Home Historical Novel Raja Perigai Part 1 Ch14 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

Raja Perigai Part 1 Ch14 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

47
0
Raja Perigai Part 1 Ch14 Raja Perigai Sandilyan, Raja Perigai Online Free, Raja Perigai PDF, Download Raja Perigai novel, Raja Perigai book, Raja Perigai free
Raja Perigai Part 1 Ch14 | Raja Perigai | TamilNovel.in

Raja Perigai Part 1 Ch14 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

ராஜ பேரிகை – சாண்டில்யன்

முதல் பாகம் அத்தியாயம் – 14. பழைய கதை, புதிய பூதம்

Raja Perigai Part 1 Ch14 | Raja Perigai | TamilNovel.in

தஞ்சை மன்னர் நீட்டிய கடிதத்தைப் படித்ததும் சிலையெனக் கிளைவ் உட்கார்ந்துவிட்டானென்றால், அதற்குக் காரணம் இருக்கவே செய்தது. ஸெய்ன்ட் டேவிட் கோட்டையில் கவர்னர் மந்திராலோசனை சபை நிகழ்ச்சியின் விவரங்கள் அப்படியே அடங்கிய கடிதம் அது. அந்தக் கடிதத்தை இரண்டு மூன்று முறை திரும்பத் திரும்பப் படித்தான் கிளைவ். அது எழுதப்பட்டிருந்த காகிதத்தைக்கூட ஒரு முறைக்கு இரு முறை தடவியும் திருப்பியும் பார்த்தான். கவர்னர் சபை நிகழ்ச்சிக் குறிப்பின் சாட்சாத் நகல் அது என்பதையும், கவர்னர் உபயோ கிக்கும் காதிதத்திலேயே அந்த நகல் எடுக்கப்பட்டிருக்கிற தென்பதையும் உணர்ந்ததால், ஆங்கிலேயர் கோட்டைக்குள் அதுவும் கவர்னருக்கு வெகு அருகில் தஞ்சை ஒற்றன் ஒருவன் இருக்கிறான் என்ற நினைப்பும் கிளைவின் பிரமிப்பைப் பலமடங்கு அதிகப்படுத்தியது. ஆகவே கடைசியாக ஒரு முறை கிளைவ் அந்த நகலை ஊன்றிக் கவனித்தான். அதன் ஆங்கிலத்தைத் தமிழில் மொழி பெயர்த்தால் பின்வருமாறு இருக்கும்.

”ஸெய்ன்ட் டேவிட் கோட்டை, ஏப்ரல் 10, 1749 ஆலோசனைக் கூட்டத்தில் இருந்தவர்கள் சார்ல்ஸ் ஃப்ளாயர் எஸ்கொயர், பிரெஸிடெண்ட் கவர்னர், எட்வர்ட் க்ரூக், ரிச்சர்ட் பிரின்ஸ், அலெக்ஸாண்டர் வினச். ஸ்ட்ரின்ஜர் லாரன்ஸ், வில்லியம் ஹோல்ட், ஃபாஸ் வெஸ்காட்.

”தஞ்சையின் நியாயமான மகாராஜா ஷாஹுஜி சில மாதங்களாகத் தம்மிடம் உதவி நாடுவதாக பிரெஸிடெண்ட் இந்த போர்டுக்கு (சபைக்கு) அறிவித்தார். மேற்படி மகாராஜா தாம் அநியாயமாகப் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாகவும், தம்மை மீண்டும் அரசில் இருத்த வேண்டுமென்று அட்மிரல் போஸ் வானுக்கும் ரிச்சர்ட் பிரின்ஸுக்கும் எழுதியிருக்கிறார். இந்த விவரங்களை அறிவிக்க மகாராஜாவே தமது மாமனுடன் பிரெஸிடெண்டை அவரது கார்டன் ஹவுஸில் (தோட்ட வீட்டில்) சந்தித்தார். தம்மை அரசில் இருத்த தஞ்சை மக்கள் துடிப்பதாகவும், பல பிரமுகர்களும் தமக்கு உதவி செய்வதாகக் கடிதங்கள் எழுதியிருப்பதாகவும் மகாராஜா கூறினார். தமக்கு ஆங்கிலேயர் உதவி புரிந்தால் கொள்ளிடத்தின் முகத் துவாரத்திலுள்ள தேவிக் கோட்டையையும் சுற்றுப்புறங்களையும் கொடுத்து விடுவதாக மகாராஜா தெரிவித்தார். இந்த ஏற்பாட்டுக்கு அட்மிரல் போஸ்வான் ஒப்புக் கொள்வதைப் பிரெஸிடெண்ட் சபைக்குத் தெரியப்படுத்தினார். இந்த ஏற்பாட்டுக்கு ஒப்புக் கொள்ளாதவர்கள் மிஸ்டர்க்ரூக்கும் மிஸ்டர் வெஸ்காட்டும்…”

இந்த நகலைக் கடைசி முறையாகப் படித்துவிட்டுப் பிரதாப்சிங்கிடம் திரும்பக் கொடுத்த கிளைவ், ”மகாராஜா! உங்களை ஏமாற்றுவது மிகக் கஷ்டம்” என்று கூறினார்.
மகாராஜா மெள்ளப் புன்முறுவல் கொண்டார் ஒரு விநாடி. பிறகு அந்தப் புன்முறுவல் மறைந்து உதடுகள் கடினப்பட்டன. அந்தக் கடினப் போர்வையைக்கூடக் கிளைவிடம் மறைத்துக் கொண்ட மகாராஜா, ”கிளைவ்! நான் ஏமாறுகிறேனா அல்லவா என்பது ஒருபுறமிருக்கட்டும். உங்கள் கவர்னர் சபையும் கடற்படைத் தலைவர் போஸ்வானும் ஏமாறாதிருப்பது நல்லது” என்று சர்வசாதாரணமாகச் சொன்னார்.

கிளைவ் தீர்க்க சிந்தனையுடன் தனது ஆசனத்திலிருந்து எழுந்து கக்கத்தில் இடுக்கிய ஹாட்டுடன் மன்னன் எதிரில் நின்றான், மௌனமாகச் சிறிது நேரம். கடைசியாகக் கேட்டான்; ”நான் ஒரு சாதாரண லெப்டினண்ட், என்னிடம் என்ன எதிர் பார்க்கிறீர்கள்?” என்று.

மகாராஜா ஆசனத்தில் அமர்ந்தபடியே பேசினார். ”கிளைவ்| நீ பிரிட்டிஷ் ராணுவத்தின் லெப்டினன்டாக மட்டும் இருந்தால் உன்னை உணவுப் பொருள் வாங்கும் கண்டிராக்டராகக் கவர்னர் திருச்சிக்கு அனுப்பமாட்டார். ஏனென்றால் உணவுப் பொருள் சப்ளை உங்கள் மொழிப்படி ஸிவில். மிலிட்டரியைச் சேர்ந்ததல்ல. ஆனால் ஸிவில் ராணுவம் ஆகிய இருவிதப் பொறுப்புகளும் நீ வகிப்பதால் கவர்னருக்கு உன்னிடம் பெருமதிப்பு இருக்க வேண்டும். அபாயமான இந்தக் காலத்தில் உன்னைத் திருச்சிக்கு அனுப்ப வேண்டுமானால் உன் திறமையில் அளவுக்கு மீறிய நம்பிக்கை கவர்னருக்கும் அவரை அடுத்த அதிகாரிகளுக்கும் இருக்க வேண்டும். ஆகையால் …”

”ஆகையால்?”‘ சந்தேகத்துடன் வினவினான் கிளைவு.

ஆனால்… அந்தச் சந்தேகம் அடுத்த நிமிடம் திகைப்புக்கும் வியப்புக்கும் இடங் கொடுத்தது. மகாராஜாவின் பதில் அத்தனை திட்டமாகவும் உறுதியாகவும் இருந்தது.

”நீ என் தூதுவனாகக் கவர்னரிடம் செல்” என்றார் பிரதாப்சிங் மகாராஜா.

கிளைவின் கூரிய விழிகளிலும் சஞ்சலம் தெரிந்தது. ”யுவர் மெஜஸ்டி?” என்ற அவன் அழைப்பிலும் அந்தச் சஞ்சலம் தெளிவாக ஒலித்தது.

”சொல் கிளைவு.”

“நான் ஒரு சாதாரண லெப்டினெண்ட்.”

”அதை முன்பே சொல்லிவிட்டாய்.”

”எதிர்பாராத நிகழ்ச்சிகள் என்னை உங்கள் முன்பு கொண்டு வந்து நிறுத்தியிருக்கின்றன.”

“ஆம்.”

”நான் உங்கள் மெஸஞ்சராக, தூதனாக, கவர்னரிடம் சென்றால் என்மீது சந்தேகம் ஏற்படலாம்.”

“ஏற்படாது.”

”ஏன்?”

”நடந்த விஷயங்களை நீ தெளிவாகச் சொல்லிவிடலாம். நான் உன்னிடம் காட்டிய கவர்னர் போர்டின் நிகழ்ச்சி விவரங்களின் நகலைப்பற்றிக்கூடச் சொல்லலாம். என் வலுக்கட்டாயத்தின் மேல் நீ செய்தியைச் கொண்டு வந்ததாகச் சொல்லலாம்’ என்ற மன்னர் வேறொரு வெடியையும் எடுத்து வீசினார்; ”இப்பொழுது பிரிட்டிஷார் நிலைமை எனது நிலைமையைவிட திடமானதல்ல” என்று.

கிளைவு பிரமிப்பு நிரம்பிய விழிகளை மன்னர் மீது நாட்டினான்.

மகாராஜா மேலும் சொன்னார் நிதானமாக. ”கிளைவ்! உன்மீது எனக்கும் நம்பிக்கை விழுகிறது. காரணம் எனக்குப் புரியவில்லை ஆனால் நீ புத்திசாலி என்பதிலோ, கவர்னரிடமோ, அவரது ஆலோசனை போர்டு மெம்பர்களிடமோ உனக்குச் சலுகை உண்டென்பதிலோ எனக்குச் சந்தேகமில்லை. ஆகவே கவனமாகக் கேள், நான் சொல்வதை. தவறு இருந்தால் மட்டும் மறுத்துச் சொல்.

”இங்கே பிரெஞ்சுக்காரர் கை ஓங்குவதை ஒடுக்க பிரிட்டன் தனது சிறந்த கடற்படைத் தலைவரான போஸ் கவானை, பலமான கடற்படைப் பிரிவுடன் இங்கு அனுப்பியது. அது மட்டுமல்ல. பிரிட்டிஷ் நிலப்படை, கடற்படை இரண்டுக்கும் அவரையே தலைவராகவும் நியமித்தது. ஆனால் டூப்ளேயின் முன்பு அவர் ஜம்பம் பலிக்கவில்லை.

பாண்டிச்சேரியை அவர் பிடிக்க முயன்று தோல்வியடைந்தார். ஐரோப்பாவில் உங்கள் நாட்டுக்கும் பிரான்சுக்கும் போர் முடிந்து சமாதானம் ஏற்பட்டதாலேயே டூப்ளே சென்னையை உங்களுக்குத் திருப்பிக் கொடுக்கும்படியாயிற்று. இல்லையேல், உங்கள் கைக்கு மதராஸும் திரும்பியிருக்காது. உண்மையில் இன்று நீங்கள் மிகவும் பலவீனமான ஸ்திதியில் இருக்கிறீர்கள். அப்படியிருக்க உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுகிறீர்கள். நீங்கள் உதவப் போகும் ஷாஹுஜி என்ற காட்டு ராஜா சரியான அரச பரம்பரயைச் சேர்ந்தவரல்ல. இந்த அரண்மனையிலிருந்த ரூபி அல்லது குப்பி என்று அழைக்கப்பட்ட சலவைத் தெழிலாளி மகன். உங்கள் மொழியில் அவர் இந்த அரசுக்கு ஒரு ‘பிரிடெண்டர்.. அவருக்கு உதவக் கூடியவர்கள் இங்கு யாருமில்லை. ஆகவே அவரைக் கருவியாகக் கொண்டு தஞ்சை ராஜ்யத்தைப் பிடிக்க முடியாது. இந்த வீண் கனவை விட்டுவிடும்படி நான் கவர்னருக்குச் சொன்னதாகச் சொல்.” இப்படிப் பேசிய மகாராஜாவின் குரலில் பதற்றமில்லை விரோத உணர்ச்சி கூடத் தொனிக்கவில்லை. ஏதோ சிறு குழந்தைக்குப் புத்தி சொல்லும் தொனியில் சொற்களை உதிரவிட்டார்.

”உங்கள் யோசனையைக் கவர்னர் கேட்க இஷ்டப்படாவிட்டால்?” என்று வினவினான் கிளைவ்.

”கவர்னர் புத்திசாலியாக இருந்தால் கேட்பார், மகாராஷ்டிரர்களிடம் ஸதாராவில் சிறையிருந்த சந்தாசாகேப்பை ஏழு லட்ச ரூபாய் கொடுத்து டூப்ளே சிறை மீட்டியிருக்கிறார். சந்தாசாகேப் இப்போது ஆற்காட்டைப் பிடிக்க வந்து கொண்டிருக்கிறார். அவருடன் மொகலாய அரசின் தட்சிண சுபேதாராக, அதாவது நிஜாமாக விரும்பும் முஸபர் ஜங்கும் சேர்ந்து கொண்டிருக்கிறார். போதாக்குறைக்கு டூப்ளே தமது சிறந்த படைத் தலைவர்களில் ஒருவரான டி ஆதுனில் எனபவரைச் சிறு பிரெஞ்சுப் படையுடன் அவர்கள் உதவிக்கு அனுப்பியிருக்கிறார். சந்தாசாகேப் சாதாரண வீரனல்ல. வெகு சீக்கிரம் ஆற்காடு சந்தாசாகேபின் வசமாகி விடும். அப்பொழுது இங்கே பிரெஞ்சு ஆதிக்கம் ஓங்கிவிடும். பிறகு உங்கள் நிலை….. என்னைப் போன்றவர்களின் ஒத்துழைப்பைப் பொறுத்தது” என்று அரசியல் நிலையை விவரித்தார் மகாராஜா.

மகாராஜா எவ்வளவு திட்டவட்டமாக உள்ள நிலையைப் புரிந்து கொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்து கொண்ட கிளைவ் முடிவாகப் பதில் சொன்னான்: ‘மகாராஜா, உங்கள் தூதனாக நான் செல்கிறேன். ஆனால் நான் சொல்வதைக் கவர்னர் கேட்பாரா மாட்டாரா என்பதை நான் திட்டமாகக் கூற முடியாது. ஆனால் ஒன்று, உங்களைப் போன்ற வீரரை, ராஜ தந்திரியை எதிரியாகப் பெற்றாலும் அதையும் நான் விரும்புவேன். ஏனெனில் பிரிட்டிஷ்காரர்களைச் சாதாரணமாக எடை போடாதீர்கள். இதைவிட இக்கட்டான நிலைமையிலிருந்து பிரிட்டிஷ்காரர்கள் மீண்டிருக்கிறார்கள்” என்று சொல்லித் தலை வணங்கி வெளியே சென்று விட்டான்.

மகாராஜா அவன் வெளியே செல்வதைப் பார்த்துக் கொண்டே நின்றபடியாலும், அவன் சென்றதும் மீண்டும் சிந்தனையில் இறங்கி விட்டபடியாலும், கிளைவ் போனதும், பெரும் பட்டாக் கத்தி இடையில் துலங்க உள்ளே நுழைந்து எதிரில் நின்ற ஒரு பெரிய மனிதரைப் பல விநாடிகள் கவனிக்கவில்லை . அந்த மனிதரும் அரசரின் சிந்தனையை இடையே புகுந்து கலைக்க இஷ்டப்படாமல் அந்த அறையின் சாளரத் தண்டை சென்று எட்டிப் பார்த்தார்.

மன்னர், ‘யார்? நீங்களா?” என்று வினவியதுமே அவர் திரும்பி அறையின் நடுவுக்கு வந்து மன்னர் முன்பு நின்றார்.

அந்த மனிதர் அதிக உயரம் இல்லையென்றாலும் சற்றுப் பருமனாக இருந்தார். பருமனாக இருந்தும், அவர் சாளரத்தை விட்டுத் திரும்பிய தோரணையிலும், அறை நடுவுக்கு வந்த நடையிலும் ஒரு வேகமும் உறுதியும் இருந்தன. சிறிதும் அச்ச மற்ற பெரும் கண்களின் மீது இருந்த அடர்த்தியான புருவம் அவர் முகத்துக்குக் கம்பீரத்தை மட்டுமின்றிச் சிறிது பயங்கரத்தையும் அளித்திருந்தது. கைகள் நீண்டு திரணை திரணையாக இருந்தன. தலையிலிருந்த சரிகை வட்டாவில் தொங்கிய குஞ்சலம் ஒன்று வெள்ளி நரம்புகளால் செய்யப்பட்டிருந்தபடியால் அதிகமாகப் பளபளத்தது. அவரது கச்சையில் தொங்கிய பட்டாக்கத்தியின் அகலமும் வளைவும் அவசியத்துக்கு அதிகமாக அமைந்திருந்தாலும் அவர் உடலுக்குப் பொருத்தமாகவே இருந்தது. அவர் அங்கியும் அதை அடுத்துச் சிறு பாவாடைபோல் தொங்கிய சல்லடமும், சல்லடத்துக்குக் கீழே தெரிந்த கால் சராயும் அவருடைய அவயவங்களை இறுகப் பிடித்திருந்ததால் தேகத்தின் திண்மை மிக மிக நன்றாகப் புலனாயிற்று. அத்தகைய தோற்றத்துடன் மிக அலட்சியமாகப் பிரதாப் சிங்கின் எதிரே நின்ற தஞ்சைத் தளபதி மானாஜி அப்பா மௌனத்தின் சிகரமாகக் காட்சியளித்தாலும், அவர் கண்கள் மட்டும் ஏதோ கேள்விகளை உதிர்ப்பதைப் போலிருந்தது.

அவரை ஏற இறங்கப் பார்த்த மகாராஜா ஏதோ சொல்ல வேண்டுமென்பதற்காக இரண்டாம் முறையாக, “நீங்கள் வந்ததை நான் கவனிக்கவில்லை ” என்றார்.

மானாஜியின் கரகரத்த தொண்டையிலிருந்து இரும்புத் துண்டுகள் உராய்வதைப் போன்ற தொனியுடன் வந்தது பதில்.

”மகாராஜா தாங்கள் தீவிர சிந்தனையில் இருந்தீர்கள்” என்று.

“ஆம். சிந்தனைக்குக் காரணம் இருக்கிறது” என்றார் மகாராஜா.

”காரணத்தையும் கவனித்தேன்” என்றார் மானாஜி.

”கவனித்தீர்களா!” மன்னர் சொற்களில் வியப்பு ஒலித்தது.

”ஆம்.”

”எங்கே?”

“இப்பொழுதுதான். உங்கள் அறைக்குவெளியே…”

“யார், கிளைவையா?”

“ஆம்.”

“அவனை உங்களுக்குத் தெரியுமா?”

”தெரியாது. ஆனால் மகாராஜாவுடன் அந்தரங்கத்தில் நீண்ட நேரம் பேச வேண்டுமானால் அவன் பெரு வீரனாயிருக்க வேண்டும்” என்று விளக்கினார் தளபதி.

”ஆம். வீரன்தான். அது மட்டுமல்ல; நல்ல சூடிகையான புத்தியும் உடையவன்” என்றார் மகாராஜா.

“அப்படியா”

”ஆம். அவன் நமக்கு விரோதியாக இப்பதைவிட நண்பனாகயிருப்பது நல்லது.”

“பார்ப்பதற்குச் சாதாரண சோல்ஜராயிருக்கிறான்…”

“சாம்ராஜ்யங்களை நிறுவிய பலரும் சாதாரண நிலையிலிருந்து தான் உயர்ந்தவர்கள்” என்று கூறிய மகாராஜா தளபதியின் கருத்தை அறிய அவரைக் கூர்ந்து நோக்கினான்.

தளபதி உடனடியாகப் பதிலேதும் சொல்லவில்லை.

“அவன் வீரன் என்பது எனக்குப் புரிகிறது. ஆனால் நாம் அதிகப்படி உயர்த்திப் பார்க்க அவசியம் இருக்கிறதா என்பது சந்தேகம்” என்று தமது கருத்தை மெள்ள வெளியிட்டார்.

மகாராஜா அதை மறுக்கவில்லை. ”காலம் பதில் சொல்லும்” என்று மட்டும் கூறிவிட்டு மறுபடியும் சில விநாடிகள் மௌனம் சாதித்தார். பிறகு சொன்னார்: ”மானாஜி! தஞ்சை மீது பிரிட்டிஷார் படையெடுக்க இருக்கிறார்கள்” என்று.

“நான் தயாராக இருக்கிறேன்” என்றார் மானாஜி. ”எதற்கு?” என்று கேட்டார் மகாராஜா. ”தஞ்சையைக் காப்பதற்கு” என்றார் மானாஜி. “இப்பொழுது அபாயம் தஞ்சைக்கல்ல” “வேறு எதற்கு?” ”தேவிக் கோட்டைக்கு” “அப்படியா?” “ஆம்| நீங்கள் தேவிக் கேட்டைக்குப் புறப்படுங்கள்.”

”எப்பொழுது?” ‘நாளைக் காலையில்”

”உத்தரவு.”

”உங்களுக்கு ஒரு துணையும் அனுப்புகிறேன்.”

“எனக்குத் துணையா?”

”ஆம்.”

“எதற்கு எனக்குத் துணை?”

“அவசியம் இருந்தால் எனக்குத் தூது அனுப்ப, எதிரிகளை அலட்சியமாக ஊடுருவி, உயிரைப் பணயம் வைத்து வரக்கூடிய ஒருவன் உமக்குத் தேவையில்லையா?”

”அதற்குப் பலர் இருக்கிறார்கள்” என்ற மானாஜி, மகாராஜாவின் மனத்தில் வேறு ஏதோ யோசனை இருப்பதை உணர்ந்ததால், ”மகாராஜாவுக்கு வேண்டிய அவன் யார்?’ என்று வினவினார்.

“புதிதாக வந்திருக்கிறான் வாலிப வீரன்” என்றார் மகாராஜா.

”யார், விஜயகுமாரனா?” என்று கேட்டார் தளபதி.

மகாராஜாவின் முகத்தில் மிதமிஞ்சிய பிரமிப்பு விரிந்தது. ”அவனைப் பற்றி அதற்குள் கேள்விப்பட்டு விட்டீர்களா?” என்று கேட்டார் வியப்பு குரலிலும் ஒலிக்க.

“கேள்விப்பட்டது மட்டுமல்ல, பார்த்தும் விட்டேன். அவனுக்குத் தேவை எது என்பதும் எனக்குத் தெரியும்.”

”எது?”

மானாஜி மகாராஜாவை நெருங்கி ரகசியமாகச் சில வர்த்தைகளைச் சொன்னார்.

மகாராஜாவின் முகத்தில் பிரமை தட்டியது. ‘அது பழைய கதையல்லவா?” என்று வினவினார் பிரமிப்புடன்.

“ஆம், புதிய பூதமாக வளர்ந்திருக்கிறது இந்த வாலிபன் உருவத்தில்’ என்ற மானாஜி, ”மகாராஜா! இவன் சபதம், இவன் துவேஷம்; தஞ்சையைக் காக்கலாம். ஆகவே இவனை அழைத்துச் செல்கிறேன். அவன் இதுவரை அடையாத போர்ப் பயிற்சியையும் அளிக்கிறேன் என்றும் உறுதி கூறினார். அவர் சொற்களில் மிதமிஞ்சிய திருப்தி இருந்தது.

திருப்தி, அதே சமயத்தில் அரண்மனையின் வேறொரு பகுதியிலிருந்த விஜயகுமாரனுக்கும் இருந்தது. அது வேறுவிதமான திருப்தி. இரண்டுவிதத் திருப்தியும் தஞ்சை மண்டலத்துக்குப் பெரும் கவசமாக அமைந்ததை வரலாறு நிரூபித்தது.

Previous articleRaja Perigai Part 1 Ch13 | Raja Perigai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Perigai Part 1 Ch15 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here