Home Historical Novel Raja Muthirai Part 2 Ch7 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

Raja Muthirai Part 2 Ch7 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

57
0
Raja Muthirai Part 2 Ch7 Raja Muthirai Part 2 Sandilyan, Raja Muthirai Part 2 Online Free, Raja Muthirai Part 2PDF, Download Raja Muthirai Part 2 novel, Raja Muthirai Part 2 book, Raja Muthirai Part 2free, Raja Muthirai,Raja Muthirai Part 2 Story in tamil,Raja Muthirai Part 2 Story,Raja Muthirai Part 2 novel in tamil,Raja Muthirai Part 2 novel,Raja Muthirai Part 2 book,Raja Muthirai Part 2 book review,ராஜ முத்திரை ,ராஜ முத்திரை கதை,Raja Muthirai Part 2tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2full story,Raja Muthirai Part 2 novel full story,Raja Muthirai Part 2audiobook,Raja Muthirai Part 2audio book,Raja Muthirai Part 2full audiobook,Raja Muthirai Part 2full audio book,
Raja Muthirai Part 2 Ch7 | Raja Muthirai | TamilNovel.in

Raja Muthirai Part 2 Ch7 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

ராஜ முத்திரை இரண்டாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 7 பாலுக்கும் காவல்

Raja Muthirai Part 2 Ch7 | Raja Muthirai | TamilNovel.in

விண்ணிலிருந்து கண்ணின் முன்பு திடீரெனப் பளிச் சிடும் பெரு மின்னல் எப்படிச் சில விநாடிகளுக்குப் பார்வையையும் அபகரித்து, உணர்ச்சிகளையும் சிதறடித்து விடுகிறதோ, அதேவிதமாக முற்றும் எதிர்பாராத இந்திர பானு’ என்ற ஒற்றைச் சொல், முத்துக்குமரியின் உணர்ச்சிகளை எங்கோ அள்ளிக்கொண்டு சென்றதன்றி, பார்வை யிலும் பிரமையை ஊட்டி விட்டதால், அவள் அழகிய உடல் பல விநாடிகள் செயலற்று நின்றது. விழிகள் பார்த்தது பார்த்தபடி நின்றன. ஆரம்ப அதிர்ச்சி நீங்கி உணர்ச்சிகள் மெல்லத் திரும்பத் தொடங்கிய பின்னும் முத்துக்குமரியின் விழிகளில் தெளிவு ஏற்படவில்லை. ‘இந்திரபானு’ என்று அவள் உதடுகள் திரும்ப அந்தப் பெயரை உதிர்த்த போதும் சொல்லின் ஒலியில் சக்தியில்லை, மிகுந்த பலவீனமே நிரம்பிக் கிடந்தது
.
சிதறிய உணர்ச்சிகள் திரும்ப உடலில் பிரவாகிக்க ஆரம்பித்த பின்பும் புத்தி மட்டும் சுயநிலைக்கு வராததால் அவள் கையொன்று எதிரேயிருந்த குத்துவிளக்கைப் பலமாகப் பற்றிக் கொண்டதன்றி, அவள் உடலும் லேசாக விளக்கின் பக்கத்திலிருந்த தூணில் சாய்ந்து கொண்டது. அந்தச் சமயத்தில், அவள் சாய்ந்த தூணில் கைதேர்ந்த சிற்பியொருவன் செதுக்கியிருந்த பெண்ணுருவத்தின் நிலையில்தான் முத்துக்குமரியும் இருந்தாள்.

விளக்குக்கு எதிர்ப்புறத்தில் நின்றிருந்த இந்திரபானு, அவளது திகைப்பையும், திகைப்பை அடுத்து அவள் கை, விளக்கை இறுகப் பிடித்ததையும், பிறகு அவள் உடல் தூணில் சாய்ந்ததையும் கண்டு அவற்றின் காரணத்தைச் சந்தேகமற உணர்ந்து கொண்டான். அத்தனைக்கும் தன் சாமர்த்தியப் பேச்சும் திடீரெனத் தன் பெயரை அறிவித்த முறையும் தான் காரணமென்பதை அவன் உணர்ந்ததால், அவளுக்குத் தான் அளித்துவிட்ட பிரமிப்பையும் வேதனையையும் குறித்து வருந்தவும் செய்தான். இருப்பினும் தான் வேறுவிதமாகத் தன்னை அறிவித்துக்கொள்ள மார்க்க மேதுமில்லையென்பதையும் தன் முகமிருக்கும் லட்ச ணத்தில் பழைய நிகழ்ச்சிகளை எடுத்துரைக்காமல் தான் இன்னாரென்பதைத் தெரிவித்திருந்தால் முத்துக்குமரி தன்னை நோக்கி நகைத்தேயிருப்பாளென்பதையும் அவன் புரிந்து கொண்டிருந்ததால், அவன் தன்னைச் சிறிது ஆசுவாசமும் செய்து கொண்டான். முத்துக்குமரியிடம் தான் இன்னாரென்பதை அறிவித்துக் கொண்ட பிறகு தனக்கு அந்த அறையில் வேலையேதுமில்லை யென்பதையும் அதிக நேரம் அறையின் கதவைச் சாத்தி வைப்பதும் அடுத்த கட்டின் காவலுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தி விடுமென்பதையும் இந்திரபானு உணர்ந்து கொண்டான். இருப்பினும் முத்துக்குமரி பிரமை பிடித்துத் தூணில் சாய்ந்து விளக்கைப் பற்றி நின்ற நிலை அவன் உள்ளத்தைக் கொள்ளை கொண்டதால், அவளைப் பார்த்தது பார்த்தபடி நின்றான்.
தூணில் செதுக்கியிருந்த அரை நிர்வாணச் சிலையின் ஒய்யாரத்தையும் வளைவையும் விட, முத்துக்குமரி உடல் வளைந்து, இடை ஒடிந்து நின்ற நிலை பிரமிக்கத்தக்கதாயிருந்ததை இந்திரபானுவின் கண்கள் கண்டன. அவள் செவ்விய வதனத்தில் தொங்கிக் கிடந்த இரண்டொரு உச்சி மயிர்கள் வளைந்து இமைகளில் ஒன்றைத் தொட்டுத் தலைக் கருமைக்கும் இமைக் கருமைக்கும் போட்ட மெல்லிய பாலத்தால், முகத்தின் தாமரைச் சிவப்பு ஒருபுறம் பெரிதாகவும் இன்னொருபுறம் சிறிதாகவும் பிரிந்து கிடந்ததே ஒரு தனி அழகாகத் திகழ்ந்ததை அவன் கண்கள் கண்டன. சற்று உணர்ச்சி திரும்பிய அந்தச் சமயத்திலும் அவள் கண்களில் மண்டிக்கிடந்த முக்கால் பிரமை அவற்றுக்குப் பெரும் அழகு அளித்ததையும், பிரமையில் மயங்கிக் கிடந்த கண்களின் கருமணிகள், தாமரைத் தேனையுண்டு மயங்கும் வண்டுகளையொத்துத் திண்டாடியதையும் கண்ட இந்திரபானு, அந்தக் கண்களுக்கு உவமை அந்தக் கண்களேதான்’ ‘ என்று உள்ளுக்குள் சொல்லக். கொண்டான். தூணிலிருந்த சிற்பமும் முத்துக்குமரியின் உயரமே இருந்ததால் அவள் மார்பும் இடையும் அந்தச் சிற்பத்தின் மார்புக்கும் இடைக்கும் … அக்கம் பக்கத்திலிருந்ததன் விளைவாக உயிரற்ற சிற்பம் உயிருள்ள சிற்பத்துடன் போட்டி போடுகின்ற மாதிரியே இருந்ததைக் கவனித்த இந்திரபானு , ‘இதில் போட்டிக்கு இடம் ஏது? முத்துக்குமரி – இதன் பக்கத்தில் நிற்பாளென்று தெரிந்திருந்தால், சிற்பி ஒரு நாளும் இதை இந்தத் தூணில் செதுக்கியிருக்க மாட்டான் என்று தனக்குள் சொல்லிக் கொண்டான். எது சிற்பம், எது நிஜம்? என்று பாகுபாடு செய்ய முடியாத நிலையில், அந்தப் பாண்டிய குமாரி விட்ட பெருமூச்சொன்று அவள் மார்பைச் சற்று அசைத்ததைக் கண்டதும் ‘பாகுபாடு செய்ய இந்த ஒரு வழியாவது இருக்கிறதே! என்று மகிழ்ந்து கொண்டான். இப்படி அணு அணுவாகப் பாண்டியன் பைங்கிளியை ஆராய்வதிலிருந்த இந்திரபானுவின் மனோநிலைக்கும், முத்துக்குமரியின் மனோநிலைக்கும் வேறுபாடு பலமாயிருந்தது.

அவள் இதயம் எண்ணச் சுழலில், சந்தேக அலைகளில், பெருங் குழப்பத்தில் அகப்பட்டுத் திண்டாடிக் கொண்டிருந்ததால் அவள் பெரும் அவஸ்தையிலிருந்தாள். இந்திரபானு’ என்று தன்னை அறிவித்தவனை இந்திர பானுவென்று ஒப்புக்கொள்ள அவள் இதயம் ஓரளவு முன் வந்தாலும், கண்கள் ஒப்புக் கொள்ள அடியோடு மறுத்தன. அவன், ‘இந்திரபானு,’ என்று கூறிய பிறகு அவன் முகத்தை மீண்டும் மீண்டும் ஆராய்ந்தவளின் கண்களில், அச்சமே திரும்பத் திரும்ப நிலவியது. இந்திரபானுவின் குழந்தை முகம், விளையாட்டு வதனம், அத்தனை பயங்கரமாக எந்தக் காரணத்தை முன்னிட்டும் மாற முடியாதென்று அவள் நினைத்தாள். எதிரேயிருந்த வாலிபன் நுதலில் பட்டையாய்த் தீய்த்திருந்த கரிய பெரும் வடுவும், இரு கன்னங்களையும் தீய்த்துவிட்ட தீப்புண் வடுக்களும் சமீபகாலத்தில் ஏற்பட்டிருக்க முடியாதென்பதை அவள் கண்ணாராய்ச்சி தெளிவு படுத்தியது. தவிர, உதடுகளுக்குக் குறுக்கே பாய்ந்த பட்டைக் கறுப்பு எந்தக் காயத்தாலும் ஏற்பட்டதல்லவென்பதையும் இயற்கையில் ஏற்பட்ட மச்சமே என்பதையும் முத்துக்குமரி ஊகித்துக் கொண்டாள். அவன் முகவாய்க் கட்டை, கழுத்து ஆகிய இடங்களில் திட்டுத்திட்டாகக் காணப்பட்ட செவ்விய தடிப்புகளும் இயற்கையின் கைவண்ணமே தவிர, வேறில்லையென்பதை அவள் உணர்ந்தாள். கண்கள் இத்தனை நிச்சயமாக விஷயத்தை எடுத்துரைத்தும் இதயம் மட்டும் மீண்டும் மீண்டும் சந்தேகத்தைக் கிளப்பியது. அதன் காரணத்தை அவளால் ஊகிக்க இயலவில்லை.

இந்திரபானுவுக்கும் தனக்கும் மட்டுமே தெரிந்த பல தகவல்களை அந்த வாலிபன் எப்படி உணர்ந்திருக்க முடியும் என்று தனக்குள் கேட்டுக்கொண்டாள் பாண்டியன் மகள். “அருவிக்கரையில் நான் உட்கார்ந்ததும், நீரில் கால்களை நீட்டியதும், சேலையை எடுத்து மடித்து மடியில் போட்டுக் கொண்டதும் என் இந்திரபானுவைத் தவிர வேறு யாருக்கும் தெரியாதே! இந்த வாலிபன் எப்படி அந்த இன்ப நிகழ்ச்சியை அறிய முடியும்?’ என்ற ஒரு கேள்வியை இதயத்தில் எழுப்பிக் கொண்டாள் முத்துக்குமரி, அந்த இன்ப நிகழ்ச்சி, அதைப் பற்றிய நினைப்பு அவள் கண்களில் இன்ப ரேகையைப் படர விட்டது. அதன் வசமான அவணே மீண்டும் எதிரேயிருந்த வாலிபனை உற்று நோக்கினாள். அவன் மற்றபடி இந்திரபானுவை போலத்தான் இருந்தான். ஆனால் எக்காரணத்தைக் கொண்டும் இந்திரபானுவின் முகம் இப்படி அடியோடு மாறக் காரணமில்லையென்று நினைத்த முத்துக்குமரி இவன் இந்திரபானுவல்ல என்ற முடிவுக்கே வந்தாள்.

‘இந்திரபானு இல்லாவிட்டால் இவனுக்கு எப்படி எனது அந்தரங்கம் தெரியும்? என்னைக் கள்வர்கள் கடத்தி வந்ததும், சேரமன்னன் அபகரித்து வந்ததும், மலைப் பாதையில் நான் சண்டையிட்டதும் எப்படித் தெரிய வந்தது? நேரில் பார்த்தது போல் விவரங்களைச் சொல்லுகிறானே?’ என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள். ஆனால் அது பிரமாதமில்லையென்பதும் அவளுக்குத் தெரிந்தது. தான் சண்டையிட்ட விவரங்கள், அபகரிக்கப்பட்ட முறை இவை சேரநாட்டு வீரர்களிடை பிரசித்தமாகி விட்டதால், இவனுக்கும் அது தெரிவதில் கஷ்டமில்லையென்பதைப் புரிந்துகொண்டாள். ஒருவேளை தன் இதயத்தை அறிய சேரமன்னனே இவனிடம் விவரங்களைச் சொல்லியிருப்பானோ’ என்ற சந்தேகமும் ஏற்பட்டது அவளுக்கு.

முத்துக்குமரியின் தாமரை விழிகளில் படர்ந்த சந்தேகச் சாயையைக் கவனித்த இந்திரபானுவின் இதழ் களில் இளநகை விரிந்தது. உதடுகள் இருந்த கோரத்தின் காரணமாக அந்த இளநகை பார்ப்பதற்குப் பயங்கரமாகவே இருந்ததால் முத்துக்குமரியின் முத்து முகத்தில் அருவருப்பே மண்டியது. அந்த அருவருப்புடன் சொன்னாள் அவள், “நீ – இந்திரபானு மாதிரியிருக்கிறாய். ஆனால் இந்திரபானு இல்லை ….” என்று .

இந்திரபானு ஒரு விநாடி அவளைக் கூர்ந்து நோக்கினான். பிறகு கேட்டான், “எப்படி அத்தனை நிச்சயமாகச் சொல்கிறாய்?” என்று.
“உன் முகத்தில் இருக்கும் வடுக்கள் சமீப காலத்தில், ஏற்பட்டவையல்ல,” என்ற முத்துக்குமரி மேலும் ஏதோ சொல்ல முற்பட்டுச் சட்டென்று நிறுத்திக் கொண்டாள்.

“ஏன் நிறுத்திவிட்டாய்? சொல்ல வேண்டியதைச் சொல்,” என்றான் அந்த வாலிபன்.

“நான் களவாடப்பட்ட கதையை நீ யாரிடமிருந் தாவது கேட்டிருக்கலாம்,” என்றாள் அவள்.

“அது சாத்தியம்,” என்று ஒப்புக் கொண்டான் அந்த வாலிபன்.

“முத்தையும் கண்டு எடுத்திருக்கலாம்,” என்றாள் முத்துக்குமரி.

இத்தனை திட்டமாகச் சொல்லிக்கொண்டு வந்த அவள் இந்திரபானுவின் அடுத்த கேள்வியைக் கேட்டதும் அதிர்ச்சியடைந்தாள். “எந்த முத்து?” என்று கேட்டான் இந்திரபானு.

“எந்த முத்தா?” அவள் கேள்வியில் அதிர்ச்சி பூர்ண மாயிருந்தது.

“ஆம். எந்த முத்து?” என்று மீண்டும் கேள்வியைத் திருப்பினான் வாலிபன்.

“நீ கேட்பது விளங்கவில்லை,” என்றாள் அவள்.

“விளங்கும்படி சொல்கிறேன் கேள். அருவிக் கரையில் – கள்ளர்களிடம் திமிறிய போது எறிந்துவிட்டு வந்தாயே , அந்த முத்தா? அல்லது மலைப்பாதையில் இரண்டாம் முறை போரிட்ட பின்னர், சேர வீரர்கள் புரவிகளில் உன்னை ஏற்றிய பின்னர், எறிந்தாயே அந்த முத்தா?” என்று கேட்ட அந்த வாலிபன் மேலும் சொன்னான்: “வீரபாண்டியன் காணட்டுமென்று அருவிக்கரையில் ஒரு முத்தை எறிந்தாய். ஒருவேளை அது வீரபாண்டியன் கண்களில் படாவிட்டால் இரண்டாவது முத்தாவது தெரியட்டும் என்று நீ கோடரி வீசியபின் புரவியில் ஏற்றப் பட்டதும் இரண்டாவது முத்தை எறிந்தாய். ஒன்றை வீரபாண்டியன் காண விட்டு வந்தேன். இன்னொன்றை நான் எடுத்துக்கொண்டேன், அடையாளத்துக்கு இருக்கட்டு மென்று.’

இதைக் கேட்ட பின்பும் முத்துக்குமரிக்கு நம்பிக்கை வராததால் அவள் சொன்னாள், “நீ நேரில் பார்த்தது போல் சொல்லுகிறாயே?” என்று.

“நேரில்தான் பார்த்தேன்,” என்ற இந்திரபானு விவரித்தான். “காட்டுக் கோட்டையிலிருந்து கொட்டுந் தளத்துக்கு மன்னரால் திடீரென்று அனுப்பப்பட்ட நான், அங்கிருந்து மறுநாளிரவு வந்து கொண்டிருந்தபோது, கோட்டையின் ஒரு பகுதியில் விளக்கொன்று இரண்டு மூன்று முறை அசைந்ததைக் கண்டேன். ஒற்றர்களின் அந்தப் பழைய சைகையைக் கண்டதும் காட்டுக் கோட்டைக்குள் யாரோ ஒற்றனிருக்கிறான் என்பதை உணர்ந்து வெகுவேகமாகக் கோட்டைக்குள் வந்து விளக்கசைந்த அருவிக்கரையோரம் சென்றேன். அருவிக் கரையின் கூழாங்கற்கள் பெரிதும் புரண்டு கிடந்தன. பழைய முத்தொன்றும் கீழே கிடந்தது. கோட்டைச் சுவர்மீது தாவி ஏறி வெளிப்புறம் பார்த்தேன். தூரத்தில் இருவர் ஏதோ ஒன்றைத் தூக்கிச் செல்வது தெரிந்தது. ஆகவே நானும் மதிலைத் தாவிக் குதித்துத் தொடர்ந்தேன். மலைப் பாதைக்கு வந்ததும் அந்தச் சுமையைத் தூக்கி வந்த இருவர் கீழே இறங்கினார்கள், நீ சீறி எழுந்தாய். சரேலென்று இடுப்பிலிருந்த சிறு கோடரியை எடுத்து நீ வீசியதைக் கண்டேன். பிறகு காட்டில் காத்திருந்த சேர நாட்டுக் காவலரால் சூழப்பட்டாய்,” என்ற வாலிபன் “மேலும் காட்சியை விவரிக்க வேண்டுமா?” என்று வினவினான்.

“வேண்டியதில்லை. நடந்தது நடந்தபடி சொன்னாய் இருப்பினும் இவையனைத்தையும் நீ வேறு யாரிடமாவது கேட்டு அறிந்திருக்கலாம். அல்லது நீயே பார்த்திருந்தாலும் என்னைச் சிறை செய்ய வந்த சேரர் கூட்டத்தவனாய் இருக்கலாம்” என்றாள் முத்துக்குமரி, அப்பொழுதும் நம்பிக்கை வராமல்.
வாலிபன் முகத்தில் துக்கக் குறி நிரம்பியது. “இந்திர பானுவை நன்றாகத் தெரியுமா உனக்கு?” என்று கேட்டான் அவன்.

“இந்தக் கேள்விக்கு அர்த்தமில்லை,” என்றாள் முத்துக்குமரி மெல்ல முறுவலித்து.

முறுவலின் காரணம் அந்த வாலிபனுக்குப் புரிந்தது. ஆகவே கேட்டான், “நான் இந்திரபானுவாயிருந்து என் முகப் தீப்புண்களால் விகாரமடைந்திருந்தால் என்ன செய்வாய்?” என்று கேட்டான் அவன்.

“தீப்புண்களை நான் கண்டிருக்கிறேன்,” என்றாள் அவள் பதிலுக்கு.

“அப்படியானால் இவை தீப்புண்களில்லையா?”

“இருந்தாலும் சமீபத்தில் ஏற்பட்டவையல்ல.”

“இந்திரபானுவென்று நிரூபிக்க நான் வேறு என்ன செய்ய வேண்டும்?”

“ஏது செய்தும் பிரயோசனமில்லை.”

“நிச்சயமாகவா?”

“ஆம்.”

“இதைப் பார்,” என்று மீண்டும் ஒரு பொருளைக் கச்சையிலிருந்து எடுத்துக்கொடுத்தான் அந்த வாலிபன்.

அதைக் கையிலே வாங்கிய முத்துக்குமரி பெரிதும் பிரமித்தாள். அது சிறிய பட்டை ஓலை. அந்த ஓலையில், பாண்டிய நாட்டு ராஜமுத்திரை இருந்தது. அந்த முத்திரைக்குக் குறுக்கே பல வரிகள் பல இருந்தன. அவற்றைப் பக்கத்திலிருந்த விளக்கொளியில் படித்தாள். படித்த அவள் கண்களில் வியப்பும் குழப்பமும் மீண்டும் மண்டிக் கொண்டன. “இதை வைத்திருப்பவன் இந்திர பானு. முகத்தைக் கண்டு ஏமாறாதே!” என்றிருந்த வாசகத்தின் கீழே பாண்டிய மன்னன் சுந்தர பாண்டியன் கையொப்பமிருந்தது.

அது அவள் தந்தையின் கையொப்பம்தான். சந்தேகமில்லை. இருப்பினும் எதிரேயிருப்பவன் இந்திரபானு என்று அவளால் நம்பமுடியவில்லை. அவன் முகத்தையும் பார்த்து ஓலையையும் பார்த்தாள் அவள்.

“இன்னும் நம்பிக்கை வரவில்லையா?” என்று வினவினான் அவன்.

“இல்லை,” என்றாள் முத்துக்குமரி.

“இன்னொரு வழி இருக்கிறது உனக்கு நம்பிக்கை யூட்ட” என்றான் வாலிபன்.

“என்ன வழி?” என்று கேட்டாள் அவள்.

“அவசியமானாலொழிய அந்த வழியைக் கடைப் பிடிக்க நான் இஷ்டப்படவில்லை,” என்றான் அவன்.

“ஏதாவதொரு வழியில் நிரூபித்தாலொழிய நான் நம்பமுடியாது,” என்றாள் முத்துக்குமரி திட்டமாக.

அடுத்த நிகழ்ச்சி அவளை நிலைகுலையவைத்தது. விளக்கு திடீரென்று ஊதப்பட்டது. அந்தகாரம் அறையை வளைத்துக்கொண்ட வேகத்தில் அந்த வாலிபன் கைகளும் அவளை வளைத்துக் கொண்டன. “குமரி!” என்ற சொல் அவள் காதில் ஒலித்தது. அது இந்திரபானுவின் குரல் தான். சந்தேகமில்லை. என்றோ கேட்ட குரல்! அதன் மாதுரியம் மீண்டும் காதில் மதுரமெனப் பாய்ந்தது.

அவன் கைகளுக்குள் சிக்கிய சமயத்தில், உடலளித்த இன்ப உணர்ச்சிகளில், அவன் குரல் ஒலித்த முறையில் அவள் சந்தேகங்கள் பறந்தன. கண்ணின் ஒளி காட்டாத தைக் குரலின் ஒலி காட்டுமென்பதை அவள் புரிந்து கொண்டாள். அதே ஒலியை அத்தனை நேரம் அவள் புரிந்துகொள்ள முடியாததன் காரணம் விளங்கவில்லை அவளுக்கு. யோசித்தாள் அவள். அதுவரை அவன் சொற்கள் ஒலித்தது விவாதத்தின் ஒலி. கடைசியில் காதுக் கருகில் ஒலித்தது இதயத்தின் ஒலி என்பதையும், அந்த ஒலிக்குத் தன் இதயமும் எதிரொலி செய்ததையும் அவள் உணர்ந்தாள். அந்த உணர்வால் அப்படியே அவன் கைகள் அணைத்தபடி நிற்கவில்லை . உதடுகளும், “குமரி,” என்று அழைத்ததுடன் நிற்கவில்லை.

Previous articleRaja Muthirai Part 2 Ch6 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Muthirai Part 2 Ch8 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here