Home Historical Novel Raja Muthirai Part 2 Ch9 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

Raja Muthirai Part 2 Ch9 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

69
0
Raja Muthirai Part 2 Ch9 Raja Muthirai Part 2 Sandilyan, Raja Muthirai Part 2 Online Free, Raja Muthirai Part 2PDF, Download Raja Muthirai Part 2 novel, Raja Muthirai Part 2 book, Raja Muthirai Part 2free, Raja Muthirai,Raja Muthirai Part 2 Story in tamil,Raja Muthirai Part 2 Story,Raja Muthirai Part 2 novel in tamil,Raja Muthirai Part 2 novel,Raja Muthirai Part 2 book,Raja Muthirai Part 2 book review,ராஜ முத்திரை ,ராஜ முத்திரை கதை,Raja Muthirai Part 2tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2full story,Raja Muthirai Part 2 novel full story,Raja Muthirai Part 2audiobook,Raja Muthirai Part 2audio book,Raja Muthirai Part 2full audiobook,Raja Muthirai Part 2full audio book,
Raja Muthirai Part 2 Ch9 | Raja Muthirai | TamilNovel.in

Raja Muthirai Part 2 Ch9 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

ராஜ முத்திரை இரண்டாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 9 பரதப்பட்டன்

Raja Muthirai Part 2 Ch9 | Raja Muthirai | TamilNovel.in

திரைக்குப் பின்னிருந்து வெளிப் போந்த மனிதனைக் கண்டதும் பிரமிப்பையும் அச்சத்தையும் ஒருங்கே அடைந்து விட்ட இந்திரபானு, உணர்ச்சிகள் ஸ்தம்பித்துக் கற்சிலையென நின்றுவிட்டதால் சேரர் பெருமானுடைய இதழ்கள் ‘கண்கள் புரிந்துவிட்ட பாவம்’ என்று முணுமுணுத்ததையோ அதையடுத்துக் கொடுநகை கொண்டதையோ கவனிக்கச் சக்தியற்றவனான். அப்படி இந்திரபானு திக் பிரமையடைந்து விட்டதைக் கண்டு மகிழ்ச்சிக் குறி காட்டிய மன்னன் விழிகள் சரேலெனத் திரைக்குப் பின்னிருந்து வந்தவன் மீது தாவியதும் சற்றுக் குழப்பத்தை எய்தின. ஏதோ விஷயம் விளங்காததற்கான சாயை யொன்றும் வீரரவி உதயமார்த்தாண்டவர்மனின் அழகிய வதனத்தைத் தடவிச்சென்று மறைந்தது. இப்படி நாட்டுக் காவலனும், சிறைக் காவலனும் உணர்ச்சிகளைப் பறக்க விட்டு விழித்தாலும், திரைக்குப் பின்னிருந்து வந்தவன் முகத்தில் மட்டும் இயற்கையளித்திருந்த வியப்புச் சாயையைத்தவிர வேறெந்தவித உணர்ச்சியும் தெரிய வில்லை. அந்த வியப்புச்சாயை கூட முகத்தின் அமைப்பினால் ஏற்பட்டதே யொழிய, உள்ளிருந்த உணர்ச்சிகள் அசைவதால் ஏற்பட்டதல்ல வென்பதை அவன் அடுத்த நடவடிக்கைகள் நிரூபித்தன. அவன் கண்கள் சலனமின்றி மன்னனையும் பார்த்து இந்திரபானுவையும் பார்த்தன.

திரைக்குப் பின்னிருந்து வந்த மனிதனுக்கு வயது குறைந்த பட்சம் எண்பதை எட்டிக் கொண்டிருந்தாலும் அவன் முகத்தில் திரைகள் அடியோடில்லாததன்றி, தலையிலிருந்த மயிரும் ஒன்று கூட நரை எய்தாமல் அசாத்தியக் கருமையுடனிருந்தது, கன்னத்தின் சதைகள் நன்றாகக் கீழிறங்கியிருந்தாலும், முகத்தின் மற்றப் பகுதிகளில் சதை மட்டுப்பட்டதால் எலும்புகள் புடைத்துவிட்டதன் காரணமாக ஆழத்திற்குப் போய்விட்ட கண்களாலும், அந்த மனிதன் வயோதிகன் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்ததே தவிர வயோதிகத்திற்குண்டான வேறெந்த அடையாளங்களும் அவனிடமில்லை. திரைக்குள்ளிருந்து வெளிவந்தபோது அவன் நடை திடமாகவும் கம்பீரமாகவும் இருந்தது. கண்கள் அசாத்திய தீட்சண்யத்துடன் பளிச்சிட்டன.

அவன் மன்னனை வணங்கிய போது கை மிக உறுதியாக இருந்தது. அவன் நின்ற தோரணை நல்ல வயிரம் பாய்ந்த மெல்லிய மரம் நிற்கும் தோரணையைப் போலிருந்தது. நெற்றியில் அவன் தீட்டியிருந்த சந்தனமும் குங்குமமும் உடலுக்குக் குறுக்கே அணிந்திருந்த முப்புரி நூலும் ஒன்று அவன் அந்தணனாகவோ அல்லது அரசகுலத்தானாகவோ இருக்கவேண்டுமென்பதை வலியுறுத்தின. அவன் இடையில் அணிந்திருந்த ஆடை பெரிய சரிகை வேலைப்பாடுடன் பெரும் விலையுள்ளதாயிருந்தது. மேலே சின்னஞ்சிறு ஆடை தான் தோளில் கிடந்தது. இருப்பினும் அது நூல் சம்பந்த சரிகையாலேயே செய்யப்பட்டுப் பளபளத்தது. ஆனால் செக்கக் செவேலென்று மின்னிய அவன் உடலுடன் அந்த சரிகையின் பளபளப்புப் போட்டி போட முடியவில்லை. அத்தனை துல்லிய வேஷத்துடனும் தோற்றமளித்த அந்த வயோதிகன் ஒரு விநாடி இந்திபானுவை நோக்கிவிட்டு அரசனையும் நோக்கினான். “மன்னவா! இவன் யார்? ஏனிப்படி இருக்கிறான்?” என்று வினவினான் சர்வ சாதாரணமாக.

அந்தக் கேள்வி இந்திரபானுவையும் அயர வைத்தது. மன்னனையும் குழம்ப வைத்தது. இந்திரபானு அந்தக் கேள்வி எழுந்த விநாடியில் தன்னை நிதானப்படுத்திக் கொண்டானானாலும் மன்னன் குழப்பம் தெளியவில்லையென்பதை அவன் சந்திரவதனமே நிரூபித்தது. அந்தக் குழப்பத்தைக்கூட மன்னன் வெகுலாகவமாக அடக்கிக் கொண்டு “குருநாதரே! இவன் நமது காவலரில் ஒருவன்,” என்று மட்டும் கூறினான்.

இந்திரபானுவின் வியப்பு அதிகமாயிற்று. இவர் எப்படி அரசருக்குக் குருநாதர் என்று விளங்காததால் அதை அறியத் திடீரென மண்டியிட்டு அந்த வயோதிகனை வணங்கினான். அதைக் கண்ட மன்னன் குழப்பம் அதிகமாயிற்று. “எதற்காகத் திடீரென்று வணங்குகிறாய்?” என்று வினவினான் மன்னன் குழப்பம் சொற்களில் லேசாக ஒலிக்க.

“மன்னவா! மன்னருக்கு எதிரில் அவரது குருநாதரை வணங்காதிருப்பது குற்றமல்லவா? பெரியவரைக் குருநாதரென்று தாங்கள் விளிக்கும் வரையில் நான் அறியவில்லை,” என்றான் இந்திரபானு.
வீரரவி ஏதோ சொல்ல வாயெடுத்தான். அவன் பேச் சைத் தடை செய்ய அவனை நோக்கிக் கைகூப்பிய வயோதி கன் பளிச்சிட்ட தன் கண்களை இந்திரபானுமீது நிலைக்கச் செய்து, “வீரனே! உன் ஊகம் தவறு. நான் மன்னனுக்குக் குருவல்ல. ஆகவே நீ என்னை வணங்க அவசியமுமில்லை ,” என்றான்.

“மன்னரே தங்களைக் குருநாதர் என்று அழைத் தாரே?” என்று சந்தேகத்துடன் வினவினான் இந்திரபானு.

“மன்னர் அன்பினால் என்னை அப்படி அழைக் கிறார். சகல கலைகளிலும் வல்லவரான மன்னருக்குக் குருநாதர் யாரும் அவசியமில்லை. தந்திர சாஸ்திரத்திலும், மந்திர சாஸ்திரத்திலும் அவருக்குள்ள அறிவு மலை யாளத்தில் வேறு யாருக்கும் இல்லை,” என்ற குருநாதரின் சொற்களில் மட்டுமின்றி, கண்களிலும் கண்டிப்பு இருந்தது.

“அப்படியனால் தாங்கள்…” என்று இந்திரபானு இழுத்தான்.

“மன்னர் என்னை உன்னுடன் தங்கியிருக்க உத்தர விட்டிருக்கிறார். நான் யாரென்று அறிய முயலுவதோ, எதற்காக மன்னர் உன்னுடன் என்னைத் தங்கியிருக்கப் பணிக்கிறார் என்பதை அறியத் தந்திரங்களைக் கையாளுவதோ அத்துமீறிய செய்கையாகும். அந்த வழிகளில் நினைப்பைச் செலுத்துவது கூடத் துரோகம்,” என்று வயோதிகனின் சொற்களில் தான் சூடு இருந்ததேயொழிய அவன் முகத்தில் வியப்பு ரேகையே படர்ந்து கிடந்தது.
வயோதிகனின் உஷ்ணமான பேச்சைக் கவனித்த மன்னன் அதைச் சாந்தப்படுத்த முயன்று, “வீரன் தெரியாததால் கேட்கிறான் குருநாதரே! தாங்கள் யார் என்பதைத் தெரியப்படுத்துங்கள். தங்களைத் தெரியாதிருப்பது அவன் அறியாமையை உணர்த்துகிறது. சேர நாட்டவனாயிருந்தால் நீங்கள் யாரென்பது தெரியாதிருக்குமா?” என்றான். அவன் குரல் மேலுக்குச் சர்வசாதாரணமாய் இருந்தாலும் உள்ளே பெரும் விஷம் ஊடுருவி நின்றதைப் புரிந்து கொண்டான் இந்திரபானு.

வயோதிகன் முகம் பழையபடியே விகசித்துக் கிடந்தது. மன்னனின் பாராட்டுச் சொற்கள் கூட அவனுக்கு எந்தப் புது உணர்ச்சியையும் அளிக்கவில்லை . “வீரனே , கேள். மன்னன் உத்தரவிட்ட பின்பு உன் அறியாமை இருளை அகற்றாதிருப்பது சரியல்ல,” என்ற பூர்வ பீடிகையுடன் துவங்கிய வயோதிகன் “என்னை மன்னர் குருநாதர் என்றழைத்ததற்குக் காரணம் அந்தப் பெருந்தகைக்கு நான் குரு நாதராயிருப்பதாலல்ல. மன்னர் குடிமக்களில் ஒரு பிரிவு என்னைக் குருநாதராக வரித்திருக்கிறது. என்னை மட்டுமல்ல என் ஆன்றோர்களையும் வரித் திருக்கிறது. பரம்பரைப் பட்டன்மார் வமிசத்தில் வந்தவன் நான். அதுவும் என் மூதாதையர் பெரும் கலைஞர்கள். அதில் ஒரு சிறு துளி இந்த அடியவனிடம் இருப்பதைச் சேரநாட்டுக்கலைவாணர் ஒப்புக் கொள்கிறார்கள். அதனால் கிடைத்த பட்டம் இது” என்றான். இப்படிச் சொல்லிவிட்டு மன்னனை நோக்கி மறுபடியும் கை கூப்பினான்.
வயோதிகன் எதற்கெடுத்தாலும் மன்னனை நோக்கிக் கைகூப்புவதை இந்திரபானு ரசிக்கவில்லை. இருப்பினும் வெறுப்பை அடக்கிக்கொண்டு, “அப்படியானால் தாங்கள் வீரரல்லவா?” என்று வினவினான்.

“ஒருவிதத்தில் வீரன்தான்” என்றான் வயோதிகன்.

“எப்படியோ?” என்று வினவினான் இந்திரபானு ஏளனத்துடன்.

“வீரத்தை முத்திரைகளில் காட்டுவேன், முக அசைப் பில் காட்டுவேன், கண் பார்வையில் காட்டுவேன்” என்றான் வயோதிகன்.

“வேலெறியத் தெரியுமா, வாளைச் சுழற்றுவீர்களா?” என்று வினவினான் இந்திரபானு மீண்டும்.

“இரண்டும் செய்வேன். ஆனால் வேலோ, வாளோ கையிலிருக்காது. ஆனால் வேலெறிவது போலும் வாளைச் சுழற்றுவது போலும் முழு உணர்ச்சியுடன் விவரிக்க பரத சாஸ்திரம் வழி வகுத்திருக்கிறது. சிருங்காரம், வீரம், காருண்யம், அற்புதம், ஹாஸ்யம், பயம், பீபத்ஸம், ரௌத்ரம், சாந்தம் ஆகிய நவரசங்களையும் பரத மகரிஷியை விட அனுபவித்தவர் யார்?” என வினவினான் வயோதிகன்.

“தாங்கள் கூத்தர் கூட்டத்தைச் சேர்ந்தவர்களா?” என்றான் வியப்புடன் இந்திரபானு.
“அல்ல. அவர்களின் குருநாதர்!” என்ற வயோதிகன் மன்னனை நோக்கினான்.

அதுவரை அவ்விருவரின் உரையாடலைக் கவனித்துக் கொண்டிருந்த உதயமார்த்தாண்டவர்மன் ஆமென்பதற்கு அறிகுறியாகத் தலையை அசைத்து, “ஆம் வீரனே! கதகளியில் வல்ல பரத பட்டரை அறியாதவர்கள் சேர நாட்டில் கிடையாது. அவருடைய கலைவன்மை யவன நாட்டவரைக் கூடக்கொள்ளை கொண்டிருக்கிறது. அவரிடம் யவனர்கள் எத்தனைபேர் வேடமணிய வருகிறார்கள் தெரியுமா? இரணியனைப் போலும் பரசுராமனைப் போலும் முகங்களை மாற்றித் தருவதில் விற்பன்னரான பரதபட்டரிடம் தங்கள் விழாக்காலங்களில் யவனர்கள் மன்றாடுகிறார்கள். இந்த நாட்ட வனாயிருந்தால் நீ இதை அறிந்திருக்கலாம்,” என்றான்.

இந்திரபானு பதிலேதும் சொல்ல முடியாமல் மன்னன் சொல்வதை ஒப்புக் கொள்வதற்கு அறிகுறியாகத் தலையை அசைத்தான். ஒரு வினாடிக்குப் பிறகு சொன்னான்; “மன்னவா! காவலர் விடுதியில், குருநாதரை இருக்க வைப்பது அவருடைய தகுதிக்குக் குறைவாயிற்றே?” என்று .

வீரரவியின் இதழ்களில் புன்முறுவல் மீண்டும் பூத்தது. “உண்மைதான் வீரனே! ஆனால் தற்சமயம் அரண்மனைக் காவலர் விடுதிகளில் மிகப்பெரிதும், விசாலமான அறைகளை உடையதுமான விடுதியில் அவரைத் தங்கவைக்க ஏற்பாடு செய்தேன். காவல் நேரம் போக மீதி நேரத்தில் நீ அவருக்கு ஊழியமும் புரியலாம். உனக்கு அது பெரும் பாக்கியம்” என்றான் மன்னவன்.

இந்தரபானுவுக்கு மெல்லச் சந்தேகம் எழுந்தது. “இந்த விடுதி எங்கியிருக்கிறது மன்னவா?” என வினவினான் அவன்.

“அரண்மனையை அடுத்துள்ள இரு விடுதிகளில் ஒன்று” என்றான் மன்னவன்.

“இரண்டும் மெய்க்காவலர் விடுதிகளல்லவா?”

“ஆ”

“படைத்தலைவர்கள், உதவிப் படைத் தலைவர்கள் இவர்கள் மட்டுந்தானே அவ்விடுதிகளில் தங்கலாம்.”

“ஆம். சாதாரண காவலருக்கு இங்கு இடம் கிடை யாது.”

“அப்படியானால் நான்…” என்று இழுத்தான் இந்திரபானு.

“ஏன் ஒரு நாள் நீயும் படைத்தலைவனாகக் கூடாது?” என்ற மன்னன் முறுவல் கொண்டான்.

“ஆகலாம். ஆனால் இன்று நான்…” என்று மீண்டும் ஆட்சேபணையைக் காட்டினான் இந்திரபானு.
மன்னன் முறுவல் நன்றாக முகம் பூராவும் விரிந்தது. அத்துடன், “எப்படி என்று தீர்மானிப்பதும் என் இஷ்டம். தவிர, குருநாதரைச் சாதாரணக் காவலர் விடுதிகளில் தங்க வைக்க முடியாது. சரியான ஊழியனொருவனும் அவருக்குத் தேவை,” என்று சுட்டியும் காட்டினான் வீரரவி.

இந்திரபானு தலை வணங்கினான். “மன்னருக்கு அடியவன் மேலுள்ள நம்பிக்கையும் அன்பும் அடியவனுக்குத் திகைப்பூட்டுகிறது,” என்றும் கூறினான்.

மன்னன் வதனத்தில் விஷமச்சாயை நன்றாகப் படர்ந்தது. அடுத்து உதடுகளிலிருந்தது உதிர்த்த சொற் களிலும் விஷமம் மண்டிக்கிடந்தது. “வீரர்களை நம்பித் தான் மன்னனே வாழ வேண்டியிருக்கிறது. வீரனே! நம்பிக்கைக்கும் அன்புக்கும் துரோகம் செய்யாதிருப்பது வீரர்கள் கடமை. தவிர நான் நம்பிக் கெட்டவன் இருப்பினும் நம்பாதிருக்க மனம் இடந்தரவில்லை,” என்றான் மன்னன்.

“எல்லோரையும் நம்புவது தவறல்லவா மன்னவா?” என்று கேட்டான் இந்திரபானு.

“தவறுதான். இருப்பினும் எனக்கு யாரையும் நம்பும் சுபாவம். நம்பிக்கையில் தான் மனிதன் வாழ முடிகிறது. அடியோடு நம்பிக்கையில்லாமல் சந்தேகத்திலேயே வாழ்க்கையைக் கழிப்பவன் வளர்வதில்லை.” என்று கூறினான் வீரரவி. ஒரு வினாடி கழித்து, “நம்புகிறேன், ஆனால் ஒரு கண்ணையும் எல்லோர் மீதும் வைத்திருக்கிறேன்,” என்றும் சொன்னான். கடைசி வாக்கியங்களைச் சற்று அழுத்தியே உச்சரித்தான் சேர மன்னன்.
இதை மன்னன் சொன்னதும், “உண்மை உண்மை” என்று கூறிய பரதப்பட்டன் மன்னனை நோக்கிக் கையைக் கூப்பினான். மன்னன் கைதட்டி வெளியிலிருந்த காவல் னொருவனை விளித்துப் பட்டனையும் இந்திரபானுவையும் அவர்கள் புது விடுதிக்கு அழைத்துச் செல்லப் பணித்தான்.

அவர்கள் சென்றதும் நீண்ட நேரம் தனது ஆசனத்தில் தீவிர சிந்தனையுடன் உட்கார்ந்திருந்தான். பிறகு எழுந்திருந்து தனது உள்ளறைக்குச் சென்று மீண்டும் தனது மெய்க் காவலனை அழைத்து, “அவன் வந்துவிட்டானா?” என்று வினவினான்.

“வந்துவிட்டான். தங்கள் ஆணைக்காகக் காத்திருக் கிறான்.” என்றான் காவலன்.

“சரி வரச்சொல்,” என்றான் மன்னன்.

காத்திருந்தவன் உள்ளே வந்ததும் மெய்க்காவலன் கதவை மூடிக்கொண்டு வெளியே சென்றான். உள்ளே சென்றவன் நீண்ட நேரம் வெளியே வரவேயில்லை. “இந்தச் சாதாரண வீரனுக்கு மன்னனிடம் இத்தனை நேரம் என்ன வேலை?” என்று அரசரின் மெய்க்காவலன் வியந்து கொண்டிருந்தான்.

பரதப்பட்டன் மட்டும் சிறிதும் வியக்கவில்லை. இந்திர பானுவுடன் புது விடுதியை அடைந்து அங்கு அவர்கள் தங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அறைக்குள் சென்றதும் கதவைச் சாத்திவிட்டு இந்திரபானுவை நோக்கி ஆக்ரோஷத்துடன் திரும்பினான். “நீ ஒரு முட்டாள்,” என்று சீறிச் சொற்களையும் உதிர்த்தான்.

பட்டனின் சொற்களில் ஒலித்த பதற்றத்தையும் வேகத்தையும் கனல் கக்கிய கண்களையும் கண்ட இந்திர பானு, “நான் என்ன செய்துவிட்டேன் குருநாதரே?” என்று வினவினான் பணிவு நிரம்பிய குரலில்.

“இன்னும் என்ன செய்ய வேண்டும் நீ? உன்னையும் என்னையும் காட்டிக் கொடுத்து விட்டாய் ஒரு வினாடியில்,” என்றான் பட்டன் சீற்றம் தணியாமல் “என்னைப் பார்த்ததும் ஏனப்படி பிரமித்தாய்? திகைத்தாய்? உன் கண்ணே உனக்குப் பெரும் விரோதி இந்திரபானு. அவையே உன்னைக் காட்டிக் கொடுக்கும். போதாக்குறைக்கு உணர்ச்சிகளை அடக்கவும் உனக்குச் சக்தியில்லை . இனி உன் உயிரும், என் உயிரும் அரைக் காசு பெறாது. மன்னன் உன்னையும் என்னையும் கொல்வது திண்ணம். எவ்வகையில் கொல்வானென்பதுதான் தெரிய வில்லை,” என்றான் பட்டன் வெறுப்புடன்.

“வீணாக அஞ்சுகிறீர்கள் பட்டரே! மன்னனின் சந்தேகச் சொற்கள் உங்களுக்குக் கிலியூட்டியிருக்கின்றன. இந்த விகார முகம் எனக்குப் பெரும் திரையல்லவா?” என்றான் இந்திரபானு.

“மன்னனுக்கு அது திரையல்ல. வீரரவியின் கூரிய கண்களுக்கு இனிப் புதிதாகத் திரை தயார் செய்ய வேண்டும்,” என்றான் பட்டன் சீற்றம் தணியாமல்.
“முத்துக்குமரியாலேயே என் முகத்தை அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லையே?”

“அவள் கண்கள் காமக் கண்கள். அவற்றுக்கு உன்னைக் காணச் சக்தி இருக்காது. உன் பழைய உருவத்தைத்தான் அவள் சதா பார்த்துக்கொண்டிருப்பாள். ஆனால் மன்னன் கண்கள் வேறு. நீ எந்த வேடத்திலிருந்தாலும் உன்னைப் பிடித்து அழிக்க ஆவலுடன் காத்திருக்கும் கண்கள் அவை. சந்தேகமே வேண்டாம். உன்னை நன்றாக மன்னன் அறிந்து கொண்டுவிட்டான்,” என்றான் பட்டன்.

“இனி என்ன செய்வானென்று எதிர்பார்க்கிறீர்கள்?”

“கொலை செய்யும் வழியைப்பற்றி மன்னன் ஆராய்ந்து கொண்டிருப்பான். எப்படிக் கொன்றால் நீ மிகுந்த துன்பத்துடன் சாகமுடியும், எப்படிக் கொன்றால் தன்னை மக்கள் பழிக்கமாட்டார்கள் என்பதை ஆராய்ந்து தக்க வழி கண்டு பிடிப்பான்,” என்று பரதபட்டன் சோகப் பெருமூச்சு விட்டான்.

பரதப்பட்டன் சொன்னதில் தவறேதுமில்லை. உண்மையில் அன்று அரண்மனையில் மன்னன் மூளை வெகு விபரீத வழிகளில் வேலை செய்துகொண்டு இருந்தது. கொலை செய்வதைவிட மிகப் பயங்கர மார்க்கமொன்றை சேர மன்னன் சிந்தித்துக் கொண்டிருந்தான். “செண்டுவெளி தான் வீரன் மடிய சிறந்த இடம்,” என்ற முடிவுக்கும் வந்த மன்னவன் வதனத்தில் மந்தகாசம் குடி கொண்டது. “இந்திரபானு! உன் கண்களே உனக்கு விரோதி! அவற்றை செண்டு வெளி மூடிவிடும்,” என்று இரைந்தே சொன்னான் வீரரவி.

Previous articleRaja Muthirai Part 2 Ch8 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Muthirai Part 2 Ch10 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here