Home Historical Novel Raja Perigai Part 1 Ch11 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

Raja Perigai Part 1 Ch11 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

54
0
Raja Perigai Part 1 Ch11 Raja Perigai Sandilyan, Raja Perigai Online Free, Raja Perigai PDF, Download Raja Perigai novel, Raja Perigai book, Raja Perigai free
Raja Perigai Part 1 Ch11 | Raja Perigai | TamilNovel.in

Raja Perigai Part 1 Ch11 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

ராஜ பேரிகை – சாண்டில்யன்

முதல் பாகம் அத்தியாயம் – 11. கண்ணும் காணோம், பெண்ணும் காணோம்!

Raja Perigai Part 1 Ch11 | Raja Perigai | TamilNovel.in

நஞ்சைப் பயிர்களைக் கொள்ளை கொள்ளையாக அளித்ததால் தமிழகத்தின் நெற்களஞ்சியம் எனப் பெயர் பெற்றதும், விஜயாலய சோழன் காலத்தில் தலை தூக்கி ராஜராஜன் காலத்தில் மாபெரும் சோழ சாம்ராஜ்யமாக விரிந்து, அதன் தலைநகராகப் பெரும் சிறப்படைந்ததும், கோட்டைக்குள் கோட்டையாக இரு பெரும் மதிள்களையுடையதாய், இரண்டாவது கோட்டைக்குள் நிழலே வெளியில் விழாத கலைவெள்ளம் கொண்ட பிரகதீசுவரர் கோவிலைமையத் தலமாகப் பெற்றதும், சோழ சாம்ராஜ்யம் மறைந்தாலும் இந்து சாம்ராஜ்யம் தெற்கே மறையவில்லையென் பதற்கு அத்தாட்சியாய்ச் சத்ரபதி சிவாஜியின் மகாராஷ்டிர சாம்ராஜ்யத்தின் தென்திசைத் தீபமாய், சிவாஜியின் சகோதரரான வியங்காஜியெனும் ஏகோஜியின் ராஜ்யத்தின் தலைநகராய், பிரெஞ்சுக்காரர், ஆங்கிலேயர், ஆற்காட்டு நவாபுகள் அனைவர் கண்களுக்கும் எரிச்சலை விளைவிக்கும் சுதந்திர நகராய் எடுத்து காட்சியளித்தது; தஞ்சை.

எத்தனையோ இன்னல்களுக்கிடையே திணறிக் கொண்டிருந்த தஞ்சை மாநகரின் அரண்மனையின் ஆஸ்தான அறையில் தஞ்சை மண்டல மன்னனும், துகோஜியின் வாளுக்கு மாலையிட்ட அன்ன பூர்ணாபாயின் மகனாதலால் வாள்மகன் என்று பிரசித்தி பெற்றவனும், மகாவீரனுமான பிரதாப் சிங்மகாராஜா தீர்க்காலோசனையுடன் அப்புறமும் இப்புறமும் உலாவிக்கொண்டும், சற்று நேரத்திற்கொரு முறை சாளரத்தருகே சென்று வெளியே தலை நீட்டிப் பார்த்தும், பிறகு மீண்டு அறையின் நடுப்பகுதிக்கு வந்தும், உள்ளத்தே ஓடிய பல உணர்ச்சிகளால் சங்கடப்பட்டுக் கொண்டிருந்தான்.

எப்பேர்ப்பட்ட சமயத்திலும் எவ்வித உணர்ச்சியையும் காட்டாதவனும் மகாதந்திரசாலியென அக்காலத்திய பிரிட்டிஷ் சரித்திர ஆசிரியர்களாலேயே சிலாகிக்கப்பட்டவனுமான மகாராஜா பிரதாப் சிங் அன்று, அப்படிச் சலனத்தைக் காட்டி விட்டதற்குக் காரணம் இருந்ததென்பதை எதிரே நின்ற மூவரும் புரிந்து கொண்டிருந்ததால் மன்னனே பேசட்டுமென்று வாளாவிருந்து விட்டாலும், அவர்கள் உள்ளங்கள் மட்டும் வாளாவிருக்காமல் தங்கள் நிலையைப் பற்றிய பற்பல கேள்விகளைக் கிளப்பி விட்டுக் கொண்டிருந்தன.

அந்த விபரீத மௌன நிலையை வெட்டவோ என்னவோ பிரதாப்சிங் கடைசியாக உலாவுவதை நிறுத்திச் சட்டென்று திரும்பி எதிரே நின்ற மூவரையும் சில விநாடிகள் நோக்கினான். பிறகு ஒற்றைச் சொல்லை வீசினான், அந்த அறையில், மிக மெதுவாக ஆனால் மிக்க கடுமையாக, “டபீர்” என்று.
அந்தச் சமயத்தை டபீர் பண்டிதரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்ததால், ”மகாராஜா” என்று கூறித் தலை வணங்கினார், மிகத் தாழ்ந்து.

பிரதாப்சிங்கின் தந்திர விழிகள் டபீர் பண்டிதரின் அளவுக்கு மீறிய தலைவணக்கத்தையும் கவனிக்கத் தவறவில்லை. தமது வருமான வரி அமைச்சரிடமிருந்து விலகி, எட்ட நின்ற பட்டாடையாரையும் மற்றொரு கைங்கர்யபரரையும் பார்க்கத் தவறவில்லை. அப்படி ஒரு முறை மூவரையும் பார்த்து விட்டு மீண்டும் டபீர் பண்டிதரின் மீது நிலைத்த மகாராஜாவின் கண்கள் சற்று நிதானத்துடன் வெறுப்பையும் காட்டின. இதழ்களும் வெறுப்புடனும் கோபத்துடனும் அசைந்தன. ‘தஞ்சை மாநகரத்தின் பரம்பரை ராஜ பேரிகை முழங்க வில்லை” என்ற சொற்களும் மன்னன் இதழ்களிலிருந்து உதிர்ந்து வெறுப்பையும் கோபத்தையும் சற்று அதிகமாகக் காட்டவே செய்தன.

‘ஆம்” என்று மிகுந்த பணிவு நிரம்பிய குரலில் ஒப்புக் கொண்டார் டபீர் பண்டிதர்.

”ஏன் முழங்கவில்லை?” மகாராஜாவின் கேள்வி முழங்கிற்று பேரிகையைப் போல்.

”அரசகுலத்தார் உள்ளே நுழைந்தால் தான் ராஜ பேரிகை சாதாரண காலத்தில் முழங்கும்” என்றார் டபீர்.

“அப்படி யாரும் வரவில்லை உம்முடன்?”
“இல்லை.”

”என் பெண் வரவில்லை?”

“இல்லை.”

“ஆனால் வெறுங்கையுடன் நீர் வரவில்லை…”

”மகாராஜா!”

”இதோ இந்த இரண்டு நாமதாரிகளையும் கொண்டு வந்திருக்கிறீர் என் மகளுக்குப் பதில்” என்று கூறிய மகாராஜா பட்டாடையாரையும் இன்னொரு கைங்கர்யபரரையும் சுட்டிக் காட்டினார்.

டபீர் பண்டிதர் ஏதோ சொல்ல வாயெடுத்தார். ஆனால் அவரை முந்திக் கொண்டார் பட்டடாடையார். டபீர் பண்டிதர் என்ன பயமுறுத்தியும் துரிதப்படுத்தியும் கேளாது அன்று காலையில் மீண்டும் நீராடி, தமது பட்டுக்கரை வேஷ்டியையும் உத்தரீயத்தையும் அணிந்து பன்னிரண்டு திருநாமங்களையும் பரக்கப் பளபளக்கச் சாத்திக் கொண்டு வந்திருந்த பட்டாடையார் மகாராஜாவின் சொல்லைக் கேட்டதும் சிறிது சினத்தை முகத்தில் காட்டினார். ”மகாராஜா! தாங்கள் பேசுவது ஒரு மன்னர் பேசக்கூடிய பேச்சாக இல்லை” என்று லேசாகச் சினம் கலந்த குரலில் கூறவும் செய்தார் தஞ்சை மன்னனை நோக்கி.

அமைச்சரான டபீர் பண்டிதரே தம்மைக் கண்டு அஞ்சி நிற்க, பட்டுக்கரை ஆடையுடுத்த அந்த பிராம்மணன் சீறுவதைக் கண்டதால் எத்தனையோ விசாரத்திலும் சிறிது வியப்பையும் முகத்தில் காட்டிய பிரதாப்சிங், ”என்ன சொல்கிறீர்?” என்று வினவினார்.

”அரங்கன் சந்நிதியில் நாங்கள் சேவை செய்கிறோம். பகவத் கைங்கர்யத்தில் ஈடுபட்டிருக்கிறோம்” என்று பக்கத்தி லிருந்த இன்னொரு கைங்கர்யபரரையும் சேர்த்துக்கொண்டு கூறினார் பட்டாடையார்.

”அதனால்?”

”எங்களை அவமதிப்பதால் அரங்கனை அவமதிக்கிறீர். அரங்கனை அவமதிப்பதால் அவன் அடியார்களை அவமதிக்கிறீர்கள். அரங்கன் கோவில் நிர்வாகத்திற்குக் ‘கோயிலொழுகுத் திட்டமிட்ட உடையவர் ஸ்ரீரங்கநாராயண ஜீயரை அவமதிக்கிறீர்.”

”அப்படி என்ன அவமதித்து விட்டேன்?”

”எங்களை நாமதாரிகள் என்று அலட்சியமாக அழைத்தீர்.”

பிராதப் சிங்கின் வியப்பு அதிகமாயிற்று. எதிரே நின்ற வைணவப் பிராமணனின் துணிவு மகாராஜாவின் சிந்தனையைப் பெரிதும் கிளறிற்று. ஆகவே டபீர் பண்டிதரை அறவே புறக்கணித்து, பட்டாடையாரை ஏற இறங்க நோக்கினார். பிறகு கேட்டார், “உமது பெயர் என்ன?” என்று.

“ரங்கதாஸன்” என்றார் பட்டாடையார்.

”தாஸன் என்ற பெயர் பணிவைக் குறிக்கவேண்டும்” என்று சுட்டிக் காட்டினார் மகாராஜா.

”அரங்கன் அடியார்களின் திருவடிகளுக்கு நான் தாஸன், அரசர்களுக்கு அல்ல. அதுவும் வைணவத்தை அவமதிப்பவர்களுக்கல்ல” என்றார் பட்டாடையார் திட்டவட்டமாக.

இந்தச் சமயத்தில் கூட வந்த கைங்கர்யபரர் உடல் வெல வெலத்துக் கொண்டிருந்தது. ”ஸ்வாமி! இது மகாராஜாவின் சந்நிதானம்’ என்று சொற்கள் குழறப் பட்டாடையாரை அடக்கப்பார்த்தார்.

ஆனால் பட்டாடையார் அதற்கெல்லாம் மசிகிற பேர்வழியாகத் தெரியவில்லை . ”மகாராஜா! தாங்கள் க்ஷத்திரியர் அல்லவா?” என்று வினவினார், ஒரு கையால் சகோதர கைங்கர்ய பரரைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு.

“ஆம்” என்றார் மகாராஜா.

”சத்ரபதியைக் கீழ்க் குலத்தவர் என்று சொல்பவர்களும் உண்டு. சூர்ய வம்சத்தில் வந்த க்ஷத்திரியர் என்று சொல்பவர்களும் உண்டு.”

“உண்டு”

”ஆனால் நீங்கள் க்ஷத்திரியர்கள்தான். உங்களுக்கு முப்புரி நூால் உண்டு. முக்காலக் கடன்களும் உண்டு.”

“ஆம்.”

”ஆசமனம் உண்டு.”

”உண்டு.”

”அதில் கேசவாய நமஹ தொடங்கிப் பன்னிரண்டு பகவந்நாமங்கள் இருக்கின்றன.”

”ஆம்.”

”அந்தப் பன்னிரண்டு திருநாமங்களை வைணவர்கள் நெற்றி தொடங்கி, பன்னிரண்டு இடங்களில் ஸ்தாபிக்கிறார்கள். அதனால்தான் அவற்றுக்கு நாமம் என்று பெயர். அதை அவமதிப்பவர்கள், கேலியாகப் பேசுகிறவர்கள், சர்வலோக ரட்சகனான நாராயணனை அவமதிக்கிறார்கள். இதனால் பெரும் பாவம் சம்பவிக்கிறது” என்ற பட்டாடையார் அந்த விவரணத்துடன் நிற்காமல் மேலும் சொன்னார்: ”மகாராஜா! இந்த ராஜ்யத்தின் மீது மட்டுமல்ல, இந்த நாட்டின் மீதும் பல பேர் கண் வைத்திருக்கிறார்கள். சனாதனமான ஹிந்து மதமும் ஹிந்து ராஜ்யங்களும் அழியக்கூடிய பயங்கர நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்தச் சமயத்தில் பொறுத்துக் கேளுங்கள். ஏதோ விபரீதம் இந்த நாட்டைச் சூழ்ந்து கொள்ள இருக்கிறது” என்று விவரித்தார்.

பிரதாப்சிங் மகாராஜா அது உண்மை என்பதைக் குறிக்கத் தலையை ஆட்டிவிட்டுக் கேட்டார்:

”அது உமக்கு எப்படித் தெரியும்?” என்று.

”சகுனம் அப்படியிருக்கிறது மகாராஜா.”

”என்ன சகுனம்?”

இதற்குப் பட்டாடையார் பதில் சொல்லவில்லை. பீர் பண்டிதரை நோக்கித் திரும்பி, ”அமைச்சரவர்களே, சொல்லுங்கள்! உங்கள் வாயால் வரட்டும்” என்று கூறினார்.

டபீர் பண்டிதர் ஒருமுறை பட்டாடையாரை எரித்து விடுவதுபோல் பார்த்தார். பிறகு உதடுகள் துடிக்க, ”அரங்கன் கண்களில்…” என்று துவங்கி மென்று விழுங்கினார்.

”சொல்லும்.”

”ஒன்றைக் காணோம்!”

பிரதாப்சிங் சிலையென நின்றுவிட்டார் பல விநாடிகள். ”என்ன, கண்ணைக் காணோமா?” என்ற அவர் கேள்வியில் அதிர்ச்சி ஒலித்தது.

“ஆம். அதிலிருந்த பெரிய வைரக்கல்” என்றார் பண்டிதர்.

மகாராஜா ஸ்தம்பித்து நின்றார். ‘அரங்கன் கண்ணைக் காணோம்: கண்ணிலிருந்த வைரம் காணோம்’ என்று மனசுக்குள் சொல்லிக் கொண்டார். சில விநாடி மௌனத்துக்குப் பிறகு கேட்டார். ” எனது பெண்?” என்று.

”காணவில்லை” என்று பண்டிதர் சுருக்கமாக உளறினார்.

”கண் காணவில்லை, என் பெண் காணவில்லை இரண்டையும் ஒரே சமயத்தில் எப்படித் தொலைக்க முடிந்தது உம்மால்?” என்று விசாரித்தார் மகாராஜா அமைதியுடன்.

அது எரிமலையின் அமைதி என்பதைப் புரிந்து கொண்ட டபீர் பண்டிதர் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு நடந்ததைக் கூறினார்.

மகாராஜா அறை நடுவிலிருந்த மஞ்சத்தில் உட்கார்ந்து கொண்டார். ”விசாரணைக்கு எந்த ஏற்பாடும் செய்யவில்லை நீர்?” என்று வினவினார்.

”அரங்கன் சந்நிதி சாவி இவர்களிடம் இருப்பதால் வைரத்தின் விஷயமாக விசாரிக்க இவர்களை அழைத்து வந்தேன்” என்ற டபீர் பண்டிதர்மீது வெறுப்புத் ததும்பிய பார்வையை வீசிய பிரதாப்சிங் மகாராஜா, ”பெண்ணைக் கொண்டு போனவனைப்பற்றி விசாரிக்க யாரையும் அழைத்து வரவில்லையா?” என்று வினவினார்.

”இல்லை.”

”ஏன்? அதற்கும் சம்பந்தப்படாத இருவரைப் பிடித்துக் கொண்டு வந்திருக்கலாமே?”

மகாராஜா தன்னைப் பார்த்து நகைக்கிறார் என்பதைப் புரிந்து கொண்ட டபீர் பண்டிதரும் சிறிது எதிர்ப்பைக் காட்டி, ”மகாராஜா! நான் வருமானத் துறை அமைச்சன், போர் வீரனல்ல” என்று விளக்கம் கூறினார்.

பண்டிதர் கச்சையில் தொங்கிய வாளை மகாராஜா அர்த்த புஷ்டியுடன் பார்த்தார். ”தெரிகிறது தெரிகிறது” என்று கூறிய பிரதாப்சிங் சிறிது சிந்தித்துவிட்டு டபீர் பண்டிதரை நோக்கி, ”சரி. இவர்கள் திரும்பி ஸ்ரீரங்கம் செல்வதற்கு வேண்டிய வசதிகளைச் செய்து கொடும். அரண்மனை வண்டி எது இருந்தாலும் அனுப்பும்” என்று உத்தரவிட்டார்.

”இளவரசி….”

”அதைப்பற்றிக் கவனிப்போம்.”

”எப்பொழுது?”

“இனிமேல் எப்பொழுது கவனித்தால் என்ன?”

”மகாராஜா! இளவரசியாருக்கு ஆபத்து ஏதாவது நேர்ந்தால்?”

‘’அவளுக்குத் தற்காப்பு செய்து கொள்ளத் தெரியும்” என்று கூறிய பிரதாப்சிங், ‘இப்பொழுது என் பெண்ணைவிட முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இருக்கின்றன. நீர் போய் மானாஜியை அனுப்பும் ” என்று உத்தரவிட்டார்.

அவர் குரலில் கவலை தோய்ந்து நின்றது. அந்தக் கவலையைக் கலைக்கவோ குலைக்கவோ தெரியாது; திடீரென ராஜபேரிகை திமுதிமுவென சப்தத்தது, வெளியே கோட்டையின் வடக்கு திசையில். அதே சமயத்தில் உள்ளே சாளரத்தின் மூலம் மன்னனை நோக்கி ஒரு பேரம்பும் பாய்ந்து வந்தது.

Previous articleRaja Perigai Part 1 Ch10 | Raja Perigai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Perigai Part 1 Ch12 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here