Home Historical Novel Raja Perigai Part 1 Ch1 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

Raja Perigai Part 1 Ch1 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

128
0
Raja Perigai Part 1 Ch1 Raja Perigai Sandilyan, Raja Perigai Online Free, Raja Perigai PDF, Download Raja Perigai novel, Raja Perigai book, Raja Perigai free, Raja Perigai,Raja Perigai story in tamil,Raja Perigai story,Raja Perigai novel in tamil,Raja Perigai novel,Raja Perigai book,Raja Perigai book review,ராஜ பேரிகை,ராஜ பேரிகை கதை,Raja Perigai tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Perigai ,Raja Perigai ,Raja Perigai ,Raja Perigai full story,Raja Perigai novel full story,Raja Perigai audiobook,Raja Perigai audio book,Raja Perigai full audiobook,Raja Perigai full audio book,
Raja Perigai Part 1 Ch1 | Raja Perigai | TamilNovel.in

Raja Perigai Part 1 Ch1 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

ராஜ பேரிகை முதல் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 1. அழகும் ஆத்திரமும்

Raja Perigai Part 1 Ch1 | Raja Perigai | TamilNovel.in

‘அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே என்கிற வாக்கியப்படி எல்லா உலகங்களுடைய உற்பத்தி, இருப்பு, மறைவு முதலிய காரியங்களையெல்லாம் எந்தவிதச் சிரம சாத்தியமும் இல்லாமலே விளையாட்டாகச் செய்து முடிக்க வல்லவனும், குடதிசை முடியை வைத்து, குணதிசைப் பாதம் நீட்டி, வட திசை பின்பு காட்டி, தென்திசை இலங்கை நோக்கி கண் வளர்ந்திருப்பவனும், பெருமதிள் சூழ் ஏழு பிராகாரங்களுக்கு மத்தியிலே உள்ளதும், பொன் வேய்ந்த பராந்தகனாலும் மதி நலங்கொண்ட மாபெரும் வீரன் சுந்தர பாண்டியனாலும் பொன் வேயப்பட்ட பிரணவாகார விமானத்தின் உள்ளே ‘உளன் சுடர்மிகு சுருதியுள்’ என்கிறபடி, உயர்ந்த கோபுரங்களுள்ள கோவில்கள் ஆயிரமாயிரம் இருப்பினும் அவன் குடிகொண்ட ஒரே காரணத்தினாலேயே பெருங்கோவில் எனத் தனிச் சிறப்புப் பெற்றதுமான அரங்கன் திருக்கோவிலுக்கு வெளி நான்கு கோபுரங்களிலும், அன்றிரவு விளக்குகள் ஜாஜ்வல்லியமாக எரிந்து கொண்டிருந்தன.

அரங்கனை விட்டுத் திருவைப் பிரிப்பது சம்பிரதாய விரோதமென்ற காரணத்தினாலேயே ஸ்ரீரங்கம் எனப் பெயர் கொண்ட மாநகரத்தின் கோபுரங்களில் மட்டுமின்றிப் பெரும் மதிள்களின் பலவிடங்களிலும் பெரும் பந்தங்கள் கொளுத்தப்பட்டு, ஒளிக்கு அங்கு ஏதும் குறைவு வைக்காவிட்டாலும், பன்னிரண்டு ஆழ்வார்களின் மங்களா சாஸனங்களாகிற தமிழ் மறையால் அழியாமல் பிரகாசம் பெற்றுவிட்ட உள்ளிருக்கும் வேத ஒளிக்குமுன் தாங்கள் ஒளி காட்ட முற்பட்டது எத்தனை கேவலம் என்ற உணர்ச்சியாலோ என்னவோ, கோபுர விளக்குச் சுடர்களும் மதிள் பந்த ஜ்வாலைகளும் இரு காவிரிகளிடமிருந்து எழுந்த காற்றினால் மனித மனத்தின் சலனம்போல் அலைந்து கொண்டிருந்தன.

அந்தச் சலனம் சரிதான் என்பதை ஆமோதிப்பனபோல், தென் திருக்காவிரியின் கரையிலிருந்த பெரிய நானாவித மரங்கள் தங்கள் தலைகளை ஆட்டிப் புஷ்பமிருந்தால் புஷ்பங்களையும் ஏதும் இல்லாவிட்டால் பழுத்த இலைகளையும் ஆங்காங்கு உதிர்த்துக் கொண்டிருந்ததாலும், காவிரியின் பெருங்காற்று அவற்றை எதிரேயிருந்த வீதிக்குள் தூக்கி எறிந்து கொண்டிருந்ததாலும், காலை வேளையில் திருமஞ்சனக் குடமேந்திச் செல்லும் அந்தணருக்கும், புரவியில் செல்லும் வீரர்களுக்கும், ஏதோ இலையும் பூவும் இணைந்த பாதையை இயற்கை சிருஷ்டித்துக் கொண்டிருந்தது.

அடுத்த காலை நேரத்துக்கு வேண்டிய அந்தப் பாதையை முன்னடியாக விரிப்பானேன் என்று கேட்டுச் சிரிப்பதுபோல் தென் திருக்காவிரியில் அப்பொழுது பூர்ணமாயில்லாத சிறு நீர்க்கால்கள் சலசலசப்புடன் ஓடிக்கொண்டிருந்தன. அந்தச் சலசலப்புக்குச் சுருதி கூட்டுவனபோல் மா, பலா, கொய்யா மரங்களில் பறந்து பறந்து சிறகடித்து இன்பமாகக் கூவிக் கொண்டிருந்த கிள்ளை, மைனா முதலிய பட்சி ஜாலங்கள், தாங்கள் உறங்கும் காலம் நெருங்கிவிட்டதை உணர்ந்து, கூண்டுகளுக்குள்ளும், இலைகளின் மறைவுகளுக்குள்ளும் சென்று கொண்டிருந்தன.

அந்தப் பட்சி ஜாலங்களுக்கெல்லாம், பிரஜைகளுக்கு வழி காட்டும் அரசனைப் போல், அரைகுறையாகக் கட்டிவிடப்பட்டிருந்த தெற்கு வாசல் கோபுரத்தின் உச்சியில் பெரிய கருடன் ஒன்று தனது சிறகுகளை அடக்கிக்கொண்டு வெள்ளைக் கழுத்துடனும் வளைந்த அலகுடனும் மௌனமாக உட்கார்ந்திருந்தது. அதுதான் மௌனமாக உட்கார்ந்திருந்ததே தவிர, அன்று இரவு முற்றியுங்கூட மக்கள் நடமாட்ட ஒலிகளும் கூச்சல்களும் சிறிதும் குறைந்தபாடில்லை அந்த மாநகரத்தின் புற வீதிகளிலே.

ஆங்காங்கு மதிள்களைச் சுற்றிலும் என்றுமில்லாத திருநாளாய் உலாவிக் கொண்டிருந்த அளவுக்கு மீறிய புரவி வீரர்களின் நடமாட்டம் அந்த மாநகரத்தின் அழகுக்கு அதிக அழகையும், ஒரு கம்பீரத்தையும் அளித்தாலும் அரங்கனுக்கு இத்தனை காவலும் கெடுபிடியும் எதற்கு என்ற வினாவைத் தொடுக்கவே செய்ததானாலும், அவர்கள் எச்சரிக்கைக் கூச்சலும் புரவிகளின் குளம்பொலிகளும் காதுக்கு ரம்யமாகவே இருந்தன.

காதுக்கு ரம்யமாகவும் கண்ணுக்கு அச்சத்தைத் தவிர்ப்பதாகவும் அமைந்திருந்த அந்தப் புரவிப் படையின் சஞ்சாரத்துக்குக் காரணம் என்னவென்பதை அறியாத தென்னாட்டுப் பாகவதரும் வடநாட்டுக் கோஸாயிகளும் அந் நகருக்குள் நுழையுமுன்பு பெரும் யோசனையுடனேயே நுழைந்து கொண்டிருந்தார்கள். இரவில் கூட நாலாயிரத்தைச் சந்தை சொல்லிக் கொள்ளும் மாணவர்களின் மறையொலிகள் ஓரளவு கேட்டுக் கொண்டிருந்தாலும், மதிள்களுக்குள்ளும் இருந்த புரவி வீரர் நடமாட்டத்தின் காரணமாகத் திருவருள் ஓரளவு கிடைத்தால் போதுமென்று முன்னடி பின்னடிகளைச் சிறிது அடக்கியே சேவித்துக் கொண்டிருந்தார்கள். பகவான் உறைகிறான் என்ற காரணத்தினாலேயே பயமற்றிருந்த அந்த மாநகரவாசிகள் அன்றிரவு மட்டும் சற்றுப் பயத்துடனே இருந்தார்களென்பதை உத்தர, சித்திரை வீதிகளின் அடைக்கமான சூழ்நிலையே நிரூபித்துக் கொண்டிருந்தது.

அந்தச் சூழ்நிலையின் காரணமாக அந்நகரின் இயற்கையான அழகுகூடச் சிறிது குறைந்திருப்பதாகப் புதிதாக வந்து கொண்டிருந்த யாத்ரீகர்கள் உணர்ந்து கொள்ளும் வண்ணம், அவர்கள் நகருக்குள் புகுந்ததும் புகாததுமாக ஆங்காங்கிருந்த சத்திரங்களுக்குள் அனுப்பப்பட்டார்கள். அந்த எச்சரிக்கையையும் மீறிக் குறுக்கும் நெடுக்கும் விஷயம் புரியாமல் போக முயன்றவர்கள் கத்தி முனைகளில் கோவிலுக்குச் செல்லும் தெற்கு வாசல் பாதையிலிருந்து வீரர்களால் அகற்றப்பட்டார்கள்.
ஆனால் எந்த ராஜா வந்தாலும் தான் அடங்க முடியாதென்பதை நிரூபிக்கக் கோவிலின் பிரதான வாசலுக்கு முன்பிருந்த தோட்டத்தில் அசைந்து கொண்டிருந்த சிறு யானைக் குட்டி மட்டும் ‘ரங்கா’ வென்று பெருங்கூச்சலை ஒரு முறை கிளப்பியது. அந்தக் குட்டி யானையின் துடுக்கை அடக்கு வதற்காகவோ என்னவோ பக்கத்தில் நின்ற பெரிய யானை அதன் மத்தகத்தில் தனது துதிக்கையால் ஒருமுறை ஓங்கி அறைந்து விசிறிக் காதுகளைப் பெரிதாக ஆட்டியது. ஆனால் குட்டி அதற்கு இடங்கொடுக்காமல் தனது சிறு தந்தங்களைத் தூக்கியும் மத்தகத்தால் குனிந்து தாக்கியும், பெரிய யானையுடன் சண்டைக்குச் சென்று பாகவதர்களில் பெரியவர் சின்னவர் கிடையாதென்ற வைணவ தத்துவத்தை அறிவுறுத்தியது. ஆனால் அந்தச் சண்டை அதிக நேரம் நீடிக்கவில்லை மதிள்களுக்கு வெளியே திடீரெனப் பெருங்கூச்சல் கேட்டது. புரவிகள் பல திடீரெனப் பாய்ந்து வந்தன, உள்நோக்கி. அவற்றின் மீது வந்த வீரர்கள் வாட்களை உயர்த்தி வீசி மக்களைப் பக்கவாட்டு வீடுகளுக்கும் வீதிகளுக்கும் துரத்தினார்கள்.

சற்று நேரத்திற்கெல்லாம் பெரிய வெள்ளைப் புரவி யொன்றில் காவலர் பலர் புடைசூழத் தலை முதல் உடல் முழுவதும் மறைய முக்காடிட்ட பெண் உருவமொன்று மிக நிதானமாகவும் மெதுவாகவும் வந்து கொண்டிருந்தது. அவளுக்கு முன்னும் பின்னும் பக்கவாட்டிலும் வாட்களையும், வேல்களையும், ‘மாட்ச்லாக்’ என்ற மெல்லிய துப்பாக்கிகளையும் தாங்கிய பல வீரர்கள் காவல் புரிந்து வந்தார்கள். அவளுக்கு அருகில் மட்டும் பெரும் மகாராஷ்டிர அங்கியணிந்த ஒரு பெரியவர் அவள் புரவியும் தன் புரவியும் உராய வந்து கொண்டிருந்தார்.

பிரதான வாயிலை அடைந்ததும் அந்தப் பெரியவரும் முக்காடிட்ட பெண்ணும் புரவிகளிலிருந்து இறங்க, அவர்களை வரவேற்க வாயிலில் நின்றிருந்த வீரர்கள் இருவர் புரவிக் கடிவாளங்களைக் கையில் பிடித்துக் கொண்டார்கள். முக்காடிட்ட பெண் சர்வ சாதாரணமாகப் புரவியிலிருந்து இறங்கினாள். பெரியவரும் வயோதிகத்தால் தாம் தளர்ந்து விடவில்லை என்பதை நிரூபிக்கப் புரவியிலிருந்து வெகு லாகவமாகக் குதித்தார். மற்றவர்கள் அங்கேயே இருக்கும்படி சைகையால் உணர்த்திய பெரியவர், தமது இடையிலிருந்த பெரும் கத்தியைச் சற்றுச் சரிசெய்துவிட்டுக் கொண்டு, ”வாருங்கள் போகலாம்” என்று கூறி, கோவிலுக்குள் நுழைந்தார்.

முக்காடிட்ட பெண், கால் சிலம்புகள் கலீர் கலீரென ஒலிக்க அவரைப் பின் தொடர்ந்தாள். வாயிலிலிருந்து பத்தடி அவ்விருவரும் சென்றதும் கருட மண்டபத்திலிருந்து அவர்களை நோக்கி விரைந்த இருவர் பெரியவரையும் முக்காடிட்ட பெண்ணையும் நோக்கி முதலில் தலை தாழ்த்தி வணங்கினார்கள். பிறகு மண்டியிட்டு மரியாதையைத் தெரிவித்ததும் பெரியவர் அவர்களை எழுந்திருக்கும்படி உத்தரவிட்டு, ”உங்களில் யார் இங்கு நிர்வாகம் செய்பவர்?” என்று வினவினார் அதிகார தோரணையில்.
மண்டியிட்டு எழுந்த இருவரில் பெரும்பட்டாடைக் கச்ச மணிந்து இடுப்பில் பழுக்காக் கரை அங்கவஸ்திரத்தைச் சுற்றி நெற்றியில் பட்டையான தென்கலைத் திருநாமத்துடன் காட்சியளித்தவர், “இங்கு நிர்வாகி ஒருவர் தான் என்பது அமைச்சருக்குத் தெரியாததல்ல’ என்று மிகுந்த பணிவுடன் தெரிவித்தார்.

அமைச்சர் என்றழைக்கப்பட்ட பெரியவரின் கண்களில் சிறிது சினம் துளிர்த்தாலும் அதை அவர் வெளிக்குக் காட்டவில்லை. ”அந்த நிர்வாகி ஏன் வரவில்லை, இவர்கள் வருகிறார்களென்பதை அறிந்திருந்தும்?” என்று கேட்க மட்டுமே செய்தார், அதிகார தோரணையில்.

“இந்தக் கோவில் மற்றக் கோவில்களைப் போன்றதல்ல” என்று சுட்டிக் காட்டினார் முதலில் பேசியவர்.

“இது பெரிய கோவில் என்பது எனக்குத் தெரியும், ஆனால்…” என்று அமைச்சர் தமது ஆட்சேபணையைச் சொல்லி முடிக்கு முன்பே முதலில் பேசியவர் சற்றுத் தைரியத்துடனும் திட்டவட்டமாகவும் சொன்னார்: “இதன் நிர்வாகம் எம்பெருமானாரால் நிர்ணயிக்கப்பட்டது. அதுவே இன்றும் அவருடைய மடாதிபதிகளான துறவிகளால் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இன்றும் அந்த மகானுடைய பீடத்தில் எழுந்தருளியிருக்கும் ஜீயர்தான் இதற்கு நிர்வாகி. துறவிகள் மன்னனைக்கூட வரவேற்பதில்லை. இது சம்பிரதாயம்” என்று.

இதைக் கேட்ட அமைச்சர் சற்றே நிலைகுலைந்தார். ஆனால் அந்தப் பெண் சற்றும் நிதானத்தை இழக்கவில்லை. ”அமைச்சரே! யார் நம்மை எதிர்கொண்டால் என்ன? நாம் அனுப்பிய ஓலைப்படி சந்நிதி இருக்கிறதா என்று விசாரியுங்கள்” என்று கூறினாள், தன்னுடன் வந்த பெரியவரை நோக்கி.

பெரியவர் விசாரிக்க உதடுகளைத் திறக்கு முன்பாகப் பட்டாடை கட்டியவரே பதில் சொல்லிவிட்டார்: ”ஓலையில் கண்டபடி சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கின்றன” என்று.

அப்படித் தன்னுடைய அனுமதியின்றிப் பட்டாடை கட்டியவர் பேசியதை ரசிக்காத அமைச்சர், “சந்நிதியில்…’ என்று துவக்கினார் எச்சரிக்கை ஒலித்த குரலில்.

”யாரும் அனுமதிக்கப்படவில்லை ” என்று கூறினார் பட்டாடையார், அளவுக்கு மீறிய பணிவுடன்.

”பட்டர்கள்?” மீண்டும் எழுந்தது கேள்வி அமைச்சரிடமிருந்து.

”வீடுகளுக்கு அனுப்பப்பட்டார்கள்” என்று அறிவித்தார் பட்டாடையார்.
“உள்ளே யாருமில்லை?”

“இல்லை.”

“நிச்சயமாகத் தெரியுமா?”

“கோவில் காவலரைக் கொண்டு துருவிப் பார்த்து விட்டோம்!” என்ற பட்டாடையார் கண்கள் மட்டுமின்றி அவர் திருமண்காப்பும் தீட்சண்யமாக ஜொலித்தது. அதற்கு மேல் கேள்வி ஏதும் கேட்காத அமைச்சர் உள்ளே போகலாம் என்பதற்கு அறிகுறியாகத் தமது கையை அசைத்தார். அடுத்த விநாடி அடிமேலடி வைத்துப் பட்டாடையாரும் அவரோடிருந்த மற்றொருவரும் வழிகாட்ட, முன்னால் அந்த முக்காடிட்ட பெண்ணும், அவளுக்குப் பின்னால் வாளின்மேல் கையை வைத்த வண்ணம் அமைச்சரும் சென்றார்கள். மிக நிதானமாகவும் அடக்கத்துடனும் சென்ற அந்த நால்வரும் உட்பிராகாரத்துக்குள் நுழைந்து வலம் வந்து அரங்கன் சந்நிதிக்குச் செல்லும் படிகளின் மீது ஏற முற்பட்டதும், முன் சென்றவர்களில் ஒருவரை விளித்த அமைச்சர், வட்டா போலிருந்த தமது மகாராஷ்டிரப் பெரும் தலைப்பாகையைக் கழற்றி அவரிடம் கொடுத்துவிட்டு பரமபக்தியுடன் படிகளில் ஏறிச் சென்றார்.

அவருக்கு முன்பாகவே படிகளில் ஏறிவிட்ட அந்த முக்காடிட்ட பாவை படிகளில் உச்சிக்குப் பின் நான்கே அடிகள் நடந்து முக்காட்டை நீக்கி நெருப்பைக் கக்கிய விழிகளால் சந்நிதியின் பொற் கதவுகளுக்கு எதிரே நோக்கினாள்.

அவள் மனத்திலே கோபத்துடன் அச்சம் கலந்து கொண்டிருக்க வேண்டும். ”அமைச்சரே! இது என்ன?” என்று அச்சமும் சினமும் இழைந்த குரலில் வினவினாள் அவள்.

அவள் சுட்டிய இடத்தைக் கண்ட அமைச்சர்கூடச் சினத் தின் சிகரத்தை எட்டினார். பட்டாடையாரும், அமைச்சர் தலைப் பாகையை ஏந்தி நின்ற மற்றொரு கோவில் கைங்கரியக்காரரும் வெலவெலத்துப் போனார்கள். “இது… இது…” என்று ஏதோ சொல்ல முற்பட்ட பட்டாடையார் மேற்கொண்டு வார்த்தை வராமல் குழறினார். தலைப்பாகையை ஏந்தி நின்றவர் கை நடுங்கி விரல்கள் கஞ்சிரா வாசிக்கத் தொடங்கின.

”உமது நிர்வாக லட்சணம்” என்று சீறிய அமைச்சர், உணர்ச்சி மேலிட்டுப் பேசும் சக்தியை அறவே இழந்தார்.

அவர்கள் அத்தனை பேர் சினத்துக்கும் காரணமான வாலிபன் மட்டும் சிறிதும் அவர்களைத் திரும்பிப் பாராமல் மண்டியிட்டுச் சந்நிதிக் கதவுகளை நோக்கித் தலை வணங்கிய வண்ணம் தியானத்தில் ஆழ்ந்திருந்தான். வளைந்த பெரு வாளொன்று அவனெதிரே தரையில் கிடந்தது. அதன்மீது அவன் வலக்கை கெட்டியாகப் பதிந்து கிடந்தது. உதடுகள் சிறிதுநேரம் ஏதோ முணுமுணுத்தன.

அடுத்த விநாடி அங்கிருந்த யாவர்க்கும் பேரச்சத்தையும் பிரமிப்பையும் விளைவிக்கக்கூடிய சொற்கள் அந்த வாலிபன் வாயிலிருந்து பெரிதாக எழுந்து அந்த மண்டபத்தின் தூண்களில் தாக்கிப் பயங்கரமாக எதிரொலி செய்தன. அவன் வாயிலிருந்து உதிர்ந்த சொற்கள் அந்தப் பாவையை மட்டுமின்றி அமைச்சரையும் சிலையாக அடித்தன. பெரிய விபரீதம் உருவாவதை இருவருமே புரிந்து கொண்டார்கள்.

Previous articleRaja Muthirai Part 2 Ch69 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Perigai Part 1 Ch2 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here