Home Historical Novel Raja Perigai Part 1 Ch12 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

Raja Perigai Part 1 Ch12 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

52
0
Raja Perigai Part 1 Ch12 Raja Perigai Sandilyan, Raja Perigai Online Free, Raja Perigai PDF, Download Raja Perigai novel, Raja Perigai book, Raja Perigai free
Raja Perigai Part 1 Ch12 | Raja Perigai | TamilNovel.in

Raja Perigai Part 1 Ch12 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

ராஜ பேரிகை – சாண்டில்யன்

முதல் பாகம் அத்தியாயம் – 12. காரணங்கள் மூன்று

Raja Perigai Part 1 Ch12 | Raja Perigai | TamilNovel.in

அரசகுலத்தார் வரவையோ அல்லது எதிரிகள் வரவையோ மட்டும் குறிப்பதற்காக ஒலிக்கும் அரண்மனைக் கோட்டை வாசல் ராஜ பேரிகை திடீரென்று திமுதிமுவெனச் சப்தித்ததே அரசன் ஆஸ்தான அறையிலிருந்த டபீர் பண்டிதருக்கும் மற்றொரு கைங்கர்யபரருக்கும் திகிலை விளைவித்த தென்றால், அதைத் தொடர்ந்து பேரம்பு ஒன்றும் சாளரத்தின் மூலமாக அரசனை நோக்கிப் பாய்ந்து வந்தது பயமென்பதை அறியாத பட்டாடையாருக்குக்கூட ஓரளவு பயத்தை விளைவிக்கவே செய்தது.

ஆனால் இவை அனைத்தும் பிரதாப ஸிம்ஹன் என்று மகாராஷ்டிரக் கவிஞர்களாலும், பிரதாப்சிங் என்று வெளிநாட்டு வெள்ளைக்காரர்களாலும், உள்நாட்டு முகம்மதியார்களாலும் அழைக்கப்பட்ட தஞ்சை மன்னருக்கு மட்டும் எந்த வித அச்சத்தையோ அதிர்ச்சியையோ விளைவிக்காததால் அவர் இருந்த இடத்தைவிட்டு நகராமலே உள்ளே பறந்து வந்த பேரம்பை மட்டும் கவனித்தார்.

வந்த அம்பும் அவர்மீது விழாமல் எட்ட இருந்த மஞ்சத்தின் மீதே விழுந்ததால் அதை எடுக்க மட்டும் மகாராஜா நாலடி நடந்து மஞ்சத்திலிருந்த அந்தப் பெரிய அம்பைக் கையிலெடுத்துத் தூக்கினார். அம்பின் நுனி நன்றாகச் சிறு சீலையால் சுற்றப்பட்டிருந்தது. மேலும் அதன் இரும்பு முகப்புக்கு அடுத்தபடி இருந்த மரப்பகுதியில் ஒரு சிறு முடிப்புத் தொங்கியதையும் கண்ட பட்டாடையார்கூடத் தமது முகத்திலிருந்த சினத்தை நீக்கிக்கொண்டு வியப்புடன் நோக்கினார், மன்னர் கையிலிருந்த வாளியை. பிரதாப் சிங்மகாராஜாவின் கண்கள் ஒரு விநாடி அந்த வாளியையும் அதன் கழுத்திலிருந்த சிறு முடிப்பையும் கூர்ந்து நோக்கின. அம்பின் முகப்பில் கெட்டியான சீலைத் துணியொன்று சுற்றப்பட்டிருந்ததைக்கூடப் பார்த்தார் மகாராஜா. பிறகு மெல்ல முடிப்பை அவிழ்த்து அதற்குள் இருந்தவற்றை நோக்கிவிட்டு அவற்றில் இரண்டொன்றைக் கையால் தடவியும் பரிசோதித்துவிட்டு முடிப்பைடபீர் பண்டிதரிடம் நீட்டினார்.

முடிப்பிலிருந்தவற்றை டபீர் பண்டிதர் பார்த்ததும் அவர் முகத்தில் கிலேசம் மிதமிஞ்சிப் பரவவே, ”அரசகுமாரியின் நகைகள் ” என்று குரல் நடுங்கச் சொற்களை உதிர்த்தார்.

முடிப்பிலிருந்த நகைகளைப் பட்டாடையார் பார்த்ததும், அரங்கன் கோயிலில் நடந்த தடபுடவில் அரசகுமாரியின் நகைகளை அவர் சரியாகப் பார்க்காததால், “இவையா அரசகுமாரியின் நகைகளா!” என்று வினவினார் வியப்புடனும் திகிலுடனும்.

இதற்கு அமைச்சர் பதிலேதும் கூறவில்லை , பதில் கூறத் திராணி இல்லாததால், நா எழாததால்.

பிரதாப ஸிம்ஹ மகாராஜாவே கூறினார் மிகுந்த நிதானத்துடன், ”ஆம்” என்று.

”மகாராஜா! அப்படியானால் இந்த அம்பு…’ என்று பட்டாடையார் சிறிது கலக்கத்துடன் வினவினார்.

”மகாராஷ்டிரர்கள் அம்பு!” மகாராஜாவின் குரலில் லேசாகச் சீற்றமிருந்தது.

“மகாராஷ்டிரர்கள் வாள் வீரர்களே தவிர வில் வீரர்கள் என்று கேள்விப்பட்டதில்லையே!” என்றார் ரங்க தாஸரான பட்டாடையார்.

”தஞ்சை மண்டலத்துக்கு வந்துள்ள மகாராஷ்டிரர்கள் சிலர் தமிழ்நாட்டு வில் வீரர்களிடமிருந்து வில் வித்தையும் பழகியிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் அதில் கைதேர்ந்தவர்” என்றார் மகாராஜா.

அதுவரை திகில் பிடித்து நின்ற பண்டிதர், ”என்ன சொல்கிறீர்கள் மகாராஜா?” என்று வினவினார்.

‘’எனது பெண் க்ஷேமமாக இருக்கிறாள்” என்று அறிவித்த மகாராஜாவின் குரலில் சிறிது சாந்தியும் ஒலித்தது.

டபீர் பண்டிதரும் மற்ற இருவரும் ஏதுமறியாமல் திணறி னாலும் மகாராஜா மட்டும் அம்பை மீண்டுமொரு முறை பரிசோதித்துவிட்டு டபீர் பண்டிதரை நோக்கி, “முராரி ராவின் பாதுகாப்பு நந்தினிக்கு இருக்கிறது. ஆகையால் கவலை வேண்டாம். இந்த அம்பைப் பத்திரமாய் வைத்திருங்கள்” என்று கூறி அம்பையும் பண்டிதரின் கைகளில் திணித்தார்.

பண்டிதர் பிரமிப்புப் பல மடங்கு உயர்ந்ததால், ”என்ன! இது முராரி ராவின் அம்பா?” என்று குரலிலும் பிரமிப்புத் துலங்க விசாரித்தார்.

”அதன் இறகுகளுக்குக் கீழே இருக்கும் குறியைப் பாரும். இந்தக் குறி முராரி ராவின் குறுவாள்களிலும், வாள்களிலும் இருக்கும்” என்று மகாராஜாசுட்டிக் காட்டினார்.

அம்பைக் கூர்ந்து நோக்கிய பண்டிதர் தமது பெரிய வட்டாத் தலைப்பாகையுடன் தலையைச் சற்று அளவுக்கு அதிகமாகவே அசைத்து அரசர் சொன்னதை ஆமோதித்தார். இருப் பினும், ‘முராரிராவ் எப்படி எங்கு அரசகுமாரியைச் சந்தித்தார்? இந்த அரண்மனைக்குள் நாம் அறியாமல் எப்படி நுழைந்தார்? நுழைந்தவர் இந்த அம்பை எதற்காகச் சாளரத்தின் மூலம் எய்தார்?” என்று கேள்விகளைச் சரமாரியாகத் தொடுத்தார்.

மகாராஜாவின் இதழ்களில் இகழ்ச்சி கலந்த புன்சிரிப்பு ஒன்று உதயமாயிற்று. வருமானத்துறை மந்திரி அந்தத் துறையின் விவகாரங்களில் இணையற்ற அறிவு படைத்தவரானாலும் மற்ற விவரங்களில் அதிகப் பரிச்சயமில்லாதவர் என்ற பொருள் மகாராஜாவின் புன்சிரிப்பில் தெளிவாகப் பளிச்சிட்டது. ஆனால் அதை வெளிக் காட்டாமல் மகாராஜா கூறினார்: ”முராரிராவுக்கும் நமக்கும் அதிக நட்பில்லை என்பது உலகறிந்த விஷயம். ஆகவே அவர் என்னை நேரில் சந்திக்க இஷ்டப்படவில்லை” என்று.

”அதனால்?” டபீர் பண்டிதரின் கேள்வி சுரணையின்றி வந்தது அவர் உதடுகளிலிருந்து.

”அரண்மனைக்குள் வந்து புரவியில் அமர்ந்தபடியே இந்தச் சாளரத்துக்குள் இந்த அம்பை எய்துவிட்டுப் போயிருக்கிறார்” என்று விளக்கினார் மகாராஜா.

‘அவர் உள்ளே வந்ததால் ….” பண்டிதர் பேச்சை முடிக்சு வில்லை .

”அவர் அரசகுலத்தின் தூர உறவினராதலால் ராஜ பேரிகை சப்தித்தது.”

”அப்படியா”

”ஆம். தம்மை அறிவித்துக் கோட்டைக்குள் நுழைந்தார். அவரது வாயு வேகப் புரவியில் வந்து அம்பெய்தார், போய் விட்டார்.”

”இந்த அம்பு தவறி மன்னர்மீது விழுந்திருந்தால்?”

”எதுவும் ஆகாது. முனை கட்டப்பட்டிருக்கிறது. முடிச்க அதன் வேகத்தைத் தளர்த்தியிருக்கிறது. இந்த முடிச்சுப் பளுவுடன் அம்பெய்யக்கூடிய மகாராஷ்டிரர் இருவர்தான் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் முராரிராவ்.”

இதைக் கேட்டதும் அந்த அறையில் மௌனம் நிலவியது. சில விநாடிகள். அதைப் பட்டாடையார் கலைத்து, ”மகாராஜா அரசகுமாரியின் நகைகள் எப்படி முராரிராவின் கைகளில் கிடைத்தன?” என்று வினவினார்.

”அரச குமாரியே கொடுத்திருக்கிறாள். வழியில் ஆற்காட்டுப் படைகள் நடமாடுவதாலும், அவர்களிடமிருந்து பாதுகாக்க இந்த நகைகளை முராரி ராவ் வாங்கிக் கொண்டிருக்கிறார்” என்று விளக்கினார் பிரதாபஸிம்ஹ மகாராஜா.

ஏதோ அத்தனையையும் நேரில் பார்த்தது போல் மகாராஜா சொன்னது பண்டிதருக்கும் மற்றவர்களுக்கும் அதிக நம்பிக்கையை அளிக்காவிட்டாலும் மேற்கொண்டு மகாராஜாவைக் கேள்விகள் கேட்பது உசிதமில்லையென்ற காரணத்தால் மற்றவர்கள் வாளாலிருந்த சமயத்தில் ஆஸ்தான அறைக் கதவின் மூலம் உள்ளே நுழைந்த காவலன் ஒருவன் தலை தரையில் தொடும்படி மன்னரை வணங்கிவிட்டு, “ஸதாரா தளபதி இதைத் தங்களிடம் கொடுக்க உத்தரவிட்டார்” என்று கூறி ஒரு கடிதத்தை நீட்டினான்.

”என்ன மகாராஜா?” பண்டிதர் குரலில் கவலை தெரிந்தது.

‘இதில் கண்டிருப்பது…” என்று கூறிப் பண்டிதரிடம் ஓலையைக் கொடுத்தார் மகாராஜா. அத்துடன், ”இரைந்தே படிக்கலாம்” என்றும் கூறினார்.

ஓலையிலிருந்த விஷயத்தைக் கண்டதும் பண்டிதர் முகத்தில் சீற்றம் தெரிந்தது. ”அயோக்கியன்! அயோக்கியன்!” என்று இருமுறை உணர்ச்சி மீறிக் கூவியும் விட்டார் டபீர்.

”படியும்!’ கட்டளை திட்டமான குரலில் ஒலித்தது. மெள்ள மெள்ளப் படித்தார் ஓலையைப் பண்டிதர்.

”பிரதாபஸிம்ஹருக்கு முராரிராவ் எழுதிக் கொண்டது. நந்தினியை நல்ல தளபதி காவலில் அனுப்பாமல் கத்தியை உருவக்கூடத் தெரியாத டபீரின் துணையுடன் அனுப்பியது சரியல்ல. அதுவும் நாடு இன்றிருக்கும் நிலையில் உங்கள் எல்லையைவிட்டு ஆற்காடு ஆதிக்கத்திலிருக்கும் ஸ்ரீரங்கத்துக்கு அனுப்பியது மிக மிகத் தவறு. ஆனால் அரசகுமாரியைத் தமிழகத்தின் சிறந்த வீரன் ஒருவனிடம் ஒப்படைத்திருக்கிறேன். ஆகவே கவலை வேண்டாம். நந்தினியின் நகைகளை நான் எடுத்துக்கொண்ட காரணம் மற்றவர்களுக்குப் புரியாவிட்டாலும், உங்களுக்குப் புரியும் என்று நினைக்கிறேன் முராரிராவ்” என்ற வரிகளை எரிச்சலுடன் படித்தார் பண்டிதர்.

இதைக் கேட்ட பட்டாடையார் உள்ளத்தில் அரசகுமாரி தப்பியதால் ஏற்பட்ட சாந்தியின் விளைவாக அவரிடமிருந்து பெருமூச்சென்று வெளிவந்தது. ”நல்ல வேளே!” என்று அந்தப் பெருமூச்சைத் தொடர்ந்து ஒரு சொல்லையும் உதிர்த்தார் பட்டாடையார்.

”எது நல்லது?” என்று சீறிய டபீர் பண்டிதர், பட்டாடை யாரை நோக்கித் தமது தீ விழிகளைத் திருப்பினார்.

”அரசகுமாரி மீது அரங்கன் கருணைக் கண் விழுந்தது” என்று பதில் சொன்ன பட்டாடையார், அரங்கன் பள்ளி கொண்டிருக்கும் ஸ்ரீரங்கத்தின் திசையில் கண்களைத் திருப்பி, கைகளையும் கூப்பினார்.

கோபத்தின் காரணமாக நிதானத்தைத் தப்ப விட்டிருந்த டபீர் பண்டிதர், ‘அரங்கன் கண்தான் போய் விட்டதே!” என்றார்.

”ஒரு கண், அதுவும் நாம் புதைத்த ஒரு கல், அதுதான் போயிற்று. அகண்டமான அவன் அருட்பார்வை எங்கும் எப்போதும் போகாது. அது விழுபவர்கள் மீது விழும். அரச குமாரியின் மீது விழுந்திருக்கிறது” என்று உறுதியுடன் கூறினார் பட்டாடையார்.

”அரசகுமாரியின் மீது என்ன அத்தனை பரிவு ஸ்ரீரங்கநாதனுக்கு?” என்று கேட்டார் பண்டிதர்.

”அரசகுமாரிக்கு அவனிடமுள்ள பக்தி காரணம். பத்துடை அடியவர்க்கு எளியனான் பகவான் அடியார்களை எப்பொழுதும் காத்து நிற்கிறான். ஆனால் பிறர்களுக்கு…” என்ற பட்டாடையார் அத்துடன் நிறுத்திக் கொண்டார்.

”பிறர்களுக்கு?” பண்டிதரின் கேள்வி சிறிது சினத்துடன் ஒலித்தது.

“பிறர்களுக்கு அரிய வித்தகன்” என்ற பட்டாடையார், ”பத்தியில்லாதவர்கள் அவன் சங்கல்பத்தைப் புரிந்து கொள்ள முடியாது” என்றும் திட்டமாகக் கூறினார்.

அவர்கள் சண்டையை அத்துடன் நிறுத்தத் தீர்மானித்த மகாராஜா, ”அமைச்சரே! இவர்களைத் தகுந்த மரியாதைகளுடன் ஊருக்கு அனுப்பி வையுங்கள். தலை போகும் காரியங்கள் நம்மை எதிர்நோக்கியிருக்கின்றன” என்று உத்தரவிட்டார்.

பண்டிதர் வாயைப் பிளந்தார். ”தகுந்த மரியாதைகளுடனா!” என்றும் கேட்டார் ஆச்சரியத்துடன்.

“ஆம். கோவிலில் தொண்டு புரிபவர்களுக்கு நாம் என்ன மரியாதை செய்கிறோம்?” என்ற மகாராஜாவின் கேள்வி மேலும் திகைக்க வைத்தது பண்டிதரை. ”பெருமாள் கண் வைரம் காணாததற்கு இவர்களை விசாரிக்க வேண்டாமா?” என்று கேட்டார்.

“இவர்கள் நமது ராஜ்யத்தைச் சேர்ந்தவர்களல்ல. ஸ்ரீரங்கம் தஞ்சை அரசைச் சேர்ந்ததல்ல. ஆகவே விசாரிக்க வேண்டியது நாமல்ல. தவிர இவர்கள் அரங்கன் சந்நிதிக் கதவைத் திறந்தபோதே பெருமாளின் கண் வைரம் காணவில்லை . தவிர நீர் கூறியபடி நீங்கள் அங்கே போகுமுன்பு உங்களை அறியாமலே இன்னைாரு வீரன் அங்கே இருந்திருக்கிறான். அவன்கூட அதைத் திருடியிருக்க முடியாது. ஏனென்றால் திருட வந்தவனாயிருந்தால் உங்கள் வருகைக்காக அவன் காத்திருக்க மாட்டான்’ என்று விளக்கிய மன்னர், மேலும் பெருந்தன்மையுடன், “இங்கு அழைத்து வந்த அபசாரத்திற்கு அமைச்சரையும் என்னையும் மன்னித்து விடுங்கள்” என்றும் கூறிவிட்டு, ”சரி, டபீர் இவர்களை அனுப்பிவிட்டு வாரும்” என்று கூறி, பேட்டி முடிந்து விட்டது என்பதற்கு அறிகுறியாகக் கையை அசைத்தார்.

ஆனால் பேட்டி அவ்வளவு சுலபத்தில் முடிவதாயில்லை. மீண்டும் ஒரு காவலன் உள்ளே நுழைந்து தலை வணங்கினான். மகாராஜாவின் விழிகள் அவனை நோக்கிக் கேள்வி கேட்கும் பாவனையில் திரும்பியது. காவலன் கூறினான், ”தங்கள் பேட்டிக்கு இருவர் காத்திருக்கிறார்கள்” என்று.

‘யாரது?” என்ற தஞ்சை மன்னர், ”யாராயிருந்தாலும் கேட்டைக்காவலரைப் பார்க்கச் சொல் ” என்று உத்திரவிட்டார்.

மன்னர் உத்தரவுக்கு மசியவில்லை காவலன். “தங்களைத் தான் பார்க்க வேண்டுமாம்” என்று பணிவுடன் தெரிவித்தான்.

”முடியாதென்று சொல்லிவிடு.” மகாராஜாவின் குரல் கடுமையுடன் ஒலித்தது.

”சிபாரிசுடன் வந்திருக்கிறார்கள். ” காவலன் மீண்டும் கூறினான் வலியுறுத்தி.

”யார் சிபாரிசு?”

”அரசகுமாரியின் சிபாரிசு.”

”என்ன?”

“ஆம். அரசகுமாரிதான்.”

”எங்கிருக்கிறாள் அவள்?”

”அந்த இருவருடன் வெளியில் காத்திருக்கிறார்கள். ”

”என் மகளா!”
”ஆம்.”

”எப்பொழுது வந்தாள்?”

“இப்பொழுதுதான்.”

”ராஜ பேரிகை ஏன் சப்திக்கவில்லை?”

“அரசகுமாரியை அடையாளம் புரியவில்லை?”

பிரதாப் ஸிம்ஹர் காவலனை வியப்புடன் நோக்கினார். அவரைவிட வியப்புடன் பட்டாடையாரும் நோக்கினார். பண்டிதர் மட்டும் கோபத்துடன், ”அரசகுமாரியையே உங்களுக்கு அடையாளம் புரியவில்லையா?” என்று கேட்டார்.

”இல்லை.” ”காரணம்?”

காரணம் அவள் விவரிக்கத் தேவையில்லாதாக இருந்தது. ஏனென்றால் காரணம் ஓசைப்படாமல் ஆஸ்தான அறையின் வேலைப்பாடு மிக்க வாயிற்படியில் நின்று கொண்டிருந்தது. அதற்குப் பின்னால் மற்றும் இரண்டு காரணங்களும் நின்றிருந்தன.

Previous articleRaja Perigai Part 1 Ch11 | Raja Perigai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Perigai Part 1 Ch13 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here