்

ரதம்…” என்று மேலும் ஏதோ பேசப் போன சேனாதிபதியைத் தடுத்த பரதபட்டன், “அலங்கார ரதம் வேண்டாம். மன்னன் இறக்க இன்னும் ஒரு ஜாமம் பிடிக்கும்” என்றான்.

பேரதிர்ச்சி அங்கிருந்தவரை ஊடுருவிச் சென்றது. “என்ன வீரரவி இறக்கவில்லையா?” என்ற கேள்வி பாண்டிய சகோதரர் இருவரிடமிருந்தும் ஏககாலத்தில் எழுந்தது.

“இல்லை. இறக்கவில்லை. ஆனால் இறப்பது திண்ணம், மிஞ்சினால் இன்னும் ஒரு ஜாமம் உயிருடன் இருக்கலாம்,” என்றான் பரதப்பட்டன்.

“அப்படியானால் மன்னனை அரண்மனை எடுத்துச் செல்வோம்” என்ற சேனாதிபதி வீரர்களை அழைக்கக் கையைத் தட்ட முயன்றான்.

பரதப்பட்டன் குரல் கடுமையுடன் ஒலித்தது. “யாரும் தேவையில்லை” என்று கூறிவிட்டு வீரபாண்டியனை நோக்கிய பரதபட்டன் கேட்டான், “வீரபாண்டியா! மன்னனை உன்னால் அசையாமல் தூக்கமுடியுமா?” என்ற.

‘முடியும்’ என்பதற்கு அறிகுறியாகத் தலையை ஆட்டினான் வீரபாண்டியன்.

“எடுத்து என் கைகளில் கொடு” என்று உத்தர விட்டான் பரதப்பட்டன்.

இது மேலும் அதிர்ச்சியைத் தந்தது பாண்டிய சகோதரர்களுக்கு.. “குருநாதரே! உங்களால் வீரரவியை…” என்ற சுந்தரபாண்டியனைக் கைதேக்கி நிறுத்திய குருநாதன் “உம்” என்ற ஒலி மூலமே உத்தரவிட்டான் வீர பாண்டியனுக்கு.

வீரபாண்டியன் வீரரவியின் கழுத்துக்கடியிலும் இடுப்புக்கடியிலும் தனது கைகளைக் கொடுத்துத் தூக்கினான் வீரரவியை. மன்னனைப் பரதபட்டன் தனது கைகளில் வாங்கி அவனை அசையாமல் தாங்கியவண்ணம் அரண்மனையை நோக்கி நடக்கலானான். பரதபட்டன்

போவதைக் கவனித்த சுந்தரபாண்டியன், “தம்பி! நீயும் உடன் செல். போரை முழுவதும் நிறுத்த ஏற்பாடுகளைச் செய்துவிட்டு நான் வருகிறேன்” என்று உத்தரவிட வீர பாண்டியனும் அரண்மனை நோக்கிச் சென்றான்.

மன்னனை அரண்மனையிலிருந்து அவனது அந்தரங்க அறைப் பஞ்சணையில் படுக்க வைத்த பரதபட்டன் தனது மந்திர தண்டத்தைச் சிறையிலிருந்து வரவழைத்து அதன் பிடியைத்திருகிக் கழற்றி உள்ளிருந்த கூரிய கத்தியை எடுத்தான். பிறகு மன்னன் மார்புக் கவசத்தை லேசாகக் கத்தியால் அசைத்துக் கோடரியுடன் சேர்த்தே கழற்றினான். வீரரவியின் மார்பிலிருந்து குபுகுபு வென்று கிளம்பிய ரத்தத்தில் கையிலிருந்த பச்சிலையைக் கசக்கிப் பிழிந்து ஒரு துணியையும் வைத்து அழுத்திக் கட்டினான். பிறகு கசக்கிய அந்தப் பச்சிலையை நாசியிடம் நீட்டினான். வீரரவியின் கண்கள் மெல்லத் திறந்தன. அவன் வாயில் குறிஞ்சியைக் கொண்டு மதுவையும் புகட்டினான் குருநாதன்.

வீரரவியின் கண்கள் அக்கம்பக்கத்தில் நின்ற முகங் களைக் கவனித்தன. அவன் இரு ராணிகளும் நீர் நிரம்பிய விழிகளுடன் அருகில் நின்றிருக்க அவன் காலடியில் வீர பாண்டியன் நின்றிருந்தான். குருநாதன் மஞ்சத்தில் வலப்புறத்தில் அவன் இடைக்கருகே நின்றிருந்தான். அவன் பக்கத்திலிருந்த குறிஞ்சியின் கண்களில் நீர் நிரம்பிக் கிடந்தது. அறையில் மௌனம் நிலவியது. பயங்கர மௌனம் அது. அந்தப் பயங்கரத்தை அறையின் பெரு விளக்குக்கூட அன்று அதிகப்படுத்திக் கொண்டிருந்தது. சுற்றி நின்றோரையும் விளக்கையுங் கூடப் பார்த்த வீரரவி மெள்ள முறுவல் கொண்டான். பிறகு உதடுகளைத் திறந்து “இன்னும் எத்தனை. நேரம், குருநாதரே!” என்று மெள்ள வினவினான்.

“ஒரு ஜாமம். அதிலும் சிறிது ஓடிவிட்டது,” என்றான் குருநாதன்.

“நான் வீரனா குருநாதரே?” என்ற மற்றொரு கேள்வி யைத் தொடுத்தான் வீரரவி சற்றுப் பெருமூச்சு விட்டுக் கொண்டே.

”அதில் சந்தேகமில்லை மன்னா!” என்றான் குருநாதன்.

வீரரவி தனது இரண்டு ராணிகளையும் சுட்டிக் காட்டினான். “வீரர்களின் மகிஷிகள் வீர மரணத்தைக் கண்டு கண்ணீர் வடிப்பதுண்டா ?” என்று வினவவும் செய்தான். அவன் இதழ்களில் இகழ்ச்சி மண்டியது. வீர பாண்டியனை நோக்கிக் கேட்டான் பிறகு, “நீ என்ன சொல்கிறாய் வீரபாண்டியா?” என்று.

“உன் வீரத்துக்கு உன் மார்பிலிருந்து எடுக்கப்பட்ட என் கோடரி அத்தாட்சி சேரமன்னா! ரணகளத்தில் போராடி எதிரி கையால் வீழ்கிறவன் வீரனாயிருக்காமல் வேறு எப்படியிருக்க முடியும்?” என்று வினவினான் வீரபாண்டியன் சற்றே உணர்ச்சி தொனித்த குரலில்.

வீரரலியின் முகத்தில் சாந்தி நிலவியது. அத்துடன் மீண்டும் அந்தப் பழைய விஷமப் புன்முறுவல் உதடுகளில் துளிர்த்தது. “வீரபாண்டியா! இந்தப் போர் இத்துடன் நிற்காது. போசளத்திலும், சிங்களத்திலும் தொடரும். நானில்லாவிட்டாலும் போர் இருக்கும்,” என்றான் தனது ஜன்ம வைரியை நோக்கி.

வீரபாண்டியன் பதிலேதும் சொல்லவில்லை அவனை அனுதாபத்துடன் நோக்கினாான். அந்த அனுதாபம் வீரரவியின் முகத்தில் சற்றுக் கோபத்தைப் படரவிட்டது. “வீரபாண்டியா! கொற்கையில் தொடங்கிய கதை பரலியில் முடியவில்லை. எந்த முத்தைக் கைப்பற்ற நீ கொற்கை வந்தாயோ, அந்த முத்து உன் கைக்கெட்டாத தூரத்திலிருக்கிறது. எந்த முத்துக்குமரிக்காக நீ இந்தப் பரலியைக் கொளுத்தினாயோ அந்த முத்துக்குமரியையும் நீ திரும்பப் பெறமுடியாது. போரை வென்றாய் வீர பாண்டியா! போரின் பலன் உனக்குக் கிட்டாது.” இதைச் சிரமப்பட்டுச் சிரமப்பட்டுச் சொன்ன வீரரவியின் கண்கள் திடீரென அறையின் ஒரு மூலையில் நிலைத்தன. அவற்றில் வியப்புப் படர்ந்தன. “நீ! நீ!” என்ற சொற்கள் அவன் வாயிலிருந்து எழுந்தன. அவன் சொற்களைத் தொடர்ந்து அறைமூலையிலிருந்த உருவம் அவனை நோக்கி நகர்ந்தது. “நான் இறந்து விட்டேனா? இது கனவா?” என்றான் வீரரவி.

“நீ இறக்கவில்லை மன்னா! இது கனவும் அல்ல” சான்று கூறிக்கொண்டே இந்திரபானு மன்னனை அணுகி வந்தான். அவன் முகத்தைக் கண்ட வீரரவியின் கண்கள் மட்டுமல்ல. குறிஞ்சியின் கண்களிலும் வியப்பு மிதமிஞ்சித் தெரிந்தது.

இந்திரபானுவின் முகத்தில் அந்த விபரீதத் தழும்பு களைக் காணோம். பயங்கர விகாரத்தைக் காணோம். சுட்ட புண்ணின் குழிகளைக் காணோம். அவன் முகம் பழைய சுந்தரமுகமாயிருந்தது. கண்கள் விஷமச் சிரிப்பைக் கக்கின. “குருநாதர்! ஏமாற்றி விட்டார்… நானே கடைசியில் பார்த்தேனே” என்று வீரரவி தட்டுத் தடுமாறிப் பேசினான்.

குருநாதன் சொன்னான்: “சேரமன்னா! உன்னை நான் ஏமாற்றவில்லை. கடைசியாக நீ பார்த்தது அவன் முகம் பழைய நிலைக்குத் திரும்புமுன்பிருந்த நிலை. பச்சிலைச் சாறும் தன்வந்திரிக் குழம்பும் முகத்தில் ஊறி விட்டதாலிருந்த செயற்கைத் தோற்றம். ஒரு நாள் பொறுத்து உண்மையைப் புரிந்து கொண்டிருப்பாய். உன் கண்களை மறைத்தது ஒன்று அவசரம், இன்னொன்று உன் தயாள குணம்,” என்று. “நீ இந்திரபானுவைப் பார்த்ததும் இவனை விடுதலை செய்து விடுங்கள்’ என்றாய். அவன் பட்டுக் கவசம் போட்டுக் கொண்டது முகவிகாரத்தை மறைக்க என்று நினைத்தாய். இரண்டும் தவறு மன்னா. நீ அவனைச் சுதந்திரமாக உலாவவிட்டதும் தவறு. பட்டுக் கவசத்தை நீக்கி அவன் நிலை காணாததும் தவறு. மூன்றாவது தவறும் ஒன்று உண்டு. இவனை முத்துக் குமரியுடன் சிங்களத்துக்கு அனுப்பியதும் தவறு” என்றும் கூறினான் குருநாதன்.

“மூன்றாவது தவறல்ல குருநாதரே!” என்றான் இந்திரபானு.

“ஏன்?” என்று கேட்டான் குருநாதன்.

“நான் சிங்களம் செல்லவில்லை.”

“அப்படியானால் நீ சென்ற மரக்கலம்…”

“என்னுடையது.”

“உன்னுடையதா?”

“பல நாட்களாக அது நகரத்தின் பின்புறத்தில் நின்றி ருந்தது. நகரத்துள்ளும் ஒற்றர் கூட்டம் இருக்கிறதல்லவா….?”

”ஆம். ஆம். இருந்தது.”

“அதை உபயோகித்து மரக்கலத்தைக் கைப் பற்றினேன். மாலுமிகள் அடித்தளச் சிறையிலிருந்தார்கள். இருப்பினும் அந்த மரக்கலத்தின் தலைவனை மட்டும் வைத்துக் கொண்டேன் எனது உதவிக்கு. மன்னன் எங்களை அந்த மரக்கலத்துக்கு அனுப்புவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே அது என் கைவசமிருந்தது. அதை…”

“அதை?”

“சிங்களம் நோக்கி ஒரு நாள் செலுத்தினேன். பிறகு தலைநகரின் கண்ணுக்குப் படாமல் தூரத்தில் நிறுத்தினேன். முரசுகள் காதில் விழும் தூரத்தில் நானிருந் தேன்.”

இந்திரபானுவின் சொற்கள் சுரீல் சுரீலென வீரரவியின் இதயத்தில் தைத்தன. “முத்துக்குமரியின் முத்துப்பெட்டிகளெல்லாம் என்னிடம் பத்திரமாயிருக் கின்றன” என்ற இந்திரபானுவின் சொற்களைக் கேட்டு, “துரோகி’ என்ற பேரொலி கிளப்பினான். வீரரவி தனது சக்தியை மீறி.

“இப்படி என்னை அழைப்பது எல்லோருக்கும் வழக்கமாகி விட்டது. ஒருமுறை முத்துக்குமரிகூட இப்படித் தான் அழைத்தாள் என்னை, கொட்டுந்தளத்தில் உங்களிடம் சேர்த்தபோது” என்றான் இந்திரபானு வீரரவியை நோக்கி.

அதைக் கேட்ட பின்பு முதன் முதலாக வீரரவியின் கண்களில் தோல்விக் குறி தெரிந்தது. “இப்பொழுது தோற்றுவிட்டேன் குருநாதரே!” என்றான் அவன் சுவாசம் பெரிதாக வாங்க.

பரதபட்டன் பதில் கூறவில்லை . மன்னன் நாடியைப் பிடித்துப் பார்த்துவிட்டு மற்றவர்களை அமைதியுடன் இருக்கும்படி கையமர்த்தினான். வீரரவி வீரமரணத்தை எய்திக் கொண்டிருந்தான் மெள்ள மெள்ள. அந்தச் சமயத்தில் அவன் கடையிதழ்களில் காமமும் விஷமமும் கலந்த சாயை விரிந்து கிடந்தது. “பிறவிக்குணம் யாரையும் விடுவதில்லை கடைசிவரை,” என்று முணுமுணுத்தான் பரதபட்டன்.

Previous articleRaja Muthirai Part 2 Ch67 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Muthirai Part 2 Ch69 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here