Home Historical Novel Raja Muthirai Part 2 Ch69 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

Raja Muthirai Part 2 Ch69 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

104
0
Raja Muthirai Part 2 Ch69 Raja Muthirai Part 2 Sandilyan, Raja Muthirai Part 2 Online Free, Raja Muthirai Part 2PDF, Download Raja Muthirai Part 2 novel, Raja Muthirai Part 2 book, Raja Muthirai Part 2free, Raja Muthirai,Raja Muthirai Part 2 Story in tamil,Raja Muthirai Part 2 Story,Raja Muthirai Part 2 novel in tamil,Raja Muthirai Part 2 novel,Raja Muthirai Part 2 book,Raja Muthirai Part 2 book review,ராஜ முத்திரை ,ராஜ முத்திரை கதை,Raja Muthirai Part 2tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2full story,Raja Muthirai Part 2 novel full story,Raja Muthirai Part 2audiobook,Raja Muthirai Part 2audio book,Raja Muthirai Part 2full audiobook,Raja Muthirai Part 2full audio book,
Raja Muthirai Part 2 Ch69 | Raja Muthirai | TamilNovel.in

Raja Muthirai Part 2 Ch69 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

ராஜ முத்திரை இரண்டாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 69 மூன்றாவது முத்திரை

Raja Muthirai Part 2 Ch69 | Raja Muthirai | TamilNovel.in

பரலியின் வீழ்ச்சியோடு கூற்றத்தின்வாய் வீழ்ந்த வீர ரவியின் கொற்றத்தை ஏற்கவோ, பெற்ற வெற்றியைக் கொண்டாடவோ காத்திராமலே பாண்டியநாடு சென்றான் முதலாம் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன். வீரரவி வீர மரணமெய்திய மறுநாளே சேரநாட்டு மந்திரிப் பிரதானி களைக் கொலு மண்டபத்திற்கு வரவழைத்த பாண்டிய மன்னன் வீரரவியின் துக்கத்தை முறைப்படி ஒரு வாரம் கொண்டாடும்படி உத்தரவிட்டான். “பாண்டிய நாட்டு இளவரசன் இன்னுமிரண்டு நாள் இங்கிருந்து நகரையும் சுற்றுப்புறத்தையும் கட்டுதிட்டத்துக்குக் கொண்டு வருவான். பிறகு இந்நகரின் நிர்வாகம் இளவரசனின் உதவித் தலைவனான இந்திரபானுவிடம் ஒப்படைக்கப் படும். நீங்களெல்லோரும் சேர நாட்டில் இனிமேலாவது அமைதி நிலவ ஒத்துழைப்பீர்களென்று நினைக்கிறேன்” என்று அறிவித்தான். அத்துடன் கூறினான், “சேரநாட்டு மக்களிடம் எனக்கு எந்தவித விரோதமுமில்லை. சேரமன்னான வீரரவியின் மரணமோ பரலியின் வீழ்ச்சியோ எனக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை. உள்ள மூவேந்தரும் பரஸ்பரம் வெட்டிமடிவதில் பொருளில்லை. இருப்பினும் காலகதியை, வரலாற்று வெள்ளத்தைத் தடை செய்யத் தனிமனிதனாலோ தனி அரசனாலோ முடிவ தில்லை. அத்தகைய பெருவெள்ளத்தின் நட்டநடுவில், பிரவாகத்தின் பெருவேகத்தினிடையில் இன்று தமிழர்கள் இருக்கிறார்கள். அந்த வெள்ளத்தில் நீந்திக் கரையேற வெளிச் சக்திகளின் விபரீதத்திலிருந்து தமிழ்ப் பெரு மக்களை, அவர்கள் பொருட் செல்வத்தை, அருட் செல்வத்தை கலைச்செல்வத்தை ஆகிய அனைத்தையும் காக்க வேண்டியிருக்கிறது. அதற்காகப் பாண்டியநாடு எழுந்திருக்கிறது. ஒரு சமயம் இந்தப் பணி சேரரிடத்தில் இருந்தது. பிறகு சோழரிடம் மாறியது. இப்பொழுது பாண்டிய நாட்டிடம் மாறியிருக்கிறது. பாரதம் இதுவரை காணாத தமிழ்ப் பேரரசைப் பாண்டிய நாடு நிறுவும். அதற்கு நீங்கள் உதவுவீர்களென்று எதிர்பார்க்கிறேன். இது சோழநாடு, இது பாண்டியநாடு, இது சேரநாடு என்பதை மறவுங்கள். தமிழினத்தின் சக்திப் பெருக்கென்பது பொதுப்பட்ட ஒன்று என்று நினையுங்கள். நமது சாம்ராஜ்யம் வெகு விரைவில் விரிவுதை நீங்கள் பார்ப்பீர்கள்,” என்று மிகக் கம்பீரமான குரலில் அறிவித்தான் ஜடாவர்மன் அன்று. அடுத்த மூன்று ஜாமங்களுக்கெல்லாம் புறப்பட்டான் மதுரை நோக்கி.

மன்னனாக சேரநாட்டின் முன்பு தோன்றிய ஜடா வர்மன் சக்கரவர்த்தியாகத் திரும்பினான் கூடல் மாநகர் நோக்கி. வெற்றித் தாரைகள் முழங்க மீன் கொடியொன்றைப் புரவி வீரனொருவன் முன்னால் தாங்கிச் செல்ல தனது படையின் ஒரு பகுதியுடன் புறப்பட்டான் சங்கம் வளர்த்த அந்தத் தங்க நகர் நோக்கி. மன்னன் புறப்படுவதற்கு முன்பு அவனைத் தனி அறையில் சந்தித்த வீரபாண்டியன் கேட்டான், “முத்துக்குமரிக்குத்தான் இனி அலுவல் இல்லையே. அழைத்துச் செல்கிறீர்களா? அவளை மதுரைக்கு?” என்று.

ஜடாவர்மன் கண்கள் “ஏன் அலுவலில்லை?” என்று கேட்டு இந்திரபானுவை நோக்கிச் சற்று தள்ளி நின்றிருந்த முத்துக்குமரியையும் நோக்கின.

“யாரை வேவு பார்க்க வேண்டும் அவள்?” என்றான் வீரபாண்டியன் வேண்டுமென்றே.

“இந்திரபானுவை வேவு பார்க்கட்டும். அவனும் வெளிநாட்டவன்தானே. கூடியவரையில் அவனைக் கண் காணிக்கச் சொல்,” என்ற ஜடாவர்மன் சிரித்தான் பெரிதாக.

“அவர்கள் திருமணத்தை நடத்திவிடட்டுமா?” என்று வினவினான் வீரபாண்டியன்.

“இப்பொழுது பாண்டியகுலத்தில் சாதாரணத் திருமணம் நின்றுவிட்டது. காந்தருவம் வலுத்து வருகிறது. யாருக்கு எப்படி எங்கே திருமணம் நடக்கிறது என்பது தெரிவதில்லை. பெரியவர்கள் காட்டும் பாதையும் ஒழுங்காயில்லை” என்று கூறித்தம்பியை நோக்கிப் பாண்டியன் ஜடாவர்மன் மிகப் பெரிதாக நகைத்தான். அதனால் சங்கடப்பட்ட வீரபாண்டியன், இந்திரபானு முத்துக்குமரி மூவரிடமும் விடைபெற்றுக் கொண்டு தலைநகர் நோக்கிக் கிளம்பிச் சென்றான்.

சேர மன்னனின் வீர மரணத்தையொட்டிய துக்க நாட்கள் சென்றதும், இந்திரபானுவுக்கும் முத்துக்குமரிக்கும் பரதபட்டனைக் கொண்டே திருமணம் நடத்தி சேரர் தலை நகரை இந்திரபானுவிடம் ஒப்படைத்துக் கிளம்பினான் வீர பாண்டியன், பரலி விட்டு. இந்திரபானுவுக்குத் துணையாக சுந்தர பாண்டியன் அழைத்துச் சென்றதுபோக மீதியிருந்த படையையும், உபயோகிக்காத தனது பயங்கர ஆயுதங்கள் எட்டையும் விட்டுச் சென்றான்.

இந்திரபானு நகரத்தை வெகு திறமையுடன் நிர்வகித் தான். பழுதுபட்ட கடற்படையையும் பழுதுபார்க்க ஏற்பாடு செய்தான். நகரத்தில் மீண்டும் கலை செழிக்கவும் மக்கள் மகிழவும் திட்டங்களை வகுத்தான். இந்திரபானுவின் திருமணம் முடிந்த அன்றே தனது குடிலையும், அதிலிருந்த கிருஷ்ண சர்ப்பத்தையும் நோக்கிச் சென்றுவிட்ட பரதபட்டனை அடிக்கடி நாடி, அவன் யோசனையுடன் பல காரியங்களைச் செய்து மக்கள் துயர் துடைத்தான். பரதப்பட்டனிடம் நேரிடையாகப் போக முடியாதபோது கூத்தனையும் சாத்தனையும் அனுப்பி னான்.

இத்தனையும் அவன் முத்துக்குமரி சிறையிருந்த அந்தப்புரக் கடைப்பகுதி அறையிலிருந்து கொண்டே செய்தான். அதை அவன் அரசியல் அறையாகவும் நிறுவிக் கொண்ட அன்றிரவு வெகு கோபத்துடன் கேட்டாள் முத்துக்குமரி, “ஏன் அரசியலுக்கு அந்தப்புரந்தான் இடமா?” என்று.

“ஆம்” என்றான் இந்திரபானு.

“ஏன்” என்று வினவினாள் முத்துக்குமரி.

“இது சேரநாடு என்பது ஒரு காரணம்…”

“அதனால்…”

“இங்கு பெண்வழி அரசுதான் உண்டு.”

“உம், உம்… இன்னொரு காரணம்.”

“நான் மணந்திருப்பது ஒரு வேவுகாரியை. வேவுத் தொழிலும் அரசியல் சம்பந்தப்பட்டது…” என்று கூறிய இந்திரபானு அவளை ஏறெடுத்து நோக்கினான். அன்று அவள் திருமண நாள். இரவு ஏறிவிட்ட சமயம் அது. அப்பொழுது தான் கஷ்டமளித்த பட்டாடைகளையும் பெரும் ஆபரணங்களையும் துறந்து அவன் முன் நின்றிருந்தாள்.

அந்தச் சமயத்திலும் அவள் எழில் அவன் கண்களைப் பறித்தது. அவள் கமலக் கண்களில் தெரிந்த கோபம்கூட அவளுக்கு இணையிலா அழகை அளித்தி ருந்தது. “நான் வேவு காரியானால் என்னை ஏன் மணந்தீர்கள்?” என்று வினவினாள் பாண்டியன் மகள்.

“பாண்டிய மன்னர் உத்தரவு. கீழ்ப்படிய வேண்டியது உபதலைவன் கடமை,” என்றான் இந்திரபானு.

“அதை முன்னிட்டுத்தான் அன்று அதோ அந்த உள்ளறையில் என்னைத் தொட்டுத் தூக்கினீர்களாக்கும்.”

“ஆம்.”
“இப்பொழுதும் அம்மாதிரி கட்டளை இருக்கிறதோ?”

“இருக்கிறது,” என்று கூறிக்கொண்ட அவளைத் தனது கையில் அலட்சியமாகத் தூக்கிக்கொண்டு உள்ளறைத் திரையை நோக்கிச் சென்றான் இந்திரபானு.

“எங்கே கொண்டு போகிறீர்கள்?” என்று பொய்த் திமிறல் திமிறினாள் அவள்.

” அலுவலிருப்பதாகப் பாண்டிய மன்னர் சொல்ல வில்லை?” என்று கேட்டு நகைத்தான் இந்திரபானு. அவன் கண்கள் வழக்கமான விஷமத்தைவிட அதிகச் சிரிப்பைக் கொட்டின. அடுத்த விநாடி உள்ளறைத் திரை விலகி மூடியது.

இது நடந்த மூன்றாம் நாள் வீரபாண்டியன் தன்னந் தனியாகக் கொற்கையின் பொருநையாற்றங்கரையில் நின்று அக்கரைக் காட்டையும் அதைத் தாண்டித் தெரிந்த கோட்டையையும் ஏறெடுத்து நோக்கினான். அன்றும் முழு மதி வான்வெளியில் தவழ்ந்து கொண்டிருந்தான். ஆனால் இரவு அதிகம் ஓடிவிட்ட நேரமல்ல அது. இருப்பினும் அவனுக்குப் பின்னிருந்த முத்தங்காடியின் இரைச்சல் பலமாயிருந்தது. ஏதோ புது மரக்கலங்கள் வந்ததன் காரணமாக வியாபாரக் கூட்டமும் காவலர் எச்சரிக்கையும் மிதமிஞ்சி இருந்தன. வீரபாண்டியன் எண்ணங்கள் இரண்டு மாதங்களுக்கு முன்பு ஓடின. அதனால் அவன் முகத்தில் மகிழ்ச்சி ரேகை மிதமிஞ்சிப் படர்ந்தது.

வெற்றி சூடி வந்த அவனை வரவேற்க யாரும் வர வில்லை. எந்த அறிவிப்புமில்லாமல் யாரும் தொடராமலே வந்தான் அவன் கொற்கைக்கு. ஆகவே வெற்றிக் கொண்டாட்டமோ களிவெறியோ ஏதுமில்லை கொற்கையில். கொண்டாட்டங்கள் அடங்கிவிட்ட காலம் அது. ஆகவே தன்னிந்தனியே தனது சாம்பல் நிறப் புரவியின் கடிவாளத்தைக் கையில் பிடித்த வண்ணம் பொருநைக் கரையில் இறங்கி அக்கரை நோக்கிச் சென்றான். அன்று அவன் ஆற்றைத் தாண்டுவதில் தான் எத்தனை மாறுபாடு! அவனைக் கண்டு அஞ்சியோடிய அஞ்சுகமில்லை, காட்டிலே கொலைகாரனில்லை, காட்டையடுத்த மேட்டிலே குறுவாள் பட்டு அவன் கிடக்கவும் இல்லையே!

எந்த இடைஞ்சலும் தேக்கமும் இல்லாத பயணம் அது. ஆனால் இளநங்கையைக் காணும் ஏக்கத்துடன் அவன் கோட்டைக்குச் சென்றான். அவன் வந்ததும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது கோட்டையில். வாணாதித்தர் ஓடிவந்து மருமகனை வரவேற்றார். இளநங்கை மட்டும் அவனை வரவேற்கவில்லை. அவன் உணவையும் தோழியே பரிமாறினாள். கடைசியில் பள்ளியறைக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்த பின்புதான் அவன் அவளைக் காண முடிந்தது.

அவள் தனது பஞ்சணையில் சாய்ந்திருந்தாள். வீர பாண்டியன் கதவைத் தாளிட்டு அவளருகில் பஞ்சணையில் உட்கார்ந்தபோதும் அவள் பேசவில்லை. அவள் கையொன்றை எடுத்து அவன் தன் கையுடன் இணைத்துக் கொண்டபோதும் வாளாவிருந்தாள் வாணாதித்தன் மகள். இன்னொரு கையால் முகத்தைத் திருப்பி, “கோபமா இளநங்கை?” என்று வினவினான் வீர பாண்டியன்.

அதற்கும் அவள் பதில் சொல்லவில்லை . அவள் விழி களில் கோபம் பொங்கிக் கொண்டிருந்தது. “என்னை எதுவும் கேட்கவேண்டாம்,” என்றாள் சிறிது நேரத்திற்குப் பிறகு.

“வேறு யாரைக் கேட்பது?”

“குறிஞ்சியைக் கேளுங்கள்.”

“அவள் இப்பொழுது முத்துக்குமரியின் பணிமகளாயிருக்கிறாளே.”

உங்களுக்கு மீண்டும் பணி மகளாக்கிக்கொள் ளலாமே. அவள் சொல்லைக் கேட்டுத்தானே என்னை இங்கு அனுப்பி விட்டீர்கள்?”

அன்று காட்டில் பல்லக்கைத் துறந்து புரவிமீது தாவி ஏறி வந்த இளநங்கையின் கோபம் தீரவில்லையென்பதைப் புரிந்துகொண்ட வீரபாண்டியன் தனது இரு கைகளையும் அவள் இடைக்குக் கீழே கொடுத்து அவளைச் சற்றே தூக்கினான். தூக்கிய வேகத்தில் உடலுடன் உடல் தாக்கிய நேரத்தில் சொன்னான்: “இளநங்கை, உன் நிலை அப்படியிருந்தது. அதற்காக அவளைக் கோபித்து என்ன பயன்?” என்று.

“என்ன நிலை?” கோபம் தணியாமலே கேட்டாள் இளநங்கை.

“கொற்கை முத்திரையை நீயே தாங்கும் நிலை,” என்ற வீரபாண்டியன் கரங்கள் அவளை இறுக்கின.

அந்த நிலையில் அவள் கோபம் சற்றுத் தணிந்தது. அவன் உணர்ச்சி வேகம் அவளை ஆட்கொண்டது. “இதோ இருக்கிறது உங்கள் முத்திரை” என்று விரலில் அணிந்திருந்த ராஜமுத்திரை மோதிரத்தைக் காட்டினாள் இளநங்கை.

வீரபாண்டியன் ஒரு கையை விடுவித்துக்கொண்டு, “இது ஒன்று போதுமா?” அந்த முத்திரைமோதிரத்தைப் பற்றி இரண்டு விரல்களால் நெருடினான்.

“ஏன் இன்னொரு முத்திரையும் கொடுத்திருக்கிறீர்களே?” என்ற அவள் தனது கண்களை அவன் கண்களுடன் உறவாட விட்டாள். அவள் முகத்தில் கோபம் மறைந்து சற்றே வெட்கத்தின் சாயை படர்ந்தது.

“இன்னொரு முத்திரையா?” என்று ஏதும் அறியாதது போல் வினவினான் வீரபாண்டியன்.

“ஆம், இதோ” என்று கூறிய இளநங்கை தன் கை மோதிரத்தைப் பிடித்திருந்த அவன் கையை எடுத்துக் கொண்டு போய் தனது வயிற்றில் வைத்தாள்.

வீரபாண்டியன் கை அந்த இடத்தில் நீண்டநேரம் நிலைத்துக் கிடந்தது. வாய் சொற்களை இழந்து கிடந்தது. வீரனான அவன் கண்களில் பெருமிதமும் காதலும் பொங்கி வழிந்தன. அந்தப் புருஷன் சங்கடத்தைக் கண்ட இளநங்கையின் இதழ்கள் இளநகை கொண்டன. வேகத்தில் விளைவு தெரிவதில்லை புருஷர்களுக்கு. தெரிந்த பின் தைரியமும் இருப்பதில்லை,’என்று உள்ளுக்குள் சொல்லிக் கொண்டாள்.

வீரபாண்டியன் இதயத்தில் உணர்ச்சிகள் பொங்கி வழிந்தன. அந்த உணர்ச்சியில் அவள் நிலையைக்கூட மறந்தான் அவன். பரலியின் எல்லைக் காட்டுப் பர்ண சாலைக்கும் அந்த இரவுக்கும் இடை புகுந்த காலத் தடையின் மடை நீங்கிவிடவே வெள்ளமெனப் பாய்ந்தன அவன் உணர்ச்சிகள். அந்த உணர்ச்சி வேகத்தில் அசைந்தன அவன் உதடுகள். கண்கள் எதிரே எழுந்த அழகு உச்சிகளில் நிலைத்தன. “மூன்றாவது முத்திரை வேண்டுமா இளநங்கை?” என்று கேட்டன அவன் உதடுகள் மெள்ள.

“மூன்றாவது முத்திரையா?” வியப்பு அவள் கேள்வியில் ஒலித்தது.

“ஆம்,” என்று கூறிய அவன் இதழ்கள் அந்த முத்திரையைப் பொறிக்க அவள் இதழ்களை நோக்கிச் சென்றன.

ராஜ முத்திரை முற்றும்

Previous articleRaja Muthirai Part 2 Ch68 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Perigai Part 1 Ch1 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here