Home Historical Novel Raja Perigai Part 1 Ch13 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

Raja Perigai Part 1 Ch13 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

46
0
Raja Perigai Part 1 Ch13 Raja Perigai Sandilyan, Raja Perigai Online Free, Raja Perigai PDF, Download Raja Perigai novel, Raja Perigai book, Raja Perigai free
Raja Perigai Part 1 Ch13 | Raja Perigai | TamilNovel.in

Raja Perigai Part 1 Ch13 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

ராஜ பேரிகை – சாண்டில்யன்

முதல் பாகம் அத்தியாயம் – 13. மந்திரக் கடிதம்

Raja Perigai Part 1 Ch13 | Raja Perigai | TamilNovel.in

அரசன் ஆஸ்தான அறையின் அலங்கார வாசற்படிக்கு அதிக அலங்காரத்தை அளிக்க உன்னதப் பதுமையொன்று நிறுத்தப்பட்டிருக்கின்றதோ என்று பார்ப்பவர் பிரமிக்கும் வகையில் நின்றிருந்த அரசகுமாரியைப் பார்த்த பிரதாப்சிங்கின் கண்கள் மகளுடைய ஆடை அணிகளில் ஏற்பட்டிருந்த மாறுதலைக் கவனித்தாலும், அதற்காகப் பெரும் வியப்பைக் காட்டவில்லை ஆனால் டபீர் பண்டிதர் மட்டும் சிறிது கோபத்தைத் தமது கண்களில் படரவிட்டுக்கொண்டு, ”அரசகுமாரியவர்கள் தரிக்க வேண்டிய வேஷமல்ல இது” என்று கடுப்புடன் சொற்களை உதிர்த்தார்.

”ஆம் ஆம். கேவலம் பணிப்பெண் வேஷம் அரசகுமாரி யின் அந்தஸ்துக்குத் தக்கதல்ல” என்று பட்டாடையாரும் மெல்லக் கலந்து கொண்டார் பண்டிதருடன்.

ஆனால் அந்த இருவர் சொற்களையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் அறைக்குள் நுழைந்துவிட்ட அரசகுமாரி தனக்குப் பின்னால் நின்றிருந்த இருவரையும், ”உள்ளே வாருங்கள்” என்று அழைக்கவே செய்தாள்.

உள்ளே நுழைந்த இருவரில் ஒருவன் அரசனுக்குத் தலை வணங்கினான். இன்னொருவன் கால்களைக் குவிய வைத்து வலக் கையால் தனது தலையிலிருந்த ஹாட்டை எடுத்து இடப் பக்கத்தில் அடக்கிக்கொண்டு, வலக் கையை உயரத் தூக்கிக் கம்பீரமாகச் சலாம் அடித்தான். அந்த இருவர் வருகையும் அறையிலிருந்த ஒவ்வொருவர் உள்ளத்திலும் ஒவ்வொரு வித உணர்ச்சியைத் தூண்டியிருந்தது.

மன்னன் தனது மகளுடன் வந்த தமிழக வாலிபனையும் வெள்ளைக்கார வாலிபனையும் பார்த்து அவர்கள் எதற்கும் அஞ்சாத வீரர்கள் என்பதைக் கணமாத்திரத்தில் . புரிந்து கொண்டான். பட்டாடையாரும் மற்றொரு சந்நிதி கைங்கர்ய பரரும் விஜயகுமாரனை அடையாளம் கண்டு கொண்டதால், அரசகுமாரியைக் களவாடியவன் அவளுடன் அரச சந்நிதானத்துக்கே வந்துவிட்டாலும் அந்த இன்னொரு வெள்ளைக்காரன் யார், எதற்காக வந்திருக்கிறான் என்பதை அரியாமல் குழம்பவும் செய்தனர்.

டபீர் பண்டிதர் உள்ளம் மட்டும் தமிழக வாலிபனைக் கண்டதும் எரிமலையாகி விட்டது. தான் அரசரிடம் பட்ட அபக்கியாதிக்கெல்லாம் அவன்தான் காரணம் என்பதை எண்ணியதால் என்ன செய்வதென்று தெரியாமல் பல விநாடிகள் கலங்கிய பண்டிதர் அந்தக் கலக்கத்தை விலக்கிக் கொண்டு, “இவன் தான் அவன்” என்று அறிவித்தார் மன்னனை நோக்கி.
அதுவரை பேசாமலிருந்த வெள்ளைக்கார வாலிபன், “அவன் பெயர் விஜயகுமாரன், என் பெயர் ராபர்ட் கிளைவ்’ என்று விஜயகுமாரனையும் அறிமுகப்படுத்திக் தன்னையும் அறிமுகப் படுத்திக் கொண்டான்.

கிளைவின் பெயர் அப்போது எந்தவிதத்திலும் பிரசித்தப் படாத காரணத்தால் மகாராஜா பிரதாப்சிங் சர்வசாதாரணமாகத் தலையை அசைத்து அவன் சொன்னதை ஆமோதித்து விட்டு விஜயகுமாரனை நோக்கினார். முராரிராவின் கடிதத்தில், குறிப்பிட்டிருந்த சிறந்த தமிழக வீரன் இவனாகத்தான் இருக்க வேண்டும் என்று தீர்மானித்த பிரதாப்சிங், “நீ எந்த ஊர்?” என்று அவனை மட்டும் வினவினார்.

”தற்சமயம் சிவகங்கை” என்று கூறினான் விஜயகுமாரன்.

பிரதாப் சிங் மகாராஜாவின் கண்களில் திடீரென ஏதோ யோசனை தோன்றி மறைந்தது. ”மதுரை நாயக்கர் மன்னர்

வம்சத்தவனா?” என்று வினவினார் அந்த யோசனையைத் தொடர்ந்து.

”ஆம்.” ஒற்றைச் சொல் மட்டும் பதிலாக வந்தது.

”முராரிராவை உனக்கு முன்பே தெரியுமா?” என்று வினவினார் மகாராஜா.

“தெரியாது.”

”அரசகுமாரியை?”

”தெரியாது.”

“இந்த…”

”கிளைவையும் தெரியாது. இந்த அமைச்சரைக்கூடத் தெரியாது.” என்று பேச்சோடு பேச்சாக டபீர் பண்டிதரையும் விஜயகுமாரன்கையால் சுட்டிக்காட்டினான்.

பிரதாப் சிங்கின் உதடுகளில் லேசாகப் புன்முறுவல் தவழ்ந்தாலும் அது முற்றும் வெளியில் தெரியக்கூடிய வகையில் தோன்றவில்லை. சர்வ சாதாரண குரலிலேயே கேட்டார் மகாராஜா: ‘யாரையும் தெரியாது; ஆனால் எல்லோருடனும் சம்பந்தப்பட்டிருக்கிறாய்” என்று.

விஜயகுமாரன் கண்கள் மன்னனை நன்றாக ஏறெடுத்து நோக்கின. ”மகாராஜா! இன்னொருவரைக்கூட எனக்குத் தெரியாது” என்று கூறினான் விஷமம் சொட்டும் குரலில்.

புரிந்ததற்கு அறிகுறியாகத் தலையை அசைத்தார் பிரதாப ஸிம்ஹர். ”என்னைச் சொல்கிறாய்?” என்றும் கூறினார் லேசாக நகைத்து.

அரசரின் நுண்ணறிவு விஜயகுமாரனைத் திகைக்க வைக்கவே அவன் பேசும் திறனிழந்து நின்றான் ஒரு விநாடி. மறுவிநாடி கூறினான்: ”ஆம் மகாராஜா வாழ்க்கையின் சந்தர்ப்பங்கள் ஏன் வருகின்றன, எப்படி வருகின்றன, யாருடன் நம்மைச் சேர்க்கின்றன, யாரிடமிருந்து பிரிக்கின்றன என்பதைச் சொல்ல முடிவதில்லை. ஒரே நாளில் நான் தஞ்சை அரசகுமாரியை, மன்னரை, அமைச்சரை, யாரும் அஞ்சும் முராரி ராவை, சந்தாசாகேபின் உபதளபதியை, இதோ இந்தக் கிளைவை எத்தனை பேரைச் சந்தித்துவிட்டேன் எத்தனை பெயருடன் எனக்கு உறவு ஏற்பட்டிருக்கிறது. எத்தனை விதமான உறவு ஏற்பட்டிருக்கிறது!” என்று கூறினான் உணர்ச்சியுடன்.

அவன் உணர்ச்சி வசப்பட்டதைக் கண்ட மகாராஜா மேலும் அவனைக் கூர்ந்து நோக்கினார். பிறகு டபீர் பண்டிதரை நோக்கி வினவினார், “இந்த வாலிபன் எப்படி நமது படை வீரரின் காவலை மீறி அரங்கன் சந்நிதி மண்டபத்துக்குள் வந்தான்?” என்று.

”அதுதான் புரியவில்லை ” என்றார் பீர் பண்டிதர்.

மகாராஜா அதற்குமேல் அதைப்பற்றிக் கேள்வி எதுவும் கேட்காவிட்டாலும் விஜயகுமாரனே பதில் சொல்லத் துவங்கினான். “மகாராஜா! திருச்சி இப்போது ஆற்காடு நவாப் அன்வருதீனீன் இரண்டாவது இளவரசர் முகம்மது அலியின் வசத்திலிருக்கிறது. அவர் தங்களது நண்பதராதலால் தங்கள் படைப்பிரிவு ஒன்று அந்தப் பகுதிக்கு வருவதும் ஸ்ரீரங்கத்தில் அரசகுமாரி நுழையும்போது காவல் புரிவதும் சாத்தியமாயிற்று. அரங்கன் சந்நிதியில் நுழைய விரும்பி, சிவகங்கையிலிருந்து வந்த நான் ஸ்ரீரங்கம் பலத்த காவலில் இருப்பதைப் பார்த்து என் புரவியைத் திருப்பி, ஆற்காட்டுப் பொதுச்சாலைக்கு வந்து கொள்ளிடத்தின் ஓரமாக ஸ்ரீரங்கம் வந்தேன். அன்று கோவில் காவலனொருவனிடம் வடக்குத் திட்டிவாசலை மட்டும் திறந்துவைக்க ஏற்பாடு செய்தேன். நன்றாக இருள் மூண்டு ஊரடங்கும் சமயம் வந்ததும் வடக்கு வாயிலில் புரவியை நிறுத்திவிட்டுத் திட்டி வாசல் வழியாக உள்ளே நுழைந்தேன். கோவிலின் உட்பகுதியில் யாருமில்லை” என்று சொல்லிக் கொண்டு போனவனைடபீர் பண்டிதர் இடைமறித்து, ‘அது என் உத்தரவு” என்றார்.

விஜயகுமாரன் டபீர் பண்டிதரை நோக்கி, ”நன்றி” என்றான்.
”எதற்கு நன்றி கூறுகிறாய்?” என்று பீர் பண்டிதர் சினத்துடன் கேட்டார் விஜயகுமாரனை.

”கோவிலுக்குள் காவல் வீரரை நிறுத்தாதற்கு. நிறுத்தியிருந்தால் அத்தனை சுலபமாக நான் அரங்கன் சந்நிதிக்கு வந்திருக்கவும் முடியாது…’ என்றான் அவன்.

”அங்கே கூவியிருக்கவும் முடியாது” என்றார் டபீர். ”என்ன கூவினான்?” என்றார் மன்னர்.

”யாரோ நவாபின் தலையை வெட்டுவதாகக் கூவிக் கொண்டிருந்தான்…” என்றார் டபீர்.

மகாராஜாவின் கண்களில் சட்டென்று ஒரு புத்தொளி தோன்றி மறைந்தது. பேச்சை மேற்கொண்டு வளர்த்தாமல், “நீ முராரிராவை எங்கே சந்தித்தாய்?” என்று வினவினார்.

இதற்கு விஜயகுமாரன் பதில் சொல்லுமுன்பு அரசகுமாரி முந்திக் கொண்டு, ”சமயபுரத்தில் சந்தித்தோம்” என்று கூறியதுடன் பிறகு நடந்த விஷயங்களையும் சுருக்கமாகத் தெரிவித்தாள். ”எதிரி வீரர் யாரும் அந்தப் பகுதியில் இல்லையென்று முதலில் நினைத்தேன். ஆனால் சமயபுரத்து விவகாரத்துக்குப் பிறகு நிலைமை அப்படியில்லை என்று தெளிவாகிவிட்டதால் நான் ஆபரணங்களுடன் அரசகுமாரியாக உலாவுவது சரியல்லவென்று முராரிராவ் நினைத்தார். ஆகையால் அவரிடம் ஆபரணங்களைக் கழற்றிக் கொடுத்தேன். பிறகு அவர் சொன்னபடி தஞ்சைச் சாலைச் சத்திரத்தில் இந்த உடையையும் அணிந்து கொண்டேன்” என்று கூறினாள் அரசகுமாரி. பிறகு நடந்த சண்டை விவரங்களையும் எடுத்துரைத்து, “இந்த இருவரின் துணையில்லாவிட்டால் நான் இந்த வேஷம் போட்டிருக்க முடியாது, இங்கு வந்திருக்கவும் முடியாது” என்று கூறி முடித்தாள்.

அந்தச் சமயத்தில் டபீர் பண்டிதர் ஏதோ சொல்ல முயன்றதைக் கையசைப்பினால் தடுத்தார் மகாராஜா. பிறகு கிளைவ்மீது தமது பார்வையை நீண்ட நேரம் நிலைக்கவிட்டார். கடைசியாக, ”கிளைவ்! யூ வாண்ட் டு கோ அட் ஒன்ஸ்?” என்று ஆங்கிலத்தில் ஒரு கேள்வியையும் தொடுத்தார்.

பிரதாப் சிங்கின் ஆங்கில அறிவைக் கண்டு பிரமித்தான் கிளைவ். ”உங்களுக்கு இங்கிலீஷ் தெரியுமா?” என்று தமிழில் அவனும் கேட்டான்.

”ஆம். உங்களுக்குத் தமிழ் தெரிந்த மாதிரி” என்றார் மகாராஜா தமிழில்.
கிளைவ் சிறிது யோசித்துவிட்டுத் தலையை அசைத்தான். ”யுவர் மெஜஸ்டி ஸெய்ன்ட் டேவிட் கோட்டைக்குத் தானியப் பொருள்கள் அவசரம் தேவை. ஐ காண்ட் ஸ்டே” என்றான் கிளைவ் தமிழும் ஆங்கிலமும் கலந்த மணிப்பிரவாளத்தில்.

“இன்னும் இரண்டு மணி நேரம் கழித்துப் புறப்படலாம்” என்ற மகாராஜா, “டபீர்! இவர்கள் இருவருக்கும் இருக்க வசதி செய்யுங்கள். மீண்டும் கிளைவை இங்கு அழைத்து வாருங்கள்” என்று உத்தரவிட்டு நாலடி பின் நகர்ந்து தமது அரியாசனத்தில் அமர்ந்தார்.

கிளைவ் தலைதாழ்த்திப் பணிந்து வெளியே செல்ல மற்றவர்களும் பின்தொடர்ந்தனர். அரசகுமாரி மட்டும் தந்தையின் பக்கத்தில் நின்றிருந்தாள். பிரதாப்சிங் தமது மகளை நோக்கிப் புன்முறுவல் செய்தார். “மகளே இனி நீ பணிப் பெண்ணாயிருக்க வேண்டியதில்லை , அரசகுமாரியாக மாறலாம்” என்றார்.

நந்தினி புன்முறுவல் காட்டினாள். “அப்பா! இந்த வாலிபன் யார்?” என்று வினவினாள்.

பிரதாப் சிங்கின் புன்முறுவல் சற்று அதிகமாக விரிந்தது அவர் உதடுகளில், ”ஏன் கேட்கிறாய்?” என்று விசாரித்தார் விஷமமாக.

”சிறந்த வீரராயிருக்கிறார்.” ”உம்.” ”பண்பும் அதிகம்.” ‘அரசகுமாரியை அபகரித்துச் சென்றது பண்பா?”

”அபகரித்துச் சென்றும் முறைகெடாமல் நடந்து கொண்டது, என்னைக் காத்து அழைத்து வந்தது இவை பண்பாடுகள் அல்லவா?”

”திருடன் திருட்டுச் சொத்தைக் காப்பாற்றித் திருப்பிக் கொடுப்பது ஒரு விந்தைதான்” என்ற மகாராஜாதமது பெண்ணின் முதுகைச் செல்லமாகத் தட்டிக் கொடுத்து, ‘போய் வா” என்றார்.

ஆனால் அரசகுமாரி நகரவில்லை . ”அப்பா ” என்று அழைத்தாள் மெதுவாக.

“என்னம்மா?” மன்னர் குரலில் அன்பு குழைந்து கிடந்தது.

“இந்த விஜயகுமாரன் யார்?”

“நாயக்க அரச வம்சத்தவன்.”

“அதைத்தான் அவரே சொல்லிவிட்டாரே?”
”வேறு எதைக் கேட்கிறாய்?”

”உங்களுக்குத் தெரிந்ததை….”

“எனக்குத் தெரிந்ததா?”

”ஆம். அவர் சொல்லாமல் மறைத்த எதையோ நீங்கள் ஊகித்திருக்கிறீர்கள்.”

இதைக் கேட்ட பிரதாப் சிங் மகளின் தோளைத் தமது கையால் சிறிது அழுத்தினார். ”மகளே! உன் அறிவு மிகக் கூரியது. என் முகபாவத்திலிருந்தே அந்தரங்கத்தை ஊகிக்கிறாய். ஆம்; வேறொன்றும் எனக்குத் தோன்றியது இவனைப் பற்றி. ஆனால் அதைச் சொல்ல முடியாத நிலையில் இருக்கிறேன். வற்புறுத்திக் கேட்காதே” என்றார் திட்டமாக.

”அப்படியானால் இந்த…’ என்று துவங்கிய அரசகுமாரியின் சொற்களை இடையில் வெட்டிய மகாராஜா, ”விஜயகுமாரன் பெரும் பணியில் ஈடுபட்டிருக்கிறான். அதற்காக உயிரையும் விடுவான். அரசாங்க சம்பந்தமான பெரிய மர்மம் இவன் வாழ்வில் பிணைந்து கிடக்கிறது. அதைக் காலம் விளக்கும். ஆனால் பயல் சாமான்யனல்ல; பிடித்தாலும் புளியங்கிளையைத் தான் பிடித்திருக்கிறாய்!”

தந்தையின் வேடிக்கைப் பேச்சுப் பிடிக்கவில்லை நந்தினிக்கு. சட்டென்று எழுந்து மகாராஜாவை ஒருமுறை முறைத்து விட்டு அறையைவிட்டு நடக்கத் தொடங்கினாள். அவள் சென்றதும் மகாராஜா துரிதத்தைக் காட்டினார். காவலன் ஒருவனை அழைத்துச் சில உத்தரவுகளை மடமடவெனப் பிறப்பித்தார். ”இப்போது வந்தானே அந்த வெள்ளைக்கார வாலிபன் கிளைவ், இளைப்பாறிச் சிற்றுண்டி யருந்தியதும் அவனை மட்டும் இங்கு அழைத்துவா. நானும் அவனும் பேசும்போது வேறு யாரும் இங்கு வர வேண்டாம்” என்றார். வேறொரு காவலனை அழைத்து, ”விளக்கு வைத்ததும் மானாஜியையும் டபீரையும் இங்கு வரச்சொல்” என்றார். வேறொருவனை அழைத்து, ”புதிதாக வந்தானே அரசகுமாரியுடன் ஒரு வாலிபன், அவனை அரண்மனையிலேயே இருக்கச் சொல்” என்று கூறினார்.

இப்படி உத்தரவுகளைப் பிறப்பித்துவிட்டு மீண்டும் அறையில் உலாவலானார். மறுபடியும் மஞ்சத்தில் உட்கார்ந்து கண்களை மூடினார். சிறிது நேரத்திற்குப் பிறகு இன்னொரு அறைக்குச் சென்று ஒரு கடிதத்துடன் திரும்பி வந்து மஞ்சத்தில் உட்கார்ந்தபடியே அதை வரிவரியாகப் படித்தார்.

பல முறைகள் அதைப் படித்துச் சிந்தனையில் ஆழ்ந்தும் விட்டதால் இரண்டு மணி நேரம் ஓடியது அவருக்குத் தெரியவில்லை. கிளைவ் வந்திருப்பதாகக் காவலன் அறிவித்த பின்பே மகாராஜா சிந்தனையிலிருந்து விழித்துக் கொண்டார். அடுத்த நிமிடம் பயணத்துக்குத் தயாராய்த் தமது எதிரில் நின்ற கிளைவை எதிரிலிருந்த மஞ்சத்தில் அமரும்படி சைகை செய்தார்.

மிக அலட்சியமாகக் கிளைவ் மஞ்சத்தில் அமர்ந்தான். அமர்ந்ததுடன் நில்லாமல் “மகாராஜா எனக்கு ஏதோ முக்கிய செய்தி வைத்திருப்பதாகத் தெரிகிறது” என்றும் கூறினான்.

”உனக்கல்ல, உன் கவர்னருக்கு” என்றார் மகாராஜா. ”என்ன செய்தி?” என்று வினவினான் கிளைவ்.

”காட்டுராஜாவை நம்பிப் போரில் இறங்க வேண்டா மென்று உங்கள் கவர்னரிடம் சொல்” என்றார் மகாராஜா.

‘’யாரது காட்டு ராஜா?” என்று வினவினான் கிளைவ்.

”ஷாஹுஜி என்றும் அவருக்குப் பெயர் உண்டு” என்ற மகாராஜா, ”இந்தச் சமயத்தில் தஞ்சையுடன் போரில் இறங்குவது இங்கிலீஷ்காரர்களுக்குப் பெரிய அனர்த்தத்தை விளைவிக்கும்” என்றும் சுட்டிக் காட்டினார்.

“ஏன்?”

”சந்தா சாகேப் ஆற்காட்டை நோக்கி வந்து கொண்டிருக்கிறார். அவருக்கு உதவ டூப்ளேயின் பிரெஞ்சுப் படைகள் விரைந்திருக்கின்றன.”

”அதனால்?”

‘சந்தாசாகேப் பிரெஞ்சு உதவியுடன் வெற்றியடைந்தால் பிரிட்டிஷ்காரர் இங்கிருந்து ஊருக்கு மூட்டை கட்டலாம். ஆகவே நீங்கள் யார் பக்கம் என்பதை இப்பொழுதே முடிவு செய்ய வேண்டும்! யூ பிரிட்டிஷ் ஆர் இன் எ டேஞ்ஜரஸ் பொஸிஷன்” என்று விளக்கினார் மகாராஜா.

கிளைவ் சிறிது சிந்தித்தான். பிறகு கேட்டான், ‘உங்களுக்கு இதெல்லாம் எப்படித் தெரியும்?” என்று.

பதிலுக்குக் கையிலிருந்த கடிதத்தை எடுத்துக் கிளைவிடம் நீட்டினார் மகாராஜா. அதைப் பிரித்துப் பார்த்தான் கிளைவ். அவன் முகத்தில் மிதமிஞ்சிய பிரமிப்பு விரிந்தது. அந்தக் கடிதத்தின் மூலம் மகாராஜா ஏதோ மந்திரம் போட்டிருக்க வேண்டும். ஏதும் பேசாமல் கடிதத்தில் நிலைத்த கண் நிலைத்தபடி உட்கார்ந்து விட்டான் கிளைவ் நீண்ட நேரம்.

Previous articleRaja Perigai Part 1 Ch12 | Raja Perigai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Perigai Part 1 Ch14 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here